கருங்கல் பாறையும் இரும்புப் பாரையும் !
அறம் சார்ந்த கருத்துக்கள் அதிகம் பேசப்பட்ட சங்கம் மருவிய காலத்தில் ஒருநாள். தமிழுக்காகத் தன்வாழ்வை அர்ப்பணித்த கவிமூதாட்டி ஒளவை ஒரு ஊரில் இருந்து வேறொரு ஊருக்கு நடந்து கொண்டிருந்தாள்.
இன்று போல தார் வீதிகள் இல்லை. தெரு விளக்குகள் இல்லை. பாதைகள் காடுகளின் ஊடாகவும் கடற்கரைகளின் ஓரமாகவும் மலைத் தொடர்களின் இடையேயும் தான் அன்று அமைந்திருந்தன.
தான் சென்ற வழியில் முதலில் ஒரு காட்டினைக் கண்டாள் ஒளவை. பிற வழிப்போர்கர்களுடன் சேர்ந்து பேசிக்கொண்டே சென்ற அவள் ஒரு காட்சியைக் கண்டு துணுக்குற்று நின்றாள்.
வேடன் ஒருவன் தன் கையிலிருந்த வில்லை வளைத்து அம்பு ஒன்றினைச் செலுத்தி காட்டு யானை ஒன்றின் நெற்றியைத் துளைத்து விட்டான். துடிதுடித்து வீழ்ந்த யானை சில கணத்தில் இறந்தும் போய்விட்டது.
மனம் கொதித்தாலும் அது வேட்டுவ அறம். அவர்கள் அப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்று தனக்குத் தானே சமாதானம் கூறிக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தாள் ஒளவை.
காட்டின் எல்லையைக் கடக்கும் போது படை வீரர்கள் சிலர் பஞ்சு நிறைந்த சாக்கு மூட்டைகள் பலவற்றைச் சுற்றிவர அரணாக அடுக்கி வைத்துக் கொண்டு உள்ளே இருந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
வியப்போடு அவர்கள் அருகில் சென்ற ஒளவை பஞ்சைப் பாதுகாப்பு அரணாக வைத்திருக்கிறீர்களே இது போதிய பாதுகாப்பை உங்களுக்குத் தருமா என்று கேட்டாள்.
வேகமாக வரும் அம்புகளின் தாக்குதல்களைத் தடுப்பதற்கு பஞ்சு மூட்டைகளை விடச் சிறந்த தடுப்புச் சுவர் கிடையாது ஆச்சி. எந்தக் கூரிய அம்பாலும் பஞ்சு மூட்டைகளைத் துளைக்க முடியாது என்றார்கள் அவர்கள்.
படை வீரர்களின் அனுபவம் மிக்க வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டே நடந்தாள் ஒளவை. அவளும் அவளுடன் வந்தவர்களும் இப்போது ஒரு மலையடிவாரத்துக்கு வந்துவிட்டார்கள். ஆனால் மேற்கொண்டு பிரயாணத்தைத் தொடர விடாமல் அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அவர்களைத் தடுத்தனர்.
காரணம் கேட்டாள் ஒளவை.
அதோ அந்த மலைப் பாறையைப் பிளந்து உடைப்பதற்காக காலையில் இருந்தே நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம்.
பலம் பொருந்தியவைகளும் நெடிய தோற்றம் கொண்டவையுமான இரும்புப் பாரைகளைப் பயன்படுத்திப் பார்த்துவிட்டோம். எதற்கும் அசைந்து கொடுக்காத வலிய பாறையாக இருக்கின்றது அது. அதனால் வெடி மருந்து வைத்துத் தகர்க்கின்றோம் வெடி வெடித்துப் பாறை உடையட்டும்; அப்புறம் நீங்கள் போகலாம் என்றார்கள்.
ஒளவையும் மற்றவர்களும் தூரச் சென்று ஒரு மலையருவிக் கரையிலே ஓய்வெடுத்தார்கள். இயற்கையின் வனப்பிலே மனத்தைப் பறிகொடுத்த ஒளவை அங்கே இன்னுமொரு விசித்திரமான காட்சியைக் கண்டாள்.
ஏதோ ஒரு பறவை பழமாக உண்டுவிட்டு எச்சமாகப் பாறையொன்றிலே போட்ட ஒரு வித்து சிறு கன்றாக முளைத்து எழ அதன் பசுமையான பிஞ்சு வேர்கள் அந்தப் பாறையைப் பிளந்து கொண்டு உள்ளே சென்றிருந்தன.
ஒளவை அன்று தான் கண்ட நான்கு நிகழ்ச்சிகளையும் மனத்திரையில் ஓடவிட்டுப் பார்த்தாள். வலிமையும் பலமும் கொண்ட யானையின் நெற்றியைத் துளைத்து வெற்றி கொள்ளும் அம்பு மென்மையான பஞ்சு மூட்டையைத் துளைக்க முடியாமல் தோல்வியடைந்து விடுகின்றது.
வலிய இரும்புப் பாரைகளைப் பயன்படுத்தியும் பிளக்க முடியாத கற்பாறைகளை பசுமையான மரங்களின் மென்மையான வேர்கள் புகுந்து பிளந்து எறிந்து விடுகின்றன.
எனவே எல்லாச் சந்தர்ப்பங்களிலும் வலிமையானவற்றைக் கொண்டு வலிமையானவைகளை வென்றுவிட முடியாது. மென்மையானவற்றாலும் சில நேரங்களில் வலிமையாவற்றை வென்றுவிட முடியும்.
நாம் பேசும் வார்த்தைகளும் அப்படித்தான்.
ஆணவமும் கோபமும் அதிகார தோரணயும் மிக்க வலிய வார்த்தையை நாம் பேசினால் அது எந்த இறுகிய இதயத்திலும் சென்று மாற்றத்தை ஏற்படுத்த மாட்டாமல் பயனின்றித் தோற்றுப் போகும்.
ஆனால் மென்மையும் இனிமையும் பணிவும் அன்பும் மிக்க வார்த்தைகளை மட்டுமே நாம் பேசக் கற்றுக் கொள்வோமாக இருந்தால் அந்த வார்த்தைகள் எந்தக் கொடிய இதயங்களிலும் புகுந்து அவற்றைக்; கரைத்து வென்றுவிடும்.
எனவே மனிதர்களே மனிதர்களே கடுமையான சொற்களைத் தவிர்த்து மென்மையான சொற்களைப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்.
இதை நான் ஒரு பாடலாக எழுதி தமிழ்ச் சமுதாயத்துக்கு கொடுக்க வேண்டும். நல்வழியிலே தமிழன் வாழ்வு செல்லட்டும். தனது துணிப்பையில் இருந்து ஏட்டையும் எழுத்தாணியையும் எடுத்து எழுதத் தொடங்கினாள் ஒளவை.
வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்
பட்டுருவுங் கோல்பஞ்சில் பாயாது – நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.
(ஒளவையின் நல்வழிப்பாடல் 33)
வேழத்தில்பட்டு உருவும் கோல் பஞ்சில் பாயாது – வலிய யானையின் மேலே பட்டு உள்ளே உருவிச் செல்லும் அம்பானது மெல்லிய பஞ்சின் மேலே பாயாது நின்றுவிடும். நெட்டு இருப்புப் பாரைக்கு நெக்கு விடாப்பாறை – நெடுமையாகிய இரும்புப் பாரைக்குப் பிளவாத கருங்கற் பாறையானது பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும் பச்சை மரத்தின் வேருக்குப் பிளந்துபோம்; அது போல வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் – வெட்டென்று பேசுகின்ற வலிய சொற்கள் மென்மையாகப் பேசுகின்ற இன்சொற்களை வெல்ல மாட்டாவாகும்.
இரா. சம்பந்தன்
கனடா தமிழர் தகவல் சஞ்சிகையில் இன்று (5.12.2023) வெளியான எனது கட்டுரை இது.
All reactions:
Leave a Reply
You must be logged in to post a comment.