இரண்டாவது, மூன்றாவது விருப்பு வாக்குகளைச் செலுத்துவது எப்படி?
நக்கீரன்
எதிர்வரும் செப்தெம்பர் 21 இல் நடைபெற இருக்கும் சனாதிபதி தேர்தலில் மொத்தம் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இலங்கையின் சனாதிபதி தேர்தல் வரலாற்றில் இது ஒரு புதிய சாதனை. அதுமட்டுமல்ல, இதுவரை காலமும் – 1982 தொடங்கி – சனாதிபதி தேர்தலில் இருமுனைப் போட்டிதான் நிலவியது. இம்முறை மும்முனை போட்டி நிலவுகிறது. இதனால் முதல் சுற்று வாக்கு ஏண்ணிக்கையில் ஒருவர் 50+1 விழுக்காடு வாக்குகளைப் பெறமுடியாது. இதனால் வாக்காளர்கள் போடும் விருப்பு வாக்குகளை எண்ண வேண்டி நேரிடும். தேர்தல் முடிவு அறிவிக்க வழக்கமான நேரத்தை விட இம்முறை அதிக நேரம் எடுக்கும். இம்முறை விருப்பு வாக்குகள் செலுத்த வேண்டியிருப்பதால் செல்லுபடியற்ற வாக்குகளின் எண்ணிக்கையும் விழுக்காடும் அதிகரிக்கக் கூடும்.
2019 சனாதிபதி தேர்தல் முடிவு
செல்லுபடியான வாக்குகள் | 13,252,499 | 98.99 |
---|---|---|
செல்லுபடியற்ற/வெற்று வாக்குகள் | 135,452 | 1.01 |
மொத்த வாக்குகள் | 13,387,951 | 100.00 |
செலுத்தப்பட்ட வாக்குகள் | 15,992,096 | 83.72 |
வாக்குச் சீட்டுக்கள் எண்ணப்படும் போது பின்வருவன நிராகரிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது:
• எந்தவொரு அரசியல் கட்சிக்கோ அல்லது சுயேச்சைக் குழுவுக்கோ எதிராக வாக்களிக்கப் படாமல் இருப்பது.
• ஒன்றுக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்து இருப்பது.
• ஒன்றுக்கு மேற்பட்ட சுயேச்சைக் குழுக்களுக்கு வாக்களித்து இருபது.
• ஒன்றுக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சுயேச்சைக் குழுக்களுக்கு அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அரசியல் கட்சி மற்றும் சுயேச்சைக் குழுக்களின் கூட்டிணைவுக்கு வாக்குகள் குறிக்கப்பட்டு இருப்பது.
• வாக்காளரை அடையாளம் காணக்கூடிய ஏதேனும் எழுதப்பட்ட அல்லது குறிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள்.
• வாக்காளர் எந்த அரசியல் கட்சிக்கு அல்லது சுயேட்சைக் குழுவுக்கு வாக்களித்துள்ளார் என்பதைத் தீர்மானிப்பது நிச்சயமற்ற தன்மை இருப்பின்
இரண்டாவது மற்றும் மூன்றாவது வாக்குகளை எப்படிச் சரியாகப் போடுவது எப்படி?
2024 சனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. ஏற்கனவே கூறியவாறு முதல் சுற்றில் யாரும் 50+1 விழுக்காடு வாக்குகளைப் பெறமுடியாது போகும். எனவே விருப்பு வாக்குகளே தேர்தலில் முதல், இரண்டு இடத்துக்கு வரும் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கப் போகிறது.
இதன் காரணமாக, சனாதிபதித் தேர்தலில் வெற்றியாளரைத் தெரிவு செய்வதற்கு, இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணுதல் அல்லது ‘இரண்டாம் சுற்று’ வாக்குகளை எண்ணுதல் பின்பற்றப்பட வேண்டியிருக்கும்.
மூன்று அல்லது நான்கு முக்கிய வேட்பாளர்கள் இருக்கும்போது, இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கைக்குச் செல்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. இது மீள் வாக்கெடுப்பு அல்ல, இரண்டு முக்கிய வேட்பாளர்களுக்கு வாக்களித்தவர்களைத் தவிர்த்து ஏனைய வேட்பாளர்களுக்கு வாக்களித்தவர்களின் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளின் மீள் எண்ணிக்கை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது எப்படி?
வாக்காளர்கள் தமக்கு விருப்பமான வேட்பாளரின் சின்னத்தின் முன்னால் தமது விருப்பத்தை 1,2, 3 எனக் குறிப்பிட வேண்டும்.
முதல் சுற்றில், ஒரு வேட்பாளர் மற்றவரை கணிசமான விழுக்காடு வாக்குகளில், 50% க்கு நெருக்கமாக முன்னணியில் இருந்தால், இரண்டாவது விருப்பம் எண்ணப்பட்டாலும் கூட, அந்த வேட்பாளர் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. எவ்வாறாயினும், இரண்டு வேட்பாளர்கள் முதல் சுற்றில் சமமான விழுக்காடு வாக்குகளைப் பெற்றால் (எ.கா., 38% மற்றும் 40%), மீதமுள்ள 22% வாக்காளர்களை அவர்களின் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகள் மூலம் கணக்கிடுவது தீர்க்கமானதாக இருக்கும்.
எனவே, முதலில் உங்கள் வாக்கை எவ்வாறு சரியாக செலுத்துவது என்பது பற்றிப் பார்ப்போம்.
நீங்கள் ஒரு வேட்பாளருக்கு மட்டுமே வாக்களிப்பதாக இருந்தால், வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்திற்கு முன்னால் ‘1’ அல்லது ‘X’ குறியிட வேண்டும். உங்கள் விருப்பத்தின் அடிப்படையில், நீங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது வேட்பாளருக்கும் வாக்களிக்கலாம். நீங்கள் இரண்டு வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிப்பதாக இருந்தால், குறிப்பிட்ட வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்தின் முன்னால் ‘1’ மற்றும் ‘2’ குறிக்கப்பட வேண்டும்.
நீங்கள் மூன்று வேட்பாளர்களுக்கு வாக்களிக்கிறீர்கள் என்றால், நீங்கள் விரும்பும் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களுக்கு முன்னால் ‘1’, ‘2’ மற்றும் ‘3’ ஆகியவற்றைக் குறிக்க வேண்டும்.
ஆனால் உங்கள் விருப்பம் ஒன்றுக்கு மேற்பட்டதாக இருந்தால், மூன்று வேட்பாளர்களுக்கும் நீங்கள் ‘எக்ஸ்’ குறியிட்டால், உங்கள் வாக்கு செல்லாததாகிவிடும். வாக்குச் சீட்டில் ஒரு முறைக்கு மேல் ‘எக்ஸ்’ குறியிட முடியாது. முதல் விருப்பத்திற்கு ‘X’ குறியிட்டு, பின்னர் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்திற்கு ‘2’ மற்றும் ‘3’ குறியிட்டால் உங்கள் வாக்கு செல்லுபடி அற்றதாகிவிடும்.
முதல் விருப்பத்திற்கு ‘1’ குறியிட்டு, இரண்டாவது அல்லது மூன்றாவது விருப்பத்திற்கு ‘X’ குறியிட்டால், உங்கள் வாக்கும் செல்லுபடியாகாது. மேலும், ‘எக்ஸ்’ தவிர வேறு சின்னங்களைப் பயன்படுத்தினால், உங்கள் வாக்குச் செல்லாது.
இரண்டாவது விருப்பத்தை எவ்வாறு எண்ணுவது?
சனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் போது வாக்காளர்கள் தமது விருப்ப வரிசைக்கேற்ப ‘1’, ‘2’, ‘3’ ஆகிய எண்களைப் பயன்படுத்த முடியும். ஒரு வேட்பாளருக்கு மட்டுமே வாக்களித்தால், ‘X’ புள்ளடியைப் பயன்படுத்தலாம்.A, B, C, D, மற்றும் E ஆகிய ஐந்து வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்றும், செல்லுபடியான வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 100 என்றும் வைத்துக்கொள்வோம். பின்னர், ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை பின்வருமாறு என்று வைத்துக்கொள்வோம். A = 40, B = 35, C = 15, D = 6, E = 4. எனவே, முதல் சுற்றின் கணக்கீட்டிற்குப் பிறகு, இரண்டாவது சுற்றில் போட்டி A மற்றும் B இடையே மட்டுமே உள்ளது, அவர்கள் முறையே முதல் சுற்றில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தைப் பிடித்தனர். மீதமுள்ள மூன்று வேட்பாளர்கள், சி, டி மற்றும் இ, போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவர்.
இரண்டாவது சுற்றில், முதல் மற்றும் இரண்டாவது இடங்களைப் பெற்ற A மற்றும் B வாக்களிப்பு சீட்டுக்களில் வாக்களிக்கப்பட்ட விருப்பு வாக்குகள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது. 15 வாக்குகளைப் பெற்ற C யின் அனைத்து வாக்குச் சீட்டுக்களும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. C க்கு மட்டும் வாக்களித்த வாக்குச் சீட்டுக்கள் இருந்தால், அந்த சீட்டுக்கள் ஒதுக்கி வைக்கப்படும். அந்த வாக்காளர்கள் வேறு யாருக்கும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை என்பதால் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்.
முதலாவது விருப்பம் C இற்கு குறிக்கப்பட்டும் இரண்டாவது விருப்பம் A அல்லது B க்கு குறிக்கப்பட்டிருப்பின், A க்காக இரண்டாவது விருப்பம் கொண்ட வாக்குச் சீட்டுக்கள் A க்காக ஒதுக்கப்பட்ட பெட்டியில் வைக்கப்படும், மேலும் B க்காக குறிக்கப்பட்ட வாக்களிப்பு சீட்டுக்கள் B க்காக ஒதுக்கப்பட்ட பெட்டியில் வைக்கப்படும். (அந்த வாக்குச் சீட்டுக்களில் மூன்றாவது விருப்பத்தை கருத்தில் கொள்ள வேண்டிய அவசியமில்லை)
முதல் விருப்பம் C க்கு குறிக்கப்பட்டிருந்தால், இரண்டாவது விருப்பம் D அல்லது E க்கு குறிக்கப்பட்டிருந்தால், மூன்றாவது விருப்பம் குறிக்கப்படவில்லை, அந்த வாக்குச் சீட்டுக்கள் ஒதுக்கி வைக்கப்படும். ஆனால் இரண்டாவது விருப்பம் D அல்லது E க்கு மற்றும் மூன்றாவது விருப்பம் A அல்லது B க்கு குறிக்கப்பட்டிருந்தாலும், அந்த வாக்குச் சீட்டுக்கள் A மற்றும் B க்கு ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் வைக்கப்படுகின்றன.
இரண்டாவது விருப்பம் D க்கு குறிக்கப்படும்போது, மூன்றாவது விருப்பம் E க்கு குறிக்கப்படும்போது, அவை ஒதுக்கி வைக்கப்படுகின்றன, ஏனெனில் E போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார். இரண்டாவது விருப்பம் E க்கு குறிக்கப்பட்டால், மூன்றாவது விருப்பம் D க்கு குறிக்கப்பட்டால், அவையும் ஒதுக்கி வைக்கப்படும். இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகள் A அல்லது B க்கு இல்லையென்றால், அந்த வாக்குச் சீட்டுக்கள் ஒதுக்கி வைக்கப்படும்.
இந்த முறையின்படி, D அல்லது E இரண்டாவது அல்லது மூன்றாவது விருப்பத்தைப் பெற்ற வாக்குச் சீட்டுக்கள் ஒதுக்கி வைக்கப்படுகின்றன. மேலும் இரண்டாவது அல்லது மூன்றாவது விருப்பம் A அல்லது B ஆல் பெறப்பட்டால், அது அந்தந்த எண்ணிக்கையுடன் சேர்க்கப்படும். இந்த கணக்கீடு முதல் சுற்றில் ஒன்று மற்றும் இரண்டு இடங்களைப் பெற்ற இரண்டு வேட்பாளர்களுக்கு இரண்டாவது அல்லது மூன்றாவது விருப்பமாக குறிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையை ஒதுக்குகிறது.
இரண்டாவது சுற்று மூலம், A மூன்று கூடுதல் வாக்குகளையும் B பத்து வாக்குகளையும் பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். பின்னர், A இன் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 43 (40 + 3), மற்றும் B இன் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 45 (35 + 10). செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 88 (43 + 45). செல்லுபடியான வாக்குகளில் பாதிக்கும் மேற்பட்ட வாக்குகளை (88/2 = 44) B பெறுவதால் B தேர்தலில் வெற்றி பெறுகிறார்.
செல்லுபடியான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை 100 ஆக கருதி 50 க்கு மேல் பெற வேண்டிய அவசியமில்லை. A எட்டு கூடுதல் வாக்குகளையும் (48) B ஐந்து (40) வாக்குகளையும் பெற்றால் A தேர்தலில் வெற்றி பெறுகிறார்.
A அல்லது B கூடுதல் வாக்குகளைப் பெறாவிட்டால் (A = 40, B = 35), A தேர்தலில் வெற்றி பெறுகிறார். இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகும், A மற்றும் B சம எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றால், தேர்தல் ஆணையம் வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்க திருவுளச் சீட்டுக் குலுக்கல் மூலம் ஒரு வேட்பாளருக்கு ஒரு வாக்கைச் சேர்க்கும். (https://srilanka.factcrescendo.com/english/political/viral-video-misrepresents-sajith-premadasas-response-to-a-question-about-not-accepting-the-presidency-in-2022-618790?)infinitescroll=1
Leave a Reply
You must be logged in to post a comment.