பிறந்து 38 நாட்களான குழந்தையை தாத்தாவே கொன்றது ஏன்? மூடநம்பிக்கை காரணமா?

பிறந்து 38 நாட்களான குழந்தையை தாத்தாவே கொன்றது ஏன்? மூடநம்பிக்கை காரணமா?

அரியலூர்: பிறந்த 38 நாட்களில் தாத்தாவே குழந்தையைக் கொன்றது ஏன்? மூடநம்பிக்கை காரணமா?

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,மாயகிருஷ்ணன் கண்ணன்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 26 யூன் 2024

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய உள்ளடக்கங்கள் இருக்கலாம்.

பிறந்து சில வாரங்களே ஆன பச்சிளம் குழந்தையை சொந்த தாத்தாவே கொலை செய்ததாக அரியலூர் அருகே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை விசாரணையின் போது கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ள அவர், சித்திரை மாதம் பிறந்த குழந்தையால் குடும்பத்திற்கு அதிர்ஷ்டம் இருக்காது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இப்படிச் செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுகுறித்து கைது செய்யப்பட்ட வீரமுத்துவின் குடும்பத்தினரிடம் பேசியபோது, அவர் ஏற்கெனவே கடன் சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறியதோடு, சித்திரை மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தனர்.

அரியலூரில் பச்சிளம் குழந்தை கொல்லப்பட்ட விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை அறிய பிபிசி தமிழ் சம்பவம் நடந்த கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள உட்கோட்டை கிராமத்திற்குச் சென்றது.

என்ன நடந்தது?

அரியலூர்

சோழ தேசத்தின் ராஜேந்திர சோழன் அரண்மனை இருந்த பகுதியான மாளிகை மேட்டின் வெகு அருகில் பாதுகாப்பு அரணாக இருந்த அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமத்திற்குள் நுழைந்த போது பழங்கால சுவடுகள் மாறாமல் கட்டப்பட்ட ஓட்டு வீடுகள் நம்மை வரவேற்றன.

அந்த ஊரின் வடக்குப் பகுதியில், கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்ட வீரமுத்துவின் வீட்டிற்கு அருகே வாழும் பெயர் குறிப்பிட விரும்பாத முதியவர் ஒருவர் பிபிசி தமிழிடம் நடந்தவை குறித்து விவரித்தார்.

“வீரமுத்து பால் வியாபாரம் செய்து அவரது மனைவி உள்பட மூன்று மகள்களையும் கவனித்துக் கொண்டார். அவர் விவசாயக் கூலி வேலைக்கும் சென்று வந்தார். மூன்று பெண்களையும், போதிய வருமானம் இல்லாத நிலையிலும், சிரப்பட்டு படிக்க வைத்து பட்டதாரி ஆக்கியுள்ளார்” என்று வீரமுத்துவின் குடும்பத்தினர் பற்றி விவரித்தார் பிபிசி தமிழிடம் 60 வயது மதிக்கத்தக்க அந்த முதியவர்.

மூத்த மகள் அனுசியாவுக்கு உள்ளூரிலேயே திருமணம் செய்து கொடுத்துள்ளதாகவும், இரண்டாவது மகளான சங்கீதா திருமணமாகி பிரசவத்திற்காகத் தாய் வீட்டுக்கு வந்த நிலையில் இச்சம்பவம் நடந்ததாகவும் அவர் கூறினார்.

அரியலூர்

குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரிடம் பேசியபோது, சித்திரை மாதம் ஆண் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்ற சொல் வழக்கைத் தான் உள்படப் பல வயதானவர்களும் அடிக்கடி கிராமத்தில் பயன்படுத்வதாகக் கூறினார் அந்த முதியவர்.

இருப்பினும் குழந்தையைக் கொல்லும் அளவுக்கு நடக்கும் எனத் தான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்று கூறிய அவர், “தனது பெண் குழந்தைகளுக்கு கடன் வாங்கித் திருமணம் நடத்தியிருந்த நிலையில், சில மாதங்களாகவே வீரமுத்து கடன் நெருக்கடியில் இருந்தார்” என்று பிபிசியிடம் பெயரைக் குறிப்பிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் பேசினார் அந்த முதியவர்.

அந்த முதியவரைக் கடந்து வீரமுத்துவின் வீட்டுக்குச் சென்றபோது அங்கு ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் இல்லை. இந்தச் சம்பவம் குறித்து பிபிசியிடம் பேசிய வீரமுத்து குடும்பத்தின் நெருங்கிய உறவினரான ரங்கநாதன், என்ன நடந்தது என்பதைப் பகிர்ந்து கொண்டார்.

“கடந்த ஆண்டு வீரமுத்து தனது இரண்டாவது மகளுக்குத் திருமணம் செய்து வைத்த பிறகு, அவரது கடன் சுமை அதிகமானது. அத்துடன் பிரசவத்திற்காக அவரது மகள் சங்கீதா இங்கு சில மாதங்களுக்கு முன்பு வந்தார்.” அவருக்கு கடந்த மே மாதம் 6ஆம் தேதி, அதாவது சித்திரை மாதத்தில் மகன் பிறந்த நிலையில், அதற்குப் பிறகு வீரமுத்து சித்திரை மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது தொடர்பாகத் தனது கவலையை தன்னிடம் பகிர்ந்து கொண்டதாக ரங்கநாதன் கூறினார்.

”குழந்தையின் தந்தை திருப்பூரில் இருந்து சில நாட்களுக்கு முன்பாக வந்து குழந்தையைப் பார்த்துவிட்டுச் சென்ற பிறகு வீரமுத்து குழந்தையைக் கொலை செய்திருக்கிறார். நிலம் ஏதுமில்லாத நிலையில் கடன் தொல்லையால் அவர் சிரமங்களை எதிர்கொண்டிருந்தார். ஆனால் ஜோதிடத்தின் மீதுள்ள நம்பிக்கையால் குழந்தையைக் கொலை செய்தாரா என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும்.”

குழந்தையைக் காணாமல் அனைவரும் தேடியபோது தங்களுடன் சேர்ந்து வீரமுத்துவும் தேடியதாகக் கூறும் ரங்கநாதன், இதனால் அவர் மீது குடும்பத்தில் யாருக்கும் சந்தேகம் வரவில்லை என்றும் விவரித்தார்.

காவல்துறையிடம் சிக்கியது எப்படி?

அரியலூர்

பிறந்த 38 நாட்களான பச்சிளம் குழந்தை இறந்த விவகாரத்தில், காவல்துறை நடத்திய முதல்கட்ட விசாரணையில் எந்தத் தகவல்களும் தெரியவராத நிலையில் குடும்பத்தினர் ஓவ்வொருவரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அப்படி காவல்துறை வீரமுத்துவிடம் விசாரணை நடத்தியபோது உண்மையை அவர் விவரித்துள்ளார்.

இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர் ராமராஜன், தன்னுடைய பேரக் குழந்தையைத் தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்ததைத் தனது வாக்குமூலத்தில் வீரமுத்து ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார்.

“ஏற்கெனவே கடன் சுமையில் இருந்து வீரமுத்துவுக்கு, மகளின் வளைகாப்பு, பிரசவம் மற்றும் குழந்தை பிறந்த பிறகு செய்ய வேண்டிய சீர்வரிசை கூடுதல் கடன் சுமையை அளித்துள்ளது. இதனால் அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக விசாரணையின்போது காவல்துறையிடம் கூறியுள்ளார்.”

தொடர்ந்து பேசிய ராமராஜன், ”மூன்று பெண் குழந்தைகள் இருக்கும் தன் வீட்டில் ஆண் வாரிசு யாரும் இல்லாத நிலையில், சித்திரையில் பிறந்த ஆண் குழந்தையால் வீட்டிலுள்ள ஆணான தனக்கு பாதிப்பு ஏற்படும் என்ற நம்பிக்கையில் பிறந்த குழந்தையை ஏதாவது செய்யத் திட்டமிட்டுள்ளார். அதன்படி குழந்தையை வேறு எங்காவது கொண்டு சென்றுவிடலாம் என நினைத்துக் கொண்டு இருந்த வீரமுத்து, மன உளைச்சலால் என்ன செய்கிறோம் என்பதை உணராமல் பச்சிளம் குழந்தையைத் தண்ணீர் டிரம்மில் மூழ்கடித்துக் கொலை செய்துள்ளார்,” என்று விசாரணையின் போது தங்களிடம் ஒப்புக்கொண்டதாகக் கூறினார் காவல் ஆய்வாளர் ராமராஜன்.

குழந்தை கொலை தொடர்பாக தாத்தா வீரமுத்து அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் கொலையை எப்படிச் செய்தார் என்பதை நடித்துக் காட்டியதாகவும், அதை விசாரணைக்கான ஆவணத்திற்காக வீடியோவாக பதிவு செய்துள்ளதாகவும் காவல்துறை அதிகாரி கூறினார்.

மூடநம்பிக்கையும் மன உளைச்சலும்

அரியலூர்

அரியலூரில் நடந்த இச்சம்பவம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சென்னை அரசு மனநல காப்பக பேராசிரியை பூர்ண சந்திரிகா, இது போன்ற நம்பிக்கை இவ்வளவு ஆபத்தாக முடிந்தது அதிர்ச்சி அளிப்பதாகக் கூறினார்.

தாத்தாவே மூடநம்பிக்கையால பேரக்குழந்தையைக் கொன்றுள்ளது இந் சமூகம் மூடநம்பிக்கையில் இருந்து முழுமையாக விடுபடவில்லை என்பதற்கு உதாரணமாக இருப்பதாகக் கூறிய பூர்ண சந்திரிகா, “மனிதர்கள் பலரும் ஏதாவது ஒரு நம்பிக்கையின் அடிப்படையில்தான் தினசரி வாழ்க்கையை நகர்த்துகின்றனர். ஆனால் அந்த நம்பிக்கை இத்தகைய தீவிரத்திற்கு ஒரே நாளில் வழிவகுக்காது” என்று கூறினார்.

இதன் உளவியல் பின்னணி குறித்து விவரித்த அவர், ஒருவரின் வயது கூடும்போது நினைவாற்றல் சிதைவு ஏற்படும். சிலருக்கு தொடர் மன உளைச்சலில் இருப்பதாலும் இப்படி நடக்கும் என்றார். அத்தகைய சூழ்நிலைகளில், “இதுபோன்ற மூடநம்பிக்கையும், சுற்றி இருப்பவர்களின் சொல்லாடல்களும் அவர்களின் ஆழ்மனதில் கடுமையான தாக்கத்தை உருவாக்கும்.”

“இது நாளடைவில் இதுபோன்ற சம்பவங்களைச் செய்யத் தூண்டும் காரணியாக அமைகிறது. தாயே குழந்தையைக் கொலை செய்யும் சில நிகழ்வுகளும் இதற்கு முன்னர் நடந்துள்ளன. நம் அருகில் இருப்பவர்கள் மன உளைச்சலில் இருந்தாலோ, அதற்குண்டான அறிகுறி தெரிந்தாலோ அவர்களுக்குக் கட்டாயம் உதவி தேவை. தினசரி நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்து அதைச் சரியாகக் கையாள வேண்டும்.”

குறிப்பாக பொருளாதார நெருக்கடியில் இருப்பவர்களையோ, முதியவர்களையோ கூடுதல் சிரத்தையுடன் கவனிக்க வேண்டியது அவசியம் என்று பூர்ண சந்திரிகா தெரிவித்தார்.

மன அழுத்தம் தொடர்பாக ஆலோசனைகளைப் பெற 104 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். டெலிமானஸ் என்ற அரசின் திட்டத்தின் கீழ் மன நல ஆலோசனைகளைப் பெற 14416 என்ற தொடர்பு எண்ணை அழைத்து உதவி பெறலாம்.

https://www.bbc.com/tamil/articles/c6pp9errr3wo

About editor 3187 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply