மத்திய கிழக்கில் மக்கள் புரட்சி! சர்வாதிகார ஆட்சியாளர்கள் ஓட்டம்!

மத்திய கிழக்கில் மக்கள் புரட்சி!  சர்வாதிகார ஆட்சியாளர்கள் ஓட்டம்!

நக்கீரன்

உருசியாவில் ஒக்தோபர் 1918 புரட்சி நடந்த போது மாகாகவி பாரதியார் பின்வருமாறு அதனை வரவேற்றுப் பாடினார்.

மாகாளி பாரசக்தி உருசிய நாட்டில்
கடைக் கண் வைத்தாள்! அங்கே
ஆகா! என்றெழுந்தது பார் யுகப் புரட்சி!
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்!

உருசியப் பரட்சிக்கு வாழ்த்துக் கூறி வரவேற்ற முதல் தமிழ் கவிஞன் என்ற பெருமை பாரதிக்கு உண்டு. அந்தப் பரட்சி 72 ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்ப்புரட்சியில் முடிந்துவிட்டது என்பது வேறு வரலாறு.

உருசியப் புரட்சியை அடுத்து உலகில் பல புரட்சிகள் வெடித்தன. அதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது 1949 ஆம் ஆண்டு சீனாவில் இடம்பெற்ற பொதுவுடமைப் புரட்சி ஆகும்.  அந்த வரிசையில் 1979 ஆம் ஆண்டு இரானில் நடைபெற்ற  இஸ்லாமிய மக்கள் புரட்சியைக் குறிப்பிடலாம்.

கடந்த ஒரு திங்களாக மத்திய கிழக்கில் மக்கள் புரட்சி வெடித்துள்ளது. முதலில் அது வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான தியூனீசியாவில் தான் தொடங்கியது. மக்கள் புரட்சிக்கு முகம் கொடுக்க முடியாத சர்வாதிகாரி பென் அலி (Zine El Abidine Ben Ali)  இரவோடு இரவாக விமானத்தில் நாட்டை விட்டே ஓடினான். அவனது 30 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

தியூனீசியாவில் மூண்ட தீ அண்டை நாடுகளான எகிப்திலும்  யேமனிலும் பற்றிக் கொண்டுள்ளது.  முப்பது ஆண்டுகள் கொடுங்கோல் ஆட்சி செய்த ஹொஸ்னி முபராக் பதவி விலக வேண்டும் என்று கேட்டு எகிப்திய மக்கள் புகழ்பெற்ற     திரார் என்ற சுதந்திர சதுக்கத்தில் கடந்த 11 நாட்களாக இடைவிடாது போராடி வருகிறார்கள்.  ஒரு கட்டத்தில் 2 இலட்சம் மக்கள் அணி அணியாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள். எந்த வினாடியும் தியூனீசியா அதிபர் போன்று முபராக்கும் தப்பித்து நாட்டைவிட்டு ஓடலாம் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவுகிறது. ஊடகங்கள் “உனது விமானம் காத்திருக்கிறது” (Your plane is waiting)  என தலைப்புச் செய்திகள் வெளியிடுகின்றன.

“நான் மீண்டும் ஆட்சித்தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை. செப்தெம்பர் மாதம் வரை நான் பதவியில் இருந்து விட்டு விலகிவிடுகிறேன்” என்று முபாராக்  தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்குச் சொன்னாலும் மக்கள் அதைக் கேட்பதாக இல்லை.

புதிதாக ஒரு துணை ஆட்சித்தலைவரை நியமித்ததோ, பழைய அமைச்சரவையை கலைத்துவிட்டு புதிய அமைச்சர் அவையை நியமித்ததோ மக்களை சமாதானப்படுத்தத் தவறிவிட்டது. முபராக்கின் மகன் கமல் ஆட்சித்தலைவர் பதவிக்குப் போட்டியிட இருந்தார். அதுவும் இன்று இல்லை என்றாகிவிட்டது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒட்டகங்களிலும் குதிரைகளிலும் வந்த ஆயிரக்கணக்கான முபாரக்  ஆதரவாளர்கள்  திரார் சுதந்திர சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த மக்கள் மீது திடீர்த் தாக்குதல் நடத்தினார்கள்.   எதிர்ப்பு அணியைச் சேர்ந்தவர்களுக்கு போட்டியாக அவர்களும் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். முபாரக் பதவி விலக கோரும் தட்டிகளையும், பதாகைகளையும் கிழித்து எறிந்தனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இரண்டு நாட்கள் நீடித்த இந்த ‘உள்நாட்டுப் போரில்’ முபாரக்  ஆதரவாளர்கள் துரத்தி அடிக்கப் பட்டுள்ளார்கள். அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட அடையாள அட்டைகள் அவர்கள் காவல்துறை மற்றும் உள்துறை பாதுகாப்புப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என அறியப்பட்டது.  இன்னும் பலர் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள். இந்த மோதலில் 10 பேர் கொல்லப்பட்டு 2,500 பேர் அளவில் காயப்பட்டார்கள். 

அரசின் தூண்டுதலின் பேரில் மக்களாட்சி ஆதரவாளர்கள் மீது இடம்பெற்ற  தாக்குதலை மனித உரிமைக் காப்பகம் கடுமையாகக் கண்டித்துள்ளது. அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் மீது அரச ஆதரவாளர்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதல் தொடருமானால் அதற்காகக் கொடுக்க வேண்டிய விலை மிகவும் அதிகமாக இருக்கும் என மனித உரிமைக் காப்பகம் எச்சரித்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இதுவரை 200 பேர் இறந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் காயப்பட்டுள்ளார்கள். கயிரோவில் மட்டுமல்ல எகிப்தின் ஏனைய நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றன. அலெக்ஸ்சான்றியாவின் மாவீரர்கள் சதுக்கத்தில் பத்து இலட்சம் பேர் கூடினார்கள். மன்சூரா என்ற நகரில் 750,000 பேர் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். துறைமுகப் பட்டினமான சுயஸ்சில் 250,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.  இப்போது முபராக் மட்டுமல்ல முழு ஆட்சியும் அகற்றப்பட வேண்டும் என்று மக்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.

இரண்டாவது முறையாக தொலைக்காட்சியில் தோன்றிய முபாரக் தனது கட்சிப் பதவியை துறந்துவிட்டதாக அறிவித்தார். ஆனால் இந்த அறிவிப்பும் மக்களை சமாதானப்படுத்தத் தவறிவிட்டது.

தியூனீசியாவின் பென் அலி சரி, எகிப்தின் ஹொஸ்னி முபாரக் சரி அல்லது லிபியா மொமட் கடாபி சரி இவர்களுக்கு  இடையே சில பொது அம்சங்கள் காணப்படுகின்றன.  ஒன்று இந்த நாடுகளை ஆள்பவர்கள் ஆண்டுக் கணக்கில் பதவியில் நீடித்தவர்கள் . இரண்டு இந்த ஆட்சியாளர்கள் அராபு தேசியத்தையும் பாலஸ்தீனிய சிக்கலையும் தங்களது நீண்ட கால ஆட்சியை நியாயப்படுத்தப்  பயன்படுத்தியவர்கள். மூன்று இவர்கள்  பெயரளவில் மக்களாட்சி முறைமையை வைத்துக் கொண்டு சர்வாதிகார ஆட்சி நடத்தியவர்கள். தங்கள் அரசியல் எதிரிகளை துன்புறுத்தியும் சிறையில் அடைத்தும் கிட்டத்தட்ட தனிக் கட்சி ஆட்சி நடத்தியவர்கள். எடுத்துக் காட்டாக எகிப்தில் முபாரக் ஆட்சிக்கு வந்த காலம் தொட்டு அவசரகால சட்டத்தின் கீழேயே ஆட்சி செய்கிறார்.   நான்காவதாக இந்த நாடுகளில் குடும்ப ஆட்சியே நடைபெறுகிறது. தங்கள் இருப்பைப் பலப்படுத்த மாமன், மச்சான், மகன், சித்தப்பா, பெரியப்பா போன்ற உறவினர்களை ஆட்சியின் கேந்திர அதிகார மையங்களில் அமர்த்தியுள்ளார்கள். அய்ந்தாவதாக சுதந்திரமான தேர்தல்கள் நடைபெறுவதில்லை. மாறாக தேர்தல் மோசடிகள் தாராளமாக இடம் பெறுவது பெருவழக்காகக் கொள்ளப்பட்டது. 

எகிப்து உலகின் மூத்த நாகரிகம் தவழ்ந்த நாட.   பொது ஆண்டுக் கணக்கு தொடங்குவதற்கு முன்பாக, 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே நைல் நதிக்கரையில் மக்கள் வாழ்ந்து வந்தனர்.  ஏழாயிரம் ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட நாடு. எகிப்து வட ஆபிரிக்காவின்  கிழக்குப் பகுதியில் நைல் ஆற்றின் கீழ் பகுதிகளில் செறிந்து அமைந்திருந்த ஒரு பழங்கால நாகரிகம் ஆகும். இது இன்றைய எகிப்து நாட்டுள் அடங்கியது.   கீழ் எகிப்தும் மேல் எகிப்தும் முதல் பரோவின் கீழ்  கிமு 3150 அளவில் ஒன்றிணைந்தது எனலாம்.

பல அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சி செய்த நாடாக இருந்த போதிலும் எகிப்தில் வணிகம் சிறந்திருந்தது. நாகரிகமும் பண்பாடும்  பெருமையுடன் ஓங்கி உயர்ந்திருந்தது. அந்நாட்டை ஆண்ட 18, 19 ஆம் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள் பொது ஆண்டு கணக்குக்கு முன் 16 ஆம்  நூற்றாண்டிலிருந்து 13ஆம் நூற்றாண்டு வரை ஆண்டனர். பாரோ மன்னர்கள்  (Pharaohs) ஆட்சி செய்த காலம் எகிப்தின் பொற்காலம் எனக் கூறப்படுகிறது. அக் காலத்தில்தான் பிரமிட்டுகள் கட்டப்பட்டன. சித்திர எழுத்துகளைக் கொண்டு செய்திகளை எழுதும் பழக்கமும் (Hieroglyphics) இந்தக் காலத்தில் தோன்றின. இன்றைக்குச் சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிரமிட்டுகள் உலக அதிசங்களில் ஒன்றாக இன்றைக்கும் கணக்கிடப்படுகிறது. கட்டடப் பொறியியல் துறையில் பிரமிப்பை அளிக்கக் கூடியனவாக உள்ளன.

பொது ஆண்டுக்கு 669 ஆண்டுகளுக்கு முன்பு மெசப்பொட்டோமியாவில் இருந்து படைய டுத்து வந்த அசீரியர்கள் எகிப்தை வென்று ஆட்சி செய்தனர். 144 ஆண்டுகள் கழிந்தபின் 525ஆம் ஆண்டில், பாரசீகர்களின் படையெடுப்பு நடந்தது. பொது ஆண்டுக்கு முன் 332 ஆம் ஆண்டில் மாசிடோனியாவிலிருந்து மகா அலெக்சாந்தர் படையெடுத்து வந்து எகிப்தை வென்றார். அலெக்ஸ்சான்றியா என்னும் துறைமுக நகரைத் தம் வெற்றியின் சின்னமாக அமைத்தார். பொது ஆண்டுக் கணக்குக்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தின் அரசி கிளியோபாட்ரா இறந்த பிறகு உரோமானியப் படைத் தளபதி ஆக்டாவியா எகிப்தியப் படைகளைத் தோற்கடித்த பிறகு  உரோமப் பேரரசு எகிப்தின் மீது சொந்தம் கொண்டாடியது.

பொது ஆண்டுக் கணக்குக்குப்பின்  642 ஆம் ஆண்டில், அராபியர்கள் எகிப்தை வென்றனர். பின்னர் 1250 ஆம் ஆண்டு முதல் 267 ஆண்டுகளுக்கு மாமெலுக் எனப்படும் அடிமை வம்சத்தினர் எகிப்தை ஆண்டனர். 1517 இல் எகிப்து துருக்கியை ஆண்ட ஓட்டோமான் வம்ச ஆட்சியில் சேர்க்கப்பட்டது. 1798 இல் பிரான்சின் நெப்போலியன் எகிப்தை வென்று மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தார். ஆனால் 1801இல் பிரித்தானியரும்  துருக்கியர்களும் சேர்ந்து தாக்குதல் நடத்திப் பிரெஞ்சுப் படைகளை எகிப்தை விட்டு விரட்டி அடித்தனர். மீண்டும் எகிப்து ஓட்டோமான் பேரரசில் நீடித்தது. எகிப்தின் வரலாற்றில் சிறந்த நிகழ்வாகவும் திருப்பு முனையாகவும் அமைந்தது சூயஸ் கால்வாய் வெட்டப் பட்ட நிகழ்ச்சியாகும். 1859 முதல் பத்தாண்டுகள் பாடுபட்டு  இக் கால்வாய் 1869 இல் வெட்டி முடிக்கப்பட்டது. 1882 இல் இந்த வாய்க்காலின் கட்டுப் பாட்டை பிரித்தானியா  கைப்பற்றிக் கொண்டது.  அத்துடன் எகிப்தையும் கைப்பற்றியது. 1914 இல் எகிப்து நாடு பிரித்தானியாவின்  பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டு எட்டு ஆண்டுக்காலம் நீடித்தது.

1922 இல் எகிப்துக்கு விடுதலை வழங்கப்பட்டு பாரூக் எகிப்தின் மன்னரானார். 1948 மே 14 இல் இசுரேல் என்ற புதிய நாடு உருவாக்கப்பட்டதற்கான அறிவிப்பு டெல் அவிவ் நகரில் இருந்து வெளியிடப்பட்டது. மறுநாளே, எகிப்து உள்ளிட்ட அய்ந்து அரபு நாடுகளின் படைகள் இசுரேல் நாட்டின்மீது படையெடுத்தன. ஆனால் அவை தோற்கடிக்கப் பட்டன. போர் நிறுத் தத்திற்குப் பின்னர், நடந்த பேச்சு வார்த்தைகளுக்குப்பின் இசுரேல் நாட்டின் எல்லை வரையறுக்கப்பட்டது. ஆனாலும் காசா (Gaza strip) எகிப்திடமே தங்கிவிட்டது. 1952 இல் இராணுவப் புரட்சியைத் தலைமையேற்று, கமால் அப் துல் நாசர் நடத்தினார். அதன் விளைவாக முகமது நகீப் அதிபராகவும் பிரதமராகவும் ஆனார். 1953 நவம்பர் மாதத்தில் எகிப்தைக் குடியரசு நாடாக அறிவித்து முடியாட்சி முறையை ஒழித்தார். 1954இல் கமால் அப்துல் நாசர் எகிப்தின் தலைமை அமைச்சர் ஆனார். 1956இல் அதிபரானார். 26.7.1956இல் நாசர் எடுத்த நடவடிக்கை உலக நாடுகளின் கவனத்தையும் கண்டனத்தையும் ஒருங்கே கவர்ந்தது. சுயஸ் கால்வாயை நாட்டுடைமையாக்க ஆணையிட்டார். அதன் வருமானத்தின் மூலம் அஸ்வான் அணையைக் கட்டத் திட்டமிட்டார். கால்வாயை மூடி, பெட ரோல் ஏற்றி வந்த கப்பல்களைச் சிறைப் பிடிக்கும் செயல் நடக்கும் என பிரிட்டனும் பிரான்சும் பயந்தன. அதனால் 1956 ஒக்டோபரில் பிரிட்டன், பிரான்சு மற்றும் இசுரேல் ஆகிய நாடுகள் சேர்ந்து எகிப்தின்மீது போர் தொடுத்தன. 22.12.1956 இல் அய்யன்னா நாட்டுப் படைகள் தலையிட்டுப் பிரிட்டன், பிரான்சு நாடுகளின் படைகளைத் திருப்பி அனுப்பின. இதனால், எகிப்துக்கும் அதன் அதிபர் நாசருக்கும் பெருமையும் புகழும் வந்து சேர்ந்தன.  1970 செப்தெம்பரில் ஆட்சித்தலைவர்  நாசர் மறைந்தார். துணை ஆட்சித்தலைவராக இருந்த அன்வர் அல் சதாத் அதிபரானார். சதாத் 1971இல் எகிப்து நட்புறவு ஒப்பந்தம் ஒன்றை  சோவியத் நாட்டுடன் செய்து கொண்டார.  அதே ஆண்டில் மிக உயரமான அஸ்வான் அணை கட்டி முடிக்கப்பட்டது. அதன் வாயிலாக எகிப்தின் பாசனம், வேளாண்மை, தொழில் வளம் எல்லாமே சிறந்திடும் நிலை உருவானது. 1973 ஒக்தோபர் 6ஆம் நாள் யூதர்களுக்குப் புனித நாள்.  அந்த நாளில் இசுரேல் மீது எகிப்தும் சிரியாவும் சேர்ந்து தாக்குதல் தொடுத்தன. போரின் முடிவில் இசுரேல் எகிப்துடன் போர் நிறுத்த உடன்பாடு  செய்து கொண்டது.

1974 சனவரி 18 இல்  அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. 1967 சண்டையின்போது மூடப்பட்ட சுயஸ் கால்வாய் 8 ஆண்டுகள் கழித்து 1975 யூனில்  மீண்டும் திறக்கப்பட்டது.

 1977 இல் வியத்தகு மாற்றங்கள் நிகழ்ந்தன. இசுரேலை அங்கீகரிக்கும் முதல் அரபு நாடாக, எகிப்து செயல்பட்டது. அன்வர் சதாத் இசுரேல் நாட்டுக்குப் போனார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசினார்.  1978 செப்டம்பரில் இரு நாடுகளும் காம்ப் டேவிட் உடன்பாட்டில்  கையெழுத்திட்டன. இசுரேலுடன் அமைதிக்கான ஒப்பந்தம் செய்து கொண்டதை விரும்பாத  சக்திகள் அன்வர் சதாத்தைக் கொன்றன.  நாடு முழுவதும் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்புக்குப் பின்னர் ஹொஸ்னி முபாரக் புதிய ஆட்சித்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எகிப்தின் பரப்பளவு 1,001,450   சதுர கி.மீ. பரப்பு ஆகும்.  இந்நாடு பெரும்பாலும் பாலைவன மேடுகளைக் கொண்டது. இதன் மக்கள் தொகை 8 கோடி ஆகும். சுன்னி முசுலிம்கள் 90 விழுக்காடு உள்ளனர். கிறித்துவர்கள் உட்பட ஏனையோர் 10  விழுக்காடு உள்ளனர். ஆட்சி மொழியாக அரபி மொழி உள்ளது. பெரும்பான்மை மக்கள் ஏழ்மையில் வாடுகிறார்கள். அவர்களது சராசரி வருமானம் நாளொன்றுக்கு 2 டொலர் மட்டுமே!

பண்டை எகிப்தியர்களின் சாதனைகளுள் கணித முறை, கற்கள் உடைப்பு, நில அளவை,  கட்டுமான நுட்பம்,  கண்ணாடித் தொழில்நுட்பம், மருத்துவ  முறை, இலக்கியம், நீர்ப்பாசனம்,  வேளாண்மைத் தொழில்நுட்பம் என்பவை அடங்கும்.  பிற நாட்டவரும் அவர்களுடைய கட்டிடங்களைப்    பார்த்துக் கட்டினர். அவர்களுடைய கலைப் பொருட்கள் உலகம் முழுவதும் உலாவந்தன. அவர்கள் எழுப்பிய  பாரிய பிரமிட்டுகள் அங்கு காணப்படும் பதப்படுத்தப் பட்ட அரசர்களின் சடலங்கள் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகளையும் வரலாற்று ஆசிரியர்களையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களையும் பல நூற்றாண்டுகளாகக் கவர்ந்து வருகின்றன. சுற்றுலாவால் கிடைக்கம் வருமானம் எகிப்தின் பொருளாதார மேம்பாட்டுக்கு அச்சாணியாக விளங்குகிறது. 

துனுசீயா மற்றும் எகிப்தில் இடம்பெற்ற மக்கள் புரட்சி சிறீலங்காவை நினைவு படுத்துகிறது. பலர் மகிந்த இராசபக்சே இன்னொரு பென் அலி அல்லது ஹெசனி முபாரக் எனப் பார்க்கின்றனர். . மகிந்த இராசபக்சே தனது அண்ணன், தம்பி, மகன், மருமக்கள் என எல்லோருக்கும் பதவி வழங்கி இருக்கிறார். நாடாளுமன்ற அவைத்தலைவர், பாதுகாப்பு செயலர்,  பொருளாதார கட்டுமான மேம்பாட்டுஅமைச்சர் என்பன  மகிந்த இராசபக்சேயின்  குடும்பத்தினரால் நிரப்பப்பட்டுள்ளன.  சட்டத்தைத் திருத்தி ஆட்சித்தலைவராக தானே நீடிக்க வழி செய்துள்ளார்.

ஆட்சியைத் தக்க வைக்கவும் ஆட்சியில் நீடிக்கவும் சிங்கள – பவுத்த முழக்கத்தை கையில் எடுத்துள்ளார். நாடு அவசரகால சட்டத்தின் கீழும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழும் ஆளப்படுகிறது. ஊடக சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன. போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். தமிழீழத்தில் கொலை, கொள்ளை, கப்பம், ஆட்கடத்தல் சர்வ சாதாரணமாக நடக்கிறது.

சர்வாதிகாரிகள் பென் அலி மற்றும்  ஹொஸ்னி முபாரக் போன்றவர்கள் மக்களால் நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டது போல்  நாளை மகிந்த இராசபக்சேயும் அவரது குடும்பமும் துரத்தப்படலாம்!  வரலாறு சொல்லும் பாடம் அதுதான்!    

About editor 2991 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply