செப்தெம்பர் 21, 2024 இல் நடைபெற இருக்கும் சனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமாதாசா அவர்களுக்கு வாக்களியுங்கள்!
நக்கீரன்
இலங்கைத் தமிழரசுக் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா அவர்களை ஆதரிப்பது என்ற முடிவை முழுமனதுடன் வரவேற்கிறேன். தமிழரசுக் கட்சியின் மத்திய குழு ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, சுயேட்சை வேட்பாளர் இரணில் விக்கிரமசிங்க ஆகியவற்றின் தேர்தல் அறிக்கைகளைப் ஆராய்ந்து பார்த்த பின்னரே இலங்கைத் தமிழரசுக் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சஜித் பிரேமதாசா அவர்களுக்கு ஆதரவு வழங்கும் முடிவை எடுத்துள்ளது.
மகிந்த இராசபக்ச அவர்களது தமிழின விரோத குடும்ப ஆட்சியை அகற்றவே 2010 இல் சரத் பொன்சேகா, 2015 இல் மயித்திரிபால சிறிசேனா, 2019 இல் சஜித் பிரேமதாசா போன்றோரை தமிழரசுக் கட்சி நிபந்தனைகளோடு ஆதரித்து வந்திருக்கிறது. 2010 மற்றும் 2019 இல் தமிழரசுக் கட்சி ஆதரித்த சனாதிபதி வேட்பாளர்கள் தோல்வி அடைந்தாலும் 2015 இல் மயித்திரிபால சிறிசேனா வெற்றி பெற்றார்.
செப்தெப்பர் 21 இல் நடைபெறும் சனாதிபதி தேர்தல் களம் முற்றிலும் மாறுபட்டும் வேறுபட்டும் காணப்படுகிறது.
(1) இம்முறை தேர்தல் களத்தில் இனவாதம் தலைதூக்கவில்லை.
(2) தமிழ்மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பாக மூன்று முக்கிய கட்சிகளும் ஏறக்குறைய ஒரே தீர்வை முன்வைத்துள்ளன.
(3) இதுவரை காலமும் இன – மத – போரிய அரசியல் மூலம் சிங்கள மக்களை உசுப்பேத்தி ஆட்சியைக் கைப்பற்றிய பொது சன முன்னணி தனது செல்வாக்கை இழந்துள்ளது. அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிடும் நாமல் இராசபக்ச கருத்துக் கணிப்பில் நாலாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். இது இராசபக்ச குடும்பத்தின் அரசியல் செல்வாக்கு தேய்ந்து போனதைக் காட்டுகிறது.
(4) மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
இலங்கை அரசியலில் புரையோடிப் போன ஊழலை ஒழித்துக் கட்டி சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் அரசியல் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளார்கள். எடுத்துக் காட்டாக 2019 இல் நடந்த சனாதிபதி தேர்தலில் 418,553 வாக்குகளை (3.16 விழுக்காடு) எடுத்த தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுர குமர திசநாயக்க இம்முறை கருத்துக் கணிப்பில் முதலிடத்தில் இருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது.
இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணம் 2022 இல் தென்னிலங்கையில் வெடித்த அறகாலய போராட்டம்தான். அந்தப் போராட்டத்தின் போது இராசபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக இன – மத – மொழி வேற்றுமைகளைக் கடந்து காலிமுகத் திடலில் தீவிரமாக மக்கள் போராடினார்கள். அதனால் கோட்டபாய இராசபக்ச மற்றும் மகிந்த இராசபக்ச இருவரும் பதவிகளைத் துறக்க நேரிட்டது.
இன்னொரு காரணம் சிறந்த இலங்கைக்கான பவுத்த சங்கம். அது வெளியிட்ட இமாலயப் பிரகடனத்தைத் தொடர்ந்து இலங்கையின் 25 மாவட்டங்களிலும் மக்களுக்கு இடையே உள்ள இன, மொழி, மத வேற்றுமையைக் கடந்து எல்லோரையும் ஒன்று திரட்டினார்கள்.
முதலில் ஓகஸ்ட் 26 தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க ‘வளமான தேசம், அழகான வாழ்க்கை’ என்ற தலைப்பில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அடுத்து ஓகஸ்ட் 29 சனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘இரணிலால் முடியும்’ என்ற தலைப்பிலும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ‘சகலருக்கும் வெற்றி‘ என்ற தலைப்பிலும் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர்.
புதிய அரசியலமைப்பு மற்றும் தேசிய இனநெருக்கடியுடன் தொடர்புடைய சிக்கல்கள் குறித்து மூன்று தலைவர்களும் தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். தேசிய இனநெருக்கடியுடன் தொடர்புடைய சிக்கல்களைப் பொறுத்தவரை, மூன்று தலைவர்களும் பெரும்பாலும் ஒரேவிதமான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தப்படுத்தியிருப்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சமாகும்.
இந்த அறிக்கைகளின் அடிப்படையில் இரணில் விக்கிரமசிங்க 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பரவலாக்கப்படும் என்று கூறியிருக்கிறார். மாகாண சபைகளிடம் இருந்து மத்திய அரசாங்கம் திரும்பப் பெற்றுக்கொண்ட அதிகாரங்கள் மீண்டும் மாகாணசபைகளுக்கு கொடுக்கப்படும் என்றும் மாகாணசபைகளுக்கான காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் தீர்மானிக்கும் பொறுப்பு புதிய நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் சனாதிபதி இரணில் குறிப்பிட்டிருக்கிறார்.
தேசிய நல்லிணக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கும் சனாதிபதி உண்மை கண்டறிதல் மற்றும் நல்லிணக்கச் சட்டம் நிறைவேற்றப்படுவதுடன் காணாமல் போனோர் தொடர்பான நவாஸ் ஆணைக்குழுவின் அறிக்கையும் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார்.
யூலை 2022 இல் சனாதிபதியாக இரணில் பதவி ஏற்றுக் கொண்ட பின்னர் பெப்ரவரி 04,2023 சுதந்திரத்துக்கு முன்னர் 13ஏ சட்ட திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப் படும் என சூளுரைத்தார். ஆனால் இரண்டு ஆண்டுகளாக அதனை அவர் செய்யவில்லை. அவர் மீதுள்ள நம்பகத்தன்மை கேள்விக்கு உள்ளாக்கப் பட்டுள்ளது. அவரை நம்புவதற்கில்லை.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கையைப் பொறுத்தளவில் 13ஏ சட்ட திருத்தப்பற்றி நேரிடையாக எதுவும் சொல்லப்படவில்லை. தாங்கள் பதவிக்கு வந்தால் 2015 – 2019 புதிய அரசியலமைப்பு ஒன்றினை தயாரிப்பதற்காக கடைப்பிடிக்கப்பட்ட செயற்பாங்கினை துரிதமாக நிறைவு செய்து சமத்துவம் மற்றும் சனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரே நாட்டிற்குள் அனைத்து மக்களும் ஒன்றாக வாழ வழி வகுக்கப்படும் எனக் கூறுகிறது. அதாவது சமூக நீதி அரசியலை முன்னெடுப்பதுமட்டும் அல்லாமல் இனவாத அரசியலை நிராகரிக்கிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் பிரேமதாச மதத்தலைவர்கள், பாராளுமன்ற அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து புதிய அரசியலமைப்பு ஒன்று கொண்டுவரப்படும் என்றும் தற்போதைய அரசியல் முறைமையை நாடாளுமன்ற முறைமைக்கு மாற்றுவதுடன் ஒரே நாட்டின் கீழ் 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் கூடுதல்பட்ச அதிகாரப்பரவலாக்கம் உறுதிசெய்யப்படும் என்றும் கூறுகிறார்.
ஆகையால் சனாதிபதி தேர்தலில் யார்வென்று சனாதிபதியாக வந்தாலும் தேசிய இனச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதில் ஒரே நிலைப்பாட்டில் இருப்பார்கள் என நம்பலாம்.
புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் வரை 13 வது திருத்தம் உட்பட தற்போதைய அரசியலமைப்பு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீளப்பெறப்படமாட்டாது. அதற்கு பதிலாக மாகாண மட்டத்தில் அபிவிருத்திப் பணிகள் பலப்படுத்தப்படும் என்று சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்திருக்கிறார். மாகாண சபைகளுக்கான தேர்தல் 6 மாதங்களுக்குள் நடைபெறும் எனவும் வாக்குறுதி அளித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கையில் காணப்பட்ட இந்த வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே சனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வழக்கத்துக்கு மாறாக இந்தத் தேர்தல் மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது. எந்த வேட்பாளருக்கும் 50+1 வாக்குகள் கிடைக்க மாட்டாது. எனவே தமிழ்மக்களுடைய பேரம் பேசும் சக்தி முன்னெப்போதையும் விட இந்தத் தேர்தலில் அதிகரித்துள்ளது. இந்தத் தேர்தல் தமிழ்மக்களின் அரசியல் வாழ்வையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப் போகிறது என்பதை தமிழ்மக்கள் உணரவேண்டும்.
எனவே தமிழ்மக்களுடைய ஒற்றுமையை குலைக்கும் பொருட்டும் அவர்களுடைய பலத்தைக் குறைக்கும் பொருட்டும் மக்கள் “தேசியம்” “திரட்சி” என்ற போர்வையில் தமிழ்ப் பொது வேட்பாளரை தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு களம் இறங்கியுள்ளது. தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட பலர் இதில் இடம் பிடித்துள்ளார்கள். தமிழினத்தின் ஒற்றுமையை இவர்கள் உளமார விரும்பியிருந்தால் தமிழரசுக் கட்சியுடன் பேசியிருக்க வேண்டும். அதை விடுத்து தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பா. அரியநேத்திரனை கடத்தி வந்துள்ளார்கள்.
தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் இவர்கள் சர்வதேசத்துக்கும் தென்னிலங்கைக்கும் ஒரு செய்தி சொல்லப் போகிறார்களாம். தமிழ்மக்கள் இனிமேலும் தென்னிலங்கை அரசியல்வாதிகளை நம்பப் போவதில்லை அவர்கள் தமிழ்மக்களை ஏமாற்றிவிட்டார்கள் என்ற செய்திதான் அது.
சர்வதேசத்துக்கு கடந்த பல சகாப்தங்களாக அற வழியிலும் மறவழியிலும் அந்தச் செய்தி சொல்லப்பட்டுத்தான் வந்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் 2012 ஆம் தொடக்கம் இனச் சிக்கல், போர்க் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், பொறுப்புக் கூறல், மீள்நல்லிணக்கம் போன்றவை பேசுபொருளாக மாறி விவாதிக்கப்பட்டு வருகிறது. புதிதாக சர்வதேசத்துக்குச் சொல்ல ஒன்றும் இல்லை.
1977 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் மூலமும், 2004ஆம் ஆண்டு ததேகூ இல் போட்டியிட்டு வென்ற 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவும் அவ்வாறான ஒற்றுமை வெளிப்படுத்தப்பட்டது.
இவர்கள் சர்வதேசம் என எதைக் குறிப்பிடுகிறார்கள்? சர்வதேச நாடுகளில் அமெரிக்கா, இந்த இரண்டு நாடுகள்தான் முக்கியமானவை. இந்தியா தெற்காசியாவின் வல்லரசு. அதனை மீறி அமெரிக்கா கூட இலங்கைச் சிக்கலில் தலையிடாது.
இந்தியா, இலங்கைத் தமிழ் கட்சிகள் தென்னிலங்ககைக் கட்சித் தவைர்களுடன் தமிழ்மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் பற்றி பேசுமாறு கேட்கிறது. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் கடந்த மாத இறுதியில் கொழும்புக்கு வருகைதந்த போது தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் சனாதிபதித்தேர்தல் நிலைவரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
தமிழ் மக்களின் வாக்கு விழுக்காடு குறித்தும் கேட்டறிந்த அஜித் டோவல், இம்முறை சசனாதிபதித் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை பயனுள்ள முறையில் பயன்படுத்துவதே சிறந்தது என ஆலோசனை வழங்கினார்.
அத்தோடு தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் எத்தகைய தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டும் என்று தான் கூறப்போவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், “இருப்பினும் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்த தீர்மானமாக அமையும்” என்று தெரிவித்தார். இருப்பினும் இத்தகைய தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகள் சனநாயகத்தில் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பது குறித்து சிந்தித்து செயலாற்றவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இன்று, இந்தியா இலங்கையில் நடைபெறும் சனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசா வென்று ஆட்சியில் அமர வேண்டும் என விரும்புகிறது. அதற்கான காய் நகர்த்தல்களையும் ஓசைப்படாமல் செய்து வருகிறது. இன்றைய உலக ஒழுங்கில் தமிழர் தரப்பு தென்னிலங்கை அரசியல் தலைவர்களுடன் பேசித்தான் இனச் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும். சர்வதேசம் நேரடியாகத் தலையிடாது. இப்படியான பூகோள அரசியல் மூலோபாயங்களை அரியநேத்திரன் அவர்களும் அவருக்குப் பின்னால் நிற்கும் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பும் விளங்கிக் கொள்ள மறுக்கிறது. வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைக்கப் பார்க்கிறார்கள். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கிறார்கள். குறும் தமிழ்த் தேசிய வாதம் பேசி எல்லாவற்றையும் குழப்புகிறார்கள்.
தமிழ்ப் பொது வேட்பாளருக்குப் போடும் வாக்குகள் கடலில் புளியைக் கரைத்த மாதிரியானவை. அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது. வட கிழக்கில் வாழும் தமிழர்களின் குடித்தொகை 22,20,311 இலட்சம் ஆகும். இதில் வாக்களிக்கப் பதிவு செய்யப்பட்டவர்களது தொகை 13,28,844 ஆகும். 2019 ஆம் நடந்த சனாதிபதி தேர்தலில் வாக்களித்தவர்களது விழுக்காட்டின் அடிப்படையில் இம்முறை வாக்களிப்போர் தொகை 9,84, 518 ஆகும். இதில் தமிழ்ப் பொது வேட்பாளர் சர்வதேசத்துக்கும் தென்னிலங்கைக்கும் ஏதாவது செய்தி சொல்ல வேண்டும் என்றால் விழுகிற வாக்கில் பாதி 4,92,259 ஆவது விழ வேண்டும். ஆனால் கூடிய பட்சம் 20 விழுக்காடு வாக்குகளுக்கு மேல் விழாது. அப்படியென்றால் தேர்தல் முடிவு சொல்லுகிற செய்தி என்ன? தமிழ்மக்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை தமிழ்மக்கள் திருப்தியோடு வாழ்கிறார்கள் என்பதுதான். இதற்குத்தான் அரியநேத்திரன் ஆசைப்படுகிறாரா?
மீண்டும் சொல்கிறோம் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு போடுகிற ஒவ்வொரு வாக்கும் வீணான வாக்கு ஆகும். யானை தனது தலையில் மண்ணை அள்ளிப் போட்டது போன்றதற்கு ஒப்பாகும். தமிழ்மக்கள் தங்கள் பொன்னான வாக்குகளை மண்ணாக்கக் கூடாது.
Leave a Reply
You must be logged in to post a comment.