ரொறன்ரோ
யூலை 01, 2024
ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுதந்திரமான ஒரு தமிழரசை உருவாக்க வேண்டும் என்ற சம்பந்தன் ஐயாவின் இலட்சியம் கைகூட இதய சுத்தியோடு உழைப்போம்!
ஆறு சகாப்தங்களுக்கு மேலாக ஓயாது ஒழியாது தமிழ்மக்களின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போராடிவந்த வந்த சம்பந்தன் ஐயாவின் குரல் ஓய்ந்துவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக அவரது உடல்நலம் குறைந்து காணப்பட்டாலும் அவரது குரலில் தளர்ச்சி இருக்கவில்லை.
சம்பந்தன் ஐயா தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர்களான தந்தை செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்றோர் வழியில் அவர்கள் விட்டுச் சென்ற பணியைத் திறம்படச் செய்தவர். தமிழரசுக் கட்சியுடன் ஆன அவரது தொடர்பு 1961 ஆம் ஆண்டு நடந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தோடு தொடங்கியது. அவர் கைது செய்யப்பட்டு பனாக்கொடை தடுப்பு முகாமில் சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அவரது முழுநேர அரசியல் நுழைவு 1977 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் திருகோணமலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக போட்டியிட்டு வென்றதன் வாயிலாகத் தொடங்கியது.
1983 கறுப்பு யூலையில் மூவாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் தனி நாடு கோருவதை தடைசெய்தும் கொண்டு வரப்பட்ட இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தில் உறுதிமொழி எடுக்க மறுத்து அதன் அமர்வுகளை மூன்று மாதங்கள் தொடர்ந்து புறக்கணித்ததன் விளைவாக சம்பந்தன் ஐயா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 1983, செப்டம்பர் 7 இல் இழந்தார்.
1985 ஆம் ஆண்டு திம்புவில் நடந்த அனைத்துக் கட்சி மாநாட்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக பங்குபற்றிய மூன்று முக்கிய தலைவர்களில் சம்பந்தன் ஐயாவும் ஒருவர்.
1987 இல் நிறைவேற்றப்பட்ட 13 ஏ சட்ட திருத்தத்தில் உள்ள குறைபாடுகள் பற்றி அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த இராசீவ் காந்தி அவர்களுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி 28 ஒக்தோபர், 1987 ஒரு நீண்ட கடிதம் எழுதியது. அந்தக் கடிதத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் மு.சிவசிதம்பரம், பொதுச் செயலாளர் அ. அமிர்தலிங்கம் மற்றும் துணைத் தலைவர் இரா.சம்பந்தன் கையெழுத்திட்டிருந்தனர்.
2015 செப்டெம்பர்3முதல்2018 டிசம்பர்18வரைஇலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித்தலைவராகவும் சம்பந்தன் ஐயா இருந்துள்ளார். எதிர்க்கட்சித்தலைவராக விளங்கியஅவர், தந்தை செல்வநாயகம், தளபதிஅமிர்தலிங்கம்ஆகியோருக்கு அடுத்து,தென்னிலங்கைஅரசியல்தலைவர்களாலும் வெளிநாட்டு இராசதந்திரிகளாலும் பெரிதும் மதிக்கப்பட்டதமிழ்மக்களின் ஆளுமைமிக்க தலைவராக விளங்கினார்.
2009 மே 18 இல் போர்முடிந்த கையோடு பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டிய சிறிலங்கா அரசைப் பாராட்டி மே 27 இல் இந்தியா கொண்டுவரப்பட்ட தீர்மானம் 29 நாடுகள் ஆதரவாகவும் 12 நாடுகள் எதிராகவும் வாக்களித்து ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 2011 ஆம் ஆண்டுவரை ஐநாமஉ பேரவை சிறிலங்கா அரசை ஆதரித்தே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தப் போக்கு 2011 ஆம் ஆண்டுவரை நீடித்தது. அதை மாற்றி அமைத்தவர் சம்பந்தன் ஐயா அவர்கள். அந்த ஆண்டு ஒக்தோபர் மாதக் கடைசியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழு ஒன்று சம்பந்தன் ஐயா தலைமையில் அமெரிக்கா சென்று வெளியுறவு அமைச்சு அதிகாரிகளோடு இரண்டு நாட்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் பின்னரே 2012 ஆம் ஆண்டு தொடக்கம் ஐநாமஉ பேரவையில் சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானங்கள் அடுத்தடுத்து அமெரிக்காவினாலும் அதன் நட்பு நாடுகளாலும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இவ்வாறு ஈழம்வாழ் தமிழ்மக்களுக்கு எதிரான மனிதவுரிமை மீறல்கள், போர்க்குற்ற விசாரணைகள், பொறுப்புக்கூறல்கள், மீள்நல்லிணக்க முயற்சிகள் இன்று பேசுபொருளாக மாறியுள்ளது. அந்தப் பெருமை சம்பந்தன் ஐயாவின் சாணக்கிய அரசியலயையே சாரும்.
“முழுமையான உள்ளக சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாவிட்டால் அதற்கு மாற்றீடாக நாங்கள் வெளியக சுயநிர்ணய உரிமையைக் கோருவோம். ஆகையால் நாட்டின் நன்மை கருதி – நாட்டில் வாழ்கின்ற மக்களின் நன்மை கருதி – தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைக் கருதி பெரும்பான்மை சிங்களத் தலைவர்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும். புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும், தமிழ் மக்களின் வேட்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும், வடக்கு – கிழக்கில் வரலாற்று ரீதியாகத் தமிழ்பேசும் மக்கள் வாழ்ந்து வந்தார்கள் என்ற அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும்” என்பன சம்பந்தன் ஐயாவின் பெருவிருப்பாக கடைசிவரை இருந்தது.
தமிழ்மக்கள் இழந்த அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க, தமிழ்மக்களின் வராலாற்றுத் தாயக பூமியில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் இணைப்பாட்சி கட்டமைப்பின் கீழ் ஒரு தன்னாட்சி அரசை உருவாக்க வேண்டும் என்ற சம்பந்தன் ஐயாவின் இலட்சியம் கைகூட இதய சுத்தியோடு உழைப்பதே அவருக்கு நாம் செய்யும் கைமாறாகும்.
சம்பந்தன் ஐயாவின் பிரிவினால் வாடும் அவரது துணைவியார், மகன்கள், மகள் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
Leave a Reply
You must be logged in to post a comment.