திராவிடம் – தமிழ்த் தேசியம் என்ன வேறுபாடு? பிராமணர் மீதான அவற்றின் பார்வை என்ன?
முரளிதரன் காசி விஸ்வநாதன்
- 5 நவம்பர் 2024
விஜயின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்குப் பிறகு, திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்றா, இல்லையா என்பது குறித்த விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ளன. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து தமிழக அரசியல் களத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்த இரு தத்துவங்களின் துவக்கம் என்ன?
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், ‘திராவிடமும் தமிழ்த் தேசியமும்’ எனது இரு கண்கள் எனக் குறிப்பிட்டார். அவரது இந்தப் பேச்சு, நாம் தமிழர் கட்சியின் வட்டாரங்களில் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது.
இதற்கு உடனடியாக பதிலடி தந்த சீமான், “திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்றல்ல” என்று குறிப்பிட்டார். இதையடுத்து, பல தரப்பினரும் இந்த இரு தத்துவங்கள் குறித்தும் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
‘திராவிடம்’ என்ற சொல்லின் பின்னணி என்ன?
இதில், திராவிடம் என்ற சொல் நீண்ட காலமாகவே இலக்கியங்களில், ஆவணங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இருந்த சமணர்களில் நந்தி கணம் என்ற பிரிவினர், திரமிள சங்கம் அல்லது திராவிட சங்கம் என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தியதாகத் தன்னுடைய ‘சமணமும் தமிழும்’ நூலில் குறிப்பிடுகிறார் மயிலை. சீனி. வேங்கடசாமி.
“வச்சிரநந்தி என்பவர் விக்கிரம ஆண்டு 526இல் (கி.பி. 470 திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார்” என தேவசேனர் எழுதிய தர்சனசாரம் என்ற புத்தகத்தை மேற்கோள்காட்டி குறிப்பிடுகிறார் வேங்கடசாமி. இந்த சங்கம் மதுரையில் ஏற்படுத்தப்பட்டது.
- விஜய் நாம் தமிழரின் கொள்கை எதிரியா? சீமான் பேச்சுக்கு த.வெ.க.வின் பதில் என்ன?
- விஜய் தனது முதல் பேச்சு மூலம் பெண்களின் நம்பிக்கையை பெற்றாரா?
- ‘திராவிடம், தமிழ்த் தேசியம், ஆட்சியில் பங்கு’ – விஜய் பேச்சு பற்றி அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன?
- தமிழ்த் தேசியம் பேசி, விஜய் தனது வாக்கு வங்கியைக் குறிவைப்பதாக நினைக்கிறாரா சீமான்?
இதற்குப் பிறகு, எட்டு – ஒன்பதாம் நூற்றாண்டுகளில் நம்மாழ்வாரின் திருவாய்மொழி, ‘திராவிட வேதம்’ எனக் குறிப்பிடப்பட்டது. வைணவ முன்னோடிகளில் ஒருவரான நாதமுனிகள் நம்மாழ்வார் குறித்த தனிப் பாடல் ஒன்றில், ‘திராவிட வேத சாகரம்’ என்ற சொற்களைப் பயன்படுத்தினார். ஆதிசங்கரர் தான் இயற்றிய சௌந்தர்ய லஹரியில் திருஞானசம்பந்தரைக் குறிப்பிட, ‘திராவிட சிசு’ என்ற சொற்களைப் பயன்படுத்தினார்.
ஆனால், இந்தக் காலகட்டங்களில் திராவிட என்ற சொல், தமிழைக் குறிக்கப் பயன்பட்டதா அல்லது தென்னிந்தியா என்ற பொருள்படப் பயன்படுத்தப்பட்டதா என்பது தெளிவாக இல்லை.
இப்படி திராவிடம் என்ற சொல் நீண்ட காலமாகவே புழக்கத்தில் இருந்தாலும், நவீன காலத்தில் திராவிடம் என்ற சொல்லின் பயன்பாடு 19ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் செயல்பட்ட கிறிஸ்தவ சமயப் பரப்பாளரான கால்டுவெல்லிடம் (1814 – 1891) இருந்துதான் துவங்குகிறது என்கிறார் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு.
“கால்டுவெல் ஒரு மொழிக் குடும்பத்தின் பெயராக ‘திராவிடம்’ என்ற சொல்லை முன்வைத்தார். A Comparative Grammar of the Dravidian or South-Indian family of languages என்ற அவரது புகழ்பெற்ற நூலில், சமஸ்கிருதத்தின் துணையின்றி இயங்கும் வல்லமை கொண்ட ஆற்றல் தமிழுக்கு உண்டு எனக் குறிப்பிட்டதோடு, அதேபோல, சமஸ்கிருதத்தின் ஆதரவின்றி இயங்கக்கூடிய மேலும் ஐந்து மொழிகளை அடையாளம் கண்டு, அவற்றை திராவிட மொழிக் குடும்பமாக அடையாளப்படுத்தினார்” என்கிறார் தியாகு.
‘திராவிட’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கான காரணத்தை அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிடுகிறார் ராபர்ட் கால்டுவெல். “இந்தப் புத்தகத்தில் திராவிடம் என்ற சொற்றொடரின் கீழ் சேர்க்கப்பட்ட சொற்கள், தென்னிந்தியாவின் பெரும்பான்மை மக்களால் பேசக்கூடிய மொழிகளைக் குறிக்கிறது. ஒரிசா, மேற்கிந்திய மாவட்டங்கள், குஜராத்தியும் மராத்தியும் பேசப்படும் தக்காணம் ஆகிய பகுதிகளைத் தவிர்த்து விந்திய மலைகள், நர்மதா நதியிலிருந்து கன்னியாகுமரி வரை தீபகற்ப இந்தியா முழுவதும் ஒரே இனத்தைச் சேர்ந்த பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களே வசிக்கிறார்கள். ஒரே மொழியின் பல்வேறு வழக்குகளையே அவர்கள் பேசுகிறார்கள். அந்த மொழிக்கு ‘திராவிட (Dravidian)’ என்ற சொல் வழங்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடுகிறார் ராபர்ட் கால்டுவெல்.
- அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: தொடங்கியது வாக்குப்பதிவு – சமீபத்திய தகவல்கள்5 நவம்பர் 2024
- இரான்: பல்கலைக்கழகத்தில் ஆடைகளை களைந்த பெண் ஹிஜாபுக்கு எதிராகப் போராடினாரா?5 நவம்பர் 2024
திராவிடம் அரசியலாக்கப்பட்டது எப்போது?
நவீன காலத்தில் மொழிகளின் தொகுப்பை, நிலப்பகுதியை திராவிடம் என்ற சொல்லால் குறிப்பிடுவது அப்போதுதான் துவங்கியது என்கிறார் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு.
“ராபர்ட் கால்டுவெல் நூலுக்குப் பிறகுதான், இந்த மொழிகள் பேசப்படக் கூடிய பகுதிகள் திராவிட நாடு எனக் குறிப்பிடப்படுவது அதிகரித்தது. இந்தப் பகுதிகளும், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணம் எனக் குறிப்பிடப்பட்ட பகுதிகளும் கிட்டத்தட்ட நிலவியல் ரீதியாக ஒன்றாக இருந்தன. ஆகவே அதை திராவிட நாடு எனக் கருதுவதும் இயல்பாக இருந்தது” என்கிறார் தியாகு.
கடந்த 1892 செப்டம்பரில் சென்னையில் இருந்த பட்டியலினத்தினர், ஆதிதிராவிட ஜன சபா என்ற அமைப்பைத் துவங்கினர். 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிரிட்டிஷ் நிர்வாகத்தில், இந்தியர்களுக்கு வேலைகள் அளிக்கப்பட ஆரம்பித்தபோது, பிராமணர்களே எல்லா வாய்ப்புகளையும் பெறுவதாகவும் பிராமணரல்லாதார் புறக்கணிக்கப்படுவதாகவும் குரல்கள் எழுந்தன.
இந்தக் காலகட்டத்தில் ‘திராவிடன்’ என்ற சொல் கூடுதல் கவனம் பெற ஆரம்பித்தது. “அதே தருணத்தில் டாக்டர் சி. நடேசனார், பிராமணர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க, ‘திராவிடன் இல்லம்’ என்ற இல்லத்தை உருவாக்கினார். பிறகு, ‘தி திராவிடியன் அசோசியேஷனும்’ உருவாக்கப்பட்டது.
