யூதர்களின் வரலாறு 1-20

யூதர்களின் வரலாறு-01

1972 இல் ஜெர்மனியில் நடந்த ஒலிம்பிக்சில் 11 இஸ்ரேல் விளையாட்டு வீரர்களும் அவர்களின் பயிற்றுனர்களும் பாலஸ்தீன “கருப்பு செப்டெம்பர்” குழுவால் கொல்லப்பட்டதும், அதன் பின்பு இடி அமீன் காலத்தில் 1979 இல் நடந்த ஒப்பரேஷன் எண்டபே யும் நான் சிறுவனாக இருந்த காலத்தில் நடந்தன. அது பற்றிய செய்திகளும் திரைப்படங்களும் எனக்கு இஸ்ரேல் பற்றி அறியும் ஆவலை தூண்டியது.
எனது அம்மாவிடம் இருந்த டைம்ஸ் அட்லஸ் என்னும் உலக வரைபடங்ககள் உள்ள புத்தகத்தை புரட்டிப்பார்த்தால் அதில் இஸ்ரேல் என்றொரு நாடே இருக்கவில்லை! ஆம் எனது அம்மா படித்தபோது இஸ்ரேல் என்றொரு நாடே இருக்கவில்லை!
சில வருடங்களுக்கு முன்பு இஸ்ரேல் நாட்டுக்கு சென்று வந்ததில் இருந்து யூதர்களைப்பற்றியும், இஸ்ரேல் நாட்டின் உருவாக்கம் அதன் வளர்ச்சி பற்றியும் ஒரு தொடர் எழுதலாம் என்று நினைத்தாலும் நேரம் ஒதுக்குவது கடினமாக உள்ளது.
யூதர்களைப்பற்றி எழுதவேண்டும் என்றால் கி மு 2000 ஆண்டளவில் ஆபிரகாமின் தோற்றத்தில் இருந்து ஆரம்பித்து கிறிஸ்துவின் இறப்பின் பின்பான, நாடோடிகளாக அலைந்து திரிந்த, 2000 ஆண்டுகளைப்பற்றி எழுதவேண்டும். 1948இல் இஸ்ரேல் தோற்றம் பெற்றாலும் அதற்கான ஆயத்தங்களை 19ம் நூற்றாண்டில் ஆரம்பித்து alliah என்ற ஜெருசலேமுக்கு போய் குடியேறும் முறையுடன் ஆரம்பித்திருந்தார்கள். அதன் பின்பு 1964 இல் PLO ஆரம்பிக்கப்பட்டதும், 1967இல் நடந்த 6 நாள் போரும் முக்கியமானவை.
இன்று 50% ஆன உலக யூதர்கள் இஸ்ரேலுக்கு சென்று குடியேறிவிட்டார்கள். ஒரு கோடி சனத்தொகை உள்ள இஸ்ரேலில் 75% யூதர்களும் 20% முஸ்லிம்களும் 2% கிறிஸ்தவர்களும் வாழுகின்றனர். வரப்போகும் எனது தொடரை வாசிக்க பொறுமையில்லாதவர்கள் கீழுள்ள வீடியோவை பாருங்கள்.

https://www.facebook.com/kumaravelu.ganesan/videos/10225739431129855/

யூதர்களின் வரலாறு-02

ஜெருசலேத்துக்கு ஏன் யூதர்களும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதற்கு காரணங்களை முதலில் சொல்லலாம் என்று நினைக்கின்றேன்.
கி மு 600 அளவில் பாபிலோனியர்கள் ஜெருசலேத்தில் மீது படையெடுத்ததுடன் யூதர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுகின்றனர். அத்துடன் அங்கிருந்த சொலமன் கோவில் என்ற யூதர்களின் முதலாவது கோவில் (1st temple ) அழிக்கப்படுகின்றது. கிட்டத்தட்ட 100 வருடங்களுக்கு பின்பு திரும்பும் யூதர்கள் தமது இரண்டாம் கோவிலை (2nd temple ) முதலாம் கோவிலின் இடிபாடுகளின் மேல் கட்டுகின்றார்கள். கிறிஸ்துவின் காலம் வரை இந்த கோவில் அழியாமல் இருந்த காலத்தை இரண்டாம் கோவில் காலம் என்றழைப்பர். (ஜேசுவின் கொலைக்கு காரணமானவர்கள் யூதர்கள் என்று சொல்லி?? delete ) ரோமர்கள் இக்கோவிலை கிபி70 இல் இடித்து அழித்து யூதர்களையும் இவ்விடத்தில் இருந்து துரத்துகின்றனர். ஆம் இயேசு பிறந்த இடம் பெத்தலகேமும், சிலுவையில் அறையப்பட்ட இடமும் இங்குதான் உள்ளது. பெத்தலகேம் தற்பொழுது இஸ்ரேல் பாலஸ்தீன எல்லைக்கு அப்பால் West Bank என்று சொல்லப்படும் பாலஸ்தீன பிரதேசத்திற்குள் போய்விட்டது.
ரோமர்களின் ஆட்சியும் கிறிஸ்தவத்தின் வளர்ச்சியும் இங்கு கிபி 7ம் நூற்றாண்டு வரை தொடர்கின்றது. 7ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இஸ்லாத்தின் ஆரம்பமும் அதன் பின்னான அரேபியர்களின் படையெடுப்பும் இந்த யூதர்களின் கோவிலை முற்றாக இல்லாமல் ஆக்கி அதன் மேல் முஸ்லிம்களின் அல் அக்ஸா பள்ளிவாசல் கட்டப்படுகின்றது. முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி முகமது நபி அவர்கள் இங்கிருந்தே சுவர்க்கம் சென்றதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இந்த பள்ளிவாசல் முஸ்லிம்களின் மூன்றாவது புனிதமான பள்ளிவாசலாக கருதப்படுகிறது.
இவையனைத்தும் பைபிள் கதைகள் என்றும், இவற்றுக்கு ஆதாரம் இல்லை என்றும் வாதாடுவோர் இன்றும் உள்ளனர். இதன் காரணமாக யூதர்களின் 3வது கோவில் அவ்விடத்தில் கட்டப்படுவது தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. அங்கு மிஞ்சியிருக்கும் ஒரு சுவரையே (Western Wall) யூதர்கள் இப்பொழுது வணங்குகின்றனர்.
அண்மையில் எனது இஸ்ரேலிற்கான பயணத்தின்போது இந்த கோவில்களின் இடிபாடுகளையும் அவற்றின் மீது கட்டப்பட்ட பள்ளிவாசல்களையும் நேரே பார்க்கக் கூடியதாகவிருந்தது. அது மாத்திரமல்லாமல், நிலத்தின் அடியில் கடந்த பல தசாப்தங்களாக நடக்கும் அகழ்வாராய்ச்சியையும் பார்க்க கூடியதாகவிருந்தது. அரசாங்க அழைப்பொன்றின் காரணமாக சென்ற எமக்கு பிரத்தியேகமாக நிலத்தடியில் 3-4 மாடி ஆழத்துக்கு நடக்கும் அகழ்வாராய்ச்சியை காண்பித்து விளக்கினார்கள். அவர்கள் ஆதாரபூர்வமாக 1ம், 2ம் கோவில்களின் எச்சங்களை மேலிருக்கும் பள்ளிவாசல்களுக்கு சேதமில்லாமல் வெளிக்கொணர்ந்த விதம் ஆச்சரியம் அளிக்கும் விதமாக இருந்தது.


(Photo-Western Wall at Jerusalem)
Kumaravelu Ganesan
21.05.2021

யூதர்களின் வரலாறு-03

இதுவரை நான் விஞ்ஞான ரீதியான ஆய்வுகளின் அடிப்படையான குறிப்புகளையே எழுதினேன். சம்பவங்கள் உண்மையென்று நிறுவப்பட்டாலும் அதற்கான காரணங்களை சரியாக நிறுவுவது சுலபமல்ல. யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மூன்று சமயத்தவரும் ஜெருசலேத்திற்கு உரிமை கோருகின்றனர் என்று கூறியிருந்தேன். அதற்கான காரணத்தை இப்பொழுது மேலோட்டமாக கூறிச் செல்லலாம் என்று நினைக்கின்றேன். இதற்கு அவர்களின் வேத நூல்களான தோரா, பைபிள், குரான் மாத்திரமே ஆதாரமாகும்.
இறைவனின் படைப்பான ஆதாம் ஏவாளின் 19வது தலைமுறையில் வந்த ஆபிரகாமுக்கும் அவரின் ஒரு மனைவி சாராவுக்கும் பிறந்த ஈசாக் என்ற மகனின் வாரிசுக்களே யூதர்கள் என்றும், இன்னொரு மனைவிக்கு பிறந்த மகனான இஸ்மாயிலின் வாரிசுக்களே அரேபியர்கள் என்றும் சொல்லப்படுகின்றது.
கிமு 2000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக சொல்லப்பட்டாலும் அகழ்வாராய்ச்சிகளின் அடிப்படையில் கிமு 700 அளவில் யூதமத சின்னங்கள் பாவிக்கப்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அதற்கு 700 வருடங்களின் பின்பு கிறிஸ்தவ மதமும், அதற்கு 600 வருடங்களின் பின்பாக இஸ்லாம் மதமும் தோற்றுவிக்கபப்டுகின்றது. கி பி 7ம் நூற்றாண்டில் இஸ்லாம் தோற்றுவிக்கப்படும் வரை அரேபியர்கள் தேவதைகள் மற்றும் புனித ஆவிகளை வணங்கி வந்தனர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இம்மூன்று சமயங்களையும் ஆபிரகாமிய சமயங்கள் என்று சொல்வார்கள். ஆபிரகாமின் வம்சத்தில் பிறந்த ஆண் குழந்தைகள் அத்தனை பேருக்கும் சுன்னத் எனப்படும் விருத்த சேனம் செய்து வைக்கப்பட்டதுடன் இம்மரபை யூதர்களும் இஸ்லாமியர்களும் இன்றுவரை கடைப் பிடித்து வருகின்றனர்.
ஈசாக்கின் வாரிசுகள் எகிப்தில் வாழ்ந்து வந்த காலத்தில் அவர்களின் பெருக்கத்தையும் செல்வத்தையும் பொறுக்கமுடியாத எகிப்திய மன்னனும் மக்களும் அவர்களுக்கு கொடுமை செய்தார்கள் என்றும் அவர்களை மீட்டெடுத்து அழைத்து வந்த மோசஸ் (Moshe என்றும் சொல்வர்) அவர்களின் தலைவரானார் என்பதும் பைபிள் கதை. வரும் வழியில் சினாய் பாலை வனத்தில் தங்கியிருந்த போது இவர்களின் மதக் கொள்கைகளும் ,தோரா எனப்படும் யூதர்களின் வேத நூலும் பிறந்தன என்றும், ஜோஷுவா என்னும் தளபதியின் தலைமையில் இஸ்ரவேலை கைப்பற்றி அங்கு உள்ளவர்களை கொன்று ஆட்சி செய்தனர் என்றும் சொல்லப்படுகின்றது. இதன் பின்பு அவர்களின் மன்னர்களாக சவுலும், பின்பு தாவீதும் அதன்பின்பு சொலமனும் வருகின்றனர். இந்த தாவீது தான் ஆடு மேய்க்கும் சிறுவனாக இருந்து கோலியாத்தினை கவண் கொண்டு சண்டையிட்டு கொல்வதாக நாம் முன்பு படித்திருப்போம். இந்த சொலமன் மன்னன் தான் யூதர்களின் முதலாவது கோவிலை (Solomon Temple ) கிமு587 இல் கட்டியவன். இக்காலப்பகுதியில் தான் நான் முன்பு கூறியது போல பாபிலோனியர்கள் படையெடுத்து இஸ்ரவேலை அழித்ததும் சொலமன் கோவிலை இடித்ததும் நடந்தது.
இதன்பின்பு அலெக்ஸ்சாண்டரின் வாரிசுகளான கிரேக்கர்மீண்டும் இஸ்ரவேலை கைப்பற்றி 50 ஆண்டுகாலம் ஆண்டபோது இடிக்கபப்ட்ட சொலமன் கோவிலுக்கு மேல் மீண்டுமொரு கோவில் (2nd temple ) கட்டினார்கள். அதைத்தொடர்ந்து நடந்த முக்கியமானசம்பவமான இயேசு பிறந்த கதையையும் சிலுவையில் அறையப்பட்ட வரலாற்றையும் அதில் யூதரின் பங்கையும் அடுத்த பகுதியில் பார்ப்போம்.
அண்மையில் இஸ்ரேலுக்கு சென்றபோது இயேசு பிறந்ததாக கருதப்படும் குகையின் மேல் கட்டப்பட்ட Church of the Nativity ஐ தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. இந்த கோவில் தற்பொழுது பாலஸ்தீனியர் வசம் உள்ள பெத்லஹெம் என்னும் இடத்தில் உள்ளது. இஸ்ரவேல் – பாலஸ்தீன எல்லைச்சுவர் கடந்து செல்ல வேண்டுமாதலால் எந்த இஸ்ரவேல் யூதர்களும் அங்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்களை பணயக் கைதிகளாக பிடித்து விடுவார்களோ என்ற அச்சம் காரணம் என்று நினைக்கின்றேன்.
இயேசு பிறந்த இடத்தை குறிப்பதற்காக ஒரு வெள்ளி நட்சத்திரம் நிலத்தில் பதிக்கப்பட்டுள்ளது. படம்கீழே.
Kumaravelu Ganesan
27.05.2021

Saturday, July 1, 2023

யூதர்களில் வரலாறு -04

——————–
ஜெருசலேமில் உள்ள ஒரு ஹொட்டேலின் 14வது மாடியில் தங்கியிருந்த நான் இரவு சாப்பாட்டிற்கு போவதற்காக லிப்ட்டில் புகுந்தபோது ஒரு பட்டனும் வேலை செய்யவில்லை. ஆனால் அது ஒவ்வொரு மாடியிலும் நின்று நின்று கதவு திறந்து மூடியது. பலர் உள் வந்து வெளியேறிக்கொண்டே இருந்தனர். பட்டன்கள் பழுதாகிவிட்டதாக்கும் என்று நினைத்து ரிசப்ஷனுக்கு போய் சொன்னபோது, இண்டைக்கு வெள்ளிக்கிழமை , ஸபத் எண்டான் ஒருத்தன். சரி எண்டு வந்து அது என்னவெண்டு பார்த்தால் யூதர்களின் பத்து கட்டளைகளில் நாலாவதான ஒய்வு நாளாம் ! அதென்ன பத்து கட்டளைகள் என்று பார்ப்போம்.
யூதர்களின் சமய நூலான ஹீப்ரு பைபிள் அல்லது தோரா /தானாக் இன் படி பத்துக் கட்டளைகள் என்பது எகிப்தில் இருந்து இஸ்ரவேலர்கள் தமது பூர்வீக நிலமான காணான் தேசம் என்று சொல்லப்பட்ட தற்போதைய இஸ்ரேலுக்கு திரும்பி வரும்போது சினாய் மலை மீது கடவுளால் கற்பலகை மேல் எழுதி மோசஸ் மூலமாக கொடுக்கப்பட்ட சமய, அறநெறி விதிகளின் பட்டியலாகும்.
பழைய ஏற்பாடு பைபிளிற்கு அடிப்படை இந்த யூதர்களின் தானாக் என்பதால் இந்த 10 கட்டளைகளையும் கத்தோலிக்க, புரடஸ்தாந்து கிறிஸ்தவ மதப்பிரிவுகளும் சிறிய மாற்றங்களுடன் இன்றும் கைக்கொள்கின்றன.
பத்து கட்டளைகள்:
நானே உன் கடவுளாகிய ஆண்டவர்: என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது, கடவுளின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம், உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே, ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட, கொலை செய்யாதே, விபச்சாரம் செய்யாதே, களவு செய்யாதே, பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே, பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக.
ஆனால் இஸ்லாமோ 5 தூண்கள் என்ற மார்க்கக் கடமைகளை மாத்திரம் போதிக்கின்றது. அவையாவன இறை நம்பிக்கை, ஐவேளை தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ் கடமை.
பண்டைய எகிப்திய, கிரேக்க, ரோம சாம்ராஜ்யங்கள் மாத்திரமல்லாமல் இந்திய இலங்கை வரலாறுகளையும் பார்த்தீர்கள் என்றால் அரசாங்கத்தில் மதகுருக்களின் ஆதிக்கம் பெருமளவில் இருந்திருக்கும். (இப்ப மட்டும் என்ன வாழுதாம்?) மத நிந்தனை என்பது மன்னிக்க முடியாத குற்றமாக கருதப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டது. சோக்கிரட்டீசுக்கு கிரேக்கர்களால் வழங்கப்பட்ட மரணதண்டனையும் அவ்வாறான தொன்றே. 17ம் நூற்றாண்டில் கூட பூமி சூரியனை சுற்றி வருகின்றது என்று கூறியதற்காக இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ கலிலிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஓய்வு நாள் அல்லது ஸபத் (Shabbat ) என்பது யூத சமயத்தைப் பொறுத்த வரை ஏழாவது நாள் ஆகும். ஆறு நாட்களில் உலகைப் படைத்த இறைவன் ஏழாம் நாள் ஓய்வு எடுத்ததை இது அடிப்படையாய்க் கொண்டுள்ளது. ஓய்வு நாள் வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனதிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலம் ஆகும். இந்த ஒய்வு நாளில் அவர்கள் செய்யக்கூடாத பலவற்றை பட்டியல் இட்டுள்ளனர். அதில் விளக்கு ஏற்றக் கூடாது, நெருப்பு அணைக்கக்கூடாது என்பதில் இருந்து நாற்று நடுவது, விதை விதைப்பது, உழுவது என்று 39 தொழிற்பாடுகள்(Melachot) பட்டியலிடப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை பொழுது சாய்வதற்குள் விளக்கு (லைட்) எல்லாம் ஏற்றப்பட்டு, உணவு சமைக்கப்பட்டு விடும். பத்துக் கட்டளைகளின் அடிப்படையில் ஓய்வு நாளின் போது இறைவனை ஆராதிப்பதைத் தவிர எந்த வேலையும் செய்யக் கூடாது; பெரும்பாலான இயந்திரங்களை இயக்கக் கூடாது.
2000 வருடங்களுக்கு முன்பாக இது எழுதப்பட்டிருந்தாலும் இப்பொழுதும் அதை பின்பற்றுகின்றனர். இயந்திரங்களை இயக்க கூடாது என்பதற்காக லிப்ட் பட்டனைக்கூட அழுத்த மாட்டார்கள். வெள்ளிக்கிழமை ஸபத் ஆரம்பித்த நேரத்தில் இருந்து சனிக்கிழமை முடியும் வரை லிப்ட்களை ஒவ்வொரு மாடிக்கும் தாமாக நின்று நின்று செல்வது போல் புரோகிராம் செய்து வைத்துள்ளனர். (சிரிக்காதேங்கோ).
படம்: King David (மன்னன் தாவீதின் சிலை அவரின் சமாதிக்கு வெளியில்)
குமாரவேலு கணேசன்
29.05.2021

யூதர்களின் வரலாறு 05

புதியதொரு நாட்டுக்கு போகும் போது உணவு ஒரு பிரச்சனையாக இருப்பது எல்லோருக்கும் வழமை தான். ஜெருசலேத்தில் போய் இறங்கியவுடன் நானும் அதை உணர்ந்தேன். எங்கு போனாலும் இலகுவாக வாங்கக்கூடியது பீட்சா தான். அவை எல்லா நாட்டிலும் ஒரே மாதிரித்தான் இருக்கும். ஆனால் இஸ்ரேலில் அப்படியில்லை . மெனுவை பார்த்தால் தலை சுத்தியது. சீஸ் போட்டால் இறைச்சி இல்லை, இறைச்சி போட்டால் சீஸ்இல்லை! அவர்களின் கஷ்ரத் என்னும் உணவு விதிகளின்படியே உணவு விடுதிகளில் உணவு விற்கப்படும். அதென்ன கஷ்ரத் உணவு விதி என்று பார்ப்போம்.
யூதர்கள் கடந்த 3000 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களின் பழக்க வழக்கங்களை பெரிதும் மாற்றாமல் இருந்து வருகின்றனர். அவர்களின் உணவு வழக்கத்தை Kashrut என்னும் உணவு விதிகள் தீர்மானிக்கின்றன. இந்த விதிகளுக்கு அமைவான உணவை கோஷ(ர்) (Kosher) என்று அழைப்பர். இது கிட்டத்தட்ட இஸ்லாமியர்களின் ஹலால் போன்ற ஒன்றுதான் என்றாலும் நிறைய வித்தியாசம் உள்ளது. கோஷவுக்கும் ஹலாலுக்கும் உள்ள வித்தியாசங்களை பார்ப்போம்.
கோஷர் சட்டம் மட்டி (shell fish) , செதில்களுடன் கூடிய விலங்குகள், முயல் மற்றும் வேட்டையாடும் பறவைகள் ஆகியவற்றை தடை செய்கிறது, ஆனால் ஹலால் அவ்வாறு செய்யவில்லை. கோஷர் மற்றும் ஹலால் விதிகள் இரண்டும் பன்றி இறைச்சியை சாப்பிடுவதை தடை செய்கின்றன.
ஹலால் விதிகள் வைன் , மதுபானம், பியர் மற்றும் போதைப்பொருளை தடை செய்கின்றன, ஆனால் கோஷர் சட்டம் அவ்வாறு செய்யவில்லை. ஆம் கஷ்ரத் சட்டத்தில் நன்றாக மது குடிப்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
கோஷர் சட்டம் பால் மற்றும் இறைச்சியைக் கலப்பதைத் தடைசெய்கிறது. அத்துடன் அவற்றை ஒன்றாக சமைப்பது, பரிமாறுவது மற்றும் அவற்றுக்குப் பயன்படுத்தப்படும் பாத்திரங்களை ஒன்றாக சுத்தம் செய்வது போன்றவற்றை தடை செய்கிறது, ஆனால் ஹலால் சட்டம் அவ்வாறு தடை செய்யவில்லை.
மயங்கிய நிலையில் உள்ள (stunned ) ஒரு மிருகத்தை கொலை செய்வது ஹலால் சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, ஆனால் கோஷர் விதிகளில் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹலால் விதிகள் முழு விலங்கையும் சாப்பிட அனுமதிக்கின்றன, ஆனால் கோஷர் சட்டம் விலங்கின் பின் பகுதியை சாப்பிடுவதை தடை செய்கிறது. அது மட்டுமல்லாமல் விலங்கின் உள் பகுதிகள், முள்ளந்தண்டு, நரம்பு ஆகியனவும் கோஷரில் தடைசெய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மிருகமும் கொல்லப்படுவதன்போதோ அல்லது அதற்கு முன்பாகவோ ஹலால் சட்டத்தில் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும், ஆனால் கோஷருக்கு ஒவ்வொரு கொலைக்கும் முன் பிரார்த்தனை தேவையில்லை.
கோக்ஷருக்கு ஒரு யூதரான ஷோஷெட், அல்லது சிறப்பாக பயிற்சி பெற்ற ராபி, விலங்கைக் கொல்ல வேண்டும், அதே நேரத்தில் எந்த வயது முஸ்லீம், கிறிஸ்தவர் அல்லது யூதரும் ஹலால் சட்டத்தில் விலங்கைக் கொல்லலாம்.
இறைச்சியில் எஞ்சியிருக்கும் இரத்தம் ஹலால் விதிகளின்படி பிரச்சனையில்லை, ஆனால் கோஷர் விதிகளில் இரத்தத்தை விரைவாக, முழுமையாக வெளியேற்ற வேண்டும். மிகுதியான இரத்தத்தை உப்பு தடவி வெளியேற்றுவர்.
கோஷர் இறைச்சி ஹலால் சட்டத்தில் ஏற்றுக்கொள்ளத்தக்கது, ஆனால் கோஷர் விதிகளைப் பின்பற்றுபவர்களுக்கு ஹலால் இறைச்சி ஏற்றுக்கொள்ள முடியாது.
இவற்றை விட பல விசித்திரமான சட்டங்களும் உள்ளன. உதாரணத்திற்கு முட்டையில் சிவப்பு இரத்தம் இருக்கக்கூடாது. ஆனால் சிவப்பு இரத்தம் உள்ள முட்டையுடன் அப்படியில்லாத முட்டைகள் சிலவற்றை போட்டு அவித்தால் அவற்றையெல்லாம் சாப்பிடலாம்.
(படம்: சினாய் பாலைவனம்)
குமாரவேலு கணேசன்

30.05.2021

யூதர்களின் வரலாறு- 06

————————-
யூதர்களின் வரலாற்றை எழுதத் தொடங்கினால் உலக வரலாற்றின் 50% வந்துவிடும். எல்லாவற்றையும் எழுதிவிடவும் முடியாதாகையால் ஆர்வமானவர்கள் மிகுதியை தேடி வாசித்துக் கொள்ளுங்கள்.
கி.மு. 586-இல் ஜெருசலேம் ஆலயம் பாபிலோனியர்களால் இடிக்கப்பட்டது என்றும் பெரும்பாலான யூதர்கள் பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர் என்றும் ஐம்பது ஆண்டுகளுக்கு பின்பு, பாரசீக அரசர் சைரஸ், பாபிலோனியாவைக் கைப்பற்றி யூதர்களுக்கு மீண்டும் ஜெருசலேத்தை நிர்மாணிக்கும் அனுமதியை அளித்து, அதில் குடியிருக்கும் உரிமையையும் வழங்கினார் என்றும் வரலாறு சொல்கின்றது.
கி.மு. 520-515-இல் ஜெருசலேம் ஆலயம் இரண்டாவது முறையாகக் கட்டப்பட்டது. கி.மு.333-இல் அலெக்ஸாண்டரின் படைகளால் கைப்பற்றப்பட்ட இஸ்ரேல் கி.மு. 63 வரை கிரேக்கர்களின் பிடியில் இருந்தது. அதன் பின்பு கிமு 60 அளவில் ரோமர்களின் எழுச்சி ஆரம்பமாகி இஸ்ரவேல் இருந்த காணான் தேசம் அவர்களின் பிடிக்குள் வருகின்றது. கிமு40 இல் இருந்து கிபி 4 வரை ஆண்டரோம மன்னனான ஏரோது (Herod) மன்னன் காலத்திலேயே இயேசு கிறிஸ்து பிறக்கின்றார்.
இனி நான் எழுதப்போகும் இயேசு கிறிஸ்துவின் வரலாற்றுக்கு பைபிள் கதைகள் மாத்திரமே ஆதாரம் ஆகும். அவற்றுக்கு எந்த விதமான விஞ்ஞான, அகழ்வாராய்ச்சி ஆதாரங்களும் கிடையாது என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். விஞ்ஞானத்தையும் அஞ்ஞானத்தையும் இவ்வத்தியாயத்தில் போட்டுக் குழப்பாமல் அடுத்த அத்தியாயங்களில் அவற்றை சிறிது தொட்டு செல்லலாம் என்று நினைக்கின்றேன். கிறிஸ்தவ மத நம்பிக்கையுள்ளவர்களை நானும் நோகடிக்காமல் பின்னூட்டங்களும் நோகடிக்காமல் பார்த்துக்கொள்வேன் என்று கூறி ஆரம்பிக்கின்றேன்.
மகாபாரத கதையில் குந்திதேவி இளவரசர் பாண்டுவை திருமணம் செய்வதற்கு முன்னரே சூரியக் கடவுள் மூலமாக கர்ணன் பிறந்தான். அதேபோலவே, நாசரேத்தை (தற்போதைய வடக்கு இஸ்ரேலில் உள்ளது) சேர்ந்த யூதப்பெண் மரியாள் மற்றொரு யூதரான அவரது கணவர் ஜோசப்பை திருமணம் முடிப்பதற்கு முதலே பரிசுத்த ஆவியால் கர்ப்பவதியாகி, இயேசுவை பெறுகிறார். தீர்க்கதரிசிகளால் ஏற்கனவே சொல்லப்பட்டபடி யூதர்களின் அரசன் இயேசு பிறந்த செய்தி அறிந்த ரோம அரசன் ஏரோது, இயேசுவை கொல்ல வேண்டும் என்று கட்டளையிட்டான். தூதன் மூலம் தகவல் அறிந்த ஜோசப்பும், மரியாளும் இயேசுவை தூக்கிக் கொண்டு எகிப்துக்கு சென்றனர். ஏரோது மரணிக்கும் வரை அங்கிருந்து பின், கலிலியோவில் உள்ள நாசரேத் நகரில் தங்கி வசித்தனர்.
இயேசு கிறிஸ்து கி.பி., 30ல் தனது 30 வயதில் தன்னை முழுமையாக கடவுள் பணியில் ஈடுபடுத்தி கொண்டார். பேதுரு, அந்திரேயோ, பிலிப் பு, யாக்கோபு, தோமா, யோவான், மத்தேயு, யாக்கோபு, யூதாஸ், பர்தொலொ என்னும் 12 சீடர்களுடன் மக்களுக்கு அற்புத பணிகளை ஆற்றினார்.
இயேசு கிறிஸ்து யூதராக பிறந்து யூதராகவே வளர்ந்து யூத மதத்தில் பல சீர்திருத்தங்கள் செய்ய முயற்சிக்கும்போது வழமைபோல் யூத மதகுருக்களுடன் தகராறு ஏற்படுகின்றது. அவர் ஒரு தந்தை பேர் தெரியாதவன் (illegitimate) என்றும் சூனியக்காரன்(Sorcerer) என்றும் ஒதுக்கிவைக்கின்றனர். யூதர்களின் பத்து கட்டளைகளில் ஒன்றான ஓய்வு நாளான ஸபத் பற்றிய விமர்சனமும், சொலமன் கோவிலில் நடைபெற்றுவந்த வர்த்தக நடவடிக்கைகளை தனது சீடர்களுடன் சென்று நிறுத்தியதும் யூத மதகுருக்களை கோபப்படுத்தி விட்டது. நான் முன்பே கூறியது போல் மதகுருக்கள் அரசில் பாரிய செல்வாக்கு செலுத்திய காலம் அது. அது மாத்திரமல்லாமல் யூதர்கள் எந்தவித மாற்றத்தையும் தமது தோராவில் செய்ய மாட்டார்கள். அவர்கள் கூட்டாக சேர்ந்து அப்போதைய உரோம ஆளுநரான பொந்தியு பிலாத்துவிடம் முறையிட்டு இயேசு கிறிஸ்துவுக்கு மரணதண்டனை விதிக்க கோரினார்கள். முதலில் மறுத்த பிலாத்துவும் இறுதியில் அவர்களின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து சிலுவையில் அறைந்து மரண தண்டனை நிறைவேற்ற ஒப்புக்கொண்டான்.
பன்னிரு சீடர்களில் ஒருவனான யுதாஸால் காட்டிக் கொடுக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவுக்கு சவுக்கால் அடிக்கப்பட்டு தலையில் முட்கிரீடம் சூட்டப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு கல்வாரி மலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. மூன்று நாட்களின் பின்பாக உயிர்த்தெழுந்து சீடர்களுக்கு காட்சி தந்தார் என்று பைபிள் மேலும் சொல்கின்றது. இது நடந்தது கிபி 30-33 அளவில் என்கின்றனர். யூதராக பிறந்து யூதராகவே வளர்ந்து யூதராகவே மரணிக்கும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் அவர்களின் சீடர்களால் பின்பு உருவாக்கப்படுவதே கத்தோலிக்க கிறிஸ்தவ சமயம் ஆகும்.
இயேசு கிறிஸ்துவை முஸ்லிம்கள் ஈஸா என்று அழைப்பார்கள். ஈஸாவின் இறுதிக்காலம் தொடர்பாக இஸ்லாம் விவரிக்கும் போது அவர் சிலுவையில் அறையப்படவில்லை மாறாக யார் அவரைக் காட்டிக் கொடுத்தாரோ அவரை ஈஸாவின் உருவ அமைப்பில் மாற்றி ஈஸா (இயேசு) கொல்லப்படாமலேயே வானுக்கு உயர்த்தப்பட்டார் என்கிறது.
படம் : திருக்கல்லறைத் தேவாலயம் -இயேசு சிலுவையிலறையப்பட்டு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இடம் என்று நம்பப்படும் இடத்தில் கட்டப்பட்டுள்ள Church of the Holy Sepulchre தேவாலயம்.
குமாரவேலு கணேசன்
31.05.2021

யூதர்களின் வரலாறு -20

இருபதாம் நூற்றாண்டு தான் தாயக பூமியில் இருந்து 19 நூற்றாண்டுகளுக்கு முன்பாக விரட்டப்பட்ட யூதர்களின் வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய நூற்றாண்டு என்று சொல்லலாம். இதற்காக அவர்கள் பட்ட துன்பங்கள் சொல்லொணாதவை.
20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 5 மில்லியன் யூதர்கள் உருசியப்பேரரசிலும், 3 மில்லியன் யூதர்கள் போலந்திலும், 2 மில்லியன் யூதர்கள் ஒஸ்ரியா-ஹங்கேரியிலும் , 1.75 மில்லியன் யூதர்கள் அமெரிக்காவிலும் மேலும் பல இலட்சம் யூதர்கள் ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் வாழ்ந்துகொண்டிருந்தனர். இவர்களில் பலர் இக்காலத்தில் அரசியலிலும், வர்த்தகத்திலும் உச்சத்தை தொட்டுவிட்டனர்.
கடந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்டது போல சுவிட்சலாந்தின் பாசெல் மாநாட்டின் அறுவடையாக நிறுவப்பட்ட நில வங்கியினூடாக பாலஸ்தீனியர்களின் நிலங்களை அறமற்ற விதத்தில் வாங்கிக் குவிக்க ஆரம்பித்தனர். பல உலக நாடுகளில் வாழ்ந்துகொண்டிருந்த செல்வந்தர்களிடம் இருந்து சேகரித்த நிதியை வைத்து நடாத்தப்பட்ட இந்த வங்கி பாலஸ்தீன பிரதேசத்தில் நிலம் வாங்க விரும்பிய யூதர்களுக்கு குறைந்த விலையிலும், குறைந்த வட்டிக்கடன்களை வழங்கியும் நிலங்களை விற்றது. அதே நேரத்தில் நிலங்களின் பத்திரத்தை வாங்கிக்கொண்டு அரேபியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் நிலவங்கி கடன்களை அள்ளி வழங்கியது. கடன்களை மீளச் செலுத்த முடியாதவர்கள் கடன் பொறிக்குள் அகப்பட்டு தமது நிலங்களை இழந்தனர். சட்டத்தின் படி இவை சரியென்றாலும் அவை அறமற்ற செயலாக வரலாற்றாசிரியர்களால் பார்க்கப்படுகின்றது.
1914 இல் ஆரம்பமான முதலாம் உலகப்போரும், 1917 இல் ஆரம்பமான உருசியப்புரட்சியும், யூதர்களின் வரலாற்றில் மிக முக்கிய திருப்பு முனையாகும்.

படம்: பிரித்தானியாவால் முதலாம் உலகப்போரில் பாவிக்கப்பட்ட Mark V Tank

முதலாம் உலகப் போர் என்பது வரலாற்றின் உலகளாவிய சண்டைகளில் கிட்டத்தட்ட 1 கோடி இராணுவ உயிரிழப்பையும், மேலும் 2 கோடி இராணுவத்திற்கு காயங்களும் ஏற்படுத்திய போர் ஆகும். பெரும்பாலான ஐரோப்பா, உருசியப் பேரரசு, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் உதுமானியப் பேரரசு ஆகியவை இதில் கலந்து கொண்டன. பிரான்சு, உருசியா மற்றும் பிரிட்டன் என்பன நேச நாட்டு அணியிலும் ஜேர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, இத்தாலி என்பன மைய சக்தி அணியிலும் போர் ஆரம்பிக்கும் போது இருந்தன. ஆஸ்த்திரியா-ஹங்கேரியின் இளவரசரான பிரான்சு பெர்டினான்டை ஒரு செர்பிய இளைஞன் அரசியல் கொலை செய்ததைத் தொடர்ந்து ஆரம்பித்த இப்போர் படிப்படியாக அண்டைய நாடுகளை உள் இழுத்து இறுதியில் அமெரிக்காவையும் இழுத்து விட்டிருந்தது.
யூதர்கள் இரண்டு அணியிலும் நின்று போரிட்டும், தமது அறிவையும், செல்வத்தையும் அள்ளி இறைத்தும் கொண்டிருந்தனர். அருச்சுனனுக்கு கிளியின் மீதுதான் கண் என்பது போல எவர் வென்றாலும் அவர்களின் உதவியுடன் இஸ்ரேலை உருவாக்குவது தான் அவர்களின் முழு நேர சிந்தனையாக இருந்தது என்றாலும் ஒவ்வொரு அணியிலும் அவர்களை சந்தேகக்கண் கொண்டே பார்த்தனர். அதே நேரத்தில் முழு ஐரோப்பாவையும் வங்குறோத்தடைய வைக்க யூதர்களின் சதியே இந்த போர் என்றும் அவர்களை குற்றம் சாட்டினர்.
முதலாம் உலகப்போரில் யூதர்களின் பங்களிப்பையும் பாதிப்பையும் பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
———————
யூத வினோதங்கள்
ஒரு திருமணமாகாத பெண் ஒரு மேசையின் மூலையில் அமர்ந்தால் அடுத்த 7 வருடங்களுக்கு அவருக்கு திருமணமாகாது என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கின்றது. விருந்துகளின் போது திருமணமாகாத ஒரு பெண் அப்படியான ஒரு இடத்தை தெரிவு செய்ய மாட்டார்.
———————-

About editor 3042 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply