குந்தவை நாச்சியார்-வாழ்வும் வரலாறும்

குந்தவை நாச்சியார்-வாழ்வும் வரலாறும்

வைகை அனிஷ்

பாண்டியன் என்பதற்குப் பள்ளன்-உழவன் எனப்பொருள்படும். வேளாண்மை தொழிற்பெயர் ஏற்பட்டிருப்பதைப்போல சோழன் என்ற குடிப்பெயரும் வேளாண்மை யோடு தொடர்புடைய பொருள் என ஒருபிரிவினர் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். வீரவன்னிய இராஜராஜன், ராஜராஜசோழ தேவேந்திரன், ராஜராஜ உடையார், ராஜராஜபிள்ளை, ராஜராஜதேவர் போன்ற பெயர்களால் ராஜராஜ சதய விழாவில் அனைத்து சாதி அமைப்பின் பெயராலும் விளம்பர பதாகைகளும், ஒவ்வொரு சாதிக்கட்சி தலைவர்களும் மாலையிட்டு சர்ச்சையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு சாதிப்பிரிவினரும் தங்கள் ஆதாரங்களை எடுத்து காட்டி இராஜராஜசோழன் எங்கள் சாதிதான் என மார்தட்டிக்கொள்கிறார்கள். அதே வேளையில் தமிழ் ஆர்வலர்களோ அரசர் குலம் என்பது சாதி, சமயத்திற்கு அப்பாற்பட்டது. சாதிய தலைவர்கள் தங்கள் சுயநலத்திற்காக பெயர்சுட்டுவதை நிறுத்தவேண்டும் என அறிக்கைகள் சமர்பித்துக்கொண்டிருக்கின்றனர்.

நாம் அந்த சர்ச்சையை புறந்தள்ளிவிட்டு அவருடைய தங்கை குந்தவை நாச்சியார் மதம் மாறிய நிகழ்வைப்பற்றி பார்ப்போம்.

சோழன் என்றால் வளவன் என்று பொருள். வளவன்-வளமுடையவன், நிலமுடையவன், வேளாளன் என பொருள் தெரிவிக்கின்றனர். சோழ வேந்தர்கள் பலர் கல்வெட்டுக்களால் மல்லர்-குடும்பர் குலத்தவராக அறியப்படுகின்றனர். சோழன் கரிகால் பெருவளத்தான் என்னும் மள்ளர் குலவேந்தன் கல்லணையைக் கட்டி வேளாண் தொழிலை விரிவு படுத்தினான்.

தஞ்சை பெருவுடையார் கோயிலைக் கட்டிய இராசராச சோழனின் இயற்பெயர் குஞ்சரமல்லன் என்பதும், இவன் தேவேந்திரன் சக்கரவர்த்தி எனப் புகழாரம் பூண்டவன் என்பதும், இவனே குடவோலை முறை என்னும் குடும்பு ஆட்சியைச் செய்வித்தவன் என்பதும் உத்திரமேரூர் கல்வெட்டும், தஞ்சாவூர் கோயில் கல்வெட்டும் (தெக2-66 கி.பி.985-1014 ) இராசராச சோழனைக் குஞ்சரமல்லன் என்றே குறிக்கிறது.

இராஜராஜன் என்பதற்கு வடசொல்லிற்கு தமிழ் மொழியில் வேந்தர்வேந்தன், மன்னர்மன்னன், அரசர்களின் அரசன் என்பது பொருள். அண்டை நாடான இலங்கையில் சிங்களவர்கள் தமிழ் மன்னர்களோடு பொருதியபோது இலங்கை மீது போர்தொடுத்த இராசராசன் இலங்கை முழுவதையும் கைப்பற்றித் தன்னுடைய ஆட்சிக்குள் கொண்டு வந்தான். அப்போது இலங்கைக்கு மும்முடிச் சோழபுரம் எனப்பெயர் மாற்றியுள்ளான். அந்தப் படையெடுப்பின்போது கைது செய்யப்பட்ட 12,000 சிங்களவர்களைக் கொண்டே தஞ்சை பெருவுடையார் கோயிலையும் கட்டி முடித்தான்.

இராஜராஜசோழன் என்னும் குஞ்சரமல்லனுக்குப் பின் அவன் மகன் இராசேந்திர சோழனும் சிறிது காலம் இலங்கையில் ஆட்சி புரிந்தான்.

தமிழகத்தை விட பழமையான காசுகள் இலங்கையில் 70 சோழர் காசுகள் கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கவை.

தமிழ் மொழியிலுள்ள கதைகளின்படி சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரும் உடன்பிறந்தவர்கள் என்றும், காலப்போக்கில் இவர்களுக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு சேரனும், சோழனும் பொருள்தேடிவெளியே சென்று வடக்கிலும், தெற்கிலும் தங்கள் அரசுகளை அமைத்ததாக பிஷப் கால்டுவெல், தென்பாண்டி திருநாடு அல்லது திருநெல்வேலி வரலாறு என்ற நூலிலும், அதனை மொழியாக்கம் செய்த பேராசிரிர் சஞ்சீவி பக்கம் 17-18ல் குறிப்பிடுகின்றனர்.

சேர, சோழ, பாண்டி மன்னர்களில் சோழமன்னர்கள் பரம்பரையில் வந்தவர் குந்தவை நாச்சியார். சோழர்கள் கட்டிடக்கலையும், சோழர்கள் போர் பற்றியும், சோழ மன்னர்களைப்பற்றியும் அறிந்து வைத்துள்ளோம். அதே வேளையில் சோழர்குலத்தில் பிறந்த குந்தவை நாச்சியார் தான் பிறந்த மதத்தின்மீது வெறுப்பு கொண்டு மதம் ;மாறியதையும், அதே வேளையில் மாற்று மதத்தையும் அரவணைத்து அதற்கு பல கொடைகள் வழங்கியுள்ளார். கலை, இலக்கியம், சமயப்பொறை ஆகியவற்றில் ஒரு அரசரோ அல்லது அரசியரோ பல ஆண்டுகாலம் ஆண்டு இருந்தால் அவர்கள் பெயர் காலங்களைக் கடந்தும் நமக்கு வெளிப்படுத்தும். அப்படி அரசாண்ட அரசிகளில் ஒருவர்தான் குந்தவை நாச்சியார். அவர் பற்றிய கட்டுரைதான் இது.

குந்தவை நாச்சியார்

சோழ சாம்ராஜ்யத்தை பராந்தக சோழன் (கி.பி.907-953) ஆம் ஆண்டு சுமார் 48 ஆண்டுகள் பதவி வகித்து வருகிறான். அவனுடைய மகன் ராஜாதித்தன் தக்கோலப் போரில் கொல்லப்படுகிறான். (கி.பி.950) மகன் இறந்த வருத்தத்திலேயே பராந்தகன் ஆட்சியை கண்டராதித்தியனுக்கு கொடுக்கிறான். கண்டராதித்தன் (கி.பி-950-956) ஆறு ஆண்டுகளே ஆட்சி செய்கிறான். அதன் பிறகு அரிஞ்சயனுக்குப் பிறகு அவனுடைய மகன் சுந்தரச்சோழன் (கி.பி.956-973) பதவிக்கு வருகிறான். அவன் பதவி ஏற்ற சில காலத்தில் அவனுடைய இரு மகன்களில் ஒருவனான ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்படுகிறான். மகனின் இழப்பில் அதிர்ச்சியும் வருத்தமும் மனஉளைச்சலும் அடைந்த சுந்தரச்சோழன் சில மாதங்களிலேயே இறந்து போகிறான். சுந்தரசோழனுக்கு இரண்டு மகன்கள். ஒருவன் கொல்லப்பட்ட ஆதித்த கரிகாலன். இரண்டாவது மகன் ராஜராஜசோழன்.

