முருங்கையைத் தின்றால், முந்நூறும் போகும்’ அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்திய அமெரிக்க நிறுவனம்!

முருங்கையைத் தின்றால், முந்நூறும் போகும்’ அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்திய அமெரிக்க நிறுவனம்!

எம்.நாச்சிமுத்துஇ.கார்த்திகேயன்

முருங்கை
  • முருங்கை விதை முதல் விற்பனை வரை-4

முருங்கை, தமிழர்களின் உணவுக் கலாசாரத்தில் மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவிலும் பல்வேறு விதங்களில் இரண்டறக் கலந்தது. ஆனால், இன்றோ… வட இந்திய மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் வசிக்கும் மக்களின் மிகவும் விருப்பமான உணவு வகையில் முருங்கையும் ஓர் அங்கமாகிவிட்டது. முருங்கையில் தயார் செய்யப்படும் பலவிதமான, இதுவரையிலும் நீங்கள் அறிந்திடாத புதிய உணவு வகைகள் மற்றும் மருத்துவக் குணங்கள் குறித்து, இங்கு பார்ப்போம்.

முருங்கைக்காய், தென்னிந்திய சமையல்களில் ஒரு ராஜாங்கமே நடத்தி வருகிறது. குறிப்பாக சாம்பார், புளிக்குழம்பு, வறுவல், அவியல், கூட்டு ஆகியவற்றில் முருங்கைக்காய் இடம்பெறுகிறது. பிரட்டல், அடை, வடை, பொரியல், சூப் ஆகியவற்றில் முருங்கைக்கீரை பயன்படுத்தப் படுகிறது. திருமணம் உள்ளிட்ட விஷேசங்களிலும், ஹோட்டல் களிலும் முருங்கைக்காய் சாம்பாருக்கு எப்போதுமே தனி வரவேற்புதான்.

முருங்கைப் பூ
முருங்கைப் பூ

முருங்கை கட்லெட் முருங்கை கிரிஸ்பி ஸ்டிக்

இந்நிலையில்தான், தற்போது, வட இந்திய மக்களும் முருங்கைக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார்கள். இதன் மகத்துவம் குறித்து மிகுந்த நெகிழ்ச்சியோடு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “70 வயதிலும் என் உடல் திடகாத்திரமாக இருப்பதற்கு முருங்கை உணவும் ஒரு காரணம். முருங்கை பரோட்டாவை வாரத் துக்கு இரண்டு முறை உண்கிறேன். இந்திய மக்கள், ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு முருங்கை உணவுகளை உண்ணுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் முருங்கையின் முக்கியத் துவம் குறித்துப் பேசியுள்ளார்.

வட இந்திய மாநிலங்களில், குறிப்பாக அங்குள்ள நகரப்பகுதிகளில் முருங்கை கட்லெட், முருங்கை கிரிஸ்பி ஸ்டிக்ஸ், கீரை சூப், கீரை சாட், முருங்கை பரோட்டா, முருங்கை பிரியாணி, முருங்கை ரொட்டி (stuffed), கீரை மசாலா, முருங்கைக்காய் சிக்கன் வறுவல், முருங்கைக்காய் மட்டன் குழம்பு ஆகியவை பிரபலமாகி வருகின்றன.

முருங்கை
முருங்கை

இது தவிர, பெரும் நகரங்களில் முருங்கை டீ, முருங்கை சூப், முருங்கை லாட்டே, முருங்கை – சிறுதானிய பிஸ்கெட், முருங்கை தொக்கு, முருங்கை ஊறுகாய், முருங்கை கம்மீஸ், முருங்கை மாத்திரைகள் ஆகியவற்றின் பயன்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறாக, முருங்கையைப் பயன்படுத்தி தற்போது 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் தயார் செய்யப்படுகின்றன.

அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் மக்கள், முருங்கைப்பொடி மற்றும் முருங்கை எண்ணெயைப் பயன்படுத்தி விதவிதமான உணவு வகைகள் தயார் செய்கிறார்கள். முருங்கை டீ, முருங்கை பச்சை காபி, முருங்கை லாட்டே, முருங்கை கேக், முருங்கை பானம், சாக்லேட், சிப்ஸ், முருங்கை முட்டைப் பொரியல் உட்பட இன்னும் பலவிதமான உணவு வகைகள் தயார் செய்யப்படுகின்றன. உலகில் இந்தியாவுக்கு அடுத்து அதிகமாக முருங்கையை உணவாக உட்கொள்பவர்கள் அமெரிக்கர்களே. ஆனால், அங்கு முருங்கைக்காய்களை உண்பதில்லை. மாறாக உலர் கீரைப் பொடிகளை மட்டுமே உண்கிறார்கள்.

தென்கொரியா, தாய்லாந்து, வியட்னாம், கம்போடியா, பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற நாடுகளில் உலர்ந்த முருங்கை இலைகளை அரிசியோடு சேர்த்து சமைத்து உண்கிறார்கள். சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் முருங்கை முட்டை பொரியல், முருங்கை ஆம்லேட் போன்றவற்றை விரும்பி உண்கிறார்கள். ஐரோப்பாவில், முருங்கை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மஃபின்ஸ், பாஸ்தா, பான் கேக், பிரெட், லேட்டே, காக்டெய்ல் போன்ற உணவுகள் முன்னணியில் இருக்கின்றன.

பிடல் காஸ்ட்ரோ நேசித்த முருங்கை
பிடல் காஸ்ட்ரோ நேசித்த முருங்கை

சீனாவும், ஆப்பிரிக்காவும் உணவில் முருங்கை விதை எண்ணெயை அதிக அளவில் பயன்படுத்துகின்றன. வளைகுடா நாடுகளில் முருங்கை இலை பவுடரை, புலால் உணவுகளோடு சேர்த்து உண்கிறார்கள். முருங்கை உணவுகளைப் பொறுத்தவரை… இந்தியாவிலும், இந்திய வம்சாவளிகள் வசிக்கும் நாடுகளிலும் முருங்கைக்காய்களை உணவில் சேர்க்கும் பழக்கம் அதிகம் உள்ளது. முருங்கையில் தயார் செய்யப்படும் பலவிதமான உணவு வகைகள் குறித்து இதுவரை பார்த்தோம். இனி இதன் மருத்துவக் குணங்கள் குறித்துப் பார்ப்போம்.

பிடல் காஸ்ட்ரோ நேசித்த முருங்கை

‘எனது 88-வது வயதில் நோயிலிருந்து மீண்டு வந்தது இந்தியாவின் முருங்கையின் மூலம்தான். அது ஒரு மந்திர சக்தி’ என உணர்வுப்பூர்வமாகத் தெரிவித்தார், கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ. அந்நாடு முருங்கை வேளாண்மைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை உலக நாடுகள் உற்று நோக்கின. கியூபா மக்கள் மிகவும் நேசித்துச் சாப்பிடும் உணவாக முருங்கை திகழ்கிறது.

முருங்கையின் மருத்துவக் குணங்கள் பற்றி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மருத்துவத்தில் என்ன சொல்லப்பட்டதோ, அதை நவீன மருத்துவ ஆராய்ச்சிகளும் உறுதிப்படுகின்றன. அத்தகைய ஆய்வுகளின் சாராம்சம் குறித்து இங்கு பார்ப்போம். ரத்த சோகை நோய்க்கு முருங்கை ஓர் அருமையான மருந்து. நம் உடலில் உள்ள ரத்த சிவப்பு அணுக்களை அதிகப்படுத்த, முருங்கை துணை செய்கிறது. இயற்கையின் கொடை யாக, முருங்கையில் அதிக அளவு இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இதனால், ரத்த சோகை நோய், ஒரு பைசா செலவில்லாமல் குணப் படுத்தும் வல்லமை கொண்ட மருந்தாக முருங்கை திகழ்கிறது.

முருங்கை இலை
முருங்கை இலை

முருங்கையில் அதிகப்படியாகச் சுண்ணாம்பு சத்தும், பாஸ்பரஸ் சத்தும் இருப்பதால், எலும்புகளையும் மூட்டு களையும் உறுதியாக்குகிறது. இன்றளவும் மூட்டுவலிக்கும், உடைந்த எலும்புகளை சரிசெய்வதிலும் முருங்கை முன்னிலை வகிக்கிறது. முருங்கையில் உள்ள நியாசிமின் என்ற வேதிப்பொருள்… கேன்சர் நோயை கட்டுப்படுத்தவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலை நாடுகளில் முருங்கை மாத்திரைகள் அதிகமாக விற்பனை ஆவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். வட அமெரிக்க நாடுகளில் வசிக்கும் மக்கள், வயிறு செரிமானத்துக்கும், உடல் பருமனை குறைப்பதற்கும், குடற்புண் நோயை குணப் படுத்துவதற்கும் முருங்கையைப் பெருமளவில் பயன்படுத்துகின்றனர்.

இதயங்களில் நண்பன்

உடல் சோர்வை விரைவாகப் போக்கும் வல்லமைப்படைத்தது, முருங்கை. ஆகையால் தான் மேலை நாடுகளில் உள்ள மருத்துவர் களும்கூட ‘முருங்கை சாப்பிடுங்கள்’ என அங்குள்ள மக்களுக்கு ஆலோசனை வழங்கு கிறார்கள். மாரடைப்பு உள்ளிட்ட இதயம் சம்பந்தப்பட்ட நோய்களையும் இது குணப் படுத்தும். இதை அனுபவபூர்வமாக உணர்ந்த தால்தான், ஆப்பிரிக்கக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் முருங்கையை ‘இதயங்களின் நண்பன்’ என்கிறார்கள்.

முருங்கை பரோட்டா உண்ணும் பிரதமர் மோடி
முருங்கை பரோட்டா உண்ணும் பிரதமர் மோடி

நீரிழிவு நோய்

நீரிழிவு நோயைக் குணப்படுத்தக்கூடிய ஓர் அற்புத வரமாக முருங்கை திகழ்கிறது என்கிறார், அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி பிரெடரிக் ஓன்ஸ் (Frederick S. Owen’s). ‘2050-ம் ஆண்டுக்குள் அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 33 சதவிகிதம் பேர் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவார்கள் எனவும், இது அமெரிக்காவுக்கு ஒரு பெரும் பின்னடைவை கொடுக்கும்… அதேசமயம் இந்நோயை விரட்டுவதில் முருங்கை மகத்தான பங்காற்றும்’ எனவும் தெரிவித்துள்ளார், பிரடெரிக் ஓன்ஸ்.

சிறுநீரகச் செயல்பாடுகளை சீர்ப்படுத்தும்…

நுரையீரல் தொடர்பான நோய்களை, குறிப்பாக காசநோயைக் குணப்படுத்தக் கூடிய மருத்துவத் தன்மை முருங்கையில் உள்ளது. மேலும், இதில் ஆக்ஸினேற்றிகள் (Anti-oxidants) அதிகமிருப்பதால், சிறுநீரகச் செயல்பாடுகளைச் சீராக வைக்க உதவுகிறது. கண், காது, மூக்கு ஆகியவற்றின் செயல்பாடு களைச் சீராக வைப்பதற்கும், தோல் நன்கு பளபளப்பாக இருப்பதற்கும் உதவுகிறது. நோய்களைக் குணப்படுத்தக்கூடிய, முருங்கை யின் ஒரு சில மருத்துவக் குணங்கள் பற்றி மட்டுமே இங்கே தெரிவித்துள்ளேன். முழுமை யாகப் பட்டியலிட்டால் பல அத்தியாயங்கள் தேவைப்படும்.

‘குலி குலி’ நிறுவனத்தின் முருங்கை பொருள்்கள்
‘குலி குலி’ நிறுவனத்தின் முருங்கை பொருள்கள்

நம் முன்னோர்கள் ‘முருங்கையைத் தின்றால் முந்நூறும் போகும்’ என்பது தமிழகக் கிராமப்புறங்களில் நீண்டகால மாகச் சொல்லப்பட்டு வரும் பழமொழி. நம் முன்னோர்களின் கூற்றை, அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தும் வகையில், முருங்கை 300 நோய்களைக் குணப்படுத்தும் என்று அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. முருங்கையின் பயன் பாடுகள் குறித்த பல ஆச்சர்ய தகவல்கள் குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்.

– செழிக்கும்

முருங்கை இயற்கையின் பெரும் வரம்!

டாக்டர் ஹாவர்டு டபுள்யூ. ஃபிஷ்ஷர் என்பவர், கனடாவைச் சேர்ந்த பிரபல மருத்துவர். முருங்கையின் மருத்துவக் குணங்களைப் பற்றிப் பல புத்தகங்கள் எழுதியுள்ளார். மரணப் பயத்தை ஏற்படுத்தும் பல நோய்களுக்கும், ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கும்… முருங்கை ஓர் அருமருந்து, வரப்பிரசாதம். இது எளிய மக்களுக்கு இயற்கை கொடுத்த ஒரு பெரும் வரம்” என்கிறார். அதுமட்டுமல்லாமல், ஊட்டச் சத்துக்கான ஆங்கில மருத்துவ முறை ஏற்படுத்தும் பக்கவிளைவுகளைப் பற்றி உலகம் முழுவதும் பேசி வருகிறார்.

ஹாவர்டு டபுள்யூ. ஃபிஷ்ஷர்
ஹாவர்டு டபுள்யூ. ஃபிஷ்ஷர்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமும், சர்வதேச முருங்கை ஆராய்ச்சி நிறுவனமும் (International Moringa Research Organization – IMRO) இணைந்து கடந்த 2021-ல் நடத்திய சர்வதேச முருங்கை கருத்தரங்கில் அவரின் இந்த அளப்பரிய பணியைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது. விரைவில் அவர் தமிழகத்தின் முருங்கை மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார் என்பது கூடுதல் தகவல். அவரின் `முருங்கைப் பயணம்’ தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூரில் இருந்து தொடங்க இருப்பதாகக் கூறியுள்ளார்.

அமெரிக்க இளைஞர்கள்…
ஆப்பிரிக்கப் பெண் விவசாயிகள்…

அமெரிக்க இளைஞர்களிடையே முருங்கையைப் பிரபலப்படுத்திய ஒரு சிலரில் ‘குலி குலி’ என்ற நிறுவனத்தின் நிறுவனர் லிசாவும் ஒருவர். இவரின் நிறுவனம் மூலம் முருங்கை மதிப்புக்கூட்டுப் பொருள்களை சுமார் 11,000 கடைகளுக்கு விநியோகம் செய்து வருகிறார். முருங்கையை மூலப்பொருளாகக் கொண்டு தயார் செய்யப்படும் சாக்லேட் வகைகளை இளைஞர்கள் மத்தியில் பிரபலப்படுத்தி வருகிறார். ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் பெண் விவசாயிகளைத் தன்னுடன் இணைத்துக்கொண்டு முருங்கை விவசாயம் செய்து வருகிறார். ‘சிறந்த பெண் நிறுவனர்’ என்ற விருதைப் பெற்றவர்.

லிசா
லிசா

செலவில்லாமல் கிடைத்த சத்துக்கள்…
நாம் பாரம்பர்யமாக முருங்கையின் இலைகளைச் சமைத்து சாப்பிடுவது வழக்கம். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு வீட்டுச் சமையலிலும் வாரத்தில் ஒரு நாளாவது முருங்கைக்கீரை இடம்பெற்றது. இதனால் உடலுக்குத் தேவையான சத்துகள், செலவில்லாமல் கிடைத்தது. தற்போது நகரங்களில் மட்டுமல்ல, கிராமங்களிலும் முருங்கைக்கீரையின் பயன்பாடு மிகவும் குறைந்திருப்பது கவலைக்குரிய விஷயம்.

“நாங்கள் ஓர் உன்னத உலகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அதில் எல்லோரும் முருங்கையின் அற்புத ஊட்டச்சத்துக்களைப் பற்றித் தெரிந்துகொள்வர். முருங்கையின் பயன்பாட்டை முழுமையாக மீட்டுருவாக்கம் செய்யும்போது, நமது புதிய சந்ததியினர் பசியற்ற சமூகத்தைப் பார்ப்பார்கள்” என்கிறார் லிசா. அவரது முருங்கை பயணம் தமிழகத்தின் வேளாண் குடிகளிலிருந்துதான் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

முருங்கை விதை
முருங்கை விதை

முருங்கை விதை
தென்னிந்திய உணவில் பெரும்பாலும் ‘முருங்கைக்காய்’ மட்டுமே அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக முருங்கைக் கீரை சமைக்கப்படுகிறது. சிலர், முருங்கைப்பூவைப் பயன்படுத்தி ரசம் மற்றும் சூப் தயார் செய்து அருந்துகிறார்கள். உலகின் மற்ற நாடுகளிலோ.. முருங்கை விதை மற்றும் இலை அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

https://www.vikatan.com/agriculture/american-company-researched-moringa-health-benefits?utm_source=magazine-page

About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply