ஜனாதிபதி தேர்தலும் ஏமாற்றும் தமிழ்த் தலைமைகளும் – ஒரு மறுத்தான்
நக்கீரன்
கடந்த ஞாயிறு (04-07-2024) வெளிவந்த காலைமுரசு மின் ஏட்டில் “ஜனாதிபதி தேர்தலும் ஏமாற்றும் தமிழ்த் தலைமைகளும்” என்ற தலைப்பில் சிவகரன் எழுதிய கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது. இந்தக் கட்டுரையை காலைமுரசு மின் ஏட்டின் ஆசிரியர் படித்துவிட்டு வெளியிட்டதாகத் தெரியவில்லை. காரணம், கட்டுரை சமன்பாடில்லாமல் ஒருதலைப்பட்சமாக எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக நல்லாட்சிக் காலத்தில் அரசோடு இணக்க அரசியல் நடத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு “காணாமல் ஆக்கப்பட்டுள்ளோர் விடயமோ அரசியல் கைதிகள் விடுதலையோ அபகரிக்கப்பட்ட நில விடுவிப்போ எதுவும் நிகழவில்லை. மாறாக தமிழ்த்தேசியம் கரைந்து போனது. அந்த நிலையை ஏற்படுத்தியவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரே. அவர்கள் நடத்திய இணக்க அரசியலால் தமிழ்த்தேசிய அரசியல் சின்னா பின்னமாகியது. மக்களும் அவர்களைப் போல் நலன் நாடி ஓடினார்கள். அதன் விளைவு அடுத்து வந்த தேர்தல்களில் இவர்களுக்கு புரிய வைத்தது. ஆனாலும் திருந்தவில்லை.”
நல்லாட்சிக் காலத்தில் அரசியல் கைதிகள் முற்றாக விடுவிக்கப்படவில்லை, போருக்குப் பின் இராணுவத்தின் பிடியில் இருந்த காணிகள் முற்றாக விடுவிக்கப்படவில்லை என்று எழுதினால் அதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் நல்லாட்சி காலத்தில் ஒன்றுமே நடைபெறவில்லை, ததேகூ நடத்திய இணக்க அரசியல் சின்னாபின்னமாகியது, தமிழ்த் தேசியம் கரைந்து போனது என்று எழுதுவது கட்டுரையாளரின் அறியாமை அல்லது காழ்ப்புணர்வை வெளிப்படுத்துவதாக உள்ளது.
சிவகரன் ஒரு காலத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிப முன்னணியின் செயலாளராக இருந்தவர். கடும்போக்காளர். கட்சித் தலைவர்களைப் பொதுவெளியில் விமர்ச்சித்தவர். அதன் விளைவாக கட்சயில் இருந்து வெளியேற்றப்பட்டவர். அதன் தாக்கம் கட்டுரையில் வெளிப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதாவது தமிழரசுக் கட்சிக்கு எதிரான தனது அரிப்பைத் தீர்த்துக்கொள்ள காலைமுரசைப் பயன்படுத்தியுள்ளார்.
இனி சிவகரன் எழுதிய கட்டுரையில் தமிழரசுக் கட்சிக்கு எதிரான அவரது காரசாரமான விமர்சனத்தை விரிவாகப் பார்க்கலாம்.
ஜனாதிபதி தேர்தலும் ஏமாற்றும் தமிழ்த் தலைமைகளும்
(1) ஏமாற்றுவது என்பது அரசியலில் ஒரு கலையே. நம்பி ஏமாறுவது என்பதும் வாழ்வியலின் ஒரு முறையே. இதைத்தான் வரும் ஒவ்வொரு தேர்தல்களிலும் மாறாத மந்திரமாய் ஓதுகின்றனர். தந்திர யுக்தியை பயன்படுத்தி கடந்த 70 ஆண்டுகளா காலத்துக்கு காலம் ஆட்சியாளர்கள் ஒரே விதமான வழிமுறையே கடைப்பிடிக்கின்றனர்.வாக்குப் பெறுவதற்காக பல்வேறு விதமான வாக்குறுதிகளை பொறுப்பின்றி அள்ளி வீசி அதனால் தமிழ்த் தலைமைகளை ஏமாற்றி நம்ப வைத்து ஒப்பந்தம் தார்மீக ஆதரவு தலைவர்களுக்கு இடையேயான இணக்கத்தின் அடிப்படையில் ஆதரவு என பல வழிமுறைகளை சிங்களத் தரப்பு கையாண்டு வருகிறது.
ஒவ்வொரு முறையும் தமிழ்த் தலைமைகள் மக்கள் நலன் சார்ந்து ஏமாறுவது போல் பாசாங்கு காட்டிக் கொண்டு தமது இருப்பை நலன் சார்ந்து உறுதிப்படுத்துகின்ற நெறிமுறைக்காக உபயோகித்து தமது சுயநலத்துக்காக தமிழ் மக்களை வாக்களிக்க கூறுகின்ற ஏமாற்று வேலையையே தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்கள்.
பதில்: தமிழ் மக்களை வாக்களிக்குமாறு கேட்டது சரி. ஆனால் அது எப்படி ஏமாற்று வேலையாக இருக்க முடியும். பாசாங்கு காட்டுவதாக இருக்க முடியும்? கட்டுரையாளர் மக்களை ஏமாற்றுவது சுலபம் என்கிறார். மக்கள் என்ன அறிவிலிகளா? மந்தைகளா? மூக்கைப் பிடித்தால் ஆ என்னத் தெரியாதவர்களா?
(2) இம்முறையும் அதுவே தொடர போகிறது. யுத்தத்தை நடத்தியவர்க்கும் அதை களத்தில் நின்று படையினரை வழிநடத்தியவர்க்கும் இடையேயான போட்டியில் களத்தில் நின்றவரை ஆதரிக்க வைத்து தமிழ் மக்களையும் முட்டாளாக்கி வாக்களிக்க வைத்த மூன்றாம் தரஅரசியலில் தமிழ்த்தலைமைகள் ஈடுபட்டன.
பதில்: கட்டுரையாளருக்கு நடைமுறை அரசியல் தெரியாது. எதையும் கருப்பு – வெள்ளையாகப் பார்க்கிறார். ஓர் அரசனுக்கு ஒரு துணை இல்லை; பகையோ எனில் இரண்டு என்னும் போது, அதனுள் ஒன்றை அப்போதைக்குத் தனக்கு இனிய துணையாகுமாறு செய்து கொள்ளல் வேண்டும். அதுதான் அறிவுடமை என்கிறார் வள்ளுவர்.
“இரண்டு தீமைகளில் சிறிய தீமையைத் தேர்ந்தெடுப்பது” (the lessor of two evils”) என்ற ஒரு ஆங்கிலச் சொற்றொடர் உண்டு. இரண்டு விருப்பங்களுக்கு இடையில் தேர்வு செய்வதற்கு ஒவ்வொன்றின் நன்மை தீமைகளையும் எடைபோட்டு, குறைந்த தீங்கு அல்லது சேதத்தை ஏற்படுத்தும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தச் சொற்றொடர் தனிப்பட்ட முடிவுகள் முதல் அரசியல் தேர்வுகள் வரை பல்வேறு சூழ்நிலைகளில் பயன்படுத்தப் படலாம். எடுத்துக்காட்டாக, அரசியலில், வாக்காளர்கள் தாங்கள் முழுமையாக ஆதரிக்காத ஆனால் தங்கள் எதிரிகளை விட சிறந்தவர்கள் என்று அவர்கள் நம்பும் வேட்பாளர்களுக்கு இடையே தேர்வு செய்ய வேண்டியிருப்பதைக் காணலாம். இந்த உத்தியைத்தான் இலங்கைத் தமிழரசுக் கட்சி கையாண்டு வருகிறது. அதன் காரணமாகவே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த இராசபக்சாவுக்குப் பதில் யுத்தத்தை நடத்திய இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு தமிழரசுக் கட்சி ஆதரவு வழங்கியது. மக்கள் அதனை ஏற்றுக் கொண்டார்கள். அதுதான் முக்கியம்.
(3) பின்னர் நல்லாட்சி அரசு எனும் சொல்லாடலில் முழுக்க முழுக்க இணக்க அரசியலை நடத்தி இதயத்தில் இருக்கிறோம் என ஏமாற்று வார்த்தைகளைப் பேசி ஒற்றை ஆட்சிக்குள் சமஷ்டி கொண்டு வருவோம் என பசப்பு வார்த்தைகளை எல்லாம் கூறி தமிழ் மக்களை ஏமாற்றி தங்கள் பதவி சுகங்களை அடைவதிலும் சுகபோக வாழ்வை அனுபவிப்பதிலும் வெற்றி கண்டனர்.
பதில: இந்த விமரிசனம் மூன்றாந்தர அரசியல் விமரிசனம். சிவகரன் இப்படி எழுதுவது தமிழரசுக் கட்சி மீதுள்ள அவரது வெறுப்பையும் அரிப்பையும் காட்டுகிறது.
(4) கூட்டமைப்பைக் கொண்டே வடக்கில் ஆயிரம் விகாரைகள் அமைப்பதற்கும் அரசு வரவு – செலவுத் திட்டத்தில் ஆதரவு பெற்றது. மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர்களாகவும் அரசின் ஏகப் பிரதிநிதிகளாகவும் நிழல் அமைச்சர்கள் போலவும் நம்மவர்கள் வலம் வந்தார்கள். நடந்தவை என்ன? புதிய அரசமைப்பும் முற்றுப் பெறவில்லை. காணாமல் ஆக்கப்பட்டுள்ளோர் விடயமோ அரசியல் கைதிகள் விடுதலையோ அபகரிக்கப்பட்ட நில விடுவிப்போ எதுவும் நிகழவில்லை. மாறாக தமிழ்த்தேசியம் கரைந்து போனது. அந்த நிலையை ஏற்படுத்தியவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரே. அவர்கள் நடத்திய இணக்க அரசியலால் தமிழ்த்தேசிய அரசியல் சின்னா பின்னமாகியது. மக்களும் அவர்களைப் போல் நலன் நாடி ஓடினார்கள். அதன் விளைவு அடுத்து வந்த தேர்தல்களில் இவர்களுக்கு புரிய வைத்தது. ஆனாலும் திருந்தவில்லை.
பதில்: “அரசியல் என்பது சாத்தியமான, அடையக்கூடிய கலை – அடுத்த சிறந்தவற்றின் கலை.” “சாத்தியமானவற்றின் கலை” என்பது அரசியல் என்பது இலட்சியவாதத்திற்கு பதிலாக நடைமுறைவாதத்தின் விடயம் என்ற கருத்தாகும்.(“politics is the art of the possible, the attainable — the art of the next best.” The “art of the possible” is the idea that politics is a matter of pragmatism, instead of idealism.
புதிய அரசமைப்பு முற்றுப் பெறவில்லை என்பது உண்மைதான். அதற்காக அந்த முயற்சியில் இறங்கியது தப்பா? அல்லது அந்த முயற்சியில் இறங்கியிருக்கவே கூடாதா? மனித முயற்சியில் வெற்றியும் தோல்வியும் இடம் பெறுவது இயல்பு. காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை (Office of the Missing People ) நிறுவுவதற்கான சட்டமூலம் 2016 ஓகஸ்ட் 11 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 2018 பெப்ரவரி 28 ஆம் திகதி, அரசியலமைப்புப் பேரவையின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏழு ஆணையாளர்களும் ஒரு தலைவரும் நியமிக்கப்பட்டனர். சுதந்திரமானதும் நிரந்தரமானதும் ஆன இந்த அலுவலங்களின் நோக்கம் காணாமற் போன ஆட்கள் தொடர்பாக உண்மையைக் கண்டறியவும் விசாரிக்கவும் தேடவும் நிவாரணங்களை வழங்கவும் OMP (Office of the Missing People ) என்ற சட்ட மூலம் 2016ம் செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த அலுவலகம் செப்தெம்பர் 2018 இல் செயல்படத் தொடங்கியது. இதே போல் காணாமற் போன ஆட்களை அடையாளம் காண்பதற்கும் மோதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் (Office for Reparations) 2018 இல் உருவாக்கப்பட்டது. அரசாங்கம் இழப்பீடு வழங்க பெருந்தொகை பணத்தை ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்த இரண்டு சட்டங்களும் போதியதாக இல்லை. அவற்றை திருத்தி அமைக்குமாறு தமிழரசுக் கட்சி நா.உறுப்பினர்கள் அவ்வப் போது குரல் எழுப்பி வருகிறது.
(5) இப்பொழுது மக்களும் சந்தர்ப்பவாத அரசியலை பழகிவிட்டனர். தமிழ் கட்சிகளும் சீர்குலைந்துவிட்டன. தலைமையற்ற நிலைக்குள் இருக்கும் தமிழ் மக்களை யார் யாரோ வழிப்போக்கர்கள் எல்லாம் வழி நடத்த முயல்கிறார்கள். அவ்வளவு மோசமான இழி நிலைக்கு தமிழ்மக்களை இட்டுச் சென்றுள்ளன தமிழ்த் தலைமைகளே. இந்தத் தலைமைகளை நம்பிய தமிழ் மக்களுக்கு அவர்கள் திருப்பி வழங்கிய பெரு வெகு மரியாதை தமிழ்த் தேசிய நீக்கமே.
பதில்: தமிழ்த் தலைமை ஒரு சனநாயகக் கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு எவற்றைச் செய்யலாமோ அதனைச் செய்து கொண்டிருக்கிறது. இந்தத் தமிழ்த் தலைமைகள் தமிழ் மக்களை மோசமான இழி நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என்பது உண்மையானால் மக்கள் அவர்களை அடுத்த தேர்தலில் தோற்கடிப்பார்கள். அது சரி. அது என்ன தமிழ்த் தேசிய நீக்கம்? தன்னை ஒரு 22 கரட் தேசியவாதி என கருதிக்கொண்டு தமிழ்த் தேசியம் பற்றி சிவகரன் வகுப்பு எடுக்கப் பார்க்கிறார். தான் பிறந்த மண்ணை, தன் தாய் மொழியை, பண்பாட்டை, இனத்தின் விடுதலையை யார் நேசிக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் தேசியவாதிகள்தான். தமிழ்த்தேசியம் என்பது தமிழர்கள் தங்களைத் தேசிய இனமாகத் திரட்டிக்கொள்வதை நோக்கிய கருத்தோட்டம் ஆகும்.
(6) மாகாண சபை தேர்தல் நடக்காமல் போனதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரே காரணம். முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அப்போதைய செல்வாக்கைக் கண்டு அஞ்சியே அக்காலத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் உதவியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே மாகாணசபை திருத்தச்சட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வழிகாட்டி நீண்ட காலம் அத்தேர்தல் கிடப்பில் இருப்பதற்குக் காரணமானார்.
தேர்தல் நடத்துவதில் சட்ட சிக்கல் ஏற்பட்டிருந்தது. ஆகவே இந்த இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கியதே இவர்கள்தான்.
இதற்கு அரசு தனிக் காரணம் அல்ல. கூட்டமைப்பினர்தான் இதற்கு பொறுப்பு சொல்ல வேண்டும். இவை எல்லாம் தேர்தல் காலத்து திருவிழா போல் அகன்று போய் விடக்கூடிய ஏது நிலைகளும் உண்டு. தற்போதைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இதயசுத்தியான யோக்கியர்கள் அல்லர். அரசோடு இருட்டு வீட்டு உறவும் தமிழ் மக்கள் மத்தியில் மூச்சு விடாத உணர்ச்சிவசமான பேச்சுமாக மதுபானச்சாலைக்கு அனுமதி பத்திரம் வாங்கி பல கோடிக்கு விற்று கோடீஸ்வரராகியுள்ளனர்.
பதில்: இணக்க ஆட்சிக் காலத்தில் அரசாங்கம் சகல மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும், மகளிருக்கு 25 விழுக்காடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற சட்ட திருத்தத்துக்கு மட்டும் தமிழரசுக் கட்சி ஆதரவளித்தது. அந்தச் சட்டம் 20 செப்தெம்பர், 2017 இல் கொண்டுவரப்பட்டது. நல்லாட்சி அரசு சனவரி 2020 இல் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் நடந்தவற்றுக்கு தமிழரசுக் கட்சி பொறுப்புக் கூறமுடியாது. இப்போது மாகாணசபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்துவதற்கு வழிசெய்யும் ஒரு சட்டத்தை ம.ஆ. சுமந்திரன்நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளார். இரண்டாவது வாசிப்பு முடிந்து விட்டது. விரைவில் அது சட்டமாகிவிடும்.
(7) இவர்கள் தேசியம் பண்பாடு என மற்றவர்களை ஏமாற்றுகின்றனர். இது மட்டுமா? மேலும் பல கூட்டு வணிகத்திலும் ஈடுபடுகிறார்கள். எதுவும் அறியாத தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் இவர்களை நம்பி வாக்களிக்கிறார்கள் என்பதே பெரும் துர்ப்பாக்கியம். வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ் அரசியல்வாதிகள் கோடிக் கணக்கில் பணமும் சலுகைகளும் பெறுவார்கள். கடந்த காலங்களிலும் இதுவே நடந்தது. யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளருக்கு தமிழ்க் கட்சிகள் ஆதரவளிக்க போகின்றன. குறைந்த பட்சம் அத்தியாவசிய பிரச்சினைகளையாவது தீர்ப்பதற்கு வலிமையான எழுத்து மூலமாக உடன்படிக்கைக்கு வரலாம் .
பதில்: மக்களை குறை கூறுவது மடைத்தனம். தமிழ் அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் பணமும் சலுகைகளும் பெறுகிறார்கள் எனச் சொல்வது தவறு. சிங்கள அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்படுகின்ற பணமும் சலுகையும்தான் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் கொடுக்கப்படுகின்றன. ஒரு கதைக்கு நாளை சிவகரன் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டால் அவரும் இதே பணத்தையும் சலுகைகளையும் அனுபவிப்பார். இவர் வாய்ப்பு இல்லாததால் புனிதராக இருக்கிறார்.
(8) வனத்தினைக்களம் வன ஜீவராசிகள் திணைக்களம் தொல்லியல் திணைக்களம் மகாவலி அபிவிருத்தி சபை இராணுவம் என அபகரிக்கப்படும் நிலங்களை – இந்தத் திணைக்களங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளை – உடனடியாக நீக்க வலியுறுத்த லாம். வனத்திணைக்களம் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட குளங்கள் இராணுவத்திடம் உள்ள விவசாயப் பண்ணைகள் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை கட்டுக்கரை புள்ளதான் கண்டல் மேய்ச்சல் தரை தென்னிலங்கை மீனவர்களின் வடக்கு கிழக்கு அத்துமீறல்கள் இந்திய மீனவர்களின் ஆதிக்கம் கல்முனை வடக்குப் பிரதேச செயலக விவகாரம் வெடுக்குநாறிமலை குருந்தூர்மலைப் பிணக்குகள் அரசியல் கைதிகள் விடுதலை காணாமல் போனோர் தொடர்பில் உண்மைகளை ஏற்றுக்கொண்டு நீதி வழங்கமுன்வருதல் சிங்களக் குடியேற்றம் வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகளை மத்திய அரசின்கீழ் கொண்டு வருவதை தடுத்தல் போன்ற அத்தியாவ சிய நெருக்கடிகளுக்கு உடனடி தீர்வுகளை வலியுறுத்தலாம்.
பதில்: வலியுறுத்த வேண்டும் என்பது எமக்கு உடன்பாடே. அரசியல் கைதிகளைப் பொறுத்தளவில் இன்னும் 10 பேர் மட்டும் சிறையில் வாடுகிறார்கள். நல்லாட்சி காலத் தொடக்கத்தில் 201 அரசியல் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்கள். 2019 டிசெம்பர் வரை இவர்களில் பாதிக்கு மேல் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.
வட கிழக்கில் இராணுவத்தின் பிடியில் இருந்து 47,604 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது. சம்பூரில் 1,055 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது. இதன் காரணமாக யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த 984 தமிழ்க் குடும்பங்கள் 2017 இல் மீள்குடியமர்த்தப்பட்டனர்.
வலி வடக்கில் இராணுவம் வசம் இருந்த 6,381.5 ஏக்கர் காணியில் அண்ணளவாக 3,500 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. கேப்பாப்புலவில் இராணும் பிடித்து வைத்திருந்த 482 ஏக்கர் காணியில் 412 ஏக்கர் காணி விக்கப்பட்டுள்ளது. மயிலிட்டியில் அதி உயர் பாதுகாப்பு வலையத்திற்கு உட்பட்டிருந்த 683 ஏக்கர் காணி கடந்த ஏப்ரில் 18, 2018 அன்று விடுவிக்கப்பட்டது. அதற்கு முன்னர் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அண்டிய பகுதியில் உள்ள 54 ஏக்கர் காணி யூலை 03, 2017 இல் விடுவிக்கப்பட்டது. இதில் 190 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளன.
(9) இனப்பிரச்சினையைத் தீர்க்கிறோம் சுயநிர்ணய உரிமையை – சமஷ்டியை – பெற்று தருகிறோம் பெற்று விடுவோம் என்று தமிழ் மக்களை ஏமாற்றாமல் குறைந்தபட்சம் மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளுக்காவது தீர்வு காண வழி ஏற்படுத்த வேண்டும்.
பதில்: அரச இயந்திரம் தமிழரசுக் கட்சியின் கையிலா இருக்கிறது? 2022 ஏப்ரில் மாதம் ஒட்டாண்டியாகிப் போன நாடு இப்போதுதான் மெல்லப் பொருளாதார மீட்சி அடைந்து வருகிறது. தமிழரசுக் கட்சி நா.உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றிப் பேசி வருகிறார்கள்.
(10) 13 க்குள் மூழ்கி இந்திய விசுவாசிகளாகி ஆசுவாசம் கொள்ளாமல் இருப்பதும் முக்கியம்.
பதில்: இந்தச் சொற்றொடர் சிவகரன் அரசியலில் ஒரு கற்றுக் குட்டி என்பதைத் துல்லியமாகக் காட்டுகிறது. 13 ஏ அரசியல் தீர்வுக்கு ஒரு தொடக்கப் புள்ளி என தமிழரசுக் கட்சி கருதுகிறது. அது முழுத் தீர்வல்ல. ஆனால் அதிகாரப் பகிர்வுக்குத் தேவையான அடிப்டை அம்சங்கள் அதில் காணப்படுகின்றன. இந்தியா என்றொரு நாடு இருந்தபடியால்தான் இந்த 13ஏ திருத்தத்தைப் பெறமுடிந்தது. இந்திய நாட்டைப் பகைத்துக் கொண்டு இலங்கைத் தமிழர்கள் ஒரு அங்குலம் கூட நகர முடியாது. பூகோள அரசியலைப் படித்தவர்களுக்கு இந்த உண்மை புரியும். சிவகரனுக்குப் புரியாது.
(11) தற்போதைய எந்தத் தமிழ் தலைவரும் தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கக்கூடிய வல்லமை உடையவர்களோ ஆளுமை உடையவர்களோ அல்லர் என்பது வெள்ளிடைமலை. ஆகவே தலைமை இல்லை என்பது இடைவெளியாகவே இருக்கிறது. அந்த இடைவெளியை நிரப்புவதற்குரிய காலம் கனியும் வரை இவ்விதமான அத்தியாவசிய பிரச்சினைகளைத் தீர்க்காவிட்டால் எதிர்வரும் காலத்தில் தற்போதைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலத்தால் காணாமல் போகக்கூடிய நிலைமை ஏற்படும். அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
பதில்: அரசியல்வாதிகள் மக்களிடம் இருந்தே அடையாளப் படுத்தப்படுகிறார்கள். அவர்கள் வானத்தில் இருந்து பூமிக்குக் குதித்தவர்கள் அல்லர். ஆவர்கள் “தீர்வு பெற்றுக் கொடுக்கக்கூடிய வல்லமை உடையவர்களோ ஆளுமை உடையவர்களோ” இல்லாமல் இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட தகுதி வாய்ந்தவர்களை கடையில் பணம் கொடுத்து வாங்க முடியாது. இணக்கவும் முடியாது. உள்ளதை வைத்துக் கொண்டுதான் அரசியல் செய்ய வேண்டும். இதனைச் சிவகரன் புரிந்து கொள்ள வேண்டும்.
இறுதியாக ஊருக்கு உபதேசம் செய்வது, பிழை கண்டுபிடிப்பது இலகுவான காரியம். அதனைத்தான் விமரிசனம் என்ற போர்வையில் சிவகரன் செய்து கொண்டிருக்கிறார்.
Leave a Reply
You must be logged in to post a comment.