யாப்பில் உள்ள 13 அமுல்படுத்துவதனையும் தடுத்தால் வடக்கு கிழக்கில் வாழ தமிழர்கள் மிஞ்ச மாட்டார்கள்.
ந.லோகதயாளன்.
யாப்பில் உள்ள 13 அமுல்படுத்துவதனையும் தடுத்தால் வடக்கு கிழக்கில் வாழ தமிழர்கள் மிஞ்ச மாட்டார்கள். அப்போது சமஸ்டி கிடைத்தாலும் தமிழர்கள் இருக்காத நிலை காணப்படும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஜனாதபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்க என்ன உத்தரவாதம் தந்தார் என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சமஸ்டி அடிப்படையிலான தீர்வை வைப்பவருக்கே ஆதரவு என தமிழ் அரசுக் கட்சி கூறி வந்த நிலையில்
ஆதரவளிப்பற்கு சஜித் பிரேமதாச என்ன உத்தரவாதம் எனக் கேட்கிட்றனர்.
சஜித் தமிழ் அரசுக் கட்சிக்கு மட்டுமோ அல்லது தமிழ் கட்சிக்கு மட்டும் உறுதியளிக்கவில்லை. மாறாக நாடு முழுவதற்கும் உத்தரவாதம் அளித்துள்ளார்.
யாப்பில் உள்ள 13ஐ முழுமையாக அமுல்படுத்துவதாக தமிழ் பேசும் அனைவருக்கும் தந்த உத்தரவாதமாக இருக்கின்றது. தேர்தலை நடாத்தி வடக்கு கிழக்கில் நின்றுபோய் உள்ள மாகாண சபை அதிகாரங்களை மக்கள் பிரதிநிதிகளிடமே கையளிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் பொருளாதார, அரசியல், கலாச்சார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதே குறிக்கோள். சமஸ்டி குறித்து பேசப்படவில்லை. இதில் இருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்வது கட்சிகளிடமே உள்ளது.
இதனைவிடுத்து சஜித் சமஸ்டிக்கு உத்தரவாதம் தந்தாரா என்பதல்ல. சமஸ்டி நாடாக மாற்ற வேண்டும் என்பதே எனதும் தனிப்பட்ட விருப்பம். எனவே 13ஐ அமுல் செய்வது என்பதே ஏனைய முன்னணி வேட்பாளர்களைவிட சிறந்த உத்தரவாதம். திடமான உறுதியான பேச்சை சஜித்தை தவிர வேறு எவரும் பேசவில்லை.
ஈழத் தமிழ் மக்களிடம் ஒன்றை கூற விரும்புகின்றேன். வடக்கு கிழக்கில் உள்ள பெரிய சவால் தமிழ் மக்களின் சணத்தொகை வீழ்ச்சியாகும் இது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும் அவர்கள் இதனை கூறுவதில்லை. மாகாண சபையை உருவாக்கி ஓரளவு ஸ்திரத்தன்மையை உருவாக்கினால் ஓரளவு இதனை கட்டுப்படுத்த முடியும்.
அதனைவிடுத்து யாப்பில் உள்ள 13 அமுல்படுத்துவதனையும் தடுத்தால் வடக்கு கிழக்கில் வாழ தமிழர்கள் மிஞ்ச மாட்டார்கள். அப்போது சமஸ்டி கிடைத்தாலும் தமிழர்கள் இருக்காத நிலை காணப்படும் என்றார்.
——————————————————————————————————————-
லசந்த விக்கிரமதுங்கவின் மகள், ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு எழுதிய கடிதம் !
திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களே,
என்னுடைய தந்தை மரணித்த நாள் தொடக்கம் வாக்குகளை சேகரிப்பதற்காக நீங்கள் அவருடைய பெயரை பயன்படுத்தி வந்துள்ளீர்கள்.
அகிம்சா விக்கிரமதுங்க
2015 ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின் போது என்னுடைய தந்தையின் கொலை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
அதனூடாக நீங்கள் நாட்டின் பிரதமர் பதவியை பெற்றுக் கொண்டீர்கள்.
நீங்கள் மைத்திரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதியாக ஆட்சிக்கு கொண்டுவந்து, ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டை உங்கள் கைக்குள் எடுத்து வந்தீர்கள்.
என்னுடைய தந்தையின் கொலைக்கு நீதி வழங்கப்படும் என்ற வாக்குறுதிகளை வழங்கிய நிலையிலேயே இவை அனைத்தையும் நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள்.
நீங்கள் பதவிக்கு வந்தவுடனேயே உங்களுடைய முன்னுரிமைகள் மாற்றமடைந்தன.
என்னுடைய தந்தையின் கொலைகாரர்கள் சட்டத்தின் முன்னால் கொண்டுவரப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு தேவையான உங்களுடைய ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கென நான் 2015 பெப்ரவரி மாதம் உங்களை அலரி மாளிகையில் சந்தித்தேன்.
அச்சந்தர்ப்பத்தில் ஏனைய ‘முன்னுரிமைகள்’ இருந்து வருவதாகவும், நீதி “லசந்த தொடர்பாக மட்டும் இருந்து வரவில்லை” என்றும் நீங்கள் கூறினீர்கள்.
அதன் பின்னர் இந்த முன்னுரிமைகள் எவை என்பதனை நான் பார்த்திருக்கிறேன்.
உங்கள் அலுவலக பிரதானியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் எடுத்துவரப்பட்ட பொலிஸ் துறை, கோட்டாபய ராஜபக்ஷவை சட்டத்தின் முன்னால் கொண்டு வரவில்லை.
எனது தந்தை ஏன் கொல்லப்பட்டார் என்பதனை நிரூபிக்கும் விடயத்தில் மிக் விமான கொள்வனவு பேரம் ஒரு நிர்ணயகரமான ஒரு பாகமாக இருந்து வருகின்றது என்ற விடயம் நிரூபணமாகியுள்ளது.
ஆனால், FCID க்குப் மிக பொறுப்பாக இருந்த அதிகாரி ஒருவர் உங்கள் கண்காணிப்பின் கீழ் மிக் விமானப்பேர புலன் விசாரணைகளை குழப்பியடித்ததுடன், கோட்டாபய ராஜபக்சவின் பெயரை அதிலிருந்து அகற்றினார்.
இது தேர்தல் காலமாக இருந்து வரும் காரணத்தினால் தற்போது நீங்கள் அவரை பகிரங்கமாக கொலைகாரர் எனக் கூறி தாக்கி வருகின்றீர்கள் (2019).
ஆனால் அவ்வாறு செய்யும் பொழுது கூட உங்கள் அலுவலகத்தின்பிரதானி சாகல ரத்னாநாயக்கவும், ஏனைய அமைச்சர்களும் அவரை போய் பார்த்து, அவரின் வீட்டில் பல மணித்தியாலங்களை செலவிடுகின்றார்கள்.
உங்களுடைய அரசாங்கம் அவருக்கு மிகவும் முறையற்ற விதத்தில் அடையாள அட்டைகள், கடவுசீட்டுக்கள் என்பவற்றை வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
உங்களுடைய சிரேஷ்ட உதவியாளரும், மருமகளுமான ஒரு பெண்மணி சமூக வலைத்தளத்தில் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரத்தை பகிரங்கமாக ஊக்குவித்து வருகின்றார்.
நீங்கள் கொலைகாரர்கள் எனக் கூறிக்கொள்ளும் நபர்களை நீங்களும், உங்களுடைய ஊழியர்களும் இந்த விதத்திலேயே நடத்தி வருகின்றீர்கள்.
எவ்வாறிருப்பினும், என்னுடைய தந்தையின் கொலை வழக்கு தொடர்பாக குற்ற விசாரணைப் பிரிவினரின் உதவி தேவைப்பட்ட பொழுது, உங்களை எந்த இடத்திலும் கண்டுபிடிக்க முடியாதிருந்தது.
இராணுவத்தினரும், புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்களும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதற்கு மறுப்புத் தெரிவித்த பொழுது நீங்கள் எங்கிருந்தீர்கள்?
கோட்டாபய ராஜபக்ச அவர்களுக்கு எதிராக மிக பல தகவல்களை தரும் முக்கிய நபர் ஒருவருக்கு பாதுகாப்பு தேவைப்படுகின்றது என்ற விடயம் உங்களிடம் தெரிவிக்கப்பட்ட பொழுது நீங்கள் என்ன செய்தீர்கள்?
என்னுடைய தந்தையின் படுகொலை தொடர்பான முதன்மை விசாரணையாளர் இன்ஸ்பெக்டர் நிஷாந்த சில்வா குற்ற விசாரணைப் பிரிவிலிருந்து தூக்கி எறியப்பட்ட போது அதை எதிர்த்து ஒரு விரலையாவது அசைக்காதிருந்தது ஏன்?
இப்பொழுது பல மாதகாலமாக சட்டமா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் திரிப்போலி கொலைக்கும்பல் சம்பந்தப்பட்ட விசாரணைகளின் குரல்வளையை பலவந்தமாக நெரித்துக் கொண்டிருக்கின்றார்.
இந்தக் குற்றச் செயல்களில் அவர்களுடைய பங்கினை மூடி மறைத்து, மிகசாதாரண சிப்பாய்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார்.
பிரகீத் எக்னெலிகொட அவர்களின் கொலை தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட முறையில் கட்டளையிட்டிருந்தார் என இரு அதிகாரிகள் வாக்குமூலம் அளித்திருக்கும் நிலையிலும் கூட, எக்னெலிகொட வழக்கிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்த சத்தியப் பிரமாணத்துடன் கூடிய மிக முக்கிய வாக்குமூலங்கள் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஒரு கேள்வி கூட கேட்கப்படவில்லை.
உபாலி தென்னக்கோனைத் தாக்கியிருந்த போதிலும், இப்பொழுது இரண்டு கனிஷ்ட தர சிப்பாய்கள் மட்டுமே அது தொடர்பான குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு வருகின்றார்கள்.
கோத்தபாயா ராஜபக்ஷவும், திரிபோலிக் கும்பலும் சுதந்திரமாக விடப்பட்டுள்ளார்கள்.
இவை தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டிய ஆட்களை அரசின் சட்டத்தின் முன்னால் நிறுத்துவதற்கு நீங்கள் எவையேனும் பயனுள்ள காரியங்களை செய்தீர்களா?
இல்லை. அதற்குப் பதிலாக உங்கள் குடும்பத்தினரும், சிரேஷ்ட ஊழியர்களும் கோட்டபாய ராஜபக்ஷவுடன் நெருக்கமான பிணைப்புக்களை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றார்கள்.
நீங்கள் ஜனாதிபதியாக வந்தால் கோட்டாபய ராஜபக்ஷ மர்மமான முறையில் அனுபவித்து வரும் தண்டனை விலக்குரிமை தொடர்ந்தும் அதே விதத்தில் இருந்து வரும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.
சாதாரண வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், இந்நாடு உங்கள் தயவிலும், உங்களுடைய புதிய நண்பர் கோட்டாபய ராஜபக்ஷவின் தயவிலும் இருந்து வந்தால், உங்களுடைய மிக பழைய நண்பரான எனது தந்தை லசந்த விக்கிரமதுங்கவுக்கு நீதி கிடைக்கும் என்பதில் ஒரு துளி கூட நம்பிக்கை இல்லை.
கோத்தபாய ராஜபக்சவால் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள், ரணில் விக்ரமசிங்கேவிற்கு 2019 ஆம் ஆண்டு எழுதிய கடிதம் இன்றைக்கும் பொருந்திப் போகின்றது.
பத்திரிகையாளர் லசந்தாவிற்கு நீதி வழங்கப்பட்டிருந்தால் கோத்தபாயா ராஜபக்ச அவர்கள் அதிகாரத்திற்கு வந்திருக்க முடியாது.
திரு ரணில் விக்ரமசிங்க எங்களுக்கு நீதி தருவார் என்றும் அவர் ஒரு இனவாதமற்ற தலைவர் என நம்பும் ஒரு சிலருக்கு ரணில் விக்ரமசிங்க அவர்களின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ள இந்த கடிதம் உதவும்.
Leave a Reply
You must be logged in to post a comment.