இதற்குப் பிறகு, பிராமணர் அல்லாதோருக்கான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் உருவானது. இதற்கென வெளியிடப்பட்ட ஆங்கில இதழ் Justice என்ற பெயரிலும் தமிழ் நாளிதழ் திராவிடன் என்ற பெயரிலும் வெளியானது” என்கிறார் தி டிரவிடியன் மூவ்மென்ட் (The Dravidian Movement) என்ற நூலை எழுதிய ராபர்ட் எல். ஹார்ட்க்ரேவ்.
- பிரபஞ்சத்தின் முதல் 3D வரைபடத்தில் வெளிப்பட்ட ரகசியம் என்ன தெரியுமா?28 அக்டோபர் 2024
- அடர்ந்த காட்டுக்குள் புதைந்து போன ‘மாயன் நகரம்’ தற்செயலாக புலப்பட்டது எப்படி?3 நவம்பர் 2024
“இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளில் திராவிடன் என்ற சொல், இனம் மற்றும் மொழியியல் சார்ந்த பொருளில் வழங்கப்பட்டது. நீதிக் கட்சி உருவாக்கப்பட்ட நேரத்தில் தென்னிந்தியாவில் உள்ள பிராமணரல்லாத வகுப்புகளை திராவிடன் என்ற ஒரே சொல்லைக் கொண்டு குறிப்பிட்டனர்.
இவ்வாறு பண்பாட்டு மறுசீரமைப்பு அடையாளத்தை உறுதிப்படுத்தவும் பிராமணர் அல்லாத வகுப்புகள் தம்மைத் தற்காத்துக் கொள்ளவும் திராவிட தேசியம் உருவானது. யார் திராவிட மொழிகளில் ஒன்றைப் பேசுகிறார்களோ, அவர்கள் பொதுவாக திராவிடர்கள் என்ற மரபுரிமையைப் பெறுகிறார்கள்” என்று தனது ‘தமிழ் மறுமலர்ச்சியும் திராவிட தேசியமும்’ நூலில் குறிப்பிடுகிறார் கு. நம்பி ஆரூரன்.
இதற்குப் பிறகு, பெரியாரின் சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகமாக மாறியது. அதிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக, திராவிடம் என்ற சொல், அரசியல் ரீதியாக தமிழ்நாட்டில் நிலைபெற ஆரம்பித்தது.
‘தமிழ்த் தேசியம்’ என்ற சொல்லின் பின்னணி என்ன?
இதேபோல, தமிழ்த் தேசியம் என்ற கருத்தாக்கமும் நீண்ட காலமாகவே இருக்கிறது என்கிறார் தியாகு.
“சிலப்பதிகாரத்தில் தமிழ்நாடு என்ற சொல் இரு இடங்களில் இடம் பெறுகிறது. பரிபாடலிலும் ‘தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்’ எனத் தமிழ்நாடு குறிப்பிடப்படுகிறது. தொல்காப்பியத்திற்கு 11ஆம் நூற்றாண்டில் உரையெழுதிய இளம்பூரணாரும் ‘நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்’ என்று குறிப்பிடுகிறார்.
இதற்குப் பிறகு, தமிழ் பேசும் நிலப்பரப்பை தமிழ்நாடு எனத் தனியாகப் பார்க்கும் போக்கு 1930களின் பிற்பகுதியில் உருவாகிறது. ராஜாஜி முதலமைச்சார் ஆனபோது, இந்தி கட்டாயப்பாடமாக்கப்பட்டது. அதை எதிர்த்து, கி.அ.பெ. விசுவநாதம், கருமுத்து தியாகராசர் உள்ளிட்டோர் கூட்டம் நடத்தினர். பெரியாரும் இதில் தீவிரமாகக் களமிறங்கினார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. இதை தமிழ்த் தேசியத்தின் துவக்கமாகச் சொல்லலாம்,” என்கிறார் தியாகு.
- தமிழ்த் தேசியம், திராவிடம் இரண்டும் ஒன்றா?
கடந்த 1938 செப்டம்பர் 11ஆம் தேதி சென்னை கடற்கரையில் நடந்த ஒரு கூட்டத்தில் சோமசுந்தர பாரதியார், பெரியார் உள்ளிட்டோர் கலந்துகொண்டதாகவும், அவர்கள் முதல் முறையாக தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை முன்வைத்ததாகவும் குறிப்பிடுகிறார் தியாகு.
“மொழிவழி மாநிலப் பிரிவினைக்குப் பிறகு, பெரியார் தொடர்ந்து ‘தமிழ்நாடு’ என்ற கோரிக்கையை முன்வைத்தார். ஆனால், திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்த சி.என். அண்ணாதுரை தென்னிந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்தார்.
அண்ணாவைப் பொறுத்தவரை, ‘மொழிவழி பிரிந்து இனவழி ஒன்று சேர்வோம்’ என்றார். பல திராவிட அரசுகளுடன் சேர்ந்து திராவிட கூட்டமைப்பை உருவாக்குவோம் என்றார். 1960களில்தான் இந்தக் கோரிக்கையை அவர் கைவிட்டார். அதற்குப் பிறகு, தமிழ்நாட்டை முன்னிறுத்தியே திராவிடக் கட்சிகள் செயல்படுகின்றன” என்கிறார் தியாகு.
கடந்த 1930களில் மட்டுமின்றி, அதற்குப் பின்வந்த காலங்களிலும் தமிழ்த் தேசியம் என்ற கருத்தாக்கத்தைப் பல தலைவர்கள் உயர்த்திப் பிடித்தனர்.
“தமிழர் ஒரு தனி தேசிய இனம், தமிழ்நாடு தமிழர்களின் தாயகம்” என்ற முழக்கத்துடன் செயல்பட்ட ம.பொ.சிவஞானம், மாநிலங்கள் மொழிவழியில் பிரிக்கப்பட்டபோது, எல்லைகளைக் காப்பதற்காகப் போராட்டங்களை நடத்தினார். அதேபோல, சி.பா. ஆதித்தனாரும் நாம் தமிழர் இயக்கத்தைத் தொடங்கி, தனித் தமிழ்நாடு வரை பேசினார். இவர்கள் இருவரும் பிற்காலங்களில் திராவிடக் கட்சிகளோடு இணைந்து செயல்பட்டனர்.
ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்த ஈ.வெ.கி. சம்பத், 1961இல் திராவிட நாடு கொள்கையில் சி.என். அண்ணாதுரையுடன் முரண்பட்டு, அக்கட்சியிலிருந்து பிரிந்து தமிழ்த் தேசியக் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கிச் செயல்பட்டார். பிறகு இவர் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.
நக்சல்பாரி இயக்கத்தின் தாக்கத்தில் செயல்பட்ட தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் தமிழரசன் போன்றவர்கள் திராவிட இயக்கம் முன்வைத்த சாதி ஒழிப்பை ஏற்றுக்கொண்டர். ஆனால், அதை தனித் தமிழ்நாடு மூலமே அடையமுடியுமெனக் கருதினர்.
தியாகுவைப் பொறுத்தவரை, திராவிடக் கொள்கையும் தமிழ்த் தேசியக் கொள்கையும் ஒன்றுக்கொன்டு இசைவானவை.
“திராவிடத்தின் சமூக நீதி கொள்கை இல்லாமல் தமிழ்த் தேசியம் வெற்றி பெற முடியாது. தமிழ்நாடு சுயநிர்ணய உரிமையை அடைந்தால் சாதியை ஒழிக்க முடியும். ஆகவே, ஒன்றை வைத்துதான் மற்றொன்று இருக்கிறது” என்கிறார் அவர்.
- அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை எப்படி நடக்கும்? முடிவுகள் எப்போது வெளியாகும்?4 நவம்பர் 2024
- அமெரிக்காவில் கிரீன் கார்டு, எச்1பி விசாவுக்காக காத்திருக்கும் பல லட்சம் இந்தியர்களின் நிலை என்ன?6 நவம்பர் 2024
‘தமிழ்த் தேசியமும் திராவிடமும் ஒன்றல்ல’
ஆனால், திராவிடமும் தமிழ்த் தேசியமும் முற்றிலும் வேறானவை என்றும் ஆரியக் கருத்தியலின் துணை சக்திதான் திராவிடம் என்றும் குறிப்பிடுகிறார் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் அருணபாரதி.
“திராவிடம் என்றால் என்ன என்று இப்போதுவரை அவர்களாலேயே வரையறுக்க முடியவில்லை. சிலர் இனம் என்கிறார்கள், சிலர் நிலப்பகுதி என்கிறார்கள். சிலர் வாழ்வியல் என்கிறார்கள். இந்த நிலையில், தமிழ்நாட்டைக் குறிக்க தமிழ் என்ற சொல்லையே பயன்படுத்துங்கள் என்கிறோம்.”
“திராவிடர் என்று சொன்னால், தமிழர்களிடம் ஓர் உளவியல் ஊனம் ஏற்படுகிறது. அக்கம்பக்கத்து மாநிலங்களுடன் உரிமைகளுக்காகப் போராட முடியவில்லை. தமிழ்நாடு என்று பேசியிருந்தால், தீவிரமாகப் போராடியிருக்கலாம். எங்களைப் பொறுத்தவரை திராவிடம் என்பதும் தமிழ்த் தேசியம் என்பதும் ஒன்றல்ல. திராவிடம் என்பதை ஆரியத்தின் துணை சக்தியாகவே கருதுகிறோம்” என்கிறார் அருணபாரதி.
பெரியார் திராவிடம் எனக் குறிப்பிட்டது, தான் பிற மொழி பேசக் கூடியவர் என்ற சங்கடத்தால் வந்தது, அதை நாம் ஏற்கத் தேவையில்லை என்கிறார் அவர்.
“நீதிக் கட்சி பெரியாரின் பொறுப்பில் வந்தபோது, அதில் தெலுங்கு ஜமீன்தார்கள் அதிகம் இருந்தனர். ஆகவேதான், இயக்கத்தின் பெயரை மாற்றும்போது தமிழர் கழகம் என்பதற்குப் பதிலாக திராவிடர் கழகம் எனப் பெயர் சூட்டினார். தமிழ்நாடு தமிழருக்கே என்பதை மாற்றி, திராவிட நாடு திராவிடருக்கே எனப் பேச ஆரம்பித்தார். தான் சார்ந்திருக்கும் சமூகத்தால், தன்னைப் பிறர் புறக்கணித்துவிடலாம் எனக் கருதி அவர் அப்படிச் செய்தார்” என்கிறார் அருணபாரதி.
ஆனால், இதை மறுக்கிறார் தியாகு.
“அந்தத் தருணத்தில் சென்னை மாகாண அரசு என்பது, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவின் பல பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. ஆகவேதான் அதற்குப் பொருத்தமாக, ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்று பெரியார் சொல்ல ஆரம்பித்தார்,” என்கிறார் அவர்.
ஆனால், மொழி வழியில் மாநிலங்கள் பிரிந்தபோது, தமிழ்நாடு தமிழருக்கே என்பதைத்தான் அவர் முன்வைத்தார். கடைசி பொதுக் கூட்டம் வரை அதை வலியுறுத்தினார். அண்ணா திராவிட நாடு கேட்டபோதுகூட அதை பெரியார் விமர்சித்தார்” என்கிறார் அவர்.
பிராமணர் மீதான பார்வை என்ன?
திராவிட இயக்கங்களைப் பொருத்தவரை, திராவிடத்திற்கு எதிராக ஆரியம் என்ற கருத்தாக்கத்தை முன்வைப்பதோடு, பிராமணர்களையும் ஆரியர்களாகச் சொல்கிறது.
ஆனால், நாங்கள் சொல்லக்கூடிய தமிழ்த் தேசியத்தில் பிராமணர்களும் அடங்குவார்கள் என்கிறார் அருணபாரதி.
“தமிழை ஏற்கக்கூடிய பிராமணர்களும் தமிழ்த் தேசியத்தில் அடங்குவார்கள். ஆனால், அவர்கள் தமிழை ஆட்சி மொழி, வழிபாட்டு மொழியாக ஏற்க வேண்டும். 1956இல் மாநிலப் பிரிவினைக்குப் பிறகு, இங்கு வசிக்கும் பிற மொழியினரும் இதில் அடக்கம்தான்” என்கிறார் அவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)
Leave a Reply
You must be logged in to post a comment.