தமிழ்ப் பொது வேட்பாளரை அம்மணமாக்கிய நிலாந்தனும் அவரது பரிவாரங்களும் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்!
நக்கீரன்
எல்லோருக்கும் சொல்லும் பல்லி தான் மட்டும் கூ ழ்ப் பானைக்குள் விழுந்ததாம்.
பத்தி எழுத்தாளர் நிலாந்தன் சங்குச் சின்னத்தை சனநாயக ததேகூயிடம் பறிகொடுத்த அல்லது தாரைவார்த்த கதையைத்தான் சொல்கிறேன். இதனால் அவரது சங்கை கெட்டதுதான் மிச்சம்.
சனநாயக ததேகூயில் இருக்கும் கட்சிகள் எல்லாம் முன்னாள் ஆயுதக் குழுக்கள். ஒருவரை யொருவர் சுட்டும் வெட்டியும் கொன்றவர்கள். தமிழ்த் தேசியத்தை மாற்றானுக்கு காட்டிக் கொடுத்தவர்கள். அதிலும் புளட் மே 18, 2009 வரை விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆயுதம் எடுத்துப் போராடிய ஒட்டுக் குழு. அதன் தலைவர் சித்தார்த்தன் வி.புலிகளை தோற்கடிக்கப் பட்டதில் புளட்டுக்கும் கணிசமான பங்குண்டு என்று மார்தட்டியவர்.
மேற்குலக நாடுகள் போரின் இறுதிக் கட்டத்தில் ஒரு போர் நிறுத்த வேண்டுகோளை முன்வைத்தபோது, சித்தார்த்தன் அந்த ஆலோசனை வி.புலிகளுக்கு உயிர்க்காற்று (Oxygen) கொடுத்ததற்குச் சமம் என்று எள்ளி நகையாடியவர். இவர்களோடுதான் நிலாந்தன் கை கோர்த்து ஒரு துன்பியல் நாடகத்தை பொது வேட்பாளர் என்ற போர்வையில் அரங்கேற்றினார். அந்தப் பொது வேட்பாளர் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்து மூக்குடை பட்டாலும் “கீழே விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை” என்று சொன்னவன் மாதிரி “இது தொடக்கம். அடுத்த வாட்டி வென்று காட்டுகிறோம்” என மொட்டைத் தலைச்சி மயிரைச் சிலிர்த்துக் காட்டியவள் மாதிரி வாய்வீரம் பேசுகிறார்.
சனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளரும் ஊடகப் பேச்சாளருமான துளசி “தமிழ்த் தேசியத்திற்காக மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்பதை மக்கள் புகட்டியுள்ளனர்” எனப் பகிடி விடுகிறார்!
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல பொது வேட்பாளர் அரியநேத்திரன் அவர்களது சொந்தத் தொகுதியான பட்டிருப்பில் அவருக்கு விழுந்த வாக்குகள் 12,356 (13 விழுக்காடு) மட்டுமே. மாறாக சஜித் பிரேமதாச பெற்ற வாக்குகள் 26,512 (43.09 விழுக்காடு), இரணில் விக்கிரமசிங்க பெற்ற வாக்குகள் 18,845 (29 விழுக்காடு) ஆகும். நிலாந்தன் இடத்தில் ஒரு மானஸ்தன் இருந்தால் ஒரு முழக் கயிற்றில் தொங்கியிருப்பான்! அல்லது ஒரு துளி விஷம் குடித்து உயிரை மாய்த்திருப்பான்!
நிலாந்தன் அண்மையில் எழுதிய கட்டுரை ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்,
“தமிழ்ப் பொது புத்தியை பொறுத்தவரை மக்கள் பிரதிநிதிகள் மதுச்சாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றது அல்லது தமது பினாமிகளின் ஊடாக மதுச்சாலைகளை நிர்வகிப்பது என்பது அவர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கூடியது.
ஆனால் தன் அரசியல் எதிரிகளை அவ்வாறு தகுதி நீக்கம் செய்ய முற்படும் சுமந்திரன் அணி அந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் தகுதியுடையதா? ஏனெனில் சுமந்திரன் எப்படிப்பட்ட ஒரு அரசியலை செய்கின்றார்? தமிழ் மக்களைச் சிதறடிக்கும் அரசியலைத்தான் அவர் செய்து வருகிறார்.
அவர் எல்லாவற்றையும் கொட்டிக் குலைக்கிறார்.தனது சொந்தக் கட்சியையும் கொட்டிக்குலைக்கிறார்.அவரும் தமிழ் மக்களுக்குப் பொறுப்புக் கூறாத ஒருவர்தான். அதைவிட முக்கியமாக,தமிழ் மக்களுக்கு எதிரான இனஅழிப்புத் தொடர்பில் பொறுப்புக்கூறத் தயாரற்ற சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டார். (தமிழ்வின்)
இங்கே அவர் முன்னாள் நா.உறுப்பினர் சுமந்திரன் அவர்களை தூற்றுவதில் பொருள் இல்லை. முதலில் சஜித் பிரேமதாசா அவர்களை ஆதரிக்கும் முடிவை எடுத்தது சுமந்திரன் அல்ல. அந்த முடிவை எடுத்தது இதஅக இன் உயர்பீட அதிகாரம் படைத்த மத்திய குழு ஆகும். அதுவும் அந்த முடிவு எழுந்தமானத்தில் எடுத்த முடிவு அல்ல. மத்திய குழு ஒருமுறைக்கு ஐந்துமுறை கூடி எடுத்த முடிவு. மூன்று முக்கிய கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை ஆராய்ந்து பார்த்த பின்னர் எடுத்த முடிவு. ஆனால் “நாய்க்கு எங்கே கல்லெறி பட்டாலும் காலைத்தான் தூக்குமாம்” அது போல நிலாந்தன் அந்த முடிவு சுமந்திரன் அணியின் முடிவு என மடைமாற்றம் செய்யப் பார்க்கிறார்.
2024 இல் அல்ல 2019 இல் கூட இதஅக சஜித் பிரேமதாசா அவர்களைத்தான் ஆதரித்தது. இரண்டு தேர்தலிலும் பெரும்பான்மை தமிழ்மக்கள் இதஅக கேட்டுக் கொண்டதற்கு இசைவாக சஜித் பிரேமதாசாவை ஆதரித்து வாக்களித்தார்கள். .இம்முறை வட – கிழக்கில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்களிலும் சஜித் பிரேமதாசா மொத்தம் 6,76,681 (43.09 விழுக்காடு) வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். மாறாக நிலாந்தனின் பொது வேட்பாளர் வட கிழக்கில் 208,479 (20.56 விழுக்காடு) வாக்குகளை மட்டும் பெற்று படுதோல்வி அடைந்தார். இதில் வடக்கில் 143,065 (26.57 விழுக்காடு) வாக்குகளும் கிழக்கில் வெறுமனே 65,414 (13.39 விழுக்காடு) வாக்குகள் மட்டும் கிடைத்தன. இந்தத் தோல்வியை மறைக்கவே நிலாந்தன் சுமந்திரன் மீது பாய்கிறார்!
இதன் மூலம் வட கிழக்கில் வாழும் தமிழ் வாக்களர்களில் 79.24 விழுக்காடு வாக்காளர்கள், தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராக வாக்களித்து அவரை நான்காவது இடத்துக்குத் தள்ளினார்கள்.
சுமந்திரன் “எல்லாவற்றையும் கொட்டிக் குலைக்கிறார்.தனது சொந்தக் கட்சியையும் கொட்டிக்குலைக்கிறார்.அவரும் தமிழ் மக்களுக்குப் பொறுப்புக் கூறாத ஒருவர்தான்” என்கிறார். தமிழரசுக் கட்சி பலமாகத்தான் இருக்கிறது. அதிலிருந்து சில பதவி வெறியர்கள் வெளியேறுவதால் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. கட்சியில் இருந்து இரண்டொருவர் வெளியேறியதால் வீடு இப்போ தூய்மை ஆக இருக்கிறது! அது சரி. சுமந்திரன் எல்லாவற்றையும் கொட்டிக் குலைக்கிறார். தனது சொந்தக் கட்சியையும் குலைக்கிறார் என ஊழையிடும் நிலாந்தனின் யோக்கியதை என்ன? சனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தியதன் மூலம் தமிழ்மக்களது ஒற்றுமையை குலைக்கவில்லையா? சங்கை சனநாயக ததேகூ களவாடியது போல தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அரியநேத்திரனை களவாடவில்லையா? பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது பற்றி தமிழரசுக் கட்சியோடு பேசாது ஆயுதக் குழுக்களோடு கைகோர்த்ததற்குப் பெயர் ஒற்றுமையா?
மேலும் சுமந்திரன் ” தமிழ் மக்களுக்கு எதிரான இனஅழிப்புத் தொடர்பில் பொறுப்புக்கூறத் தயாரற்ற சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டார்” என்று நிலாந்தன் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறார். ஒரு வாதத்துக்கு அதனை அப்படியே வைத்துக் கொள்வோம். ஆனால், பெரும் பான்மையான தமிழ்மக்கள் சஜித் பிரேமதாசாவுக்குத்தானே வாக்களித்தார்கள்? அந்த மக்கள் அறிவிலிகளா? தற்குறிகளா? இல்லை அந்த மக்களது தீர்ப்பைச் செரிக்க முடியாது அதனைக் கொச்சைப்படுத்தும் நிலாந்தன் அறிவிலியா! அல்லது தற்குறியா?
“தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் நோக்கு நிலையில் இருந்து தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள நேர்மையற்றவர்கள்,கண்ணியமற்றவர்கள், நபுஞ்சகர்கள், நசியல் பேர்வழிகள், வழிந்தோடிகள், டீலர்கள் போன்றவர்களைத் தமிழ்மக்கள் தோற்கடிக்க வேண்டும்” என்கிறார். இது நல்ல யோசனை. முதலில் விக்னேஸ்வரன் அவர்களிடம் இருந்து செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், பிறேமச்சந்திரன், சிறிகாந்தா வரை தொடங்குவோம். இவர்கள்தான் தமிழ்த் தேசியத்தை மொத்தமாகவும் சில்லறையாகவும் தமிழ்த் தேசியத்தை விற்று வயிறு வளர்க்கிறார்கள்.
நிலாந்தன் எதற்கெடுத்தாலும் மற்றவர்களை, குறிப்பாக மக்கள் பிரதிநிதியான சுமந்திரனை புழுதிவாரித் தூற்றுவதை நிறுத்த வேண்டும். அப்படித் தூற்றுவது அறிவீனம் மட்டுமல்ல படு அயோக்கியத்தனம்.
தனது அரசியல் எதிரிகளை சுமந்திரன் சிறுமைப்படுத்தித் தோற்கடிக்க முயற்சிக்கிறாராம். தமிழ் மக்களைச் சிதறடிக்கும் ஓர் அரசியலை முன்னெடுக்கிறாராம். தனது அரசியல் எதிரிகளைக் குற்றஞ் சாட்டுவதன் மூலம் அவர் தன்னை குற்றமற்றவராகக் காட்டப் பார்க்கிறாராம். அதாவது சாராய உரிமங்கள் பெற்றவர்கள் எல்லாம் உத்தமர்கள், ஒழுக்கசீலர்கள், நாணயத்தவர்கள் அந்த புனிதர்கள் பற்றி எதுவும் சுமந்திரன் குறை சொல்லக் கூடாதாம்!
வேறுவிதமாகச் சொன்னால் சுமந்திரனைத் தாக்குவதற்கு நிலாந்தன் சாராய உரிமங்களைப் பெற்ற நா.உறுப்பினர்களுக்கு லாலி பாடுகிறார். தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார். அதனை நியாயப்படுத்துகிறார். அவன் கிடக்கிறான் குடிகாரன் எனக்கு முதலில் வார் என்கிறார்.
நிலாந்தன் மெத்தப் படித்தவர் மாதிரிக் காட்டுவதற்கு சில வாலாயமான சொற்பதங்களைப் பயன்படுத்துகிறார். அவை எல்லாம் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட சொற்றொடர்கள். எடுத்துக் காட்டாக மக்களின் திரட்சி என்பது mass molestation, பொதுநோக்கு என்பது commonsense, தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் நோக்கு நிலையில் இருந்து தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள நேர்மையற்றவர்கள் என்பது Dishonest people in the Tamil national arena from the perspective of mobilizing the Tamil people as a nation.
நிலாந்தன் கூலிக்கு மாரடிக்கும் பத்தி எழுத்தாளர். முன்னைய காலங்களில் நீதியரசர் விக்னேஸ்வரனை இந்திரன் சந்திரன் என்று போற்றி பாடியவர். இந்த உறவு இப்போதும் விட்டகுறை தொட்ட குறையாகத் தொடர்கிறது. தன்னை ஒரு ஆன்மீகவாதியாக சித்தரிக்கு விக்னேஸ்வரன் சாராய விற்பனை உரிமம் பெற்றதைப் பற்றி பேச்சு, மூச்சில்லையே? என்ன காரணம்?
உண்மையில் நிலாந்தனையும் அவரது பரிவாரங்களையும் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்து விட்டார்கள். அரியநேத்திரனுகுத் தலைப்பாக் கட்டி, பப்பா மரத்தில் ஏற்றி வழுக்கி விழ வைத்து அவருக்கு சங்கூதி விட்டார்கள். அவரை அம்மணமாக்கி விட்டார்கள். இருந்த ஒற்றுமையைக் குலைத்து தமிழினத்துக்கு இரண்டகம் செய்து விட்டார்கள். தமிழ்மக்கள் முகத்தில் கரி பூசி விட்டார்கள். தங்கனது வீணாசைக்கு – குறுந்தேசியத்துக்கு – அரியநேத்திரனைப் பலிக்கடா ஆக்கிவிட்டார்கள்.
தமிழ்ப் பொது வேட்பாளரைத் தேர்தலில் போட்டியிட வைத்து, தமிழ் மக்களது ஒற்றுமையைக் கொட்டிக் குலைத்து, தமிழ்த் தேசியத்தைச் சிதறடித்து அரியநேத்திரனை அம்மணமாக்கிய நிலாந்தனும் அவரது பரிவாரங்களும் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்!
Leave a Reply
You must be logged in to post a comment.