மக்களால் தெரிவு செய்யப்படாத ரணிலை மீண்டும் மக்கள் மூலம் தெரிவு செய்வதில் தமிழ் அரசியல்வாதிகள் கரிசனையோடு இருப்பது ஏன்?
இலங்கையின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இந்த வருடத்திற்குள் நடைபெறவுள்ளது என்ற ஊகம் தெரிவிக்கப்பட்டிருக்கும் இந்த நிலையில் முக்கிய வேட்பாளர்கள் என்று கருதப்படும் அநுரகுமார திசநாயக்க. ரணில் விக்கிரமசிங்க மற்றும் அஜித் பிரேததாச ஆகியோர் இலங்கைத் தீவு எங்கும் பயணங்களை மேற்கொண்டு பிரச்சாரங்களைச் செய்து வருகின்றார்கள்.
இந்த ஜனாதிபதித் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளவர் ஒரு புதியவராக இருக்க வேண்டும் என்பதில் இலங்கையின் முழு வாக்காளர்கள் தொகையில் கணிசமானவர்கள் விரும்புகின்றார்கள் என்பதும் அங்கு மேற்கொள்ளப்பட்ட மக்கள் கருத்துக்களின் அடிப்படையில் வெளிப்படையாகவே தெரிகின்றது.
பதில்: அப்படி யார் சொன்னது? கிட்டிய கருத்துக் கணிப்பின்படி அனுரகுமார திசநாயக்கக மற்றும் சஜித் பிரேமதாச இருவருக்கும் சம அளவிலேயே ஆதரவு இருக்கிறது.
(2) கடந்த தடவை இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி . ‘அரகலய’ போராட்டத்தின் போது அதிர்ந்து நின்ற அரசியல் தலைவர்கள் மற்றும் ஊழல் ஜனாதிபதியான கோட்டாபாய நாட்டைவிட்டு நீங்கிச் சென்றமையால் ஒரு’ திடீர் ‘ ஜனாதிபதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ரணில் என்னும் ‘குள்ளம்’ இந்த தேர்தலில் மக்களின் ஆணையைப் பெற்றவராக வரவிரும்புவதையும் நாம் அவதானிக்கலாம்.
ஜேவிபியின் தலைவர் அநுர குமார திசநாயக்க அவர்கள். தமிழர் பகுதிகளுக்கு அடிக்கடி பயணம் செய்து பிரச்சாரங்களை மேற்கொள்ளவது போன்று ரணிலும் பயணங்களை மேற்கொள்கின்றார். ஆனால் ஒரு வித்தியாசம். ரணில் மேற்கொள்ளும் பயணங்கள் அரசாங்கத்தின் செலவில். ஏனைய இருவரும் மேற்கொள்வது தங்கள் கட்சியின் சொந்தச் செலவில் தான்.
இவ்வாறிருக்கும் போது. ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் அதிகாரம் பெற்ற ஒரு ஜனாபதியாக வரவேண்டும் என்பதை பல தமிழ் அரசியல்வாதிகள் விரும்பியும் அவருக்காக பிர்சசாரம் செய்தும் வருகின்றார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிகின்றது. தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரன் அவர்கள் ‘விடாப்பிடியாக’ இந்த விடயத்தில் உள்ளார் என்பது இளையவர்களுக்கு கூட தெரிந்து விட்டது.
பதில்: நாய்க்கு எங்கு கல்லுப்பட்டாலும் காலைத்தான் தூக்குமாம். உதயன் பிரதம ஆசிரியரும் அப்படித்தான். “தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரன் அவர்கள் ‘விடாப்பிடியாக’ இந்த விடயத்தில் உள்ளார் என்பது இளையவர்களுக்கு கூட தெரிந்து விட்டது” என்பதற்கான சான்றுகளை காட்ட முடியுமா? சனாதிபதி இரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையாக விமர்ச்சிப்பவர்களில் சுமந்திரன் முன்னணியில் இருக்கிறார்.
சுமந்திரனின் நிலைப்பாடு தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடுதான். அதாவது சனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கட்சிகளது தேர்தல் அறிக்கை வெளிவந்தபின்னர் அந்த அறிக்கைகளின் அடிப்படையில் கட்சி முடிவெடுக்கும். அதே சமயம் தமிழ் பொதுவேட்பாளர் போட்டியிடும் எத்தனத்தை கட்சி நிராகரித்துள்ளது.
(3) அவர் மட்மல்ல யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய தமிழ் பேசும் அரசியல்வாதிகளான அங்கஜன் இராமநாதன். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட பலரும் அந்த ‘வேட்கை’யோடு தான் உள்ளார்கள் என்பதும் நன்கு வெளிச்சமாகத் தெரியும் ‘விருப்பங்கள்’ அதற்கு மேலாக வடக்கு மாகாண ஆளுனர் திருமதி சார்ள்ஸ் கூட ரணிலை ஜனாதிபதியாக்க தனது பதவியின் பின்னால் உள்ள வளங்களைப் பாவிக்க வேண்டும் என்று ரணில் தனது அண்மைய யாழ்ப்பாண விஜயத்தின் போது கேட்டுக் கொண்டதாகவும் யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பதில்: அங்கயன் இராமநாதனின் நிலைப்பாடு தெரியவில்லை. சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு வென்ற இராமநாதன் அந்தக் கட்சி உடைந்து சிதறிப் போனதால் யாரை ஆதரிப்பது என்பதில் தடுமாற்றத்தில் உள்ளார். இரணில் பக்கம் சாயக் கூடும்.
(4) இதை விட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த பலரும் குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சிவஞானம் அவர்கள் கூட தனது சொந்த நலன் கருதி ரணில் தான் ஜனாதிபதிக் கதிரையில் அமர வேண்டும் என்று விரும்புவதாக அவரது நட்பு வட்டாரங்களிலிருந்து அறியக் கூடியதாக உள்ளது.
பதில்: ஸ்ரீதரன் சிவஞானம் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பதாகத்தான் சொல்லி வருகிறார். கட்சி என்ன முடிவெடுக்கிறது எனப் பொறுத்திருந்து பார்ப்போம். அவர் இரணிலை ஆதரிப்பதற்கு வாய்ப்பில்லை. ஆதரிக்கமாட்டார்!
(5) இனி. கிழக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் பல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் பேசும் அரசியல்வாதிகளும் ரணில் தான் மீண்டும் பதவியில் அமர் வேண்டும் என்று விரும்புகின்றார்கள். அதைவிடக் கேவலம். தான் ஒரு ஈரோஸ் உறுப்பினர் என்று அடிக்கடி அரசில் அறிக்கையை வெ ளியிடும் ஒருவர்கூட அண்மையில், இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக
ரணில் தான் வரவேண்டும் என்று “ஈரோஸ்’ பெயரைப் பாவித்து அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்தளவிற்கு ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்கினால் தங்கள் வங்கிக்கணக்குகளின் இருப்பை இன்னும் அதிகரித்துக் கொள்ளலாம் என்று நப்பாசை கொண்டவர்களாக விளங்குகின்றார்கள் என்பது புலனாகின்றது.
எமது அவதானிப்பின் படி யாழ்ப்பாணத்தில் ‘வாசம்’ செய்யும் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் கூட ‘ தமிழ் வேட்பாளர் கோசத்தை முன்னின்று எழுப்புகின்றவராக இருந்தாலும் மட்டக்களப்பு பகுதியில் பல வர்த்தக முயற்சிகளும் வீடுகளும் உள்ளதால் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்தால் தனது மட்டக்களப்பு வர்த்தகத்தை தொடரவும் இன்னும் வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்புக் கிடைக்கும் நாளுக்காகக் காத்திருக்கின்றார் என்ற செய்தியும் எமது ஆசிரிய பீடத்திற்கு கிட்டியுள்ளது.
இது இவ்வாறிருக்கையில் சில நாட்களுக்கு முன்பாக கருணா விநாயகமூர்த்தி, ரணில் விக்கிரமசிங்கவைப் பற்றிய தகவல் ஒன்றை அறிக்கையாக ஊடகங்களுக்கு வெளியிட்டதைக் கண்டு அவரது முன்னாள் ‘சகாவான’ பிள்ளையான் கூட ஜேவிபியின் வேட்பாளர் அநுரகுமார திசநாயக்கவை திட்டித் தீர்த்து தங்கள் கட்சியான ‘தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்’ கட்சிக்கு ஜேவிபி தான் முதலில் ஆயுதம் தந்தார்கள். பின்னர் மக்களைச் சுடுவதற்காக ஆயுதங்களை தங்களிடமிருந்து கேட்டார்கள் என்றெல்லாம் அறிக்கை ஒன்றின் மூலம் விசமத்தனமா பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.
இவ்வாறு பார்க்கும் போது தங்கள் நலன்களைக் கவனிக்கும் தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களின் நிழலில் வாழ்க்கையை நடத்திவரும் அவர்களது சகாக்களும் ரணில் விக்கிரமசிங்காவிற்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கிய தமிழ் மக்களை மாத்திரமல்ல தென்னிலங்கையில் உள்ள உழைக்கும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளையும் வாழ்க்கையின் அடிமட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் ரணிலின் கைங்கரியத்திற்கு ‘கரம்’ கொடுப்பவர்களாக விளங்குவது வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வை மேம்படுத்தாது என்றும். அநுரகுமார திசநாயக்க போன்றவர்களிடம் தங்கள் ‘வர்த்தக நோக்கம்’ எடுபடாது என்பதை அறிந்து அவருக்கு எதிராகவும் ரணிலுக்கு ஆதரவாகவும் செயற்படுவது அனைத்து இலங்கை மக்களுக்கும் ஏற்புடைய தல்ல என்பதை இவ்வாரம் நான் கதிரோட்டம்’ பகுதியில் எழுத்தில் பதிவு செய்ய விரும்புகின்றோம்!
பதில்: கிழக்கில் கருணா மட்டுமல்ல பிள்ளையான், வியாழேந்திரன் இருவரும் இரணிலுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவுத்துள்ளார்கள். நக்கினார் நாவிழப்பது வழமை.
(6) மக்களால் தெரிவு செய்யப்படாத ரணிலை மீண்டும் மக்கள் மூலம் தெரிவு செய்வதில் தமிழ் அரசியல்வாதிகள் முன்வரிசையில் இருப்பது ஏன்? என்ற கேள்விக்குரிய பதில்கள் பிள்ளையான் மற்றும் சுமந்திரன் போன்றவர்களின் பேச்சுக்களிலிருந்து தென்படுகின்றன என்பதையும் அதேபோன்று வாயை மூடிக்கொண்டிருப்பவர்களும் தங்கள் தேடல்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப ரணிலுக்கு மறைமுகமான ஆதரவை வழங்குவார்கள் என்றே நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
பதில்: பிள்ளையான் இரணிலை ஆதரிப்பதாக பகிரங்கமாக அறிவித்துவிட்டார். சுமந்திரன்? இரணிலை ஆதரித்துப் பேசியதாக எழுதுவது சுத்தப் பொய். பிள்ளையானையும் சுமந்திரனையும் ஒப்பிட வேண்டாம். பித்தளையையும் தங்கத்தையும் ஒப்பிட வேண்டாம்.
பிள்ளையான், வியாழேந்திரன், டக்லஸ், கருணா ஆகிய தமிழின இரண்டகர்கள் ஆதரிக்கும் இரணிலை தமிழரசுக் கட்சி எந்தச் சந்தர்ப்பத்திலம் ஆதரிக்காது என்பது அரசியலில் அ, ஆ தெரிந்தவர்களுக்கு வெள்ளிடமலை. எனவே கவலை விடுக.
நக்கீரன்
Leave a Reply
You must be logged in to post a comment.