திருக்குறள்

திருக்குறள்


வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்

(அதிகாரம்:வலியறிதல் குறள் எண்:471)

பொழிப்பு (மு வரதராசன்): செயலின் வலிமையும், தன் வலிமையும், பகைவனுடைய வலிமையும், இருவர்க்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செய்யவேண்டும்.

மணக்குடவர் உரை: செய்யும் வினையினது வலியும் தனக்கு உண்டான வலியும் பகைவனது வலியும் தனக்கும் பகைவர்க்கும் துணையாயினார் வலியும் எண்ணிப் பின்பு வினைசெய்க.
இது வலியறியும் இடம் கூறிற்று.பரிமேலழகர் உரை: வினை வலியும் – தான் செய்யக்கருதிய வினைவலியையும், தன் வலியும் – அதனைச் செய்து முடிக்கும் தன் வலியையும், மாற்றான் வலியும் – அதனை விலக்கலுறும் மாற்றான் வலியையும், துணைவலியும் – இருவர்க்குந் துணையாவார் வலியையும், தூக்கிச் செயல் – சீர்தூக்கித் தன் வலிமிகுமாயின் அவ்வினையைச் செய்க.
(இந் நால்வகை வலியுள் வினைவலி அரண் முற்றலும் கோடலும் முதலிய தொழிலானும், ஏனைய மூவகை ஆற்றலானும் கூறுபடுத்துத் தூக்கப்படும். ‘தன்வலி மிகவின்கண் செய்க’ என்ற விதியால்,தோற்றல் ஒருதலையாய குறைவின் கண்ணும், வேறல் ஐயமாய ஒப்பின் கண்ணும் ஒழிக என்பது பெற்றாம்.)கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: செய்யுஞ் செய்கையின் திறத்தையும் தன்னுடைய ஆற்றலையும் எதிரியின் வலிமையையும் துணை நிற்பாரது ஆற்றலையுஞ் சீர்தூக்கிப் பார்த்து ஒன்றைச் செய்தல் வேண்டும். .

பொருள்கோள் வரிஅமைப்பு:

வினை வலியும், தன் வலியும், மாற்றான் வலியும், துணைவலியும் தூக்கிச் செயல்.பதவுரை: வினைவலியும்-செயலின் வலிமையும், மேற்கொள்ளப்போகும் முயற்சியின் திறத்தையும்; தன்வலியும்-தனது வலிமையும், முயற்சி மேற்கொள்வானது ஆற்றலையும்; மாற்றான்வலியும்-பகைவன் வலிமையும்; துணைவலியும்-துணை நிற்பாரது ஆற்றலையும், உதவுவோர் வலிமையும்; தூக்கி-அளந்தறிந்து; செயல்-செய்க.

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செய்யும் வினையினது வலியும் தனக்கு உண்டான வலியும் பகைவனது வலியும் தனக்கும் பகைவர்க்கும் துணையாயினார் வலியும்;
பரிப்பெருமாள்: செய்யும் வினையினது வலியும் தனக்கு உண்டான வலியும் பகைவனது வலியும் தனக்கும் பகைவர்க்கும் துணையாயினார் வலியும்;
பரிதி: நாலுவகை அரணின் சத்துவமும், தன் சத்துவமும், மாற்றார் சத்துவமும், தனக்குத் துணையானவர்கள் சத்துவமும்; [நால்வகைஅரண்- மலையரண், காட்டரண், நீரரண், நிலவரண்; சத்துவம் – வலிமை;]
காலிங்கர்: தான் செய்யும் கருமத்தின் வலியும், தனது வீரப்பாட்டின் வலியும், தனக்கு எதிர்மாற்றான் வலியும், தனக்கு உதவும் படைத்துணை வலியும், மாற்றார்க்கு உதவும் படைத்துணை வலியும்; [வீரப்பாட்டின் – வீரம்]
பரிமேலழகர்: தான் செய்யக்கருதிய வினைவலியையும், அதனைச் செய்து முடிக்கும் தன் வலியையும், அதனை விலக்கலுறும் மாற்றான் வலியையும், இருவர்க்குந் துணையாவார் வலியையும், [இருவர்க்கும்-தனக்கும் தன் பகைவனுக்கும்]’செய்யும் வினையினது வலியும் தனக்கு உண்டான வலியும் பகைவனது வலியும் தனக்கும் பகைவர்க்கும் துணையாயினார் வலியும்’ என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.இன்றைய ஆசிரியர்கள் ‘செயல், தான், பகைவன், துணைவன் என்ற எல்லா வன்மைகளையும்’, ‘தான் செய்ய நினைத்த செயலின் வலிமை, தன் வலிமை, பகைவன் வலிமை, தனக்கும் பகைவர்க்கும் துணையாவார் வலிமை’, ‘செய்யுஞ் செய்கையின் திறத்தையும் தன்னுடைய ஆற்றலையும் எதிரியின் வலிமையையும் துணை நிற்பாரது ஆற்றலையும்’, ‘தான் செய்வதற்கு கருதியுள்ள வினையின் வலிமையையும் அதனைச் செய்து முடிப்பதற்குரிய தனது வலிமையையும், தன் செயலைக் கெடுக்கக்கூடிய பகைவனுடைய வலிமையையும் தனக்குத் துணையாய் இருந்து உதவக்கூடிய துணைவர் வலிமையையும்’, என்ற பொருளில் உரை தந்தனர்.செயலின் வலிமை, தன்வலிமை, பகை வலிமை, துணைநிற்பார் வலிமை ஆகியவற்றை என்பது இப்பகுதியின் பொருள்.தூக்கிச் செயல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எண்ணிப் பின்பு வினைசெய்க.
மணக்குடவர் குறிப்புரை: :இது வலியறியும் இடம் கூறிற்று.
பரிப்பெருமாள்: எண்ணிப் பின்பு வினைசெய்க.
பரிப்பெருமாள் :குறிப்புரை: இது வலியறியும் இடம் கூறிற்று.
பரிதி: விசாரித்துச் செய்க என்றவாறு.
காலிங்கர்: சீர் தூக்கிக் கொள்க;
காலிங்கர் குறிப்புரை: எனவே மற்று இவை மாற்றானிலும் தனக்கு மிக உளவாயின் அவனொடு தான் வினை செய்வானாக; அல்லது நட்பின்கண் பொருந்துவது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: சீர்தூக்கித் தன் வலிமிகுமாயின் அவ்வினையைச் செய்க.
பரிமேலழகர் குறிப்புரை: இந் நால்வகை வலியுள் வினைவலி அரண் முற்றலும் கோடலும் முதலிய தொழிலானும், ஏனைய மூவகை ஆற்றலானும் கூறுபடுத்துத் தூக்கப்படும். ‘தன்வலி மிகவின்கண் செய்க’ என்ற விதியால்,தோற்றல் ஒருதலையாய குறைவின் கண்ணும், வேறல் ஐயமாய ஒப்பின் கண்ணும் ஒழிக என்பது பெற்றாம். [மூவகை ஆற்றல்-அறிவு, ஆண்மை, பெருமை; ஒருதலையாய – உறுதியாய; வேறல் – (வெல்தல்) வெல்லுதல்]’எண்ணிப் பின்பு வினைசெய்க’ என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.இன்றைய ஆசிரியர்கள் ‘சீர்தூக்கிச் செய்க’, ‘ஆகியவற்றை ஆராய்ந்து தன் வலிமை மிகுந்திருந்தால் ஒருவன் செயலைச் செய்க’, ‘சீர்தூக்கிப் பார்த்து ஒன்றைச் செய்தல் வேண்டும்’, ‘ஆராய்ந்து எதனையும் செய்தல் வேண்டும்’ என்றபடி பொருள் உரைத்தனர்.சீர் தூக்கிச் செயலைக் கொள்க என்பது இப்பகுதியின் பொருள்.


நிறையுரை:

செயலின் வலிமை, தன்வலிமை, பகை வலிமை, துணைநிற்பார் வலிமை ஆகியவற்றைச் தூக்கிச் செயல் என்பது பாடலின் பொருள்.
‘தூக்கிச் செயல்’ என்றால் என்ன?
முயற்சியில் தொடர்புடைய அனைத்து வன்மைகளையும் தெரிந்து தொடங்குக.செயல் தொடங்கும் முன்னர் செயலின் திறன், தனது ஆற்றல், போட்டியாளர் ஆற்றல், தனக்கும் போட்டியாளர்க்கும் துணைநிற்பார் ஆற்றல் இவற்றை அளந்தறிக.
வலி என்ற சொல் வலிமையைக் குறிப்பது. இதற்குத் திறமை என்றும் ஆற்றல் என்றும் பொருள் கூறுவர். போர் ஏற்பாடுகளாகட்டும், தொழில், வணிக திட்டங்களாகட்டும் எந்த வகை முயற்சி மேலாண்மைக்கும் பொருந்துமாறு சொல்லப்பட்டுள்ள பாடல் இது.
வினை வலியாவது, அதன் எளிமையும் அருமையும் உணர்வது, செயலுக்கு தேவையான முயற்சி அதனை முடிக்கும் திறமை, செய்ய வேண்டிய முறை, செய்தால் வரும் நன்மை தீமை இவற்றின் நிலையறிதல் ஆகும்.
தன்வலி, என்பது தன்னிடத்தேயுள்ள பொருள்வலிமை, மனிதவள வலிமை, மனவலிமை முதலியவற்றைக் குறிக்கும்.
மாற்றான்வலி யாவது போட்டியாளரது வன்மையைச் சொல்வது.
குறளில் துணைவலி என்று மட்டுமே உள்ளது; ஆனால் இதற்கு பழைய உரையாசிரியர்கள் தனக்குத் துணைவருவார் வலியும் தனது பகைவனுக்குத் துணை வருவார் வலியும் எனப் பொருள் உரைத்தனர்.இன்றைய மேலாண்மைக் கோட்பாட்டில், ஒரு திட்டம் செயல்படுத்த முடிவெடுக்கும் முன் அதன் வெற்றி வாய்ப்புக்களை ஆராய்ந்து அறியும் முறை ஒன்றுள்ளது. மேலாண் வல்லுநர்கள் வகுத்த அக்கருவியை ஆங்கிலத்தில் SWOT Analysis என்று அழைப்பர். SWOT- அதன் கூறுகளை விளக்கும் ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்துக்களின் கூட்டாகும், அதன் விரிவாக்கமாவது:
S Strength – பலம்
W Weakness – பலவீனம்
O Opportunity – வாய்ப்பு
T Threat – எதிர்ப்பு
நம்முடைய பலம், திறமை என்ன என்பதனை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்; நம்முடைய பலவீனம், குறை எதுவாக இருந்தாலும் அதனை முதலில் நீக்கிக் கொள்ள வேண்டும்; முன்னேறுவதற்கு என்னென்ன வாய்ப்புக்கள் உள்ளனவோ அவற்றை ஆராய்ந்து தேடிக் கண்டு கொள்ள வேண்டும்; நமக்கு என்னென்ன இடையூறுகள், எதிர்ப்புக்கள் ஏற்படும் என்பனவற்றைக் கண்டறிந்து அவற்றை எதிர்கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும்; நமக்கு இரண்டு கண்கள் என்றால் நம்மீது இரண்டாயிரம் கண்கள்.
இவற்றைப் பற்றித்தான் SWOT Analysis விரிவாக ஆய்வு செய்யும். இவ்விதம் ஆய்வதையே, வள்ளுவரும் தனது மொழியில், மேற்கொள்ளச் சொல்லியுள்ளார் இப்பாடலில்.
‘தூக்கிச் செயல்’ என்றால் என்ன?தூக்கிச் செயல் என்ற தொடர்க்கு எண்ணிப் பின்பு வினைசெய்க, விசாரித்துச் செய்க, சீர் தூக்கிக் கொள்க, சீர்தூக்கித் தன் வலிமிகுமாயின் அவ்வினையைச் செய்க, சீர் தூக்கிப் பார்த்துத் தன்வலி மிகுமாயின் அவ்வினையைச் செய்க, ஆராய்ந்து செய்யவேண்டும், சீர்தூக்கிப் பார்த்துத் தன் வலிமை கூடுதலாக இருக்குமாயின் அவ்வினையச் செய்ய வேண்டும், சீர் தூக்கிப் பார்த்து தன் வலி மிக்குயர்ந்து இருப்பின் செய்ய நினைத்த செயலைத் தொடங்குக, சீர்தூக்கிச் செய்க, ஆராய்ந்து தன் வலிமை மிகுந்திருந்தால் ஒருவன் செயலைச் செய்க, நிறுத்து அளந்து கொண்டு (அதன்பிறகு அதைச்) செய்ய வேண்டும், ஆராய்ந்து செய்தல் வேண்டும், சீர்தூக்கிப் பார்த்து ஒன்றைச் செய்தல் வேண்டும், ஆராய்ந்து எதனையும் செய்தல் வேண்டும், சீர்தூக்கிப் பார்த்துத் தன் வலி மிகுதியாக இருக்குமானால் செய்க (இல்லையேல் விடுக) என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.செயல், செய்பவன், போட்டியாளன், துணைவன் என்ற எல்லா வன்மைகளையும் சீர்தூக்கி ஆய்ந்து கருதிய செயலில் தொடங்க வேண்டும். இவற்றுள் செயல்வலி, தன்வலி துணைவலி என்னும் மூவகை வலியும் மாற்றானிலும் தனக்கு மிக உளதானால் செயல் மேற்கொள்ளலாம்.. குறைந்து தோன்றுமாயின் தோல்வி வாய்ப்பு மிகை என்று அறிந்து வினை கைவிடப்படும்; ஒத்துத் தோன்றுமாயின் வெற்றி ஐயுறவானது என்று கொள்ளப்பட்டு மறு சீராய்வு செய்யப்படும். இதுவே தூக்கிச் செய்வது ஆகும்.இங்குச் செய்க என்ற பொருளில் செயல் என்ற வினைப் பெயர் பயன்படுத்தப்படுகின்றது. ‘செய்க’ என்பதைவிட ‘செயல்’ என்றது அழுத்தம் தருவதாக உள்ளது. எதை எதைச் செய்யவேண்டுமோ, அதை அதைச் செய்யவேண்டும் என்ற துணிவுப் பொருளில் ‘செயல்’ என்ற சொல் பயன்படுத்தியுள்ளமை இங்கே குறிப்ப்பிடத்தக்கது (ச அகத்தியலிங்கம்).’தூக்கிச் செயல்’ என்ற தொடர் சீர்தூக்கிப் பார்த்துச் செய்க எனப் பொருள்படும்.
செயலின் வலிமை, தன்வலிமை, பகை வலிமை, துணைநிற்பார் வலிமை ஆகியவற்றைச் சீர் தூக்கிச் செயலைக் கொள்க என்பது இக்குறட்கருத்து.
ஏனைய குறள்களையும் அவற்றின் பொருளையும் இந்த முகவரியில் பார்க்கவும்.
http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0471.aspx
About editor 2991 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply