கோட்டாபயவின் பவுத்த சித்தாந்தம் ஏனைய மதத்தவர்கள் மீது போர் தொடுக்கும் வெறிபிடித்த சிங்கள – பவுத்தமாகும்!

கோட்டாபயவின் பவுத்த சித்தாந்தம் ஏனைய மதத்தவர்கள் மீது போர் தொடுக்கும்  வெறிபிடித்த சிங்கள – பவுத்தமாகும்!

நக்கீரன்

இலங்கையின் 73 ஆவது சுதந்திர நாள் தென்னிலங்கையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. அதே நேரம் வடக்கிலும் கிழக்கிலும் சுதந்திர நாள் தமிழ்பேசும் மக்களால் கொண்டாடப்படவில்லை. மாறாக அந்த நாள் ஒரு கரிநாளாக, ஒரு துக்கநாளாகக் கொண்டாடப்பட்டது.  காணாமல் போனவர்களது  உறவினர்கள்  கிளிநொச்சியில் கருப்புக் கொடிகளைப் பறக்கவிட்து. வாய்களை கருப்புத் துணியால் கட்டியிருந்தனர்.  பெப்ரவரி 4 சுதந்திர நாளை  கரி நாளாக அனுட்டிக்குமாறு இந்த அமைப்பு பொதுமக்களை அறிக்கை மூலம் கேட்டிருந்தது.

ஒரு நாட்டின் தேசியக் கொடி என்பது அந்த நாட்டின் அடையாளம்.  இந்தியா,தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் பல ஆண்டுகள் போராடி சிறை சென்று, குருதி சிந்தித்தான் அந்நியரிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றன.

இலங்கை இலைவாடாமல் சுதந்திரம் பெற்ற நாடு என்பார்கள். அண்டை நாடான இந்தியா சுதந்திரம்பெற்ற காரணத்தால் இலங்கைக்கும் சுதந்திரம் கிடைத்தது என்பதே உண்மையாகும்.

1945 ஒக்தோபரில் இலங்கைச் சட்டசபையில்  தமிழ் உறுப்பினர்கள் அனைவரும் இலங்கைக்குச’  சுதந்திரம் வழங்கும் சோல்பரி அரசியலமைப்பு வெள்ளை அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக  ஒருமனதாக வாக்களித்ததைத் தொடர்ந்து  பேசிய சுதந்திர இலங்கையின் முதல் பிரதம மந்திரி டி.எஸ். சேனநாயக்க  தமிழ் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களுக்குப் பின்வரும்  வாக்குறுதியை அளித்தார்.

“நீங்கள் இலண்டனில் இருந்து ஆளப்படுவதை விரும்புகிறீர்களா? அல்லது, இலங்கையை,  இலங்கையரால்  ஆள விரும்புகிறீர்களா? இலங்கை தேசிய காங்கிரஸ் சார்பாகவும் (1919 இல் சேர் பொன்னம்பலம் அருணாசலம் அவர்களால் உருவாக்கப்பட்டது) மற்றும் எனது சார்பாகவும், சிறுபான்மை சமூகங்களுக்கு ஒரு சுதந்திர இலங்காவில் எங்களால்  எந்தத் தீங்கும் நடைபெறாது என்று நான் உறுதியளிக்கிறேன். ”

டி.எஸ். சேனநாயக்கா நுனிநாக்கில் தேனும் அடிநாக்கில் நஞ்சும் வைத்துப் பேசினார் என்பது இலங்கை சுதந்திரம் பெற்ற அதே ஆண்டில் அம்பலமாகியது.

மலையகத்தில்  தேயிலை, இரப்பர் தோட்டங்களில் மாடாய் உழைத்து ஓடாய் போன எட்டு இலட்சம் இந்திய வம்சாவழித்  தமிழர்களது குடியுரிமை நொவெம்பர் 15, 1948 இல் நிறைவேற்றப்பட்ட 18 ஆம் இலக்க  சட்டத்தின்  மூலம் பறிக்கப்பட்டது.  1949 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்டம் இல 48 இன் மூலம் அவர்களது வாக்குரிமையும்  பறிக்கப்பட்டது.வாக்குரிமைச் சட்டத்தில் ஒரு ஒற்றைவரி திருத்தத்தைக் கொண்டு வந்து இலங்கைக் குடியுரிமை உள்ளவர்களே தேர்தல்களில் வாக்களிக்கலாம் எனப்பட்டது.

இதனால் 1947 இல் நடந்த தேர்தலில் ஏழு உறுப்பினர்களை நாடாளுமன்றம் அனுப்பி வைத்த மலையக மக்கள் 1952 இல் நடந்த தேர்தலில் ஒருவரைக் கூட நாடாளுமன்றம் அனுப்ப முடியவில்லை.

 டி.ஸ். சேனநாயக்கா தொடக்கி வைத்த கல்லோயா (பட்டிப்பளை), அல்லை – கந்தளாய் போன்ற சிங்களக் குடியேற்றத் திட்டங்களை அவருக்குப்பின் ஆட்சிக்கு வந்த அத்தனை சிங்களத் தலைவர்களும் மேலும் பல பாரிய  திட்டங்களைக்  கிழக்கில் தொடக்கி முடித்தார்கள். இதனால் கிழக்கில் தமிழர்கள் இன்று  சிறுபான்மையராக  மாற்றப்பட்டுள்ளனர்.

வடக்கில் மணலாற்றுத்  (வெலி ஓயா) திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு புதிய பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. பதினெட்டுக் கிராமங்களை உள்ளடக்கிய இந்த மணலாறு (வெலி ஓயா)  பிரதேச செயலாளர் பிரிவில் 3,336 குடும்பங்கள் (11,189 குடியிருப்பாளர்கள்) வாழ்கிறார்கள்.

இப்போது சனாதிபதி கோட்டாபய இராசபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர் வட- கிழக்கில் சிங்கள மயப்படுத்தலோடு பவுத்த மயப்படுத்தல் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனால் வட – கிழக்கில் புராதன இந்துக் கோயில்கள் இருக்கும் இடங்களில் தொல்பொருள் திணைக்களம் மற்றும் சனாதிபதி செயலணி அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. பல ஆயிரம் ஏக்கர் தனியார்  காணிகளை தொல்பொருள் திணைக்களம் அரசிதழ்  மூலம் கையகப்படுத்தி வருகிறது.

இந்தச் செயலணியிலுள்ள பவுத்த தேரரான எல்லாவல மேதானந்த தேரர் கிழக்கு மாகாணத்தில் 10, 000 தொல்பெருள் எச்சங்கள் உண்டு என்றும்  அவற்றில் இதுவரை 1,000 மட்டுமே கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன எனவும்  அவை அழிக்கப்படுகின்றன என்றும் கூறுகிறார். 

அவரை மிஞ்சும் வண்ணம் தொல்லியல் சக்கரவர்த்தி எல்லாவல மேத்தானந்தா தேரர் திருக்கோனேச்சுரம், மகாசேனன் காலத்தில் பவுத்த தலமாக இருந்ததாகவும் பின்னர் இடம்பெற்ற தென்னிந்திய படையெடுப்புக்களால் அது இடிக்கப்பட்டு அந்த இடத்தில்தான் தற்போதுள்ள கோணேச்சுவரம் கட்டப்பட்டதாகவும்  வாதிட்டு வருகின்றார்

இன்று நடந்து முடிந்த இலங்கையின் 73 ஆவது சுதந்திர நாள் வைபவத்தில் பேசிய சனாதிபதி கோட்டபாய “நான் சிங்கள – பவுத்த மக்களது தலைவன். இதைக் கூற நான் ஒருபோதும் தயங்கேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய இராசபக்ச இப்படிப் பேசுவது இது முதல் தடவையல்ல. சனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு முன்னரும் அதன் பின்னரும் எந்த ஒளிவு மறைவின்றி இது போன்று பேசிவருகிறார். தான் சிங்கள – பவுத்த மக்களது வாக்குப் பலத்தினால் மட்டும் சனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவன் எனவே தான் அவர்களது விருப்பப்படியே ஆட்சி செய்வேன் என்கிறார்.

இப்படி வேறு நாட்டு ஆட்சித்தலைவர்கள் பேசுவதில்லை. பேச நினைத்தாலும் பேசக் கூச்சப்படுவார்கள். ஆனால் கோட்டாபய இராசபக்ச அவர்களுக்கு அப்படியான கூச்சம் – மனத்தடங்கல் எதுவுமில்லை.

இந்த ஆண்டும் தமிழில் தேசிய கீதம் பாடப்படவில்லை. ஓரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாட்டுக்கு அமைய தமிழ் மொழி தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் சிங்களவர்கள் போலவே இலங்கையின் பூர்வீக குடிகள். இலங்கையில் விஜயனும் அவனது தோழர்களும்  காலடி எடுத்து வைப்பதற்கு முன்னரே இங்கு பஞ்ச ஈச்சுரங்கள் இருந்திருக்கின்றன.   

1917 ஆம் ஆண்டில் ரோயல் ஏசியாட்டிக் கூட்டத்தின் போது  கலாநிதி  போல் ஈ. பீரிஸ் “ விசயனின் வருகைக்கு முன்பே இந்திய வழிபாட்டு அம்சத்தைக் கொண்டுள்ள பஞ்ச ஈஸ்வரங்கள் காணப்பட்டன” என உறுதிசெய்துள்ளார். (Dr. Paul E. Pieris declared in 1917, at a meeting of the Royal Asiatic Society (Ceylon Branch), that: Long before the arrival of Vijaya there was in Lanka five recognised Ishwarams of Shiva which claimed and received adoration of all India”)

இந்த ஐந்து ஈச்சுரங்கள் நாட்டின் கரையோரப் பகுதிகளில் ஒவ்வொரு திசையிலும் அமைந்திருக்கின்றன. இராவணன் தென் இலங்கையை ஆட்சி செய்த காலத்திலே தட்சிண கைலாயம் எனப் போற்றப்படுகின்ற திருக்கோணேச்சரத்தைப் பூசித்து வந்தான் என்று மட்டக்களப்பு மான்மியம் என்னும் நூல் கூறுகின்றது. இந்த ஐந்து ஈச்சுரங்களில் திருகோணேச்சுரம் மற்றும் திருக்கேதீச்சுரம் பாடல் பெற்ற ஈச்சுரங்கள் ஆகும். 

அனுராதபுரத்தை ஆண்ட தேவநம்பிய தீசன் (கிமு 307 – கிமு. 267 ) என்ற நாகவம்ச மன்னனே பவுத்த மதத்தைத் தழுவிய  முதல் நாக அரசனாவான். விஜயன் முதற்கொண்டு தேவநம்பிய தீசனின் மூத்த சிவன் (கிமு 367 – கிமு 307) வரை எல்லோரும் வைதீக மதத்தினராக இருந்தனர்.

மேலும் பேசிய சனாதிபதி கோட்டாபய இராசபக்ச தான் ஒரு பவுத்தன் என்றும் பவுத்த சித்தாந்தங்களுக்கு அமையவே நாட்டை ஆள்வேன் என்றும்  நாட்டில் அனைத்து இன மற்றும் மதக் குழுக்களுக்கும் உரிய இடத்தை  அரசு வழங்கும் என்றும்  அஹிம்சைவாத பெளத்த வழிகாட்டல்களின் கீழ் நடைமுறையில் உள்ள சட்ட திட்டங்களுக்கு அமைவாக அனைவரும் சமமாக வாழும் உரிமை உண்டு எனத்  திருவாய் மலர்ந்துள்ளார்.

ஆனால் நடைமுறையில்  பவுத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதால் சிங்கள – பவுத்தர்கள் முதல் தர குடிமக்களாகவும் மற்ற மதத்தவர்கள் இரண்டாம், மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள்.

உண்மை என்னவென்றால் புத்தபெருமான் அருளிய பவுத்தம் வேறு,  கோட்டாபய குறிப்பிடும் பவுத்தம் வேறு. கோட்டாபய குறிப்பிடும் பவுத்தம் சிங்கள – பவுத்தம் ஆகும். அது   புத்தர் போதித்த பவுத்த நெறி அல்ல. புத்தர் மனிதர்களிடம் மட்டுமல்ல விலங்குகள், தாவரங்கள்  என சகல உயிரினங்கள் மீதும் அன்பு – கருணை காட்டப்பட வேண்டும் எனப் போதித்தார்.  பவுத்த சித்தாந்தம் மிக எளிமையானது. புத்தர் கண்ட நான்கு வாய்மைகள் ஆவன:


(1) துன்பம் (துக்கம்). மனிதர்களால் துன்பத்தைத் தவிர்க்க முடியாது. பிறப்பு, நோய், முதுமை, இறப்பு ஆகியவை மனிதருக்குத் துன்பத்தைத் தருபவை. பசி, பகை, கொலை, வெகுளி, இழப்பு, மயக்கம் போன்றவையும் துன்பம் தருபவையே.

(2) துன்ப காரணம். துன்பத்துக்கான காரணம் ஆசை அல்லது பற்று.
(3) துன்ப நீக்கம். ஆசையை விட்டுவிடுவதுவே துன்பத்தை நீக்கும் முறைமை.
(4) துன்பம் நீக்கும் வழி. எட்டு நெறிகள்: எட்டு நெறிகளும் துக்கத்தைப் போக்க உதவும் வழிமுறைகள் ஆகும்.

பாலிமொழியில் இவை துக்கம், துக்க காரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என அழைக்கப்படுகிறது. துன்பத்தைப் போக்கி வீடு பேறாகிய நிர்வாண மோட்சத்தையடைவதற்குரிய வழி யாதெனில், அட்டாங்க மார்க்கம் என்னும் எட்டு வகை  ஒழுக்கத்தை மேற்கொண்டு ஒழுகுவதாகும். அஷ்டாங்க மார்க்கமாவன:

1. நற்காட்சி, 2. நல்லூற்றம், 3. நல்வாய்மை, 4. நற்செய்கை  5. நல்வாழ்க்கை 6. நல்லூக்கம் 7. நற்கடைப்பிடி மற்றும் 8. நல்லமைதி. 

இந்த அஷ்டாங்க மார்க்கத்தில் சீலம் (ஒழுக்கம்), சமாதி (தியானம்), பஞ்ஞா (ஞானம்) என்னும் மூன்றும் அடங்கும்.

சீலம் என்பது பஞ்ச சீலம், அஷ்டாங்க சீலம், தச சீலம் என மூன்று வகைப்படும். பஞ்ச சீலமாவது:

1. ஓருயிரையும் கொல்லாமலும் தீங்கு செய்யாமலும் இருத்தலோடு அவற்றிடம் அன்பாக இருத்தல்.

2. பிறர் பொருளை இச்சிக்காமலும் களவு செய்யாமலும் இருத்தல்.

3. முறை தவறிய சிற்றின்பத்தை நீக்குதல்.

4. உண்மை பேசுதல், பொய் பேசாதிருத்தல்.

5. மயக்கத்தையும், சோம்பலையும் உண்டாக்குகிற மதுபானங்களை உட்கொள்ளாமை.

இந்தப் பஞ்ச சீலங்கள் இல்லறத்தார்க்கு உரியன. இவற்றோடு,

6. இரவில் தூய்மையான உணவை மிதமாக உண்ணல்.

7. பூ, சந்தனம், வாசனைச் சுண்ணம், எண்ணெய் முதலிய நறுமணங்களை நுகராமை.

8. பஞ்சணை முதலியவற்றை நீக்கித் தரையில் பாய்மேல் படுத்து உறங்குதல். 

என்னும் மூன்றையும் சேர்த்து அஷ்டசீலம் (எட்டு ஒழுக்கம்) என்பர். அஷ்டசீலம் இல்லறத்தாரில் சற்று உயர்நிலை அடைந்தவர் ஒழுக வேண்டிய ஒழுக்கங்களாகும். இவற்றோடு,

9. இசைப்பாட்டு, கூத்து, நாடகம் முதலிய காட்சிகளைக் காணாதிருத்தல்.

10. பொன், வெள்ளி முதலியவற்றைத் தொடாதிருத்தல்.  

ஆகிய இவை இரண்டும் சேர்த்துத் தசசீலம் (பத்து ஒழுக்கம்) எனப்படும். 

தசசீலம் தேரர்கள் ஒழுகவேண்டிய ஒழுக்கமாகும். தசசீலத்தில் ஒழுகும் துறவி, சிற்றின்பத்தை அறவே ஒழிக்கவேண்டும். தசசீலங்களை மேற்கொண்டு, அடக்கமான பேச்சையும், அடக்கமான செயலையும் உடையவராய், உலகப் பற்றுக்களை நீக்கித் துறவறத்தை மேற்கொண்டவரே தேரர் ஆவர்.

புத்தரின் மேற்கண்ட  சித்தாந்தங்களுக்கு அமைய கோட்டாபய இராசபக்ச ஆட்சி செய்தால் சிக்கல் இல்லை. ஆனால் நடைமுறையில் நாம் காணும் பவுத்தம் ஏனைய மதத்தவர்கள் மீது போர் தொடுக்கும் வெறிபிடித்த  சிங்கள – பவுத்தமாகும்.

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply