தமிழ்முறைத் திருமணம் செய்து கொண்ட திருவளர்செல்வன் சாம் றோஷன், திருவளர் செல்வி சகானா!

திரு நக்கீரன் தங்கவேலு அவர்கள் தலைமையில் திருவளர்செல்வன் சாம் றோஷன் மற்றும் திருவளர் செல்வி சகானா இருவரும் தமிழ்முறைத் திருமணம் செய்து கொண்டார்கள். இந்தத் திருமணம் கடந்த ஒக்தோபர் மாதம் 20 ஆம் நாள் JC’s Banquet & Convention Centre இல் இடம் பெற்றது. மணமகன் – மணமகள் இரு வீட்டார் சார்பில் மணமகளின் தந்தையார் திரு. றெஜி வரவேற்புரை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து திருமண ஆசிரியர் ஞானம் அன்ரனி குறளை ஓதி மண விழாவினை தொடக்கி வைத்தார்.

மணவிழாவில் நாதசுர இசையும் பண்டைய முரசும் ஒலிக்கப்பட்டன.

விழாத் தலைவர் மணமக்களுக்கு உறுதிமொழி செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நக்கீரன் தங்கவேலு அவர்களது தலைமை உரை இடம்பெற்றது.

நக்கீரன் தங்கவேலு அவர்களது தலைமை உரை

பெருமதிப்புக்குரிய பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே. இன்று நல்லறம் என்னும் இல்லறத்தில் புகும் மணமக்களே,   உங்கள் அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கம்.

இன்று எனது வாழ்நாளில் பெருமகிழ்ச்சிக்குரிய நாள்.  இருபது ஆண்டுகளுக்கு முன்னர் மணமகளின் தந்தைக்கும் தாயாருக்கும் எனது தலைமையிலேயே தமிழ்முறைத் திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் இன்றும் இந்த மணவிழாவில் கலந்து கொண்டுள்ளார்கள். இன்று அவரது அருமை மகளின் திருமணம் எனது தலைமையில் நடைபெறுவது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்தத் தமிழ்முறைத்  திருமணம் நீண்ட இடைவெளிக்குப் பின் – கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பின்னர் நடைபெறுகிறது. என்ன காரணத்தாலோ தமிழ்முறைத் திருமணம் செய்து தருமாறு யாரும் கேட்கவில்லை.

எங்களது மக்கள் வைதீகத் திருமணங்களுக்கு இந்து சமயவாதிகள்  பழகிப் போய்விட்டார்கள். ஏன் சோலி, மற்றவர்களைப் போலவே நாமும் அக்கினி வளர்த்து, அம்மி விதித்து, அருந்ததி காட்டி, கமற்கிருத மந்திரங்கள் திருமணத்தை நடத்துகிறார்கள். கிறித்தவ சமயத்தை சேர்ந்தவர்கள் தேவாலயங்களில் தமிழில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

பெற்றோர்கள் தமிழ்முறைத் திருமணங்களை செய்யத் தயங்குவதற்கு முக்கிய காரணம், தமிழ்முறைத் திருமணங்களை செய்து கொண்டால் தெய்வக் குற்றம் நேரலாம், சாமி  கோபித்துக் கொள்வார், வாழ்க்கையில் இடையூறுகள் ஏற்படும் என்ற அச்சம் இருக்கிறது. இந்த அச்சம் அர்த்தமற்றது.

இந்துத் தமிழர்களது  திருமணம் சாதகப் பொருத்தம் பார்த்தே செய்யப்படுகிறது. சாதகம் பார்க்காது திருமணம் நிச்சயம் செய்யப்படுவதில்லை. சாதகம் சோதிடர்களால் கணிக்கப்படுகிறது. ஆனால் சோதிடம் அறிவியல் அல்ல. கோள்கள்  உண்மையானவை. அதேபோல் நட்சத்திரக் கூட்டங்களான இராசிகளும் உண்மையானவை.  ஆனால் அவை மனிதர்களது வாழ்க்கையின் போக்கைத் தீர்மானிக்கிறதாகச் சொல்வது மூடத்தனம். இந்த இராசிகள் வெகு தூரத்தில் – நூறு, ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் காணப்படுபவை.

பண்டைய தமிழர்கள் திருமணப் பொருத்தம் பார்த்தார்கள். சோதிடத்தின் அடிப்படையில் இல்லை. அனுபவத்தின் அடிப்படையில் பார்த்தார்கள். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டு பழமை வாய்ந்த தொல்காப்பியத்தில் திருமணத்தில் இணையும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்க வேண்டிய பத்துப் பொருத்தங்கள் சொல்லப்படுகின்றன.

பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு,
உருவு, நிறுத்த காம வாயில்,
நிறையே, அருளே, உணர்வொடு, திரு -என
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.  (1219வது) பாடல்வரிகள் )

1. குடும்பத்தின் பரம்பரை வரலாறு. (இருவருடைய குடும்பங்களும் குற்றமில்லாத குடிப்பிறப்பைக் கொண்டனவா என்று பார்த்தல்)

2. இருவரின் ஒழுக்கம். (தனி நபருக்குரிய ஒழுக்கனெறியில் இருவரும் சிறந்தவர்களா என்று பார்த்தல்)

3. ஆளுமை. (ஆணாகின், ஆண்மைக்குரிய ஆளுமையும், பெண்ணாகின், பெண்ணுக்குரிய அச்சம், மடம், நாணம்,
பயிர்ப்பு முதலியன கொண்ட ஆளுமையும் உள்ளனவா என்று பார்த்தல்)

4. வயது. (இருவரும் ஒத்த வயதினரா என்று பார்த்தல்)

5. வடிவம். (இருவருக்கும் உருவ ஒற்றுமை உள்ளதா என்று பார்த்தல்)

6. காம உறுப்பு. (இருவருக்கும் காம உறுப்புப் பொருத்தம் உள்ளதா என்று பார்த்தல். தோற்றத்திலிருந்தும் பழக்க வழக்கங்களிலிருந்தும் இதனை அறிய வேண்டும். வெளிப்படையாகக் கூறாமல் ‘ஒத்த காம உணர்ச்சி உடையனரா என்று பார்த்தல்’ என்று உரையாசிரியர்கள் மழுப்புவர்)

7. மனவுறுதி.

8. அருளுடைமை.(பெண், ஆணின் பாலும், ஆண், பெண்ணின் பாலும், திருமணத்திற்குப்பின் குறை கண்டவிடத்து, புரிந்துணர்வோடு ஒன்றாதல்)

9. உணர்வு. (ஒத்த சிந்தனை உடையவர்களா என்று பார்த்தல். எடுத்துக்காட்டாக, இருவருமே முன் கோபம் உடையவர்களாகவோ அல்லது இருவருமே முன்யோசனை யில்லாதவர்களாகவோ இருந்துவிடலாகாது)

10. பொருளாதாரம். (இருவரும் ஒத்த பொருளாதார அந்தஸ்து உடையவரா என்று பார்த்தல்).

இற்றைக்கு 62 ஆண்டுகளுக்கு முன்னர் நான் தமிழ்முறைத் திருமணம்  மிக எளிய முறையில் செய்து கொண்டேன். இரண்டு மாலை, பத்துத் திருக்குறள், நாலு பெரியோர்களுடைய வாழ்த்துரையோடு திருமணம் நடந்து முடிந்தது. ஓகோ என்று இல்லாவிட்டாலும் ஆகா என்று சொல்லுமளவுக்கு எனக்கு ஆறு பிள்ளைகள், பன்னிரண்டு பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள்.

அதிக தூரம் போவானேன் தமிழ்முறைத் திருமணம் செய்து கொண்ட மணமகளின் தந்தை, தாயாரும் அவர்களது பிள்ளைகளும் நல்லபடியாகத்தான் வாழ்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல நான் தலைமைதாங்கி செய்து வைத்த தமிழ்முறைத் திருமணம் செய்து கொண்டவர்கள் நன்றாகவே வாழ்கிறார்கள். அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லை.

இப்படிச் சொல்வதால் தமிழ்முறைத் திருமணம் செய்து கொண்டால் எல்லாமே நல்லபடி நடக்கும் என்பதல்ல. தமிழ்முறைத் திருமணம் செய்து  கொள்பவர்கள் சற்று எச்சரிக்கையோடு இருக்கிறோம். தன் கையே தனக்கு உதவி என்று நினைக்கிறோம்.    முடிந்த மட்டும் குறள் வழி வாழ முயற்சிக்கிறோம்.

