ஈழத் தமிழ்மக்களது அரசியல் சிக்கல்களை ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை அவையில் பேசு பொருளாக்கியவர் பெருந்தலைவர் சம்பந்தன்
அஞ்சலிக் கூட்டத்தில் நக்கீரன்
(கடந்த யூலை 7, 2024 அன்று திருகோணமலை நலன்புரிச் சங்கம் பெருந்தலைவர் சம்பந்தன் அவர்களுக்கு நடாத்திய அஞ்சலிக் கூட்டத்தில் பேசியதும் பேச நினைத்ததும்)
தமிழ்மக்களது கடந்த அரை நூற்றாண்டு கால வரலாற்றை எழுதும் போது அதில் பெருந்தலைவர் சம்பந்தன் ஐயாவின் வரலாறு முக்கிய இடம்பெறும் என்பதில் ஐயமில்லை. அவரைவிட்டு விட்டு வரலாறு எழுத முடியாது. தமிழரசுக் கட்சியோடான அவரது ஈடுபாடு 1961 ஆம் ஆண்டு நடந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தோடு தொடங்கியது. அரசாங்கம் ஏனைய தலைவர்களைக் கைது செய்தது போல் சம்பந்தன் ஐயாவையும் கைது செய்து பனாகொட தடுத்து முகாமில் தடுத்துவைக்கப்பட்டடார். அந்த முகாமுக்குச் சென்று தடுத்து வைக்கப்பட்டிருந்த தலைவர்களைச் சந்தித்தது எனக்கு நினைவிருக்கிறது.
திருகோணமலைத் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பாக தேர்தலில் சம்பந்தன் ஐயா அவர்களை நிறுத்த தந்தை செல்வநாயகம், தளபதி அமிர்தலிங்கம் அறுபது, அறுபந்தைந்து மற்றும் எழுபதில் கடும் முயற்சி எடுத்தார்கள். ஆனால் சம்பந்தன் ஐயா மறுத்துவிட்டார். ஆனால் 1977 இல் அவரால் மறுக்க முடியாது போய்விட்டது.
1977 ஆம் நடந்த தேர்தலில் போட்டியிட்ட சம்பந்தன் ஐயா வெற்றிபெற்றார். 1983 இல் 6 ஆவது சட்ட திருத்தத்தின் கீழ் ஒற்றையாட்சிக்கு விசுவாசமாக இருப்பேன் என உறுதிமொழி எடுக்க மறுத்து தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை புறக்கணித்த காரணத்தால் தங்கள் பிரதிநித்துவத்தை இழந்தார்கள். 1989 இல் நடந்த தேர்தலில் சம்பந்தன் ஐயா வெற்றி வாய்ப்பை இழந்தார். அதன் பின்னர் 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் 2001 ஆம் ஆண்டு தெரிவானார். அதனைத் தொடர்ந்து 2004, 2010, 2015 மற்றும் 2020 இல் வெற்றி பெற்றார்.
சம்பந்தன் ஐயா பதவி ஆசை பிடித்தவர் எனச் சிலர் கூறுகிறார்கள். அதில் உண்மையில்லை. சிறந்த வழக்கறிஞராக தொழில் செய்த சம்பந்தன் ஐயா நாடாளுமன்ற அரசியலில் ஈடுபட விரும்பவில்லை. நான் 1957 ஆம் ஆண்டு திருகோணமலை கச்சேரிக்கு பணி நிமித்தமாக மாற்றல் எடுத்து போனபோது சம்பந்தன் ஐயா அப்போதுதான் சட்டப்படிப்பை முடித்து தொழில் செய்து கொண்டிருந்தார். வசீகரமான தோற்றம், ஒல்லியான உடம்பு ஒரு திரைப்பட நடிகர் போல் அன்று காட்சியளித்தார்.
சம்பந்தன் ஐயாவைப் பற்றி நிறையப் பேசலாம். மணிக்கணக்கில் பேசலாம். ஆனால் அவரது அரசியல் சாணக்கியத்துக்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தை மட்டும் இங்கு குறிப்பிட ஆசைப்படுகிறேன்.
2099 மே 18 அன்று போர் முடிவுக்கு வந்தது. மே 27 அன்று – எட்டு 8 நாட்கள் சென்றபின்னர், ஐநா சபையின் செயலாளர் நாயகம் இலங்கையை விட்டு வெளியேறி 4 நாட்கள் கழிந்த பின்னர்- ஐநாமஉ பேரவையில் சுவிட்சலாந்து நாடும் கனடாவும் சேர்ந்து சிறிலங்கா அரசுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டுவர முயற்சித்தன. ஆனால் அந்தத் தீர்மானத்துக்கு உறுப்பு நாடுகள் மத்தியில் ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் தீர்மானம் கைவிடப்பட்டது. அதே நேரம் இந்தியா பயங்கரவாத இயக்கமான வி.புலிகளை முற்றாக ஒழித்த சிறிலங்கா அரசைப் பாராட்டி ஒது தீர்மானத்தை முன்மொழிந்தது. அதில் இலங்கையின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் மற்றும் அதன் குடிமக்கள் பாதுகாப்பதற்கான உரிமை மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான உரிமை ஆகியவற்றை மதிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மீண்டும் உறுதிப்படுத்தியது. உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் தேவைகளை இலங்கை கவனித்து வருவதாகவும், அனைத்துலக உதவி நிறுவனங்களுக்குப் பொருத்தமான அணுகலை வழங்குவதாகவும், அவர்களுடன் ஒத்துழைத்து வருவதாகவும் பல தடவைகள் குறிப்பிடப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 29 நாடுகளும் எதிர்த்து 12 நாடுகளும் வாக்களித்தன. ஆறு நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலமை 2011 ஆம் ஆண்டு வரை நீடித்தது. அதே ஆண்டு அமெரிக் வெளியுறவு அமைச்சு (State Department) கா ததேகூ தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்தது. குறிப்பாக அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபட் ஓ பிளேக் இலங்கைக்கு சென்றிருந்த போது அழைப்பை விட்டிருந்தார். இந்த அழைப்பை ஏற்றுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், இபிஎல்ஆர்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் போருக்குப் பின்னான இலங்கையின் நிலைமை குறித்து வோஷிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் ஒக்தோபர் 26 முதல் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது சம்பந்தன் ஐயாவை அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து இராசாங்க அமைச்சுக்கு வண்டியில் அழைத்துச் சென்ற எனது நண்பர் சொன்னது நினைவுக்கு வருகிறது. வண்டியில் ஏறினவுடன் சம்பந்தன் ஐயா நித்திரை கொண்டுவிடுவாராம். ஆனால் அவரை எழுப்பி பேச்சுவார்த்தை நடக்கும் அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டால் தனது கம்பீரமான குரலில் தனது வாதங்களை ஆணித்தரமாக முன்வைப்பாராம்.
வோஷிங்டன் பேச்சு வார்த்தைகளை முடித்துக் கொண்டு சம்பந்தன் ஐயாவின் தலைமையிலான அந்தத் தூதுக்குழு கனடா வந்தது. அய்யப்பன் கோயில் மண்டபத்தில் கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பொதுக் கூட்டத்தை ஒழுங்கு செய்தது. அது முடிந்த பின்னர் சம்பந்தன் ஐயாவின் குழுவினருக்கு ஒரு இரவு விருந்து அளிக்கப்பட்டது.
இந்த வருகையை அடுத்தே 2012 ஆம் தொடக்கம் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றன. இந்தத் தீர்மானங்கள் இலங்கை அரச தலைவர்களின் காலைச் சுற்றிய பாம்பு போல இருந்து வருகிறது. எமது சிக்கல் இன்று ஐநாமஉ பேரவையில் பேசுபொருளாக இருந்து வருகிறது. அதனைச் சாதித்த பெருமை சம்பந்தன் ஐயாவை சாரும்.
உலகத்தில் பல நாடுகளில் சிறுபான்மை இன மக்கள் பல இன்னல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாகி வருகிறார்கள். மியன்மார் நாட்டில் வாழ்ந்த 10 இலட்சம் ரோகிங்கா சிறுபான்மை முஸ்லிம்கள் 2016 மற்றும் 2017 இல் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், கூட்டுப் பலாத்காரம், தீ வைப்பு மற்றும் சிசுக்கொலைகள் என மியன்மார் அரசின் பர்மிய அரசின் பாரிய ஒடுக்குமுறைகள் காரணமாக அண்டை நாடான பங்காள தேசத்திற்கு ஓடி அங்கு அகதி முகாம்களில் வாழ்கிறார்கள். அந்த மக்களைப் பற்றி உலகம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இவ்வளவிற்கும் உலகில் மொத்தம் 57 இஸ்லாமிய நாடுகள் உண்டு. இருநூறு கோடி முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். இருந்தும் 10 இலட்சம் ரோகிங்கா முஸ்லிம்கள் ஏதிலிகளாக வாழ்கிறார்கள்.
சம்பந்தன் ஐயாவுக்கு அஞ்சலி செலுத்துவதோடு நின்றுவிடாமல் அவர் விட்டுச் சென்ற பணிகளை நாம் தொடரவேண்டும். திருகோணமலையில் தமிழ்மக்களது இருப்பு கேள்விக் குறியாக மாறியுள்ளது. 1827 இல் 81.76 விழுக்காடாக இருந்த தமிழ்மக்கள் குடிப்பரம்பல் படிப்படியாகக் குறைந்து இன்று 32.29 விழுக்காடாகத் தேய்ந்தவிட்டது.
இப்படி தமிழர்களது பலம் தேய்பிறையாகத் தேய்ந்து போனதற்கு யார் பொறுப்பு? இந்தப் புள்ளி விபரங்கள் 2012 இல் எடுக்கப்பட்ட ஆட்தொகை மற்றும் நிலப்பரப்பு கணக்கு ஆகும். அடுத்த ஆட்தொகைக் கணக்கெடுப்பு (2024) எடுக்கப்பட இருக்கிறது. அப்போது தமிழர்கள் இரண்டாம் இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டால் அதையிட்டு வியப்படையத் தேவையில்லை.
நல்லாட்சிக் காலத்தில் தமிழக மறுவாழ்வு முகாம்களில் தங்கியிருந்த திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 800 குடும்பங்கள் தாயகம் திரும்பினார்கள். இடையில் கோவிட் குறுக்கிட்டதால் இந்த முயற்சி இடைநிறுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் மறுவாழ்வு முகாம்களில் 65,000 வாழ்கிறார்கள். வெளியே 35,000 பேர் வாழ்கிறார்கள். மொத்தம் ஒரு இலட்சம் மக்கள். இவர்களில் ஒரு பத்து இலட்சம் மக்கள் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களை நாட்டுக்குத் திருப்பி அழைத்துவர ஆவன செய்ய வேண்டும். செய்தால் தமிழ்மக்களது குடிப்பரம்பல் கூடும்.
மொத்தம் 11 பிரதேச சபைகளில் சிங்களவர்கள் 5 இல், முஸ்லிம்கள் 4 இல், தமிழர்கள் 2 இல் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். விபரம் பின்வருமாறு.
1. கோமரன்கடவல – முன்னொருகாலத்தில் தமிழ்ப்பிரதேசமான குமரேசன்கடவை, தற்போது பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்டபிரதேசம்.
2. கந்தளாய் – தற்போது பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்டுள்ளது. மகாவலி குடியேற்றத்திற்கு முன்னர் இப்பிரதேசத்தில் பெரும்பான்மையாகத் தமிழர்களே இருந்தனர்.
3. கிண்ணியா – பெரும்பான்மையாக முஸ்லீம்களைக் கொண்ட பிரதேசம்.
4. குச்சவெளி – பெரும்பான்மையாக முஸ்லீம்களையும் ஏனைய இனத்தவர்களையும் கொண்ட பிரதேசம்.
5. மொரவெவ/முதலிக்குளம் (பழைய வழக்கில்) – முன்னொருகாலத்தில் தமிழ்ப்பிரதேசமான முதலிக்குளம், தற்போது பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்ட பிரதேசம்.
6. மூதூர் – முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசம். தமிழர்கள் உள்ள பிரதேசம், இலங்கை அரச வர்த்தமானியின் மூலம் அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு பலாத்காரமாத் தமிழர்கள் மீளக்குடியமர முடியாது செய்யப்பட்டது.
7. பதவிசிறிபுர – பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்ட பிரதேசம்.
8. சேருவில – பெரும்பான்மையாக சிங்களவர்களைக் கொண்ட பிரதேசம்.
9. தம்பலகாமம் – பெரும்பான்மையாக முஸ்லீம்களையும் ஏனைய இனத்தவர்களையும் கொண்ட பிரதேசம். சிங்களத்தில் தம்பலகமுவ என்றழைக்கப்படுகின்றது.
10. திருகோணமலை பட்டினமும் சூழலும்
11.வெருகல் மற்றும் ஈச்சிலம்பற்றை – தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசம். இப்பிரதேசத்தில் அநேகமான இடங்கள் தற்போதைய உள்நாட்டுச் சண்டையினால் அழித்தொழிக்கப்பட்டு விட்டன.
திருகோணமலை மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டு நடந்த சனாதிபதி தேர்தலில் கோட்டபாய வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பின்னர் திருகோணமலையில் சிங்கள – பவுத்த மேலாதிக்கம் பொடிகட்டிப் பறக்கிறது. அண்மைக்காலத்தில் கட்டப்பட்ட அல்லது கட்டப்பட்டு வருகிற பவுத்த கோயில்களின் பட்டியல் இது. இது முழுமையான பட்டியலல்ல.
” கோணாமாமலை எங்கள் தலைநகரம்” “மண் துறந்த புத்தனுக்குத் தமிழ் மண் மீது ஆசையா?” என்று முழங்கினால் மட்டும் போதாது. செயல் வேண்டும். சம்பந்தன் ஐயாவின் ஆன்மா சாந்தி அடையட்டும்.
Leave a Reply
You must be logged in to post a comment.