கைகொட்டிச் சிரிப்பார்கள்

இலங்கை ஜெயராஜ் Kambavarithy Ilankai Jeyaraj

வணக்கம்.

நலம் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன். இங்கு நான் வேண்டுவது உங்கள் நலத்தை அன்று. உங்களது அறிவீனத்தால் தமது நோக்கம் சிதைந்து நிற்கும், ஈழத்தமிழ் இனத்தின் நலத்தை நோக்கியேயாம்.

    

“இந்த முயற்சி வீண் முயற்சி, பிடிவாதத்திற்காக இதனைத் தொடராது கைவிட்டுவிடுங்கள்!” என, பலபேரும் தலை தலையாய் அடித்துக் கொள்ளவும், அதனை சிறிதும் பொருட்படுத்தாமல், “தூர்ந்து” கொண்டிருக்கும் உங்களது அரசியல் அடையாளத்தை, மீண்டும் புதுப்பிக்க நினைந்து, நீங்கள் செய்த முயற்சி முழுமையாய்த் தோற்றுவிட்டது.

    

உங்களது அந்த சுயநல முயற்சியை, தமிழ் மக்கள் மேல்க் கொண்ட அக்கறையால் செய்யும் முயற்சியாய்க் காட்டி, நீங்கள் செய்த ஏமாற்று வேலை, இன்று தமிழ் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு எதிராக மாறியிருக்கிறது.

    

எத்தனை போராளிகளின் உயிர்கள், எத்தனை பொது மக்களின் உயிர்கள், எத்தனை உடமை இழப்பு, எத்தனை உறுப்பு இழப்பு என, இப் போராட்டத்திற்காகத் தம்மை அர்ப்பணித்த, அத்தனைபேரது தியாகத்தையும், உங்களது சுயநலத்தால் “நீர்த்துப்” போக வைத்துவிட்டீர்கள்.

    

ஈழத்தமிழ் மக்கள் அனைவரும், சுய உரிமையை வேண்டி நிற்கிறார்கள் என்பதை, உலக சமுதாயத்திற்குக் காட்டப் போவதாய்ச் சொல்லி, நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலை, அதற்கு பயன்படுத்தப் போவதாகவும் அறிவித்து, ஒரு பொதுவேட்பாளரை நியமித்து, அவ்வேட்பாளருக்கு அனைத்து தமிழரும் வாக்களிப்பதன் மூலம், ஒருமித்த நமது வாழ்வுரிமை பற்றிய விருப்பினை, உலகிற்கு தெரிவிக்க வேண்டும் என நீங்கள் சொன்ன போதே, இது நடக்காத காரியம் என பலரும் அடித்துச் சொன்னார்கள்.

    

அதனை ஏற்காது, “மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா” எனும் பழமொழிக்கு ஏற்ப, பிடிவாதம் பிடிக்கப்போய், தமிழ்த்தாயகத்தின் ஒட்டுமொத்த வாக்காளர் தொகையான, 21,71,870 எனும் எண்ணிக்கையில், வாக்களிக்காதவர் களினதும், நிரகரிக்கப்பட்டவர்களினதும் தொகை போக, எஞ்சிய வாக்குகளில் 2,26,343 வாக்குகளை மட்டுமே பெற்று, மிகுதியானவர்கள் எல்லாம் நமது சுய நிர்ணய உரிமைக் கொள்கைக்கு, ஆதரவாய் இல்லை என்பதான ஒரு மாயத்தோற்றத்தை உலகுக்குக் காட்டி நம்மினத்தை தலைகுனிய வைத்துவிட்டீர்கள்.

    

நமது தமிழ் மக்கள், சுதந்திர வேட்கை என்ற பெயரையும், மறைந்த போராளிகளின் பெயரையும், எவர் பயன்படுத்தி னாலும், அவர்களின் பின்னால் கண்ணை முடிக்கொண்டு ஒடி வருவார்கள் என்ற, உங்களது வீண் கனவு பொய்யாகிவிட்டது.

    

மற்றொன்றையும் இங்கு நான் சொல்லியாக வேண்டும். போர்க் காலத்தில் நம்மை எல்லாம் கைவிட்டு, தம் நலம் நோக்கி நாடு நாடாக ஓடிய சிலபேர், அங்கு எப்படியோ பணம் சேர்த்துக் கொண்டு, பாதுகாப்பான இன்றைய சூழ்நிலையில், தாய் நாட்டின் மேல் திடீரெனப் பற்று ஏற்பட, இனத்துக்காய்ப் பாடுபடுவதாய்ச் சொல்லி இங்கு வாழும் தமிழர்களின் வாழ்வைப் பெரியளவில் பாதிக்க முனைகின்றார்கள்.

    

இத்தகைய வெளிநாட்டுத் தமிழர்களால், நாம் படும்பாடு கொஞ்சநஞ்சம் அல்ல. இவர்கள், நம்மண்ணில் முகிழ்க்கும் நன்மைகளை எல்லாம், தம் பணபலத்தால் அள்ளிச் செல்ல செய்யும் முயற்சி கொடுமையானது.

    

அழகான மணப்பெண்கள், படித்த மாப்பிள்ளைகள், விற்பனைக்கு இருக்கும் காணி வீடுகள், தரமான கோயில் அந்தணர்கள் என இவர்கள் “முதல்ப்பால் கறிகளை” அள்ளிச் செல்ல, இந்த மண்ணுக்காய் வாழ்ந்த பலரும் மேற்ச்சொன்னவைகளை இழந்து, “கப்பிப்பால்” சொதிக்காய் காத்திருப்பது கொடுமையிலும் கொடுமை!.

    

மேற் சொன்ன விடயங்களின் வரிசையில், தமிழருக்கான பாராளுமன்ற “சீற்றுக்களையும்” இன்று இவர்கள் அள்ள நினைப்பதுதான் வேதனையின் உச்சம்.இவர்கள், தம் பணபலத்தால் உருப்படியாய்க் கிடந்த கட்சிகளையும் உடைப்பித்து, சிதற வைத்திருப்பதை என்னவென்பது?

    

இவர்களின் உள் நோக்கம் தெரியாமல், மக்கள் ஆதரவு பெற்ற சில பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட, அவர்களின் பணவலையில் வீழ்ந்து, தம்மைத்தாம் இழிவு செய்தது தான் மிகப் பெரிய சோகம்.

    

அத்தகைய வெளிநாட்டு பணமுதலைகளின் பலம், உங்களின் பின்னால் இருந்த துணிவில்த் தான், களநிலை புரியாமல், காலாவதியான நீங்கள் எல்லோரும் சேர்ந்து, அரியநேந்திரனையும், நம் தமிழ் மக்களையும், சில தமிழ் எம்பிக்களையும், அநியாயமாக உங்கள் ஆசைக்காக பலிக்கடாக்கள் ஆக்கினீர்கள்.

    

அந்த வெளிநாட்டு வியாபாரிகள், “பழைய கொம்பனியார்” போல, போரினால் வலுவிழந்து நின்ற நம் தமிழ்மக்களை விழுங்கி ஏப்பம் விட, பல நாட்களுக்கு முன்பே திட்டமிடத் தொடங்கி விட்டார்கள்.

    

ஊடகங்களென்றும் கட்சிக்கான அன்பளிப்புகளென்றும் பாதைகள் வகுத்து, இவர்கள்; உள்நுழைந்த போது, நம் இனத்தின் மீதான அக்கறையால்த் தான், இவற்றையெல்லாம் இவர்கள் செய்கிறார்கள் என, தமிழ் மக்களும் ஏமாந்து தான் போனார்கள். தமிழ் மக்கள் மட்டுமல்ல தமிழ் தலைவர்களுந்தான்.

    

இவ்விடத்தில் ஒன்றை நான் சொல்லியே ஆக வேண்டும். அரசியல் என்றாலே பொருட்பலம் தான் எனும் உண்மை, நம் தலைவர்களில் பலருக்கு இன்று வரை தெரியவில்லை. திருவள்ளுவர் கூட அரசியல் உரைத்த தன் நூற்; பகுதிக்கு, “பொருட்பால்” எனப் பெயரிட்டார் என்பதை இவர்கள் அறியத் தவறினார்கள்.

    

வாக்குறுதிகளை அள்ளி வீசி பதவிகளைப் பிடிப்பதும், பின் அப்பதவிகளால் சுயநலம் வளர்ப்பதும் தான், அரசியலென நம் தலைவர்களில் பலர் நினைத்து விட்டார்கள். பொருட்பலத்தினை வளர்த்து, தம் கட்சியினை ஸ்திரப்படுத்த அவர்களுக்குத் தெரியவே இல்லை.

    

அதனால்த்தான் வெளியிலிருந்து வந்தோர் சிலர், கட்டுக்கட்டாய்ப் பணத்தாள்களைக் காட்டியதும், கொள்கைகளை மறந்து அவர்கள் பின்னால், வாய்திறந்து ஓட இவர்களிற் சிலர் தயாராகினர்.

    

இங்ஙனமாய் நம்அரசியலையும் அபகரிக்க, திட்மிட்டு வந்த பண முதலைகளுக்கு, அறிவு பூர்வமாக, சூழ்நிலைக்கேற்ப, நம் இனத்தை வழிப்படுத்த முனைந்து நின்ற, சுமந்திரனைப் பிடிக்காமல்ப் போயிற்று. இவர்களின் திட்டமிடுதலில்த்தான் சுமந்திரனை இனத்துரோகியாக காட்டும் வேலையும் தொடங்கிற்று.

    

ஊடகங்களையும் பணத்தையும் கையில் வைத்துக் கொண்டு, இவர்கள் தொடங்கிய பிரச்சாரத்தை தமிழ் மக்களும் நம்பி விட்டார்களோ? என ஓர் மயக்கம் உண்டாகியது உண்மையே.

    

ஆனால், நடந்து முடிந்த தேர்தல்கள், தமிழ்மக்கள் சுமந்திரன் மீது வைத்த நம்பிக்கையை உறுதி செய்து கொண்டேயிருந்தன. அதிலிருந்து தமிழ் மக்கள், தம் கைத்தராசுகளைச் சரியாகவே பாவிக்கிறார்கள் என உணர முடிந்தது.

    

மற்றைய தமிழ் எம்பிக்கள், என்மேல் கோபித்தாலும் பரவாயில்லை என்ற முடிவோடு, இவ்விடத்தில் ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன். நன்றாக ஆராய்ந்து பார்த்தால், இன்றைய நிலையில் நமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள், அறிவாற்றல் மிக்கவரமாகவும், செயலாற்றல் மிக்கவராகவும் சுமந்திரன் தான் திகழ்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.

    

நமது எதிரிகளின் திட்டங்களை அறிந்து எதிர்வினை ஆற்றுவதற்கும், நமது கருத்தை தெளிவுபட உலகுக்கு உரைப்பதற்கும், யதார்த்த நிலை உணர்ந்து புதிய திட்டங்கள் தீட்டுவதற்கும், சுமந்திரனுக்கு சமமாக இன்று ஒருவர் எமக்குள் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை.

    

இதனை நான் எழுதியதும், இவர் சுமந்திரனுக்கு வால் பிடிக்கின்றார், அல்லது சுமந்திரனுக்கு தாளம் போடுகிறார், என்றெல்லாம் “மீம்ஸ்” போட்டு, என்னை இழிவுபடுத்த பலபேர் முனைவார்கள். அது பற்றி எனக்குக் கவலை யில்லை!.

எனக்கு எழுபது வயது ஆகப்போகிறது.இதற்கு மேல் என் புகழ் நோக்கி இனத்திற்கு எதிரான, பொய்மையோடு சமரசம் செய்து கொள்ள நான் விரும்ப வில்லை.

    

இப்படி நான் சொன்னதற்காக, சுமந்திரன் தான் உலகத்தில் சிறந்த தலைவர் என நான் சொல்வதாகவும் அர்த்தப்படுத்திக் கொள்ளாதீர்கள். இந்திராகாந்தி போன்ற தலைவர்களின் ஆளுமையைக் கண்டு, வியந்த எனக்கு சுமந்திரனின் தலைமைத்துவத்தில் பல மனக்குறைகள் உண்டு.

    

பிழையோடு சமரசம் செய்து கொள்ளும் முயற்சி, ஆண்மையாய் உறுதிபட முடிவெடுக்க தயங்கும் தன்மை, தான் மதிக்கப்படாத போது பதவிகளை தூக்கி எறிந்து விட்டு வெளிவரத் தயங்கும் அவரது இயல்பு, இராஐ தந்திரமாய் எதிரிகளைக் “கட்டம் கட்டி” வீழ்த்தத் தெரியாத, மதிநுட்பம் இன்மை, தன் கருத்தை மக்கள் கருத்தாக மாற்றத் தெரியாத, அல்லது மக்கள் கருத்தை தன் கருத்தாக உரைக்கத் தெரியாத அவரது சொல் வன்மைச் சோர்வு என, அவரது தலைமைத்துவத்திலும் பல குறைகள் உண்டென்றே இருக்கத்தான் செய்கின்றன.

    

ஆனாலும், இன்றைய நிலையில் அவரைவிட்டால் நமக்கு தக்க தலைவர் வேறெவரும் இல்லை என்றே தோன்றுகிறது. சாணக்கியன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய இருவரையும் ஓரளவு ஆற்றல் உள்ளவர்களாய் நாம் ஏற்றுக் கொள்ள முடியும். சாணக்கியனும், சுமந்திரனும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக இயங்கி வருகிறார்கள். நம் இனத்தின் துரதிஷ்டத்தால் கஜேந்திரக்குமார் நோய் வாய்ப்பட்டிருக்கிறார். இதுதான் இன்றைய நமது தலைமைகளின் நிலை.

    

மேற்ச் சொன்ன வெளிநாட்டு முதலைகள் தான், சுமந்திரனை தம் எதிரியாகக் கருதினார்கள். காரணம், தம் எண்ணங்களை எல்லாம் இலகுவாகக் கட்சிக்குள் விதைக்க சுமந்திரன் தடையாக இருந்ததேயாம் அவரை தம் பணத்தினால் வீழ்த்த முடியாது போக, அவர்கள் கோபம் உற்றார்கள்.

    

அதனால்த்தான் அவர் வெளிநாடுகளுக்குச் சென்ற போதெல்லாம், குறிப்பிட்ட சில “ரவுடிகளை” ஏவி முடிந்தளவு அவரை இழிவு செய்ய முயன்றார்கள். அவரை ஓர் இனத்துரோகி போல பல வழிகளாலும் காட்ட வழிசெய்தார்கள். “சுத்துமாத்துச்சுமந்திரன்” என அவருக்குப் பட்டம் சூட்டி உள்;ருக்குள்ளேயே அவரின் மதிப்பை வீழ்த்த நினைத்தார்கள்.

    

ஆனால் உண்மை நிலை உணர்ந்து, சி.வி.கே. சிவஞானம் போன்ற கட்சியின் மூத்த தலைவர்கள், சுமந்திரனின் கையைப் பலப்படுத்தவே விரும்பி நின்றனர். அதுமட்டும் அல்லாமல், வெளி நாடுகளிலிருந்து வந்த தூதுவர்கள் கூட,பெரும்பாலும் சுமந்திரனுடனேயே இனப்பிரச்சினை பற்றிப் பேச விரும்பினார்கள். அதற்குக் காரணம், அங்ஙனம் பேசத்தக்க வேறு யாரும் இங்கு இல்லை என்பது தான்.

    

இன்றைய நிலையில், நம் நிலை உரைக்க, தமிழ் மக்கள் சுமந்திரனை நோக்கி, பாஞ்சாலி போல “ஆபத்பாந்தவா அபாயரட்சகா” எனக் கை தூக்கும் நிலையில்த் தான் இருக்கிறார்கள்.இந்த உண்மையை நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் தெளிவுற உலகுக்கு எடுத்துரைத்து விட்டது.

    

சுமந்திரனின் வழிப்படுத்தலில் சஜித்திற்கு ஆதரவு அளிக்க வேண்டுமென தழிழரசுக் கட்சியின் மத்திய குழு எடுத்த முடிவினை, மாற்றார் கருத்தை நிராகரித்து வடக்குக் கிழக்கு மக்கள் முழுமையாய் ஏற்றுக் கொண்டமை தெளிவாகியிருக்கிறது.

    

பாவம், “விண்ணகம் கேட்டு மண்ணும் இழந்த திரிசங்கு” போல, அரியநேந்திரனின் நிலை அந்தர நிலையாகிவிட்டது. அவர் நிலை மட்டும் அல்ல, அவரைத் தூண்டிவிட்ட, உங்கள் அனைவரதும் நிலையுந்தான்.

    

கிழக்கில் சாணக்கியன் பெரும் பாடுபட்டு சஜித்தின் வெற்றிக்கு வழி செய்தார். வடக்கிலோ, தனியொருவராய் நின்று பாடுபட்டு சஜித்தின் வெற்றியில் தன் வெற்றியையும் பதிவு செய்திருக்கின்றார் சுமந்திரன்.

    

இதனை சுமந்திரனுக்கான வெறும் பாராட்டு உரையாக, நான் இங்கு எழுத வில்லை. இதனை நான் எழுதுவதற்கு வேறு காரணமுண்டு. தமிழ் மக்கள் தன் மேல் நம்பிக்கை கொண்டு, தன் கையில் தலைமைச் செங்கோலைத் தந்திருப்பதை, இனியேனும் சுமந்திரன் தெளிவாக உணர்ந்தாக வேண்டும். உணர்த்தியாகவும் வேண்டும்!.

    

கிடைத்த இந்த மக்கள் ஆணையை வைத்து, கட்சியில் தனது ஆட்சியை இனி அவர் உறுதியாய்ப் பதிவு செய்ய வேண்டும்.தனது கட்டுப்பாட்டுக்குள் கட்சியை முழுமையாய் கொணர்ந்து, நிமிர்வோடு அதனை வழிநடத்த இனி அவர் முன் வரவேண்டும். பழைய பகைகளை எல்லாம் மறந்து, அனைவரையும் ஒன்றுபடுத்தி, (முடிந்தால், பிரிந்து நிற்கும் கூட்டமைப்பினரையுந்தான்) கட்சிக்குள் தனது பலத்தை உறுதி செய்வதோடு, இனத்தின் பலத்தையும் உறுதி செய்தாக வேண்டும்.

    

பிரச்சனைகளை சமாளித்துத் தாண்ட நினைத்த சம்பந்தரின் கொள்கையை தானும் பின்பற்றாமல், இனியேனும் கட்சிக்கு அவர் பலமூட்டவேண்டும். நல்லதொரு தலைவன் தனக்கு நஷ்டம் வரும் என்று தெரிந்தாலும், இனத்தின் நன்மை நோக்கி உறுதியான முடிவெடுக்கத் தயங்கக்கூடாது.

    

தமிழ்மக்களும் சுமந்திரனுக்கு எத்தனை தரந்தான் சந்தர்ப்பம் தர முன் வருவார்கள்? இனியும் சுமந்திரன் மேற்ச்சொன்னவற்றை செய்யாவிட்டால், உலகம் அவரைக் கேலி செய்வதைத் தவிர்க்க முடியாது.

    

பெரியீர்! உங்களுக்கென கடிதத்தை எழுத்த தொடங்கி, நமது அரசியல் சூழலையும் ஆராய வேண்டியதாய்ப் போயிற்று. மற்றொன்று விரித்திருப்பதாய்க் கருதாதீர்கள். மேற்சொன்ன விடயங்கள் உங்களாலும் உணரப்பட வேண்டியவையே! சுமந்திரனின் பலத்தை வெளிப்படுத்தி, இந்த நன்நெறியை அவருக்குக் காட்டிய புண்ணியம், உங்களைத்தான் சேரும்.

    

தீமையிலும் நன்மை விளைவித்திருக்கும் உங்களைப் பாராட்டி, இக்கடிதத்தை நிறைவு செய்கிறேன்.

“இன்பமே எந்நாளும் துன்பமில்லை”

About editor 3124 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply