ஒரே நாடு – ஒரே தேர்தல் குழப்பியது அகில இந்தியக் கட்சிகளே

            ஒரே நாடு – ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக உயர்நிலைக் குழு அளித்தப் பரிந்துரைகளுக்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த சாத்தியம் உள்ளது. அதற்கேற்ப சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கான தேர்தலை முதல் சுற்றிலும், அதனைத் தொடர்ந்து நூறு நாட்களுக்குள் உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலை இரண்டாம் சுற்றாக நடத்தலாம்.

நாடாளுமன்றத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலைமை ஏற்பட்டாலோ ஒன்றிய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றாலோ மீதமுள்ள பதவி காலத்திற்குப் புதிய தேர்தலை நடத்தலாம்.

முதல் முறை ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் போது நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் காலம்வரை சட்டமன்றங்களின் பதவிக் காலத்தை நீட்டிக்க வழிவகை செய்யவேண்டும். அதற்கேற்ப ஒரே வாக்காளர் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டைகளை தேர்தல் ஆணையம் உருவாக்கவேண்டும் என்பவை போன்ற பல்வேறு பரிந்துரைகளை முன்னாள் குடியரசுத் தலைவர் இராம்நாத்கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு தெரிவித்துள்ளது.

“உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை ஒன்றிய அமைச்சரவை ஏற்றுக்கொண்டிருப்பதின் மூலம் நாட்டில் துடிப்பான சனநாயகம் நோக்கிய பாதையின் முக்கிய படி அமைக்கப்பட்டுள்ளது” என தலைமையமைச்சர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

“ஒரே நாடு – ஒரே தேர்தல் திட்டம் நாட்டின் தேர்தல் சீர்திருத்தங்களை நோக்கிய மாபெரும் முன்னேற்றமாகும்” என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் “நடப்பு ஆட்சிக் காலத்திற்குள் இத்திட்டம் செயற்படுத்தப்படும்” என்றும் அவர் அறிவித்துள்ளார்.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக சட்ட ஆணையம் தனது கருத்தினை விரைவில் தெரிவிக்கும் எனக் கூறப்படுகிறது.

நாடு விடுதலை பெற்ற பிறகு 1950ஆம் ஆண்டு சனவரி 26ஆம் நாள் அரசியல் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. அதற்கிணங்க தேர்தல் ஆணையும் அமைக்கப்பட்டு நாடெங்கும் 21வயது வந்த ஆண் – பெண் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டு, அதற்கான பட்டியலும் தயாரிக்கப்பட்டது. 1951ஆம் ஆண்டு முதல் 1967ஆம் ஆண்டு வரை நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. ஆனால், இந்த நடைமுறை ஏன் மாறியது? என்பதை சிந்தித்துப் பார்ப்போமானால், ஒரு உண்மை பளிச்சென்று புலப்படும்.

1969ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவராக இருந்த ஜாகிர் உசேன் அவர்கள் காலமானதால் புதிய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான காங்கிரசு வேட்பாளரைத் தேர்வு செய்வதற்காக காங்கிரசு நாடாளுமன்றக் குழு கூடிய போது என். சஞ்சீவி ரெட்டி அவர்கள் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைமையமைச்சர் இந்திராகாந்தி அவர்கள் முன்மொழிந்த வேட்பாளருக்கு சிறுபான்மையினரின் ஆதரவு மட்டுமே கிடைத்தது. பெரும்பான்மையினரின் முடிவை ஏற்க இந்திராகாந்தி அவர்கள் மறுத்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.

அதுமட்டுமல்ல, கட்சியின் அதிகாரப்பூர்வமான வேட்பாளரான என். சஞ்சீவி ரெட்டி அவர்களை முன்மொழிந்து கையெழுத்திட்ட இந்திராகாந்தி அவர்கள், தேர்தலின் போது மனம் மாறி விருப்பம் போல் வாக்களிக்கும்படி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரே வாக்காளர்கள் ஆவார்கள். இந்தச் சூழ்நிலையில் தலைமையமைச்சரே காங்கிரசின் அதிகாரப்பூர்வமான வேட்பாளருக்கு எதிராகச் செயற்பட்டு அவர் குறைந்த வாக்குகள் வேறுபாட்டில் தோற்கும் சூழ்நிலை உருவானது. காங்கிரசிலிருந்து விலகி இந்திராகாந்தி அவர்களின் ஆதரவுடன் போட்டியிட்ட வி.வி. கிரி வெற்றி பெற்று குடியரசுத் தலைவரானார். இதன் விளைவாக காங்கிரசுக் கட்சி இரண்டாகப் பிளவுப்பட்டது. இந்திரா காங்கிரசு என்றும், ஸ்தாபன காங்கிரசு என்றும் இரு காங்கிரசு அமைப்புகள் உருவாயின. நாடாளுமன்றத்தில் இந்திராகாந்தி அவர்கள் பெரும்பான்மையை இழந்தார். எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் அவர் ஆட்சி நடத்தவேண்டிய இக்கட்டான நிலைமைக்கு ஆளானார்.

இதன் விளைவாக நாடாளுமன்றத்திற்குப் புதிய தேர்தலை நடத்துவதற்கு அவர் முன்வந்தார். அதற்கு முன் சுதேச மன்னர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியங்களை நிறுத்துவது என்றும் வங்கிகளை தேசியமயமாக்குவது என்றும் அதிரடியான முடிவுகளை அறிவித்தார். பெருந்தலைவர் காமராசர் அகில இந்திய காங்கிரசுத் தலைவராக இருந்தபோது வகுத்து அளித்த 10 அம்சத் திட்டத்தில் இவை இரண்டும் இடம்பெற்றிருந்தன. அவரும் மற்ற தலைவர்களும் எவ்வளவோ வற்புறுத்தியும் அவற்றை நிறைவேற்றத் தயங்கிய இந்திராகாந்தி அவர்கள் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக இத்திட்டங்களை செயற்படுத்த முன்வந்தார்.

1971ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. போன்ற மாநிலக் கட்சிகள் சிலவற்றுடன் கூட்டுச் சேர்ந்து அவர் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற பிறகு ஸ்தாபன காங்கிரசு முதலமைச்சர்கள் இருந்த மாநில சட்டமன்றங்களைக் கலைத்து குடியரசுத் தலைவரின் ஆட்சியை அங்கெல்லாம் ஏற்படுத்தினார். அதன் பிறகு ஓராண்டுக் கழித்து அச்சட்டமன்றங்களுக்குத் தனியாக தேர்தல் நடத்தவேண்டிய தேவை ஏற்பட்டது.

1975ஆம் ஆண்டில் பழம்பெரும் தலைவர் செயப்பிரகாசு நாராயண் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து இந்திராவின் ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள் நடத்த முற்பட்டனர். அப்போது அவசர நிலைமையை இந்திராகாந்தி அவர்கள் பிரகடனம் செய்தார். சர்வாதிகார ஆட்சி உருவானது. செயப்பிரகாசு நாராயண் உள்பட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

1977ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்தலை நடத்துவதற்கு இந்திராகாந்தி அவர்கள் முன்வந்தார். தேர்தலுக்கு முன்பாக சிறையிலிருந்த அனைத்துத் தலைவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். செயப்பிரகாசு நாராயண் தலைமையில் ஸ்தாபன காங்கிரசு, லோக்தளம், ஜனசங்கம் மற்றும் பல கட்சிகள் ஒன்றிணைந்து ஜனதா தளம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டது.

ஆனால் இக்கட்சியின் அமைப்புக் கூட்டத்தில் பெருந்தலைவர் காமராசர் கலந்துகொள்ளவில்லை. எனவே, அவரைச் சந்தித்துப் பேசி அவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக செயப்பிரகாசர் அவர்கள் சென்னைக்கு வந்து சந்தித்தார். ஆனால், ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ். போன்ற வகுப்புவாத அமைப்புகளை புதிய கட்சியில் சேர்த்துக் கொண்டதை காமராசர் கடுமையாகக் கண்டித்தார். அதைக் காரணமாகக் கொண்டு புதிய கட்சிக்கு ஆதரவளிக்க மறுத்தார். தமிழ்நாட்டில் ஸ்தாபன காங்கிரசு தனித்தே இயங்கியது.

இத்தேர்தலில் இந்திராகாந்தி மட்டுமல்ல, அவரது கட்சியும் தோற்கடிக்கப்பட்டது. ஜனதா தளம் வெற்றி பெற்று மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சியை அமைத்தது. ஆட்சியில் அமர்ந்தவுடன் பல்வேறு மாநிலங்களில் பதவியிலிருந்த காங்கிரசு அரசுகளைப் பதவி நீக்கம் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அங்கெல்லாம் ஏற்படுத்தியது.

பிறகு 1980ஆம் ஆண்டு ஜனதா தளம் பிளவுப்பட்டு ஆட்சியை இழந்தது. எனவே, 1981ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்திராவின் தலைமையில் காங்கிரசுக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. ஆட்சியில் அமர்ந்ததும் பல்வேறு மாநிலங்களில் பதவி வகித்த ஜனதா அரசுகளை இந்திராகாந்தி அவர்கள் பதவி நீக்கம் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவந்தார்.

காங்கிரசுக் கட்சியின் ஆதரவுடன் தலைமையமைச்சர் பொறுப்பை ஏற்ற சந்திரசேகர் அவர்களும் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியைப் பதவி நீக்கம் செய்தார்.

1999ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான பா.ச.க. கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, 23 மாநிலக் கட்சிகளைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு அவர் ஆட்சியை அமைத்தார். கூட்டணிக் கட்சிகளைப் பிளவுப்படுத்தும் வேலையை பா.ச.க. வெற்றிகரமாகச் செய்தது. பல்வேறு மாநிலங்களிலும் அந்தந்த மாநில மக்களின் மொழி, இன உணர்வை அடிப்படையாகக் கொண்டு எழுந்த மாநிலக் கட்சிகள் காங்கிரசு உட்பட பல அகில இந்தியக் கட்சிகளை முறியடித்துதான் ஆட்சிகளைப் பிடித்தன.  மாநிலக் கட்சிகள் வலிமை பெறுமானால் ஏக இந்தியத்துவம் சுக்கு நூறாகச் சிதறிப் போகும் என அஞ்சிய காங்கிரசுக் கட்சி மாநிலக் கட்சிகளைப் பிளவுப்படுத்தி அந்தந்த மாநில அரசியலைச் சீர்குலைப்பதையே தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது. “பகையாளிக் குடியை உறவாடிக் கெடு” என்ற பழமொழிக்கேற்ப வலிமை வாய்ந்த மாநிலக் கட்சிகளுடன் தேர்தல் உறவு வைத்து பிறகு அவற்றைப் பிளவுப்படுத்தி வலிமை குன்றச் செய்யும் தந்திரத்தை காங்கிரசுக் கட்சிக் கடைப்பிடித்ததைப் போலவே பா.ச.க.வும் கடைப்பிடிக்கிறது.

ஏக இந்தியா என்ற பெயரில் மொழிவழித் தேசிய இனங்களை அடக்கி வைப்பதில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே வேறுபாடு இல்லை. காங்கிரசுக் கட்சியானாலும், பா.ச.க.ஆனாலும் வேறு எந்த அகில இந்தியக் கட்சியானாலும் மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதில் ஒன்றுபட்டுள்ளன. அவசரநிலை காலத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதன் விளைவாக இன்று பா.ச.க. ஆட்சி நீட் தேர்வு போன்றவை மூலம் மாநிலக் கல்வித்துறையில் தலையிட்டு நாட்டாண்மை செலுத்துகிறது. பல்வேறு துறைகளிலும் மாநில அதிகாரங்களைப் பறித்ததில் காங்கிரசுக்கும், பா.ச.க.வுக்கும் இடையே வேறுபாடு இல்லை.

அதே திட்டத்துடன்தான் இப்போது ஒரே நாடு – ஒரே தேர்தல்” என்பதை பா.ச.க. ஆட்சி செயல்படுத்தத் துடிக்கிறது. இத்திட்டத்தின் மூலம் மாநில ஆட்சிகள் வலிமை குன்றும். அதுமட்டுமல்ல, சனநாயக உரிமைகள் பறிக்கப்படும். இந்திய அளவிலும், மாநிலங்களிலும் ஒரே கட்சியின் ஆட்சியை ஏற்படுத்தவே இத்திட்டத்தை மோடி அரசு கொண்டுவந்துள்ளது.

இதை சற்றும் புரிந்துகொள்ளாமல் மாநிலக் கட்சிகள் சில இத்திட்டத்திற்கு ஆதரவு தந்துள்ளன. இது, யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதற்கு ஒப்பாகும்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும், வேறு சில மாநில முதல்வர்களும்  இத்திட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஒரே நாடு – ஒரே தேர்தல் திட்டத்தை முறியடிப்பதற்கு ஆவன செய்ய முன்வருமாறு தமிழக முதல்வரை வேண்டிக்கொள்கிறோம்.

About editor 3124 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply