ஓகஸ்ட் 31, 2024
ஊடக அறிக்கை
SV Media நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை தகனம் செய்த அனுமார்களைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்!
SV Media நிறுவனத்தின் ஊடக நிறுவனமான தமிழ் One தொலைக்காட்சியின் ஒளிபரப்பு வாகனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (25.08.2024) காலை நவீன அனுமார்களினால் தகனம் செய்யப்பட்டது. “இந்த நாசகாரச் செயலின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், விசாரணைகளுக்கு தாம் பூரண ஒத்துழைப்பையும் வழங்கிவருவதாக கனடிய தமிழர் பேரவை ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தச் சம்பவம் குறித்து சமூகத்தில் உள்ள பலரும் தம்மோடு தொடர்புகொண்டு தமக்கு நம்பிக்கையளிக்கும் விதத்தில் ஆறுதல் கூறினர் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு கனடிய தமிழர் பேரவை நடாத்திய 10 ஆவது தமிழர் தெருவிழா வழக்கம் போல் சீரோடும் சிறப்போடும் நடந்து முடிந்தது. இந்தத் தெருவிழா கனடிய தமிழ்மக்களின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. முக்கியமாக தமிழர்களின் பாரம்பரிய உணவு, உடை அறிமுகப்படுத்தப் படுகிறது. இதனால் நூற்றுக்கணக்கான தமிழ் வணிகர்களின் வாணிகம் மேம்பட வாய்ப்பு வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டுகள் போலவே இந்த ஆண்டும் இலட்சக்கணக்கான மக்கள் ஓகஸ்ட் 24, 25 இரண்டு நாளும் தெருவிழாவை கண்டுகளிக்க வருகை தந்திருந்தார்கள். சில போலித் தேசியவாதம் பேசும் அமைப்புக்கள் தெரு விழாவை புறக்கணிக்க வேண்டுகோள் விடுத்தார்கள். பெரியளவில் பரப்புரை செய்தார்கள். இதில் ஒன்ரோறியோ மாகாண அரசின் துணை அமைச்சரான விஜய் தணிகாசலமும் ஒருவர். இவர் தொலைபேசி அழைப்புகள் மூலம் தெருத் திருவிழாவை புறக்கணிக்குமாறு இரவு பகல் ஓயாது ஒழியாது மக்களை வற்புறுத்தினார்.
ஆனால் எமது மக்கள் போலித் தேசியவாதிகளின் வேண்டுகோளை அலட்சியம் செய்துவிட்டு இலட்சக்கணக்கில் வருகை தந்திருந்தார்கள்.
இந்தப் போலித் தேசியவாதிகள் தமிழ்மக்களின் தேசியக் கொடியான புலிக்கொடியை ஏந்திய வண்ணம் வன்முறையில் ஈடுபட்டு நிகழ்சியை குழப்பக் கடும் பாடுபட்டார்கள். தமிழ் வணிகர்களை நேரிலும் தொலைவபேசி மூலமும் மிரட்டினார்கள். தெருவிழாவில் கலந்து கொள்வதில் இருந்து சிலரை பின்வாங்கச் செய்தார்கள். தெரு விழா நடந்த இடத்தைச் சுற்றி அச்சுறுத்தும் பாணியில் அநாகரிகமான முறையில், காட்டுமிராண்டிகள் போல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். பாடை கட்டி ஒப்பாரி வைத்து செத்தவீடு கொண்டாடினார்கள்.
கைகளில் புலிக் கொடியை ஏந்திய வண்ணம் நின்ற சிலர் கெட்ட வார்த்தைகளில் மேடையில் இருந்தவர்களைப் பார்த்துத் திட்டினார்கள். தமிழகத்தில் இருந்து வந்த பாடகர் சிறிநிவாசன் பாட வந்தபோது அவரை நோக்கி கூழ்முட்டைகள் வீசப்பட்டன. ஒலிபெருக்கியை ஓங்கி ஒலிக்க வைத்து அவரது இசை நிகழ்ச்சியை குழப்பினார்கள். நிகழ்ச்சி நடந்த பகுதிக்கு அத்துமீறி நுழைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்தக் காடையர் கூட்டத்தின் வெறியாட்டத்தைக் கண்டு மக்கள் முகம் சுழித்ததை காணக் கூடியதாக இருந்தது.
ஒரு நிகழ்ச்சியைப் புறக்கணிக்கலாம். எதிர்த்துப் போராட்டம் செய்யலாம். அது மக்களது அடிப்படை உரிமைகள். சட்டடத்தை கையில் எடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. அப்படியான எதிர்ப்புப் போராட்டம் சட்டத்துக்கு உட்பட்டு நாகரிகமான முறையில் செய்யப்பட வேண்டும். எதிர்ப்போர் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும். கண்ணியத்தைக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
இந்த ஆண்டு தெருவிழாவின் மேடை, ஒளி, ஒலி, அமைப்பு, LED Video Wall போன்ற ஒழுங்குகளைச் செய்யும் பணியை SV Media நிறுவனத்தின் ஊடக நிறுவனமான தமிழ் One தொலைக்காட்சிக்கு கனடிய தமிழர் பேரவையால் வழங்கப்பட்டது. SV Media நிறுவனமானது தமிழ் One தொலைக்காட்சி சேவையை நடத்திவருவதுடன், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரமாண்ட நிகழ்ச்சிகளுக்கான தயாரிப்பு சேவையை (Sound, Light, LED Wall, Power) தொடங்கியிருந்தது. குறுகிய காலத்திலேயே கனடிய நிறுவனங்களுக்கு நிகரான வளர்ச்சியை SV Media அடைந்திருக்கின்றமைக்கு சான்றாக ரொறன்ரோவில் நடைபெறும் அனைத்து சமூகங்களினதும் முக்கிய நிகழ்வுகளுக்கான தயாரிப்பு சேவைகளை SV Media நிறுவனம் எல்லோரும் மெச்சத்தக்க வகையில் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
தங்களைத் தேசியவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் இந்தப் போலித் தேசியவாதிகள் அந்த நிறுவனத்தின் மீதும் கடுமையான அழுத்தத்தை கொடுத்தார்கள். கனடிய தமிழர் பேரவையோடு அந்த நிறுவனம் செய்து கொண்ட உடன்படிக்கையில் இருந்து பின்வாங்குமாறு நெருக்கினார்கள். பின்வாங்காவிட்டால் அதன் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி நேரிடும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
கடந்த ஓகஸ்ட் 25 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்தப் போலித் தேசியவாதிகள் தங்கள் எச்சரிக்கையை நடைமுறைப் படுத்தினார்கள். SV Media நிறுவனத்துக்குச் சொந்தமான தொலைக்காட்சியின் ஒளிபரப்பு வாகனம் தீக்கிரையாக்கப்பட்டது. இலங்கையை எரித்த அனுமான் போல தீவைத்துத் தகனம் செய்தார்கள். இதனால் அந்த நிறுவனத்தின் பல்லாயிரக் கணக்கான டொலர்கள் பெறுமதியான ஒலி, ஒளிப் பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
கடந்த நொவெம்பர் மாதம் 17 ஆம் நாள் கனடிய தமிழர் பேரவையின் அலுவலகம் நள்ளிரவில் முகமூடி அணிந்து கொண்டு சென்ற அனுமார்களினால் தீக்கிரை ஆக்கப்பட்டது. அதே அனுமார்கள்தான் இந்த SV Media நிறுவனத்திற்குச் சொந்தமான தமிழ் One தொலைக்காட்சி வாகனத்தையும் தகனம் செய்துள்ளார்கள் என ஐயப்படுகிறோம்.
இப்படியான வன்முறையை கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. காவல்துறை SV Media நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை தகனம் செய்தவர்களை கண்டு பிடித்து நீதிக்கு முன் நிறுத்த சகல நடவடிக்கைகளையும் துரிதகெதியில் எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர். (அதிகாரம் – 96 – குடிமை – குறள் 954)
Millions on millions piled would never win
The men of noble race to soul-degrading sin. (Chapter -96 – On Good Birth – Kural 954)
கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
Leave a Reply
You must be logged in to post a comment.