வீணாக ‘தடி கொடுத்து அடிவாங்கிய’ நிலைதான் ஏற்படப்போகிறது.

ஜனாதிபதி பொது வேட்பாளர்
அரியநேந்திரன் அவர்களுக்கு
கம்பவாரிதி இ. ஜெயராஜ் எழுதும் கடிதம்

சகோதரர் ‘அரியநேந்திரன் அவர்கட்கு,

வணக்கம்.

உங்களது நோக்கமும் எதிர்கால அரசியல் வாழ்வும் உருப்படப்போவதில்லை எனத் தெரிவதால் உங்களின் நலம்வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.

பழைய காலத்தில் எங்கள் ஊரில் வைரவர் கோயிலுக்குபலி கொடுக்கவென கிடாய் ஆடுகளை அலங்கரித்து ஊர்வலமாய் கொண்டு செல்வார்கள். அந்த அலங்காரம் எல்லாம் சிறிது நேரத்திற்குத் தான்.

கொண்டு செல்பவர்கள் அவ் ஆட்டை சிறிது நேரத்தில் பலி கொடுத்து விடுவார்கள்.தான் பலியாகப் போவது தெரியாமல் அவ் ஆடும் தன் அலங்காரம் நினைத்து பெருமையோடு ஊர்வலம் செல்லும்.

தன்னை அலங்கரித்து ஊர்வலம் அழைத்துச் செல்பவர்களின் நோக்கம் அவ் ஆட்டுக்குத் தெரிவதில்லை.

சிறிது நேரத்தில் தன் கழுத்து துண்டாடப்படப்போவது தெரியாமல் அது தனக்கும் பெருமை கிடைப்பதாய் நினைந்து செல்லும். அது போலத்தான் இப்பொழுது உங்கள் நிலையும் ஆகியிருக்கிறது.

வாக்குக் கேட்டு, நீங்கள் கொஞ்சப் பேருடன் செல்வதை ஊடகங்கள் மூலம் காண்கிறேன். அப்போதெல்லாம் எனக்கு அந்த ஆடும் அதனை பலி கொடுக்க அழைத்துச் செல்லும் ஆட்களும்தான் நினைவுக்கு வருவார்கள்.

ஜனாதிபதி தேர்தலை, உரிமை வேண்டி நிற்கும் தமிழ் மக்களின் ஒருமித்த உணர்வைக் காட்டும் தேர்தலாக மாற்றப்போவதாக சில கட்சிகளின் தலைவர்கள் முடிவுசெய்த போதே எனக்கு அது நல்ல நகைச்சுவையாகப்பட்டது.

தமது பதவி ஆசைக்காக, முடிந்தளவு சண்டைகள் போட்டுக்கொண்டு தனித்தனியாய் சிதறி நிற்கும் இவர்கள்தான் தமிழ் மக்களின் ஒருமித்த உணர்வைக் காட்டப் போகிறார்களாம்.

நல்ல வேடிக்கை இது!

ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று, பாதிரியார் ஓருவர் தேவாலயத்தில் அன்பைப் பற்றி உரையாற்றினாராம்.

எல்லா உயிர்கள் மேலும் நாம் அன்பு செய்ய வேண்டும் என அவர் பேசிய பேச்சால் பல பேர் நெஞ்சுருகிப்போனார்களாம்.

மதியம் வீட்டுக்கு வந்த பாதிரியார் சாப்பிடவென உட்காரமேசையில் பரிமாறப்பட்ட உணவில் அவர் சொல்லிவிட்டுப்போன கோழிக்கறி இருக்கவில்லையாம்.

மனைவியைக் கூப்பிட்டு ஏன் கோழி சமைக்கவில்லை என அவர் கடிந்து கொள்ள, அப்பாவியான அவர் மனைவி ‘சேர்ச்சில் நீங்கள் பேசிய பேச்சைக் கேட்டு எந்த உயிர்களையும் கொல்லக்கூடாதென்று நினைத்து விட்டேன். அதனால்தான் சமைக்கவென பிடித்து வைத்திருந்த கோழியைத் திறந்து விட்டுவிட்டேன் என்றாராம்.

அதுகேட்டு தலையில் அடித்துக் கொண்ட பாதிரியார் மனைவியை நோக்கி, ‘ஊருக்குத்தான் உபதேசம் அது உனக்கும் எனக்கும் இல்லையடி பெண்ணே’ என்றாராம்.

தமிழர்களின் ஒருமித்த உணர்வைக் காட்ட நினைக்கும் தலைவர்களை பார்க்கும் போதெல்லாம் எனக்கு இந்தப் பாதிரியார்தான் ஞாபகத்தில் வருகிறார்.

ஒரு கட்சியுடன் இன்னொரு கட்சி ஒற்றுமையில்லாமல் இருப்பது போக, ஒரு கட்சிக்குள்ளேயே ஒற்றுமை இல்லாச் சண்டைகள் நடப்பதைப் பார்த்து, தமிழ் உலகமே சிரித்துக் கொண்டிருக்கிறது.

தமிழரசுக் கட்சியைத்தான் சொல்கிறேன்!.

கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பான்மையர் ‘சஜித் பிரேமதாஸாவை’ ஆதரிப்பது என்ற முடிவை எடுக்க, அதை மீறி ஒரு தனி உறுப்பினர் தான் பொதுவேட்பாளரை ஆதரிக்கப்போவதாக அறிவிக்கிறார்.

என்னே தமிழரின் ஒருமித்த உணர்வு!

கட்சியின் தீர்மானத்தை மீறிச் செயல்பட்ட இருவரை முன்பு கட்சியில் இருந்து விலக்கிய வரலாற்றை மறந்துபோய், பொது வேட்பாளரை ஆதரிப்பவர் செயல்படுகிறார்.

கட்சி எடுத்த முடிவுக்கு மாறாக, பொது வேட்பாளரின் வெற்றிக்காக அவ் உறுப்பினர் வெளிநாடுகளுக்குச் சென்றெல்லாம் பணம் சேர்த்து வருகிறார்.

கட்சியும் அதைப் பார்த்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாமல் கை பிசைந்து ‘நெட்டை மரமென நின்று புலம்புகிறது’

கட்சியின் தலைவர் மாவையோ அங்கும் நிற்கிறார்.இங்கும் நிற்கிறார். அவர் எங்கு நிற்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை. இது முதுமையின் தடுமாற்றமா? என்று பலரும் கேட்கிறார்கள்

கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமலிருக்க அவ்வப்போது அவர் விருப்பப்படி வருத்தங்களும் வந்துவிடுகின்றன.

தான் யார் பக்கம் என்று அவருக்கே தெரியவில்லை. ‘வேடிக்கை மனிதர்’ என்று சொல்வதைத் தவிர வேறொன்றுமில்லை.

நிலைமை இப்படியிருக்க, ‘உட்பகையே’ தம் பலம் என நினைத்த ஏனைய சிறு, தமிழ்க்கட்சிகள் இச்சூழ்நிலையை பயன்படுத்தி தாம் வளர எண்ணி, அதற்கு ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்த முயல்கிறார்கள். அம் முயற்சியின் விளைவுதான், ‘பொது வேட்பாளர் நிறுத்தம்’ எனும்; செயற்பாடாயிற்று

இவர்களின் மொத்தத்திட்டம் என்னவென்றால், இச் சதியை உருவாக்குவதன் மூலம் தமிழரசுக் கட்சியைப் பிளவுபடுத்துவதும், தமிர்களை ஒன்று படுத்துதல் என்ற கருத்துக்கு, பழைய ‘போராட்ட முலாம்’ பூசி தமிழர்களை தம் பக்கம் ஈர்ப்பதும்தான்.

இந்தத் திட்டத்திற்காய் ஜனாதிபதி தேர்தல் களத்தில் ஒருவரை நிறுத்த, அவர்களுக்கு ஓர் ‘அப்பாவி’ தேவைப்பட்டார்.

அங்ஙனம் நிறுத்தப்படும் வேட்பாளர், தப்பித்தவறி அதிக வாக்குகளைப் பெற்று வென்று விட்டால், அவர் தமிழர் மத்தியில் ஒரு புதிய அரசியல் சக்தியாய் மாறி விடுவாரோ என அஞ்சிய இவர்கள் பொது வேட்பாளராக நிறுத்தப்படுபவர் தொடர்ந்து தேர்தல் அரசியலில் ஈடுபடக்கூடாது என புதிய ஓர் நிபந்தனையையும் விதித்தார்கள்.

முதலில் பொது வேட்பாளர் பட்டியலில் பெயர் பதிக்க விரும்பிய பலரும் மேல் நிபந்தனை கண்டு புத்திசாலித்தனமாக மெல்ல விலகிவிட, அவர்களின் திட்டமறியாது அவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகி அப்பாவியாக தேர்தல் களத்தில் குதிக்க நீங்கள் தானாக முன் வந்தீர்கள்.

தாம் கிழக்குக்கு இடம் கொடுத்தோம் என்று சொல்லிக்கொள்ள உங்கள் வருகை வசதியாய்ப்போக சதி வகுத்த அத்தனை பேருக்கும் அப்படியொரு மகிழ்ச்சி!

தேர்தல் கள முடிவுகள் என்ன ஆகுமோ என்று சிந்திக்கும் தகுதி உங்களுக்கு இல்லை என்று நினைக்கிறேன்.

எல்லோருமாய்ச் சேர்ந்து ஏற்றிவிட கூரையின் உச்சிக்கு ஏறி விழும்போது தனியேதான் விழவேண்டியிருக்கும் என்பது கூட தெரியாமல் அப்பாவியாய் கொடி பிடித்துத் திரிகிறீர்கள்.

இம்முறை ஜனாதிபதி தேர்தல் களத்தின் முடிவுகள் என்னாகும் என்று பலரும் ஆய்வுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

அதைக்கூட நீங்கள் படிப்பதில்லை என்று தெரிகிறது.

சுயேட்சை வேட்பாளராய் நிற்கும், தற்போதைய ஜனாதிபதி ‘ரணில் விக்கிரமசிங்க’ அவர்கள் ‘சேடம்’ இழுத்துக்கொண்டிருந்த நாட்டை தன் கெட்டித்தனத்தால் மீட்டெடுத்து, எழும்பி உட்கார வைத்திருக்கிறார்.

அவருடைய முதல்த் தகுதியாய் இது கொள்ளப்படுகிறது.

ஆனாலும், அதி புத்திசாலியான இவரை முழுமையாய் நம்ப யாரும் தயாராக இல்லை. தனது பிரிக்கும் ஆற்றலால் ‘மகிந்த’ குழுவினரிடம் இருந்து பலரை தன் பக்கம் இழுத்து, இவர் வெற்றிக்கான அடையாளம் காட்டினார்.

ஆரம்பத்தில் இந்தியாகூட இவரை ஆதரிப்பதாய்த் தோன்றியது. ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை.

அமெரிக்கச் சார்பாளரான ‘ரணிலின்’ வெற்றியை இந்தியா அவ்வளவாய் விரும்பாதது போல் தெரிகிறது.

அருகில் இருக்கும் இந்தியாவை மீறி இவரால் வெற்றிக் கனியை தொட முடியுமா என்பது, ஏற்பட்டிருக்கும் முதல் கேள்வி.

பழைய ஜனாதிபதி ‘மகிந்த’ குடும்பத்தினரை இவர் விட்டும் விடாமலும் செயற்பட்டுக் கொண்டிருப்பதாய்த் தோன்ற, அதனால் இவர்பின் செல்வது சரியா? பிழையா ? என மக்கள் மத்தியில் ஓர் குழப்பம் ஏற்பட்டதால், அவர்களின் வாக்கு இவரைச் சார்வது சாத்தியமா ? என்பது இரண்டாவது கேள்வி.

இனி நம் தமிழர்தம் அரசியலுக்கு வருவோம்.

யார் என்ன சொன்னாலும், ஏதுதான் நடந்தாலும், இன்றும் தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியாக நம் மக்களாலும் உலகத்தாராலும் தமிழரசுக் கட்சியே ஏற்கப்பட்டிருகிறது.

இக்கட்சி தந்த அழுத்தத்தால்தான் ஜனாதிபதி தேர்தலில் நிற்கும் முக்கிய மூவரின் தேர்தல் அறிக்கையில் ‘ஒற்றையாட்சி’ எனும் சொற்பிரயோகம் இல்லாமல் போயிருப்பதை நாம் கவனித்தே ஆகவேண்டும்!.

கடந்த காலங்களில் ‘ரணிலுடன்’ ‘தேனிலவு’ கொண்டாடிய தமிழரசுக்கட்சி, இம்முறை அவரை ‘விவாகரத்துச்’ செய்யக் காரணம் இல்லாமல் இல்லை. அக்காரணங்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

• ஆட்சியாளராய் இருந்தபோதும் அதற்கு முன்பும் தமிழர்க்கான உரிமை வழங்கலில் முட்டுக்கட்டை போட்டவர் இவர் என்பது ஒன்று.

• என்னதான் இருந்தாலும் தமிழர்க்குக் கைகொடுக்கக்கூடிய இந்தியாவின் ஆதரவைப் பெறாதவர் என்பது மற்றொன்று.

• தமிழர்க்கு ஒட்டுமொத்த தீங்கைச் செய்த மகிந்த குடும்பத்தாருடன் இவர் பேணி நிற்கும் உறவு இன்னொன்று.

• தமிழ்க் கட்சிகளால் இதுவரை துரோகிகளாய் ஓதப்பட்டுவந்த, ‘டக்ளஸ்’, ‘பிள்ளையான’; போன்றோர் இவரோடு இணைந்து நிற்பது இன்னொன்று.

• ‘அனுர’, ‘சஜித்’ ஆகியோருக்கு அடுத்தபடியாகத்தான் இவர் வாக்குப் பெறுவார் என்பதாய் ஓதப்படும் செய்திகளின் பாதிப்பு வேறொன்று.

மேற் காரணங்களால், ‘ரணிலுடன்’ இணைந்து செயற்பட முடியாத நிலையில் தான் தமிழரசுக்கட்சி,’சஜித்திற்கு’ ஆதரவு வழங்க முன் வந்திருக்கிறது.

அடுத்து, இம்முறை வெற்றிக்கனிக்கு மிக அருகில் இருப்பதாகச் சொல்லப்படும் ஜே.வி.பி. அணி பற்றியும் நாம் சிந்திக்கவேண்டும்.

ஜே.வி.பி.யின் தேர்தல் கூட்டங்களில் பெருமளவாய்க் கூடுகிற மக்களைக்காண, சிங்கள மக்கள் ஜே.வி.பி.க்கு சார்பாக இம்முறை கிளர்ந்தெழுந்திருப்பதாகவே தோன்றுகிறது.

அக்கட்சியின் தலைவர் ‘அனுர’, வடக்கு கிழக்குத் தமிழர்களின் ஆதரவை பெரிதும் வேண்டி நிற்கிறார் எனத் தெரிகிறது.

தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான சுமந்திரனோடு தான் வைத்திருக்கும் நெருங்கிய உறவால் அக்கட்;சியின் ஆதரவு தனக்குக் கிடைக்கும் என அவர் நம்பியிருந்தார் ஆனால் அது நடக்கவில்லை!

அண்மையில் யாழ் சென்ற ‘ரணில்’ யாழில் ‘அனுர’ பேசிய பேச்சின் ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டி தமிழ் மக்களுக்கு எதிராக அவர் பேசினார் என்றும், அதனால் ‘அனுர’,யாழ். மக்களிடம் மன்னிப்புக்கோரவேண்டும் என்றும் பகிரங்கமாய் ஓர் அறிக்கை விட்டார்.

தேர்தல் களத்தில் ‘அனுர’விற்கு ஆதரவுக் கரம் நீட்ட முடியாவிட்டாலும் ‘ரணிலின்’ அந்த அறிக்கையை மறுத்து ‘அனுர’ பேசிய பேச்சு, தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல என்று தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தரான சுமந்திரன் துணிந்து ஓர் அறிக்கையை விட்டு அதன் மூலம் ‘அனுரவின்’ அன்பை சம்பாதித்துக் கொண்டார்.

அவ்வறிக்கை புத்திசாலித்தனமானது.

ஒருவேளை ‘அனுர’ அணி வெற்றி பெற்றால், அவர்களுடன் கரம் கொடுத்து தொடர்பு பேண அவ்வறிக்கை பயன்படும் என சுமந்திரன் நினைத்திருப்பார்போலும்.

அந்த ராஜ தந்திரத்தை அவதானிகள் பாராட்டுகிறார்கள்.

‘அநுரவின்’ மேல் அன்பு காட்டிய போதும், அக்கட்சியை நீக்கி,’சஜித்துக்கே’ ஆதரவு வழங்குவதென அறிவித்த தமிழரசுக் கட்சியின் மதிநுட்பமும் பாராட்டத்தக்கதேயாம்.

என்னவோ, ஏதோ தமிழர்களின் காவலனாய்க் கருதப்படும் இந்தியாவின் ஆதரவை அநுர இழந்து நிற்கிறார் என்பதும், அவர் வென்றால்கூட பொது உடைமைத் தத்துவத்தைப் பாதையாய்க்கொண்ட’அனுரவை’ மேற்கு நாடுகள் ஒருக்காலும் வளர விடாது என்பதும் காரணங்களாக ‘அனுரவோடு’ இணைந்தால், தமிழருக்குப் பயன்வராது எனக்கருதியே அவர்களையும் தமிழரசுக் கட்சி கைழுவி விட்டது.

‘சஜித்தின்’ நிலமை என்னவென்றால் அவருக்கும் பெரும்பான்மை மக்களின் ஆதரவு, இம்முறை நிறைந்திருப்பதாகவே சொல்லப்படுகிறது.

சென்றமுறை ஜனாதிபதித் தேர்தலில் நூலிழையில் தன் வெற்றியை இழந்தவர் அவர்.

மக்கள் கிளர்ச்சி எழுந்தபோது, அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிய ரணிலின் மீது ஆத்திரம் அடைந்திருக்கும் சிங்கள இளைஞர்கள பலர், இம்முறை ‘சஜித்திற்கு’ ஆதரவளிக்க வாய்ப்பிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் இந்தியாவும் இம்முறை ‘சஜித்தின்’ வெற்றியை எதிர்பார்த்து செயல்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

தன் கையில் ஆட்சிப்பலம் இருந்தபோது, தமிழருக்காக எதுவும் செய்யாததுமட்டுமன்றி
தமிழர்களுக்கெதிராக நடந்த சில செயற்பாடுகளை,’ரணில்’ கண்டும் காணாமலும் இருந்தார்.

அதனால் தமிழர்களுக்கு அவர் மீது எழுந்த வெறுப்பு ‘சஜித்தின்’மீதான விருப்பாய் மாறியிருக்கிறது.

‘கொரோனா’க் காலத்தில் இஸ்லாமியர்களின் சடலங்களை அவர்களின் மதக்கட்டுப்பாட்டை மீறிக் கொண்டு சென்று, தகனம் செய்த ‘மகிந்த’, ‘கோத்தபாய’ குடும்பத்தினருடன் இன்றும் கைகோர்த்து நிற்கும் ‘ரணிலின்’ செயலால் இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் வெறுப்பும் ‘சஜித்திற்கான’ ஆதரவாக மாறி இருப்பது உண்மையே!

இப்படி முஸ்லிம்கள், தமிழர்கள் என சிறுபான்மைக்குள் பெரும்பான்மையாய் இருக்கிற சில கட்சிகள் இம்முறை ‘சஜித்துக்கு’ ‘முண்டு’ கொடுக்க முன்வந்திருக்கின்றன.

இவையெல்லாம் ஒன்றிணைவதால் ‘சஜித்துக்கான’ வெற்றி வாய்ப்பும் நெருங்கி வருவதாகத் தோன்றுகிறது.

இந்தக் கணக்குகளைப் போட்டுப் பார்த்துத்தான் தமிழரசுக்கட்சி ‘சஜித்தை’ ஆதரிப்பதென முடிவு செய்திருக்கிறது.

அம்முடிவு சரியானதே!

ஒருவேளை இவையெல்லாவற்றையும் மீறி’ரணிலோ’, ‘அநுரவோ’ வெற்றி பெற்றால் அதனை எதிர்கொள்ளும் விதத்தினையும் தமிழரசுக்கட்சி இப்போதே திட்டமிட்டுக் கொள்ளல்வேண்டும்.

சகோதரர் ‘அரியநேந்திரன்’ அவர்களே! மீண்டும் உங்களிடம் வருகிறேன்.

மேற்சொன்னவை பலராலும் போடப்படும் தேர்தல் கணக்குகள் இவற்றையெல்லாம் நீங்கள் சிந்திப்பதாய்த் தெரியவில்லை.

உரிமைநோக்கிய தமிழர்களின் ஒற்றுமையைக் காட்டுவதாய் மற்றவர்களால் தள்ளப்பட்டு, தேர்தல் ‘கு(க)ளத்தில’; குதித்துள்ளீர்கள்.

நீங்களும், உங்களைத் தள்ளிவிட்டவர்ளும் ஆழச் சிந்தித்ததாய்த் தெரியவில்லை.

அக்குளததினுள்; ‘ஆழ’ சிந்திப்பதாகவே தெரிகிறது.

சென்றமுறை வடக்கில் அதிகூடிய வாக்குப் பெற்று ‘அங்கஜன்’ வென்றதையும், கிழக்கில் சிறைச்சாலையில் இருந்தபடி அதிகூடிய வாக்குப் பெற்று ‘பிள்ளையான்’ வென்றதையும் நீங்கள் எல்லோரும் மறந்து போனீர்கள்.

அதுமட்டுமல்லாமல் வடக்கில் ‘டக்ளஸ்க்குக்கென’ குறிப்பிட்ட வாக்குகள் இருப்பது நிஜம்.

அதுபோலவே ‘யு.என்.பி.’ சார்பாக வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்ற ‘விஜயகலாவிற்கும்’ குறிப்பிட்ட அளவான வாக்குகள் இருக்கவே செய்கின்றன

தமிழரசுக் கட்சி ‘சஜித்தை’ ஆதரிப்பதென முடிவு செய்திருப்பதால், அக்கட்சியினுடைய ஆதரவாளர்களின் பெரும்பான்மை வாக்குகள் ‘சஜித்’ அணியைச் சாரப்போகின்றது.

அது தவிர, எஞ்சிய வாக்குகளேனும் உங்களுக்குமுழுமையாய்க் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்.

நண்பரே!இதை நான் சொல்வதற்காக என் மேல் தயைகூர்ந்து கோபம் கொள்ளாதீர்கள்.

உங்களுக்கென தனிப்பட்ட ஆதரவாளர்கள் தொகை இருப்பதாய்த் தெரியவில்லை.

அதுமட்டுமன்றி, பேச்சாலோ செயலாலோ தோற்றத்தாலோ மக்களை ஈர்க்கும் இலட்சணமும் உங்களிடம் இல்லை என்றே தோன்றுகிறது.

இது யதார்த்த உண்மை.

இந்நிலையில் தமிழரின் உரிமைவேண்டிய ஒருமித்த குரலை காட்டப்புறப்பட்டு, கடைசியில் தமிழர்கள் உரிமை வேண்டி நிற்கவில்லை என்று உலகிற்கு அறிவிக்க வழிசெய்திருக்கிறீர்கள் என்றுதான் நினைக்கிறேன்.

வீணாக ‘தடி கொடுத்து அடிவாங்கிய’ நிலைதான் ஏற்படப்போகிறது.

வரலாற்றுச் சாதனையாளராக நினைத்து, தேர்தலில் குதித்த நீங்கள் கடைசியில், வரலாற்றுப் பழி ஏந்தி நிற்கப்போகிறீர்கள் போல.

என்னவோ? இடர் சூழ்ந்து நிற்கும் தமிழ் இனத்தையும் அப்பாவியான உங்களையும் கடவுள் காக்கட்டும் என பிரார்த்தித்து நிறைவு செய்கிறேன்.

‘இன்பமே எந்நாளும் துன்பமில்லை’

அன்பன்,

இ.ஜெயராஜ்

http://www.uharam.com/

About editor 3124 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply