மதிப்புக்குரிய அனுரகுமார திஸாநாயக்க அவர்கட்கு
அன்புக்குரியவரே!
வணக்கம்.
உங்களை முறைப்படி எப்படி அழைத்து இக் கடிதத்தைத் தொடங்குவது என்று தெரியாமல் குழம்புகிறேன்.
சம்பிரதாயங்களை வெறுக்கும் நீங்கள்இ வழமையான “மாண்புமிகு” போன்ற மரியாதை வார்த்தைகளை விரும்பமாட்டீர்களோ? என்று எண்ணத் தோன்றுகிறது.
உங்கள் எல்லாருக்கும் பிடித்த “தோழர்” என்ற ‘கொம்மியூனிஸ்ற்’ வார்த்தையைப் போட்டு அழைக்கலாம்தான். ஆனால் அந்த வார்த்தையைப் போட்டு உங்களை விளிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. தமிழர்களைப் பொறுத்தவரையில் “தோழமை” என்ற வார்த்தை மிக உயர்வானது.
யார் என்றும் தெரியாதவர்களை,உண்மைத் தோழமை இல்லாதவர்களை,திடீரெனத் “தோழர்” என்று அழைத்து,பொய்மை செய்வதற்கும்இ அவ் வார்த்தையின் மதிப்பைக் குறைப்பதற்கும் என் தமிழ்மனம் விரும்பவில்லை.
ஆகவேதான் “மரியாதைக்குரிய” என்ற வார்த்தையை மட்டும் போட்டு உங்களை விளித்து,இக் கடிதத்தைத் தொடங்குகின்றேன்.
மிகப் பெரிய புரட்சியைச் செய்து தலைநிமிர்ந்து நிற்கிறீர்கள். அதற்கு முதலில் என் வாழ்த்துகள். குறிப்பிட்ட கட்சிகளைச் சாராத எவரும், இலங்கையின் அரசுக் கட்டிலில் ஏற முடியாது என்றிருந்த நிலையைப் பொறுமையோடு முயற்சித்து உடைத்திருக்கிறீர்கள். பெருமைக்குரிய விடயம்தான்!.
ஆனால் அந்த வெற்றிக்கு உங்களது முயற்சி மட்டுமே காரணம் என்று சொல்லமாட்டேன். ஐக்கிய தேசியக் கட்சி ,சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்ற இருபெரும் கட்சிகளும் பலகாலமாய் இனப்பகையைத் தூண்டி,சிங்கள மக்களின் வாக்குகளைத் தமது ‘பொக்கெற்றுகளுக்குள்’ வைத்திருந்தன.
தம் வெற்றியின் நோக்கமாய், சகோதரர்களாய் இருந்த சிங்கள மக்களையும்,தமிழ் மக்களையும் பகைவர்களாக்கியதும் அவர்கள்தான்.
நல்ல காலமாய் அக் கட்சியைச் சேர்ந்தவர்கள், உட்பகையை விரித்து ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டதால், இன்று அக் கட்சிகள் சில்லுச் சில்லாய் உடைந்து சிதறிப்போய்க் கிடக்கின்றன.
நாட்டு மக்களைப் பிரித்துப் பகை வளர்த்த பழியோ என்னவோ? இன்று அவர்களின் கட்சிகளே தம்முள் பகை வளர்த்துச் சிதறிப் போயின. நல்லவர்கள் இட்ட சாபம் போலும்!.
அங்ஙனம் அவர்கள் பகைவளர்த்துச் சிதறிப் போனதும்,உங்களது வெற்றி வாய்ப்புக்காம் காரணங்களில் ஒன்றாய்ப் போனதை நீங்களும் மறுக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
ஆனாலும், உங்களது ஓயாத முயற்சிதான் நீங்கள் பெற்ற வெற்றியின் பெரும் பகுதியாயிற்று என்பதையும் மறுத்தற்கில்லை.
எப்படியோ இனப்பகை வளர்க்காமல்,தேசப்பற்றினைத் தூண்டி, தாங்கள் அடைந்திருக்கும் இவ் வெற்றி, இதுநாள்வரை தலைகவிழ்ந்திருந்த இலங்கை அன்னையைத் தலைநிமிர வைத்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையேயாம்.
ஒரு இராணித் தேனீ,தான் மையமாக இருந்து மற்றைய தேனீக்களைச் சேர்த்துக் கொண்டு ஓர் தேன் கூட்டினை அமைப்பதுபோல, நீங்கள் இராணித் தேனீயாய் இருந்து உங்களது வாக்கு வன்மையாலும், செயல் வன்மையாலும் பலரையும் ஒன்றிணைத்து, அண்மைய ஜனாதிபதித் தேர்தல் வெற்றியால் புதிய அரசு என்னும் இனிய தேன் கூட்டினை அமைத்துப் பெருமை பெற்று நிற்கிறீர்கள்.
உங்கள் கட்சியின் ஆரம்பகாலச் செயற்பாடுகளால், மக்கள் மத்தியில் பதிவாகியிருந்த, ‘இது ஓர் வன்முறைக் கும்பல்’ என்ற கருத்தினை மாற்ற, ஊர்ஊராய்த் திரிந்து நீங்கள் செய்த முயற்சி பாரியது. உங்கள் தலைமையின் பின் நிகழ்ந்த அற்புதம் இது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
அதற்காக என் மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சியைக் கைப்பற்றிய கையோடு நீங்கள் எடுத்துவரும் சில அதிரடி முடிவுகள் சிங்களவர்களை மட்டுமன்றித் தமிழர்கள்,இஸ்லாமியர்கள் என அனைவரையும் அதிரச் செய்திருக்கிறது.
“சொல் புதிது பொருள் புதிது சுகமான நவ கவிதை” எனப் பாரதி பாடினாற் போல,இன்று நீங்களும் உங்களது புதிய புதிய நடவடிக்கைகளால் அனைத்து இன மக்களினதும் “உள்ளம் கவர் கள்வனாய்” ஆகியிருக்கிறீர்கள்.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த, உலக வங்கியின் கடன் போன்ற தீர்வுகளைப் பலரும் முன் வைத்து வந்த வேளையில், அதற்கு மாறாக அப் பிரச்சனையைக் கையாளவென நீங்கள் தொடங்கியிருக்கும் புதிய பாதை பலரையும் விழி விரிக்கச் செய்திருக்கிறது.
நீங்கள், “நோய்நாடி,நோயின் முதல் நாடி” அப் பிரச்சனைக்கான சரியான தீர்வினை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறீர்கள்.
உங்களது சிக்கன நடவடிக்கையைத்தான் சொல்கிறேன். ஆசிரியர் கையில் பிரம்பெடுக்கும் முன்னரே, பொக்கெற்றுகளுக்குள் இருந்த களவுப் பொருட்களைத் தாமாக வெளியே எடுத்துப் போடும் மாணவர்களைப் போல, நீங்கள் இறுக்கமான நடவடிக்கைகளைத் தொடங்கும் முன்னரே, “பழம் தின்று கொட்டைகள் போட்ட” அரசியல் வாதிகள் எல்லாம், “களவினால் ஆகிய” தமது ஆக்கங்களை வலிய வெளிப்படுத்தும் காட்சிகளைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது.
காலிமுகத்திடலில் அநாதைகளாய் நின்ற ஆடம்பர வாகனங்களின் வரிசைகண்டு மகிழாதார் எவரும் இல்லை எனலாம்.
“ஊருக்குத்தான் உபதேசம் உனக்கும் எனக்கும் இல்லையடி” என்று செயற்படுவோர் மத்தியில், உபதேசத்தை முதலில் உங்களுக்காக்கிய உங்களது செயற்தூய்மை கண்டு நாடே வியந்து போயிருக்கிறது.
பதவியேற்பு வைபவத்தை எந்தவித ஆடம்பரங்களும் இன்றி நீங்கள் அரங்கேற்றிய விதம் கண்டு ஆச்சரியப்படாதார் எவரும் இல்லை எனலாம்.
கடன் வாங்கிக் களிப்புற்று இருப்பதை விட, செலவைச் சுருக்கி இருப்பதைப் பெருக்கி ஏற்றமுறுவதே சிறந்தது என்று நாட்டு மக்களுக்கு உபதேசிக்கத் தொடங்கியிருக்கிறீர்கள். நல்ல முயற்சி!.
உலகுக்கு அறம் உரைத்த எங்களின் தமிழ்ப் புலவன் வள்ளுவர் “ஆகாறு அளவிட்டிதாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை” என்றும் “நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு” என்றும் இரண்டு குறள்களை எழுதிச் சென்றிருக்கிறார்.
உங்களுக்கு இக் குறள்களின் பொருள் தெரிய வாய்ப்பில்லை என்றபடியால், அதனை உங்களுக்கு விளங்கும்படி சொல்ல நினைக்கிறேன்.
‘ஒரு நீர்க்கேணியிலிருந்து நீர் வெளியேறும் பாதை சுருக்கப்படுமாயின்இ அக் கேணிக்கு நீர் வரும் பாதை அகட்டப்படாத பட்சத்திலும் குற்றமில்லையாம்’ என்பது முதற் குறளுக்கான விளக்கம்.
‘தம் தேவைக்காகப் பிறரை நாடி நிற்காத நாடே நாடாம். அங்ஙனம் அன்றி பிறரை நாடி வளம் காட்டும் நாடுகள் நாடல்லனவாம்’ என்பது இரண்டாம் குறளுக்கான விளக்கம்.
குறள் படிக்காவிட்டாலும் குறளின் சாராம்சம் உங்களுக்கு விளங்கியிருக்கிறது. அதனால்தான் கடன் வாங்குவதில் அக்கறை காட்டாமல் ஆடம்பரங்களைச் சுருக்குவதில் அக்கறை காட்டத் தொடங்கியிருக்கிறீர்கள். அம்முயற்சியையும் உங்களிலிருந்து தொடங்கியிருப்பதுதான் மிகச் சிறந்த விடயமாய்ப் படுகிறது.
உங்களது இனபேதமற்ற செயற்பாடுகள், இனப்பிரச்சனையால் பலகாலமாய்ப் பாதிப்புற்றிருக்கும் தமிழ் மக்களின் உள்ளங்களையும் கவர்ந்துவிட்டதென்றே சொல்லத் தோன்றுகிறது.
சுயவுரிமை பெற்றுத் தருவதாய் இதுவரை பொய்மை பேசி, தம்வயிறு வளர்க்கும் தமிழ்க் கட்சிகளை எல்லாம் கூட நிராகரித்து போகிறபோக்கில் உங்களின் பின்னால் தமிழ் மக்களும் அணி திரண்டு விடுவார்களோ? என்றுகூட நினைக்க வேண்டியிருக்கிறது.
ஆட்சிக்கு வரும்வரை, மக்களைக் கவருவதற்காகப் பொய்மை வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் அவற்றையெல்லாம் மறந்துபோகும் போலி அரசியல்வாதிகள் போல் அல்லாமல், சொன்னவற்றுக்கும் மேலாகப் பல நல்ல காரியங்களைச் செய்யத் தொடங்கியிருக்கிறீர்கள். திரும்பத் திரும்ப உங்களைப் பாராட்டத் தோன்றுகிறது.
ஆனாலும், மனதின் மூலையில் ஓர் நெருடல் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதனையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
ஆட்சிக்கு வந்த கையோடு நீங்கள் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் சற்று அவசரப்பட்டதோ? என வரும் எண்ணத்தையும் தவிர்க்க முடியவில்லை.
எங்கள் தமிழில் “புதுசுக்கு வண்ணான் பறைதட்டி வெளுப்பான்” என்றொரு பழமொழி இருக்கிறது. இப் பழமொழியைப் “புதுசுக்கு வண்ணான் கரைகட்டி வெளுப்பான்” என்றும் சிலர் சொல்லுகிறார்கள். முதலில் இவ்விரண்டுக்குமான அர்த்தத்தைச் சொல்லி விடுகிறேன்.
முதன்முதலில் சலவைத்தொழிலைச் செய்யத் தொடங்கும் ஒரு வண்ணான்இ தான் “அப்படிச் செய்வேன்இ இப்படிச் செய்வேன்” என்றெல்லாம் ஊருக்குப் பறைதட்டிச் சொல்லி விட்டுத் தொடங்குவானாம்.
அதெல்லாம் வேலை தொடங்கிய புதிதில் மட்டும்தான் இருக்குமாம், போகப்போக அவன் தொழிலும் பழைய வண்ணார்களின் தொழிலைப்போல ஆகிவிடுமாம். இது அப் பழமொழியின் முதற் பதிவிற்கான அர்த்தம்.
அடுத்துச் சொன்ன பதிவின் அர்த்தம் என்னவென்றால்இ புதிதாக வேலை தொடங்கும் ஒரு சலவைத் தொழிலாளிஇ தான் தோய்க்கின்ற வேட்டி சேலைகள் கிழிந்து விடாது இருப்பதற்காகஇ அவற்றின் கரைகளைச் சேர்த்துக் கட்டிவிட்டுத்தான் தோய்ப்பானாம். போகப்போக அவன் தொழிலிலும் அவ்வக்கறை குன்றிஇ பழைய தொழிலாளிகளின் தொழில் போல் மாறிவிடுமாம்.
சரிஇ இனி இப் பழமொழிகளை உங்களுக்குச் சொன்னதற்கான காரணத்தினைச் சொல்லுகிறேன். உங்களது ஆரம்ப வேகத்தைப் பார்த்தால்இ இதுவும் பறைதட்டி வெளுக்கும் அல்லது கரைகட்டி வெளுக்கும் முயற்சியாகத் தான் இருக்குமோ என்று எண்ணத் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.
உங்கள் அதிரடி நடவடிக்கைகள் இரசிக்கச் செய்கின்றன என்பது உண்மைதான். ஆனால் அந் நடவடிக்கைகளால் ஏற்படப்போகும் எதிர் விளைவுகளைச் சிந்திக்கச் சற்று பயமாகத் தான் இருக்கிறது. உங்களது இந்த நடவடிக்கைகளால்இ உங்களுக்கான எதிரிகளின் வரிசை நீண்டு கொண்டே போகும் என்பதை உணர்ந்துதான் நீங்கள் செயற்படுகிறீர்களா? என்பது தெரியவில்லை.
ஒரு செயலைத் தொடங்கும் தலைவன் ஒருவன்இ அச் செயலைச் செய்வதற்குத் தேவையான பலத்தின் அளவைத் தீர்மானித்த பின்புஇ அச் செயலை நிறைவேற்றுவதற்குத் தன்னிடமுள்ள பலத்தின் அளவையும்இ அச்செயலைத் தடுக்கக் கூடிய எதிரிகளின் பலத்தின் அளவையும்இ தமக்கும்இ எதிரிக்கும் துணைவரக்கூடிய பலங்களின் அளவையும் கூட்டிக்கழித்துப் பார்த்துஇ மொத்தமாகத் தன்பலம் அதிகம் எனத் தெரிந்த பின்னர்தான் அச்செயலில் இறங்க வேண்டும் என்கிறார் நான் முன் சொன்ன அதே வள்ளுவர். (“வினைவலியும் தன்வலியும் மாற்றார் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்”).
இவற்றை எல்லாம் கணித்துத்தான் நீங்கள் செயற்படுகிறீர்களா? எனும் கேள்வி மனதைக் குழப்பிக் கொண்டே இருக்கிறது.
ஏற்கனேவே உங்களது “கொம்மியூனிஸக்” கொள்கையை அயல் நாடான இந்தியாவும்இ இன்றைய உலக முதலாளியான அமெரிக்காவும் விரும்பப் போவதில்லை என்பது நிச்சயம்.
அவர்கள்இ உங்களுக்குத் தெரிவிக்கும் வாழ்த்துகள் எல்லாம் கூடஇ வாயிலிருந்து பிறப்பனவே அன்றி உளத்திலிருந்து பிறப்பன அன்று என்பதை நீங்களே அறிவீர்கள். நம்நாட்டைத் தமது நலத்துக்கான கருவியாய்ப் பயன்படுத்த நினைக்கும் அவர்களுக்குஇ உங்களைப் போன்ற தேசப்பற்றும்இ சுயமும் உள்ள ஒரு தலைவனைப் பிடிக்காது என்பது நிச்சயம்.
எனவேஇ உங்களை வீழ்த்த நினைப்பவர்களோடு அவர்கள் அணிசேர வாய்ப்பிருக்கிறது. இப் பிரச்சனையை எப்படிக் கடக்கப் போகிறீர்கள்? என்பது முதற் கேள்வி.
இதுதவிரஇ உள்நாட்டிலிருந்த பல பண முதலைகளும் உங்கள் வருகையால் மிரண்டுபோய் இருக்கிறார்கள். அவர்களில் சிலர்இ நாட்டை விட்டுத் தப்பியோடி இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
இவர்கள் எல்லாம் இந்த நாட்டை விற்றுப் பிழைத்தவர்கள். இவர்கள் பயந்ததுபோற் காட்டினாலும்இ நாட்டை விட்டு ஓடினாலும்இ ஒருக்காலும் சும்மா இருக்கப் போவதில்லை.
“ஆடிய காலை ஆட்டத் தான் பார்ப்பார்கள்”. உங்களுக்கெதிரான இவர்களின் திட்டமிடுதலும்இ எங்கெங்கோ இருந்து எப்படி எப்படியோ செயற்படத் தொடங்கலாம். இப் பிரச்சனையை எப்படித் தாண்டப் போகிறீர்கள்? என்பது இரண்டாவது கேள்வி.
பாராளுமன்றப் பதவியை மக்களுக்குச் சேவை செய்யும் பணியாக அன்றிஇ தமக்கான பணம் தேடும் பணியாகவும்இ தம் சந்ததி வளர்க்கும் முயற்சியாகவும் நினைத்து வாழ்ந்த நம் உள்ளுர்த் தலைவர்கள் பலரும்கூடஇ உங்களது சிக்கன நடவடிக்கையால் நொந்து போயிருப்பதாகவும் அறியமுடிகிறது.
இவர்கள் எல்லாம் “பழம் தின்று கொட்டை போட்ட” பாதகர்கள். உங்கள் வருகையின் பின் இப்போது இவர்கள் காட்டும் பணிவும்இ பரிசுத்தமும் உண்மையானவை என்று எண்ணத் தோன்றவில்லை. இவர்களது பணவருவாய்ப் பாதைகளை ஒவ்வொன்றாய் நீங்கள் மூடமூடஇ வெளியில் சிரித்தாலும் இவர்கள் உள்ளே கொதித்துப்போய்த்தான் இருப்பார்கள் என்பது நிச்சயம்!.
இவர்கள்இ சூடு கண்ட பூனைகள் அல்லர். ருசி கண்ட பூனைகள். அதனால் மீண்டும் அப் பூனைகள் தமது வருவாய் எனும் அடுப்பங்கரைகளை நாடாமல் இருக்கப் போவதில்லை. எனவேஇ இவர்களும் உங்களுக்கான சதிவலைகளைப் பின்னிக்கொண்டுதான் இருப்பார்கள் என்பது நிச்சயம்.
ஆட்சி அனுபவங்கள் இல்லாதவர்களை வைத்துக் கொண்டுஇ இவ்விடர்களை எல்லாம் எப்படி நீங்கள் கடந்து வரப் போகிறீர்கள் எனும் கேள்வி “மில்லியன் டொலர்க்” கேள்வியாய் “விஸ்பரூபம்” எடுத்து நிற்கின்றது.
இப்போதைக்கு இவ்விடர்களைக் கடக்கஇ உங்களுக்கு இருக்கும் ஒரே பலம் மக்கள் ஆதரவு மட்டுந்தான்!. அதிலும்கூட ஒரு பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது.
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி பற்றிச் சிறிதும் கவலையுறாமல்இ கடன் வாழ்வில் சுகம் கண்டிருந்த எங்கள் மக்கள் சிலரும் கூடஇ உங்களது இப் புரட்சிகளை எத்தனை நாளைக்குத் தொடர்ந்து இரசிக்கப் போகிறார்கள்? என்பதும் கேள்விக்குரிய ஒன்றாகத்தான் இருக்கிறது.
புத்திசாலித்தனமாக பாராளுமன்றத் தேர்தலை உடன் வைத்துஇ மேற் சொன்ன எதிர்ப்புக்கள் வலுவடைவதற்கு முன்புஇ உங்கள் வெற்றியை உறுதிப்படுத்த முனைந்திருக்கிறீர்கள்.
ஆனால்இ தொடரப்போகும் உங்கள் ஆட்சிஇ தரப்போகின்ற தூய்மை நோக்கிய நெருக்கடிகளைஇ நம் மக்கள் தாங்குவார்களா? அல்லது “பழயை குருடி கதவைத் திறவடி” என்று முன்னைய ஆட்சிகளின் கடன் நிர்வாகத்தையே மீண்டும் வரவேற்கப் போகிறார்களா? கேள்விகள் பயமூட்டுகின்றன.
காந்தி என்கின்ற ஒரு தனி மனிதனின் ஆத்மபலம்தான்இ பாரத மக்கள் முழுப்பேரையும்இ துன்பங்களைத் தாங்கிச் சுதந்திரப் போராட்டத்தில் நிலைநிறுத்தி வெற்றி பெறவைத்தது.
அதுபோல உங்களது தனிமனித ஆத்மபலம்தான் உண்மைக்குப் பலமூட்டிஇ நம் மக்களைப் பொய்மையிலிருந்து தொடர்ந்து வெளியில் எடுத்துஇ தேசப்பற்றோடு இயங்கச் செய்ய வேண்டும்.
அத்தகைய ஒரு நிலைமையை நீங்கள் உருவாக்கி விட்டால் மட்டுமே உங்களது கனவுகள் நனவாக வாய்ப்பிருக்கும் என்று நம்புகிறேன். அதை மட்டும் சாதித்துவிட்டீர்கள் என்றால்இ இந்த மக்களே கவசங்களாகி மேற்சொன்ன எதிரிகளிடமிருந்து உங்களை நிச்சயம் காவல் செய்வார்கள்.
உங்களுக்குஇ இறை நம்பிக்கை இருக்கிறதோ? இல்லையோ? தெரியவில்லைஇ ஆனால் தர்ம நம்பிக்கை இருப்பது தெளிவாகத் தெரிகிறது. தர்மம் வேறுஇ இறைவன் வேறு அல்ல. எனவே நான் நம்பும் இறையருளும்இ உங்களுக்குத் துணை புரியும் என்பது நிச்சயம். நீங்கள் வெற்றிபெற வேண்டும் என நானும் பிரார்த்தித்து நிற்கின்றேன்.
“இன்பமே எந்நாளும் துன்பமில்லை”
Leave a Reply
You must be logged in to post a comment.