சுந்தரசோழனுக்கும், வானவன் மாதேவிக்கும் பிறந்தவர் குந்தவை நாச்சியார். ஆதித்த கரிகாலனுடன் பிறந்தவர். அருண்மொழிவர்மன் என்ற இராஜராஜசோழனின் மூத்த சகோதரி குந்தவை நாச்சியார்.

குந்தவை என்ற சொல்லுக்கு தெலுங்கு மொழியில் லட்சுமி என்று பொருள். திருமாலை கிருஷ்ணா, முகுந்தா, முராரோ என்று போற்றி வழிபடுவதில் இருந்து இதனை அறியலாம். திருமாலுக்கு முகுந்தன் என்ற பெரும் உண்டு. திருமாலைக் குந்தன் என்றும் லட்சுமியை அதாவது குந்தனுடைய மனைவியை குந்தவை என்றும் ஆந்திராவில் அழைத்து வருகிறார்கள்.

சோழர்குல அரச மகளிரான மூன்று குந்தவைகள் பற்றி வரலாறு விரிவாக கூறுகிறது. கீழைச் சாளுக்கிய அரசகுலப் பெண்ணை சுந்தரசோழனின் தந்தையான அரிஞ்செயச்சோழன் திருமணம் செய்து கொண்டிருந்தான். இவரே வீமன் குந்தவை என்று சோழர் வரலாற்றில் குறிக்கப்படும் முதல் குந்தவையாவார்.

அரிஞ்செயச்சோழன், வீமன் குந்தவையைத் திருமணம் செய்ததைப்போன்று வைதும்ம அரசகுலத்தைச்சேர்ந்த கல்யாணி என்பவரை அடுத்ததாகத் திருமணம் செய்திருந்தான். அரிஞ்செயசோழனுக்கும், கல்யாணிக்கும் பிறந்தவனான சுந்தரச்சோழன் தனது பெரியதாயாரான வீமன் குந்தவையின் நினைவைப் போற்றியும், அவர்மீதுள்ள அன்பை வெளிப்படுத்தவும், தனது மகளுக்கு குந்தவை என்று பெயரிட்டு அழைத்து வந்தான்.

இரண்டாவதாக அறியப்படும் சுந்தரச்சோழனின் மகளான குந்தவைக்கு மந்தாகினி என்ற மற்றொரு பெயரும் உண்டு. சுந்தரசோழனின் மகளான இரண்டாம் குந்தவையே ஆழ்வார் பரந்தகன் குந்தவை பிராட்டியார், வல்லவைரையர் வந்தியதேவர் மாதேவர் மாதேவியார், உடையார் பொன்மாளிகையில் துஞ்சிய தேவர் திருமகளார் ஸ்ரீபராந்தகன் குந்தவை பிராட்டியார் என்று சோழர்களின் கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் குறித்து வருகின்றன.

சோழ அரச குடும்பத்தில் பலருக்கும் குந்தவை என்று பெயரிடுவது பொதுவான வழக்கமாக இருந்தது. குந்தவை நாச்சியாரின் மீது அளவுகடந்த மரியாதையும் அன்பையும் கொண்டிருந்த குந்தவை நாச்சியாரின் தம்பியும் சோழப் பேரரசனுமான இராஜராஜசோழன் தனது மகளுக்கு குந்தவை என்று பெயரிட்டு அழைத்து வந்தான். இவரே சோழ வரலாற்றில் மூன்றாம் குந்தவையாக குறிப்பிடப்படுகிறார்.
வரலாற்றில் இவ்வாறு குறிக்கப்பட்டு வரும் ஆழ்வார் பராந்தகன் குந்தவையும், இராஜராஜனின் தமக்கையுமான இரண்டாம் குந்தவையும் கீழைச்சாளுக்கிய அரச மரபைச்சேர்ந்த வந்தியத் தேவனுக்கு மாலை சாட்டினார். இராஜராஜனின் மகளான மூன்றாம் குந்தவையும் கீழைச்சாளுக்கிய வேந்தன் விமலாதித்தனுக்கு மாலையிட்டு மணந்தார். வரலாற்றில் வரும் சோழப்பேரரசில் குந்தவை என்போர் இருவரும் கீழைச்சாளுக்கிய அரசமரபினரையே மணம் செய்து கொண்டனர்.

இரண்டாவது குந்தவையாக வரலாறு குறிக்கும் குந்தவை நாச்சியாரின் பிறப்பை பற்றி திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் உள்ள பாச்சில என்கிற கோபுரப்பட்டி ஊரில் உள்ள கல்வெட்டு அறிவிக்கிறது. திருஅவிட்டம் நட்சத்திரத்தில் குந்தவை நாச்சியார் பிறந்தவர் என்பதைக் இக்கல்வெட்டு அறிவிப்பதை போலவே, இவரது பிறந்த நாளான திருஅவிட்டம் நட்சத்திரத்தில், இராஜராஜனின் 21வது ஆட்சியாண்டு (கி;.பி.1006) முதல் மேல்பாடியில் உள்ள அவனீஸ்வரர் கோயில் திருவிழாக்கள் கொண்டாப்பட்டு வந்ததை அவனீஸ்வரர் கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது.

குந்தவை நாச்சியாரின் தந்தையான சுந்தரச்சோழன் செம்பியன் குடியைச்சார்ந்தவன் எனவும், இவனது மனைவி மாதேவி சங்க காலத்தில் வாழ்ந்த திருமுடிக்காரி போன்ற பெருமக்கள் வழிவந்த மலையமான குடியைச்சேர்ந்தவர் எனவும் அறியப்படுகிறது.

குந்தவை நாச்சியார் தனது தம்பியான இராஜராஜன் மீது கொண்டிருந்த அன்பைப் போலவே, இராஜராஜனும் தனது தமக்கையான குந்தவை நாச்சியாரின் மீது பெரும் மதிப்பும், அன்பும் கொண்டிருந்தான் என்பதை அவன் கட்டிய தஞ்சை ராஜராஜேஸ்வரம் கோயில் ~ நாங்கொடுத்தனவும், அக்கன்(குந்தவை) கொடுத்தனவும்~ எனக் கல்வெட்டில் இடம் பெறச்செய்துள்ளான்.மேலும் அவர் பிறந்த திருஅவிட்டம் நட்சத்திரத்தில் மிகப் பெரும் செலவில் திருவிழாக்கள் நடத்தியதில் எளிதில் அறியலாம்.

ஏறத்தாழ பல நூற்றாண்டுகள் நீடித்த பிற்காலச் சோழர்களின் ஆட்சியல் பெரும் பங்கு காலத்தைக் கண்டதோடு அதில் பெரும் பங்களிப்பும் செய்யமுடிந்த பேறுபெற்றவர் குந்தவை நாச்சியார். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், அவர்காலத்தில் ஏற்பட்ட அரசியல் ச+ழ்நிலைகளையும் தன்னுடைய கணவன், சகோதரன் கொலைசெய்யப்பட்ட பின்பு தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்து நெருக்கடிகளை சமாளித்தவர்.

தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் சந்தித்த நெருக்கடிகள் மற்ற அரசிகளுக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

குந்தவை நாச்சியாரின் வைதீக வெறுப்பு

குந்தவை நாச்சியார், அரசகுலத்தில் பிறந்தவரானாலும் மற்ற அரசகுல அரசிகளைப் போல் அரண்மனையில் அடைபட்டு சுகவாழ்வு வாழ்ந்தவர் இல்லை. இந்து மதத்தில் பெண்களின் நிலைகளாக குறிக்கப்படும் நிலைகளுக்கு எதிரான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கவேண்டிய சூழ்நிலை பெற்றிருந்தார்.

வைதீக மதத்தின் மீது குந்தவை நாச்சியாருக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டதற்கு, அவரது வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு துன்பங்கள் காரணமாக இருந்தது. தனது சகோதரனான ஆதித்திய கரிகாலன் வைதீக மதத்தைச்சார்ந்த ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜன், அவனது தம்பி பரமேஸ்வரனான இருமுடிச்சோழ பிரம்மாதி இராஜன் இவர்களுடன் உத்தமச்சோழனின் தாயாரான செம்பியன் மாதேவியின் ஊரான மலையனூரைச்சேர்ந்தவர்களாலும், ரவிதாசன், பரமேஸ்வரன் ஆகியவர்களாலும், படுகொலை செய்யப்பட்ட நிகழ்ச்சியானது குந்தவை நாச்சியாருக்கு வெறுப்புணர்வு அதிகமாக இருந்தது. இதனால் வைதீக மதசடங்குகள் மற்றம் வைதீக மதத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டது.

ஆதித்திய கரிகாலனை படுகொலை செய்தவர்களைத் தண்டிக்க இயலாத தனது தம்பியான இராஜராஜசோழன் அரியணை ஏறும் காலம்வரை பலவித சோகமும், வேதனையும் மதத்தின் மீது வெறுப்புணர்வை தோற்றுவித்தது. இவை மட்டும் அல்லாமல் ஆதித்திய கரிகாலசோழன் படுகொலை செய்யப்பட்ட பிறகு, தனது தந்தையான சுந்தரசோழனும், தாயாரான வானவன் மாதேவியும் சிறையில் அடைக்கப்பட்டு பலவித சித்திரவதைகள் செய்யப்பட்டும், சிதையில் இடப்பட்டும் உயிரிழந்த கொடுமைகளை குந்தவை தன்னுடைய மனதிற்குள் எண்ணி புழுங்கியுள்ளார்.

ஆதித்தியகரிகாலன் படுகொலைக்குப் பிறகு தனது கணவன் வல்லவரையன் வந்தியத் தேவன் மறைவும், மறைவையடுத்து அவருக்கு ஏற்பட்ட வெறுப்பு, தனிமை என பல துன்பங்களைக் அடுக்கிக்கொண்டே போகலாம்.

மதமாற்றம்

இராஜராஜனும் அவரது தமக்கை குந்தவை நாச்சியாருக்கும் இஸ்லாம் மார்க்கம் குறித்த தொடர்புகள் அவனது தந்தையான சுந்தரச்சோழன் ஆட்சிக்காலத்தில் இருந்தே தொடர்ந்து வந்துள்ளது. இஸ்லாம் மதத்தை பரப்புவதற்காக சோழர் ஆட்சிப்பகுதிக்கு வந்த நத்தஹருடன் சிறுவயதில் இருந்து பழகும் வாய்ப்புகள் குந்தவை நாச்சியாருக்கு ஏற்பட்டிருந்தது. இதனால் வைதீக மதத்தைவிட்டு குந்தவை நாச்சியார் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இஸ்லாம் மதத்திற்கு மாறிய பின்பு சோழப்பேரரசில் மிகப்பெரிய புரட்சியும், மாறுதலும் பல்வேறு குழப்பங்களும் நீடித்தது.

இவற்றிற்கு ஆதாரமாக ஸ்ரீரங்கம் கோயில் ஒழுகு உள்ள பலக்குறிப்புகளும், சமயபுரம் கோயில் வரலாறும், திருவாதவூரில் உள்ள திருமறைநாதர் கோயில் இருக்கும் புருஷா மிருகம் உருவமும், குந்தவை நாச்சியார் தாதாபுரத்தில் கட்டிய ரவிகுல மாணிக்க ஈஸ்வரம் விமானப்பகுதியில் சித்தகரிக்கப்பட்டுள்ள சுதைச்சிற்பங்களும், ஸ்ரீரங்கம் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் ஈசானிய மூலையில் இடம்பெற்றுள்ள துலுக்க நாச்சியார் சன்னதியும் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்ட செயலை விளக்குவதாக அமைந்துள்ளன.

சமணமும் குந்தவையும்

வடஆற்காடு மாவட்டம், போளுருக்கு அருகே உள்ள திருமலையில் குந்தவை நாச்சியார் சமணக்கோயிலையும், திருமலைப்பாடியில் அவரின் ஆதரவில் சமண நிறுவனம் இருந்ததையும், காஞ்சிபுரம் அருகில் ~திருப்பதிக்குன்றம்~ சிற்றூரில் இன்றளவும் புகழ்பெற்ற சமணக்கோயில் இருந்து வருவதும், கி.பி.10-ஆம் நூற்றாண்டில் சமணமதம் சமயப்பொறையுடைய அரசர்களால் முற்றிலும் அழிந்துவிடாமல் காப்பாற்றப் பட்டுள்ளதை இதன் மூலம் அறியலாம்.

தாதாபுரம் கல்வெட்டுக்கோயில்
உடையார் ஸ்ரீராஜராஜ தேவர் திருத்தமக்கையார்
வல்லவரையர் வந்தியத் தேவர் மகாதேவியார்
ஆழ்வார் பராந்தன் குந்தவை ஆழ்வார்
என்று தஞ்சை கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது
உடையார் பொன்மாளிகையில் துஞ்சிய தேவர் திருமகளார்
ஸ்ரீபராந்தகன் குந்தவை பிராட்டியார்
என இராசராசபுரமாகிய இன்றைய தாதாபுரத்து கோயில் கல்வெட்டுக்கள் குறிக்கிறது.

குந்தவை நாச்சியார் அறப்பணிகள்

தஞ்சாவூரில் இராஜராஜ சோழன் ஆட்சியில் இராஜேஸ்வரம் என்ற பெருங்கோயிலை கட்டியபோது குந்தவை நாச்சியார் பல கொடைகள் கொடுத்துள்ளதை கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகிறது.

தனது தந்தை சுந்தரச்சோழனுக்கும் தனக்கும் திருமேனி எழுந்தருளிவித்தத் திருமேனி என தென்னிந்திய கல்வெட்டுத்தொகுதி 2ல் குறிப்பிடப்படுகிறது.

தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு 7,282 கழஞ்சு பொன்னும் 3,143 முத்துக்கள், 4 பவளங்கள், 4 ராஜவர்த்தம், 7,767 வைரம் 1001 மாணிக்ககற்கடுன் கூடிய நகைகளாக 1453.5 கழஞ்சு பொன்னும் வழங்கியுள்ளார்.சமயபுரம் கோயிலில் குந்தவையின் சிலை சமய புரம் கோயிலின் மகாமண்டபத்தில் இன்றுமுள்ள இரண்டு தூண்களில் குந்தவை நாச்சியாரின் திருஉருவச்சிலை மிக நேர்த்தியான சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் மூன்றடி உயரத்தில் மண்டபத்தின் நடுவில் இடம்பெற்றுள்ள தூணில் இணைந்திருப்பது போல செதுக்கப்பட்டுள்ளது. கி.பி.11-ம் நூற்றாண்டு காலத்திய சிற்பம் என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள். சமயபுரம் கோயிலுக்கு செல்லும் பெரும்பாலான பக்தர்கள் இச்சிலைக்கு உப்பை காணிக்கையாக செலுத்தி தங்கள் வேண்டுதல்களை இன்றும் நிறைவேற்றி வருகிறார்கள். குந்தவை நாச்சியார் இஸ்லாம் மதத்திற்கு மாறி இந்து மதத்தை விட்டு விலகினாலும் கூட அவரை தங்களது மதிப்பிற் குரியவராக சோழ குடிமக்கள் பலரும் தங்கள் விசுவாசத்தை காட்டுகின்றனர்.

குந்தவை நாச்சியார் இறப்பு

சிரியா நாட்டில் இருந்து இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்ப வந்த மார்க்க ஞானியான சையது முத்தருத்தீன் என்கிற நத்தர் என்பவர் ஹிஜ்ரி 397 ல் துல்ஹஜ் பிறை 2-ம் நாளில் பிறந்தவர். அதாவது கி.பி.939 ஆம் ஆண்டில் பிறந்தவர். அவர் ரம்ஜான் மாதம் 14-ம் நாள் வெள்ளிக்கிழமை கி.பி.1006-ம் ஆண்டு இறந்ததாக அறியவருகிறது. மேலும் நத்தர் குந்தவை நாச்சியாரை வளர்ப்புப் பிள்ளையாக பாவித்துள்ளார்.

நத்தர் இறந்த சில வருடங்களில் குந்தவை நாச்சியாரும் இறந்துள்ளார் என்றும், நத்தரை அடக்கம் செய்த இடத்திலேயே குந்தவை நாச்சியாரும், அவர் ஆசையாக வளர்த்துவந்த கிளியும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது குந்தவை நாச்சியார் இஸ்லாம் மதத்தைத் தழுவியபோது, அவருக்கு நத்தர்வலி ஹலிமா எனப்பெயரிட்டு அழைத்து வந்தார் எனவும், அவரை மாமாஜிகினி என்று மரியாதையுடன் அழைத்து வந்தனர் என்ற தகவலை நத்தர் தர்காவின் 1000-வது மலர் மூலம் அறியப்படுகிறது.

வளர்ப்புப் பிராணிகளுக்கு நடுகல்லும்-சமாதியும்

மாண்ட தசரதனுக்குச் சிலை செய்து வைத்ததும் இறந்த சீதைக்குத் தங்கத்தில் பிரதிமம் செய்து வைத்ததும் நீத்தார் நினைவைப் போற்றும் செயலாகும். விக்கிரம ஆண்டு என்பது கி.பி. 57 ல் தொடங்குகிறது. விக்கிரமன் இறந்த ஆண்டு என்பது சமண சமய வழக்காறாகும். இராவணலீலா என்பது இராவணன் மாண்ட நினைவு நாளைக் குறிப்பிடும். நரகாசுரன் மாண்ட நாள் தீபாவளி என்றும் கூறுவர். வர்த்தமான மகாவீரர் மண்ணுல வாழ்வு நீத்த நாளே தீபாவளி.

இறந்தவர்களுக்கு நினைவுக்கற்கள் எடுக்காமல் விட்டுவிட்டால் அடுக்கடுக்காதத் துன்பங்கள் வரும் என்று மக்கள் நம்பினர். அரசமரம், அத்திமரம், நீர்நிலை அல்லது இறந்த இடத்தில் நினைவுக் கல் எழுப்பினர். ஒரு சிலர் தற்போதும் எழுப்புகின்றனர்.
அவ்வாறு மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல் விலங்குகளுக்கும் நடுகற்கள் எடுக்கப் பட்டன. நாய், எருது, குதிரை, கிளி, யானை ஆகிய நன்றியுள்ள ஜீவன்களுக்கும் நினைவுக் கற்கள் ஏற்படுத்தப்பட்டன. தமிழகத்தில் செஞ்சிவட்டம் கடலிலியில் தேசிங்குராஜனுக்கும் அவன் குதிரைக்கும் நினைவுக்கற்கள் உள்ளன.

இதனையே வள்ளுவர் தன்னுடைய திருக்குறளில் –

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்~

என்று கூறுகிறார்.

சதாரண போர்வீரன் நடுகல் சிற்பங்களில் தேவமங்கையரால் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவது போல் காட்டப்பட்டுள்ளனர்.

கிளிக்கு எடுத்த நினைவுக்கல்

ஜெயகேசி மன்னனாகிய கதம்ப மன்னன் கிளிமீது கொண்டிருந்த பாசத்தால் தீயில் விழுந்து உயிர்விட்டுள்ளான். ஜெயகேசியின் செல்லக்கிளி, மன்னன் உணவு அருந்தும்போது தானும் உடனிருந்து உணவினை உண்ணும். ஒரு நாள் அரசனுடைய இருக்கைக்கு கீழே பானை ஒன்று இருந்துள்ளது. அதனைக் கண்ட கிளி அச்சமடைந்தது. மன்னன் பலமுறை ஆசையாக அழைத்தும் அந்தக் கிளி வரவில்லை. இறுதியாக அரசன் கோபத்துடன் கத்தினான். கிளிக்கு எந்த இடையூறு வந்தாலும் அதற்கான பொறுப்பை ஏற்பதாகக் கூறி இறுதியாக கிளியை அழைத்தான். கிளியும் கூண்டிலிருந்து வெளியே வந்தது. அப்போது மன்னன் இருக்கையின் கீழ் இருந்த பூனை திடீரென்று பாய்ந்து சென்று கிளியைக் கொன்று விட்டது. நிகழ்ந்த சம்பவத்தைக் கண்ணெதிரே கண்ட அரசன் தான் உறுதியளித்ததற் கிணங்க உயிர்விட முனைந்து தீயில் விழுந்தான்.
தமிழகத்தில் குரிசிலாப்பட்டு கிராமத்தில் நாடோடிக் கலைஞன் ஒருவன் கிளிக்காக உயிர் விட்டதை க.இராசன் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். திருவாலங்காட்டினையடுத்த பழையனூரில் எழுபது வேளாளர்கள் நீலி என்ற பேயின் செயலால் உயிர்விட்ட சம்பவம் நினைத்துப் பார்க்கவேண்டியுள்ளது.

இதே போல திருச்சியில் குந்தவை நாச்சியார் தான் ஆசையாக வளர்த்த கிளிமீது பாசம் கொண்டு கிளி இறந்த பிறகு தன்னுடைய சமாதி அருகே கிளிக்கு சமாதி கட்டி வழி பட்டுள்ளார். இன்றளவும் திருச்சியில் உள்ள நத்தர் வலி சமாதியருகே கிளியும் வழிபாட்டிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இன்றும் மாமாஜிகினி என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு இஸ்லாமியர்களால் போற்றப்படும் குந்தவை நாச்சியார் இராஜராஜ சோழனின் திருத்தமக்கையார் என்பதும், சோழப் பேரரசில் மிகவும் செல்வாக்குடன் விளங்கி புகழ்பெற்ற அரசியையும் அவர் வளர்த்த கிளிக்கு சமாதி கட்டி முஸ்லிம் மதப்படி இன்றும் திருச்சியில் மதநல்லிணக்கத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.

இவை தவிர இந்தியப் பண்பாட்டின் மங்கலகரமான நிகழ்ச்சிகளில் அடையாளச் சின்னமாக பெரிய குத்து விளக்கு ஒன்று இங்கு உள்ளது. இந்த குத்து விளக்கு எரிவதற்கான எண்ணெயை பல மதப் பிரிவைச்சேர்ந்த மக்களும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களும், பல்வேறு சாதியினரும் வந்து ஊற்றிவிட்டுச்செல்வது வழக்கம் இருந்து வருகிறது.

தன்னுடைய சகோதரர் சாதி தலைவராக சர்ச்சையில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்ற வேளையில், தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை அப்படியே வாழ்ந்து முடிக்காமல் பல நூற்றாண்டுகளைக் கடந்த பின்னரும் பல அரிய பொக்கிஷங்களையும், மதமாற்றத்தையும் செய்ததோடு அல்லாமல் தான் ஆசையாக வளர்த்த கிளிக்கு நடுகல் என்ற சமாதி வழிபாட்டையும் உருவாக்கிய குந்தவை நாச்சியார் சமாதி நூற்றாண்டு வரலாற்றை மதநல்லிணக்க ஆண்டாக வருடந்தோறும் கொண்டாடுவது வரலாற்றின் சரித்திர குறியீடுதான். 

https://www.facebook.com/351676835043065/photos/a.351677428376339/1565516523659084/?locale=ms_MY&paipv=0&eav=AfYDCI_J2zvqIYi0A_O87VAdojKcZA9dWcmVeIsrjsybilVZiF9o482G8b25fX1qC_4&_rdr

About editor 2991 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply