இரிக் வேத காலம்
இருக்கு வேத காலத்தில் தொழில்பிரிவுகள் தோன்றியிருக்கவில்லை. நான் ஒரு கவிஞன், என் தந்தை மருத்துவர், என் தாய் அரவைக்காரி என இரிக் வேதகாலத்தின் இறுதிக்காலப் பாடல்(9.112) ஒன்று கூறுகிறது(1). இரிக் வேதத்தில் புருசசூக்தம் ஒன்றைத் தவிர வேறெந்தப் பகுதியிலும் சாதி குறித்தக் குறிப்புகள் இல்லை எனவும் அக்காலத்தில் தந்தை தாய் மகன் ஆகிய மூவரும் வேறு வேறான தொழில்களில் ஈடுபடுவர் எனவும் அக்கால மக்கள் பரம்பரையாகத் தொழில் செய்து வந்தனர் என்ற கொள்கை பொருந்தாது எனவும் கூறுகிறார் கா. கைலாசநாத குருக்கள்(2).
இரிக் வேத காலம் என்பது மேய்ச்சல் நில வாழ்வை அடிப்படையாகக் கொண்ட இனக்குழு காலம். அப்பொழுது தொழில்பிரிவுகள் தோன்றும் அளவு தொழில் வளர்ச்சி என்பது இருக்க இயலாது. “இரிக் வேதம் நிலையான குடியேற்றங்களைப் பற்றியோ (சிந்துவெளி நகரங்களைத்தவிர) இயல், எழுத்து, கட்டட அமைப்பு குறித்தோ ஒன்றும் கூறவில்லை…… தாங்கள் வென்ற நகர நாகரிகங்களைவிட ஆரியர்கள் குறைந்த பண்பாடும் காட்டுமிராண்டித்தனம் நிறைந்தும் காணப்பட்டது தெளிவாகிறது” எனக் கூறுகிறார் டி.டி. கோசாம்பி(3). ஆகவே இரிக் வேத காலத்தில் மக்கள் இனக்குழு நிலையில்தான் வாழ்ந்தனர் என்பதும் அன்று தொழில் பிரிவுகள் உருவாகவில்லை என்பதும் உறுதி ஆகிறது.
இரிக்வேத காலம் என்பது கி.மு. 1200 – 1000 வரையான காலகட்டம். அதன்பின் வந்த யசூர் வேத காலத்திலும் வேத சமூகத்தின் அடிப்படை என்பது மேய்ச்சல் நில வாழ்வாகவே இருந்தது எனக் கூறுகிறார் டி.டி. கோசாம்பி(4). ஆகவே கி.மு. 800 வரை, இரும்பு உலோகம் பயன்பாட்டுக்கு வரும்வரை தொழில் வளர்ச்சியோ, தொழில் பிரிவுகளோ உருவாகாத நிலைதான் இருந்து வந்தது. எனலாம். இனக்குழுகால மேய்ச்சல் நில வாழ்க்கைதான் அவர்களது சமூக வாழ்வின் அடிப்படையாக இருந்தது.
நகரமயமாதல்
கி.மு. 800க்குப்பின் ஆரிய இனக்குழுக்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து கங்கைப்பகுதியில் நிரந்தரக் குடியிருப்புகளை உருவாக்கி வளர்ச்சியடையத் தொடங்கிய காலகட்டத்தில்தான் தொழில் பிரிவுகளும் வகுப்புகளும் உருவாகத் தொடங்குகின்றன. அதன்பின் கி.மு. 6ஆம், 7ஆம் நூற்றாண்டுகளில் 16 சனபதங்கள் எனப்படும் இனக்குழு அரசுகள் உருவாகின்றன. வட இந்தியாவில் கி.மு. 7 ஆம் நூற்றாண்டில் கூட இரு பெரு நகரங்களுக்கு மேல் உருவாகச் சாத்தியமில்லை எனக் கூறுகிறார் டி.டி. கோசாம்பி(5).
வட இந்தியாவில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் நகரமயம் தொடங்கியது என்பதை, “வைசாலி, உச்சயினி, சிராசுவதி, இராஜ்காட், இராஜ்கார், இராசகிருகம் போன்ற இடங்களில் தோண்டிய அகழாய்வானது கி.மு. முதல் ஆயிரமாவது ஆண்டுகளின் மத்தியில் (கி.மு.500) அவை நகரமாகிக் கொண்டிருந்ததைக் காட்டுகிறது” எனக் கூறுகிறார் இரோமிலா தாப்பர் (Romila Thaper) (6). தட்சசீலம்தான் இந்தோ ஆரியர்களின் முதல் குடியிருப்பு. ஆனால் “கி.மு. 4ஆம் நூற்றாண்டிற்கு முன்புள்ள தட்சசீலம் ஒரு சிறு கிராமமாகவே இருந்து வந்தது” எனக் கூறுகிறார் கோசாம்பி(7).
ஏ.எல். பாசம்(A.L.Basham), “கி.மு. 6ஆம் நூற்றாண்டில்தான் இந்திய வரலாறு பழங்கதைகள், ஐயப்பாட்டிற்குரிய மரபுகள் ஆகியவற்றினின்றும் வெளியேறுகிறது…… இந்தியாவின் உண்மை வரலாறு தோன்றுகின்ற காலமானது அறிவுத் துறையிலும், ஆன்மீகத் துறையிலும் பெருங்கிளர்ச்சி தோன்றியவொரு காலமாகவுள்ளது” எனக் குறிப்பிடுகிறார்(. ஆகவே அவர் கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்புவரை இருந்த இந்திய வரலாறு என்பது பழங்கதைகளையும் ஐயப்பாட்டிற்குரிய மரபுகளையும் கொண்டதாக இருந்தது எனவும் உண்மை வரலாறு என்பது கி.மு. 6 ஆம் நூற்றாண்டில்தான் தொடங்கியது எனவும் கருதுகிறார். ஆகவே இத்தரவுகள் வட இந்திய நாகரிகம் என்பது கி.மு. 600 க்குப் பின்னர்தான் உருவாகிறது என்பதும் அதற்கு முன் அங்கு அநாகரிககாலம் தான் இருந்தது என்பதும் உறுதியாகிறது. இந்த நாகரிக காலத்தில்தான் தொழில் பிரிவும், வகுப்பும் உருவாகி இருந்தன.
கீழ் வகுப்பாக பிராமணர்கள்
இரிக் வேத காலத்தில் புரோகிதம் என்பது தனிப்பட்ட சாதியின்(வகுப்பின்) சிறப்புத்தொழிலாக உயர்வு பெறவில்லை எனக் கூறுகிறார் டி.டி. கோசாம்பி(9). அன்று எந்த தொழில் பிரிவும் இல்லை என்பதால் புரோகிதத் தொழிலும் அதில் தேர்ச்சி பெற்ற பலராலும் செய்யப்பட்டு வந்தது என்பதைத்தான் கோசாம்பியின் கூற்று உறுதி செய்கிறது. இந்த நிலை கி.மு. 8ஆம் நூற்றாண்டுக்கு முன்புவரை தொடருகிறது எனலாம். ஆனால் கி.மு. 6ஆம் நூற்றாண்டு அளவில் வகுப்புகளும் தொழில் பிரிவுகளும் உருவாகி அவை ஓரளவு நிலைபெற்ற ஒன்றாக ஆகியிருந்தன. ஆதலால் புரோகிதத் தொழில் செய்பவர்கள் ஒரு தனி வகுப்பாக உருவாகியிருந்தனர். ஆனால் அது ஒரு மதிப்புக்குரிய தொழிலாக, வகுப்பாக அன்று இருக்கவில்லை. “மன்னர்கள் முன்னிலையிலும் சான்றோர் அவையிலும் பிராமணர்களைச் சுட்டுவதற்கு தாழ்ந்த குலத்தோன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது…….. சாதி(வகுப்பு)யின் அடிப்படையிலும், புரோகிதன் என்ற அடிப்படையிலும், சான்றோர் அவையில் பிராமணர்கள் கைகட்டி நின்றதோடு, கீழ்ச்சாதி(வகுப்பு)யினராகவே நடத்தப்பட்டனர்” எனக் கூறுகிறார் இரைசு டேவிட்சு(10). அன்று சாதி இருக்கவில்லை, தொழில் அடிப்படையிலான வகுப்புதான் இருந்தது. எனவே அன்று புரோகிதத் தொழிலைச் செய்து வந்த பிராமணர்கள் கீழ் வகுப்பாகவே கருதப்பட்டனர் எனலாம்.
புத்தரும் அம்பத்தா என்ற பிராமணனும்:
அம்பத்தா என்ற பிராமணனுக்கும் புத்தருக்கும் இடையே நடந்த உரையாடலைக் கொண்டு பார்க்கும்பொழுது பிராமண வகுப்பு அன்று பிறப்பின் அடிப்படையில் இருக்கவில்லை என்பதோடு சத்திரிய வகுப்பைவிட மிகக் கீழான நிலையில்தான் இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. சத்திரியர்களால் கேவலப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட ஒரு சத்திரியனைக் கூட பிராமணர்கள் ஒரு உயர் குலத்தோனாகக் கருதி அவனுக்கு மதிப்பளிப்பர் என அந்த உரையாடல் மூலம் அறிய முடிகிறது. அம்பத்தா ஒரு பிராமணன் என்றாலும் அவனுடைய முன்னோன் கன்கா என்பவன் சாக்கியர்களுடைய அடிமைப் பெண்ணின் மகன் ஆவான். அவன் தக்காணம்(தமிழகம்) சென்று மந்திரங்கள் கற்றுக்கொண்டு ஒரு இரிசியாக உயர்வு நிலையை அடைகிறான், அவனது வழி வந்த அம்பத்தா தன்னை ஒரு பிராமணன் எனக் கூறிக் கொள்கிறான். எனவே புத்தர் காலத்தில் (கி.மு. 6ஆம் நூற்றாண்டு) சத்திரியர்கள்தான் உயர் குலத்தோராக இருந்துள்ளனர் எனவும் கீழ் நிலையில் இருந்தவர்களும் பிராமண வகுப்பாக ஆகியுள்ளனர் எனவும் அறிவிலும் அறநெறி ஒழுக்கத்திலும் சிறந்தவன் ஞானியாகிறான் எனவும் அந்த நிலையில் பிறப்பு குறித்து பேசப்படுவதில்லை எனவும் அந்த உரையாடல் தெளிவு படுத்துகிறது(11). அம்பேத்கர் “சாதி(வகுப்பு)முறை இப்போதுள்ள வடிவில் அப்போது இல்லை. சாதிகள்(வகுப்புகள்) கலந்து உண்ணக்கூடாது, கலப்பு மணம் செய்யக்கூடாது என்ற தடைகள் அப்போது நடைமுறைக்கு வரவில்லை” எனக் கூறுகிறார்.(12). புத்தர் காலத்தில் (கி.மு.6ஆம் நூற்றாண்டில்) வகுப்புகள் உருவாகி இருந்தன. ஆனால் அன்று சாதிகள் இருக்கவில்லை என்பதையும், அன்று சத்திரிய வகுப்பினர் மிக உயர்நிலையில் இருந்தனர் என்பதையும் பிராமணர்கள் கீழ்நிலையில் இருந்தனர் என்பதையும், யார் வேண்டுமானாலும் பிராமணர்கள் ஆகும் நிலை இருந்து வந்தது என்பதையும் அம்பேத்கரின் கூற்றுகள் உறுதி செய்கின்றன.
உபநிடதகாலமும் புத்தர் காலமும்:
கி.மு. 7ஆம், 6ஆம் நூற்றாண்டு வரையான உபநிடத காலகட்டத்தில் சத்திரிய மன்னர்களான சனகன், பிரவாகன சைவாலி, அசுவபதி, சனத் குமாரன், சித்திரன், பிரகிருதன் அசாத் சத்ரு ஆகியவர்கள் பிராமணர்களுக்குக் குருவாக இருந்தார்கள். அதுபோன்றே வேடனும் இறைச்சி விற்பவனுமாகிய தர்மவியாதன், தலைச்சுமை வியாபாரம் செய்து வந்த துலாதரன் போன்ற கீழ் வகுப்பைச் சேர்ந்தவர்களும் பிராமணர்களுக்குக் குருவாக இருந்தார்கள் (13) எனக் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு. ஒரு சில உபநிடத கருத்துக்கள் மூடநம்பிக்கைக்கு எதிரானதாகவும், பகுத்தறிவு சிந்தனை கொண்டனவாகவும் இருந்தன எனவும் மறுபிறப்பு, மறுஉலகம், முழுமுதற்காரணம், கடவுள், ஆன்மா ஆகியவற்றை மறுக்கும் கருத்துகளைக் கொண்டனவாகவும் அவை இருந்தன எனவும் பசாசு கூறுகிறார்(14). தொல் கபிலரின் சாங்கியக் கருத்துகளைக் கொண்ட உபநிடதங்களும் இருந்தன. இதுபோன்ற முற்போக்கு கருத்துகள் உருவான காலகட்டத்தில்தான் புத்தரும் மகாவீரரும் தோன்றி, சமண பௌத்த மதங்களை உருவாக்கினர். இக்காலகட்டத்தில் வகுப்புகள் இருந்தன. ஆனால் சாதிகள் இருக்கவில்லை. புரோகிதம், சடங்கு முதலியனவற்றைச் செய்யும் பூசாரிகள் ஒரு வகுப்பாக உருவாகி இருந்தனர். ஆனால் அவர்கள் சாதியின் அடிப்படையில் உருவாகி இருக்கவில்லை. சிறந்த அறிவும் ஞானமும் உடையவர்களில் சிலர் பிராமணர்களாக இருந்தனர். ஆனால் அவர்கள் ஒரு தனி வகுப்பாகவோ சாதியாகவோ இருக்கவில்லை. கீழ் வகுப்பினரும் பிராமணர்களாக ஆகும் நிலை இருந்து வந்தது. அறிவு, ஞானம் முதலியன பிராமணர்களுக்கு மட்டுமே உரியது என்ற நிலையும் அன்று இருக்கவில்லை. பிராமணர்களைவிட அறிவும் ஞானமும் கொண்ட பலர் பல நிலைகளில் இருந்தனர். அன்று ஆளும் வகுப்பாக இருந்து வந்த சத்திரிய வகுப்பினர்கள்தான் அனைத்திலும் உயர்ந்தவர்களாக மதிக்கப்பட்டனர். பிராமணர்களும் சத்திரியர்களை மிக உயர்வாக மதித்தனர். புரோகிதத் தொழிலைச் செய்தவர்கள் அன்று மதிப்புக்கு உரியவர்களாக இருக்கவில்லை. அத்தொழிலைச் செய்த பிராமணர்களும் கீழ் வகுப்பாகவே, தாழ்ந்த வகுப்பாகவே கருதப்பட்டனர். கி.மு. 8ஆம் நூற்றாண்டு முதல் யாகம், சடங்கு போன்றனவற்றைக் கொண்ட புரோகிதத்தொழில் ஒரு நல்ல வருமானம் தரும் தொழிலாக இருந்து வந்தது. ஆனால் புத்த, சமண மதங்கள் அவற்றை நிராகரித்து, புதிய சிந்தனைகளோடு உருவாகின.
பேரரசு காலமும் அசோகர் காலமும்:
கி.மு. 5ஆம் நூற்றாண்டில் மகதம் ஒரு பேரரசாக ஆகியிருந்தது. அப்பொழுது சமண, பௌத்த மதங்கள் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தன. பிராமணர், புரோகிதர் நிலையில் பெரிய மாற்றங்கள் இருக்கவில்லை எனினும் நாளுக்கு நாள் அவர்கள் கீழ்நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். சமண பௌத்த மதங்களின் வளர்ச்சி அவர்கள் வாழ்நிலையில் மிகப்பெரிய வீழ்ச்சியை உருவாக்கி இருந்தது. கி.மு. 5ஆம் நூற்றாண்டுக்கு முன் புரோகிதத் தொழிலையும் சடங்கு, யாகம் முதலியனவற்றையும் செய்து நல்ல வருமானத்தோடு வாழ்ந்த பிராமணர்களும் புரோகிதர்களும் மிகவும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டனர். முன்பு ஒரு சில பிராமணர்களும் புரோகிதர்களும் மிக நல்ல வருமானத்தோடு உயர்நிலையில் இருந்தனர் எனலாம். ஆனால் புத்த சமண செல்வாக்கால் அந்நிலை அடியோடு மாறிப் போயிருந்தது. சடங்குகளும் யாகங்களும், உயிர்க்கொலையும், புரோகிதத் தொழிலும் மக்களிடையே செல்வாக்கு இழந்து அதனை யாரும் பின்பற்றாத நிலை ஏற்பட்டிருந்தது. அதனால் அதன் மூலம் நல்ல வருமானம் பெற்று வந்த புரோகிதர்களும் பிராமணர்களும் வேறு தொழிலைச் செய்து வாழ வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டனர். அசோகர் காலத்தில் “பிராமணர்கள் உழவர்களாக, கைவினைஞர்களாக, குற்றேவலராக, மந்தை வளர்ப்போராக, கதாகாலட்சேபம் செய்வோராக வாழ்ந்து வந்தனர். ‘தாச பிராமண சாடகம்’ என்ற நூல், பிராமணர்கள் வண்டியோட்டுபவர்களாக, ஊர்க்காவலாளிகளாக, பால் விற்போராக, முயல் வேட்டையாடுவோராக, மீன் ஆமைகளை பிடித்து உண்போராக, பரட்டைத்தலையும், அழுக்கேறிய நகங்களோடும் மண்வெட்டும் வேலை செய்வோர்களாக வாழ்க்கை நடத்தினார்கள் எனக் கூறுகிறது என பிரேம்நாத் பசாசு குறிப்பிடுகிறார்(15).
பிராமண சுங்க வம்சமும் கன்வ வம்சமும்:
கி.மு. 187இல் மௌரிய அரசனின் கடைசி மன்னனைக் கொன்றுவிட்டு புசுயமித்திரன் என்ற பிராமணன் மகத அரசைக் கைப்பற்றிக் கொண்டான். அவனது வம்சம் சுங்க வம்சம் எனப்பட்டது. கி.மு. 75இல் அவ்வம்சம் இல்லாதுபோய் கன்வ வம்சம் ஆட்சிக்கு வந்தது அதுவும் பிராமண வமசமேயாகும். கி.மு. 30இல் அவ்வம்சம் சாதவாகன அரசன் புலுமாயி என்பவனால் அழிக்கப்பட்டது. அதன்பின் மகத அரசை இனக்குழு அரசுகள் கைப்பற்றிக் கொண்டன. ஆகவே கி.மு. 187 முதல் கி.மு. 30 வரை 150 வருடங்களுக்கு மேல் பிராமண வம்சங்கள் மகதப் பேரரசை ஆண்டன. இக்காலகட்டத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் நடைபெற்றன. அசோகன் காலத்தில் பௌத்த மதம் மிகவும் செல்வாக்கு பெற்ற மதமாக ஆகியிருந்தது. அந்த பௌத்தமதம் முற்றிலும் அழிக்கப்பட்டு வேதம் சார்ந்த சிந்தனைகளும் சடங்குகளும் மீண்டும் அரியணை ஏற வேண்டும் என்பதே பிராமணர்களின் நோக்கமாக இருந்தது. அதனை நிறைவேற்ற புசுயமித்திரனும் பிராமணர்களும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். ஆகையால் ‘பௌத்த பிக்குகளும் பிக்குணிகளும் பௌத்தம் தழுவிய பாமர மக்களும் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டார்கள்.
பௌத்தமதத்தை வேறோடும் வேரடி மண்ணோடும் அழித்து முடிக்கும்வரை இந்தக் காட்டுமிராண்டித் தனமான இனப்படுகொலை தொடர்ந்து நடந்து வந்தது’ எனக் கூறுகிறார் பசாசு(16). பகுத்தறிவுப் பொருள்முதல்வாதக் கருத்துக்களைக் கொண்டிருந்த படைப்பிலக்கியங்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு அழிக்கப்பட்டன என்கிறார் அவர்(17). பௌத்த மதத்தை இந்தியாவைவிட்டு துரத்துவதற்காகச் செய்யப்பட்ட அடக்குமுறைகளுக்கும் அட்டூழியங்களுக்கும் ஈடான வேறு ஒன்று உலகின் எந்த மூலையிலும் நடந்ததில்லை எனக் கூறுகிறார் இரைசு டேவிட்சு(18). இவற்றின் காரணமாக நாடு முழுவதும் சீர்கேட்டுக்குள்ளானது. இந்நிலையில் பிராமணர்கள் தங்கள் மதத்தைப் புத்துருவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்கள். பிராமண மதச்சடங்குகளை கண்டிப்போடு பின்பற்ற மக்கள் கட்டாயப்படுத்தப் பட்டார்கள். கருமம், மறுபிறப்பு, ஆன்மா, கடவுள் போன்ற மூட நம்பிக்கைகளுக்கு மீண்டும் புத்துயுரூட்டப்பட்டது. யாகம், சடங்கு போன்ற புரோகிதப் பணிகள் மீண்டும் நாடு முழுவதும் பரவியது.
பிராமணிய இலக்கியங்கள்:
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தாங்கள் நிலைகொண்டு விட்டதையும், தங்கள் பாதுகாப்பு நிலைநிறுத்தப்பட்டதையும் உறுதி செய்துகொண்ட பிராமணர்கள் புதிய சட்டங்களை இயற்றியதோடு, பழைய சட்டங்களையும் விரிவு படுத்தினார்கள். சமூக வாழ்வின் எல்லா நடைமுறைகளிலும் தலையிட்டு தங்கள் விருப்பம் போல் அவற்றை மாற்றியமைத்தார்கள் எனக் கூறுகிறார் பசாசு(19). கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்குப்பின் தான் மீமாம்ச சூத்திரம், பிரம்ம சூத்திரம் போன்ற வேதாந்தக் கருத்துகளுக்கு அடித்தளமாக உள்ள பிராமணிய நூல்கள் உருவாகின. கி.பி. 1ஆம் 2ஆம் நூற்றாண்டுகளில் மனு சுமிருதி எழுதப்பட்டது. கீதை, மகாபாரதம், இராமயணம், புராணங்கள் முதலியன எழுதப்பட்டன. இரிக் வேதம் முதல் அனைத்து வேதங்களும் திருத்தி அமைக்கப்பட்டன. இரிக் வேதத்தில் புருச சூக்தம் போன்ற இடைச்செருகல்கள் புகுத்தப்பட்டன. பிராமணங்கள் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டன. தங்கள் சிந்தனைகளுக்கும் கருத்துகளுக்கும் ஒத்துவராத நூல்கள் அழிக்கப்பட்டன, திருத்தியமைக்கப்பட்டன. இடைச்செருகல்களால் நிறைக்கப்பட்டன. இந்தக் காலகட்டத்தில்தான் சாதியத்துக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. வருணம் எனப்பட்ட வகுப்பு, சாதியாக திட்டமிட்டு பிராமணர்களால் மாற்றப்பட்டது.
பொதுவாக பிராமணர்கள் உண்மையான வரலாற்றை மறைப்பதிலும் புதைப்பிலும் வல்லவர்களாக இருந்துள்ளனர். “இயல்பாகப் பார்ப்பனர்கள் அவர்களைப் பற்றியும் அவர்கள் அமைப்புகளைப் பற்றியும் எந்தச் செய்தியையும் விட்டுச்செல்லமாட்டார்கள் அல்லது தேவை என்று கருதினால் அவர்கள் ஏமாற்றுவதற்குப் புராணக்கதைகளை புனைந்து விடுவர்.” எனக் கூறுகிறார் பார்ப்பனரான ந.சுப்ரமண்யன்(20). அப்படிப் புனையப்பட்டவைதான் பிராமணங்களும், இதிகாசங்களும், புராணங்களும் இன்ன பிற பிராமணிய இலக்கியங்களும் ஆகும். அவற்றில் வரலாறு என்பதும் உண்மை என்பதும் மிகக் குறைவு. இவை வேதகாலம் முதல் பிராமணர்கள் செல்வாக்குடன் இருந்ததாக ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றன. ஆனால் அது உண்மையல்ல. அவர்கள் செல்வாக்குப் பெற்றது என்பது கி.பி.க்குப் பிறகுதான். அதற்கு முன் வைதீகப் பிராமணியமோ, சாதியமோ இருக்கவில்லை.
வேதகாலம் ஒரு பொற்காலம் என்ற புனைகதை:
பிராமணர்கள் வரலாற்றைப் புதைப்பதில் மறைப்பதில் எவ்வளவு திறமையானவர்கள் என்பதற்கு கேரள வரலாறு ஒரு மிகச்சிறந்த சான்றாக இருக்கிறது. கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்கு முன் கேரளாவுக்கு(பண்டைய சேரநாடு) வரலாறே இல்லை என்ற தோற்றத்தை உருவாக்கி இருந்தார்கள். அதுபோன்றே கி.மு. 8ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய வட இந்திய வரலாறு என்பது இனக்குழு மக்களின் அநாகரிக வரலாறுதான். அன்று நாகரிகம் என்பதே உருவாகவில்லை. ஆனால் வேத காலம் என ஒன்று இருந்ததாகவும் அது பொற்காலமாக இருந்தது எனவும் புனைகதை கட்டப்பட்டுள்ளது. கி.மு. 1200 முதல் கி.மு. 600 வரையான வேதகாலம் பொற்காலமாக இருந்தது என்ற பொதுக்கருத்து உருவாக்கப்பட்டுள்ளது எனவும், இது திறனாய்வுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு அழுத்தத்தை தருகிறது எனவும் தனது முற்கால இந்தியா என்ற நூலில் வரலாற்று அறிஞர் இரோமிலாதாப்பர் வருத்தப்படுகிறார்(21).
புனைகதைகளை உருவாக்க பிராமணங்கள், புராணங்கள், இதிகாசங்கள் எழுதப்பட்டன. கி.பி. 2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 1000க்குள் 18 புராணங்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றின் காலத்தை அம்பேத்கர் பட்டியலிட்டுள்ளார்(22). மகாபாரதம், இராமாயணம் கீதை முதலியன கி.பி. 2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 4ஆம் நூற்றாண்டுக்குள் இன்றைய அடிப்படை வடிவத்தைப் பெற்றன. ஆனால் அவைகளில் கி.பி. 1200 வரை தொடர்ந்து மாற்றங்கள் நடந்து வந்தன. வைதீக பார்ப்பனிய மதத்துக்கான அனைத்து அடிப்படைகளும் கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்குப்பின்தான் உருவாகின. அதற்கு முன் வைதீகப் பிராமணியம் இருக்கவில்லை. சாதியமும் கி.பி.க்குப்பின் தான் தோன்றி வலுப் பெறுகிறது. அதற்கு முன் சாதி இருக்கவில்லை. எப்பொழுதெல்லாம் வைதீகப் பிராமணியம் செல்வாக்கோடு இருக்கிறதோ அங்கு சாதியமும் உருவாகி வலிமையடைந்து விடும் என்பதை இந்திய வரலாறு பலவகைகளிலும் உறுதி செய்கிறது.
பிராமணர்கள் ஆட்சியதிகாரத்தில் பெற்ற வெற்றி:
பல்லவர் காலத்திலிருந்து தமிழ் மன்னர்கள் தம் மதிப்பு நிலைக்கும் தனிச்சலுகைகளுக்கும் சட்ட ஏற்பிசைவிற்கும் பார்ப்பனர்களின் துணையை எதிர்பார்த்திருந்தனர் எனவும், தமிழகத்தில் ஆறாம் நூற்றாண்டிலிருந்துதான் மரபுவழிக்கட்டுமானங்களும், மன்னர்களின் அதிகாரத்திற்கு (பிராமணர்கள்) ஏற்பிசைவளிப்பதும் நடைமுறையில் இருந்ததாக வெங்கடரகோத்தம் கூறுகிறார் எனவும், பல்லவர் காலந்தொட்டு பழங்குடி மன்னர்களாகிய பல்லவர்கள் கடம்பர்கள் ஆகியோர் பார்ப்பனிய வேதவழி உரிமைகளைக் கோரினர் எனவும் ந.சுப்ரமண்யன் கூறுகிறார்(23). கி.பி.க்குப்பின் வெளி நாட்டிலிருந்து இந்தியாவின் மீது படையெடுத்து வந்த அந்நியர்களும், அநாகரிக மக்களும், பழங்குடி மன்னர்களும் தம் மதிப்பு நிலைக்கும் தனிச்சலுகைகளுக்கும் சட்ட ஏற்பிசைவிற்கும் பார்ப்பனர்களின் துணையை எதிர்பார்த்திருக்கும் சூழ்நிலையை பிராமணர்கள் திட்டமிட்டு உருவாக்கினர். அதன் மூலம் கி.பி. க்குப்பின் அவர்கள் வலிமை வாய்ந்தவர்களாகவும் அரசியல் அதிகாரத்தை ஆட்டிப்படைப்பவர்களாகவும் ஆனார்கள்.
வட இந்தியாவில் மகதப்பேரரசின் வீழ்ச்சிக்குப்பிறகு(கி.மு.30) ஏற்பட்ட அசாதாரணமான சூழ்நிலை, படையெடுத்து வந்த அந்நிய ஆட்சியாளர்களும், உள்ளூர் பழங்குடி மக்களின் தலைவர்களும் முறையான ஆட்சியாளராக மாறுவதற்கு வைதீகப்பிராமணர்களின் சட்ட ஏற்பிசைவு தேவை என்ற நிலையை உருவாக்குவதை எளிதாக ஆக்கியது. இந்திய ஆட்சியாளர்களின் சட்டப்படியான ஆட்சிக்கு வைதீகப் பிராமணர்களின் ஏற்பிசைவு தேவை என்ற நிலையை உருவாக்கியதுதான் வைதீகப் பிராமணியத்தின் மாபெரும் வெற்றி எனலாம். இச்சூழ்நிலை வைதீகப் பிராமணியமும் சமற்கிருதமயமாக்கலும் இந்தியா முழுவதும் பரவுவதற்கும், சாதியக் கட்டுமானத்தை இந்தியா முழுவதும் கொண்டு போவதற்கும் வைதீகப் பிராமணியர்களுக்கு வழிவகை செய்தது. இதற்கு வடக்கே ஆண்ட குப்தர்களும் தெற்கே ஆண்ட பல்லவர்களும் பெருந்துணையாக இருந்தனர்.
பல்லவர் காலத்தில் கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குப்பின் வைதீகப் பிராமணியமும் அதனைத்தொடர்ந்து சமற்கிருதமயமாக்கலும் செல்வாக்கு பெற்ற பின்தான் சாதியத்துக்கான கூறுகள் தமிழகத்தில் உருவாகின. பிற்காலச் சோழர் பாண்டியர் காலங்களிலும் அந்நிலை தொடர்ந்தது. 12ஆம் நூற்றாண்டுக்குப்பின் விசயநகர, தெலுங்கு நாயக்கர், மராட்டியர் ஆட்சிக் காலங்களில் வைதீகப் பிராமணியமும் சமற்கிருதமயமாக்கலும் மீண்டும் செல்வாக்கு பெற்றபின் தமிழகத்தில் சாதியம் உறுதியாக நிலை நிறுத்தப்பட்டது. கேரளாவில் கி.பி. 7 ஆம், 8 ஆம் நூற்றாண்டுகளுக்குப்பின் வைதீகப் பிராமணியமும் சமற்கிருதமயமாக்கலும் நம்பூதிரிகளால் உறுதியாக நிலை நிறுத்தப்பட்ட பின்னர்தான் அங்கு மறுமக்கள் தாயமுறையும் சாதியமும் உறுதியாக வேரூன்றியது. ஆகவே வைதீகப் பிராமணியம் செல்வாக்கு பெறும்பொழுது அதனைத்தொடர்ந்து சமற்கிருதமயமாக்கல் நடைபெறுவதோடு, சாதியமும் தோன்றி வளருகிறது. இந்திய வரலாறு முழுவதும் இதனைப் பார்க்க முடிகிறது. ஆகவே சாதியத்தின் தோற்றத்திற்கு வைதீக பிராமணியமும் சமற்கிருதமயமாக்கலும் தான் அடிப்படை.
பிராமணங்களும் மனு சுமிருதியும்
வைதீக பிராமணியத்துக்கான அடிப்படை என்பது பிராமணங்கள், மனு சுமிருதி ஆகிய இரு பிராமணிய நூல்களில்தான் பொதிந்துள்ளது எனக் கூறலாம். மனித நேயத்துக்கும், சமூக அறத்துக்கும், மனித இனத்தின் மனட்சாட்சிக்கும் இந்த இரண்டு நூல்களைப்போன்ற எதிரிடையான நூல்களை உலகில் வேறு எங்கும் காண இயலாது. யாகங்கள் செய்வதற்கான செய்விப்பதற்கான விரிவான விளக்கங்களின் தொகுப்புகள்தான் பிராமணங்கள். இந்த பிராமணங்களில் இந்துத்துவத்தில் உள்ள அத்தனை அருவருக்கத் தக்கவைகளும் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளன எனக் கூறுகிறார் பி.கே. கோசு. அவர் மேலும், சூத்திரன் என்பவன் நினைத்த மாத்திரத்தில் கொல்லப்படவேண்டியன் என்று ஆணவத்தோடு ஒரு பிராமணம் கூறுவதாகக் கூறுகிறார்(24). பிராமணங்களின் இறையியல் கருத்துக்களைவிட, பண்பற்ற, பகுத்தறிவற்ற, ஆன்ம இழிநிலையை வெளிப்படுத்தும் வேறு ஒன்றைக் காண்பது அரிதினும் அரிது எனவும், பிராமணங்கள் கூறும் இறையியலில் ஒழுக்கப்பண்புக்கு இடமே இல்லை எனவும் இலேவி என்பவர் கூறுகிறார்(25). பிராமணன் ஓதும் மந்திரத்துக்குள் கடவுள் அடக்கம் எனக்கூறும் பிராமணங்கள், அதன் காரணமாக பிராமணனை கடவுளுக்கும் மேலானவன் என பறைசாற்றுகின்றன.
இவை போன்ற கருத்துகள் பலவும் கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்குப்பின் பிராமணங்களிலும் பிற வைதீக பிராமணிய மத இலக்கியங்களிலும் இடைச்செருகல்கள் செய்யப்பட்டன என்பதுதான் உண்மை. பிராமணர்கள் மேன்மைக்கு உரியவர்கள் என்பதை நிலை நிறுத்த வேதங்கள் மனிதர்களால் இயற்றப்பட்டவை அல்ல என பிராமணர்கள் கூறினார்கள் என சோசி கூறுகிறார். அதற்காக வேதப்பாடல்களில் மாற்றங்களையும் இடைச் செருகல்களையும் பிராமணர்கள் செய்தார்கள் என பசாசு கூறுகிறார்(26). எனவே கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்குப்பின் அனைத்தும் மாற்றி அமைக்கப் பட்டன, திருத்தப்பட்டன. இடைச்செருகல்கள் செய்யப்பட்டன. புருச சூக்தம் போன்றவை இக்காலத்தில்தான் இரிக் வேதப்பாடல்களில் சேர்க்கப்பட்டன.
பிராமணியம் வெற்றி பெற்றபின் செய்த செயல்களை அம்பேத்கர் பட்டியலிட்டுள்ளார். அவை, 1.ஆட்சி செய்வதற்கும் மன்னனைக் கொல்வதற்கும் பிராமணனுக்கு உரிமை உண்டு என்பதை நிலை நிறுத்தியது. 2.பிராமணர்களைத் தனிச்சலுகை பெற்ற வர்க்கமாக ஆக்கியது. 3.வர்ணத்தைச் சாதியாக மாற்றியது. 4.வெவ்வேறு சாதிகளிடையே போராட்டங்களையும், சமூக விரோத உணர்வையும் ஏற்படுத்தியது. 5.சூத்திரர்களையும், பெண்களையும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளியது. 6.படிப்படியான ஏற்றத்தாழ்வு நிலையைத் தோற்றுவித்தது. 7.நெளிவு சுழிவாக இருந்த சமூக அமைப்பை மாற்றி சட்டத்துக்கு உட்பட்டதாகவும், கடுமையானதாகவும் செய்தது(27). மனு சுமிருதிதான் இவை அனைத்திற்குமான சட்டத்தொகுப்பை வழங்கி இருந்தது. மனு சுமிருதி பிராமணனுக்குப் பல ஏக போக உரிமைகளையும், சில சிறப்பு சலுகைகளையும் வழங்கியிருந்தது. அதனை அம்பேத்கர் தனது நூலில் பட்டியலிட்டுள்ளார்(28). மனு சுமிருதி, சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பிராமணர்களுக்குத் தானம் செய்வது கட்டாயம் எனக் கூறுகிறது. அவற்றையும் அம்பேத்கர் பட்டியலிட்டுள்ளார்(29). வருண முறையைச் சாதியாக உருமாற்றம் செய்ததுதான் பிராமணியம் தனது வெற்றிக்குப்பின் செய்த முதன்மையான காரியம் எனவும், அதனை எப்படி செய்தது என்பது குறித்தும் அதற்கான நோக்கம், அதன் விளைவுகள் ஆகியன குறித்தும் அவர் விரிவாகத் தனது நூலில் எழுதியுள்ளார்(30). அவை அனைத்தும் ஏற்கத்தக்கன அல்ல எனினும் வருணமுறை என்பது திட்டமிட்டு சாதியாக மாற்றப்பட்டது என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கிய அம்சம். சமூகம் வெவ்வேறு வருணங்களாக, வகுப்புகளாக இருந்த போதிலும், முன்பு (கி.மு.வுக்கு) அவைகளிடையே கலப்பு மணங்கள் தடை செய்யப்படவில்லை எனக் கூறுகிறார் அம்பேத்கர்(31). அதாவது அகமணமுறை இருக்கவில்லை. ஆகவே முன்பு சாதியும் இருக்கவில்லை. ஆகவே சாதி என்பது கி.பி.க்குப் பின் பிராமணர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்று என்பதுதான் வரலாறு கூறும் உண்மை.
வருணமுறையில் அகமணமுறை இருக்கவில்லை. ஆகவே வருண முறைக்கும் திருமண உறவுக்கும் முன்பு தொடர்பு இருக்கவில்லை. சாதியை உருவாக்க அகமணமுறை கொண்டுவரப்பட்டது. அதன்பின், அகமணத் திருமண உறவுமுறைதான் சாதிக்கான அடிப்படையாக ஆகிப்போனது. சாதிகள் படிநிலைகளைக்கொண்டனவாக உருவாக்கப்பட்டன. ஒருவனுடைய சாதி என்பது அவனது பிறப்பைக்கொண்டு தீர்மானிக்கப்பட்டது. சாதியை ஒருவன் மாற்றிக் கொள்ள இயலாது. ஆனால் வருணம் எனப்படும் வகுப்பு பிறப்பை அடிப்படையாகக்கொண்டதல்ல. ஆகவே ஒருவன் ஒரு வகுப்பில் இருந்து இன்னொரு வகுப்புக்கு மாறமுடியும். சாதி முறையில் கலப்பு மணத்தில் பிறக்கும் குழந்தையின் சாதியைத் தீர்மானிக்க, வருண முறையில் இருந்துவந்த தந்தையின் வழிக்குப்பதில் தாயின் வழியில் தீர்மானிக்க வேண்டும் என பிராமணியம் மாற்றியமைத்தது. அதன்மூலம் மேல் சாதி ஆண்கள் கீழ்ச் சாதிப்பெண்களுடன் திருமணம் செய்வதை சட்டபூர்வமாக விபச்சாரம் செய்வதற்கான உரிமையாக பிராமணியம் ஏற்படுத்தியது எனக் கூறுகிறார் அம்பேத்கர்(32). இதற்கான விதிகளை மனுசுமிருதிதான் உருவாக்கி இருந்தது. மனு சுமிருதியை எழுதியவர் சுமதி பார்கவா என்பவர். ஆனால் தனது விதிகளுக்குப் பெருமை சேர்க்கவும் மதிப்பை ஏற்படுத்தவும் பண்டைய காலத்தில் புகழ்பெற்ற அரசனாக (இனக்குழுத்தலைவனாக, இராணுவத்தளபதியாக, புரோகிதனாக) இருந்த மனுவின் பெயரை திட்டமிட்டு தனது நூலுக்கு அவர் வைத்துள்ளார்(33).
ஆகவே அறக்கண்ணோட்டத்தில் பிராமணங்களும், மனு சுமிருதியும் பிராமணியம் உருவாக்கிய மிகமிகக் கீழ்த்தரமான, அருவருக்கத்தக்க, மனிதமாண்பற்ற நூல்கள் எனலாம். அதன் மூலம் பிராமணர்கள் கடவுளின் பெயரால் சமூகத்தின் அனைத்து மக்களையும் தங்களது அடிமைகளாக மாற்றுவதற்கான சூழ்நிலைகளைத் தோற்றுவித்தனர். 2000 வருடங்களாக இந்தியாவில் நடந்த கேவலமான அருவருப்பான மனித இழிநிலைகளுக்கு காரணகர்த்தாக்களாக பிராமணர்கள் இருந்துள்ளனர் என்பதற்காக இன்றுகூட அவர்கள் மன்னிப்புக்கோரவோ வெட்கப்படவோ தயாராக இல்லை.
வைதீக பிராமணியமே சாதியத்துக்கான அடிப்படை
இறுதியாக கி.மு. 6ஆம் நூற்றாண்டில்தான் வட இந்தியாவில் நகரமயம் தொடங்கி நாகரிகம் உருவாகிறது. அதற்கு முன் அங்கு நாகரிகம் இல்லை. வேதகாலம் பொற்காலம் என்பதெல்லாம் பிராமணர்களின் வரலாற்றுப் புனைவு. அதுபோன்ற ஒன்று அங்கு உருவாகவே இல்லை. கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்குப்பின்தான் வட இந்தியாவில் வைதீகப் பிராமணியத்துக்கான அடிப்படைகள் உருவாக்கப்படுகின்றன. அதற்கு முன் வைதீகப் பிராமணியம் என ஒன்று இருக்கவில்லை. புசுயமித்திரன் ஆட்சிக்குப்பிறகே இந்த மாற்றங்கள் வட இந்தியாவில் உருவாகின. கி.பி.க்குப் பின்தான் வருணம் எனப்படும் வகுப்பு சாதியாகத் திட்டமிட்டு வைதீகப் பிராமணியத்தால் மாற்றப்படுகிறது. இந்திய வரலாறு முழுவதும் எங்கெல்லாம் வைதீகப் பிராமணியமும் சமற்கிருதமயமாக்கலும் வளர்ந்து வலுப்படுகிறதோ அங்கு சாதியம் தோன்றி வளர்ந்து வலுப்படுகிறது. தமிழகம் கேரளம் ஆகியவற்றின் சாதிய வரலாறு இதற்கு இன்றும் சாட்சிகளாக உள்ளன. ஆகவே வைதீகப் பிராமணியம்தான் இந்தியச் சாதியத்துக்கான தோற்றுவாய்.
எல்லா உணர்ச்சிகளும்:
Leave a Reply
You must be logged in to post a comment.