சிங்கள பௌத்த மேனியாவும், சமஷ்டி போபியாவும்

அடிப்படைவாதம்அரசியல் தீர்வுஇனப் பிரச்சினைஇனவாதம்கட்டுரைகொழும்புசிங்கள தேசியம்ஜனநாயகம்ஜனாதிபதித் தேர்தல் 2015தமிழ்தமிழ்த் தேசியம்தேர்தல்கள்பொதுத் தேர்தல் 2015மனித உரிமைகள்வட மாகாண சபைவடக்கு-கிழக்கு

சிங்கள பௌத்த மேனியாவும், சமஷ்டி போபியாவும்

SARAWANAN NADARASA

August 26, 2015

ஏறத்தாழ சகல பிரதான தேர்தல் பிரசார மேடைகளிலும் தவறாத பேசுபொருளாக சமஷ்டி குறித்த சர்ச்சை பெரிதாக எழுந்திருந்தத்தை கண்டிருப்பீர்கள்.

சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களுக்கு சமஷ்டி குறித்த பேரச்ச வெருண்ட உணர்வு (phobia) இனவாதிகளால் வளர்க்கப்பட்டு இன்று தாமும் அதற்குள் அகப்பட்டு அந்த நோய்க்கு இலக்காகி உள்ளனர் என்றே கூறவேண்டும். வெறித்தனமான சிங்கள பௌத்த மேலாதிக்க உணர்வென்பது (mania) ஏனைய இனங்களின் மீதான வெறுப்புணர்ச்சியையும், காழ்ப்புணர்ச்சியையும் மிகையாக வளர்த்தெடுத்து அதுவும் ஒரு தீரா நோயாகவும், பரப்பும் நோயாகவும் ஆக்கப்பட்டுள்ளது.

சமஷ்டி பற்றி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுட்டியிருந்ததைத்தான் சர்ச்சைக்கு உள்ளாக்கியிருந்தது பேரினவாத தரப்பு. முக்கிய சிங்களத் தலைவர்களின் கருத்துக்களைக் கவனியுங்கள்.

சமஷ்டியின் வரலாறு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அது தொடங்கப்பட்ட 2001ஆம் ஆண்டிலிருந்தே சமஷ்டியை விட அதிகமான சுயாட்சி உள்ளடக்கத்தைக் கொண்ட சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தித்தான் வந்துள்ளது. கூட்டமைப்பானது இந்தத் தேர்தலிலும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பேரிலேயே அதே வீடு சின்னத்தில் போட்டியிட்டது. தமிழரசுக் கட்சியை எடுத்துக்கொண்டால் ஆரம்பம் தொட்டே அதன் தலையாய சுயாட்சி தீர்வாக சமஷ்டியை வலியுறுத்தி வந்திருக்கிறது. தமிழில் இலங்கை ‘தமிழ்+அரசு’ கட்சி என்று அழைக்கப்படும் அதேவேளை ஆங்கிலத்தில் ‘Federal party’ (சமஷ்டிக் கட்சி) என்றே எப்போதும் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. 1970ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கூட சமஷ்டி அரசியலமைப்பை முன்வைத்தே போட்டியிட்டது. 1977இல் வடக்கு – கிழக்கு பகுதிகளில் தனித் தமிழீழத்துக்கான மக்கள் ஆணை பெறப்பட்டது.

1925 இலேயே இலங்கைக்கு ஏற்ற சரியான அரசியல் முறைமை சமஷ்டிதான் என்று முதன்முறை அறிவித்தவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க. “முற்போக்கு தேசிய கட்சி” என்கிற ஒரு கட்சியையும் ஆரம்பித்து அந்த கட்சியின் கொள்கையாக சமஷ்டி எப்படி அமைய வேண்டும் என்பதையும் அறிவித்தவர் அவர். “நமது நாட்டில் வாழும் வெவ்வேறு இனங்களை கருத்திற்கொள்கின்ற போது அதற்குரிய தீர்வு சமஷ்டி அரசியலமைப்பு முறையே” என்று அந்த கட்சியின் திட்டத்திலும் கூறப்பட்டிருந்தது.

டொனமூர் ஆணைக்குழுவுக்கும் அதன் பின்னர் சோல்பரி ஆணைக்குழுவுக்கும் கூட பல அமைப்புகள், சமஷ்டியை முன்மொழிந்திருக்கின்றன. பண்டாரநாயக்கவின் “முற்போக்கு தேசிய கட்சி” “மலைநாட்டு தேசிய சபை” (உடரட்ட ஜாதிக்க சபாவ) போன்ற கட்சிகள் சமஷ்டியை வலியுறுத்திய வேளை தமிழர் தரப்பிலிருந்து சமஷ்டிக்கு எதிர்ப்புதான் கிளர்ந்தன. அப்போது ஹன்டி பேரின்பநாயகத்தின் தலைமையிலான “யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ்” கூட சமஷ்டியை எதிர்த்ததுடன் ஐக்கிய இலங்கையை வலியுறுத்தியது.

தமிழ் காங்கிரஸ் அலுவலகத்தில் குமாஸ்தாவாக பணிபுரிந்த மயில்வாகனம் நாகரத்தினம் என்பவர் சோல்பரி ஆணைக்குழுவுக்கு சமஷ்டி திட்டம் பற்றி 30.01.1945 அன்று மனு கொடுத்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்டார். அவரை பணிநீக்கம் செய்த மூவரில் இருவர் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் மற்றவர் தந்தை செல்வா. ஆனால், அதே தந்தை செல்வா காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்று 18.12.1949 அன்று புதிய கட்சி தோற்றுவித்தபோது அக்கட்சிக்கு சமஷ்டி கட்சியென்றே ஆங்கிலத்தில் பெயரிட்டார்.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையின் போது இனவாத சலசலபுக்களுக்கும் மத்தியில் சமஷ்டி முறைமைக்கு இணக்கம் எட்டப்பட்டிருந்தது. அது முழு வரைபை எட்டுவதற்கு முன்னர் பேச்சுவார்த்தை தோல்வி கண்டது. 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கூட மேலும் வலிமையான சொல்லாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இப்படி குறிப்பிடப்பட்டிருந்தது

“தமிழ்த் தேசிய இனத்தின் தாயகம் – தேசியம் – தன்னாட்சி – சுயநிர்ணய உரிமை – ஆகிய மூலாதாரக் கொள்கைகளை ஏற்று அவற்றின் அடிப்படையில் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.”

2005இல் வவுனியாவில் நடத்தப்பட்ட பேராளர் மாநாட்டிலும் அதே வரி அப்படியே பிரகடனப்படுத்தப்பட்டது.

யுத்தத்தின் பின்னர் கூட்டமைப்பு அந்த வரிகளை அப்படியே கைவிட்ட போதும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமது தமிழ் தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கைகளில் அப்படியே அந்த வரிகளை தொடர்வதை காணக்கூடியதாக இருக்கிறது. ஆனாலும், தென்னிலங்கை இனவாதிகளின் கண்காணிப்புக்குள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பே இலக்கு வைக்கப்பட்டிருப்பதால் அவர்களின் மீதுதான் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

ஆகவே, ‘சமஷ்டி’ என்கிற பேசுபோருளோ, அந்தப் பதமோ இலங்கையின் அரசியலுக்குள் இன்று நேற்று வந்ததல்ல. ஆனால், யுத்தத்தின் பின்னர் அது பேசப்படக்கூடாத ஏறத்தாள தடை செய்யப்பட்ட சொல்லைப் போல ஆக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞாபனம் என்ன சொல்கிறது?

கூட்டமைப்பு சமஷ்டி விடயத்தில் பிரக்ஞையுடன்தான் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியிருக்கிறதா என்பது தனியான ஆய்வுக்குரிய ஒன்று. ஆனால், 1977 சொற்களைக் கொண்ட அந்த விஞ்ஞாபனத்தில் இரண்டே இடத்தில் மட்டுமே சமஷ்டி குறித்து பேசப்படுகிறது. அதில் ஒன்று ஒஸ்லோ உடன்படிக்கையை நினைவூட்டுவது. இரண்டாவது தமது நிலைப்பாட்டை அறிவிப்பது. அந்த நிலைப்பாடு இதுதான்.

“முன்னர் இருந்தவாறு ஒன்றுபட்ட வடக்கு – கிழக்கு அலகைக்கொண்ட சமஷ்டிக் கட்டமைப்பிற்குள்ளே அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்”.

இவ்வளவுதான். “முன்னர் இருந்தவாறு” என்று முன்னர் இருந்திராத ஒன்றை ஏன் குறிப்பிடுகிறார்கள் என்பதில் தெளிவில்லை. ஆனால், “தொடர்ந்து” என்பது போன்ற பதப்பிரயோகங்களைக் கவனித்தால் அது அழுத்தமான ஒரு சமஷ்டிக் கோரிக்கை அல்ல என்பது புலப்படும். ஆனால், தென்னிலங்கை சிங்களக் கட்சிகள் இதைத்தான் ஊதிப்பெருப்பித்து இனவாத பிரசாரத்துக்கு திசை திருப்பப்பட்டுள்ளது.

உஷ்… தணிக்கை!

யுத்தத்தின் பின்னர் தமிழர் அரசியலின் பேரம் பேசும் ஆற்றல் குரல்வளை நெரிக்கப்பட்ட நிலைக்கு உள்ளானது. தமிழர் அரசியல் அதற்குரிய தகுதியை இழந்துவிட்டதாகவும், ஒட்ட நறுக்கப்பட்டுவிட்டதாகவும் நம்புகிறது பேரினவாதம். அரசியல் உரிமைகள் பற்றி ஆகக் குறைந்தபட்ச விடயங்களைகூட செவிசாய்க்க மறுக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளது. அதுமட்டுமன்றி இன உரிமை குறித்த சொல்லாடல்களைக்கூட கடும் தொனியில் எதிர்த்து, எச்சரித்து வாயை மூடச்செய்யும் நடவடிக்கை தொடர்கிறது. அப்படியான சொல்லாடல்கள் தமிழ் இனவாத சொல்லாடல்களாகவும், தேசதுத்ரோக சொல்லாடலாகவும் புனையப்பட்டு ஈற்றில் பயங்கரவாத முயற்சியாக சித்தரிக்கப்பட்டு விடுகிறது. எனவே, இந்த “பயங்கரவாத” சொல்லாடல்களை தமிழர் அரசியல் போக்கு சுயதணிக்கைக்கு உள்ளாக்கிவிடுகிறது. அடக்கி வாசிக்க எத்தனிக்கிறது. அந்தப் பதங்களுக்கான மாற்றுப் பதங்களை தேடியலைய விளைகிறது. அல்லது அவற்றை தவிர்த்து “இராஜதந்திர” சொல்லாடல்களை கையாள நிர்ப்பந்திக்கப்படுகிறது.

இனி அப்படி செய்ய மாட்டோம், பேச மாட்டோம் என்று சிறுபிள்ளை மன்றாட வேண்டியிருக்கிறது; சாமி சத்தியம் செய்ய வேண்டியிருக்கிறது; இரங்கி ஒப்புவிக்க வேண்டியிருக்கிறது; நிரூபிக்க வேண்டியிருக்கிறது.

ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் போது தமிழீழத்துக்கு மாற்றாக சமஷ்டியை ஒப்புக்கொண்ட சிங்கள அரசு இன்று அந்த சொல்லை விபத்தாகக் கூடப் பாவித்து விடாதீர்கள் என்று மிரட்டும் நிலை தற்செயல் நிகழ்வல்ல.

தாம் பிரிவினைவாதத்தையோ (அதிகாரப்பரவலாக்கம்), பயங்கரவாத்தையோ (உரிமைப்போராட்டம்), இனவாதத்தையோ (தேசியவாதம்) ஆதரிப்பதில்லை என்று பேரினவாதச் சூழலிடம் சத்தியம் செய்து கொடுக்கும் அவல நிலை தமிழர் அரசியலுக்கு உருவாகியுள்ளது. இது ஒரு கையறு நிலை மாத்திரமல்ல. அரசியல் தற்கொலைக்கு ஒப்பான பயங்கர நிலை.

அதிகாரத்தைப் பகிர்வதற்கோ, பரவலாக்குவதற்கோ தென்னிலங்கை கிஞ்சித்தும் தயாராக இல்லை என்பது தெட்டதெளிவானது. தாம் விரும்புவதை மட்டுமே கொடுக்கும் பிச்சை என்றே புரிந்துவைத்துள்ளது சிங்களப் பேரினவாதம். சமஷ்டியே தனிநாட்டுக்கான முதற்படி என்று சிங்கள பெரும்பான்மை மக்களிடம் திரித்து புனையப்பட்டுள்ளது.

இந்த நிலைமை தமிழர் அரசியலுக்கு மட்டுமல்ல மலையக, முஸ்லிம் மகளுக்கும் அதே கதி நேர்ந்துள்ளது. கடந்த காலங்களில் மலையகத்துக்கான தனியான அதிகார அலகு, முஸ்லிம்களுக்கான தென்கிழக்கு மாகாண அலகு போன்ற விடயங்களும் அரசியல் அரங்கிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மலையக தேசியம், முஸ்லிம் தேசியம் போன்ற பதங்கள் கூட சுய தணிக்கைக்கு உள்ளாகியுள்ளன. அவை பேசுபொருளாக அரசியல் தளத்தில் இன்று இல்லை என்பதை கவனமாக நோக்க வேண்டும்.

புலி, ஈழக்கொடி, ஈழக்கோரிக்கை, பிரிவினைவாதம், பயங்கரவாதம், டயஸ்போரா, சதி, சர்வதேச தலையீடு, போர்க்குற்ற விசாரணை போன்ற பதங்கள்தான் இனவாத மேடைகளை அலங்கரித்து வருகின்றன. மஹிந்தவின் பிரசார மேடைகள் அனைத்தும் அப்படித்தான் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

பெரும்பாலான சிங்கள இணையத்தளங்களிலும், ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பாரிய அளவு சமஷ்டி சர்ச்சைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இது ஒரு நாட்டை துண்டாடுவதற்கான திட்டம் என்கிற கோணத்திலேயே செய்தியிடல்களும், ஆய்வுகளும் அமைந்திருக்கின்றன. சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி விட்டுள்ளன. அதற்கு உரம் சேர்க்கும் வகையில் பிரதான கட்சியான மஹிந்த தரப்பின் அனைத்து கூடங்களிலும் முக்கிய பேசுபொருளாக ஆனது. தேசிய இனங்களை ஒடுக்குவதற்காக பேரினவாதம் கைகொள்ளும் புதிய வடிவம் இவ்வாறுதான் பிரயோகிக்கப்படுகிறது என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும்.

சுயநிர்ணய உரிமை, தன்னாட்சியுரிமை, தாயகம், வடக்கு – கிழக்கு இணைப்பு, தனி நாட்டுக் கோரிக்கை, ஈழம், தனியான அதிகார அலகு, அதிகாரப் பரவலாக்கம், அதிகாரப் பகிர்வு போன்ற பதங்கள் அரசியல் உரையாடலில் காணாமல் போயுள்ளன. அது தற்செயலல்ல.

சமஷ்டி என்ற சொல்லுக்கு சிங்கள மக்கள் பயப்படுகிறார்கள். எனவே, அந்த சொல்லை பயன்படுத்தாமல் உள்ளர்த்தம் சிதையாதபடி வேறு ஒரு பதத்தைப் பாவிக்கலாம் என்று இலங்கையின் முன்னணி அரச சார்பற்ற நிறுவனத்தின் சிரேஷ்ட நிர்வாகி ஒருவர் சமீபத்தில் கூறினார். இந்த நிறுவனம் அதிகார பகிர்வு, சமஷ்டி குறித்து பல வருட காலமாக இயங்கி வரும் முக்கிய அமைப்பு. இதே கருத்துப்பட பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் பல இடங்களில் கூறிவந்தார். திஸ்ஸ விதாரண முன்னாள் அமைச்சர் மாத்திரமல்ல, அவர் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர், அதுபோல இனப்பிரச்சினைத் தீர்வுக்காக நியமிக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அவர்.

“…கூட்டமைப்பு இந்த நேரத்தில் இப்படி அறிவித்திருக்கத் தேவையில்லை. தென்னிலங்கை இனவாதிகளை அனாவசியமாக உசுப்பிவிட்டார்கள்…” என்று பல தென்னிலங்கை சிங்கள ஜனநாயக தரப்பினர் சிலர் புலம்புவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. அவர்கள் கூட சுயதணிக்கையைத் தான் முன்மொழிகிறார்கள்.

இலங்கையில் பாசிசத்தின் இருப்பானது இனவாதத்தை கொதிநிலையில் வைத்திருத்தலிலேயே தங்கியிருக்கிறது. சமஷ்டியை பூதமாக சிருஷ்டித்து உலவவிடுவது அந்த நிகழ்ச்சிநிரலின் அடிப்படையிலேயே.

27.07.1926 அன்று யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டமொன்றில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க ஆற்றிய உரையின் ஒரு பகுதி இன்றைய சமஷ்டி போபியா உள்ள இனவாதிகளுக்கு முன்வைப்பது பொருந்தும் என்று நினைக்கிறேன்.

“இந்த முறைமையை ஆயிரக்கணக்கானோர் எதிர்க்கக்கூடும். அந்த எதிர்ப்பு தனிந்ததன் பின்னர் இலங்கைக்கு பொருத்தமான ஒரே தீர்வு ஏதோ ஒரு வடிவத்திலான சமஷ்டி முறையே என்பதில் சந்தேகமிருக்காது.”

சமஷ்டிக்கு எதிரான வெளிப்பாடுகள்

மகிந்த ராஜபக்‌ஷ – முன்னாள் ஜனாதிபதி

“முதலில் இந்த நாட்டை பிரித்து, சமஷ்டியை உருவாக்கி அடுத்த கட்டமாக ஈழம் அமைக்கும் சதித்திட்டத்துக்கு நான் எதிர்வரும் 17 அன்று முற்றுப்புள்ளி வைப்பேன்”

(12.08.2015 பிலியந்தல பிரசார கூட்டத்தில்)

“ரணில் தலைமையிலான ஆட்சி அமைந்தால் அவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேவையை நிறைவுசெய்து சமஷ்டியையோ, ஈழத்தையோ உருவாக்கிவிடுவார்கள். அதன் பின்னர் வடக்கு கிழக்குக்கு நாம் விஸா எடுத்துத்தான் செல்ல வேண்டும்.”

(06.08.2015 சிலாபம் பிரசார கூட்டத்தில்)

தினேஷ் குணவர்தன – மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர்

கூட்டமைப்பின் விஞ்ஞாபனமானது நாட்டின் தாய்நாட்டை துண்டாடும் ஆபத்தும், தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலையும் உருவாக்கியுள்ளது.

(10.08.2015 திவய்ன பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில்)

முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க

“சமஷ்டியா..? ஒற்றையாட்சியா..? தீர்ப்பு 17 அன்று”

(08.08.2015 ஸ்ரீ.ல.சு.க அலுவலகத்தில் நடந்த ஊடக மாநாட்டில்)

பிரதமர் ரணில்

அவர்கள் 1952 இலிருந்தே கேட்கிறார்கள். அதில் ஒன்றும் ஆச்சரியமல்ல. அப்போதும் கிடைக்கவில்லை அல்லவா…? நாங்கள் ஐக்கிய இலங்கைக்குள் இதனை தீர்ப்போம் என்கிறோம். 13 விட அடுத்த கட்டத்திற்கு போகலாம் என்று மஹிந்த தான் கூறினார். மன்மோகன் சிங்கிடம் ஒப்புக்கொண்டார் அவர். இந்தியாவில் அது எழுத்திலேயே இருக்கிறது.

(தெரண தொலைக்காட்சிக்கு ஆக. 11 வழங்கிய நீண்ட பேட்டியின் போது)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்படப்பட்டிருக்கும் சமஷ்டியை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அவர்களுடன் அது குறித்த எந்த ஒப்பந்தமும் நாங்கள் செய்துகொள்ளவுமில்லை.

(13,08.2015 ஊடக மாநாட்டில்)

உதய கம்மன்பில (பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர்)

ஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தை பகிர்வது என்பது கடன் கொடுப்பது போன்றது. நீங்கள் கொடுக்கலாம், அதுபோல திருப்பிப் பெறலாம். ஆனால், சமஷ்டி என்பது பரிசைக் கொடுப்பது போன்றது. நீங்கள் பரிசைக் கொடுக்கலாம், திருப்பிப் பெற முடியாது. அப்படியும் திருப்பி பெற வேண்டுமென்றால் பரிசை வாங்கிக் கொண்டவர் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும். அது பயங்கரமானது. ரணில் ஆட்சிக்கு வந்தால் சமஷ்டி கட்டாயம் கொடுக்கப்படும். இந்தியாவும், அமெரிக்காவும் இதன் பின்னணியில் இருக்கின்றன.

(திவய்ன 02.08.2015 நேர்காணல்)

அனுர குமார திசாநாயக (தலைவர் –ஜே.வி.பி)

சமஷ்டி முறையை நாங்கள் எதிர்க்கிறோம். 1977இல் தனிநாட்டுக்காக வாக்களிக்கும்படி கேட்டவர்கள். அவர்கள் உசுப்பிவிட்ட விடயம் அவர்களின் கைமீறி ஆயுதக்குழுக்களுக்கு இறுதியில் கைமாறியது. வடக்கில் இப்போது இனவாத போக்கு வளரத் தொடங்கியுள்ளது. இந்த இனவாதப் போக்குக்கு இடமளிக்கக்கூடாது. பிரிந்து போகவோ, துண்டாடி பிரிக்கப்படவோ, அரசியல் ரீதியில் பிரிக்கப்படவோ ஜேவிபி இடமளிக்காது.
(13.08.2015 சிங்கள பி.பி.சி சேவைக்கு வழங்கிய நேர்காணல்)

ரில்வின் டி சில்வா (செயலாளர் – ஜே.வி.பி)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமது இயலாமையை மூடிமறைக்க இனவாதத்தைத் தூண்டி தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கிறது.

(02.08.2015 ஊடக மாநாட்டில்)

பேராசிரியர் நளின் டீ சில்வா

18.05.2009க்குப் பின்னர் சுயநிர்ணய உரிமை, சமஷ்டி, அதிகாரப் பகிர்வு போன்றவை காலாவதியாகிவிட்டன. போலி சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அவை நிராகரிக்கப்பட்டு நந்திக்கடலில் அவை முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டுவிட்டது. இவையெல்லாம் பிரச்சினையை தீர்ப்பதற்கான யோசனைகளை அல்ல. சிங்கள பௌத்த பண்பாட்டை இல்லாதொழிப்பதற்கும், பலவீனப்படுத்துவதற்கும் கொணரப்பட்ட யோசனைகள்.

(நளின் டீ சில்வாவின் உத்தியோகபூர்வ இணையத்தளமாண காலய – 06.08.2015)

அஜித் பீ.பெரேரா (பிரதி வெளிவிவகார அமைச்சர்)

கூட்டமைப்பின் சமஷ்டி தீர்வு யோசனையை ஐ.தே.க கண்டிக்கிறது.

(29.07.2015 ஐ,தே.க தலைமையகத்தில் நடந்த ஊடக மாநாட்டில்)

முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும

“வட்டுக்கோட்டைப் பிரகடனத்துக்கு நிகரானது இது. நல்லிணக்கத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும், பிரிவினைவாதத்தைத் தூண்டும்”

(28.07.2015 ஊடக மாநாட்டில்)

முன்னாள் வட கிழக்கு மாகாண அமைச்சர் தயான் ஜயதிலக்க

“கார்ல் மார்க்ஸ் சமஷ்டியை எதிர்த்தார். ஒற்றையாட்சித் தன்மைக்கே தனது ஆதரவை வழங்கினார். அந்த அடிப்படையிலேயே நானும் இந்த சமஷ்டியை எதிர்க்கிறேன். சமஷ்டி என்பது அதிகாரங்களை மீளப்பெறமுடியாத அமைப்புமுறை. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் புதிய அரசியலமைக்கு ஊடாக இந்த ஒற்றையாட்சி முறைமை இல்லாமலாக்கப்படும். கட்டுப்படுத்த முடியாத நிலைமை உருவாகும். 13ஆவது திருத்தச்சட்டம் ஒற்றயாட்சித் தன்மையின் எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனவே, 13க்கு மேல் போகலாம் என்பதன் அர்த்தம் ஒற்றயாட்சித்தன்மையை அழிக்கும் செயல். ஐக்கிய இலங்கைக்குள் என்பது சுத்த பம்மாத்து.”

(தொலைகாட்சி பேட்டியில்)

“சமஷ்டி எனும் துருப்பிடித்த ஈழக்கோரிக்கை” எனும் தலைப்பில் திவய்ன பத்திரிகையில் வெளியான ஆசிரியர் தலையங்கம் இப்படி முடிகிறது (02.08.2015)

“…தங்கையை காட்டி அக்காளை மணமுடித்து வைப்பதற்கு எத்தனிப்பவர்கள் இன்னமும் பிரபாகரனின் ஈழக்குப்பை கூலத்தில் தான் வாழ்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்…”

“குரகுல போன்றோரின் சமஷ்டி வலிப்பு” எனும் தலைப்பில் வெளியான திவய்ன ஆசிரியர் தலையங்கம் இப்படி கூறுகிறது (13.08.2015)

“இந்த சமஷ்டி கதையாடல்கள் சும்மா வெற்று வதந்தி அல்ல. தேர்தலில் வாக்குகளை பெறுவதை இலக்கு வைக்கப்பட்டதுமல்ல. இதன் மூலம் சர்வதேச சதிவலை ஒன்றைப் பின்னுவதற்காக நாடிபிடித்தறியும் முயற்சி. நாட்டை துண்டாடும் அவசியம் இல்லை என்று சுமந்திரன் கூறினாலும் கூட குருகுலராஜா, சிவாஜிலிங்கம் போறோர் மேடைகளில் தெளிவாக தமது சமஷ்டி இலக்கை கூறி வருகின்றனர். சிங்களத்தில் ஒரு பழ மொழி உண்டு. வாய் பொய் கூறினாலும் நா பொய்யுரைக்காது என்பார்கள்”

https://nakkeran.com/wp-admin/post.php?post=13487&action=edit

Related

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply