பங்களா வாத்து, பங்காசியஸ் மீன், சிறுவிடைக் கோழி… பலவிதமான பயிர்கள்… ஈழ ஏதிலியர் நடத்தும் பண்ணை!
09 Aug 2024
பண்ணையில்
செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர்-நத்தம் கிராமத்தில் 12 ஏக்கர் பரப்பில் செழிப்பாகக் காட்சி அளிக்கும் இப்பண்ணையில்… தென்னை, சுருள்பாசி, பசுந்தீவனம், காய்கறிகள், கீரை வகைகள் உள்ளிட்ட பலவிதமான பயிர்கள் சாகுபடி செய்யப் படுகின்றன. ஆடு, மாடு, கோழி, வாத்து, மீன் உள்ளிட்டவையும் இங்கு உள்ளன. அசோலா உற்பத்தி, மண்புழு உரம் தயாரிப்பு ஆகியவையும் இங்கு நடைபெறுகின்றன. ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகம் சார்பில் நடத்தப்படும் இந்தப் பண்ணை பசுமை விகடன் வாசகர்களுக்கு முன்பே அறிமுகமானதுதான். ஆம், பசுமை விகடன் 10.2.2007 தேதியிட்ட இதழில் ‘பாசியில் கொழிக்குது பலன்’ என்ற கட்டுரையில் இப்பணையின் செயல்பாடுகள் இடம் பெற்றன. தற்போது இந்த பண்ணை எப்படி உள்ளது… என்பதைப் பார்வையிட ஒரு காலைப்பொழுதில் சென்றோம்.
கோழிகளுக்கு முருங்கைக் கீரை கொடுத்துக்கொண்டிருந்த இப்பண்ணையின் ஒருங்கிணைப்பாளர் ரத்தினராஜ சிங்கம், இன்முகத்தோடு வரவேற்று, இப்பண்ணையின் செயல்பாடுகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். ‘‘1983-ம் வருஷம், இலங்கையில போர் ஆரம்பமானதும், அங்க யிருந்து தமிழ்நாட்டுக்குப் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களோட நலனுக்காக, ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகம் தொடங்கப் பட்டது. இங்க குடியேறின ஈழ மக்களோட வாழ்வாதாரத்துக்காக, அந்தக் கழகம் சார்பா, 1996-ம் வருஷம், இந்த ஊருல நிலம் வாங்கி விவசாயம் செய்ய ஆரம்பிச்சோம்.
ஆரம்ப காலங்கள்ல 3 ஏக்கர்ல விதைநெல் உற்பத்தி செஞ்சு, திருப்போரூர் பகுதியில விற்பனை செய்தோம். விவசாயப் பணியாளர்கள் பற்றாக்குறையால், நெல் சாகுபடியைக் கைவிட்டோம். ஏற்கெனவே இந்தப் பண்ணையில இருந்த 150 தென்னை மரங்கள் மூலமாவும், சுருள்பாசி, காய்கறி உற்பத்தி மூலமாவும் வருமானம் கிடைச்சது. 2007-ம் வருஷம் வரைக்கும் ரசாயன விவசாயம்தான் செஞ்சு கிட்டு இருந்தோம். பசுமை விகடன் படிக்க ஆரம்பிச்சதும் படிப்படியா இயற்கை விவசாயத்துக்கு மாறினோம். ஆடு, மாடு, கோழி, வாத்து உள்ளிட்ட கால்நடைகள் வளர்க்குறதுனால, இயற்கை விவசாயத்துக்குத் தேவையான இடுபொருள்கள் போதுமான அளவுக்குக் கிடைக்குது. தென்னை, காய்கறிகள், கீரை வகைகள், பசுந்தீவனம் உள்ளிட்ட பயிர் களுக்கு… மாட்டு எரு, ஆட்டு எரு, கோழி எரு, மண்புழு உரம், பஞ்சகவ்யா, அமுதக் கரைசல், மீன் அமிலம் உள்ளிட்ட இடு பொருள்கள் பயன்படுத்துறோம்.
தென்னை
2 ஏக்கல 150 தென்னை மரங்கள் இருக்கு. ஒரு வருஷத்துக்கு ஒரு மரத்துல இருந்து 60-70 காய்கள் கிடைக்கும். இங்க விளையுற தேங்காய் சுவையா இருக்கும். நாங்களா காய்கள் பறிக்குறதில்ல. முதிர்ச்சி அடைஞ்சு தானா விழும் வரைக்கும் காத்திருப்போம். கீழ விழும் தேங்காய்களைச் சேகரிச்சு, கொப்பரையா மாத்தி, எண்ணெய் ஆட்டி விற்பனை செய்றோம். 1 லிட்டருக்குக் குறைந்தபட்சம் 200 ரூபாய்ல இருந்து அதிக பட்சம் 250 ரூபாய் வரைக்கும் விலை கிடைக் கும். தேங்காய் புண்ணாக்கு விற்பனை மூலமாவும் வருமானம் கிடைக்குது. ஒரு கிலோ 50 ரூபாய்னு அதை விற்பனை செய்றோம்.
காய்கறிகள்…
ஒரு ஏக்கர்ல காய்கறிகளும் கீரை வகை களும் சாகுபடி செய்றோம். கத்திரி, வெண்டை, சுரைக்காய், பூசணி, மிளகாய் உள்ளிட்ட பலவிதமான காய்கறிகள் சுழற்சி முறையில பயிர் பண்றோம். புளிச்சக்கீரை, அரைக்கீரை, தண்டுக்கீரை, அகத்திக்கீரை உற்பத்தி செய்றோம். ரசாயன நச்சுத்தன்மை இல்லாமல், இயற்கை முறையில உற்பத்திச் செய்றதுனாலயும், நல்லா சுவையா இருக்குற துனாலயும் இந்தப் பகுதியில உள்ள ஏராளமான மக்கள் எங்க பண்ணைக்கே வந்து காய்கறிகள், கீரைகள் வாங்கிக்கிட்டுப் போறாங்க. சந்தை நிலவரத்தைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்வோம். இயற்கை விவசாயத்துல உற்பத்தி செய்றோம்ங் கிறதுனால, அதிக விலை வச்சு விற்பனை செய்றதில்ல. காய்கறித் தோட்டத்துல, வரப்பு ஓரமா வாழை மரங்கள் வச்சிருக்கோம். இலை, காய், தண்டு விற்பனை மூலமாவும் வருமானம் கிடைக்குது.
சுருள்பாசி…
இந்தப் பண்ணை தொடங்கப்பட்ட நாள்ல இருந்தே ஒரு ஏக்கர் பரப்புல சுருள்பாசி உற்பத்தி பண்ணிக்கிட்டு இருக்கோம். காய்கறிகளைவிடவும் இதுல பல மடங்கு புரதச்சத்து அதிகம். நாங்க உற்பத்தி செய்ற சுருள்பாசியை, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள ஈழ ஏதிலியர்களுக்குக் கட்டணம் இல்லாம கொடுக்குறோம். அவங்களோட தேவைக்குப் போக மீதியுள்ள சுருள்பாசியை, ஒரு கிலோ 800 – 1,000 ரூபாய்னு மற்ற ஈழ ஏதிலியர்களுக்கு விற்பனை செய்றோம். இதை வெளியில விற்பனை செஞ்சா, 1 கிலோவுக்கு 1,500 – 2,000 ரூபாய் விலை கிடைக்கும். ஆனா, அதுமாதிரி விற்பனை செய்றதில்லை.
பசுந்தீவனத்துக்கு 2 ஏக்கர்…
மேய்ச்சலுக்கு 2 ஏக்கர்…
எங்க பண்ணையில ஜெர்சி கலப்பின மாடுகள் 14 இருக்கு. போதுமான அளவுக்கு நல்லா சத்தான பசுந்தீவனம் கொடுத்தாதான் மாடுகள் நல்லா ஆரோக்கியமா வளரும். அதனால, 2 ஏக்கர் பரப்புல கோ-3, கோ-4, கம்பு நேப்பியர் உள்ளிட்ட பசுந்தீவன பயிர்கள் சாகுபடி செய்றோம். மாடுகள் நல்லா காலாற நடந்தாதான், நோய் இல்லாம ஆரோக்கியமா இருக்கும். 2 ஏக்கர்ல சாகுபடி செய்ற பசுந்தீவனமே 14 மாடுகளுக்கும் போதுமானதா இருக்கு. ஆனாலும், மாடுகள் தினமும் நல்லா நடந்துபோய், புல், பூண்டு களையும் களைச்செடிகளையும் சாப்பிடணும் கிறதுக்காக, 2 ஏக்கர் பரப்பை மேய்ச்சல் நிலமா பயன்படுத்துறோம்.
மண்புழு உரம்,
அசோலா உற்பத்தி…
2,200 சதுர அடி பரப்புல, மண்புழு உரம் தயாரிப்பு நிலையம் அமைச்சிருக்கோம். இங்க உற்பத்தி செய்ற மண்புழு உரத்தை எங்க பண்ணையில உள்ள தென்னை, காய்கறி உள்ளிட்ட பயிர்களுக்குப் பயன் படுத்திக்கிறோம். எங்க தேவைக்குப் போக மீதியுள்ள மண்புழு உரத்தை வெளியில விற்பனை செய்றோம். 1,000 சதுர அடி பரப்புல அசோலா உற்பத்திக்கான இடம் இருக்கு. 6 அடி நீளம், 3 அடி அகலம், முக்கால் அடி ஆழம் கொண்ட 50 பாத்திகள் அமைச்சு, அதுல தார்ப்பாலின் சீட் போட்டு, தண்ணீர் நிரப்பி அசோலா உற்பத்தி நடக்குது. இந்தப் பாத்திகள்ல இருந்து 15-20 நாள்களுக்கு ஒரு தடவை அசோலாவை எடுத்து… ஆடு, மாடு, கோழி, வாத்து மற்றும் மீன்களுக்குக் கொடுப்போம்.
நாட்டுக்கோழி வளர்ப்பு…
சிறுவிடை, பெருவிடை, கடக்நாத்… உள்ளிட்ட இனங்களைச் சேர்ந்த 400 நாட்டுக்கோழிகள் வளர்க்குறோம். இந்தக் கோழிகள் மூலம் கிடைக்குற முட்டைகள் மற்றும் குஞ்சுகள் விற்பனை மூலமா கணிச மான வருமானம் கிடைக்குது. 1 முட்டை 15 ரூபாய்னு விற்பனை செய்றோம். 1 நாள் வயசுடைய கோழிக்குஞ்சு 45 ரூபாய், 1-2 மாச வயசுடைய வளர்நிலை கோழி 150-200 ரூபாய்னு விற்பனை செய்றோம். தாய் கோழிகளை ஒரு வருஷம் வரைக்கும்தான் இங்க வச்சிருப்போம். அதுக்குப் பிறகு முட்டையிடுற திறன் குறைய ஆரம்பிச்சிடும். அதனால, இறைச்சிக் கோழிகளாக விற்பனை பண்ணிடுவோம். ஒரு தாய்க்கோழி 2 கிலோ எடை இருக்கும். ஒரு கிலோவுக்கு 350 ரூபாய் வீதம் கிடைக்கும்.
தீவன மேலாண்மை…
கோழிகளை, காலையில 6 மணியில இருந்து சாயந்திரம் 6 மணி வரைக்கும் மேய்ச்சலுக்கு விட்டுவிடுவோம். புல், பூண்டு, புழு, பூச்சிகளைச் சாப்பிட்டு நல்லா ஊட்டமா வளருது. ஆனாலும், எந்த விதத்துலயும் தீவனப் பற்றாக்குறை ஏற்படக் கூடாது… போதுமான அளவுக்குப் பசுந்தீவனம் கொடுக்கணுங்கற நோக்கத்தோடு 25 முருங்கை மரங்கள் வளர்க்குறோம்.
எங்க கோழிகளுக்குத் தினம்தோறும் முருங்கைக்கீரைக் கொடுப்போம். நல்லா விரும்பி சாப்பிடும். இது சத்தான தீவனம். இதைக் கொடுக்குறதுனாலதான், எங்க கோழிகள் நல்லா ஆரோக்கியமா வளருது. பெரும்பாலும் நோய்த்தாக்குதல்கள் ஏற்படுற தில்லை. பசுந்தீவனம் மட்டுமல்லாம… அடர்தீவனமும் கொடுக்குறோம். சோளம், கோதுமை தவிடு, கருவாட்டுத்தூள், தாது உப்புகள்… இவற்றையெல்லாம் ஒண்ணா கலந்து அரைச்சு, அடர் தீவனம் தயார் செய்றோம். இதை எங்களால தயார் செய்ய முடியாத நேரங்கள்ல காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்துல இருந்து கோழித் தீவனம் விலைக்கு வாங்கிக்குவோம். அங்க வாங்குற தீவனம் நல்ல தரமா இருக்கும். விலையும் நியாயமா இருக்கும். இயன்ற வரைக்கும் கடைகள்ல தீவனம் வாங்குறதை தவிர்ப்போம். வெயில் காலத்துல உடல் வெப்பத்தைத் தணிக்குறதுக்காகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துறதுக்காக எங்க கோழிகளுக்கு நெல்லிக்காய் கொடுப் போம். எங்க பண்ணையில நெல்லிக்காய் மரங்கள் 5 இருக்கு.
வாத்து வளர்ப்பு…
25 நாட்டு வாத்துகளும், 15 பங்களா வாத்து களும் வளர்க்குறோம். மேய்ச்சல் மூலம் கிடைக்குற புல், பூண்டு, புழு, பூச்சிகளைச் சாப்பிட்டு வளர்றதுனால வாத்துகளுக்குத் தீவனம் தர வேண்டியதில்லை. ஆனாலும், என்னோட மனநிறைவுக்காக, இரவு நேரத்துல வாத்துக் கொட்டகையில தவிடு போட்டு வைப்போம். நாட்டு வாத்து முட்டை 20, பங்களா வாத்து முட்டை 20 ரூபாய்னு விற்பனை செய்றோம்.
வான்கோழி…
கின்னிக்கோழி…
ஒவ்வொரு வருஷமும் ஜூன் மாசம் வான்கோழிக் குஞ்சுகள் விலைக்கு வாங்கிக் கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிப்போம். பெரிய கோழிகளாக வளர்த்து, டிசம்பர் மாசம் கிறிஸ்துமஸ் சமயத்துல விற்பனை செய்வோம். நல்ல விலை கிடைக்கும். பாம்புகள் வராமல் தடுக்க, கின்னிக்கோழிகள் வளர்க்குறோம். வெளியாள்கள் யாராவது பண்ணைக்குள்ள நுழைஞ்சா, உடனே சத்தம் எழுப்பும்.
ஆடு வளர்ப்பு…
25 ஆடுகள் இருக்கு. இது மூலமா கிடைக்குற குட்டிகளை வளர்த்து விற்பனை செய்றது மூலமாவும் வருமானம் கிடைக்குது. ஆடுகளோட பசுந்தீவன தேவைக்காக, எங்க பண்ணையில 15 கிளிரிசிடியா மரங்கள் வளர்க்குறோம். 5 சென்ட் பரப்புல வேலி மசால் சாகுபடி செய்றோம். மேய்ச்சல் மூலமாவும் ஆடுகளுக்குத் தீவனம் கிடைக்குது.
பால் விற்பனை…
ஜெர்சி கலப்பினத்தைச் சேர்ந்த 14 மாடுகள் வளர்க்குறோம். தினமும் குறைந்தபட்சம் 10 லிட்டர் பால் கிடைக்குது. 1 லிட்டர் 80 ரூபாய்னு விற்பனை செய்றோம். இந்த மாடுகளுக்கு, எங்க பண்ணையில உற்பத்தி செய்ற கோ-3, கோ-4, கம்பு நேப்பியர் உள்ளிட்ட பசுந்தீவனம் கொடுக்குறோம்.உலர் தீவன தேவைக்காக, சுற்றுவட்டாரப் பகுதிகள்ல உள்ள விவசாயிகள்கிட்ட இருந்து வைக்கோல் விலைக்கு வாங்குவோம். பால் கறவையில உள்ள மாடுகளுக்கு மட்டும் அடர் தீவனம் கொடுப்போம். 70 சதவிகிதம் தவிடு, 30 சதவிகிதம் கடலைப்புண்ணாக்கு கலந்து தினமும் ஒரு மாட்டுக்கு 3-6 கிலோ அடர் தீவனம் கொடுப்போம்.
கொட்டகை…
40 அடி நீளம், 20 அடி அகலத்துல மாட்டுக்கொட்டகை அமைச்சிருகோம். 60 அடி நீளம், 20 அடி அகலத்துல கோழிக் கொட்டகை, 30 அடி நீளம், 20 அடி அகலத்துல ஆட்டுக்கொட்டகை, 15 அடி நீளம், 15 அடி அகலத்துல வாத்துக்கொட்டகையும் இருக்கு. காற்றோட்டமும் வெளிச்சமும் போதுமான அளவுக்கு இருந்தாதான் கால்நடைகள் ஆரோக்கியமா வளரும். அதனாலதான் அதிகப் பரப்புல தாராளமா கொட்டகை அமைச்சிருக்கோம்.
பங்காசியஸ் மீன் வளர்ப்பு…
அரை ஏக்கர்ல குளம் அமைச்சு பங்காசியஸ் மீன் வளர்க்குறோம். 1,000 குஞ்சுகள் விடுவோம். இந்த மீன்கள் நல்லா வேகமா வளரும். தவிடு, கடலைப்புண்ணாக்கு, தேங்காய் புண்ணாக்கு கலந்து தீவனம் போடுவோம். பொதுவா, பங்காசியஸ் மீன் வளர்ப்புல ஈடுபடக்கூடியவங்க, கோழி இறைச்சி போடுவாங்கனு கேள்விப்பட்டிருக் கேன். ஆனா, நாங்க அதைப் போடுறதில்லை. கோழி இறைச்சி போட்டா, குளத்தோட சுகாதாரம் கெட்டுப்போயிடும். அது ஒட்டு மொத்த பண்ணையையுமே பாதிக்கும். குளத்துல குஞ்சுகள் விட்டதுல இருந்து 4-5 மாசங்கள்லயே ஒரு மீனுக்கு 500-600 எடை கிடைக்குது. 8-10 மாசங்கள்ல ஒரு மீன், சராசரியா 1 கிலோ எடை இருக்கும். இந்தப் பகுதி மக்கள், எங்க பண்ணைக்கு நேரடியா வந்து இந்த மீன்களை வாங்கிக்கிட்டுப் போயிடுறாங்க. இது, ரொம்ப சுவையா இருக்கு. இதுல அதிகமா முள் இருக்காது. நடு முள் மட்டும்தான் இருக்கு. 1 கிலோ உயிர் மீன் 150 ரூபாய்னு விற்பனை செய்றேன்.
மொத்த லாபம்…
தேங்காய் எண்ணெய், சுருள்பாசி, காய் கறிகள், கீரை வகைகள், மண்புழு உரம், அசோலா, நாட்டுக்கோழி முட்டை, கோழிக் குஞ்சு, இறைச்சிக்கோழி, ஆடு, வாத்து முட்டை, மீன் உள்ளிட்டவை விற்பனை மூலம், ஒரு வருஷத்துக்கு எல்லாச் செலவுகளும் போக, 12,00,000 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்குது. ரொம்ப ஏழ்மையான நிலையில இருக்குற ஈழ ஏதிலிய குடும்பங்களோட கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு இந்தப் பணம் பயன்படுது. இந்தப் பண்ணையில 8 விவசாயப் பணி யாளர்கள் நிரந்தரமா தங்கி விவசாயப் பணி கள் செய்றாங்க. இவங்களோட குடும்பத் தினரும் இதுல உழைப்பு செலுத்துறாங்க. இவங்க எல்லாரும் ஈழ ஏதிலியர்கள்தான். இயற்கை விவசாயம் செய்றதுனால, அவங்களுக்கும் ஆரோக்கியமான உணவு கிடைக்குது’’ என்று சொல்லி விடை கொடுத்தார்.
தொடர்புக்கு, ரத்தினராஜ சிங்கம், செல்போன்: 98840 00413.
Leave a Reply
You must be logged in to post a comment.