மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும்: வள்ளலார் பொன்மொழிகள்

மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும்: வள்ளலார் பொன்மொழிகள்

வள்ளலார்

பக்தியில் தொடங்கி ஞான கண்டு அடைந்தது வள்ளலாரின் மெய்யியல் தேடல். 19 நூற்றாண்டில் பரந்துபட்ட அளவில் சமூக நீதி சமத்துவம், பெண்ணுரிமை, மூடநம்பிக்கை எதிர்ப்பு, சாதியொழிப்ப கருத்துக்களை பேசிய வள்ளலாரை ஒரு ஆன்மீகவாதியாக மட்டும் சுருக்கிவிட முடியாது. அவர் சொற்பொழிவாளர், சித்த மருத்துவர் ஆசிரியர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்.

இவர் வாழ்ந்த காலத்தில் வள்ளலார் பேசிய முற்போக்கான கருத்துக்கள் காரணமாக அனைத்து தரப்பில் இருந்தும் அவர் எதிப்புகளை சந்தித்தார். அவர் எழுதிய திருவருட்பா பாடல்கள் சைவ சமயத்துக்கு எதிராக இருக்கின்றன என்று கூறி அவர் மீது வழக்கும் தொடுக்கப்பட்டது.

மனித வாழ்க்கையின் உண்மை தத்துவத்தை சரியாக அறிந்து வைத்திருந்த வள்ளலார் தனக்கு தரவேண்டும் என இறைவனிடம் வைத்த வேண்டுதல் கவனிக்கத்தக்கது. வாழ்க்கை எப்போதும் இரண்டு எதிரெதிர் தன்மைகளையும் உள்ளடக்கியது என்ற மெய்ஞானம் அந்த வேண்டுதலில் இருந்தது. சென்னை கந்தகோட்டத்துப் பெருமானைப் பாடிய தெய்வமணிமாலையில் இப்படி வேண்டிப் பாடுகிறார்.

உத்தமர் தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு வேண்டாம். இறைவனின் புகழை பேச வேண்டும். பொய் பேச வேண்டாம்.பெருநெறியை கடைபிடிக்க வேண்டும். ஆனால் மதமென்னும் பேய் பிடிக்காமல் இருக்க வேண்டும். பெண்ணாசை மறக்க வேண்டும், உன்னை மறக்காமல் இருக்க வேண்டும். அறிவு வேண்டும், செல்வமாக உன் கருணை வேண்டும்.

வேதம், ஆகமம் புராணம், சாத்திரம், இதிகாசம் எதையும் நம்பவேண்டாம் அது எதுவுமே உண்மையைச் சொல்லவில்லை பசிபிணி போக்குவதுதான் அறச்செயல்களுக்கு எல்லாம் முதன்மையானது என்று போதித்தார். மக்களின் பசி பிணி போக்குவதற்காக, 1867ம் ஆண்டு வடலூர் அருகே பார்வதிபுரம் என்ற கிராமத்தில் 80 காணிநிலத்தை மக்களிடமிருந்து தானமாக பெற்று, சமரச சுத்த சன்மார்க்க தரும சாலையை நிறுவினார். அதில், எந்தவித பாகுபாடின்றி அனைவருக்கும் மூன்று வேளையும் உணவளித்து வந்தார்.

கடந்த 1867ம் ஆண்டு மே 23ம் தேதி தொடங்கப்பட்ட அந்த அன்னதான பணி தற்போது வரை தொடர்ந்து வருகிறது. 21 அடி நீளம், 205 அடி அகலம், ஆழம் கொண்ட அடுப்பு அன்று முதல் இன்றுவரை 154 ஆண்டுகள் அணையாமல் எரிந்து மக்கள் பசிபிணி போக்கி வருகிறது.

சாதிகளையும் சமயங்களையும் மட்டுமல்ல, உருவ வழிபாட்டையும் வள்ளலார் கடந்து நின்றார். தெய்வம் என்று சொல்லி தன்னை வணங்க முற்படுவோரைக் கண்டு பரிதாபப்பட்டார். துறவுக்குரிய துவராடை தவிர்த்து வெள்ளாடை தரித்தார். திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைப்பட்ட இவரின் இயற்பெயர் இராமலிங்கம் அடிகளார்.

சிதம்பரம் அருகே உள்ள மருதூர் என்னும் 1823ம் ஆண்டு அக்டோர் மாதம் 5ம் தேதி பிறந்த வள்ளார் 1874 ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் நாள் மறைந்தார். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலாரின் வாழ்க்கைக்குந்த பத்து பொன் மொழிகள்

  1. ஒரு விளக்கு இன்னொரு விளக்கை ஏற்றுவதன் மூலம் எதையும் இழந்து விடாது. அந்த இடத்தில் ஒளி இரண்டு மடங்காகும். அது போல நாம் பிறருக்கு உதவுவதால் நாம் இழக்க போவது எதுவுமில்லை. அதனால் நாம் பெறும் இன்பம் இரண்டு மடங்காகும்.
  2. உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள். அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்
  3. பிறருடைய பசியை மட்டும் போக்குவதோடு ஒருவனுடைய ஒழுக்கமும் கடமையும் நின்றுவிடாது. பிறருக்கு ஏற்படும் துன்பங்களை களையவும் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.
  4. வாக்கு வேறு.. மனம் வேறு.. செயல் வேறு.. என்ற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள். மூன்றும் ஒன்றிய நிலையில் வழிபடுங்கள்.
  5. மனதை அடக்க நினைத்தால் அடங்காது.. அதை அறிய நினைத்தால் அடங்கும். தவறு செய்வதும் மனம் தான். இனி தவறு செய்யக் கூடாது என்று தீர்மானிப்பதும் மனம் தான்.
  6. அன்பும் இரக்கமும் வாழ்க்கையின் அடிப்படை. உண்மையைச் சொல் அது உனது மரியாதையை பாதுகாக்கும்
  7. எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் வியாபித்திருக்கிறார் என்று அறிதலே கடவுள் பக்தியாகும்.
  8. புண்ணியம் மற்றும் பாவம் என்பன மனம், சொல், செயல் ஆகிய மூன்று வழிகளில்தான் நம்மை வந்தடைகின்றன.
  9. சோதனைகள் தான் ஒரு மனிதனுக்கு அவனை அறிமுகப்படுத்துகின்றன.
  10. வெயிலுக்கு ஒதுங்கும் மரத்தை வெட்டாதே.

அக்டோபர் 5: வள்ளலாரின் 200-வது பிறந்த நாள் இன்று

மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும்: வள்ளலார் பொன்மொழிகள் 10 | Vallalar quotes – hindutamil.in

About editor 3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply