நீதியின் சக்கரங்கள் மெதுவாகச் சுழல்கின்றன ஆனால் மிக நன்றாக அரைக்கின்றன!

நீதியின் சக்கரங்கள் மெதுவாகச் சுழல்கின்றன  ஆனால் மிக நன்றாக அரைக்கின்றன!

நக்கீரன்

விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்று சொன்னவன் கதையாக “ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் (ஐநாமஉ)  பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்குப்  பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு மேற்குலக நாடுகளினால் முடியாமல் போயுள்ளது” என ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன திருவாய் மலர்ந்துள்ளார். அதாவது ஸ்ரீலங்கா தொடர்பில் ஐநாமஉ பேரவையில் கொண்டுவரப்பட்ட

UN High Commissioner for Human Rights Bachelet, has slammed Sri Lanka's government for reneging on promises to deliver justice to war victims [File: Denis Balibouse/Reuters]

தீர்மானத்துக்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்வில்லை என்கிறார்.

“இலங்கை இந்தத்  தீர்மானத்தை தேவையற்றது என்று கருதுகிறது. இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானம் சட்டவிரோதமானது அதனை இலங்கை நிராகரிக்கிறது” என்றும்  அவர்  தெரிவித்தார்.

Can justice be served 12 years after Sri Lanka’s civil war ended?

இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்றும் அந்த இறையாண்மையை பாதுகாக்கப் படும்  என்றும் குணவர்தன கூறினார். இலங்கையில் தேர்தல்கள் தொடர்பாக ஐநாமஉ பேரவை எழுப்பியுள்ள கவலைகளையும் அமைச்சர் நிராகரித்தார். இலங்கையில் பொறுப்புக்கூறல் சிக்கல் உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் அரசாங்கம் தீர்க்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஐநாமஉ பேரவையில் ஸ்ரீலங்காவுக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னர் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே  அமைச்சர் தினேஷ் குணவர்த்தன  இந்த வாதத்தை முன்வைத்தார்.

அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால் மொத்தம் 47 நாடுகளைக் கொண்ட ஐநாமஉ பேரவையில் 22 நாடுகளே ஐக்கிய இராச்சியம் மற்றும் அதன் நேசநாடுகள் கொண்டுவந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதாவது தீர்மானத்துக்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் செலுத்தப்பட்டிருப்பதுடன் 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.  மொத்தம் 47 உறுப்புநாடுகளில் பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகளும்   எதிர்த்து 25 நாடுகளும் வாக்களித்துள்ளன!

இப்படியான சொத்தை வாதங்களை முன்னர் வெளியுறவு அமைச்சராக இருந்த ஜிஎல் பீரிஸ் அவர்களும் ஒரு காலத்தில் முன்வைத்திருந்தார்.

Sri Lanka : UNHRC adopts resolution against Sri Lanka

ஐநாமஉ பேரவையில் ஒரு தீர்மானம் செல்லுபடியாக வேண்டும் என்றால் அது அறுதிப் பெரும்பான்மை வாக்குகளால் (24) நிறைவேற்றப்பட வேண்டும் என்ற விதியில்லை. அல்லது மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளால் (32)  நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சாதாரண பெரும்பான்மையே போதுமானது.  

Sri Lanka : Sri Lanka urges UNHRC members to reject 'unwarranted' resolution  based on a rejected OHCHR report

வாக்கெடுப்புக்கு முன்னர் ஐநாமஉ பேரவையில் ஸ்ரீலங்காவுக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்தைத் தோற்கடிக்கப் பெரும்பான்மை நாடுகளது ஆதரவு இருப்பதாக அரச தரப்பில் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உட்பட பலர்  வீறாப்போடு பேசியிருந்தார்கள்.

இஸ்லாமிய நாடுகளின் ஆதரவைப் பெற இராசபக்ச அரசாங்கம் மெத்தப் பாடுபட்டது. தொலைபேசி ஊடாக ஆட்சித் தலைவர்   கோட்டாபய இராசபக்ச,  பிரதமர் மகிந்தா இராசபக்ச மற்றும் அமைச்சர் பிரதானிகள்  மெய் வருத்தம் பாராது, பசி நோக்காது,
கண் துஞ்சாது, செவ்வி அருமையும் பாராது  அவர்தம் கருமமே கண்ணாயினார்.

மகிந்த இராசபக்ச பங்காளதேசத்துக்குப் பயணம் செய்து அந்த நாட்டின் ஆதரவை நேரடியாகக் கேட்டார். இஸ்லாமிய நாடுகளைத் திருப்தி செய்ய கொறோனா தொற்றுக் காரணமாக இறந்த முஸ்லிம்களின் சடலங்களை எரிப்பதற்குப் பதில் அடக்கம் செய்யலாம் எனப் படியிறங்கி வந்தார்கள். ஆனால்  அந்த எத்தனங்கள் பலிக்கவில்லை.

LEN - www.lankaenews.com | While Geneva resolution threatening to Gota's  government, India also shows red light..!

அரசாங்கத்துக்குள் இருக்கும் அதிதீவிர சிங்கள – பவுத்த பேரினவாதிகள் இராபக்சாக்களின் முயற்சியை முறியடித்தார்கள். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்  சரத் வீரசேகரா  ஆயிரத்துக்கும்  அதிகமான முஸ்லிம் மதறாஸ் பள்ளிகளை தடைசெய்யப் போவதாக அறிவித்தார். அதோடு நிற்காமல்  பொதுவெளியில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவது தடை செய்யப்படும் எனவும்  அறிவித்தார்.

கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய பொது பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகரா புர்கா அணிவது நாட்டின் பாதுகாப்புக்கு நேரடியாக அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகக் கூறினார். மேலும் புர்கா அணிவது மதத் தீவிரவாதத்தின் அடையாளமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யாரும் தாங்களாகவே பள்ளிகளை தொடங்கி அவர்களின் விருப்பத்துக்கு தேவையானதை கற்பிக்க முடியாது, அரசின் கல்விக் கொள்கைகளுக்கு உட்பட்டே கல்வி பயில வேண்டும் எனவும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

இதற்குப்  பாகிஸ்தான் நாடு இலங்கைக்கான தனது தூதுவர் சாவாட் கத்தாக் மார்ச் 15, 2021 அன்று எதிர்ப்பைத் தெரிவித்தது. “இந்தத் தடை “இலங்கையிலுள்ள   சாதாரண இலங்கை முஸ்லிம்களை மட்டுமல்ல உலகளாவிய முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும்” என டுவீட் செய்தார்.

மதம் அல்லது நம்பிக்கையின் சுதந்திரம் பற்றிய ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் அஹ்மத் ஷாஹீத்  “ஒருவரின் மதம் அல்லது நம்பிக்கை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்தும் உரிமையின் உள்ளார்ந்த சட்ட உத்தரவாதங்களுடன் புர்கா தடை பொருந்தாது” என்று ட்வீட் செய்தார்.

telo.org/wp-content/uploads/2021/02/UNHRC-46-th...

இப்படி ஸ்ரீலங்கா அமைச்சர்கள் ஒருவருக்கு ஓருவர் முரணான செய்திகளைப் பொதுவெளியில் பரவ விட்டார்கள். இதனால் மொத்த இஸ்லாமிய நாடுகளின் ஆதரவு தமக்குக் கிடைக்கும் என்ற ஆசை நிராசையாகப் போய்விட்டது. உலகில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் இந்தோனேசியா (20 கோடி) வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது நடுநிலமை வகித்ததை இங்கு குறிப்பிட வேண்டும்.

ஐநாமஉ பேரவையில் இந்தியா நடுநிலமை வகித்தது பலத்த எதிர்ப்பலைகளை எழுப்பியுள்ளன. ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் இழைத்து விட்டதாக, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின்,   வி.சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழர் தேசிய முன்னணித் தலைவர்  பழ, நெடுமாறன், காங்கிரஸ் கட்சி மாநில மக்களவை உறுப்பினர்  ப. சிதம்பரம் .ஆகியோர் மத்திய பாரதிய ஜனதா அரசைக் கடுமையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதில் ப.சிதம்பரம் அவர்கள் கண்டன அறிக்கை விடுவது வியப்பாக இருக்கிறது. இவரும் இவரது கட்சியும் பதவியில் இருந்த காலத்தில்தான் இந்திய அரசும் இலங்கை அரசும் சேர்ந்து முள்ளிவாய்க்கால் படுகொலைகளை அரங்கேற்றின என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது உண்மைதான். ஆனால் இலங்கை அரசுக்கு ஒரு மறைமுக எச்சரிக்கையை விட இந்தியா பின்நிற்கவில்லை. வாக்கெடுப்புக்கு முன்னர் இந்தியாவின் நிரந்தர தூதுவராலய முதல் செயலாளர் பவன்குமார் பாதே (Pawankumar Badhe) ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில்  கூறப்பட்டுள்ளதாவது:

“இந்தியா அண்டை நாடு என்ற முறையில்  2009 க்குப் பிறகு இலங்கையில் நிவாரணம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகளுக்குப்  பங்களிப்புச்  செய்துள்ளது.  

ஒன்று, இலங்கைத்  தமிழர்களுக்கு சமத்துவம், நீதி, சுயமரியாதை மற்றும் அமைதிக்கு எங்கள் ஆதரவு. மற்றது இலங்கையின் ஒற்றுமை, உறுதிப்பாடு மற்றும் ஆட்புல  ஒருமைப்பாட்டை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது.

இந்த இரண்டு குறிக்கோள்களும் ஒன்றுக்கொன்று ஆதரவளிப்பதாக நாங்கள் எப்போதும் நம்புகிறோம்.  ஒரே நேரத்தில் இரு குறிக்கோள்களையும் நிவர்த்தி செய்வதன் மூலம் இலங்கையின் முன்னேற்றம் உறுதி செய்யப்படுகிறது.

“நல்லிணக்கச்  செயல்முறையை முன்னெடுத்துச் செல்லவும் தமிழ்ச்  சமூகத்தின் வேட்கைகளை நிவர்த்தி செய்யவும் அதன் அனைத்து குடிமக்களின் அடிப்படை சுதந்திரங்களும் மனித உரிமைகளும் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யவும் சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்து ஆக்கபூர்வமாக ஈடுபடவும் இலங்கை அரசு கேட்டுக்கொள்கிறோம்.”

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதன் மூலமும் அனைத்து மாகாண சபைகளும் திறம்பட செயல்பட முடியும் என்பதை உறுதிசெய்வது உட்பட, இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் படி. அரசியல் அதிகாரப் பகிர்வு குறித்த தனது உறுதிப்பாட்டை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்திற்கான பன்னாட்டு சமூகத்தின் வேண்டுகோளை இந்தியா ஆதரிக்கிறது.  13 ஆவது திருத்தத்தை செயல்படுத்த இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்தியாவின் இதே நிலைப்பாட்டை கடந்த பெப்ரவரி 26 அன்று ஐநாமஉ பேரவையில் பேசிய  இந்தியத் தூதுவர் இந்திரா மணி பாண்டே  அவர்கள் பேசியிருந்தது நினைவு கூரத்தக்கது. அவரது  உரை சிறிலங்கா அரசுக்கு ஒரு மறைமுக எச்சரிக்கையாக அமைந்திருந்தது.

India abstains, UNHRC votes against Lanka's rights record - Rediff.com  India News

இந்தியாவின் நிலையான நிலைப்பாடு  இரண்டு தூண்களில் உள்ளது:

(i)  இலங்கையின் ஒற்றுமை மற்றும் ஆட்புல  ஒருமைப் பாட்டிற்கான ஆதரவு.

(ii). சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கவுரவத்திற்கான இலங்கைத் தமிழர்களின் வேட்கைகளுக்கு உறுதியளித்தல்.

இவை  இரண்டில் ஒன்று அல்லது தேர்வுகள் அல்ல. தமிழ்ச் சமூகத்தின் உரிமைகளை மதிப்பது, அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மூலம் உட்பட, இலங்கையின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாக பங்களிக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்.

எனவே, தமிழ் சமூகத்தின் நியாயமான வேட்கைகளை நிறைவேற்றுவது இலங்கையின் சிறந்த நலன்களுக்காக நல்லது  என்று நாங்கள் வாதிடுகிறோம். நல்லிணக்க செயல்முறை மற்றும் இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது உள்ளிட்ட இத்தகைய  வேட்கைகளுக்குத்  தீர்வு காணத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இலங்கையை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். (http://www.dailymirror.lk/breaking_news/India-calls-upon-Sri-Lanka-to-fully-implement-13A-to-address-aspirations-of-Tamil-community/108-

ஐநாமஉ பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தை புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் வரவேற்றிருக்கின்றன. மனித உரிமை காப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை இரண்டும் தீர்மானத்தை வர வேற்றிருக்கின்றன.

இந்த தீர்மானத்தில் தமிழ்மக்களுக்கு சாதகமாக இருக்கும் அம்சங்கள் என்ன?

(1) ஐநாமஉ பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்சிலட் அவர்களுக்கு இலங்கையில் நடந்ததாகக் குற்றம் சாட்டப்படும் தகவல்களையும் ஆதாரங்களையும் சேகரிக்கவும், ஒருங்கிணைக்கவும், பகுப்பாய்வு செய்யவும், பாதுகாக்கவும் அதற்காக அ.டொ 2.8 மில்லியன் செலவில் 12 பல்துறைசார் நிபுணர்களை பணிக்கு அமர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதுது.

(2) இலங்கையில் மனித உரிமைகள் மொத்த மீறல்கள் அல்லது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களுக்கான எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான சாத்தியமான உத்திகளை உருவாக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிர் பிழைத்தவர்களுக்கும் ஆதரவாக வாதாடவும் அனுமதிக்கிறது. 

(3) இலங்கை அரசு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இடையே 26 ஆண்டுகள் நடைபெற்ற இந்த உள்நாட்டுப் போரில் 80 ஆயிரம் பேர் முதல் ஒரு லட்சம் பேர் வரை உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் சபை கருதுகிறது.

(4)  இலங்கை அரசு “பொறுப்புக்கூற வைக்கப்படுவதற்குத் தடையாக” இருப்பதாகக் குற்றம்சாட்டி உள்ளது.

(5)  போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக  ஐயப்படும்  ஆட்கள்  மீது வெளிநாடுகளிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோருகிறது.

(6) இலங்கை அரசு, தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்புமே உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் கொடுமைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

(7) நீதி மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கிறது. 

Sri Lanka minorities tell UNHRC members they face discrimination | Sri Lanka  News | Al Jazeera

மனித உரிமை அமைப்புக்கள் போரினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுப்பதில்  ஒரு முக்கியமான படியாகும் என்றும் தற்போதைய இலங்கை அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும்  கூறுகின்றன.

இந்தத் தீர்மானம் இலங்கை அரசாங்கத்திற்குப் “பாரிய அடியாகும்” என்பதில் ஐயமில்லை.   நாட்டின் போர்க்கால பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய சனாதிபதி கோட்டாபய இராசபக்ச உட்பட பல போர்க்கால இராணுவ தளபதிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு வழிவகுக்கும் என வழக்கறிஞர் யாஸ்மின் சூகா கருத்துத் தெரிவித்துள்ளார்.

நீதியின் சக்கரங்கள் மெதுவாகச் சுழல்கின்றன  ஆனால் மிக நன்றாக அரைக்கின்றன. இதன் பொருள் நீதி விரைவாக செய்யப்படாவிட்டாலும் இறுதியாக அது கிடைக்கம் போது, குற்றவாளி தனது முழுத் தண்டனையையும் பெறுவதிலிருந்து தப்பிக்க மாட்டான்.

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply