சனியும் வியாழனும் முட்டிக்கொள்ளுமா?

சனியும் வியாழனும் முட்டிக்கொள்ளுமா?
saturn-and-jupiter

வானத்தைப் பார்த்தபடியே ஒருவர் தனது ஆயுளைக் கழித்துவிடலாம். அவ்வளவு அதிசயங்களை அது நமக்கு அள்ளித்தருகிறது. அதன் இன்னொரு அதிசயமாக, வருகின்ற டிசம்பர் 21 மாலை சனிக் கோளும் வியாழன் கோளும் ஒன்றையொன்று கட்டி அணைத்தபடி நெருங்கி இருப்பது போன்ற அரிய வானக் காட்சி தென்படவிருக்கிறது. சூரியன் மறைந்து அந்தி சாயும் வேளையில் தென்மேற்குத் திசையில் சனிக் கோளுக்குக் கைகொடுத்து நட்புடன் சந்திப்பதுபோல வியாழன் கோள் நெருங்கி இரண்டும் ஒரே ஒளிப் புள்ளியாக ஒளிரும். ஜூலை 16, 1623-க்குப் பிறகு, கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகள் கடந்த பின்னர் சனியும் வியாழனும் இவ்வளவு நெருக்கமாக நிலைகொண்டு அற்புத வானக் காட்சியை நமக்குத் தரவுள்ளன.

உண்மையிலேயே இரண்டு கோள்களும் ஒன்றையொன்று முட்டி மோதிக்கொள்ளாது. வியாழன் புவிக்குச் சற்று அருகே உள்ள கோள். அதைவிட சனி தொலைவிலுள்ள கோள். டிசம்பர் 21 அன்று இந்த இரண்டு கோள்களுக்கு இடையே சுமார் 60 கோடி கிமீ தொலைவு இருக்கும். ஆயினும் பூமியிலிருந்து காணும்போது இரண்டும் ஒன்றையொன்று உரசிக்கொண்டு நிற்பது போலக் காட்சி தரும்.

சூரியனைச் சுற்றிக் கோள்கள் வலம்வரும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தற்செயலாகப் பூமியும் வேறு இரண்டு கோள்களும் சற்றேறக்குறைய நேர்க்கோட்டில் அமையும். அந்த நிலையில், பூமியிலிருந்து காணும்போது அந்த இரண்டு கோள்களும் வானத்தில் ஒன்றையொன்று இடித்துக்கொண்டு நெருங்கி நிற்பதுபோலக் காட்சிதரும். இதைத்தான் ‘கோள் சந்திப்பு நிகழ்வு’ (conjunction) என்கிறார்கள். நிலவுக்கும் சூரியனுக்கும் இடையே நெருக்க நிகழ்வு நடைபெறுவதைத்தான் நாம் ‘கிரகணம்’ என்கிறோம்.

பாரம்பரிய இந்திய வானவியலில் இரண்டு கோள்கள் ஒன்றையொன்று நெருங்கி வரும் நிகழ்வை ‘யுத்தம்’ என்றும், நிலவு வேறு கோள்களை நெருங்கிச் செல்வதை ‘ஸமாகம்’ என்றும், கோள்களைச் சூரியன் மறைப்பதை ‘அஸ்தமயம்’ என்றும் கூறுவார்கள்.

வானில் சூரியன் ஊர்ந்து செல்வதுபோலக் காட்சி தரும் பாதையைச் சூரிய வீதி என்பார்கள். இந்தச் சம தளத்திலிருந்து வெறும் ஐந்து டிகிரி சாய்வாகப் பூமியைச் சுற்றும் நிலவும் இதே சூரிய வீதியில் பயணிப்பதுபோலத் தென்படும். மேலும், சூரியனைச் சுற்றிக் கோள்கள் வலம் வரும் நீள்வட்டப் பாதைகளும் ஒருசில டிகிரி வித்தியாசத்தில் ஒரே தளத்தில் அமைந்துள்ளன. எனவே, பூமியிலிருந்து காணும்போது வானில் நிலவும் எல்லாக் கோள்களும் சூரிய வீதியில் பவனி வருவதுபோலக் காட்சி தரும். அவ்வாறு பயணம் செய்யும்போது அவ்வப்போது இரண்டு கோள்கள் ஒன்றையொன்று நெருங்கிச் சந்திப்பு நிகழும். சனி சூரியனைச் சுற்றிவர 29.4 ஆண்டுகளும் வியாழன் 11.86 ஆண்டுகளும் எடுக்கும். எனவே, 19.85 ஆண்டுகளுக்கு ஒருமுறை சனியும் வியாழனும் வான் கோளத்தில் சூரிய வீதியில் நெருங்கி ஒன்றையொன்று சந்திப்பது போலக் காட்சி ஏற்படும். கடந்த முறை மே 28, 2000-ல் இப்படி நிகழ்ந்தது. ஆனால், அப்போது இரண்டு கோள்களும் சூரியனுக்கு அருகே இருந்ததால் கண்ணுக்குத் தென்படவில்லை. 19.85 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் சந்திப்பில் சிறிதளவு இடைவெளி இருக்கும். ஆனால், கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தற்போதைய சந்திப்பில் வெறும் கண்ணுக்கு இடைவெளி புலப்படாது என்பதுதான் இதன் சிறப்பு.

அடுத்து நவம்பர் 5, 2040-லும், ஏப்ரல் 10, 2060-லும் சனிக்கும் வியாழனுக்கும் இடையே கோள் சந்திப்பு நிகழ்வு ஏற்படும் என்றாலும் அப்போதெல்லாம் முறையே 1 014′ மற்றும் 1009′ டிகிரி கோண இடைவெளி இருக்கும். எனவே, இரண்டு கோள்களும் நெருங்கி இடித்துக்கொள்வது போன்ற அற்புதத் தோற்றம் ஏற்படாது. மறுபடியும் மார்ச் 15, 2080-ல்தான் இப்போதுபோல இரண்டுக்கும் இடையே கோண இடைவெளி வெறும் 0.1 டிகிரி என அமைந்து நெருங்கி மோதுவது போன்ற காட்சி தென்படும்.

சனியும் வியாழனும் மட்டுமல்ல மற்ற கோள்களுக்கு இடையேயும் கோள் சந்திப்பு நிகழ்வு ஏற்படும். வரும் ஜூலை 13, 2021 அன்று வெள்ளிக் கோளுக்கும் செவ்வாய்க் கோளுக்கும் இடையே கோள் நெருக்க நிகழ்வு ஏற்படும். ஏப்ரல் 5, 2022 அன்று சனிக்கும் செவ்வாய்க்கும் இடையேயும், ஏப்ரல் 30, 2022 அன்று வெள்ளிக்கும் வியாழனுக்கும் இடையேயும், மே 29, 2022 அன்று செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையேயும் கோள் நெருக்க நிகழ்வு நிகழும். இன்னும் 5,521 ஆண்டுகள் கடந்த பின்னர் ஜூன் 17, 7541 அன்று  வியாழன்  கோள் சனிக் கோளுக்கு நேர் எதிரில் நிலைகொண்டு சற்று நேரத்துக்கு சனியை முழுமையாக மறைக்கும் அரிய நிகழ்வும் ஏற்படும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை டிசம்பர் 21 மாலை சுமார் 6.30 மணிக்குச் சூரியன் மறைந்து போதிய இருட்டு பரவிய நிலையில் தென்மேற்கு திசையில் வியாழன் கோளும் சனிக் கோளும் ஒன்றையொன்று முட்டி மோதிக்கொண்டு நிற்பது போன்ற காட்சி தென்படும். இன்று முதலே சூரியன் மறைந்த பின்னர் தென்மேற்கு வானில் இரண்டு கோள்களும் தென்படும். அடுத்தடுத்த நாட்கள் கூர்ந்து கவனித்துவந்தால் இவற்றுக்கிடையே உள்ள தொலைவு குறைந்துவருவதைக் காணலாம். டிசம்பர் 21 அன்று இரண்டும் ஒன்றையொன்று உரசிக்கொண்டு இருப்பதுபோலத் தோற்றம் தரும். அன்று வெறும் கண்களால் காணும்போது இடித்துக்கொண்டு இருப்பது போன்று தோன்றும். இருநோக்கி (பைனாகுலர்) வழியே காணும்போது அவற்றுக்கு இடையே நூலிழை அளவுக்கு இடைவெளி உள்ளதைக் காணலாம். அதன் பின்னர் அடுத்தடுத்த நாட்கள் இரண்டுக்கும் இடையே இடைவெளி அதிகரிப்பதைக் காணலாம். வானம் என்பது நமக்குக் கட்டணமின்றித் திறந்துவிடப்பட்ட அருங்காட்சியகம். அந்த அருங்காட்சியகத்தில் தெரியும் இதுபோன்ற காட்சிகளைப் பொதுமக்கள், மாணவர்கள், சிறுவர்கள் யாரும் தவறவிட வேண்டாம்.

– த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசின் ‘விஞ்ஞான் பிரச்சார்’ தன்னாட்சி அமைப்பில் முதுநிலை விஞ்ஞானி.

தொடர்புக்கு: tvv123@gmail.com

https://www.hindutamil.in/news/opinion/columns/611554-saturn-and-jupiter-1.html

——————————————————————————————————————–

சனிக் கோளின் கதை

சனி என்பது சூரியனை ஆறாவது கோளாக சுற்றி வருகிறது. அது மட்டுமல்ல, சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்தபடியான பெரிய கோள் சனிதான். சனி என்பது பழங்கால ரோமனிய விவசாயக் கடவுளின் பெயராகும். சனிக்கோளின் வானவியல் சின்னம், ரோமானிய விவசாயக் கடவுளின் சின்னமான அரிவாள்தான்.

இரவு வானில் சூரியக் குடும்பத்தின் 5 உறுப்பினர்களை வெறும் கண்ணால் எந்த கருவியும் இன்றி பார்க்க முடியும். அவைகளில் ஒன்றுதான் சனிக் கோள். நம் மூதாதையர்களும், இதனை வெறும் கண்ணால் பார்த்தனர். கண்ணால் பார்க்கும் கோள்களில் இதுதான் தொலைவில் உள்ளது என்றும் தெரிந்து கொண்டனர். சனிக்கோள் மஞ்சள் நிறத்தில் மின்னாமல் பளிச்சென்று தெரியும். பூமியிருந்து பார்க்கும்போது வானில் தெரியும் கோள்களில் மூன்றாவது பிரகாசமான கோள் சனி. சனிக்கோளை வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே மனிதர்கள் பார்த்து வந்திருக்கின்றனர்.sani_620

கலிலியோவும், சனிக்காதும்..!

தொலைநோக்கி மூலம் முதன் முதல் 1610 ஆம் ஆண்டு சனிக்கோளை பார்த்தவர் கலிலியோ தான். சனிக்கோளை வானில் நோக்கிய கலிலியோவுக்கு பிரமிப்பே மிஞ்சியது. காரணம் அதன் வித்தியாசமான தோற்றம்தான். ஆனால் அதனைப் பார்த்து ரொம்பவே குழம்பிவிட்டார். பின்னர்தான் இது என்னடா, இரண்டு பக்கமும் காது போன்ற தோற்றம் உடையதாய் இருக்கிறதே என்று அதன் வளையங்களைப் பார்த்து திகைத்தார். ஏனெனில் அவரது தொலை நோக்கி சிறியதாக இருந்ததால், வளையங்களின் அமைப்பு சரியாகத் தெரியவில்லை.அந்த காதுகள்தான் சனியின் வளையங்கள் என்றும், அவை பனிக்கட்டிகளால் ஆனவை என்றும் அவருக்கு அப்போது தெரியாது. பிறகே அவை சனியின் வளையங்கள் என்று தெரிந்து கொண்டார்.

தட்டை துருவங்கள்..!

சனிக்கோள் வியாழனுக்கும், நெப்டியூனுக்கும் இடையில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. இது சூரியனிடமிருந்து 140 கோடி கி.மீ. (1,400,000,000000கி.மீ ) தொலைவில் உள்ளது. இது 9 வானவியல் அலகு ஆகும். ஒரு வானவியல் அலகு என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள 14.9 கோடி கி.மீ. தொலைவுதான். சனி இருக்கும் தூரம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரத்தைப் போல சுமார் 9 மடங்கு. சனியின் நடுக்கோட்டு விட்டம் 120,536 கி.மீ. சனியின் விட்டமும் கூட பூமியைப் போல சுமார் 10 மடங்கு. எனவே இதில் வரிசையாக 9 பூமிகளை நிற்க வைக்கலாம். உள்ளே தூக்கிப் போட்டு அடக்கலாம். அவ்வளவு பெரியது. ஆனால் சனிக்கோளின் துருவங்கள் தட்டையான பந்து/ஆரஞ்சு போல காணப்படுகிறது. துருவங்களில் விட்டம் 108,728 கி.மீ தான்.

சனிக்கோள் மிக வேகமாக சுற்றுவதால்தான் துருவப்பகுதிகள் தட்டையாகிவிட்டன என்றும் சொல்லப்படுகிறது. சனிக்கோள் மட்டுமல்ல, சூரிய குடும்பத்தின் வியாழன், யுரேனஸ், நெப்டியூன் மற்றும் அனைத்து வாயுக் கோள்களின் துருவங்களும் தட்டையாகவே உள்ளன. பாறைக் கோளான நம் பூமியின் நிலையும் அதுதானே. சனிக்கோளின் அடர்த்தி நீரின் அடர்த்தியை விட மிகவும் குறைவு. எவ்வளவு தெரியுமா? சனியின் அடர்த்தி 0.69 தான். நீரின் அடர்த்தி 1. சூரிய குடும்பத்தில் மிக மிக அடர்த்தி குறைவான, மிகவும் லேசான கோள் சனி மட்டுமே. பூமியின் அடர்வு 5.32. இதிலுள்ள ஹைடிரஜனும், ஹீலியமும்தான் இதன் அடர்த்தி குறைவுக்கு முக்கிய காரணி. நீங்க சனிக்கோளை தூக்கி கடலில் போட்டால், இடுப்பு ஒட்டியாணம் மாட்டிக் கொண்ட சனிக்கோள், நீரில் ஜம்மென்று ஓர் ஆரஞ்சு பழம் போல மிதக்கும்.

சனியிலிருந்து சூரியனைப் பார்த்தால், நாம் பூமியிலிருந்து பார்ப்பதைப் போல பிரகாசமாக இருக்காது. ஒரு பிரகாசமான விண்மீன் போலவே தெரியும். சனிக்கோளில் பூமியில் தெரியும் சூரிய ஒளியில் 1% மட்டுமே தெரியும். உங்களின் எடை பூமியில் 70 கிலோ என்றால், சனியில் 75 கிலோ.

பூமி தன அச்சில் 23 .5 பாகை சாய்ந்துள்ளது. அது போலவே சூரிய குடும்பத்து அனைத்து கோள்களும் தன் அச்சில் சாய்ந்தே உள்ளன. சனிக் கோளும் தன் அச்சில், 26.73 பாகை சாய்வாகவே சூரியனைச் சுற்றி வருகிறது. நம் பூமியின் கணக்குப்படி சனிக் கோள் ஒரு முறை தன்னைத் தானே சுற்ற 10 மணி, 32 நிமிடம் 35 நொடிகள் ஆகிறது. இந்த துல்லியமான தகவல் 2007 செப்டம்பரில் விண்கலங்கள் வாயேஜர், புரோப் மற்றும் கசினி மூலம் அறிந்தது. இதுதான் சனியின் ஒருநாள் என்பதாகும். ஆனால் பொதுவாக சனியின் ஒரு நாளின் நேரம் என்பது காலப் போக்கில் மாறுகிறது என்பதனை கடந்த 25 ஆண்டுகளில் அறிந்துள்ளனர். முன்பு சனியின் ஒரு சுற்றலின் நேரம் 10 மணி 39 நிமிடம் ஆக இருந்தது. பின்னர், அதன் வேகம் 10 மணி 45 நிமிடம் ஆகிவிட்டது. சனி ஒரு முறை சூரியனைச் சுற்றிவர நம் பூமி நேர கணக்கில் 29 ஆண்டுகள், 167 நாட்கள், 6 மணி மற்றும் 40 நிமிடங்கள் ஆகின்றன. ஆனால் சனிக்கோளுக்கு இது ஓர் ஆண்டு தான்.

சனியின் மையப்பகுதியில் இரும்பு, நிக்கல் மற்றும சிலிகனும் ஆக்சிஜனும் கலந்த பாறை இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனைச் சுற்றி உலோக ஹைடிரஜன் உள்ளது. சனிக்கோளின் மேலுள்ள வாயு பகுதிக்கும் பாறைக்கும் இடையில் திரவ ஹைடிரஜனும், திரவ ஹீலியமும்தான். சனிக்கோளின் உள்ளே இருக்கும் உலோக ஹைடிரஜன்தான் மின்னேற்றத்தை உற்பத்தி செய்து சனிக்கோளின் காந்தப் புலத்தை உருவாக்குகிறது. ஆனால் சனியின் காந்தப்பரப்பு, பூமியின் காந்தப் பரப்பை விட பலவீனமானது. வியாழனின் காந்தப் பரப்பில் இருபதில் ஒரு பகுதிதான் (20 :1) சனியின் காந்தப் பரப்பு.

சனியின் வளிமண்டல வெப்பநிலை அதிக பட்சம் -130 °C லிருந்து -191 °C. வரை. இதன் வெளியே இவ்வளவு குளிராக இருக்கிறதே என்று இதைப் பற்றி கொஞ்சம் குறைவாக எடை போட்டு, இது மிக அமைதியான கோள் என நினைத்து விட வேண்டாம். மேற்பரப்பில்தான் குளிரும் உறைபனியும். இதன் உள்ளே மையம் பூமி போலவே கொதித்துக்கொண்டுதான் இருக்கிறது. அதன் உட்பகுதி வெப்பம் என்ன தெரியுமா? 12,000°C .வெப்பம்.

சனி தான் சூரியனிடமிருந்து பெற்ற வெப்பத்தைவிட 2.5 மடங்கு அதிக கதிர்வீச்சு ஆற்றலை அதன் மேற்பரப்பிலிருந்து வெளியிடுகிறது. பெற்ற வெப்பத்தை விட அதிகமாக எப்படி வெளிவிட முடியும்? இது எப்படி? சனியினுள் உருவாகும் அதிகப்படியான ஆற்றல், அதன் மெதுவான ஈர்ப்புவிசை அழுத்தத்தினால், கெல்வின்-ஹேல்ம்ஹோல்ட்ஸ் செயல்பாடு (Kelvin–Helmholtz mechanism) மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. சனியின் அதிகப்படி ஆற்றலுக்கு இது மட்டுமே காரணி அல்ல. இதற்குள்ளே வேறொரு செயல்பாடும் நடந்து கொண்டிருக்கிறது. சனியின் உள்ளே உள்ள ஹீலியம் துகள்கள் மழையாகப் பொழிந்து வெப்பத்தை தக்கவைத்துக் கொள்கின்றன.sani_1_620

சனிக் கோளின் வளிமண்டலத்தில் காற்று உள்ளது. இது சூறைக்காற்று போல, எப்போதுமே மணிக்கு 1800 கி.மீ வேகத்தில் காற்று வீசிக்கொண்டு இருக்கிறது. பூமியிலிருந்து அனுப்பட்ட வாயேஜர் (Voyager) விண்கலம்தான் சனியின் வளிமண்டலத்தில் கிழக்கு நோக்கிய காற்றின் வேகத்தை கண்டுபிடித்தது. நம் சூரிய குடும்பத்தில் அதிக வேகத்தில் காற்று வீசும் கோள் சனி மட்டுமே. 2007ல் செலுத்தப்பட்ட கசினி (Cassini) விண்கலம், சனிக்கோளின் வடபகுதி யுரேனஸ் போலவே, அழகிய நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் நீல நிறத்தில் மின்னுகிறது என்பதை தெரிவித்தது. ரெலைக் என்ற பிரிட்டிஷ்க்காரர் தான் முதலில் சூரியன் மறையும் தருவாயில் மின்காந்த கதிர்வீச்சு அல்லது ஒளிச்சிதறல் மூலம் ஒலியலைகளை விட சிறிய துகள்கள் இந்த நீல நிறத்தை உருவாக்குவதைக் கண்டறிந்தார். அதனால் இந்த சிதறலுக்கு ரெலைக் சிதறல் (Rayleigh scattering) என்று பெயர். மேலும் துருவங்களில் துருவ வொர்டெக்ஸ்( warm polar vortex,) என்ற புயல் உருவாகிறது. இது சூரிய குடும்பத்தில் சனிக்கோளில் மட்டுமே நடக்கிறது. அங்கே வெப்பநிலையும் உச்சத்தில் 122°C என இருக்கும் என்றும் அறியப்பட்டுள்ளது. இந்த வெப்பநிலைதான் சனிக்கோளின் அதிக பட்சமாக கோடையின் வெப்பமாகும்.

அறுகோண மேகம்..!

சனிக்கோளின் வடதுருவ வொர்டெக்ஸைச் சுற்றி ஓர் அறுகோண அமைப்பு மேகமும் காணப்படுகிறது. இதனைக் கண்டுபிடித்தது நாம் செலுத்திய விண்கலமான வாயேஜர்தான். ஆனால் தென் துருவத்தில் வொர்க்டெக்ஸோ, அறுகோண மேகமோ கிடையாது. இங்கே, நம் கடலில் சூறாவளி உருவாகும்போது ஒரு கண் இருப்பது போன்ற கண் அமைப்பு தென் பகுதியில் தென்படுகிறது.

வாயுக் கோளத்தின் வாயுக்கள்..!

சனிக்கோளில் 96.3% ஹைடிரஜன் வாயுவும், 3.25% ஹீலியமும் உள்ளது. மேலும் 0.05% அளவு மீத்தேன் மற்றும் கொஞ்சூண்டு அம்மோனியாவும் (ammonia,) அசிட்டிலீன் (acetylene), ஈத்தேன் (ethane), புரொப்பேன் (propane), பாஸ்பைன் (phosphine) மற்றும் மீத்தேனும் (methene) சனியின் வளிமண்டலத்தில் உள்ளன, அதனால் தான் சனி இவ்வளவு லேசாக இருக்கிறது.

சனியின் வளிமண்டல் மேகங்களில் பூமி போலவே மின்னல்கள் உருவாகின்றன. அதன் அதிர்ச்சி என்பது, பூமியில் உருவாவதைப் போல பல கோடி, கோடி மடங்கு அதிகம். நம் பூமி 23.5 டிகிரி சாய்வாக உள்ளதால் பருவ காலங்கள் வருகின்றன. அது போலவே, சனியிலும் பருவகால மாற்றங்கள் உண்டு. அதன் காரணி சனி தன் அச்சில் 26 டிகிரி சாய்ந்திருப்பதே.

பூமியில் ஏற்படுவது போலவே, சனியிலும் அதன் பெரிய துணைக்கோளால் கிரகணம் உண்டா கிறது. சிறு கோள்களால் துணைக்கோள் நகர்வு (Transit)தெரிகிறது.

சனியின் வளையங்கள்

சனியின் நடுகோட்டுப் பகுதியில்தான் இந்த வளையங்கள் காணப்படுகின்றன. வியாழன், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களில் வளையங்கள் இருந்தாளும் கூட, அவை சனியில் இருப்பதைப் போல் அவ்வளவு தெளிவாக, அழகாக தெரிவதில்லை. சனியின் வளையங்கள் அதன் நடுக்கோட்டுக்கு மேலே 6,630 கி.மீ.லிருந்து 120,700 கி..மீ தூரம் வரை விரவிக்கிடக்கின்றன. ஆனால் அவற்றின் கனம் வெறும் 23 மீட்டர் மட்டுமே. சனிவளையங்களின் பொருட்கள் வளையங்களில் 93% பனியின் துகள்களாலும், பாறைத் துணுக்குகளாலும், மீத்தேன் தூசுகளாலும் ஆனவை. மீதி 7% அமார்பாஸ் கார்பன் (amorphous carbon). அந்த துகள்களின் அளவு குட்டியூண்டு துகள்களிருந்து அதிக பட்ச அளவு 10 மீ. சில இவற்றை சின்ன தொலை நோக்கியால் கூட அழகாக காணமுடியும். கொஞ்சம் பெரிய தொலைநோக்கி என்றால் சனிக் கோளின் நிறைய வளையங்களைக் காணலாம்.

கலிலியோவிற்கு அடுத்தபடியாக இந்த வளையங்களை 1655ல் பார்த்து அவைகளுக்கு விளக்கம் சொன்னவர் கிறிஸ்டியன் ஹைஜீன்ஸ் ( Christiaan Huygens). சனிக்கோள் உருவானபோதே இதன் வளையங்களும் உருவாகி இருக்க வேண்டுமென்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த வளையங்கள் ஒருகாலத்தில் சனியின் துணைக்கோளாய் இருந்து மோதி உடைந்ததின் மிச்ச சொச்ச துண்டுகளே இப்படி வளையமாய் சனியைச் சுற்றி உள்ளன என்றும் தெரிவிக்கின்றனர். சனியின் வளையங்களை எப்போதும் காணமுடியாது.

சில சமயம் அவை படுக்கை வசத்தில் இருந்தால் வளையம் ஒரு கோடு போல இருக்கும். அப்போது வளையங்கள் நமக்குத் தெரியாது. 2008-2009ல் அவ்வாறு வளையங்கள் மறைந்து போயின. இனி மீண்டும் 2024-2025 ஆண்டுகளிலும் சனியின் வளையம் காணாமல் போகும். மீண்டும் மீட்கப்படும்.

சனியின் துணைக்கோள்கள்..!

சனிக்கோளுக்கு இதுவரை 62 துணைக் கோள்கள்/சந்திரன்கள் இருப்பதைக் கண்டுபிடித் துள்ளனர். இவற்றில் 20 சந்திரன்கள் வரை கசினி விண்கலத்தால் கண்டுபிடிக்கப் பட்டன. இவற்றில் 53 சந்திரன்/ நிலாவுக்கு பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவைகளுள் மிகப் பெரிய துணைக்கோள் டைட்டான் (Titan) தான். இதுதான் சனியின் சுற்றுப்புறத்திலுள்ள பொருள்களில் 90% நிறையைத் தன்னகத்தே கொண்டுள்ளது. சனியின் வளையங்களையும் சேர்த்துத்தான் இந்த கணக்கு. இந்த டைட்டன் துணைக்கோள், நம்ம சூரிய குடும்பத்தின் முதல் புதல்வன் புதனை விடப் பெரியது. அது மட்டுமல்ல, சூரிய குடும்பத்தின் இரண்டாவது பெரிய துணைக்கோள். முதல் பெரிய துணைக்கோள் வியாழனின் கனிமேடுதான். டைட்டனின் வளிமண்டலத்தில் கனமான நைட்ரஜன் நிரம்பி இருக்கிறது. ஒரு காலத்தில் நம் பூமியில் உயிரினம் உருவாகாதபோது இருந்த மாதிரியே இதுவும் இன்று இருக்கிறது. நம் பூமியின் வளிமண்டலம் 60 கி.மீ உயரம் வரை விரிந்துள்ளது. ஆனால் டைட்டனின் வளிமண்டலம், பூமியைப் போல 10 மடங்கு பெரியது. சனியின் அடுத்த இரண்டாவது பெரிய நிலாவின் பெயர் ரியா(Rhea). இதில் மிக மெல்லிய வளையமும், குறைவான வளிமண்டலமும் உள்ள நிலா. மற்ற நிலாக்கள் ரொம்ப சிறியவை. 34 நிலாக்கள் 10 கி.மீ விட்டம் மட்டுமே உள்ளவை. பெரும்பாலான நிலாக்களுக்கு, டைட்டனின் கிரேக்க புராணப்படியே பெயர் சூட்டப்பட்டுள்ளது. சூரிய குடும்பத்தில் பெரிய வளிமண்டலம் உள்ள துணைக்கோள் டைட்டன் மட்டுமே. இதில் தான் ஹைடிரோகார்பன் ஏரி உள்ளது. சனியின் துணைக்கோள்களில் ஒன்றான என்சிலாடஸ் (Enceladus) எதிர்காலத்தில் நுண்ணுயிர்கள் வர வாய்ப்பு உள்ள இடம் என்றும் சொல்லப்படுகிறது .

சனியை அறிய அனுப்பிய விண்கலங்கள்..!

சனியின் வளிமண்டலம், அதன் வளையங்கள், துணைக்கோள்கள் பற்றி அறிய, அதனை நோக்கி நான்கு விண்கலங்கள் செலுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க நாசாவின் பயோனிர் 11 (Pioneer 11) என்ற விண்கலம்தான் முதன் முதலில் 1979ல் சனிக்கோளைப் போய் எட்டிப்பார்த்து கதை பேசிவிட்டு வந்தது. பின்னர் வாயேஜர் 1 (செப்டம்பர் 12, 1980) மற்றும் வாயேஜர் 2 (August 25, 1981) விண் கலன்கள் அனுப்பப்பட்டன. கசினி (Cassini) விண்கலம 2004ல் செலுத்தப்பட்டது. இது இன்னும் சனியைச் சுற்றி வருகிறது. சனியின் இரவுப்பக்கம் கசினி சென்றபோது, வெளிச்சம்படாத சனியின் இந்தப் பகுதி நியான் விளக்கு போல மின்னியது. அதன் வளையங்கள் அழகான நிறங்களில் மினுக்குகின்றன. இது மின்னலடிக்கும் நீலம், மரகதப் பச்சை, புதினா பச்சை என பல வண்ணங்கள் காட்டி நம்மை மயக்குகின்றன. சூரிய ஒளி படாத இந்தப் பகுதியில் சனியின் உள் வெப்பமே இந்த ஒளியை உருவாக்குகிறது.

About editor 2312 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply