சிங்கள – பவுத்தம் & சிறிலங்காவின் தேசிய அரசும்

சிங்கள – பவுத்தம் & சிறிலங்காவின் தேசிய அரசும்

லூசியன் அருள்ப்பிரகாசம்

எங்கள் மரபணுப் பொதுமைகள்

பேராசிரியர் காமினி தென்னக்கோன் மற்றும் பிறரால் நடத்தப்பட்ட மரபணு (DNA) ஆய்வுகள் மூலம் இது  (The Island  2019 பெப்ரவரி தேதியிட்ட அவரது கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது) எண்பிக்கப்பட்டுள்ளது.  சிங்களவர்  மற்றும் இலங்கைத்  தமிழர்களை ஒப்பிடுகின்ற பெரும்பாலான மரபணு ஆய்வுகள் அதிகளவு  மரபணு வேறுபாட்டைக் காட்டவில்லை. இது இரு மக்கள்தொகைகளும் தீவுக்குச் சொந்தமான ஒரு பொதுவான வம்சாவளியைக் கொண்டுள்ளன என்பதைக் காட்டுகிறது. மேலும், “மரபணுக் கலவை பற்றிய ஆய்வில், வடகிழக்கு இந்தியாவின் வங்காள மக்களுடன் (25.41%)  ஒப்பிடும்போது தென்னிந்தியாவின் தமிழர்களிடமிருந்து (69.86%) இலங்கை சிங்களவர் அதிக பங்களிப்பைப் பெற்றுள்ளனர்.  இதிலிருந்து மூன்று முடிவுகள் வெளிப்படுகின்றன. முதலாவதாக, சிங்களவர்களும் தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்றும் பெரும்பாலானவர்கள்  திராவிட வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் (69.8%). இரண்டாவதாக, இலங்கைத் தமிழர்கள் இலங்கையில் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர் – ஏனெனில், இந்த ஆய்வின்படி,  இலங்கைத் தமிழர்கள் இந்தியத் தமிழர்களை விட சிங்கள மக்களுடன் நெருங்கிய மரபணு தொடர்பைக் காட்டி யுள்ளனர். மூன்றாவதாக, இலங்கைத்  தமிழர்கள் மரபணு ரீதியாக சிங்களவர்களைப் போலவே இலங்கையர்களாக உள்ளனர். இலங்கைத் தமிழர்களை தென்னிந்திய் தமிழர்களுடன் அரசியல் உள்நோக்கத்துடன் பிணைப்பது  இந்த உண்மையை மாற்ற முடியாது.

மேற்கூறிய மரபணு ஆய்வுகளின் முடிவுகள் (இலங்கையில் பிறந்த) மானுட வியலாளர்களாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் (Princeton University (USA)  மானுடவியல் பேராசிரியர் கணநாத் ஒபேசேகரா கூறுகிறார்: கிமு 500 க்கு முந்தைய பழமையான குடியேற்றவாசிகளைத் தவிர, இலங்கையில் அடுத்து வந்த குடியேற்றவாசிகள் அனைவரும் தென்னிந்தியா விலிருந்து வந்தனர், பெரும்பாலும் தமிழ்நாடு, ஒரிசா மற்றும் கேரளாவிலிருந்து வந்தவர்கள். இவர்கள் விரைவாக சிங்களவர்களாக மாறினர். உண்மையில், சிங்கள மக்களிடையே மிகக் கடுமையாக தமிழ் எதிர்ப்புக் குரல் எழுப்பிய சாதியினர் தென்னிந்தியாவிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிந்தைய காலத்தில் புலம்பெயர்ந்தவர்கள் ஆவர். இதற்கு நேர்மாறாக, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குக் கடற்கரையில் உள்ள தமிழர்கள் குறைந்தது இலங்கையில் கிபி பத்தாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை இருந்துள்ளனர். இதே கருத்தை அமெரிக்கா வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தின்  (University of Virginia (USA), மானுடவியல் பேராசிரியர் செனிவரத்தினவும் எதிரொலிக்கிறார்.   இதை விடவும் மேலே சென்று  அவர் கூறியதாவது: பரந்த கண்ணோட்டத்தில், துணைக் கண்டத்தில் உள்ள மக்களின் இன- குடிப்பரம்பலைப் பார்த்தால், சிங்களர்கள் தென்னிந்தியாவின் பிற இன மற்றும் மொழிக் குழுக்களைப் போலவே சிங்களவர்களும் பலவகையான தமிழர்கள் என்பது மிகவும் வெளிப்படையானது – குறிப்பாக, பவுத்தம்   வடக்கில் இருந்து மறைந்த பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரும்  தென்னிந்தியாவில் தான் பவுத்த மதம் உயிர் பிழைத்திருந்தது என்ற உண்மையை சிங்கள பவுத்தர்கள் மறந்துவிட்டது வியக்கத்தக்கது”   (The Island, Jan 2014)  என்றார்.   இலங்கையில் உள்ள பல தமிழர்கள் குறைந்தது கிபி 500 வரை பவுத்தர்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கூறிய ஆய்வுகளின் அடிப்படையில்,  தனிச் சிங்கள பவுத்தர்களால் ‘தங்கள் நாட்டிற்கு’ திரும்பிச் செல்லுமாறு கோரப்பட்ட  மூன்று வெவ்வேறு இலங்கை தமிழர்களிடமிருந்து கட்டுரையாளர் அறிந்திருப்பது விந்தையானது. சிங்கள மக்கள் உன்னதமான பவுத்த மதத்தை/தத்துவத்தை தழுவிக் கொண்டதன் மூலம் தங்களை வேறுபடுத்திக் கொண்டுள்ளனர். எனினும், நாம் இனம் பற்றி மட்டுமே பேசினால், சிங்கள மக்களும் ‘தங்கள் நாட்டுக்குத்’ திரும்பிச் செல்ல வேண்டும் எனக் கேட்க நேரிடும்.  சிங்களவர்கள் இந்தத் தீவுக்கு இனம் மற்றும் மதம் சார்ந்த உரிமை கோரல் மகாவம்சத்தின் ஐயத்துக்குரிய உரையில்  மட்டுமே உள்ளது.  மகாவம்சம் பலரால் மறுக்கப்படுகிறது.     

இந்த கட்டுரையின் எஞ்சிய பகுதி சிறுபான்மையினருக்கு இலங்கையின் பரம்பரை உரிமையை மறுத்துப்  பெரும்பான்மை சமூகம் எவ்வாறு இந்த நாட்டைத் தனக்கு மட்டுமே சொந்தமானது என்று கடத்த முயற்சிக்கிறது என்பதைக் காண்பிக்க முயல்கிறது. இலங்கைத் தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தீவில் வாழ்ந்து வருகின்றனர். இதனால் சிறுபான்மையினர் தங்கள் லங்கா பாரம்பரியத்தை மறுக்கிறார்கள். இலங்கை தமிழர்கள் இந்த தீவில் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். சிங்களவர்கள் தென்னிந்தியாவில் இருந்து பின்னர் சிங்களமயமாக்கப்பட்ட மக்களைக் கொண்டுவந்த அதே குடியேற்றத்தின் ஒரு பகுதியாகத் தெரிகிறது. 

நாங்கள் இந்தத் தீவுக்கு யார் முதலில் வந்தார்கள் என்பது பற்றிப் பேசவில்லை. நாம் தீவில் ஏற்கனவே உள்ள இரண்டு சமூகங்கள்/ நாடுகள் மற்றும் அவற்றுக்கிடையே உறவு என்னவாக   இருக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பேசுகிறோம். ஆங்கிலேயர்கள்தான் தமிழர்களை சிங்களவர்களுடன் சேர்த்து ஒரு ஒற்றை ஆட்சி முறைமையின்  கீழ் கொண்டுவந்து  அனைத்து அரசியல் அதிகாரத்தையும் ஒரு சமூகத்தின் கைகளில் (ஒரேயொரு சமூகத்தின் கைகளில்)  ஒப்படைத்தனர். இது உண்மையில் எங்களைப் பிரித்து விட்டது. இலங்கை ஒரு தேசமாக இருந்தது என்ற நம்பிக்கையில் செயற்பட்ட பிரித்தானியர்கள், சிங்கள – பவுத்த பெரும்பான்மையினர் அரசைக் கைப்பற்றுவதற்கு இலகுவான வழியை ஏற்படுத்திக் கொடுத்து, நாடாளுமன்ற அமைப்புடன் இணைந்து ஒற்றையாட்சியின் எல்லைகளை அமைத்தனர். திசாராணி குணசேகர அவர்கள்  “சிங்கள-பவுத்தத்தால் நாம் இழந்த நாடு” என்ற தலைப்பில் எழுதிய புதுமையான கட்டுரையில் (Groundviews, February 7, 2023) சரியாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.  அவர் அனைத்து நாடுகளின் கண்ணோட்டத்திலிருந்தும் எழுதுகிறார், இது மிகவும் அவசியம். நான் சிறுபான்மையினரின் கண்ணோட்டத்தில் இருந்து  எழுதுகிறேன். ஆங்கிலேயர்கள் சிறுபான்மையினரை சிங்களவர்கள் போலவே ஒரே கொலனித்துவக் கூண்டில் (ஒற்றையாட்சி அரசு) வைத்துத் தமிழர்களை விடுதலை செய்யாமல் நிரந்தரமாக சிறையில் அடைத்து வைப்பதற்கு அவர்களுக்கு (சிங்களவர்களுக்கு) அதிகாரம் அளித்துள்ளனர்!

இலங்கையின் 5 மாகாணங்கள் – ஒக்தோபர் 01, 1833

சுதந்திரம் மற்றும் ஒரு அரசியல் சித்தாந்தமாக சிங்கள- பவுத்தத்தின் எழுச்சி

ஐரோப்பிய நாடுகளில்,    300 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இன, மதப் போட்டிகள்   போர்கள் மற்றும்  இரத்தக்களரிக்குப் பின்னர்  தீர்க்கப்பட்டன. அதன் பின்னர் அவை ‘தேசிய அரசுகள்’ (‘nation states’) ஆகத் தோற்றம் பெற்றன. அதன் பிறகு மக்களாட்சி மலர 300 ஆண்டுகள் ஆனது.  இலங்கையைப் பொறுத்தவரை, தற்போதுள்ள இன மற்றும் மத வேறுபாட்டுச் சிக்கல்கல்களை மறைப்பது அல்லது புறக்கணிப்பது அல்லது மறந்துவிடுவது என்ற நம்பிக்கையில் காலம் கடத்தப்பட்டது.    இதனால் சனநாயகப் போர்வையில்  ஒரு “தேச அரசை” பிரகடனப்படுத்தப்பட்டு மக்களாட்சியால் முடிசூட்டப்பட்டது.  இலங்கை ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்கும், சட்டத்தின் ஆட்சி மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் நாடாக இருக்கும் என்ற திரு. டி.எஸ். சேனாநாயக்காவின் உறுதிமொழியின் பேரில் இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டது. சிங்கள – பவுத்தம் ஒரு அரசியல் சித்தாந்த அடிப்படையில் அந்த உறுதிமொழியைக்  கைவிட்டு விட்டது.    இது சிங்கள – பவுத்த பெரும்பான்மையினரின் “அரசியலமைப்பு புரட்சிக்கு”  சமம் ஆகும்.  நாடு  மதச்சார்பற்ற நாடாக இருக்கும் என்ற அரசின் வாக்குறுதியை மீறி, தமிழர்களும் முஸ்லிம்களும் தங்களுக்கும் நாடு சொந்தமானது என்று அழைக்கும் அரசை (சிங்களவர்கள்)  கடத்தி விட்டனர்.   உண்மையில் ஆங்கிலேயர்கள் தமிழர்களை சிங்களவர்களுடன் ஒரே கொலனித்துவச் சிறைச்சாலையில் (ஒற்றையாட்சிக்குள்) அடைத்து, அவர்களை ஆளும் முழு அதிகாரத்தையும் சிங்களவர்களுக்கு வழங்கினர்! சிங்கள மக்கள் நாடாளுமன்றத்தை தங்களது பெரும்பான்மை வாக்குப் பலத்தால் முழுமையாகக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதால் ஒற்றையாட்சி கொலனித்துவச் சிறை ஒருபோதும் திறக்கப்பட மாட்டாது என்பதை உறுதி செய்யும். ஆங்கிலேயர்கள் நமக்கு விட்டுச் சென்ற ஒற்றையாட்சி அரசின் அனுமானத்தைக் கருத்தில் கொண்டுதான்  நாம் தொடங்குகிறோம் என்றாலும் நமது  சொந்த வரலாறு வேறு விதமாகக் கற்பிக்கிறது.

கொலனித்துவ எல்லைகள் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன

ஆங்கிலேயர்கள் நமது தற்போதைய எல்லைகளுடன் நம்மை விட்டுச் சென்றார்கள்.   நாம் அனைவரும் அதை இயல்பாகவே கருதுகிறோம்.  இருப்பினும் ஒரு காலத்தில், இலங்கை இந்தியாவின் சென்னை மாநிலத்தின் (இன்று தமிழ்நாடு) ஒரு பகுதியாக இருந்தது. ஆங்கிலேயர்கள் எங்களை  அப்படியே விட்டுச் சென்றிருந்தால், எங்கள் ஆட்சி மொழி தமிழாகவும், அதே நேரத்தில்  இந்தி நமது தேசிய மொழியாகவும் இருந்திருக்கும்! அதைச் சிங்கள மக்கள்  யாராவது ஏற்றுக் கொண்டிருப்பார்களா? ஆங்கிலேயர்கள் எங்களிடம் விட்டுச் சென்ற – ஒரு ஒற்றையாட்சி அரசில் இருந்து தொடங்குவோம். எவ்வாறாயினும், சிங்கள – பவுத்த மேலாதிக்கத்தின் எழுச்சியைக் கருத்தில் கொண்டு, தீவுக்கு முதல் குடியேற்றக்காரர்கள் (போர்த்துகீசியர்கள்) வந்தபோது எங்கள் எல்லைகள் அப்படியே இருந்திருந்தால் சிறுபான்மையினர் நிச்சயமாக நன்றாக இருந்திருப்பார்கள். ஏன் எப்போதும் ஆங்கிலேயர்  நமக்கு விட்டுச் சென்ற ஒற்றையாட்சி அரசின் எல்லையில் இருந்து தொடங்க வேண்டும் – வேறு வழி இல்லையா?

—————————————————————————————————————

சிங்கள – பவுத்தம் & சிறிலங்காவின் தேசிய அரசும் (2)

லூசியன் அருள்ப்பிரகாசம்

சிங்கள பவுத்த மேலாதிக்கத்திற்கான நிபந்தனைகளை உருவாக்குதல்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வெளியேறும் அவசரத்தில், பிரித்தானியர்கள் இலங்கையில் ஒரு தேசிய அரசை விட்டுச் செல்கிறோம் என்று நம்ப விரும்பினர். அவ்வாறு செய்ய அவர்கள் வேண்டுமென்றே தங்கள் வரலாற்றைத் தவறாகப் புரிந்து கொண்டனர்.

இரண்டாவதாக, பிரித்தானியர் (மற்றும் பிரெஞ்சுக்காரர்களும்) ஒரு ஒற்றையாட்சி அரசை விட்டுச் சென்றனர், அதை அவர்கள் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு மற்றும் நிர்வாக வசதிக்காக விரும்பினர். மறுபுறம், நாம் அமெரிக்க செல்வாக்கின் கீழ் இருந்திருந்தால், இலத்தீன் அமெரிக்காவில் உள்ள சில நாடுகள் செய்ததைப் போலவே, நாம் இன்னும் அதிக அரசியல் பகிரப்பட்ட அரசியலமைப்பை – அல்லது கூட்டாட்சி அரசியலமைப்பைப் பெற்றிருப்போம்.

மூன்றாவதாக, பிரித்தானியரும் பிரெஞ்சுக்காரர்களும் தாங்களாகவே வடிவமைத்த நாடாளுமன்ற அரசியலமைப்பை விட்டுச் சென்றனர்.  இலங்கையில், பெரும்பான்மை சிங்கள-பவுத்தர்கள் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவதற்கும், சிங்கள மட்டும் சட்டம் (1956) மூலம் நாட்டைப் பிளவுபடுத்துவதற்கும் சிறிது காலமே தேவைப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1972 இல் இயற்றப்பட்ட அரசியலமைப்பின் படி அங்கு சிங்களவர்கள் நிரந்தர மற்றும் ஏகபோக பெரும்பான்மையைக் கொண்டிருந்த நாடாளுமன்றத்துக்கு இறையாண்மை பாரப்படுத்தப் பட்டது.

நான்காவதாக, பிரித்தானிய அரசியலமைப்பில் உரிமைகள் சட்டவரைவு (Bill of Rights) இல்லை. எது எவ்வாறிருப்பினும், எமது அரசியலமைப்பின் கீழ் சிறுபான்மையினருக்கான பாதுகாப்புக்கள் நாடாளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மையால் இரத்து செய்யப்படலாம். இது சிங்கள பவுத்த கூச்சலை எழுப்புவதன் மூலம் (தமிழர்களை) எப்போதும் ஏமாற்ற முடியும். கூடுதலாக ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறை மூலம் இன்னும் அதிகமாக சாதிக்க முடியும் என்றால் அரசியலமைப்புப் பாதுகாப்புகளால் என்ன பயன்?

இறுதியாக பிரித்தானியர் ஒரு ஒற்றையாட்சியின் எல்லைகளை உருவாக்கினர்.

நமது அரசமைப்புச் சட்டத்தில் உள்ள மேற்குறிப்பிட்ட பாதிப்புகளை தேர்தல் பெரும்பான்மையினர் (சிங்களவர்) பயன்படுத்தி அரசின் தன்மையை அதன் சொந்தப் படிமத்திற்கு (மட்டும்) ஏற்ப மாற்றியுள்ளனர். இது இலங்கை தேசத்தை இன மற்றும் மத அடிப்படையில் பிளவுபடுத்தும் விளைவை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் ஜனநாயகம்’

எமது அரசியலமைப்பு யாப்புகள் அனைத்தும் ஜனநாயக நடைமுறையால் எழும் எந்தவொரு வகுப்புவாத வேறுபாடுகளையும் தீர்க்க முடியும் என்று மறைமுகமாகக் கருதின. மாறாக, ஒவ்வொரு பொதுத் தேர்தலும் நமது சமூக வேறுபாடுகளை அதிகப்படுத்தியுள்ளது. எதிர்பாராதவிதமாக, நாம் தேர்தல் ஜனநாயகத்தை மட்டுமே அடைந்துள்ளோம் – மீதமுள்ள ஜனநாயகத்தை அல்ல.

அண்மையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளின் பயனற்ற தன்மை உறுதிப்படுத்தப்பட்டது. அங்கு அனைத்து சிறுபான்மையினரும் அவருக்கு எதிராக வாக்களித்த போதிலும், ஜனாதிபதி கோட்டாபய தேர்ந்தெடுக்கப் பட்டார். எனவே சிறுபான்மையினர் வாக்களித்தாலும் சபிக்கப்படுவார்கள், வாக்களிக்கவில்லை என்றாலும் ஊழ்வழிப் பழிகேட்டுக்கு ஆளாவார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு முடிவுகள், எமது தீவில் வாழும் இரு தேசிய இனங்களுக்கிடையிலான பிரிவை உறுதியாகக் காட்டியது. இது தற்செயலான நிகழ்வு அல்ல. உண்மையில், கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் பிரபாகரன் நாட்டைப் பிளவுபடுத்த விரும்பிய அதே வழியில் இருந்தது. வடக்கும் கிழக்கும் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக உறுதியுடன் வாக்களித்தன. இது தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினர் 75 ஆண்டுகளுக்கு மேலாக ஒற்றையாட்சியில் சிங்களவர்களுடன் இணைந்து வாழ்ந்த போதிலும் அவர்கள் சிங்கள ஆட்சியின் கீழ் வாழ விரும்பவில்லை என்பதையும் காட்டுகிறது.

நியாயமாகச் சொல்வதானால், மேற்கூறிய அனைத்திற்கும் நேர்மாறக வாதிடலாம். தற்செயலாக தமிழர்கள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றிருந்தால், சிங்களவர்கள் செய்வதைப் போலவே அவர்களும் செய்திருப்பார்கள்: அனைத்து அதிகாரங்களையும் தங்களுக்குள் குவித்து, அரசையும் அவர்களைப் போலவே தோற்றமளிக்கச் செய்திருப்பார்கள். எனவே, இது ஒரு வகுப்புவாதப் சிக்கல்

 மட்டுமல்ல, அரசியலமைப்புச் சிக்கலும் கூட.

யாழ்.பல்கலையில் மோதல்: வேடிக்கை பார்த்த இராணுவம்! | எரிமலை

நமது ‘தேசிய அரசில்’ வெவ்வேறு நாடுகள்

தாங்கள் சிறுபான்மையினரிடமிருந்து வேறுபட்ட இனம், மதம், மொழி, கலாச்சாரம், பழங்கால பவுத்த பாரம்பரியம் கொண்ட இனம், வேறு தேசம் என்று முதலில் கூறிக் கொண்டவர்கள் சிங்களவர்களே. சிங்கள பவுத்த தேசியவாதத்தின் அரசியல் ஆதிக்கம் மூன்று கட்டங்களாக முன்னேறியுள்ளது. முதலாவது சிங்கள பவுத்த தேசியவாதத்தை இலங்கைத் தேசியவாதத்துடன் சமன்படுத்துவது. இரண்டாவது கட்டம் சிங்கள பவுத்த தேசியவாதத்தை இலங்கை அரசுடன் சமன்படுத்துவது. மூன்றாவது கட்டம் சிங்கள பவுத்தம், தமிழ் பேசும் வடக்கு, கிழக்கைக் கைப்பற்றுவதற்கு அரசின் பெயரால் செயற்படுவது. இதன் விளைவாக, ஆக்கிரமிப்பு இராணுவம் வேறு இனத்தைச் சேர்ந்தது என்று பெருமைப்பட்டுக் கொள்கிறது. அது ஆளப்படுவோரின் மொழியைப் (தமிழை) பேசுவதில்லை, அவர்களின் மதத்தைப் பின்பற்றுவதில்லை, ஆளப்படுபவர்களின் விருப்பத்திற்கு எதிராக ஆட்சி செய்யும் ஆக்கிரமிப்புப் படை உருவாகியிருக்கிறது. வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களின் வாழ்வில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக பலவற்றை விட்டுக்கொடுத்த தனிப்பட்ட சிங்களவர்களும் இருக்கிறார்கள் என்பது உண்மைதான்.

இலங்கையில் சிங்கள – பவுத்த தேசம் மட்டுமல்ல, சிங்கள மக்களிடமிருந்து இனம், மதம், மொழி மற்றும் கலாச்சார வேறுபாடுகளைக் கொண்ட இலங்கைத் தமிழ்த் தேசமும் இருப்பதுதான் சிக்கல். இந்த இலங்கைத் தமிழ்த் தேசியம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த போரினால் வலுப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்க சிங்களப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள்ளேயே (தமிழ் நா.உறுப்பினர்கள் எப்போதும் (சிங்களவர்களது) வாக்குப் பலத்தால் தோற்கடிக்கப்படுவார்கள்) அனுமதிக்கும் அரசியலமைப்பு முறைமையினால் ஆளப்படுவதை தமிழர்கள் விரும்பவில்லை. கிழக்கு மாகாணத்தில் தனித்துவமான மதம் மற்றும் கலாச்சாரம் கொண்ட அதிக அளவிலான முஸ்லிம் சமூகமும் உள்ளது. புலிகளினால் வெட்கக்கேடான முறையில் பாதிக்கப்பட்ட இந்த சமூகம், இப்போது சிங்கள – பவுத்த தேசியவாதத்தின் தாக்குதலை உணர்ந்துள்ளது. இலங்கையின் சோகம் என்னவென்றால், நமது பன்முக சமூகத்தின் யதார்த்தத்தை மறுப்பதும் – இந்த வேறுபாடுகளை இராணுவ வலிமை மூலமோ அல்லது கும்பல் வன்முறையால் தீர்க்க முடியும் என்று நினைப்பதுதான். அறகலய (போராட்டம்) இப்போது முடிந்துவிட்டது. சிங்களவர், தமிழர் அல்லது முஸ்லிம் என்ற வகையில் நமது தனி வகுப்புவாத அடையாளங்களுக்குள் மீண்டும் அடியெடுத்து வைக்க வேண்டிய தருணம் இது!

சிங்கள-பவுத்த மேலாதிக்கத்தின் கொள்கைகள் மற்றும் அரசியல்

மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்ற ரணில்! - Vanakkam London

அஸ்கிரியா மற்றும் மல்வத்த பவுத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அதிகாரப் பகிர்வுக்கான எந்தவொரு முயற்சியையும் தடை செய்துள்ளனர். இது வெறும் இனம் அல்லது அரசியல் அல்லது மதம் பேசுகிறதா? இவ்வாறு சிங்கள – பவுத்தத்தின் அரசியல் சித்தாந்தம் அரசியல் ரீதியாகவும், இன ரீதியாகவும், மத ரீதியாகவும் செயல்படுவதாகத் தெரிகிறது. மதகுருமார்களின் இப்படியான மக்கள் கவர்ச்சிக் கொள்கை, சர்வாதிகாரவாதம், இனவெறி மற்றும் வெளிப்படையான இராணுவவாதம் ஆகியவற்றின் கலவையானது இசுப்பானியா, இத்தாலி மற்றும் ஜெர்மனி நாடுகளில் இடம்பெற்ற பாசிசத்தின் எழுச்சி போன்றது.

சிங்கள அரசியல்வாதிகள் கூட்டாட்சி அல்லது அதிகாரப் பகிர்வை நிராகரிக்குமாறு சிங்களப் பெரும்பான்மையினரை நம்ப வைத்துள்ளனர். எவ்வாறாயினும், நமது ஒற்றையாட்சி அரசியலமைப்பு நாட்டைப் பிளவுபடுத்த மட்டுமே உதவியுள்ளது. போரால் இப்பகுதி ‘ஒருங்கிணைந்த’ போதிலும், மக்கள் முன் எப்பொழுதும் இல்லாதவாறு பிளவுபட்டுள்ளனர். இதுதான் நமது ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 75 ஆண்டுகள் கழிந்த நிலையில் கண்ட பலன்!

Ada Derana Tamil - செய்தி தலைப்பு - மகாநாயக்க தேரர்கள் அவசர கூட்டறிக்கை!  மேலும் வாசிக்க - http://ow.ly/e0fe50JV7kY | Facebook

ஜனநாயகத்தின் கீழ் நாட்டை ஒன்றாக வைத்திருப்பதற்கான ஒரே வழி அதிகாரப் பகிர்வு அல்லது கூட்டாச்சி முறை மட்டுமே. அப்படி இராணுவம் ஒன்றாக வைத்திருக்க முடியும் – ஆனால் எவ்வளவு காலத்துக்கு? இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் உரிமையை சிங்கள மக்களுக்குக் கடவுள் கொடுக்கவில்லை என்பதே இக்கட்டுரையின் முழு வாதமாகும். பிரித்தானியர் தங்களிடம் விட்டுச்சென்ற அதிகாரம், சுதந்திரத்தின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதியைக் காட்டிக் கொடுத்ததன் மூலம், அண்மைக் காலத்தில் உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்றதன் மூலம் – அரசின் உள் மற்றும் வெளி வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே அவர்களுக்கு இந்த அதிகாரம் உள்ளது.

மூன்று சாத்தியக் கூறுகள் மட்டுமே எஞ்சியுள்ளன:

1. இலங்கை தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு சுதந்திர நாடு.

2. ஒரு அதிகாரப் பகிர்வு அல்லது கூட்டாட்சி அரசு: இந்த விருப்பம் நாடு ஒரு ஜனநாயக நாடாகப் பிழைப்பதற்குக் கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பாகும்.

3. வடக்கிலும் கிழக்கிலும் அங்கு வாழும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக சிங்கள இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு, ஆட்சி செய்யும் ஒரு கொலனி ஆகும். சிங்கள மக்களின் நோக்கம் இதுவல்ல என்பதை நாம் அறிவோம். ஆனால் அதுதான் களத்தில் உள்ள யதார்த்தம் ஆகும்.

முதல் இரண்டு மாற்று வழிகள் நிராகரிக்கப்பட்டால், கடைசி மாற்று வழி மட்டுமே எஞ்சியுள்ளது. அது வேறு இனத்தைச் சேர்ந்தவன் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும், (தமிழ்) மக்களின் மொழியைப் பேசாத, தன் மதத்தைப் பின்பற்றாத, மக்களின் விருப்பத்திற்கு எதிராக ஆட்சி செய்யும் ஒரு இராணுவம் – உண்மையில் ஒரு ‘கொலனி’ என்பதன் வரையறை. சிங்கள பவுத்த அரசு வேண்டும் என்ற அதன் வேட்கை இனவாத, குறுங்குழுவாத, எதேச்சதிகார, இராணுவவாத, நிரந்தர மற்றும் ஊழல் நிறைந்த ஒரு அரசை உருவாக்கியுள்ளது என்பதை வாக்காளர்களில் பெரும்பான்மையினர் – அறகலய இருந்தாலும் – கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த முடிவுக்கு எதிராக வாக்களித்த இலங்கைத் தமிழர்கள், கட்டுப்பாட்டை மீறிச் சுழன்று கொண்டிருக்கும் ஒரு அரசில், சிங்களவர்களுடனான அதே கொலனித்துவக் கூண்டில் சிக்கித் தவிக்கின்றனர். (நிறைவு)

(ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை Colombo Telegraph என்ற இணையதளத்தில் வெளிவந்தது. அதனை https://www.colombotelegraph.com/index.php/sinhala-buddhism-the-nation-state-of-sri-lanka/ என்ற இணைய முகவரியில் படித்துக்கொள்ளலாம். தமிழாக்கம் நக்கீரன்)


About editor 2991 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply