தேசத் திரட்சியை உருவாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு
புருஷோத்தமன் தங்கமயில்
தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்ட வேட்பாளர் பட்டியல் பெரும் பேசு பொருளாகியிருக்கிறது; விமர்சனங்களைச் சந்திக்கின்றது. ஆனால், இப்போது வெளியாகியிருக்கும் பட்டியலைத்தாண்டி, எவ்வாறான அதிரிபுதிரியான வேட்பாளர்களை எதிர்பார்த்தார்கள் என்று தெரியவில்லை. கட்சியின் பிரதான வேட்பாளர்கள் ஒரு சிலரை வெல்ல வைப்பதற்கான ஏற்பாடுகளின் போக்கில்தான், உதிரி வேட்பாளர்கள் தெரிவு செய்யப் படுகிறார்கள். தேர்தல் – வாக்கு அரசியலுக்குள் சிக்கிவிட்ட அனைத்துக் கட்சிகளும் அதனையேதான் செய்கின்றன. தமிழரசுக் கட்சியிலும் அதுதான் நிலைமை. தங்களை மீறி ஆளுமை செலுத்தக் கூடிய ஒருவரையும் பதவி – அதிகார நிலையில் கொண்டுவருவதற்கு அவர்கள் விரும்புவதில்லை. அதற்கு, சுமந்திரனோ, சிறீதரனோ, கஜேந்திரகுமாரோ அல்லது வேறு யாரோ விதிவிலக்கு அல்ல.
தமிழரசுக் கட்சியின் முடிவுகளுக்கு மாறாக, மாவை, சிறீதரன் உள்ளிட்டவர்கள் ‘சங்கு’ ஊதப் புறப்பட்ட போதே, கட்சி கிட்டத்தட்ட சுமந்திரனின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. வேட்பாளர் நியமனக்குழுவைப் பார்த்தாலே அதனை புரிந்து கொள்ள முடியும். சிறீதரன் வேட்பாளர் பட்டியலுக்குள் உள்வாங்கப்படுவதே குதிரைக் கொம்பாக இருந்தது. அதனை சிறீதரன் தொடங்கி, அவரது ஆதரவாளர்கள், அபிமானிகள் வரையில் உணர்ந்து வைத்திருந்தார் கள். கட்சியின் வாக்குப் பிரிவு, பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்ற ஒற்றைக் காரணத்துக்காகத்தான் சிறீதரனுக்கு நியமனம் வழங்கப்பட்டிருக்கின்றது. அப்படி இல்லையென்றால், சிறீதரனை துரத்திவிட்டிருப்பார்கள். அதற்கான பலத்தோடு சுமந்திரன் இருக்கிறார். சிறீதரனை கழற்றிவிட்டால், எதிர்க்கோஷ்டி பலப்பட்டுவிடும், அதனைத் தடுப்பதற்கு அவரை வைத்துக் கொள்வதுதான் வழி. இதுதான், வாக்கு அரசியலில் கணக்கு. அதில் நின்றுதான் சுமந்திரன் செயற்பட்டிருக்கிறார். அதற்கு மாறாக, சிறீதரன் மீதான நம்பிக்கை, அபிமானம், நட்புப் பற்றியதெல்லாம், அதிகார – வாக்கு அரசியலில் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளப்படாது. அது எல்லோருக்கும் பொருந்தும்.
கட்சிக்குள் தனக்கான நியமனத்துக்காகவே போராடும் நிலையில் இருக்கும் சிறீதரன், எப்படி தன் சார்பானவர்களுக்காக வாதிட முடியும்? அது சாத்தியமில்லை. அப்படி ஏதாவது வாதாடினால், சுமந்திரன் அணியினர் பலமாக தாக்குவர்கள். அது, சிறீதரனின் ‘எடுப்பார் சொல் கேட்கும்’ நிலையினால் வந்தது. கட்சித் தலைமைப் பொறுப்பு அவர் கையில் வந்தபோதே, அதனை அவர் சமயோசிதமாக கையாண்டிருக்க வேண்டும். பதவியை ஏற்று, தெரிவு செய்யப்பட்ட மத்திய குழுவோடு இணைந்து ஓடியிருந்தால், இன்றைக்கு அவர் கட்சிக்குள் குறிப்பிட்ட பலத்தோடு இருந்திருப்பார். கட்சியும் ஓரளவுக்கு ஒருங்கிணைந்திருக்கும். ஆனால், ‘சுமந்திரனை தோற்கடிக்கிறோம்’ என்று கங்கணங்கட்டிவிட்ட அரசியல் சிறுபிள்ளைத்தனங்களுக்குள் மற்றவர்களின் பேச்சைப் கேட்டு சிக்கி, இப்போது அவர் செல்லாக்காசாகி நிற்கிறார்.
நியமனக்குழுவுக்குள் இருக்கும் மாவையும் சிறீதரனும் இப்போது குரலற்றவர்கள். அவர்கள், ஏதாவது குரல் கொடுத்தாலே, கட்சிக்கு எதிராக மேடை ஏறியவர்கள் நீங்கள் என்று அடித்து அமர்த்திவிடுவார்கள். அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை நடைமுறையில் இருக்கின்றது என்ற விடயம் தூக்கப்பட்டுவிடும். முதலில், கட்சியை ஒருங்கிணைத்து பலப்படுத்துதால் என்பது கட்சிக் கட்டுப்பாடுகள், ஒழுங்குகளுக்கு அமைய நிகழ வேண்டியது. அதனைவிட்டு தேவையற்ற புற அழுத்தங்களை உள்வாங்கி செயற்பட முனைந்தால், இப்படித்தான் மாற வேண்டியிருக்கும்.
இன்றைக்கு சுமந்திரனின் விசுவாசிகள் வேட்பாளர் நியமனத்தைப் பெற்றிருக்கிறார்கள். அதனை கட்சிக்குள் எப்படி எதிர்த்துக் கேள்வி கேட்க முடியும். அதற்கான திராணி சிறீதரனுக்கு இல்லை. ஏனெனில், கட்சியின் முடிவை, ஆதரித்து அதற்காக செயற்பட்டவர்களுக்கு நியமனம் வழங்காமல், எதிரணியைப் பலப்படுத்தும் நோக்கில் செயற்பட்டவர்களுக்கு நியமனம் வழக்குவதா? என்ற கேள்வி எழும். அப்போது, சிறீதரனோ, மாவையே பதிலளிக்க முடியாது.
யாழ் தேர்தல் நியமனப் பட்டியல். சுமந்திரன், சிறீதரனைத் தாண்டி யாரும் வெற்றிபெறக் கூடாது என்ற தோரணையிலானது. அவ்வளவுதான். முதலில், கட்சி அரசியலுக்குள் தேவையற்ற தலையீடுகளைச் செய்யும் தரப்பினரை தூரத்தில் வைத்து கையாண்டிருந்தாலே, தமிழரசுக் கட்சி இவ்வளவு சிதைவைச் சந்தித்திருக்காது. புலம்பெயர் முதலாளிகள், அரச முகவர்கள், எதிரணியினர், உளவு அமைப்புக்கள் என்று வருகிற போகிற எல்லாரின் கைப்பிள்ளையாக கட்சியின் முக்கியஸ்தர்கள் மாறிவிட்டால், கட்சி இப்படித்தான் சீரழிந்து போகும். முதலில் ஊழல், கொள்ளை, மோசடிகளுக்கு ஒத்துழைக்காத அறத்தினை உள்வாங்கிக் கொண்டு இயங்கத் தலைப்படுகிறவர்களைக் கொண்டு கட்சியைப் பலப்படுத்த வேண்டும். இல்லையென்றால், இந்தச் சீரழிவு தொடரும்.
சாராயக் கடை முகவர்களை நியாயப்படுத்திக் கொண்டு அரசியல் பேசும் அளவுக்கான தார்மீகத்தைக் கொண்டிருப்பவர்கள், தமிழ்த் தேசிய அரசியலை ஆக்கிரமித்தால், அவர்களின் எதிர்கால திட்டங்கள், நோக்கம் எப்படியானதாக இருக்கும் என்பது வெளிப்படையானது. அப்படியானவர்களின் குரலுக்கு மண்டையை ஆட்டிவிட்டு கட்சியை பலப்படுத்துகிறோம் என்று முக்கி முனகுவதெல்லாம் அபத்தத்தின் உச்சம்.
தமிழரசுக் கட்சியைத் தாண்டி நின்று தன்னால் ஆதரவுத்தளத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்று நினைத்திருந்தால், சிறீதரன் சங்கு ஊதப் புறப்பட்ட போதே, அதற்கு தயாராகியிருப்பார். ஆனால், அவர் ஊதிய சங்கின் சத்தம் கிளிநொச்சியில் கேட்கவில்லை என்பதால்தான், அவர் இன்றை இந்த நிலையில் வந்து நிற்கிறார். சுமந்திரன் கிடைத்த சந்தர்ப்பத்தை வைத்து வாட்டி வதைக்கிறார். சிறீதரனின் வார்த்தை எடுபட்டு சங்குச் சத்தம் வடக்குக் கிழக்கில் பெரிதாக கேட்டிந்தால், சுமந்திரனின் குரல் கட்சிக்குள் அடங்கியிருக்கும். கட்சியின் பிடி, அவரை விட்டு விலகியிருக்கும். ஆனால், இங்கு வென்றவர்கள் எழுதுவதுதான் தீர்ப்பும் வரலாறும். அதனை இப்போது சுமந்திரன் எழுதிக் கொண்டிருக்கிறார். அதில், நீதி நியாயம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், இது அதிகாரத்துக்கான சதியாட்டம். தமிழரசின் எதிர்கால தோல்விக்கான பொறுப்பை மாவையும் சிறீதரனும் சுமந்திரனும் சேர்ந்து சுமக்க வேண்டி வரும். காலம் யாரையும் ஒருபோதும் மன்னிப்பதில்லை. மறப்பதுமில்லை.
Leave a Reply
You must be logged in to post a comment.