அடுத்த பத்தாண்டுக்கு திமுக வை யாரும அசைக்க முடியாது

அடுத்த பத்து ஆண்டுகளுக்கு திமுக ஆட்சியை யாரும் அசைக்க முடியாது!

கனடா நக்கீரன்

கனடா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளில்  ஐந்தாண்டுக்கு ஓருமுறை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மாகாண நாடாளுமன்றத்துக்கும் உள்ளாட்சி மன்றங்களுக்கும் நாலாண்டுக்கு  ஒருமுறை குறிப்பிட்ட நாளில் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல்கள் மிக அமைதியாக நடந்து முடிந்துவிடும். வாக்குச்சாவடியைக்  கண்காணிக்க பொலீசார், துணை இராணுவம் எதுவும் கிடையாது.   பெரிய பரப்புரை கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் கிடையாது. வேட்பாளர்கள் வீடுகளுக்கு முன்னால்  தங்கள் பெயர், கட்சிப் பெயர் கொண்ட தட்டிகளை மட்டும் நட்டு வைப்பார்கள். முக்கியமான கட்சித் தலைவர்கள்  தொலைக்காட்சியில் தோன்றி  தங்கள்  கொள்கை, கோட்பாடு பற்றி மூன்றுமுறை விவாதம் நடத்துவார்கள். அவ்வளவுதான்.

cm-mk-stalin-on-dmk-government

வாக்களிக்க ஒரு படத்தோடு கூடிய அடையாள அட்டை மற்றும்  தேர்தல் ஆணையம் அனுப்பிய வரக்கு அட்டையைக் காட்டினால் போதும்.  கள்ள வாக்கு என்ற பேச்சுக்கு இடமில்லை. தேர்தல் சாவடிகளில் தேர்தல் முகவர்கள் என யாரும் இருக்க மாட்டார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில்  நிலமை முற்றிலும் வேறு. கோயில் திருவிழா போலவே தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா நடைபெறுகிறது. அடிமட்ட  வாக்காளப் பெரும் மக்களுக்கு பணம், சேலை, மூக்குத்தி, கொலுசு, மதுபானம், புரியாணி எனப் பணக்காரக் கட்சிகள்  வாக்காளர்களைக்  கவனிக்கின்றன. தேர்தல் ஆணையம் சாட்டுக்கு ஆங்காங்கே திடீர் சோதனையிட்டு பணம், சேலை எனக் கைப்பற்றுகிறார்கள்.  தமிழ்நாட்டைப் பற்றிச் சொன்னது முழு இந்தியாவுக்கும் பொருந்தும். கனடாவை எட்டிப்  பிடிக்க தமிழ்நாடு மற்றும் மாநிலங்களுக்கு ஒரு தலைமுறை ஆவது செல்லும் என நம்பலாம்.

இந்தியாவின் நிருவாக கட்டுமானம் பின்வருமாறு காணப்படும்.

undefined

பஞ்சாயத்து ஒன்றியம் அல்லது ஊராட்சி ஒன்றியம் (Panchayat Union or Block Development Office), இந்தியாவின், தமிழ்நாட்டில், 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி சட்டத்தின்படி வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்பட்டது.ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் கிராம ஊராட்சிகள் இயங்குகிறது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் 385 ஊராட்சி ஒன்றியங்களும், 12524 கிராம ஊராட்சிகளும் உள்ளது. அவற்றுள் நீலகிரி மாவட்டம் குறைந்த பட்சமாக நான்கு பஞ்சாயத்து ஒன்றியங்களும், விழுப்புரம் மாவட்டம் அதிக பட்சமாக 22 பஞ்சாயத்து ஒன்றியங்களையும் கொண்டுள்ளது.

ஊராட்சி ஒன்றியங்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி விரிவாக்க அலுவலர்கள், மேலாளர், கணக்காளர் மற்றும் உதவியாளர்கள் ஊராட்சி ஒன்றியக் குழுவின் தீர்மானங்களை நிறைவேற்றுவார்.

ஊராட்சி ஒன்றியங்கள் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரின் வழிகாட்டுதல்களின் படி இயங்குகிறது.

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல்  6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.  ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வட்டார உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வட்டார உறுப்பினர் பதவிகளுக்காக தேர்தல் நடைபெற்றது.

முதல் கட்டமாக, 78 மாவட்ட ஊராட்சி  வட்டார உறுப்பினர்கள், 755 ஊராட்சி  ஒன்றிய வட்டார உறுப்பினர்கள், 1,577 ஊராட்சி கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 12,252 ஊராட்சி  வட்டார  உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. முதற்கட்ட வாக்குப்பதிவில் 77.4 விழுக்காடு வாக்குப் பதிவானது. இரண்டாவது வாக்குப் பதிவில் 78.5 விழுக்காடு வாக்குப் பதிவானது.

இரண்டாம் கட்டமாக 62 மாவட்ட ஊராட்சி  வட்டார உறுப்பினர்கள், 626 ஊராட்சி ஒன்றிய  வட்டார உறுப்பினர்கள், 1,324 ஊராட்சி  தலைவர்கள் மற்றும் 10,329 ஊராட்சி  பஞ்சாயத்து வட்டார உறுப்பினர்களை  தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 34,65,724 வாக்காளர்கள்

வாக்களிக்க தகுதிபெற்றவர்கள் ஆவர். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி - அதிமுக

இரண்டு கட்டத் தேர்தலிலும் மொத்தம் 23,998 இடங்களுக்கு 79,433 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள்.

வாக்குகள் எண்ணும் பணி  ஒக்தோபர் காலை 8.00 மணிக்குத் தொடங்கினாலும் ஒக்தோபர் 13  நாள் வரை 90  விழுக்காடு வாக்குகளே எண்ணி முடிக்கப்பட்டு வெற்றியாளர்களின் பெயர்களும் கட்சியும் வெளியாகியுள்ளன. 

அட்டவணை 1

அட்டவணை 11

செவ்வாய்க்கிழமை காலை முதல் சிசிடிவி கண்காணிப்பின் கீழ் 74 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன. மேலே கொடுக்கப்பட்டுள்ள புள்ளிவிபரம் முழுமையானது அல்ல இறுதியானதும் அல்ல.
 

தமிழ்நாடு உள்ளூராட்சித் தேர்தலில்  நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின்  (VMI) 169 நிர்வாகிகள் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டு  115 (68 விழுக்காடு) இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றி பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஒன்பது மாவட்டங்களிலும், குறிப்பாக கல்லக்குறிச்சி, காஞ்சிபுரம், விழுப்புரத்தில் குறிப்பிடத்தக்க  தங்கள் செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளனர். இதுகாறும் விஜய் மக்கள் இயக்கம் ஆற்றிய மக்கள்  நற்பணிக்கான அறுவடை என இந்த வெற்றியை எடுத்துக் கொள்ளலாம்.

2019 இல் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போதே திமுக கணிசமான வெற்றியைப் பெற்றது. அப்போது தேர்தலைச் சந்தித்த 514 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 244 இடங்களிலும், 5,090 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 2,095 இடங்களிலும் தி.மு.க வெற்றிபெற்றது. 

விஜய் மக்கள் இயக்கம் இன்னமும் தேர்தல் ஆணையத்தில் ஒரு  அரசியலில் கட்சியாகப்  பதிவு செய்யப்படவில்லை. தேர்தல் பரப்புரையில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் இயக்கத்தின் பெயரையும் சின்னத்தையும் மட்டும் பயன்படுத்தினார்கள்.  இந்த வெற்றி விஜயின் அரசியல் வருகைக்கான கதவை அகலத் திறந்திருக்கிறநு.

இந்தத் தேர்தலில் மூத்த நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசனின்  கட்சியான மக்கள் நீதி  மையம் தமிழ்நாடு மாநிலத் தேர்தலில் படு தோல்வி அடைந்தது போல உள்ளூராட்சித் தேர்தலிலும் மண்ணைக் கவ்வியுள்ளது. இதனால் அந்தக் கட்சியின் எதிர்காலம் இருண்டுவிட்டது என்றே சொல்லலாம்.

சீமானின் நாம் தமிழர் கட்சியும் தேர்தலில் பலத்த தோல்வியைத் தழுவியுள்ளது. வந்தேறிகள் (தெலுங்கர், கன்னடர், மலையாளிகள்) வாழலாம் ஆனால் ஆளமுடியாது எனத் தமிழ்த் தேசியம் என்ற முகமூடியை அணிந்து கொண்டு சீமானும் அவரது தம்பிமாரும் பச்சை இனவாதம் பேசுவது  பாசீசம் ஆகும். கடந்த தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில் 6.8 விழுக்காடு வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

image


இந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி  அதிமுக தேர்தல் கூட்டணியில் இருந்து வெளியேறித் தனித்துப் போட்டியிட்டது. இதற்கான முக்கிய காரணம் வன்னியர்கள் வேலூர்,  காஞ்சிபுரம், விழுப்புரம், திருப்பத்தூர், தென்காசிஈ கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு  ஆகிய மாவட்டங்களில் பெரும்பான்மையான எண்ணிக்கையில் வாழ்கிறார்கள் என்பதே.  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாமக,  அஇஅதிமுக  கட்சியுடன் கூட்டணி வைத்து 23 தொகுதிகளில்  போட்டியிட்டு 5  தொகுதிகளில்  – மயிலம், சேலம் மேற்கு, தருமபுரி, பென்னாகரம், மேட்டூர்  – வெற்றி பெற்றது.  வெற்றிபெற்ற  ஐந்து  சட்டமன்ற உறுப்பினர்களும் வன்னியபுர் சமூகத்தைச்  சார்ந்தவர்கள் ஆவர்.  

நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, தேமமுக வெளியேறிய சூழ்நிலையில்  பாஜக வுடன் கைகோர்த்துக் கொண்டு களத்தில் இறங்கியது. கட்சியின் இணைப்பாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஊர் ஊராகச் சென்று  பரப்புரை செய்தார்கள்.  பாமக கட்சி வெறியேறினாலும் அதனால் இழப்பில்லை என்று அதிமுக சொல்லியது. சட்ட மன்றத் தேர்தலில் பாமக யோடு கூட்டணி வைத்ததால் தலித் வாக்குகள்  தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் அந்த நிலமை மாறும்  என்றும் அதிமுக தலைவர்கள் கூறினார்கள்.

ஆனால் தேர்தல் முடிவுகள் அதிமுக க்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. அதிமுக இன் கோட்டைகள் என நம்பப்பட்ட  பல உள்ளூராட்சி மன்றங்களில் அது தோல்வியைத் தழுவியுள்ளது. ஜெயலலிதா மற்றும் சசிகலா இருவருக்கும் சொந்தமான கோடநாடு மாளிகையில் 2017 ஆம் ஆண்டில் நடந்த கொள்கை, கொலைக்குப் பின்னால் எடப்பாடி பழனிச்சாமி இருந்தார் என்ற குற்றச்சாட்டு அதிமுக இன்  செல்வாக்கை வெகுவாகப்  பாதித்துள்ளது. மற்றது ஒரு நாடு ஒரு மொழி எனப் பறைசாற்றும் பாஜக வுடன் ஆன பொருந்தாக்  கூட்டணி.

ஆளுமையும் வசீகரமும் படைத்த ஜெயலலிதாவிற்குப் பிறகு அதிமுகவை வழிநடத்தும் எடப்பாடி  முழுத் தமிழகத்தும் ஆன தலைவராக தன்னை வார்த்தெடுக்கவில்லை. முன்னைய காலங்களில்  தென் மாவட்டங்களிலும் டெல்டாவிலும் முக்குலத்தோர் வாக்குக்கள் வழக்கமாக அதிமுகவிற்கு சென்றன. ஆனால் சசிகலா, தினகரன் பிரிந்த பின்னர் அதில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது.

மேலும் அதிமுகவில் இரட்டைத்  தலைமைக்கிடையே நிலவும் பனிப்போர், கட்சியின் அடிமட்டத் தொண்டர்களையும், மக்களையும் குழப்பியுள்ளது. மறுபக்கம் எடப்பாடி பழனிசாமியின் தன்முனைப்புக் காரணமாக சசிகலாவையும், தினகரனையும் அதிமுகவில் இணைக்க மறுக்கிறார்.  இதுபோன்ற பல பலவீனங்களால் அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயக்கம் காட்டியுள்ளார்கள்.  

திமுக  இந்தத் தேர்தலில் பாரிய வெற்றியை ஈட்டியுள்ளது. ஏறக்குறைய 80 விழுக்காடு இடங்களைக் கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்த காலத்திலும் திமுக  உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றிபெற்று வந்துள்ளது. மாநில சட்டசபைத் தேர்தலில் திமுக 505 வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. இதில் 205 வாக்குறுதிகளை இந்த ஐந்து மாதத்தில் நிறைவேற்றியுள்ளதாக  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுகிறார்.  1. மொத்தம் 2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.4,000  கொரோன நிவாரண நிதியுதவி. 2. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு. 3. மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம். 4. பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது போன்ற வாக்குறுதிகளைக் குறிப்பிடுகிறார்.   (https://www.hindutamil.in/news/tamilnadu/719769-cm-mk-stalin-on-dmk-government-19.html)

தமிழ்நாட்டு மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் நிறைய இருக்கிறது. தமிழகம் விவசாயம், தொழில் துறையில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும். அதற்கு  ஊழல், இலஞ்ச ஒழிப்பு. முக்கியமானது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதற்கிணங்க ஸ்டாலின் ஆட்சியிலும் இலஞ்சம் வாங்கும் உயர் அலுவலகர்கள், காவலர்கள்  பிடிபடுகிறார்கள். அரச ஊழியர்களுக்கு இலஞ்சம் கொடுக்காமல் எந்தக் காரியமும் நடவாது என்ற அவல நிலை தொடர்கிறது.  

நடந்து முடிந்த  தேர்தலில் எந்த மாவட்டத்துக்கும்  ஸ்டாலின் எந்தப் பரப்புரைக்கும்  போகவேயில்லை.   இது அவரது தன்னம்பிக்கையைக் காட்டுகிறது.

தாய் பத்தடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பர்கள். இந்தப் பழமொழியை ஸ்டாலின் நனவாக்கி வருகிறார். இந்த வேகத்தில் ஆட்சி தொடர்ந்தால் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு திமுக ஆட்சியை அசைக்க முடியாது!

————————————————————————————————————–

DMK and its allies sweep Tamil Nadu rural local body polls
DMK and its allies sweep Tamil Nadu rural local body polls

The election was held on October 6 and October 9 for nine newly reconstituted districts in Tamil Nadu.

The DMK and its allies are all set for a landmark victory in the rural body election held on October 6 and October 9 for nine newly reconstituted districts in Tamil Nadu. The counting of votes began on October 12. However, the results are yet to be officially declared by the state election commission. According to the latest numbers put out by the Tamil Nadu State Election Commission, DMK has bagged 139 District Panchayat Ward Member posts out of 153 while the ruling DMK’s opposition party AIADMK, won only two District Panchayat Ward Member posts. Meanwhile, Congress managed to win eight posts.

Further, for the Panchayat Union Ward Member Posts, DMK secured 974 seats out of the total 1,421 followed by AIADMK with 212 seats, Congress with 33 seats and BJP with eight seats. The DMK secured 89.54% of the seats in the district council, while the AIADMK secured 1.31%. The Congress managed to secure 5.23% of all district council seats. The PMK won 47 councillor seats, followed by AMMK with four and the DMDK with one. The rest of the parties who contested including Seeman’s NTK and actor-politician Kamal Haasan’s MNM could not secure a single seat.

Interestingly, the ‘Third Front’ or rather parties like Kamal Haasan’s MNM, actor-director Seeman’s NTK, TTV Dhinakaran’s AMMK, S Ramadoss’ PMK, and actor-turned-politician Vijayakant’s DMDK fared poorly. “The drubbing by the people of these vote splitters is a clear message. Either they are part of a Dravidian movement or else they perish. Independent political parties cannot survive in Tamil Nadu and they can exist only as coalition partners of either of the major parties, the DMK or the AIADMK,” political analyst and a private college professor from Chennai, Dr Uma Maheshwari told IANS.

All the parties, in the run-up to the elections, had expressed high confidence in their winning prospects but the results proved otherwise. C Rajeev of Chennai think tank, Centre for Policy and Development Studies, told IANS that it “is high time leaders of these political parties including Kamal Haasan understand that unless a party has a proper electoral policy and a manifesto, people will not support them.”

(With IANS inputs)

https://www.thenewsminute.com/article/dmk-and-its-allies-sweep-tamil-nadu-rural-local-body-polls-156540

——————————————————————————————————————–

“விலைக்கு வாங்கிய தி.மு.க!” – “காணாமல்போன அ.தி.மு.க!” – முடிவுக்கு வந்த உள்ளாட்சிப் பஞ்சாயத்து

ஜூனியர் விகடன் – RAJASEKARAN K

ஸ்டாலின்

ஸ்டாலின்

அ.தி.மு.க கூட்டணியிலிருந்து பா.ம.க பிரிந்து சென்றதால், அதுவும் ஒருவிதத்தில் எங்களுக்கு வசதியாகிவிட்டது. தேர்தல் அறிவித்த நாள் முதலே, களத்தில் தொண்டர்கள் வேகம் காட்டினர்.பிரீமியம் ஸ்டோரி

ஒன்பது மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், ஆளுங்கட்சியான தி.மு.க பெருவாரியான இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. பிரசாரத்துக்கு, தான் செல்லாமலேயே இந்த வெற்றி கிடைத்திருப்பதால், “ஐந்தாண்டுகளில் செய்யவேண்டிய சாதனையை ஐந்து மாதங்களில் செய்ததற்குக் கிடைத்த வெற்றி” என்று புல்லரித்துப் பேசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் ‘தி.மு.க செய்த பண விநியோகம், வன்முறைகளால்தான் இந்த வெற்றி சாத்தியமானது’ எனக் குற்றம்சாட்டுகிறது அ.தி.மு.க வட்டாரம். அதேநேரத்தில், `கெளரவமான எண்ணிக்கையாவது பெறுவார்கள்’ என எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க மொத்தமாகச் சுருண்டுவிட்டது. இரண்டு முன்னாள் முதல்வர்கள் சுற்றிச் சுழன்று பிரசாரம் செய்தும், அந்தக் கட்சியைக் கரைசேர்க்க முடியவில்லை. இந்த ஒன்பது மாவட்டங்களிலுள்ள 140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில், இரண்டில் மட்டுமே அ.தி.மு.க-வால் வெற்றிபெற முடிந்திருக்கிறது. 138 இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றியைத் தட்டிச் சென்றுள்ளது. முதல்வர் அரியணைக்கான கனவிலிருந்த பா.ம.க-வின் பிம்பத்தையும் மொத்தமாக உடைத்திருக்கிறது இந்த உள்ளாட்சித் தேர்தல். ‘இந்தத் தேர்தல் முடிவை வைத்து மட்டும், தமிழக அரசியல் களத்தில் தி.மு.க-வை முன்னிலைப்படுத்திவிட முடியுமா? அ.தி.மு.க., பா.ம.க சுருண்ட பின்னணி என்ன?’ எனப் பல கேள்விகளை இந்தத் தேர்தல் முடிவுகள் உருவாக்கியுள்ளன.

தேர்தல் முடிவுகள் குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க மூத்த அமைச்சர் ஒருவர், “பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுங்கட்சி என்கிற அந்தஸ்தை தி.மு.க பெற்றுள்ளது. அதேநேரம் கட்சியில் கீழ்நிலையிலுள்ள நிர்வாகிகள் எந்தப் பதவியிலும் இல்லாமல் இருந்தனர். அவர்களுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தல் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. 2019 ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போதே, தி.மு.க கணிசமான வெற்றியைப் பெற்றது. அப்போது தேர்தலைச் சந்தித்த 514 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 244 இடங்களிலும், 5,090 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 2,095 இடங்களிலும் தி.மு.க வெற்றிபெற்றது. அந்த வெற்றி, தற்போதும் தொடர்கிறது. முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் போன்ற ஸ்டார் முகங்கள் பிரசாரத்துக்குச் செல்லாமலேயே இந்த வெற்றி எங்களுக்குச் சாத்தியமாகியிருக்கிறது.

“விலைக்கு வாங்கிய தி.மு.க!” - “காணாமல்போன அ.தி.மு.க!” - முடிவுக்கு வந்த உள்ளாட்சிப் பஞ்சாயத்து

அ.தி.மு.க கூட்டணியிலிருந்து பா.ம.க பிரிந்து சென்றதால், அதுவும் ஒருவிதத்தில் எங்களுக்கு வசதியாகிவிட்டது. தேர்தல் அறிவித்த நாள் முதலே, களத்தில் தொண்டர்கள் வேகம் காட்டினர். மாவட்டவாரியாக அமைச்சர்களுக்குப் பொறுப்புகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. சட்டமன்றத் தேர்தல் கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்ந்ததால், கூட்டணிக் கட்சியினருடன் இணக்கமான போக்கு இருந்தது. சில இடங்களில் மட்டும் சீட் கிடைக்காத விரக்தியில் கூட்டணிக் கட்சியினரும், தி.மு.க-வைச் சேர்ந்தவர்களும் தனித்துக் களமிறங்கினார்கள். இதனால், தி.மு.க-வுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. திட்டமிட்ட முறையில் தி.மு.க பணியாற்றியதும், எதிர்க்கட்சிகளை எளிதாகக் கையாண்டதுமே இந்த வெற்றிக்குப் பிரதான காரணம். சரியான தலைமையும் இல்லாமல், திட்டமிடலும் இல்லாததால் இந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க காணாமல்போய்விட்டது” என்றார்.

“விலைக்கு வாங்கிய தி.மு.க!”

வெற்றிக்கான காரணங்களை இப்படி தி.மு.க தரப்பு அடுக்கினாலும், அதைத் தாண்டிய சில விமர்சனங்களும் அ.தி.மு.க-வால் முன்வைக்கப்படுகின்றன. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோதே அறிக்கை வெளியிட்ட அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள், “வரலாறு காணாத வன்முறையையும், ஜனநாயக அக்கிரமங்களையும் தி.மு.க கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. புறவாசல் வழியாக இந்த வெற்றியை தி.மு.க பெற்றிருக்கிறது” என்று காரசாரமாகவே கூறியிருந்தனர். உள்ளாட்சித் தேர்தலின்போது ஆளுங்கட்சியின் கை ஓங்குவதும், எதிர்க்கட்சிகள் திணறுவதும் வழக்கமானதுதான். ஆனால், இந்தமுறை 100 சதவிகித வெற்றி இலக்கை முதல்வர் ஸ்டாலின் கண்டிப்போடு கூறியதால், தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் சகல வித்தைகளையும் களமிறக்கியிருக்கிறார்கள்.

நம்மிடம் பேசிய அ.தி.மு.க வட மாவட்டச் செயலாளர்கள் சிலர், “ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட தி.மு.க அமைச்சர்கள், சட்டமன்றத் தேர்தலுக்குச் செய்யும் செலவில் முக்கால் பங்கை உள்ளாட்சித் தேர்தலுக்குச் செலவு செய்தனர். ஒரு ஒன்றிய கவுன்சில் வேட்பாளருக்கு 10 லட்சம், மாவட்ட கவுன்சில் வேட்பாளருக்கு 20 லட்சம் ரூபாய் வரை செலவுக்கு தி.மு.க தலைமை கொடுத்தது. இதுபோக, வாக்காளர்களுக்குச் செய்து கொடுத்த ‘வசதி’ வகையறாக்கள் தனி. உதாரணத்துக்கு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு பூத்துக்கு தினமும் 30,000 ரூபாய் வரை தி.மு.க-வினர் பணத்தை இறக்கினார்கள். தென்காசி மாவட்டத்தில் ஒரு ஓட்டுக்கு 500 லட்டுகள் வரை கொடுக்கப்பட்டன. இதுபோக, சில அ.தி.மு.க நிர்வாகிகளுடனும் தி.மு.க-வினர் ‘அண்டர்ஸ்டேண்டிங்’ போட்டுவிட்டனர்.

அ.தி.மு.க-வுக்கு என கணிசமான வாக்குகள் கொண்ட திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலேயே அனைத்து மாவட்ட கவுன்சிலர் இடங்களையும் தி.மு.க கூட்டணி தட்டிச் சென்றிருக்கிறது. வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களிலும் தி.மு.க வெற்றிபெற மறைமுகமாக அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரே உதவியிருக்கிறார்கள். அனைத்து மட்டங்களையும் பணத்தால் தி.மு.க விலை கொடுத்து வாங்கிவிட்டதால், இந்த வெற்றி அவர்களுக்குச் சாத்தியமாகியிருக்கிறது” என்றனர் கோபமாக.

“காணாமல்போன அ.தி.மு.க!” – காரணம் என்ன?

ஒருபக்கம் தி.மு.க வெற்றிக் கூச்சலிடும்போது, மற்றொருபுறம் அ.தி.மு.க-வில் கோபக் குரல்கள் ஒலிக்கின்றன. செலவுக்குப் பணம் தரவில்லை என்பதில் ஆரம்பித்து, தலைமையில் ஒருங்கிணைப்பு இல்லாதது வரை சகலமும் அ.தி.மு.க-வில் சர்ச்சையாகியிருக்கின்றன. கட்சி நிர்வாகிகளுக்குள் உரசல் ஏற்படும்போதெல்லாம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற வலிமையான தலைவர்களிடமிருந்து, “கட்சிக்குத் தொண்டர்கள்தான் ஆணிவேர். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்” என்று அறிவுரைகள் வரும். ஆனால் இன்று, “தலைவர்கள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து, கட்சியை வழிநடத்த வேண்டும்” என்று தொண்டர்கள் அறிவுரை சொல்லும் அளவில் இருக்கிறது. “இரட்டைத் தலைமைக்குள் ஏற்பட்ட இந்த மனமாச்சர்யம், கழக நிர்வாகிகளையும் சோர்வடையவைத்ததோடு, உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-வைக் காணாமல்போகச் செய்துவிட்டது” என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.

நம்மிடம் பேசிய அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் ஒருவர், “தேர்தலைச் சந்தித்த மாவட்டங்களில் ஆறேழு பேர்கொண்ட குழுக்களைக் கட்சித் தலைமை நியமித்தது. கட்சி வேட்பாளர்களின் செலவுக்கு உதவுவார்கள் என்பதற்காகவே, அ.தி.மு.க ஆட்சியில் வளமான துறைகளை வைத்திருந்த முன்னாள் அமைச்சர்கள் இந்தக் குழுக்களில் நியமிக்கப்பட்டனர். ஆனால், இவர்கள் யாரும் கடைசி வரை தங்கள் பர்ஸைத் திறக்கவே இல்லை. தேர்தல் நடந்த மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைக் கூட்டத்துக்கு வரும்போது, அவருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தவர்கள், அவர் கிளம்பிச் சென்ற அடுத்த நிமிடமே காணாமல்போய்விட்டார்கள். மாவட்ட அளவில் வேட்பாளர்கள் தேர்விலும் குழப்பம் இருந்தது. தி.மு.க-வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் பம்பரமாகச் சுற்றிப் பணியாற்றிய நேரத்தில், மாஜி அ.தி.மு.க அமைச்சர்கள் அதை வேடிக்கை மட்டுமே பார்த்தனர். ‘தலைவர்களே இப்படி அமைதியாக இருக்கும்போது, நாம் ஏன் களப்பணியாற்ற வேண்டும்?’ என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க தொண்டர்களும் சோர்ந்துவிட்டனர்.

தேர்தலைச் சந்தித்த 1,421 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களில், சுமார் 200 இடங்களை மட்டுமே அ.தி.மு.க வென்றிருக்கிறது. அதாவது, 14 சதவிகித வெற்றியைத்தான் அடைந்திருக்கிறது. மாவட்ட கவுன்சிலர் இடங்களில் விழுப்புரம், செங்கல்பட்டில் மட்டும் தலா ஓரிடத்தைக் கைப்பற்றியிருக்கிறோம். தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களிடம் செலவுக்குப் பணம் கேட்டபோது, ‘நாங்களே கடனில் இருக்கிறோம். எங்ககிட்ட எங்கப்பா காசு?’ என்றுவிட்டனர். சொந்தச் செல்வாக்கிலும், கைக்காசைச் செலவுசெய்து தேர்தல் களத்தில் களமாடியவர்களே ஜெயித்திருக்கிறார்கள். இந்த வெற்றியை அ.தி,மு.க தலைமையின் வெற்றியாக ஒருபோதும் கருத முடியாது” என்றார்.

அ.தி.மு.க-வின் இந்தப் பின்னடைவு, ஒருவகையில் சசிகலா எதிர்பார்த்ததுதான். இந்தச் சூழல் சசிகலாவுக்குச் சாதகமாகியிருக்கிறது. “அக்டோபர் 16-ம் தேதி ஜெயலலிதா சமாதிக்குச் செல்லவிருக்கும் சசிகலா, பத்தாயிரத்துக்கும் அதிகமானோரைக் கூட்டிவிடும் பட்சத்தில், அதைவைத்தே அ.தி.மு.க-வுக்குள் ஒரு கலக்கத்தை உருவாக்கிவிட நிறைய வாய்ப்பிருக்கிறது” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

பிம்பம் உடைந்த பா.ம.க!

பெரிய கட்சிகளுக்கு இணையாக, இந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே களமிறங்கியது பா.ம.க. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், “மற்ற கட்சிகள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பா.ம.க தொடங்கப்படவில்லை. அடுத்தது தமிழகத்தில் பா.ம.க-வின் ஆட்சிதான். அதற்கான முன்னோட்டம்தான் இந்த உள்ளாட்சித் தேர்தல்” என்று பிரகடனம் செய்தார். தேர்தலைச் சந்தித்த ஏழு மாவட்டங்களில் பா.ம.க-வுக்கு என கணிசமான செல்வாக்கு இருந்ததால், அன்புமணியின் பேச்சுக்கு எதிர்பார்ப்பும் எழுந்தது. பெரிதாக ஊதப்பட்ட பலூன் ஒரு கட்டத்தில் வெடித்துவிடுவதுபோல, பா.ம.க கட்டியமைத்த இந்த பிம்பமும் உள்ளாட்சி முடிவுகளால் நொறுங்கிப்போய்விட்டது.

வட மாவட்டங்களில் வலுவான கட்சியாகத் தன்னை முன்னிறுத்தும் பா.ம.க., மாவட்ட கவுன்சிலர் இடங்கள் எதையும் கைப்பற்றவில்லை. ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சீட்களில்கூட, ஐந்து சதவிகித இடங்களைத்தான் கைப்பற்றியிருக்கிறார்கள். அ.தி.மு.க-வினருடன் பா.ம.க-வினர் ‘அண்டர்ஸ்டேண்டிங்’ போட்டுக்கொண்ட இடங்களிலும், தி.மு.க-வினர் உள்ளே புகுந்து அ.தி.மு.க நிர்வாகிகளை வசமாக்கிக்கொண்டதால், மாம்பழம் பழுக்கவில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி, சோளிங்கர், அரக்கோணம் ஊராட்சி ஒன்றியங்களிலும், விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர், மரக்காணம், வானூர், வல்லம் ஒன்றியங்களிலும், வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்திலும் கவனிக்கத்தக்க வெற்றியை பா.ம.க-வினர் பெற்றிருக்கிறார்கள். மீதமுள்ள இடங்களில் சுமாருக்கும் கீழேதான் ‘மார்க்’ வாங்கியிருக்கிறது அந்தக் கட்சி.

கவனம்பெற்ற விஜய் மக்கள் இயக்கம்!

பா.ம.க-வைப்போல இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துக் களமிறங்கிய நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., தே.மு.தி.க கட்சிகளின் வெற்றி விகிதாசாரம் தி.மு.க-வோடு ஒப்பிடும்போது பஸ்பமாகிவிட்டன. ராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுத்தாக்கு பஞ்சாயத்தைக் கைப்பற்றியிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் அருண். இதுபோக, 20-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்களையும் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் பிடித்திருக்கிறார்கள். இதைத் தாண்டி ஒரு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சீட்டைக்கூட அவர்களால் பெற முடியவில்லை. அ.ம.மு.க-வினரோ, ஐந்து ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களைப் பெற்றிருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யத்தின் நிலைமைதான் படுமோசம். கட்சி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் எவரும் வெற்றிபெறவில்லை. கட்சியின் கட்டமைப்புகள் கலகலத்துப்போயிருப்பதால் தள்ளாடியிருக்கிறது அக்கட்சி.

“விலைக்கு வாங்கிய தி.மு.க!” - “காணாமல்போன அ.தி.மு.க!” - முடிவுக்கு வந்த உள்ளாட்சிப் பஞ்சாயத்து

இந்தத் தேர்தலில் கவனிக்கத்தக்க வெற்றியை விடுதலைச் சிறுத்தைகள் பெற்றிருக்கிறார்கள். போட்டியிட்ட நான்கு மாவட்ட கவுன்சிலர் சீட்களில், மூன்றில் வெற்றிபெற்றிருக்கிறது அக்கட்சி. அதேபோல, 43 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சீட்களில் போட்டியிட்டு 27 இடங்களைப் பெற்றிருக்கிறார்கள். செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் பாராட்டத்தக்க வெற்றியை வி.சி.க அடைந்திருக்கிறது. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் வீடு அமைந்திருக்கும் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் பெரும்பான்மை இடங்களை அவர் கட்சி கைப்பற்றியிருக்கிறது. இதுபோக, காஞ்சிபுரம் மற்றும் தென்காசியில் தலா ஒரு மாவட்ட கவுன்சிலர் இடத்தையும் ம.தி.மு.க கைப்பற்றியிருக்கிறது. காங்கிரஸ் எட்டு மாவட்ட கவுன்சிலர், 33 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களிலும், பா.ஜ.க எட்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களிலும் வெற்றியைச் சுவைத்திருக்கிறார்கள்.

நடிகர் விஜய்யின் ‘விஜய் மக்கள் இயக்கம்’ போட்டியிட்ட 169 இடங்களில் சுமார் 120-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்றதாகக் குறிப்பிடுகிறார்கள். 114 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளையும், வானூர் ஒன்றியத்துக்குட்பட்ட எறையூர் பஞ்சாயத்தையும் கைப்பற்றியதாக மார்தட்டுகிறது அந்த இயக்கம்.

மொத்தமாகப் பார்க்கும்போது, இந்த உள்ளாட்சித் தேர்தல் தி.மு.க-வுக்கு ‘பூஸ்ட்’ அளித்திருக்கிறது. வெற்றிக் களிப்பில் விரைவிலேயே நகராட்சி, மாநகராட்சி தேர்தலையும் நடத்தத் தீர்மானித்திருக்கிறாராம் ஸ்டாலின். இந்தத் தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க., பா.ம.க உள்ளிட்ட கட்சிகளுக்கு ‘ஷாக்’கை தந்திருப்பதோடு, அடுத்த ஐந்து வருடங்களுக்கு அவர்களின் அரசியல் எதிர்காலத்தையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் பஞ்சாயத்து ஒருவழியாக முடிந்திருக்கும் சூழலில், தோற்றவர்கள் அதற்கான காரணங்களை ஆராயட்டும். ஜெயித்தவர்கள் தங்கள் மீதான விமர்சனத்தைப் பரிசீலனை செய்யட்டும்!

https://www.vikatan.com/news/politics/special-story-about-local-body-election-result

About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply