JVP இடதுசாரி கட்சியா? இலங்கைத் தமிழர் பிரச்னையில் அநுர குமார திசாநாயக்க நிலைப்பாடு என்ன? – அலசல்

JVP இடதுசாரி கட்சியா? இலங்கைத் தமிழர் பிரச்னையில் அநுர குமார திசாநாயக்க நிலைப்பாடு என்ன? – அலசல்

உண்மையில் ஜே.வி.பி ஒரு இடதுசாரிக் கட்சியா? சிங்கள மக்கள் கொண்டாடும் புதிய இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க தமிழ் மக்களுக்காக என்ன நிலைப்பாடு எடுப்பார்? – தொடக்கம் முதல் தற்போது வரை வரலாறு ஓர் முழு அலசல்!

அநுர குமார திசாநாயக்க - JVP

அநுர குமார திசாநாயக்க – JVP

அநுர குமார திசாநாயக்க

இலங்கையின் 9-வது புதிய அதிபராக பதவியேற்றிருக்கிறார் ஜே.வி.பி கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க. `இலங்கையின் முதல் இடதுசாரி அதிபர், நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர், நாட்டின் பொருளாதாரத்தையும் எதிர்காலத்தையும் தூக்கிநிறுத்தப்போகின்றவர்’ என்ற படாடோபங்களெல்லாம் உலகளவில் பரவிக்கொண்டிருக்கும் நிலையில், சொந்தநாட்டு ஈழத் தமிழர் விவகாரத்தில் என்ன தீர்வை கொண்டுவரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

உண்மையில், சிங்கள மக்கள் கொண்டாடும் அநுர குமார திசாநாயக்க தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்? என்ன செய்யப்போகிறார்?

அனுர குமார திசநாயக்க - Srilanka Election
அனுர குமார திசநாயக்க – Srilanka Election

இலங்கை அரசியலில் தமிழர்களின் நிலை

இலங்கை தீவு சிங்களம், தமிழ் என இருவேறுபட்ட மொழிவழித் தேசிய இனங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பு என்பது உலகறிந்த உண்மை. இருப்பினும், இலங்கையின் பெரும்பான்மை இனமாக சிங்களர்கள் இருப்பதால், சிறுபான்மையினராக இருக்கும் தமிழர்கள் அதிபராகவோ அல்லது ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கவோ முடியாத சூழ்நிலைதான் இன்றளவும் நீடிக்கிறது. தமிழர்கள் செறிந்து வாழ்ந்த ஒன்றுபட்ட தமிழீழ நிலப்பகுதிகள் கூட வடக்கு, கிழக்கு இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு பிளவுபடுத்தப்பட்டுவிட்டது. அந்த மாகாணங்களில் தமிழர் முதலமைச்சராக இருந்தாலும் மாகாண சபைக்கு கூடுதல் அதிகாரம் வழங்க இலங்கை அரசு மறுத்துவருவதால் இன்றுவரை சுயாட்சி அதிகாரமற்ற, பல் இல்லாத பாம்பாகவே அந்தப் பதவிகள் இருந்துவருகின்றன. அதிக பட்சமாக, ஈழத்தமிழர்களுக்கென்று இலங்கையில் `தனிநாடு’ கேட்டுப் ஆயுதவழியில் போராடிய விடுதலைப் புலிகள் இயக்கமும் 2009 இறுதிப்போருடன் முடிவுக்கு வந்துவிட்டது.

அநுர குமார திசாநாயக்க
அநுர குமார திசாநாயக்க

போர் முடிவுக்கு வந்த பிறகான 15 ஆண்டுகளில் பல அரசியல் ஆட்சிமாற்றங்கள் ஏற்பட்டாலும், தமிழர்கள் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டுக்கொண்டுதான் வருகின்றன. தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம், பௌத்த விகாரைகள் உருவாக்கம் என தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கின்றனர். தமிழர்கள் பகுதியிலிருந்து இன்றளவும் ராணுவம் வெளியேற்றப்படவில்லை, போரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு நீதிகிடைக்கவில்லை; 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தம் மூலம் ஈழத்தமிழர்களுக்கு குறைந்தபட்ச அதிகாரத்தை வழங்கும் 13-வது சட்ட திருத்தத்தைக்கூட எந்த அரசும் அமல்படுத்தவில்லை. விடுதலைப் புலிகளின் தனிநாடு கோரிக்கையிலிருந்து பின்வாங்கி, ஒன்றுபட்ட இலங்கையில் அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு என ஜனநாயக ரீதியில் அரசியல்செய்து, ஆளுக்கொரு திசையாக பிரிந்துநின்று அரசியல் செய்துவரும் ஈழத் தமிழ் அரசியல் தலைவர்களின் பேச்சுகளும் இலங்கை பெரும்பான்மைவாத அரசியலின், அரசாங்கத்தின் முன்பு எடுபடவில்லை.

இறுதிப் போரின்போது ஈழத் தமிழர்கள்
இறுதிப் போரின்போது ஈழத் தமிழர்கள்

இந்த சூழ்நிலையில்தான், இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியால், ஏற்கெனவே இலங்கையை மாறிமாறி ஆண்டுவந்த ராஜபக்சே, ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாசா உள்ளிட்ட பழைய அரசியல் அதிகார கூடாரங்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, முதன்முறையாக இடதுசாரி பிம்பமுடைய ஜே.வி.பியின் அநுர குமார திசாநாயக்கவை அதிபராக வெற்றிபெற வைத்திருக்கின்றார்கள் இலங்கை மக்கள்.

இதில், பெரும்பான்மையான தமிழ் அரசியல்கட்சிகள் ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாசா கட்சிகளுக்கும், தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்கி அரியநேந்திரனுக்கும் ஆதரவு அளித்திருந்த நிலையிலும்கூட, அநுர குமார திசாநாயக்க வெற்றிபெற்றிருக்கிறார். இந்தநிலையில், அநுர குமார திசாநாயக்கவின் ஆட்சியில் தமிழ் மக்களுக்கான உரிமைகள் வழங்கப்படுமா என்ற விவாதம் வலுக்க தொடங்கியிருக்கிறது. இதற்கு விடை காண வேண்டுமென்றால் முதலில் அநுர குமார திசாநாயக்கவை பற்றியும் அவர் தலைவராக அங்கம் வகிக்கும் ஜனதா விமுக்தி பெரமுன(JVP) கட்சியின் வரலாற்றைப் பற்றியும் தெரிந்துகொள்வது மிக அவசியம்.

இலங்கை பொருளாதார நெருக்கடி
இலங்கை பொருளாதார நெருக்கடி

மக்கள் விடுதலை முன்னணி(ஜனதா விமுக்தி பெரமுன) என்ற பெயருடன் தன்னை மார்க்சிய – லெனினிசக் கோட்பாடுடையக் கட்சியாக அறிமுகப்படுத்திக் கொண்ட ஜே.வி.பி, சில ஆண்டுகளிலேயே முழு சிங்கள – பௌத்த இனவாதக் கட்சியாக உருமாறியது. இடதுசாரி மார்க்சிய சித்தாந்தம் தொழிலாளர்கள், விவசாயிகள் என வர்க்க அரசியலை போதிக்கும் நிலையில், அதன் பெயரை சொல்லிக்கொண்ட ஜே.வி.பி கட்சியோ, 1970-களில் முன்வைத்த கொள்கை விளக்கத்தில், `இந்திய வம்சாவளி (மலையகத் தமிழர்கள்) தொழிலாளர்களே இலங்கையின் தேயிலை தோட்டங்கள், ரப்பர் தோட்டங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதனால் சிங்கள விவசாயிகள் பாதிக்கப் படுகின்றனர். தேயிலை, ரப்பர் தோட்டங்களை அழித்து விவசாயத் தொழிலுக்கு கொண்டுவரவேண்டும்’ என்றது.

அதேபோல, `இந்திய வம்சாவளி – மலையகத் தமிழர்களை வைத்து இந்தியா தனது ஆதிக்க பரப்பை விரிவுபடுத்த பார்க்கிறது’ என குற்றம்சாட்டியது. தொடக்கத்திலேயே தமிழர் வெறுப்பை உமிழ்ந்த ஜே.வி.பி பெரும்பாலும் சிங்களர்கள் அடங்கிய இடதுசாரி கட்சியாகவே வளர்ந்தது.

அநுர குமார திசாநாயக்க
அநுர குமார திசாநாயக்க

ரோகண விஜயவீர தலைமையில் முழுக்க ஆயுத வழியல் பயணித்த ஜே.வி.பி காவல் நிலையங்களை தாக்கி அழிப்பது, ஆயுதங்களை திருடுவது, அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளை வேட்டையாடுவது போன்ற வன்முறை பாதையிலேயே முதல் சதாப்சம் முழுக்க பயணித்தது. 1971-ல் இலங்கை பிரதமர் பண்டாரநாயக அரசுக்கு எதிராக ஜே.வி.பி. நடத்திய வன்முறையாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்கிறது அப்போதைய செய்திகள். அதேசமயம் பண்டாரநாயக ஆட்சிக்காலத்தில் சிங்கள மொழி முன்னுரிமை, பௌத்த மதவாதம், சிங்கள இன மேலாதிக்கம் அதிகரித்து, தமிழர்கள்மீதான ஒடுக்குமுறைகள் அதிகரிக்க, 1972-ம் ஆண்டு தமிழர் களுக்கு தனி-ஈழம் நாடு கேட்டு `புதிய தமிழ்ப் புலிகள்’ என்ற பெயரில் புரட்சி இயக்கத்தை தொடங்கினார் பிரபாகரன். பின்னர் 1976-ல் தமிழீழ விடுதலைப் புலிகளாக வலுவடைந்தது. மேலும், பல தமிழ் அமைப்புகள் உருவாகின.

ஜே.வி.பி - ஆயுதம் தாங்கிய இயக்கமாக இருந்தபோது..
ஜே.வி.பி – ஆயுதம் தாங்கிய இயக்கமாக இருந்தபோது..

அந்தநிலையில், 1982-ல் நடந்த ஜே.வி.பி மத்தியக் கமிட்டி கூட்டத்தில், “முதலாளித்துவ கட்சிகள்தான் தனி ஈழம் கோரிப் போராடும்படி தூண்டுகின்றன. இந்த இயக்கம் மக்கள் நலனுக்கு கேடானவை. எனவே ஈழ தீவிரவாத இயக்கத்தை நாங்கள் எதிர்க்கிறோம்!” என தீர்மானம் போட்டனர்.

மேலும், ஈழப் போராளிக் குழுக்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம், வகுப்புவாதம் என முத்திரை குத்தியதோடு, இந்த ஈழத் தமிழ் போராளி குழுக்கள் இந்தியாவின் அதிகார விரிவாக்கத்துக்கு துணைபோகும் துரோக அமைப்புகள் என அவதூறு கிளப்பியது. அதைத்தொடர்ந்து, 1983-ல் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட முதல் இன அழிப்பு சம்பவமான `கறுப்பு ஜூலை’ இனக்கலவரத்திலும் ஜே.வி.பி பங்கெடுத்தது. அந்தநிலையில், `ஒரு சில தமிழ் போராளி இயக்கங்களுடன் ஒருபுறம் ரகசிய கூட்டுவைத்துக் கொண்டும், மறுபுறம் சிங்கள இனவெறியைத் தூண்டி தமிழர்கள்மீதே தாக்குதல் நடத்திவருவதாக ஜே.வி.பி மீது குற்றம் சாட்டப்பட்டு, ஜே.வி.பி தடைசெய்யப்பட்டது.

கறுப்பு ஜூலை கலவரம்
கறுப்பு ஜூலை கலவரம்

அந்தநிலையில், இலங்கையில் சிங்களப் பெரும்பான்மைவாதத்தால் ஈழத்தமிழர்கள் அனுபவித்துவந்த பிரச்னை களுக்கு குறைந்தபட்ச தீர்வு காண்பதற்காக 1987-ம் ஆண்டு இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவுக்கும் இடையே ராஜீவ் – ஜெயவர்த்தனா ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில், `ஈழத்தமிழர்களின் தாயகப்பரப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை அங்கீகரித்தது, அந்த மாகாணங்களுக்கு முன்னுரிமை வழங்கும்வகையில் 13-வது சட்ட திருத்தம் மேற்கொண்டது, இலங்கை சிங்களவர்களுக்கு மட்டுமே அல்ல; தமிழர்கள், முஸ்லீம்கள் உள்ளிட்டோரைக்கொண்ட பன்மொழி சமூகங்கள்வாழும் நாடு என்பது’ உள்ளிட்ட முக்கியமான சரத்துகள் இடம்பெற்றிருந்தன. இதை சற்றும் சகித்துக்கொள்ளமுடியாத ஜே.வி.பி வழக்கம்போல தனது கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டது. சிங்கள தேசியவாதிகளையும், சிங்கள தொழிலாளர்களையும் ஒன்றி ணைத்து பொது வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுப்பட்டது. மிகமுக்கியமாக, கண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஜே.வி.பியின் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்தான் அநுர குமார திசாநாயக்க.

1987-ம் ஆண்டு ஜே.வி.பில் இணைந்த கையோடு அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்ட முதல் போராட்டமே ஈழத்தமிழர்களுக்கு குறைந்தபட்ச அதிகாரம் வழங்கும் ராஜீவ் – ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை எதிர்த்துதான். கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்கு மேல் தொடர்ந்த இந்தப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனால் ஜே.வி.பி மீண்டும் தடை செய்யப்பட்டது. பின்னர், 1989-ம் ஆண்டு ஜே.வி.பி தலைவர் ரோகண விஜயவீர மரணத்துக்குப் பிறகு, ஜனநாயகப் பாதையைத் தேர்ந்தெடுப்பதாக அறிவித்தது ஜே.வி.பி. அதன்பிறகு, 1995-ல் ஜே.வி.பியின் சோசலிச மாணவர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு, விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்தை மீட்பதற்காக அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க ராணுவப்படையணுப்ப, சுமார் 5 லட்சம் தமிழ்மக்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறினர். யாழ்நகரம் போர்த்துயரங்களால் அழுதுகொண்டிருக்க, ஜே.வி.பியோ அதிபர் சந்திரிகாவின் நடவடிக்கையை வரவேற்றது.

மகிந்த ராஜபக்சே - சந்திரிகா பண்டாரநாயக்க
மகிந்த ராஜபக்சே – சந்திரிகா பண்டாரநாயக்க

அந்தநிலையில், 2001 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க எம்.பியாக வெற்றிபெற்றார். அதற்கடுத்து 2004-ல் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க, பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமை யிலான அரசாங்கத்தில் விவசாயம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சரானார் அநுர குமார திசாநாயக்க. அந்தநிலையில், டிசம்பர் மாத சுனாமி கோர தாண்டவத்தில் கடற்கரை நிலப்பரப்பை பெரும்பான்மையாகக் கொண்ட தமிழர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அப்போது விடுதலைப்புலிகள் நிவாரணப் பணிகளை முன்னின்று நடத்திவர, அவசர காலம் என்பதால் வடக்கு கிழக்கு பகுதிகளில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து சுனாமி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சந்திரிகா பண்டாரநாயக்க முடிவெடுத்தார். இதை ஜே.வி.பி மிகக் கடுமையாக எதிர்த்தது. புலிகளுடன் சேர்ந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் முடிவைக் கண்டித்து அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அனைத்து ஜே.வி.பி எம்.பிகளும் அமைச்சரவையிலிருந்து பதவி விலகினர்.

நார்வே முன்னெடுத்த விடுதலைப்புலிகள் - இலங்கை ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தம்
நார்வே முன்னெடுத்த விடுதலைப்புலிகள் – இலங்கை ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தம்

இலங்கை ராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்துவந்த உக்கிரமானப் போரை மட்டுப்படுத்துவதற்காக நார்வே சமாதானக்குழு தலையிட்டு சமரச பேச்சுவார்த்தையில் இறங்கியது. அதையடுத்து 2002-ம் ஆண்டு பிப்ரவரியில் இருதரப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஈழ மண்ணில் தற்காலிகமாக அமைதி திரும்பியிருந்தது. அந்தநிலையில், ஜே.வி.பி-யோ சமாதான உடன்படிக்கைக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொண்டது. `சமாதானத்தின் உண்மையான எதிரிகள் யார்?’ என்ற தலைப்பில் நாட்டின் பல்வேறு இடங்களில் கூட்டங்களை நடத்தியது. அந்தக் கூட்டங்களில் பேசிய ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விமல் வீரவன்ச, `புலிகளுடன் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்ட ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை `பச்சைப் புலிகள்’ என்றும், இதை முன்னெடுத்த நார்வே குழுவை `வெள்ளைப் புலிகள்’ என்றும் புலிகளுடன் ஒப்பிட்டு விமர்சித்தார். மேலும், `புலிகளுடன் சமரசம் கூடாது; இந்த சமாதான உடன்படிக்கையை முறியடிக்க மக்கள் அணிதிரள வேண்டும்’ என்றெல்லாம் பேசினார்.

அதேசமயம், 2004-ல் `தமிழர்களுக்கான தன்னாட்சி அதிகாரம்’ தொடர்பாக மீண்டும் விடுதலைப் புலிகளுடன் இலங்கை அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க பேச்சுவார்த்தையைத் தொடங்க முன்வந்தார். அப்போது, “தன்னாட்சி அதிகாரம் வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவது, தனிநாடு கொடுப்பதற்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல; பட்டினி கிடந்தாவது இதை எதிர்ப்போம்!” என்று எச்சரிக்கை விடுத்தார். அதேசமயம், ஆனையிறவு உள்ளிட்ட விடுதலைப் புலிகளுடனான போரில் தோற்று இலங்கை ராணுவம் தளர்வடைந்த நிலையில், `புலிகளுக்கு எதிராக சிங்கங்களே அணிதிரளுங்கள்!’ என்று கூப்பாடுபோட்ட ஜே.வி.பி தலைவர்கள், `அடித்தட்டு வர்க்க ஏழை சிங்கள இளைஞர்கள்’ பல்லாயிரக்கணக்காணோரை இலங்கை ராணுவத்தில் இணைய வற்புறுத்தினர். குறிப்பாக, அன்றைய ஜே.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க, `சுமார் 50,000 இளைஞர்களை ராணுவத்துக்கு திரட்டி தருவேன்’ என தலைநகர் கொழும்பில் சபதமிட்டார். அதன்விளைவாக பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட ராணுவத்தில் இணைந்தனர்.

தமிழ் ஈழம் - வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள்
தமிழ் ஈழம் – வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள்

இதன்விளைவாக, தமிழ்ப் புலிகளை அழித்தோழிப்போம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு 2005-ம் ஆண்டு இலங்கை அதிபர் தேர்தல் களத்தில் குதித்த மகிந்த ராஜபக்சேவின் கூட்டணியில் இணைந்து தீவிர இனவாத பிரசாரத்தை முன்னெடுத்தது ஜே.வி.பி. அதன்பிறகு, மகிந்த ராஜபக்சே அதிபராக வெற்றி பெற அவரது அமைச்சர வையில் 39 எம்.பிகளுடன் வலுவான கட்சியாக உருவெடுத்தது ஜே.வி.பி. அதே ஆண்டு, புலிகளுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் முறித்துக்கொள்ளப்பட்டது. ஜே.வி.பியும் ராஜபக்சேவும் இணைந்து புலிகளுக்கு எதிரான இறுதிப்போரை கூர்தீட்டினர்.

இதற்கிடையே, மற்ற சிங்கள அடிப்படைவாத கட்சிகளெல்லாம் தமிழர்களுக்கான தனிநாடு, தன்னாட்சி, மாகாண சபை அந்தஸ்து உள்ளிட்டவற்றை கொள்கை அளவில் எதிர்த்துக்கொண்டிருக்க, ஜே.வி.பியோ ஒருபடி மேலே சென்று, `1987-ல் கையெழுத்தான இலங்கை-இந்திய ஒப்பந்தப்படி, தமிழர்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணத்தை இணைத்தது தவறு’ என்றுகூறி 2006 ஜூலை மாதம் இலங்கை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஜே.வி.பி.

ராஜீவ் - ஜெயவர்த்தனா - 1987 இந்திய - இலங்கை ஒப்பந்தம்
ராஜீவ் – ஜெயவர்த்தனா – 1987 இந்திய – இலங்கை ஒப்பந்தம்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், `அன்றைய அதிபர் ஜெயவர்த்தன சட்ட ஒழுங்கு முறைக்கு முரணாக மாகாணங்களை இணைத்திருக்கிறார். எனவே, வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட செல்லாது’ என்றுகூறி ஒருங்கிணைந்த தமிழர் மாகாணங்களை வடக்கு-கிழக்கு என்று தனித்தனியாக பிரித்து உத்தரவிட்டனர். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்மூலம் ஈழத்தமிழர்களுக்கான கிடைத்த குறைந்தபட்ச சாதகமான உரிமையையும் ஜே.வி.பி சட்ட நடவடிக்கையின் மூலம் பறித்துகொண்டு அநீதி இழைத்தது. அந்தநிலையில்தான், 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஈழ இறுதிப்போர் கொடூரமான தாக்குதல் வழியில் முடிவுக்கு வந்தது. இந்தப்போரில் ஈழ விடுதலைப் போராளிகள் உள்பட சுமார் 2,50,000 அப்பாவி ஈழத்தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்காணோர் உடல் ஊனமுற்றும், காணாமலும் போயினர். லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறினர். ஜே.வி.பி – ராஜபக்சே கூட்டணி குதூகலத்துடன் வெற்றியைக் கொண்டாடியது. அதில் அநுர குமார திசாநாயக்கவும் ஒருவர்.

ஜே.வி.பி தலைவராக அநுர குமார திசாநாயக்க

2014-ம் ஆண்டு ஜே.வி.பியின் புதிய தலைவராக அநுர குமார திசாநாயக்க தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜே.வி.பியி கடந்த கால தலைவர்களைப் போலவே பெயரளவுக்கு மாக்ஸிசம், லெனினிசம், சே குவேராயிசம், என கம்யூனிசம் பேசிக்கொண்டே `பௌத்த – சிங்கள இனவாத’ தேசியக் கட்சியாக செயல்பட்டது என்பது அரசியல் பார்வை யாளர்களின் கருத்து. உலக அரங்கில் `2009 தமிழ் இனப் படுகொலைக்கு நீதி வேண்டும், போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும், சர்வதேச நீதிவிசாரணை வேண்டும்’ என்ற தமிழ் மக்களின் கோரிக்கையை அநுர குமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி முற்றாக எதிர்த்தது. அதேபோல, 2017-ம் ஆண்டு நடந்த மே தினக் கூட்டத்தில், `தமிழர்களின் தாயக நிலமான வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராகப் பேசினார். அதேசமயம், ஜே.வி.பியின் கடந்த கால கறையை மூடிமறைக்க, `தேசிய மக்கள் சக்தி’ என்ற பொதுப் பெயருக்குள் ஜே.வி.பியை கொண்டுவந்தார். அந்தநிலையில்தான் 2019-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் அதிபர் வேட்பாளராகப் போட்டியிட்டு வெறும் 3% வாக்குகளை மட்டுமே பெற்றார்.

 ஜே.வி.பியின்  தலைவராக அனுரகுமார திசநாயக்க
ஜே.வி.பியின் தலைவராக அனுரகுமார திசநாயக்க

2024 அதிபர் தேர்தல் பிரசாரத்திலும் தமிழர் கோரிக்கைக்கு எதிராக…

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில், ஏற்கெனவே இலங்கையை ஆண்ட பழைய கட்சிகள், தலைவர்களின்மீது கடும் அதிருப்தியில் இருந்த மக்களின் கோவத்தை தனதாக்கிக் கொள்ள `ஊழல் ஒழிப்பு’ கோஷத்தை முன்னெடுத்த அநுர குமார திசாநாயக்க இலங்கை முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தினார். குறிப்பாக தமிழர் பகுதியில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்ட அநுர குமார திசாநாயக்க, “அரசமைப்பின் 13-வது திருத்தச் சட்டத்தின் மூலமாகவோ, அதனை மாற்றியமைப்பதன் மூலமாகவோ தமிழர் பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வை வழங்க முடியாது. அனைத்து இன மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டு அதன்மூலமே தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்பட வேண்டும். தென்னிலங்கை (சிங்கள) மக்களால் நிராகரிக்கப்படும் தீர்வு ஒருபோதும் தமிழருக்கு நிரந்தரத் தீர்வாக அமையாது என இரா.சம்பந்தனும்கூட கூறியிருக்கிறார்!” என்று பேசினார்.

அதேபோல, 2024 ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும், “நான் அரசமைப்பின் 13-வது சட்டத் திருத்தத்தைச் செயல்படுத்துகிறேன். நீங்கள் பதிலுக்கு எனக்கு வாக்களியுங்கள் என்று நான் கேட்க வரவில்லை. அதேபோல கூட்டாட்சி(அதிகார சமஷ்டி) முறையை கொடுக்கிறேன், எனக்கு வாக்களியுங்கள் எனவும் கேட்க வரவில்லை!” என்று தமிழர் பகுதிக்கே வந்து தமிழர்கள் மத்தியில் பேசினார் அநுர குமார திசாநாயக்க.

சிங்கள புத்த பிக்குகளுடன்  அனுரகுமார திசநாயக்க
சிங்கள புத்த பிக்குகளுடன் அனுரகுமார திசநாயக்க

இதைக் கண்டித்த ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன், “இலங்கை வரலாற்றில் பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம், ராஜீவ் – ஜெயவர்த்தன (இந்திய-இலங்கை) ஒப்பந்தம் ஆகியவை இலங்கையில் தமிழர்களுக்கு உரிமைப் பிரச்னை இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் யாழ்ப்பாணம் வந்த ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க 13-ஐ தருகிறோம், 13-பிளஸ் தருகிறோம், சமஷ்டி தருகிறோம் என்று கொடுக்கல் வாங்கல் செய்ய வரவில்லை என திமிராகப் பேசிச் சென்றிருக்கின்றார். தமிழ் மக்களுக்காக இருக்கும் ஒரேயொரு குறைந்தபட்ச அதிகாரமுடைய 13-வது திருத்தத்தைக்கூட ஜே.வி.பி ஏற்றுக்கொள்ளவில்லை என்பது இதன்மூலம் தெள்ளத்தெளிவாக புலனாகிறது!” எனக் குற்றம்சாட்டினார்.

அதேபோல, இலங்கை அதிபர் தேர்தல் களத்தில் தமிழர்களின் பொது வேட்பாளராகக் களமிறங்கிய அரியநேத்திரன், “அநுர குமார திசாநாயக்கவைப்பற்றி புதிதாக சொல்ல வேண்டியதில்லை. ஒன்றுபட்டிருந்த வடக்கு கிழக்கை இரண்டாகப் பிரித்த கட்சியைச் சேர்ந்தவர். அதேபோல, அவருடைய தேர்தல் அறிக்கையில் தமிழ் மக்களுக்கு தன்னாட்சி உரிமையை வழங்கக்கூடிய விஷயங்களும் இல்லை!” என்று குற்றம்சாட்டினார். ஜே.வி.பியின் கடந்த கால வரலாற்றையும், அரசியல் நிலைப்பாட்டையும் கருத்தில்கொண்டுதான் தமிழ் அரசியல் கட்சியினர் பெரும்பாலானோர் ஜே.வி.பியுடன் கூட்டணிக்கு செல்லவில்லை. பல தமிழ்த் தலைவர்கள் ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாசா, அரியநேந்திரனையே ஆதரித்தனரே தவிர அநுர குமார திசாநாயக்கவை தேர்தலில் ஆதரிக்கவில்லை.

அனுகுமார திசநாயக்க
அனுகுமார திசநாயக்க

இந்தநிலையில், சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் அநுர குமார திசாநாயக்க இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஓர் அதிபராக இலங்கை நாட்டு பூர்வகுடி மக்களான தமிழர்களுக்கும் அவர்களின் உரிமைகளுக்கும் பாதுகாப்பளிக்கக்கூடிய பொறுப்பில் இருப்பதால் அவர்மீதான எதிர்பார்ப்பும் தமிழர்கள் மத்தியில் இருக்கிறது. இதுகுறித்து இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் புதிய அதிபராக பதவியேற்ற அநுர குமார திசாநாயக்கவுக்கு தெரிவித்த வாழ்த்து செய்தியில் தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

சிவஞானம் சிறீதரன் . எம்.பி
சிவஞானம் சிறீதரன் . எம்.பி

குறிப்பாக, தமிழ் எம்.பி. சிவஞானம் சிறீதரன், “தென்னிலங்கை மக்களைப் போலவே, கடந்த எழுபது ஆண்டுகால ஒடுக்குமுறைத் தளைகளிலிருந்து விடுபட்டு இறைமையுள்ள இனமாக வாழ்வதற்கான ஏதுநிலைகள் தங்களின் ஆட்சிக்காலத்திலேனும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஈழத்தமிழர்களிடையே நிறைந்திருக்கிறது. விசேடமாக, இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு இனத்தின் வலியுணர்ந்த சக பிரஜையாகவும், எமது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய அரச தலைவராகவும் செயலாற்றும் வகையில் தங்கள் தலைமையிலான ஆட்சிபீடம் கட்டமைக்கப்படுமாயின், அதுவே இந்த நாட்டின் சுபீட்சத்துக்கான அடித்தளமாக அமையும். நாட்டின் அரசியல், பொருளாதார தளம்பல் நிலைகளை சமன் செய்வதிலுள்ள சவால்களை எதிர்கொண்டு செயலாற்றத் தயாராவதைப் போன்று, ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை உணர்ந்த மக்கள் தலைவராக, இனவாதமற்ற இலங்கைத் தீவை உருவாக்கும் அரசியல் கூருணர்வு மிக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம், ஈழத்தமிழர்களின் அடிப்படை உரித்துகளை உறுதிசெய்யும் வகையில் தங்களின் ஆட்சி மலரும் என்ற எதிர்பார்ப்போடு, தங்களின் வெற்றிக்கான வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறேன்!” என்றிருக்கிறார்.

அரியநேந்திரன், தமிழர்களின் பொது வேட்பாளராகக் களமிறங்கியவர்
அரியநேந்திரன், தமிழர்களின் பொது வேட்பாளராகக் களமிறங்கியவர்

அதேபோல, தமிழர்களின் பொது வேட்பாளராகக் களமிறங்கிய அரியநேந்திரனின் தமிழ் மக்கள் பொது சபை, “தமிழ் மக்களின் இறைமையையும் சுய நிர்ணய உரிமையையும் அங்கீகரித்தால்தான் இலங்கைத் தீவின் பல்லினச் சூழலைப் பாதுகாக்கலாம்!” என புதிய அதிபருக்கு சுட்டிக்காட்டியிருக்கிறது.

கடந்த காலத்தில் நடந்ததைப் போல இந்திய எதிர்ப்பு, சிங்கள் – பௌத்த மேலாதிக்க ஆதரவு, இனவாத கருத்துக்களையெல்லாம் கைவிட்டு, ஜே.வி.பி தலைவராக இல்லாமல் ஒட்டுமொத்த இலங்கை தீவின் அதிபராக இருந்து தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இன மக்களின் உரிமைகளையும் பாதுகாத்து, இலங்கையை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்லவேண்டும் என்பதே அநுர குமார திசாநாயக்க மீதான தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.!

எனினும் அநுர குமார திசாநாயக்க நடவடிக்கையில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்கும் என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்!

JVP இடதுசாரி கட்சியா? இலங்கைத் தமிழர் பிரச்னையில் அநுர குமார திசாநாயக்க நிலைப்பாடு என்ன? – அலசல் | What is President Anurakumar Dissanayake’s position on the Sri Lankan Tamil issue? (vikatan.com)

About VELUPPILLAI 3356 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply