ஓகஸ்ட் 22, 2024
ஊடக அறிக்கை
தமிழர் தெரு விழாக்கு ஆதரவு அளிக்குமாறு உறவுகளை அன்புடன் அழைக்கிறோம்
கனடிய தமிழர் பேரவை ஆண்டு தோறும் நடத்தி வரும் தமிழர் தெரு விழா எதிர்வரும் ஓகஸ்ட் 24, 25 இல் சீரோடும் சிறப்போடும் நடைபெற இருக்கிறது. இது பத்தாவது தமிழர் தெரு விழா ஆகும். சென்ற ஆண்டு நடந்த தமிழர் தெரு விழாவில் சுமார் 3 இலட்சம் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
தமிழர் தெரு விழா வெறும் பொழுது போக்கு நிகழ்ச்சியல்ல. அது கனடிய தமிழர்களின் கலை, பண்பாட்டு விழுமியங்களின் குறியீடு. கனடிய தமிழ் வணிகர்கள் தங்கள் பொருட்களை, சேவைகளை சந்தைப்படுத்துவதற்கு ப் பொருத்தமான களமாகும்.
இந்த விழாவின் மூலம் கனடிய தமிழர் பேரவை கடந்த 20 ஆண்டுகளாக தாயகத்தில் வாழும் எமது சொந்தங்களின் வாழ்வாதாரத்தை நிமிர்த்தவும் வேலை வாய்ப்புக்களை உருவாக்கவும் பாடுபட்டு வருகிறது. குறிப்பாக 18 மே, 2009 இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி, கனடா – மட்டக்களப்பு நட்புறவுப் பண்ணையான கெய்ல் டி ராஜா திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு திரைமடுவில் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு பொருளாதார மேம்பாட்டு (NEED) மையத்தின் ஊடாக கனடிய தமிழர் பேரவை மேற்கொள்ளும் இந்த முயற்சியானது விவசாய பயிர்ச்செய்கைகளை மேம்படுத்துவதோடு, உள்ளூர் சமூக பொருளாதார சுதந்திரத்திற்கான ஒரு படியாகவும் அமைந்துள்ளது. ஐந்து ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட ஆயிரம் முருங்கை மரத்தின் இலைகள் இப்போது சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதே போல் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தென்னவன்மரவடி என்ற ஊரில் 10 ஏக்கர் (மொத்தம் 20 ஏக்கர்) குத்தகை நிலத்தில் பால்பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு 200 ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. பண்ணைக்குப் பொறுப்பாக ஒரு முன்னாள் போராளி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ் தென்னன்மரவடியில் முன்பு வாழ்ந்து பின் அங்கிருந்து துரத்தப்பட்ட 230 உறுப்பினரைக் கொண்ட 82 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன. 279 குடும்பங்கள் இன்னும் வரவேண்டி உள்ளன. இவர்களில் 817 உறுப்பினர்களைக் கொண்ட 260 குடும்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலும் 40 உறுப்பினரை கொண்ட 19 குடும்பங்கள் வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெயர் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றன. இருந்தும் பள்ளிக்கூடம், போக்குவரத்து, மருத்துவ வசதிகள் இல்லாததால் மீள் குடியேற்றம் தடைகளைச் சந்திக்கிறது.
போரால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாற்றத்தை ஏற்படுத்தவும் பொருளாதாரத்தை திடப்படுத்தவும் கனேடியத் தமிழர் பேரவை, வடக்கு கிழக்கு பொருளாதார அபிவிருத்தி மையம் ஊடாக கைத்தறி புடவைத் தொழில் வலுவூட்டல் மற்றும் பண்பாட்டுப் பாதுகாப்பு ஆகியவற்றின் குறியீடாக Made in Mullaitivu (முல்லைத்தீவில் தயாரிக்கப்பட்டது) என்ற திட்டம் நடைபெற்று வருகிறது.
2020 இல் தொடங்கிய இந்தத் திட்டத்தின் கீழ் பெண் கைவினைஞர்களின் நேர்த்தியான கைவினைத்திறனை வெளிப்படுத்தவும், நிலையான பணியில் முன்னேற்றம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் அர்ப்பணிப்புடன் செயற்படவும் இந்த திட்டம் பயன்பட்டுவருகின்றது.
கனடிய தமிழர் பேரவை நடாத்தும் தைப் பொங்கல் விழா, தமிழர் தெரு விழா போன்ற விழாக்களில் வடக்கு கிழக்கு பகுதிகளில் நெசவுசெய்யப்படும் கைத்தறிச் சேலைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த ஆண்டு வடக்கிலும் கிழக்கிலும் நிலவிய மருத்துத் தட்டுப்பாட்டைப் போக்க தெல்லிப்பளை ஆதார மருத்துவமனை மற்றும் மட்டக்களப்பு போதனா மருத்துவமனை இரண்டுக்கும் 2 இலட்சம் டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை கனடிய தமிழர் பேரவை அன்பளிப்புச் செய்திருந்தது.
மலைநாட்டில் இயங்கும் தெகியவிற்ற தமிழ் மகாவித்தீயாலயத்துக்கு ஒரு அறிவியல் கூடம் 90,000 கனடிய டொலர் செலவில் கட்டிக் கொடுத்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் தமிழர் தெரு விழாவுக்கு எதிராக இரண்டு பக்கக அறிக்கை ஒன்றை கனடியத் தமிழர் தேசிய அவை வெளியிட்டுள்ளது. அதில் அரைத்த மாவை மீண்டும் அரைத்துள்ளது. இமாலயப் பிரகடனத்தில் தமிழ் என்ற சொல் இல்லையாம். இது மொட்டையில் மயிர் பிடிங்குவது போன்றது.
இமாலயப் பிரகடனம் சில முற்போக்கு பவுத்த தேரர்கள் உருவாக்கிய சிறந்த இலங்கைக்கான (பவுத்த) சங்கம் (Sanga for a Better Sri Lanka) வெளியிட்டது. இந்த இமாலயப் பிரகடனம் இனச் சிக்கலுக்கான அரசியல் தீர்வைக் முன்வைக்கவில்லை. அது அரசியல் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளும் செய்யவேண்டிய காரியம். அது எதைச் சாதிக்க முயல்கிறது என்றால் கடந்த காலங்களில் தீர்வு முயற்சிகளுக்குத் தடையாக இருந்த பவுத்த – சிங்களவர்களது – குறிப்பாக பவுத்த தேரர்களது – மனங்களை வெல்லப் பார்க்கிறது. இந்தப் பிரகடனத்துக்கு நான்கு முக்கிய பவுத்த மத பீடங்கள் தங்களது ஆதரவையும் நல்லாசிகளையும் வழங்கியிருப்பது வரலாற்றில் முக்கிய திருப்பமாகும்.
எது எப்படியிருப்பினும் இந்த முயற்சியில் ஈடுபட்டவர்கள் அதனை உறைநிலைக்குள் தள்ளிவிட்டதாகத் தெரியாது.
இருந்தும் கனடியத் தமிழர் தேசிய அவை தனது குறுகிய அரசியல் தேவைக்காக தமிழர் தெரு விழாவை புறக்கணிக்குமாறு கேட்கிறது. இந்த அமைப்புத்தான் கடந்த 2021 -11-21 அன்று ததேகூ இன் ஆதரவில் நடந்த பொதுக் கூட்டத்தை குழப்பியது. சனநாயக விழுமியங்களில் ஒன்றான பேச்சுச் சுதந்திரத்தை கனடா மண்ணில் நின்று கொண்டு காலில் போட்டு மிதித்தது.
எனவே பொதுமக்கள் போலித் தேசியவாதிகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது வழக்கம் போல் திரளாக வந்து தமிழர் தெரு விழாவுக்கு ஆதரவு நல்க வேண்டும் என அன்டன் கேட்டுக் கொள்கிறோம்.
கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
Leave a Reply
You must be logged in to post a comment.