பொது வேட்பாளருக்குப் போடும் வாக்குகள் கடலில் கரைத்த புளி போல் வீணானது!

எங்கள் ஊரில் மூன்று கோயில்கள் இருக்கின்றன. பிள்ளையார், அம்மன், ஐயனார் என்பவைதான் அந்த மூன்று கோயில்கள். இதில் பிள்ளையார் வேதமதக் கடவுள். முதலாம் நந்திவர்மன் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்து அதன் தலைநகரமான வாதாபியை அழித்தான். சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசி தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். தொடர்ந்து 654 ஆம் ஆண்டு வரை வாதாபி பல்லவரின் வசம் இருந்தது.

முதலாம் நந்திவர்மன் படைக்கு தலைமை தாங்கியவர் பரஞ்சோதி. அவர்தான் பிள்ளையார் சிலையை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து அறிமுகப்படுத்தியவர். அதன் காரணமாகத்தான் பிள்ளையார் வாதாபி கணபதி என அழைக்கப்படுகிறார்.

சிலப்பதிகாரக் காவியத் தலைவியாகிய கண்ணகி  சோழநாட்டு காவிரிப்பூம் பட்டினத்துப் பெருவணிகன் மாநாயக்கனின் மகள்.  இவள் திருமகள் போன்ற அழகும், அழகிய பெண்கள் போற்றும் பெருங்குணச்சிறப்பும், கற்புத்திறமும் கொண்டவள். அதே காவிரிப்பூம் பட்டினத்துப் பெருவணிகன் மாசரத்துவானின்  மகன் கோவலன். இவன் கலையுணர்வும், வறியோர்க்கு உதவும் நற்பண்பும் மிக்கவன். இருவருக்கும் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட திருமணம் நடக்கிறது. ஆனால் இல்லற வாழ்க்கை நீடித்து இருக்கவில்லை. கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியுடன் வாழ்கிறான். சிறிது காலம் கழித்து மாதவியை விட்டு நீங்கி கண்ணகியிடம் வந்து சேர்கிறான். குலம் தரு வான் பொருள் குன்றம் தொலைத்த கோவலன், கண்ணகியை அழைத்துக் கொண்டு பாண்டிநாட்டில் வாணிகம் செய்யும் நோக்கோடு அங்கு செல்கிறான்.

விதி செய்த சதியால் பாண்டிய அரசனின் பட்டத்து அரசியாரின் கால்சிலம்பை கவன்று அதனை விற்க முயன்றான் எனக் குற்றம் சாட்டப்பட்டு வாளால் வெட்டுண்டு இறக்கிறான்.  கண்ணகி தனது கணவன் குற்றமற்றவன் என்பதை தனது கால்சிலம்பை உடைத்து பாண்டியன் நெடுஞ்செழியன் முன்னிலையில்  எண்பிக்கிறாள். சினம் தணியாத கண்ணகி மதுரையை எரிக்கிறாள். பின் நடந்து சென்று சேரநாட்டை அடைகிறாள். அங்கிருந்து கண்ணகி கோவலுடன் வானுலம் சேர்கிறாள். இந்தக் காட்சியைக் கண்ட குன்றக் குரவர் சேரநாட்டு மன்னன் செங்குட்டுவனிடம்  தெரிவிக்க அவன் கண்ணகிக்கு இமயமலையில் இருந்து கல்பெயர்த்து வந்து  கோயில் எழுப்புகிறான். இந்த விழாவுக்கு இலங்கை வேந்தன் முதலாம் விஜயபாகு அழைக்கப்படுகிறான். அவன்  இலங்கை திரும்பி  பத்தினி  வழிபாட்டை இலங்கையில் அறிமுகப்படுத்துகிறான்.  இன்று இலங்கையில்  இந்துக்கள் கண்ணகிக்கு கோயில் கட்டி வழிபடுகிறார்கள். சிங்கள –  பவுத்த மரபில் கண்ணகி  பத்தினி தெய்வமாக வழிபடப் படுகிறாள்.

ஐயனார் ஊர்க் காவல் தெய்வம். கண்ணகி அம்மன் கோயில், ஐயனார் கோயில் இரண்டிலும் ஆடு, கோழி பலியிடுவது வழக்கம். இதற்காக சிலர் வீடுகளில் கடாக்களை வளர்ப்பார்கள். எள்ளுப் புண்ணாக்கு, கடலை, முருங்கை இலை, பலா இலை கொடுத்து வளர்ப்பார்கள்.வேள்வியில் பலியிடப்படும் கடாக்களில் வாட்ட சாட்டமான  கடாக்களுக்கு மாலைகள் அணிவித்து மேளதாளத்தோடு பக்தர்கள் புடைசூழ  கோவிலுக்கு அழைத்துப் போவார்கள்

.பாவம் கடாக்கள். இன்னும் சிறிது நேரத்தில் தங்கள் தலைகளை வெட்டத்தான் இந்த ஆரவாரம் மாலை மரியாதை என்பது தெரியாமல் இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க  ஆடி அசைந்து தெருவில் நடந்து  செல்லும். அங்கே கோயில் பண்டாரம் ஆடுகளுக்கு திருநீறு சந்தணம், குங்குமம் பூசி மரியாதை செய்வார்.

விடிகாலையில் அந்த கடாக்களின் கால்களை ஒருவர் பிடிக்க மற்றவர் தலைப்பக்கத்தில் கட்டியிருந்த கயிற்றைப் பிடிக்க பூசாரி பெரிய மாண்டான் கத்தியால் தலைவேறு கால் வேறாக வெட்டுவார். குருதி ஆறாக ஓடும். மொத்தம் 30-40 கடாக்கள் சிவலோகம் அனுப்பப்படும். நேர்ந்துவிடப்பட்ட சேவல்களுக்கும் அதேகெதிதான்.

ஆனால் அந்தக் கொடிய வழக்கம் 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஊர் இளைஞர்கள் எடுத்த முயற்சியால் நிறுத்தப்பட்டு விட்டது. ஊரில் உள்ள பெரிசுகள் அம்மாளாச்சி கண்ணைப் பிடுங்குவார், அம்மை நோய் பரவும், குழந்தைகள் சாகும் என்று சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் பலியிடும் கொடிய பழக்கம் ஒழிக்கப்பட்டது. அதனால் எந்தப் பாதிப்பும் ஊரில் ஏற்றபடவில்லை.

மனிதன் நாகரிகம் அடையாத காலத்தில் அச்சம் காரணமாக கடவுளர்க்கு இப்படி மிருகங்களைப் பலியிடும் வழக்கம் பல பண்பாட்டுக்களில் காணப்பட்டன. சரி ஏன் இந்தக் கதை இப்போது என்று நீங்கள் கடாவுவது தெரிகிறது.

தமிழ்ப் பொது வேட்பாளர் மக்களிடம் விடுத்த வேண்டுகோள்! - Eelanadu

பொதுவேட்பாளர் பாக்கியம் அரியநேத்திரன் கழுத்தில் மாலைகளோடு தனக்கு ஆதரவு கேட்டு மாவட்டம் மாவட்டமாகச் சுற்றுகிறார். அவரையும் கழுத்து மாலைகளையும் பார்க்கும் போது இந்தக் கோயில்களுக்கு நேர்ந்து விட்டு பின்னர் வெட்டப்படும் கிடாய்களின் நினைவுதான் வருகிறது.

ஏழு கட்சிகளும் ஏழு சிவில் அமைப்புக்களும் சேர்ந்து தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு என்ற பெயரில் ஆதரிக்கும் அரியநேத்திரன் பின்னால் 10 -12 பேர்கள்தான் போகிறார்கள். அவர் பேசும் மேடைகளைத்தான் யுரியூப்காரர்கள் காட்டுகிறார்கள். குழுமியிருக்கு மக்களைக் காட்டுவதில்லை. மக்கள் இருந்தால் அல்லவா காட்டுவதற்கு?

ஒரு நாட்டில் வாக்குரிமை என்பது விலைமதிக்க முடியாத அடிப்படை உரிமை. சட்ட ரீதியான உரிமை. தேர்தல் அன்று வேட்பாளர்களின் வெற்றி – தோல்வியை நிர்ணயிக்கும் மக்கள் கையில் இருக்கும் பலமான ஆயுதம். அதனைப் பயன்படுத்துவதில் மிகவும் கவனம் தேவை.

பொது வேட்பாளர் அரியநேத்திரன் இந்தத் தேர்தல் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கித் தமிழ் மக்களின் கூட்டு விருப்பத்தை உலக சமூகத்துக்கும் தென்னிலங்கைக்கும் வெளிப்படுத்துவாராம்.
இந்த மக்களின் பிரச்னைகளை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தியே தான் போட்டியிடுவதாகக் கூறுகிறார்.

அப்படி என்றால் இதுவரை காலமும் தமிழர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் சர்வதேசத்துக்கும் இலங்கைக்கும்  சொல்லப் படவில்லையா? ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் போர்க் குற்றங்கள், மீழ் நல்லிணக்கம் பற்றி 2012 முதல் விவாதிக்கப்பட்டு வருகிறதே? போகட்டும். சர்வதேசம் என்று அரியநேத்திரன் எந்த நாடுகளைக் குறிப்பிடுகிறார்?

இன்றைய பூகோள அரசியலில் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய நாடுகள், இந்தியா போன்ற நாடுகள்தான் முக்கிய நாடுகள். இதில் இந்தியாதான்தெற்சியாவின் பிராந்திய வல்லரசு. இந்தியாவை மீறி ஏனைய நாடுகள் இலங்கை விடயத்தில் தலையிடாது. இந்திய நாடு என்ன சொல்கிறது?

அண்மையில் இலங்கை சென்ற அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும்  எதிர்வரும் செப்தெம்பர் 21,2024 இல் நடைபெறயிருக்கும் சனாதிபதி தேர்தல்பற்றித்  தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது, தமிழ்ப் பொதுவேட்பாளர் விவகாரம், தேர்தல் புறக்கணிப்பு கோஷம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதன் பின்னர் கருத்து வெளியிட்ட இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் “இம்முறை சனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது குறித்து தான் எதனையும் கூறப்போவதில்லை, இருப்பினும் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்த தீர்மானமாக அமையும்” என்று தான் தெரிவித்தார்.

அதாவது தென்னிலங்கைக் கட்சிகளோடு பேசுங்கள். எந்தக் கட்சி தமிழர் நலனில் அக்கறை செலுத்துகிறதோ அந்தக் கட்சியை ஆதரியுங்கள் என்பதுதான் அஜித் டோவல் அவர்களது கருத்தாகும். ஒரு இராசதந்திரி இதைவிட வெளிப்படையாகப் பேசமாட்டார். தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்பதுதான் அவரது நிலைப்பாடு.

எனவே தமிழர்களின் ஒற்றுமை என்ற போர்வையில் பொது வேட்பாளருக்குப் போடப்படும் வாக்குகள் வீணான வாக்குகளாகும்.  ஒற்றுமை பற்றிப் பேச அரியநேத்திரன் அவர்களுக்கு அருகதை இல்லை. அது சாத்தான் வேதம் ஓதுவதற்கு ஒப்பானது.

கட்டிய மனைவி கல்லுப்போல இருக்க இன்னொருவனோடு ஓடிய ஓடுகாலியை ஒத்தவர்தான் அரியநேத்திரன். தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருக்கும் ஒருவர் கட்சிக்குச் சொல்லாமல் ஓடிச் சென்று எமது எதிரிகளோடு சங்கமமானது இரண்டகமாகும். அரியநேத்திரன் கோயிலுக்கு நேர்ந்த கடாமாதிரி பலிக்கடா ஆகப் போகிறார். அவருக்குப் போடும் வாக்குகள் வீணானது!

வடக்கில் மொத்த வாக்காளரின் எண்ணிக்கை 8,99,268 ஆகும். இதில் 93 விழுக்காடு தமிழ் வாக்குகளாகும். அதே போல் கிழக்கில் மொத்த வாக்காளர்ளின் எண்ணிக்கை 13,21,043 ஆகும். இதில் தமிழ் வாக்குகள் 39 விழுக்காடாகும். இந்த வாக்காளர்களில் 80 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களித்தால் முறையே வடக்கில் மொத்தம் 6,69,055 இலட்சம் வாக்குகளும் கிழக்கில் 4,12,165 இலட்சம் வாக்குகளும் மொத்தம் 10,81,220 இலட்சம் வாக்குகள் அளிக்கப்படும். இதில் பாதி வாக்குகள் 5,90,610 இலட்சம் ஆகும். அரியநேத்திரனுக்கு 5,90,610 இலட்சம் வாக்குகள் விழுமா?

1982 இல் குமார் பொன்னம்பலம் பொது வேட்பாளராக சனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது அவருக்குக் கிடைத்த வாக்குகள் வெறுமனே 1,73,934 (2.67 விழுக்காடு) வாக்குகள் மட்டுமே! செப்தெம்பர் 21 இல் நடைபெறும் சனாதிபதி தேர்தலில் 3 முனை போட்டி நிலவுகிறது. இதுவரை காலமும் இருமுனைப் போட்டியே இருந்தது. எனவே முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் 50+வாக்குகளைப் பெறமுடியாது. விருப்பு வாக்குகளே யார் அடுத்த சனாதிபதி என்பதை தீர்மானிக்கும். இந்தச் சூழ்நிலையில் தமிழ்மக்களுடைய வாக்குகள் அடுத்த சனாதிபதி  யார்  என்பதைத் தீர்மானிக்கும் சக்திவாய்ந்ததாகும்.  இந்த வாய்ப்பை தமிழ்மக்கள் நழுவவிடாது தக்க முறையில் பயன்படுத்த வேண்டும்.

தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரன் இந்தத் தேர்தலில் பலிக்கடாவாக பயன்படுத்தப் படுகிறார். கட்டுக்காசு கிடைக்காது. செப்தெம்பா 21க்குப் பின்னர் அவர் காணாமல் போய்விடுவார்.   எனவே அவருக்குப்  போடப்படும் வாக்குகள் கடலில் கரைத்த புளிபோல் வீணானது!
 

About editor 3092 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply