தமிழ் One ஊடகம் மீதான தாக்குதல் தொடர்பான ஊடக அறிக்கை

SV Media நிறுவனத்தின் ஊடக நிறுவனமான தமிழ் One தொலைக்காட்சியின் ஒளிபரப்பு வாகனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (25.08.2024) காலை அடையாளம்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டது.

இந்த நாசகார செயலின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன், விசாரணைகளுக்கு நாம் பூரண ஒத்துழைப்பு வழங்கிவருகின்றோம். 

இந்த சம்பவம் குறித்து சமூகத்தில் உள்ள பலரும் எம்மோடு தொடர்புகொண்டு எமக்கு நம்பிக்கையளிக்கும் விதத்தில் ஆறுதல் கூறினர். இந்த விடயம் குறித்து சில தவறான கருத்துக்களும் பதிவிடப்பட்டிருப்பதை நாம் அவதானித்தோம். எனவே கடந்தவாரம் நடைபெற்ற தமிழர் தெருவிழா தொடர்பிலான எதிர்வினைகள் குறித்தும், SV Mediaவின் நிலைப்பாடு குறித்தும் நாம் சமூகத்துக்கு தெளிவுபடுத்தவேண்டிய நிலையிலுள்ளோம். இந்த அறிக்கையின் மூலம் அதனை நாம் வெளிப்படுத்துகின்றோம்

தமிழர் தெருவிழா (Tamil Fest) நிகழ்ச்சியினை கடந்த பத்து வருடங்களாக கனடியத் தமிழர் பேரவை நடத்திவருகின்றது. கனடியத் தமிழர் சமூகத்தில் நடைபெறும் மிகப்பெரிய விழா இதுவாகும். இந்த பிரமாண்ட நிகழ்ச்சியின் மேடை, ஒளி, ஒலி, அமைப்பு, LED Video Wall போன்ற சேவைகளை அதன் சேவை வழங்குநர்கள் வழங்குவதுண்டு. அநேகமான சேவைகளை ஆரம்பகாலத்தில் முற்று முழுதாக கனடிய நிறுவனங்கள் வழங்கின. பின்னர், இதன் ஒரு சில சேவைகளை எமது சமூகத்தைச் சார்ந்தவர்களின் நிறுவனங்கள் வழங்கிய போதிலும், இந்த நிகழ்ச்சிக்கான சேவைகளை பூரணமாக நிறைவேற்றக்கூடிய வசதிகள் அவர்களிடம் இன்மையால், அந்த சேவைகள் ஏதோ ஒரு விதத்தில் துணை ஒப்பந்தங்களாக (Subcontracts) கனடிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்தன.

SV Media நிறுவனமானது தமிழ் One தொலைக்காட்சி சேவையை நடத்திவருவதுடன், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரமாண்ட நிகழ்ச்சிகளுக்கான தயாரிப்பு சேவையை (Sound, Light, LED Wall, Power) ஆரம்பித்திருந்தது. குறுகிய காலத்திலேயே கனடிய நிறுவனங்களுக்கு நிகரான வளர்ச்சியை SV Media அடைந்திருக்கின்றமைக்கு சான்றாக டொரோண்டோவில் நடைபெறும்  அனைத்து சமூகங்களினதும் வருடாந்த பிரதான நிகழ்வுகளுக்கான தயாரிப்பு சேவைகளை SV Media நிறுவனம் வழங்கி வருகின்றமையை குறிப்பிடலாம்.

Sv Mediaவும், தமிழ் Oneம், எமது சமூக நிகழ்வுகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் வழங்கி வருவதனை அனைவரும் நன்கு அறிவர். ஆலய நிகழ்வுகள் மற்றும் எமது சமூகம் சார்ந்த நிகழ்வுகளுக்கு எமது தயாரிப்பு சேவைகளை மிகவும் குறைந்த கட்டணத்தில் நாம் வழங்குவதோடு,பெரும்பாலான நிகழ்வுகளுக்கு செலவுகளை மாத்திரம் பெற்றுக்கொண்டு வழங்கி வருகின்றமையை இங்கிருக்கும் பிரதான அமைப்புக்கள் எவையும் மறுக்க முடியாது.

கடந்த வருடத் தமிழர் தெருவிழா (Tamil Fest) திட்டமிடலின் போது, ஏற்பாட்டாளர்களான கனடிய தமிழர் பேரவையிடம் இந்த சேவைகளை வழங்குவதற்காக அணுகியபோது, 2023ம் வருடத்துக்கான சேவைகளை தாம் முன்னதாகவே ஒப்பந்தம் செய்துவிட்டதாகவும், அடுத்த வருடதிட்டமிடலின் போது, கவனத்தில் எடுப்பதாகவும் எமக்கு தெரிவித்திருந்தனர். அதனடிப்படையில் எமது நிறுவனத்தின் தயாரிப்பு சேவைகளை அவதானித்த தமிழர் தெருவிழா ஏற்பாட்டு குழுவினர் இந்த வருடம் தமிழர் தெருவிழாவுக்கான தயாரிப்பு சேவைகளை வழங்குமாறு, எமது நிறுவனத்திடம் பல மாதங்களுக்கு முன்னரேயே கேட்டிருந்த நிலையில், அதற்கான ஒப்பந்தமும் செய்யப்பட்டது. அதன் போது நாகரிகம் கருதியும் மனிதாபிமான அடிப்படையிலும் ஒரு சிறிய பகுதியை கடந்த வருடம் சேவையை வழங்கிய நிறுவனத்துக்கு வழங்க தமக்கு இணக்கம் தெரிவிக்குமாறு எமது நிறுவனத்திடம் வேண்டுகோளும் முன்வைக்கப்பட்டது. அந்த நிறுவனமும் எமது சமூகத்தைசார்ந்த நிறுவனம் என்பதனாலும், நாகரிகம் கருதியும் நாமும் அதற்கு இணக்கம் தெரிவித்தோம். எனினும் அந்த சேவையை வழங்குவதில் இருந்து அந்த நிறுவனம் இறுதி நேரத்தில் விலகிக்கொண்டமை வேறுவிடயம்.

இந்த நிலையில் இந்த வருட ஆரம்பத்திலிருந்து தமிழர் தெருவிழாவின் ஏற்பாட்டாளர்கள் – கனடியத் தமிழர் பேரவையின் சில செயற்பாடுகள் குறித்து சில அமைப்புகளும், செயற்பாட்டாளர்களும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர் 

எமது சமூகத்தின் ஒரு கூறாக இருக்கின்ற தமிழ் One தொலைக்காட்சி இந்த விடயத்தில் இருதரப்பினரது கருத்துக்களையும் பக்கசார்பில்லாமல் வெளிக்கொண்டு வந்திருந்தது. அத்துடன் மற்றுமொருவிடயத்தையும் இங்கு பதிவு செய்யவிரும்புகின்றோம். SV Media நிறுவனமும் தமிழ் One தொலைக்காட்சியும் ஒரு நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும் அவை இருவேறுபட்ட தளங்களில் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் ஆகும். தமிழ் one தொலைக்காட்சி கனடிய தமிழ் சமூகத்துடன் சேர்ந்து எவ்வாறான சேவைகளை செய்துள்ளது என்பதனை சமூகம் அறியும்.

இந்த நிலையிலேயே இந்த வருடம் தமிழர் தெருவிழாவினை புறக்கணிக்க கோரும் கருத்துக்கள் சில அமைப்புக்களிடம் இருந்தும், சில செயட்டப்பட்டாளர்களிடமிருந்தும் வெளிவர தொடங்கியது. அதன் அடுத்த கட்டமாக தமிழர் தெருவிழாவின் அனுசரணையாளர்களை விலகிக்கொள்ளுமாறும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இந்த தயாரிப்பு பணிகளில் இருந்து SV Media விலகிக்கொள்ளவேண்டும் என எமது நிறுவனத்திடமும் கோரப்பட்டது. ஆரம்பத்தில் கோரிக்கையாக மாத்திரம் முன்வைக்கப்பட்ட போதிலும், பின்னர் அது அழுத்தமாகவும், அச்சுறுத்தலாகவும் மாறியமையையும் இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அத்துடன் எமது நிறுவனத்தின் சேவைகளை தாம் புறக்கணிக்கப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எமக்கு மிக நெருக்கமானவர்களை வைத்து பாரிய அழுத்தம் எம்மீது பிரயோகிக்கப்பட்டமையினால், இந்த அச்சுறுத்தல்களையும், கோரிக்கைகளையும் சீர்தூக்கி பார்த்த எமது நிர்வாகம்,  மிரட்டல்களுக்கு அடிபணிய முடியாது என்ற போதிலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் நாம் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கமைய நிகழ்ச்சியில் இருந்து நாம் ஒருதலைப்பட்சமாக விலகிக்கொள்ளமுடிவெடுத்தால் அது சட்டரீதியான சிக்கலை ஏற்படுத்தும் என்பதனால்,  பொதுவான இணக்கத்துக்கு வரும் நோக்குடன், எமது நிறுவனம் தமிழர் தெருவிழாவுக்கான  சேவையை வழங்க  ஒப்பந்தம் செய்த சேவைகளை ஒரு கனடிய நிறுவனத்துக்கு கைமாற்றிவிடுவது எனவும், அவ்வாறு மாற்றிவிடும் போது நாம் ஏற்பாட்டாளர்களுக்கு வழங்கிய மேற்கோளை (Quotation) விட அண்ணளவாக  $ 20,000அதிகமாக செலவாகும் எனவும், அதனை இந்த அழுத்தக் குழு (pressure group) பொறுப்பேற்றால் நாம் இதில் இருந்து விலகிக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்தோம். அதன் பிறகு  அந்த அழுத்த குழு நேரடியாக எம்மை தொடர்பு கொள்ளவில்லை என்பதுடன் இதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும் எனும் தொனியிலான கருத்துக்களை மாத்திரம் எம்மைச் சார்ந்தவர்களிடம் தெரிவித்திருந்தது.

இந்த பின்னணியில் நிகழ்ச்சி நெருங்கி வந்த நிலையில், முதல் நாளில் இருந்து தமிழர் தெருவிழாவின் பிரதான அனுசரணையாளர்கள், நாட்டிய, நடன குழுக்கள், இசைக்கலைஞர்கள் எனப் பலரும் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொண்டமையை ஊடகங்கள் வாயிலாக நாம் அறிந்து கொண்டோம். நிகழ்வு இடம்பெற்ற முதல் நாளில், அதிகாலையில் மேடை தயாரிப்பு பணிகளில் நாம் ஈடுபட்டிருந்தவேளையில், நிகழ்விடத்தில் அடையாளம் தெரியாத நபர்களினால் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகமும் செய்யப்பட்டது.

எமது நிர்வாகத்தை பொறுத்தவரை தமிழ் மக்கள் ஒற்றுமையாக உளப்பூர்வமாக, ஒரு விடயத்துக்காக ஒரு நிலைப்பாட்டை எடுப்பார்களாக இருந்தால் என்ன விலை கொடுத்ததும் நாம் மக்களுக்காக நிற்போம். அதனை விடுத்து மிரட்டல்களுக்கும், பொருளாதார இழப்புகளை காட்டி மேற்கொள்ளப்படுகின்ற அழுத்தங்களுக்கும் நாம் அடிபணியப் போவதில்லை.

எமது சமூகம்  இந்த புலம்பெயர்ந்த நாட்டில் பல சாதனைகளை படைத்துள்ளது, புலத்திலும், தாயகத்திலும் இன்னும் அடையவேண்டிய விடயங்கள் நிறையவே உள்ளன. மாறாக, வன்முறைச் செயற்பாடுகளூடாக சமூகத்தை மிரட்டி, உருட்டி, விடயங்களை சாதிக்க முனைந்தால் அதன் தாக்கம் எமது சமூகத்தை பல ஆண்டுகள் பின்னோக்கி தள்ளிவிடும்.

அதன் ஒரு அங்கமாகவே தமிழ் One ஒளிபரப்பு வாகனம் எரிக்கப்பட்டதை  நாம் காண்கின்றோம். எமது ஒளிபரப்பு வாகனம் தமிழர் தெருவிழா நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கு கொண்டுசெல்லப்படவில்லை, அது எமது நிறுவனத்தின் பின்னால் உள்ள வாகனதரிப்பிடத்தலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி முடித்து எதிர்ப்புணர்வோடு, போகின்ற போக்கில் செய்த செயற்பாடாக இந்த சம்பவத்தை நம்மால் பார்க்க முடியவில்லை. இந்த நாசகார செயலில் ஈடுபட்டவர்கள், எம்மை அறிந்த, எமது நிறுவனத்தை அறிந்த எமது நிறுவனத்தின் பின்புற வாகன தரிப்பிடத்துக்கு வருவதென்றால் சில வளைவுகளை கடக்கவேண்டும், அதனையும்  அறிந்தவர்களாக இருந்திருக்க வேண்டும் என்பதே எமது பிரதான ஐயப்பாடாக உள்ளது. 

எமது ஒளிபரப்பு வாகனம் சகல வசதிகளையும் கொண்ட ஒரு உயர் தொழிநுட்பத்துடனான ஒளிபரப்பு வாகனமாகும். எமது சமூகத்தில் மாத்திரமல்லாமல், எமது தயாரிப்பு சேவையை பெற்றுக்கொள்ளுகின்ற பிற சமூகத்தவர்களாலும் எமது இந்த ஒளிபரப்புவாகனம் குறித்து ஒரு பிரமிப்புள்ளது. அத்தகைய ஒரு நேர்த்தியான வாகனமாகும். அதனையே முற்றாக எரித்து நாசமாகியுள்ளனர் ஒரு சிலர். இந்த செயலை காப்புறுதி பணத்துக்காக நாமே செய்தோம் என கேவலமான செய்தியை காவித்திரிவது வேடிக்கையாக உள்ளது – இந்த முட்டாள்தனமான செய்திக்கு பதிலளிப்பது அவசியமில்லை என்ற போதிலும், இதனை ஒரு சிலர் காவித்திரிவதால் இந்த  பதிவினை செய்கின்றோம். இந்த வாகனத்தை விட அதில் நாம் எமக்கே உரியவிதத்தில் ஒளிபரப்பு வசதிகளை செய்வதற்கு பல இலட்சம் டொலர்களையும், நேரத்தையும் செலவிட்டுள்ளோம். இதுபோன்ற ஒரு ஒளிபரப்பு வாகனத்தை பணம் இருந்தால்மட்டும் கொள்வனவு செய்யமுடியாது. இது போன்ற வாகனத்தை மீண்டும் நாம் உருவாக்க சில மாதங்கள் ஆகும்

கனடிய வானொலி, தொலைக்காட்சி, தொலைத்தொடர்பு ஆணையகத்தின் (CTRC) கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு ஊடகமாக தமிழ் one தொலைக்காட்சி உள்ளது. இதன்மீதான தாக்குதல் பொலிஸாரினால் சாதாரணமாக பார்க்கப்படமாட்டாது. பொலிசார் பல கோணங்களில் பலமட்டங்களில் தீவிர விசாரணைகளை செய்துவருகின்றனர். இந்த நிலையில் இந்த சமூகவலைத்தளப் போலிப் புலனாய்வாளர்கள் தவறான செய்திகளை பரப்புவதும் அதனை ஒரு சிலர் காவித்திரிவதும் கூட பொலிஸாரினால்  கவனத்தில் எடுக்கப்படும்.  

இவ்வாறான தவறான செய்திகளும் சரி, நாசகர செயற்பாடுகளும் சரி சமூகத்தில் இருந்து களையெடுக்கப்படவேண்டும். இந்த வாகன எரிப்பின் மூலம் அவர்கள் சொல்லவரும் செய்தி என்ன? இது இன்று எமக்கு நடந்தது நாளை யாருக்கும் நடக்கலாம். இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் சக்தி சாதாரண பொது மக்களுக்கு இல்லை. எதிர்காலம் குறித்த கோபமும், கவலையுமே மக்களுக்கு எஞ்சி இருக்கின்றது.

மக்கள் மனதில் நம்பிக்கையும் ஆறுதலும் வழங்கவேண்டிய அமைப்புகளோ தமக்குள் போட்டி போட்டு விமர்சித்துக் கொண்டிருக்கின்றன. நாம் அடையாளப்படுத்தவேண்டிய பல பிரச்சினைகள் தாயகத்திலும் இங்கும் விஸ்வரூபம் எடுத்துள்ளன. இதற்க்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய ஊடகங்கள் பரபரப்புக்காக சுவாரஷ்யமான செய்திகளையும் ஊர்வம்புகளையும் ஊதி பெருப்பித்துக் கொண்டிருக்கின்றன, இவற்றுக்கெல்லாம் மேய்ப்பர்களாக இருப்பார்கள் என தேசிய தலைமை நம்பியவர்கள், யார் மக்களை அதிகாரம் செய்வது என்பதில் புலத்திலும், தாயகத்திலும் போட்டியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் one தொலைக்காட்சி வாகனம் எரிக்கப்பட்டதை போன்ற வன்முறை செயற்பாடுகளை நாம் முற்றாக கண்டிக்கின்றோம். கருத்துக்கள் மூலம் செய்திகளை மக்கள்மயப்படுத்தி ஒரு ஆரோக்கியமான சமூகமாக எமது மக்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு சகலருக்கும் உள்ளது. எனவே பொறுப்புணர்வோடு செயற்படுமாறு பொறுப்பானவர்களை நாம் வினயமாக கேட்டுக்கொள்கின்றோம். 

-30-

ஊடகத் தொடர்புகளுக்கு: பிரசாந்த் நகுலராஜா | 416 436 1010 | info@svmedia.ca

About editor 3092 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply