சம்பந்தனின் பூதவுடலுக்கு புதன்கிழமை பாராளுமன்றில் அஞ்சலி
02 JUL, 2024
மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடலை இறுதி மரியாதைக்காக 3ஆம் திகதி புதன்கிழமை பி.ப 2.00 மணி முதல் பி.ப 4.00 மணிவரை பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலிக்காக வைப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 03ஆம் திகதி நடைபெறவிருந்த பாராளுமன்ற அமர்வை நடத்தாதிருக்கவும் ஆளும் கட்சி எதிர்க்கட்சியின் இணக்கப்பாட்டுடன் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை நாளை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
நாளை (02) விவாதத்திற்கு எடுக்கப்படவிருந்த குறித்த தீர்மானம் பற்றிய விவாதத்தை நடத்தாதிருக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் பூதவுடலை இறுதி அஞ்சலிக்காக நாளைமறுதினம் (03) பாராளுமன்ற வளாகத்திற்கு எடுத்துவருவதற்கும், அன்றையதினம் பாராளுமன்ற அமர்வை முன்னெடுக்காதிருப்பதற்கும் இன்று (01) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் ஆளும்-எதிர்க்கட்சியின் இணக்கப்பாட்டுடன் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
சம்பந்தனின் பூதவுடல் நாளைமறுதினம் (03) பி.ப 2.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை இறுதி அஞ்சலிக்காக பாராளுமன்ற கட்டடத்தின் முன்பக்கத்திலுள்ள ஒன்றுகூடல் மண்டபத்தில் வைக்கப்படவுள்ளது.
https://thinakkural.lk/article/304977
கொழும்பில் இன்று சம்பந்தனின் பூதவுடல் அஞ்சலிக்காக வைப்பு
02 JUL, 2024
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் இன்று செவ்வாய்க்கிழமை (02) காலை பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நாளை புதன்கிழமை (03) பாராளுமன்றத்தில் 2 மணிக்கு சம்பந்தனிக் பூதவுடல் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டு அவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயக்கர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மரியாதை செலுத்தவுள்ளனர். அங்கு 4 மணிவரையில் அவரது பூதவுடல் வைக்கப்படவுள்ளது.
https://www.virakesari.lk/article/187451
சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தினார் எதிர்க்கட்சி தலைவர் சஜித்
02 JUL, 2024
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் இன்று செவ்வாய்க்கிழமை (02) பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கு சென்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சம்பந்தனின் பூதவுடலுக்கு தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார்.
https://www.virakesari.lk/article/187479
சம்பந்தனின் இறுதிக்கிரியை 7 ஆம் திகதி திருமலையில் : பாராளுமன்றிலும் இன்று பலர் அஞ்சலி!
03 JUL, 2024
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை இந்து மயானத்தில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, சம்பந்தனின் பூதவுடல் செவ்வாய்க்கிழமை (02) காலை முதல் புதன்கிழமை (3) மதியம் வரை பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 2.30 மணியிலிருந்து மாலை 4 மணி வரை பாராளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரது பூதவுடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்,அரசியல்வாதிகள், தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை, சம்பந்தன் படித்த பாடசாலைகளில் ஒன்றான யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையினர் அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், அன்னாரது பூதவுடல் 04 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
வெள்ளிக்கிழமை (5) முதல் ஞாயிற்றுக்கிழமை (7) வரை அன்னாரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து 07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்று மாலை 4.00 மணியளவில் அன்னாரது பூதவுடல் தகனக்கிரியைக்காக திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
https://www.virakesari.lk/article/187594
சம்பந்தனின் பூதவுடலுக்கு யாழில் நாளை அஞ்சலி
Published By: VISHNU
03 JUL, 2024
மறைந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் பூதவுடல் 04ஆம் திகதி வியாழக்கிழமை யாழில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் காலை ஒன்பது மணி முதல் மாலை 4மணி வரையில் அன்னாரது பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
இதற்காக அன்னாரது பூதவுடல் விமானம் மூலம் கொழும்பில் இருந்து கொண்டு வரப்படவுள்ளதோடு இன்று மலையில் திருகோணமலையில் உள்ள அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியைகளுக்காக மீண்டும் விமானம் ஊடாக கொண்டு செல்லப்படவுள்ளது.
இதேவேளை, வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் தலைவராக அடையாளம் காட்டப்பட்ட அரசியல் பெருந்தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் இரா.சம்பந்தனின் புகழுடலை கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலிக்காக வைப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் அவரது புகழுடன் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான அறிவகத்தில் 04, 05ஆம் திகதிகளில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.virakesari.lk/article/187624
யாழ். கொண்டுசெல்லப்பட்ட சம்பந்தனின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி
04 JUL, 2024
மறைந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக இன்று வியாழக்கிழமை (04) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்ட சம்பந்தனின் பூதவுடல், யாழில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா நினைவிடத்தில் இன்று வியாழக்கிழமை (04) காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மறைந்த சம்பந்தனின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தனின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07) திருகோணமலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.virakesari.lk/article/187649
சம்பந்தனின் பூதவுடல் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டது
05 JUL, 2024
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (05) விமானம் மூலம் திருகோணமலைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனின் பூதவுடலுக்கு நேற்று வியாழக்கிழமை (04) பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் அஞ்சலி நிறைவுக்கு வந்து பூதவுடல் அங்கேயே வைக்கப்பட்டது.
தந்தை செல்வா கலையரங்கில் இருந்து இன்றைய தினம் காலை கார் மூலம் பலாலி விமான நிலையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு அங்கிருந்து திருகோணமலைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
திருகோணமலையில் இரண்டு தினங்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படவுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.