இலங்கை ஜனாதிபதி தேர்தல்: தமிழர் பகுதிகளில் வாக்குப்பதிவு எப்படி இருக்கிறது?

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: தமிழர் பகுதிகளில் வாக்குப்பதிவு எப்படி இருக்கிறது?

21 செப்டெம்பர் 2024

புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தலைநகர் கொழும்பு மற்றும் தமிழர் பகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.

களத்தில் 38 வேட்பாளர்கள் இருந்தாலும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மற்றொரு எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே ஆகியோருக்கிடையே மும்முனைப் போட்டி நிலவுவதாக கருதப்படுகிறது.

இதில் வெல்லப் போவது யார்? தேர்தல் முடிவுகள் எப்போது தெரியும்?

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு

இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்ட பொருளாதார நெருக்கடி இன்னும் முற்றிலுமாக தீராத நிலையில், அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது. திட்டமிட்டபடி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

தலைநகர் கொழும்பில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளுக்கு வெளியே பெரிய அளவில் வரிசை ஏதும் இல்லை. வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள் காத்திருக்காமல் உடனே வாக்களித்துவிட்டுச் செல்ல முடிவதாக அங்குள்ள நமது செய்தியாளர் தெரிவிக்கிறார். வாக்களித்துவிட்ட வாக்காளர்களுக்கு இடது கையின் சுண்டுவிரலில் அழியாத மை வைக்கப்படுகிறது. இதற்காக, பிரத்யேக பேனாவை வாக்குச்சாவடி அலுவலர்கள் பயன்படுத்துகின்றனர்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல்
படக்குறிப்பு,கொழும்பில் டி.எஸ்.சேனநாயகா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள்
இலங்கை ஜனாதிபதி தேர்தல்
படக்குறிப்பு,இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த வாக்காளர் ஒருவர்.

தமிழர் பகுதிகளில் வாக்குப்பதிவு எப்படி?

தமிழர்கள் அதிகம் வசிக்கும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், வாக்குப்பதிவு மந்தமாகவே இருக்கிறது. வாக்குச்சாவடிகளுக்கு வெளியே மக்கள் காத்திருப்பதை காண முடியவில்லை.

ஆனால் பின்னர், படிப்படியாக வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்கள் வருகை அதிகரித்தது. கொத்மலை – வேவன்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் வாக்களித்தார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல்
படக்குறிப்பு,கொத்மலை – வேவன்டன் தமிழ் வித்தியாலயத்தில் வாக்குச்சாவடிக்கு வெளியே நீண்ட வரிசையில் வாக்காளர்கள்

வாக்குப் பதிவு: மதியம் 1 மணி நிலவரம்

மதியம் 1 மணி நிலவரப்படி, கொழும்பு, குருநாகலில் 50% வாக்குகள் பதிவாகியுள்ளன. கண்டி, மத்தறை, பதுளையில் 40% வாக்குகள் பதிவாகியுள்ளன.

மேலும், பொலன்னறுவை, ரத்தினபுரியில் 55% வாக்குகளும், கம்பஹாவில் 52% வாக்குகளும், திருகோணமலையில் 51% வாக்குகளும், புத்தளத்தில் 42% வாக்குகளும் பதிவாகியுள்ளன. அதோடு, கேகாலையில் 49% மற்றும் காலியில் 45% வாக்குகள் பதிவாகியுள்ளன.

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வன்னியில் 46.82% வாக்குகள் பதிவாகியுள்ளன, யாழ்ப்பாணத்தில் 35% வாக்குகள் பதிவாகியுள்ளன.

கொழும்பு மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

பொருளாதார மந்த நிலையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று கொழும்பு மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இது குறித்து கொம்பனி வீதியில் வசித்து வரும் முகமது முஷாயி என்பவர், பிபிசி தமிழிடம் பேசிய போது “இங்கே ஒரு நபருக்கு தினசரி சம்பளமே ரூ. 2000 தான். ஆனால் சந்தைக்கு செல்லும் போது ரூ. 5000 எடுத்துச் சென்றாலும் போதவில்லை,” என்று வருத்தம் தெரிவிக்கிறார்.

“இந்த விலைவாசியில் குடும்பங்கள் எப்படி வாழ்வது. மருந்துகளின் விலையும் கூடியுள்ளது. அரசு மருத்துவமனைகளிலும் சில நேரங்களில் மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனை வெளியே வாங்க வேண்டும் என்றால் அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. யார் ஆட்சிக்கு வந்தாலும் இதனை மாற்ற வேண்டும்,” என்று முஷாயி கூறியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024
படக்குறிப்பு,முகமது முஷாயி

“அமைதியாக வாழ வேண்டும்”

சாதாரண மக்களின் சுமை அதிகரித்திருக்கிறது என்று கூறுகின்றனர் கொழும்பு மக்கள். டாஸன் தெருவில் வசித்து வரும் ரவி மூனமாலி, “இதற்கு முந்தைய அரசாங்கங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் தோல்வி அடைந்து இருக்கின்றன. அரசாங்கத்தின் எல்லா மட்டங்களிலும் ஊழல் புரையோடிப் போய் இருக்கிறது. ரணில் இந்த நாட்டிற்கு சிலவற்றை செய்திருக்கிறார்,” என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “இந்த நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய அளவில் சலுகைகளும் வசதிகளும் அளிக்கப்படுகின்றன. அது நிறுத்தப்பட வேண்டும். சஜித்தும் அனுர குமாரவும் அந்த திசையில் பேசுகிறார்கள். நாங்கள் எங்கள் வேலையை பார்த்துக் கொண்டு அமைதியாக, சந்தோஷமாக, திருப்தியாக, வாழ விரும்புகிறோம். அதற்கான ஒரு மாற்றத்தை காண விரும்புகிறோம்,” என்றும் கூறினார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024
படக்குறிப்பு,ரவி மூனமாலி

ஒரு வாக்காளர் 3 வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாம்

இலங்கையில், காலை 7 மணிக்குத் துவங்கிய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடையும். வாக்குப்பதிவு முடிவடைந்த சில மணி நேரத்திலேயே வாக்கு எண்ணிக்கை துவங்கும். சனிக்கிழமை நள்ளிரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் புதிய ஜனாதிபதி யார் என்பது தெரியவரலாம்.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலைப் பொருத்தவரை, விருப்ப வாக்கு அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி வாக்காளர்கள், வேட்பாளர் பட்டியலில் இருந்து மூன்று பேரைத் தேர்வுசெய்யலாம். 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றவரே வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.

எந்த வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறவில்லையென்றால், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் மட்டும் கணக்கில் எடுக்கப்பட்டு, அவர்களுக்கான விருப்ப வாக்குகள் எண்ணப்படும். அதில் அதிக வாக்குகளைப் பெற்றவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல்
படக்குறிப்பு,இந்த ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டுதான் மிக நீளமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டுதான் மிக நீளமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. களத்தில் 38 வேட்பாளர்கள் இருப்பதே இதற்குக் காரணம்.

இந்த ஜனாதிபதி தேர்தலில் 1,71,40,354 பேர் வாக்களிக்கத் தகுதியுடையவர்களாக இருக்கின்றனர். இதில் 75 சதவீதம் பேர் சிங்கள மக்கள். மீதமுள்ள 25 சதவீதத்தில் தமிழர், இஸ்லாமியர், மலையகத் தமிழர் ஆகியோர் அடக்கம். இந்தத் தேர்தலுக்காக நாடு முழுவதும் 13,421 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 63,000 காவல்துரையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் நிஹகால் தல்துவ தெரிவித்திருக்கிறார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பின்போது வன்முறை சம்பவங்கள் நடந்தால் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க எச்சரித்திருக்கிறார்.

எந்த வாக்குச் சாவடியிலாவது வன்முறை சம்பவங்கள் நடந்தால், அங்கு வாக்குப்பதிவு ரத்துசெய்யப்படும் என்றும் மீண்டும் அங்கே வாக்கெடுப்பு நடந்த பிறகே, நாடு முழுவதற்குமான இறுதித் தேர்தல் முடிவுகளை அறிக்க முடியுமென செய்தியாளர் சந்திப்பில் ரத்நாயக்க தெரிவித்திருக்கிறார்.

கடந்த முறை தேர்தலில் நிற்காமல் ரணில் ஜனாதிபதியானது எப்படி?

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21ஆம் தேதி சனிக்கிழமையான இன்று நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக நீடித்த கடுமையான பொருளாதார நெருக்கடி, அதைத் தொடர்ந்த மிகப் பெரிய போராட்டங்களுக்குப் பிறகு, இலங்கை சந்திக்கும் முதல் தேர்தல் இது.

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் சுமார் 52 சதவீத வாக்குகளைப் பெற்று கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாஸ, சுமார் 42 சதவீத வாக்குகளையே பெற்றார். கோட்டாபய பெற்ற இந்த வெற்றியின் மூலம் 5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கையில் மீண்டும் அதிகாரத்திற்கு வந்தனர்.

ஆனால், 2020-ஆம் ஆண்டில் ஏற்பட்ட கோவிட் பரவல் காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொள்ள ஆரம்பித்தது. இதன் உச்சகட்டமாக 2022-ஆம் ஆண்டில் பெட்ரோல் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராட ஆரம்பித்தனர். இதையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினார். நாடாளுமன்றத்தின் மூலம் ஜூலை 21ஆம் தேதி ரணில் விக்ரமசிங்க இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் 38 பேர் போட்டி

இலங்கையின் அரசமைப்புச் சட்டம் பிரிவு 40-இன் படி, இடைக்காலத்தில் ஜனாதிபதியாக பதவியேற்பவர் அந்தப் பதவிக் காலம் முடியும்வரைதான் ஜனாதிபதியாக இருக்க முடியும். அதன்படி, இந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி ரணிலின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. ஆகவே, புதிய ஜனாதிபதியைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 21ஆம் தேதி நடக்கிறது.

இந்தத் தேர்தலில் போட்டியிட 39 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். இவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். ஆகவே, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவின் மகன் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்செக, தமிழர்களின் பொது வேட்பாளர் என்ற பெயரில் பா. அரியநேத்திரன் உள்ளிட்ட 38 பேர் களத்தில் நிற்கின்றனர்.

2015-ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியான மைத்திரி பால சிறிசேன, அதற்கடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை. தற்போதைய ஜனாதிபதியான ரணில் மீண்டும் களத்தில் இறங்கியிருப்பதன் மூலம் 2015க்குப் பிறகு, மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தல் களத்தில் நிற்கிறார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல்
படக்குறிப்பு,இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் அனுரகுமார திஸநாயகே, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ

தமிழர்களின் வாக்கு யாருக்கு?

இந்தத் தேர்தலில் பொருளாதார நெருக்கடியே மிக முக்கியமான பிரச்னையாக இருக்கக்கூடும். இலங்கையில் தற்போது பெட்ரோல் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு வரிசை இல்லை என்றாலும் விலையேற்றம் மிகக் கடுமையாக இருக்கிறது. 2021-ஆம் ஆண்டில் இருந்து 2024-ஆம் ஆண்டிற்குள் உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட காலத்தில் உயர்த்தப்பட்ட அதன் விலை தற்போது சற்று குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், பிற பொருட்களின் விலை அப்படியே நீடிக்கிறது.

சிறுபான்மையினரைப் பொருத்தவரை வேறு சில அம்சங்களும் அவர்களது வாக்குகளைத் தீர்மானிக்கலாம். குறிப்பாக, வடக்கில் வசிக்கும் தமிழர்களைப் பொருத்தவரை, போர் முடிந்து இத்தனை வருடங்களுக்குப் பிறகும் ராணுவத்தாலும் தொல்பொருள் துறையாலும் காணிகள் அபகரிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். மலையக மக்கள் மத்தியில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.

மிக நெருக்கடியான காலகட்டத்தில் ஜனாதிபதி பொறுப்பை ஏற்ற தன்னால் மட்டுமே, சர்வதேச நிதியத்தின் விதிமுறைகளின் கீழ் நாட்டை மீட்டெடுக்க முடியுமெனக் கூறி ஆதரவைத் திரட்டினார் தற்போதைய ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க. சஜித் பிரேமதாஸவும் அனுர குமார திஸநாயக்கேவும் சில மாற்றங்களுடன் இதைச் செய்வோம் என்கிறார்கள்.

பாரம்பரிய கட்சிகளான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை பலவீனமடைந்து காணப்படுகின்றன. ராஜபக்ஷக்களின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் மகிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ களத்தில் இருந்தாலும் அக்கட்சியைச் சேர்ந்த பலர் ரணிலை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

தமிழர்கள், இஸ்லாமியர்கள் மத்தியில் செல்வாக்குள்ள கட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு வேட்பாளரை ஆதரிப்பதாகச் சொன்னாலும் அதே கட்சியில் உள்ள சில தலைவர்கள், வேறு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாகப் பேசுவதும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவையெல்லாம் சேர்ந்து இந்தத் தேர்தலை ஒரு சுவாரஸ்யமான, கவனிக்கத்தக்க தேர்தலாக்கியிருக்கிறது

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

https://www.bbc.com/tamil/articles/cwyejq7g1lko

https://www.bbc.com/tamil/articles/c4ge3k1zw2yo

யாழில் வாக்களிக்க முண்டியடித்த மக்கள்! அதிகரித்த வாக்களிப்பு சதவீதம்! – YouTube

About editor 3124 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply