சாதி தமிழ்ச் சமூகத்தை பீடித்துள்ள பெரு நோய்!
நக்கீரன்
சாதி தமிழினத்தைப் பிடித்த பெரு நோய். அதனால் தமிழினம் சின்னா பின்னமாகப் போய்விட்டது. இன்று நேற்றல்ல, 2,000 ஆண்டுகளாக சாதீயம் தமிழ் சமூகத்தில் வேரூன்றி விட்டது. இதற்கு மூலகாரணம் இந்து அல்லது வைதீகவேத (சனாதன) மதமே. வருணாச்சிரமம் என்ற பாகுபாடு பிறப்பின் அடிப்பைடயில் நால் வருணத்தை உருவாக்கி பின்னர் இந்த நால் வருண பாகுபாடு பல நூறு சாதிகளை உருவாக்கியுள்ளது. இந்த சாதி கட்டமைப்பு உலகில் இந்து மதத்தில் மட்டுமே காணப்படுகிறது. சாதி மதம் தமிழ் இல்லை – அந்தச் சாதி மதத்தைத் தமிழ் கொள்வதில்லை.
இலங்கையில் வாழ்கின்ற தமிழர், சிங்களவர் ஆகிய தேசிய இனங்கள் வலுவான சாதிப் படிநிலை அமைப்பைத் தம்மகத்தே கொண்டிருக்கின்றன. காரணம் இன்றைய சிங்கள பவுத்தர்கள் ஒரு காலத்தில் வைதீக வேத மதத்திலிருந்து பவுத்தத்துக்கு மாறியவர்களே. ஆனால் இந்துத் தமிழர்களிடையே காணப்படுகிற இறுக்கமான சாதி அமைப்பு சிங்கள பவுத்தர்களிடம் இல்லை. தமிழர்கள் போலல்லாது சிங்களவர்கள் மத்தியில் சாதி அடிப்படையில் கல்வி மறுக்கப்படவில்லை. கோயில் வழிபாடு தடுக்கப்படவில்லை. ஆனால் பவுத்த மத பீடங்கள் சாதியடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. இது ஒரு முரண்பாடு.
சங்க காலத்தில் பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு இருக்கவில்லை. பிறப்பின் அடிப்படையில் ஆன வருணாச்சிரமம் மற்றும் சாதிப் பாகுபாடு அதன் இறுதிக் காலத்தில் (கிபி 1-2 நூற்றாண்டு) தமிழகத்தில் வேரூன்றத் தொடங்கியது.
சாதி முறைக்கு அடிப்படை இந்து சமயமே என்பது சமயக் கோட்பாடு. இந்து சமய சூழலே சாதி முறையைத் தோற்றுவித்தது. சாதி மக்கள் குழுக்கள் செய்யும் தொழில் அடிப்படையில் அமைந்தது என்பதுவே தொழிற் கோட்பாடு. தொழில்களின் தன்மை காரணமாக ‘தூய்மை’ ‘தீட்டு’ வரையறை செய்யப்பட்டன. உயர் சாதியினர் தமது சலுகைகளைத் தக்கவைக்க ஏற்றவாறு அமைத்துக்கொண்ட அமைப்பே அரசியற் கோட்பாடு.
பிறப்பின் அடிப்படையில் தமிழ் சமூகத்தில் சாதி வேற்றுமை இருந்திருக்கவில்லை என்பதற்கான சான்று சங்கப் புலவர் மாங்குடி மருதனார் பாடிய பாடல் ஒன்றில் காணப்படுகிறது. துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது வேறு குடிகள் இல்லை என்கிறது அப்பாடல். (புறநானூறு.335.7-8). அந்தப் பாடல் இதோ.
அடலருந் துப்பின் .. .. .. ..
.. .. .. .. குருந்தே முல்லை யென்று
இந்நான் கல்லது பூவும் இல்லை;
கருங்கால் வரகே, இருங்கதிர்த் தினையே,
சிறுகொடிக் கொள்ளே, பொறிகிளர் அவரையடு
இந்நான் கல்லது உணாவும் இல்லை;
துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி,
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்,
கல்லே பரவின் அல்லது,
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே. (புறநாநூறு 335)
இதன் பொருள்: நான்கு வகையான பூக்கள் – குரவம், தளவு, குருந்து, முல்லை,
நான்கு வகையான உணவு -வரகு, தினை, கொள், அவரை ,
நான்கு வகையான குடி – துடியன், பாணன், பறையன், கடம்பன் ,
போரில் இறந்த வீரர்களின் நடுகல்லைத் தவிர, வழிபடுவதற்கேற்ற கடவுள் வேறு எதுவும் இல்லை.
சங்க காலத்தில் குடிகள் இருந்தன. குடிகள் சேர்ந்து குலம் இருந்தன. சாதிகள் இருக்கவில்லை.
19 ஆம் நூற்றாண்டில் பிறந்து மறைந்த வள்ளலார் சாதி, மதங்களை – பெரியார் பிறப்பதற்கு முன்னரே – கடுமையாகச் சாடியிருக்கிறார். வள்ளலார் சனாதன தர்மத்தை ஏற்றவரில்லை. சனாதன தர்மம் என்றாலே அதில் மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வு உண்டு. வள்ளலார் அதற்கு முழுக்க முழுக்க எதிரானவர். எல்லா உயிரையும் தன் உயிர்போலப் பார்க்க வேண்டும் என்பதைத்தான் வள்ளலார் திரும்பத் திரும்பச் சொன்னார்.
‘நால்வருணம், ஆசிரமம், ஆசாரம் முதலான நவின்ற கலை சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே’ என்கிறார் வள்ளலார். ‘தோல் வருணம் கண்டு மேல் வருணம் அறிவாரில்லை’ என்றும் சொல்கிறார். ‘மதித்த சமயமத வழக்கமெல்லாம் மாய்ந்தது வருணாசிரம் என்னும் மயக்கமும் சாய்ந்தது’ என்கிறார்.
மதமென்னும் பேய் பிடிக்காமல் இருக்க வேண்டும். பெண்ணாசை மறக்க வேண்டும், உன்னை மறக்காமல் இருக்க வேண்டும். அறிவு வேண்டும், செல்வமாக உன் கருணை வேண்டும். வேதம், ஆகமம் புராணம், சாத்திரம், இதிகாசம் எதையும் நம்பவேண்டாம் அது எதுவுமே உண்மையைச் சொல்லவில்லை என வள்ளலார் அடித்துச் சொல்கிறார். வேதம், ஆகமம், இதிகாசம், புராணம் முதலிய கலைகள் எதனிலும் இலட்சியம் வைக்க வேண்டாம் என்கிறார்.
மேலே கூறியவாறு சாதியமைப்பின் ஊற்றுக்கண் வர்ணாசிரம தர்மமே. வருணாசிரம கோட்பாட்டின்படி பிராமணரே உயர்ந்தவர்கள். அடுத்து சத்திரியர்களும், வைசியர்களும் நான்காவதாக சூத்திரர்களும் வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இந்துக்கள் கொண்டாடும் மனுஸ்மிருதியில் (மனுநீதியில்) பிராமணர்கள் (கடவுளின்) தலையில் இருந்தும், சத்திரியர்கள் தோளில் இருந்தும், வைசியர்கள் தொடையில் இருந்தும், சூத்திரர்கள் காலில் இருந்தும் படைக்கப்பட்டுள்ளார்கள் எனச் சொல்லப்பட்டுள்ளது. இதில் பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய மூன்று வர்ணத்தினரும் இரு பிறப்பாளர்கள், ஆனால் சூத்திரர்களுக்கு ஒரு பிறப்புதான் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அது என்ன இரு பிறப்பு?. முதல் பிறப்பு உடலின் பிறப்பு. இரண்டாவது பிறப்பு உபநயனம் எனப்படும் பூணூல் போடுவது. அது தன்னுணர்வு பெறுவதன், ஒரு மானுட ஆன்மாவாக முதிர்ச்சியடைவதின் அடையாளம். சூத்திரர்களுக்குப் பூணூல் கிடையாது என்று சொல்லும்போது அவர்கள் வெறும் மனித உடல்கள்தான். பிறருக்குச் சேவை செய்வதைத் தவிர அவர்களுக்கென்று சுயமாக தன்னுணர்வு எதுவும் கிடையாது என்று கூறுவதற்கு ஒப்பானதாகும்.
பகவத் கீதையை உச்சிமீது வைத்துப் போற்றும் தமிழ் இந்துத்துவவாதிகள் இருக்கிறார்கள். ஆனால் அந்தக் கீதை மனுஸ்மிருதி சொல்லும் வர்ணாச்சிர தர்மத்தை நியாயப்படுத்துகிறது. உறுதி செய்கிறது. கீதையில் (4:13) கண்ண பரமாத்தவா என்ன சொல்கிறார்?
“சாதுர் வர்ண்யம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஷஹ” (பகவத்கீதை 4:13)) என்று கண்ணன் கூறுகிறான். இதன் அர்த்தம்: “நானே மனிதனை அவனுடைய குண கர்மத்தின் அடிப்படையில் நான்கு வர்ணங்களாக பிரித்தே படைத்தேன்” என்பதாகும்.
கண்ணன் நான்கு வர்ணம் பற்றித்தானே பேசுகிறார், சாதிகள் பற்றிப் பேசவில்லையே எனச் சிலர் கேட்கக் கூடும். அதற்கான விடை அதே கீதையின் 18ஆவது இயலில், பிறப்பின் அடிப்படையில், பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று நான்கு வருணங்களின் பெயர்களையும், அவர்களுக்கான ‘கடமைகள் அல்லது தருமங்களையும்’ சொல்லிவிடுகிறார் கிருஷ்ண ‘பகவான்’!
“எதிரிகளை எரிப்பவனாகிய அர்ஜுனனே! பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரரகளுடைய கருமங்கள் அவர்களின் பிறப்புக்குத் தக்கவாறு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
சாந்தமான குணம், சுய கட்டுப்பாடு, தவ வலிமை, தூய்மை, அமைதி, நேர்மை, ஞானம், நல்லறிவு, கடவுள் நம்பிக்கை ஆகியவை பிராமணனாகப் பிறந்தவனின் கருமங்கள் ஆகும். வீரம், துணிவு, உறுதி, திறமை, போரில் புறங் காட்டாமை, கொடைமை, இறைமை ஆகியவை சத்திரியனாகப் பிறந்தவனின் கருமங்கள் ஆகும். உழவு, கால்நடை பராமரிப்பு, வணிகம் ஆகியவை வைசியனாகப் பிறந்தவனது கருமங்கள் ஆகும். ஏவல் பணி செய்வது சூத்திரனாகப் பிறந்தவனது கருமம் ஆகும்.” (அத் .18- 41முதல் 47 வரை).
இந்த நான்கு வர்ணம்தான் நாலாயிரம் சாதிகளாகப் பல்கிப் பெருகியது. நால் வர்ணத்துக்கு அப்பாலும் சென்று பஞ்சமர் அல்லது தீண்டப்டாதோர் என்ற ஐந்தாவது வர்ணத்தையும் உருவாக்கி வைத்துள்ளார்கள். ஆகவே, வைதீக மதத்தை விட்டு வெளியேறி, “சாதி ஒழிக” என்று முழக்கமிட்டால் அது பயன் தரும். வைதீக மதத்தை விட்டு வெளியேறாமல், “சாதி ஒழிக” என்று கத்துவது அத்திபாரம் இல்லாமல் வீடுகட்டுவதற்கு சமம் ஆகும். சாக்கடைக்குள் நின்றுகொண்டு, “துர்நாற்றம் ஒழிக” என்று கத்துவது போன்றது.
மேலே கூறியவாறு இந்த நான்கு வர்ண அமைப்பே பின்னர் அவரவர் செய்யும் தொழில் அடிப்படையில் நூற்றுக் கணக்கான சாதிகள் உற்பத்தி செய்யப்பட்டன. அப்படி உற்பத்தி செய்யப்பட்ட பின்னர் அது பிறப்பின் அடிப்படையில் அமைந்துவிட்டது. முன்னைய காலங்களில் வேளாளர் என்போர் பயிர்த் தொழில் செய்தார்கள். இன்று அவர்களில் பெரும்பான்மை வேறு வேறு தொழில் செய்கிறார்கள். இருந்தும் பிறப்பின் அடிப்படையில் வந்த சாதி தொடர்கிறது.
மொத்தம் 443 ஆண்டு கால கொலனித்துவ ஆட்சி, பொருளாதார உற்பத்தியில் ஏற்பட்ட மாற்றங்கள், எல்லோரும் கல்வி கற்கும் வாய்ப்பு, போக்குவரத்து போன்ற காரணிகளால் சாதிக் கட்டமைப்பில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சில சாதிகள் வழக்கொழிந்து போயின. சில சாதிகள் புதிதாகப் புகுந்து கொண்டன. தகப்பன் செய்த தொழிலை மகன் செய்ய வேண்டும் என்ற நியதி பேரளவு குறைந்துவிட்டது.
வி.புலிகள் இயக்கத்தில் எல்லா சாதியினரும் இருந்தார்கள். இயக்கம் சாதிப் பாகுபாட்டை கடைப்பிடிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் வெள்ளாள சாதியை விட வேறு சாதியினரே வி.புலிகள் இயக்கத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள். அதன் தலைவரே வெள்ளாள சாதியைச் சார்ந்தவர் அல்ல. ஆனால் வி.புலிகள் காலத்தில் சாதி ஒழியவில்லை. ஒளிந்திருந்தது. இப்போது அது மீண்டும் தலைகாட்டுகிறது.
புலம்பெயர் தேயத்தில் ஆங்காங்கே கலப்புத் திருமணங்கள் நடக்கின்றன. ஆனால் அவற்றின் எண்ணிக்கை மிகக் குறைவு. அவை பெரும்பாலும் காதல் திருமணங்கள். இங்கும் உயர் சாதிப் பெற்றோர்கள் தாங்கள் என்ன சாதி என்று பிள்ளைகளுக்கு பூடகமாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள். பிற சாதியினரோடு பழக வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்கிறார்கள். பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவரிடையே இந்த சாதி உணர்வு இருக்கிறது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இது பற்றி விரிவாக உரையாடி இருந்தோம். பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவரிடையே இந்த சாதி உணர்வு இருக்கிறது என்ற செய்தி எனக்கு வியப்பாக இருந்தது. ஆனால் அதுதான் உண்மை. இன்றும் பேசிச் செய்கிற திருமணங்களில் சாதி பார்க்கப்படுகிறது. ஊடகங்களில் வரும் மணமகன் – மணமகள் தேவை என்ற விளம்பரங்களைப் பார்த்தால் அந்த உண்மையைப் புரிந்து கொள்ளலாம்.
சாதி உயிர்ப்போடு தொடருவதற்குக் அதன் படிமுறைக் (hierarchical) கட்டமைப்பே காரணம் ஆகும். ஒவ்வொரு சாதியும் தங்களுக்குக் கீழேயுள்ள சாதிகளைப் பார்த்து மகிழ்சி அடைகிறது. சித்தார்த் கூட தனக்கு மேலேயுள்ள வெள்ளாள சாதியினரை கடுமையாகச் சாடுகிறார். அல்லது நோகிறார். ஆனால் அதற்கு மேலேயுள்ள பிராமணர்களைப் பற்றிப் பேசுவதில்லை. காவி உடையில் வலம் வரும் மறவன்புலவு சச்சிதானந்தனின் சிவசேனை பற்றிப் பேசுவதில்லை. இராஷ்டிரிய சுயசேவா சமிதியின் (RSS) கட்டுப்பாட்டிலுள்ள பாரதிய ஜனதா கட்சியின் இன்னொரு முகம்தான் சிவசேனை அமைப்பு.
இலங்கைத் தமிழரசுக் கட்சி தோன்றிய காலம்தொட்டு சாதி ஒழிப்பை மையக் கோட்பாடாக கொண்டு செயல்பட்டு வருகிறது. சாதியை ஒழிக்க சமபந்தி உணவு, ஆலயப் பிரவேசம், பள்ளிக் கூடங்களில் அனுமதி என பல போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளது. காலம் சென்ற திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர். இராசவரோதயம் சாதிப்பாகுபாடு காட்டுவதற்கு எதிராக தனிச் சட்ட மூலம் ஒன்றைக் கொண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார். இந்தச் சட்டத்தின் கீழ் சாதிப் பாகுபாடு காட்டுவது, திருக்கோயில்களுக்குள் நுழைய அனுமதி மறுப்பது தண்டனைக்குரிய குற்றங்களாகும்.
சித்தார்த் அவர்களது மனக் கசப்பு, ஆதங்கம் எனக்குப் புரிகிறது. ஆனால் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இருந்த நிலைமை வேறு இன்றுள்ள நிலைமை வேறு. பள்ளிக் கூடங்களில் கல்வி மறுக்கப்படவில்லை. நல்லூர் உட்பட இந்துக் கோயில்களின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் சாதியுணர்வு உச்சமாகவுள்ளது. சாதி அடிப்படையில் கட்சிகள் இயங்குகின்றன. அதே நேரம் சமூகப் போராளிகளான பெரியர், அண்ணா போன்றவர்களது தொடர் போராட்டங்கள் காரணமாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பிற்பட்ட சமூகத்தைச் சார்ந்த மு.கருணாநிதியால் வர முடிந்தது. இன்று அவரது மகன் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கிறார்.
கல்வி, வேலை வாய்ப்பு துறைகளில் குறைந்த சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன் காரணமாக குறைந்த சாதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்லூரி, பல்கலைக் கழகம் போன்றவற்றின் கதவுகள் அகலத் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்ச் சமூகத்தில் காணப்படும் சாதிப் படிமுறையை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்றால் கல்வி கற்கும் வாய்ப்பு எல்லோருக்கும் பொதுவாக்கப்பட வேண்டும். அது ஒன்று மட்டுமே சமத்துவ சமூகத்தை உருவாக்கும். இந்தக் கருத்தை சிலப்பதிகார காவியத்தில் கூறப்படும் மதுரையை ஆண்ட பாண்டியன் முதலாம் நெடுஞ்செழியன் (Nedunj Cheliyan I) கல்விச்சிறப்பினை முதன் முதலில் உலகிற்கு உணர்த்தியுள்ளான். இவனது பாடல் ஒன்று புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. புறப்பாடலில் இவன் கல்வியின் சிறப்புகளைக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்பாடலில்
“ உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!
பிறப்போரன்ன உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
முத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லூள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேல் பால் ஒருவனும் அவன் கண்படுமே. (புறம்-183)
“ஆசானுக்கு உதவி செய்யவேண்டும்; மிக்க பொருளைத் தரவேண்டும். பணிவோடு கற்பது நல்லது! ஒரு குடும்பத்தில் பிறந்தாலும் கற்றவனையே தாய் விரும்புவாள். ஒரு குடும்பத்தில் அகவையால் (வயதால்) மூத்தவனைக் காட்டிலும் கற்ற ஒருவனையே, இளையவனே ஆகிலும் முந்துரிமை தந்து போற்றுவாள் அறிவுடையோன் வழியில்தான் ஆட்சி செல்லும்! கீழ் இனத்தவன் கற்றால் மேலினத் தவனைவிட மேலாக மதிப்பர்!” என கல்வியின் சிறப்பினைப் போற்றி உயர்த்திக் கூறியுள்ளான். கல்வி கைப்படும் போது பொருளும் கைப்படும்.
இரண்டாயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் நோயை ஒரு குறுகிய காலத்தில் குணப்படுத்திவிட முடியாது. வெள்ளாள சமூகத்தைச் சேர்ந்த பலர் முற்போக்குச் சிந்தனை உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களை ஒரே தராசில் போட்டு நிறுக்கக் கூடாது.
கனடாவில் கல்வி எல்லோர்க்கும் பொதுவாக்கப்பட்டுள்ளது. தாயகத்தைப் போலல்லாது இங்கு எல்லோருக்கும் உயர் கல்வி கற்கும் வாய்ப்பு சமமாக (equal playing field) உள்ளது. பொருளாதாரத்தில் குறைந்த மாணவர்கள் மேற்படிப்பை முடிக்க அரசு குறைந்த வட்டியில் கடன் கொடுக்கிறது. படிப்பை முடித்து ஒரு வேலையில் அமர்ந்த பின்னரே கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். இதனால் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒரு தொழிலாளியின் மகனோ – மகளோ பல்கலைக் கழகங்களில் மருத்துவம் படித்து மருத்துவர்களாக வர முடியும். வருகிறார்கள்.
சாதியின் பெயரால் காணப்படும் ஒடுக்குமுறை அல்லது அடக்குமுறை கண்டிக்கப்பட வேண்டும். களையப்பட வேண்டும். சித்தார்த் போன்றவர்களின் ஆதங்கங்களில் நியாயம் இருக்கிறது. அவர்களுக்கு சமூகம் நீதி வழங்க வேண்டும்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று உரத்துச் சொன்ன திருவள்ளுவர் போற்றப்படும் நாட்டில், பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் கொடுமை ஒழிக்கப்பட வேண்டும். ஒரே சமூகத்தில் ஒரு சாரார் இன்னொரு சாராரை ஒடுக்குவதும் அடக்குவதும் அநீதியாகும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே தமிழர்களது கோட்பாடாகும்.
சமூகத்தில் பிற்படுத்தப்பட்டுள்ள மக்கள் உயர் கல்வி கற்க சகல வசதிகளையும் வாய்ப்புக்களையும் உயர்சாதி வைதீக மதப் பெரியார்கள் செய்து கொடுக்க வேண்டும். உயர் கல்வி கற்க ஒருவரது சாதி தடையாக இருக்கக் கூடாது. இருக்கவும் முடியாது.
“சாதி இரண்டொழிய வேறில்லை என்றே
தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்த மென்போம்
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர்” (மகாகவி பாரதியார்)
Leave a Reply
You must be logged in to post a comment.