Rasiah Gnana
சங்க இலக்கியம்!
குலையும் குடும்பமும் குறுந்தொகைப் பாடலும்!
அது தினை வயல்களையும் உழவர் குடிகளையும் கொண்டு விளங்கிய மருத நிலம். இரவுப் பொழுது நெடு நெரமாகி விட்டதையும் பொருட்படுத்தாது அந்தப் பெண் உணவு சமைக்கிறாள் ஓரக் கண்ணால் பாயில் படுத்திருக்கும் தன் கணவனைப் பார்த்தபடி. அவள் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. கணவனோ வீட்டின் கூரையைப் பார்த்தபடி அமைதியாகப் படுத்திருக்கின்றான்.
எழுந்துவா சாப்பிட என்கிறாள் அவள். எனக்கு வேண்டாம் என்கிறான் அவன். ஏன் வேறு யாராவது சமைத்தால் தான் சாப்பிடுவாயோ. அந்த வார்த்தையைக் கேட்டதும் கோபத்தோடு எழுந்து உட்காருகிறான் அவன். ஆனால் எதுவும் பேசவில்லை.
என்ன சத்தத்தைக் காணோம். வேறு யாராவது ஆக்கிப் போட்டால் தான் சாப்பிடுவாயோ என்று கேட்டேன் என்கிறாள் அவள் மீண்டும்.
நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை இது அவன்.
இந்தா எனக்குப் பொய் சொல்லாதே. ஒரு சில நாட்கள் வராமல் விட்டு ஒரு சில வாரங்கள் வராமல் வி;ட்டு இப்போ ஒருசில மாதங்கள் என்ற கணக்கிலே வந்து நிக்கிறது நீ வீட்டுக்கு வருகின்ற நாட்கள். உனக்கு வெட்கமாக இல்லை.
இப்பொழுது அவள் அழுதாள். என்னை நீ காதலித்த காலத்தை எண்ணிப் பார். எங்கு பார்த்தாலும் கொடிய விடம் கொண்ட பாம்புகள் உலவுகின்ற இரவுப் பொழுதிலே என்னைத் தேடிவந்து நீ எங்கள் வீட்டோரம் காத்திருக்கும் துன்பத்தைச் சகிக்க முடியாமல் தான் உன்னை மணம் முடிக்க நான் ஒத்துக் கொண்டேன்.
நீண்ட காலமாக மிகுந்த அன்போடு ஒரு குறையும் எனக்கு வைக்காமல் குடும்பம் நடத்திய நீ இப்போது மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கிறாய். ஏன் உனக்கு வேறு பெண்கள் தேவைப்படுகின்றார்கள்.
எனக்குத் தெரியும். நீண்ட நேரம் நீரிலே நீந்தி விளையாடினால் கண்கள் சிவந்து போகும். அளவு கடந்து உண்டால் தேன் கூட புளிப்புத் தட்டும்.
ஒரு வேளை உன்மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பினால் நானும் அப்படித்தான் இல்லற சுகத்தை அளவுக்கு மீறி உனக்குத் தந்துவிட்டேனா. அதனால் தான் நீ என்னை வெறுக்கின்றாயா. வாய் திறந்து பேசு. இன்றைக்கே நாங்கள் ஒரு முடிபு எடுப்போம்.
என்ன முடிபு மெதுவாக அவன் கேட்டான்.
நான் உனக்கு வேண்டுமா அல்லது தேவையில்லையா.
தேவையில்லை என்றால் எனக்கு நீ ஒரு உதவி செய். என்னை அழைத்துப் போய் என் அப்பா வாழ்கின்ற பொய்கைகள் நிறைந்த ஊரிலே என்னை முதன் முதலாக எங்கு கண்டாயோ அந்த எங்கள் வீட்டிலே விட்டு உங்கள் மகள் எனக்கு வேண்டாம் என்று அவர்களுக்கு சொல்லி விட்டுப் போ..
நான் அப்பாவினுடைய பேச்சைக் கேட்காமல் உன்னை மணம் முடித்திருந்தாலும் என் அப்பா அதையெல்லாம் பொருட்படுத்தாது எனக்கு அன்பு காட்டி அரவணைப்பார்.
உன்னோடு வாழ ஆசைப்பட்டு வந்தேன். அது முடியவில்லை. எஞ்சிய காலத்தை என் பெற்றோருடன் நான் வாழ்ந்து விடுகின்றேன் என்றாள் அவள்.
நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்;
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்;
தணந்தனைஆயின் எம் இல் உய்த்துக் கொடுமோ
அம் தண் பொய்கை எந்தை எம் ஊர்க்
கடும் பாம்பு வழங்கும் தெருவில்
நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே
நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும் – நீரின் கண் நெடுநேரம் விளையாடினால் கண்களும் செந்நிறத்தை அடையும்; ஆர்ந்தோர் வாயில் – பன்முறை உண்டோரது வாயினிடத்தே, தேனும் புளிக்கும் – தேனும் புளிப்பையுடைய தாகும்; ஆதலின், தணந்தனை ஆயின் – நீ எம்மைப் பிரிவை யாயின், அம் தண் பொய்கை – அழகிய தண்ணிய பொய்கையையுடைய, எந்தை எம் ஊர் – எம் தந்தையினது எம்ஊரின்கண்ணே, கடு பாம்பு வழங்கும் தெருவில் – நஞ்சின்கடுமையையுடைய பாம்புகள் ஓடும் தெருவில், நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம் – நீ முன்பு நடுங்குதற்குரிய மிக்க துன்பத்தை நீக்கிய எம்மை, எம் இல் உய்த்துக்கொடுமோ – எம்முடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவாயாக.
இந்தப் பாடல் குறுந்தொகையிலே 354 வது பாடலாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது. கயத்தூர் கிழார் என்ற புலவர் பாடியிருக்கின்றார்.
கணவனின் பிற பெண் தொடர்பால் வாழ்விழந்த அப்பாவிப் பெண் ஒருத்தியின் கூற்றாக அமைந்த இந்தப் பாடல் ஒரு கால கட்டத்தில் வாழ்ந்த எம் முன்னோரின் வாழ்வியலை எழுத்தினால் படம் பிடித்து எமக்குக் காட்டி நிற்கின்றது.
இரா.சம்பந்தன் (தமிழர் தகவல் இதழ் 5.7. 2024)
Leave a Reply
You must be logged in to post a comment.