இல்லற வாழ்க்கையில் வெற்றி பெறுவது 90 விழுக்காடு கணவன் மனைவி கைகளிலேதான்  இருக்கிறது. ஒரு பத்து விழுக்காடு  தாய், தந்தையர், உறவினர்கள், நண்பர்களது கைகளில் இருக்கிறது.

இப்படியான தமிழ்முறைத் திருமணங்கள் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கில் இருந்தது. அதற்குச் சான்றாக அகநானூற்றில் இரண்டு பாடல்கள் – 86 மற்றும் 136 ஆவது பாடல்கள்  உண்டு. ஐயரைக் கொண்டு வைதீக முறைப்படி செய்யும் திருமணங்கள் பிற்காலத்தில் வழக்கில் வந்தன.

வளர்பிறை நாளில், விடியற் பொழுதில் இத்திருமண நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. வரிசையாகக் கால்கள் நடப்பட்டுப் பந்தல் அமைக்கப் பட்டிருக்கின்றது. இப்பந்தலிலே வெண்மணல் பரப்பப்பட்டிருக்கின்றது. விளக்குகள் ஏற்றப்பட்டிருக்கின்றன, மலர் மாலைகள் தொங்கவிடப்;பட்டிருக்கின்றன. உற்றார், உறவினர் கூடியிருக்கின்றனர். உழுத்தம்மா போட்டுச் சமைத்த களியையும் நெய்மணக்கும் சோற்றையும் கூடியிருப்போர் உண்டு மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த வேளையிலே மக்கள் தொண்டிலே ஆர்வம் மிக்கவரும் பிள்ளைகளைப் பெற்றெடுத்தவருமான பேரிளம் பெண்கள் அகன்ற வாயையுடைய மண்பானையில் பூக்கள் மற்றும் நெல் கலந்த நீரைச் சுமந்து வந்து மணமகளை நீராட்டுகின்றனர். அதன் பின்பு மணப்புடவையால் மணமகளை அழகுபடுத்தி மணப்பந்தலிலே கொண்டு வந்து இருத்துகின்றனர். அவ்வீட்டிலே வணங்கும் தெய்வத்துக்கு வழிபாடு இயற்றுகின்றனர். மணமுழா முழங்குகின்றது. காப்பு நூல் கையில் அணிவிக்கப்படு கின்றது.

இவை அனைத்தையும்; பெண்களே நடத்தி முடித்து ‘கற்பொழுக்கத்தில் நின்றும் தவறாது, நல்ல பல கடமைகளைச் செய்து, உன்னை மனைவியாகப் பெற்றவன் பெரிதும் விரும்பும் பெருமைக்குரிய இல்லக்கிழத்தியாக விளங்கு வாயாக” என்று வாழ்;த்துக் கூறுவதையும் காணலாம். இவ்வாறாகப் பண்டைத் தமிழர் திருமணமானது ஓரிரு சடங்குகளோடு மகளிரே நடத்தி வந்தமையைச் சங்கப் பனுவல்கள் வாயிலாக நாம் அறிய முடிகின்றது.

அவையோரே, இந்த வேளையிலே தமிழர் திருமணத்தின் ஒருபகுதியாக தமிழ்மறை தந்த வள்ளுவப் பேராசான் மணமக்களுக்குரிய வகுத்துக் கூறியுள்ள கடமைகளைப் பார்ப்பது பொருத்தமானதாக இருக்குமென நம்புகிறேன். வள்ளுவப் பேராசான் இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தின் வாயிலாக குடும்பத் தலைவனுக்குரிய கடமைகளையும் வாழ்க்கைத் துணை நலம் என்ற அதிகாரத்தின் வாயிலாக குடும்பத் தலைவிக்குரிய கடமைகளையும் எடுத்துக் கூறியுள்ளார்.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
.            
(குறள் 41)

அஃதாவது குடும்பத்தலைவன் எனப்படுபவன் தனக்கு இயல்பாகவே உறவினராக உள்ள பெற்றோர், மனைவி, மக்கள் ஆகிய மூன்று பகுதியினருக்கும் நல்வழிகாட்ட வேண்டியது அவனது கடமை என்று தொடங்கி இல்லறத்திலே வாழவேண்டிய முறையிலே வாழ்பவன் வானிலே உறைவதாக் கூறப்படும் தெய்வத்துக்கு ஒப்பாக – சமமாகப் போற்றப்படுவான் என்று கூறிமுடிப்பார். அதுபோலவே, இல்லத் தலைவியானவள், 

மனைத்தக்க மாண்புடையர் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்கான் வாழ்க்கைத் துணை.   
(குறள் 51)

என்பார். அஃதாவது இல்வாழ்க்கைக்கே உரியதாகக் கூறப்பட்ட விருந்தோம்பல் முதலிய நற்குண நற்செய்கைகள் உடையவளாக இருப்பதோடு குடும்ப வருவாய்க்குத் தக்க செலவை மேற்கொள்பவளாக விளங்க வெண்டுமென்று தொடங்கி இல்லத் தலைவியின் கடமைகளை வகுத்துரைப்பார். மணமக்கள் வள்ளுவப் பேராசான் வகுத்துரைத்துள்ள கடமைகளை படித்துப் பார்ப்பது பயன்தரும்.

இவ்வாறு, இல்லத் தலைவன் – தலைவியின் கடமைகளை வகுத்துரைத்த வள்ளுவப் பேராசான் காதல் சிறப்புப் பற்றியும் எடுத்துரைக்கத் தவறவில்லை. நேரம் கிடைத்தால் அதையும் படித்துப் பாருங்கள். ‘மலரினும் மெல்லியது காமம், சிலர் அதன்செல்வி தலைப்படுவார்’ என்று கூறுவார். அஃதாவது காதல் மலரை விட மென்மையானது. அதன் பக்குவம் அறிந்து அதன் பயனைப் பெறுபவர் ஒரு சிலரே ஆவார் என்பார்.

மேலும்

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு

என்கிறார். உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து தனித்தனியாக இருப்பதில்லை. அது போலவே மணமக்கள்  உயிரும் உடலும் போல வாழ வேண்டும் என்பது இதன் பொருள்.  

திருக்குறள் ஒரு அறநூல். 38 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதனை வாங்கிப் படிப்பதோடு நின்றுவிடாது  உங்களது பிள்ளைகளுக்கும்   வாழ்க்கைக்கு தேவையான  சில குறட்பாக்களை ஆவது சொல்லிக் கொடுங்கள்.  அகவையில் குறைந்த பிள்ளைகளுக்கு அவ்வையார் எழுதிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நன்னெறி  போன்ற நூல்களில் காணப்படும் பாடல்களை சொல்லிக் கொடுங்கள். அவை பிள்ளைகளின் ஒழுக்கத்துக்கு வேலியாக அமையும். திருவள்ளுவர் தலைவன் தலைவி இடையிலான உறவை,

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் ஒரு பாடல். பாடல் எண் 40. பாடிய புலவரின் பெயர் செம்புலப்பெயல்நீரார். அது அவருடைய உண்மையான பெயர் அல்ல. அவர் பாடிய பாடலில் வருகிற ஒரு சொற்றொடரையே அவருக்கு வைத்துவிட்டார்கள். இந்தப் பாடலை நீங்கள் படித்திருப்பீர்கள். திரைப்படத்திலும் வந்துள்ளது.

யாயும் ஞாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல்நீர் போல,
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!


யாய் = என்னுடைய தாய்; ஞாய் = உன்னுடைய தாய்; எந்தை = என் தந்தை; நுந்தை = உன் தந்தை; கேளிர் = உறவினர்;
செம்புலம் = செம்மண் நிலம்; பெயல் = மழை;

என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் யார் யாரோ
என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் உறவினர்?
நானும் நீயும் எவ்வாறு முன்பு அறிந்தோம்?
செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல
அன்புடைய நம் நெஞ்சம் தாமாக ஒன்றுபட்டனவே.

இதிலிருந்து ஒரு உண்மை தெரிகிறது. பண்டைய காலத்தில் காதல் திருமணங்கள் மட்டுமல்ல தாய், தந்தையர் பெரியோர் பேசிச் செய்யும் திருமணங்களும் இடம்பெற்றன.

இறுதியாக இருமனம் ஒரு மனம் ஆக இணைவதே திருமணம்  என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். மணமக்கள்  என்றென்றும் நீலவானும் நிலவும் போல, பூவும் மணமும் போல, பாட்டும்  பொருளும் போல, கண்ணும் இமையும் போல தமிழும் சுவையும் போல  இன்று போல் என்றும்  நீடு வாழ வாழ்த்தி விடைபெறுகிறேன். வணக்கம்.

அன்பரசி வாழ்த்துரை வழங்கினார்.

About editor 3160 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply