Impact of Mahavamsa on post-independence Political history of Sri Lanka?

பெயரிடாக் கடிதமும் பெயரிட்ட பதிலும்

கம்பவாரிதி இ.ஜெயராஜ்

இலங்கையிலிருந்து ளிவரும் ஈழநாடு மற்றும் உதயன் பத்திரிகைகளில் அண்மையில் பிரசுரிக்கப்பட்ட, கம்பவாரிதியை நோக்கி எழுதிய, ஆனால் யார் எழுதியது எனப் பெயரிடாத கடிதத்திற்கு, கம்பவாரிதியின் பதில்…

உளம் நிறைந்த அன்பு நண்பன் மனோகருக்கு,
‘காக்கா’ என்ற உங்கள் புனைபெயரைச் சொல்லி அழைப்பதைவிட,
முதன் முதலாய் நான் அறிந்த உங்களின் இயற் பெயரைச் சொல்லி அழைப்பதிலேயே, எனக்கு அதிகம் மகிழ்ச்சி உண்டாகிறது.
போராட்டத்தின் பின்னர் சமூகச் செயற்பாடுகளுக்குள் கலந்து இயங்கிவரும் நீங்கள், பெயரிடாமல் கடிதம் ஒன்றை எழுதியது  பிழையான ஒரு முன்னுதாரணம். உதயன், ஈழநாடு பத்திரிகைகள், பெயரிடப்படாத ஒரு கடிதத்தை வெளியிட்டமை,  அதைவிடப் பிழையான முன்னுதாரணம்.
அதனால்த்தான் அக்கடிதத்திற்கான பதிலை, அவர்களுக்கு எழுதாமல் ‘காலைக்கதிருக்கு’ எழுதுகிறேன். பெயரிடப்படாவிட்டாலும் உங்கள் எழுத்தின் மூலம் உங்களை அறிந்துகொண்டேன். உங்கள் எண்ணங்களைத் துணிந்து சொன்ன நீங்கள், பெயரை மட்டும் மறைத்து வைத்த மர்மம் புரியவில்லை.
நீங்கள் ஆயிரம் காரணங்களைச் சொன்னாலும், அச் செயலில் உங்களது நிமிர்வின்மை வெளிப்படுவதாகவே நினைக்க வேண்டியிருக்கிறது.
போகட்டும் அதை விட்டுவிடுவோம்!

நம்புவீர்களோ இல்லையோ உங்களது புதல்வனின் இழப்புப் பற்றி, 
உங்களின் அக் கடிதம் மூலமே தெரிந்து கொண்டேன்.
உணர்வின் விளிம்பிலேயே வாழ்ந்து பழகிய நீங்கள்,
எப்படித்தான் அந்த இழப்பைத் தாங்கிக் கொண்டீர்களோ தெரியவில்லை.
காலமும் இறைவனும் உங்களை ஆறுதல் செய்ய வேண்டிப் பிரார்த்திக்கிறேன். இனி உங்கள் கடித விடயம் பற்றிப் பார்க்கலாம். 

சுருக்கமான விடயத்தை மிக நீண்ட கடிதத்தின் மூலம் தெரிவித்திருந்தீர்கள்.

என் மீதான அன்புப் பதிவுகள் சில. தலைவர் பிரபாகரன் மீதான விருப்புப் பதிவுகள் சில. சுமந்திரன்  மீதான வெறுப்புப் பதிவுகள் சில. முன்னாள் முதலமைச்சர் மீதான நம்பிக்கைப் பதிவுகள் சில.

இவ்வளவும்தான் உங்கள் கடிதத்தில் பதிவாகியிருந்த மொத்த விடயங்கள்.

அக்கடிதத்தில் பதிவாகியிருந்த என்மீதான உங்கள் அன்பும் நம்பிக்கையும் மனதை நெகிழ்வித்தன. ‘ஜெயராஜ் ஏமாந்துதான் போவாரே ஒழிய ஏமாற்றுபவரல்ல என்பதை உரத்துச் சொல்வேன்’ என்ற, உங்கள் கருத்து மனதை மகிழ்வித்தது, நன்றி.
இக்கடிதத்தின் மூலம் எமக்கிடையிலான உறவு அறுந்து போகாது என நம்பிக்கை தெரிவித்திருந்தீர்கள். அதிலென்ன சந்தேகம்? இருவருமே சமூக நலம் நோக்கியே சிந்திக்கிறோம். முடிவு ஒன்றானாலும் நம்பிக்கைகள் வேறாகின்றன, அவ்வளவுதான். காலம் தான், யார் கருத்து சரி என்பதை நிர்ணயிக்க வேண்டும்.
இனத்தின் மீதான உங்களது பக்தியையும் அதற்கான தியாகத்தையும் நான் நன்கு அறிவேன்.
என்றும் நீங்கள் என் அன்புக்குரியவர்தான். அதில் என்றைக்கும் எதனாலும் மாற்றம் வராது.

பிரபாகரனையும் சுமந்திரனையும் நான் ஒப்பிட்டதாகச் சொல்லி மனம் வருந்தியிருந்தீர்கள்.
அது உங்கள் உணர்ச்சிகரப் பார்வையால் வந்த தவறான பதிவு என்றே நினைக்கிறேன்.
நான் பிரபாகரனையும் சுமந்திரனையும் ஒப்பிடவில்லை, ஒப்பிடவும் மாட்டேன்!
எனது கட்டுரையில் அவ்விருவர்தம் காலத்தேவையைத்தான் ஒப்பிட்டிருக்கிறேன்.
அஃது உணராமல் நீங்கள் காட்டும் உணர்ச்சிவயப்பாடு மிகையானது.

சுமந்திரனோடு பிரபாகரனை நான் ஒப்பிட்டதாய்க் கற்பனை பண்ணிக் கொதிக்கும் உங்களிடம், ஒன்றைக் கேட்கவேண்டியிருக்கிறது. 
அண்மையில் முன்னாள் முதலமைச்சர் பல இடங்களிலும் வெளியிட்டு வரும் ஓர் செய்தியை,
நீங்கள் கவனித்தீர்களோ என்னவோ தெரியவில்லை.
‘சோழர்களின் புலிக்கொடி மௌனிக்கப்பட்டுவிட்டது.
இனிமேல் பட்டொளிவீசிப் பறக்கப்போவது எங்களது பாண்டியக் கொடியான மீன் கொடிதான்’ 
என்று பகிரங்கமாக அவர் அறிவித்து வருகிறார்.
இப்போது சொல்லுங்கள், இது முன்னாள் முதலமைச்சர் தன்னோடு ஒப்பிட்டுச் செய்யும், பிரபாகரனுடனானதும் புலிகளுடனானதுமான ஒப்பீடு இல்லையா?
நானாவது சுமந்திரன், பிரபாகரன் ஆகியோர்க்கிடையிலான காலத்தேவையைத்தான் ஒப்பிட்டேன். 
இவர் தனது கூற்றில் பிரபாகரனது தோல்வியை எடுத்துக் காட்டி,
அவருக்கு அடுத்த தலைவராகத் தன்னைத்தானே பிரகடனப்படுத்தி வருகிறார்.
இவை எல்லாம் உங்களுக்கு ரோஷத்தைத் தராதா?

இவர்மட்டும் பிரபாகரனுக்கு எதிரான இரண்டாவது சூரியன் ஆகமுடியுமா?
பிரபாகரனின் புலிக்கொடியை நீக்கி தனது மீன்கொடிதான் இனித் தமிழர்க்கு என்று அவர் உரைப்பது பிரபாகரனுக்குச் செய்யும் அவமரியாதை இல்லையா?
அவர் கூற்று உண்மையானால் இனிமேல் தமிழர்கள் மாவீரர் தினத்தில்,
புலிக்கொடிக்குப் பதிலாக மீன்கொடியைத்தான் ஏற்றுவார்களா?

வலியக் கொழுவி விடுகிறேன் என்று நினைக்காதீர்கள்.
முன்பு நீங்கள் கேட்டதைத்தான் இப்பொழுது நான் கேட்டிருக்கிறேன் அவ்வளவே!

இனஅழிப்புத் தொடர்பான வடமாகாணசபைப் பிரேரணையை,
தான் சார்ந்த கட்சிக்கு மாறாக முன்னாள் முதலமைச்சர் அனுப்பியதில் எனக்கு உடன்பாடில்லை.
தன்னை அரசியலுக்கு அழைத்து வந்த தலைமையோடு முரண்படவே அவர் அக்காரியத்தைச் செய்தார்.
அது அனைவரும் அறிந்த உண்மை.
சர்வதேசத்தின் உதவியுடன் ‘அதைச்செய்வேன், இதைச்செய்வேன்’ என்று,
அறிக்கைப்போர் நடத்திவரும் முன்னாள் முதலமைச்சர்,
சர்வதேச அளவில் இதுவரை இனநன்மை நோக்கிய ஒரு சிறுகாரியத்தைக் கூட, சாதிக்கவில்லை.
அதனைச் சுட்டிக்காட்டவே அந்த விபரத்தை எழுதினேன்.
‘பிள்ளை பிறக்காமல் விட்டதற்காக திருமணம் செய்த முயற்சியைத் தவறென்பீர்களா?’
என்று கேட்டிருக்கிறீர்கள், அதே கேள்வியை மீண்டும் உங்களிடமும் கேட்க விரும்புகிறேன்.
நல்லாட்சி அரசாங்கத்தில் நம்பிக்கை வைத்து ஒரு தீர்வுத்திட்டத்தை சாத்தியப்படுத்த,
சுமந்திரனால் செய்யப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தமைக்காக,
அவரைக் குற்றம் சாட்டுவது மட்டும் எப்படி நியாயமாகுமாம்?
‘மாமியார் உடைத்தால் மட்குடம் மருமகள் உடைத்தால் பொற்குடமா?’
சிந்தித்தால் உங்களின் முரண் உங்களுக்கே தெரியவரும்.

ஐ.நா மனித உரிமைகள் சபையில் அரசாங்கத்திற்குக் கால அவகாசம் கொடுத்தது பற்றியது,
உங்களது அடுத்த கேள்வி.
ஐ.நா. ம.உ சபையின் செயற்பாடுகள் பற்றிய அறியாமையின் வெளிப்பாடாகவே,
அக்கேள்வியை நினைக்க வேண்டியிருக்கிறது. இதுபற்றி நான் முன்பும் எழுதியிருக்கிறேன்.
உண்மை நிலையை நீங்கள் தெரிந்து கொள்வதற்காக அதனை இங்கு சுருக்கமாய்த் தருகிறேன்.
இலங்கை அரசுக்கு ஐ.நா. மனித உரிமைகள் சபையால் கால அவகாசம் வழங்கப்படாத பட்சத்தில், இப் பிரேரணைக்குத் தான்  வழங்கிய அனுசரணையை இலங்கை வாபஸ் பெற்றுக்கொள்ளும். அங்ஙனம் அது வாபஸ் பெற்றால் பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் சபையால், இலங்கையைக் கட்டுப்படுத்த முடியாது போய்விடும். அதனால் இலங்கை அரசு உலக அரங்கிலிருந்து தப்பித்துக்கொள்ளும் என்பதுவே உண்மை நிலை. மேற்சொன்னது நடந்தால் பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் சபையால் இரண்டே இரண்டு வழிகளில்த்தான் இலங்கையை நிர்ப்பந்திக்க முடியும். அதில் ஒன்று, மேற்படி சபையின் உறுப்புநாடுகள் போர்க்குற்றத்தோடு சம்பந்தப்பட்டவர்களை, தத்தம் நாடுகளில் நீதியின் முன் நிறுத்தல். அதுவும் அவ்வவ்நாடுகளில் அதற்குரிய சட்ட ஏற்பாடுகள் இருந்தால் மட்டுமே சாத்தியமாம். அடுத்தவழி, போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்லுதல். முன்பு ‘ரோம்’ நகரத்தில் நடந்த மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகள் போன்ற சில விடயங்களுக்காக, குறித்த நாடுகளை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துதல் பற்றி செய்யப்பட்ட, ‘ரோம்’ உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திடவில்லை. அதனால் இலங்கையை நேரடியாக சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தவும் முடியாது. அங்ஙனம் நிறுத்தவேண்டுமாயின் அதுபற்றிய பிரேரணை, ஐ.நா. பாதுகாப்புச்சபையில் அங்கீகரிக்கப்படவேண்டும். அங்கும் மேற்படி விடயம் நடக்க வாய்ப்பேயில்லை. காரணம் இலங்கைக்கு நெருக்கமான சில நாடுகள், அச்சபையில் ‘வீற்றோ’ அதிகாரம் பெற்றிருக்கின்றன. எனவே அங்கு அப் பிரேரணை தோல்வியடைவது நிச்சயமாம். அதனால் இலங்கையை உள்வைத்துக்கொண்டே, சிலவிடயங்களுக்குத் தீர்வு காண்பது அவசியம் என்பதால்த்தான், மேற்படி விடயத்தில் கால அவகாசம் வழங்க கூட்டமைப்பு முன்வந்தது.
இந்த உண்மை  தெரியாமல் உங்களைப் போன்றோர்,
இலங்கையைக் காப்பாற்றத்தான் கூட்டமைப்பு காலஅவகாசம் வழங்கச் சம்மதித்தது என்றாற்போல,
தவறாக விளங்கி, மற்றவர்களையும் பிழையாக வழி நடத்திக்கொண்டிருக்கிறீர்கள்.

அடுத்ததாக முதலமைச்சருக்கும் கம்பன்கழகத்திற்குமான தொடர்பு பற்றிய உங்கள் விமர்சனம்.
சரியாகத் தெரிந்து கொள்ளாமல் அந்த விமர்சனத்தையும் யார் சொல்லையோ கேட்டு,
தவறாய்ப் பதிவாக்கியிருக்கிறீர்கள்.
அவருக்கும் கழகத்திற்குமான பிரிவு பற்றி, முன்பே பலதரம் எழுதியிருக்கிறேன்.
அதனாலும், இது கழகத்தின் தனிப்பட்டபிரச்சினை என்பதாலும்,
அது பற்றிய கேள்வி தங்களுக்கும் சமூகத்திற்கும் தேவையற்றது என்பதாலும்,
அதனை இங்கு விட்டுவிடுகிறேன், ஆனால் ஒன்றைச் சொல்லவேண்டும்.
நானே அவரை அரசியல் படுகுழியில் தள்ளியதாய் பின்னர் எழுதியிருக்கிறீர்கள்.
நீங்கள் சொன்னது போல எனக்கும் நீதியரசருக்கும் முரண்பாடு ஏற்பட்டிருக்குமாயின்,
பின்னர் முதலமைச்சர் பதவிக்காய் அவரை நான் சிபாரிசு செய்திருக்கமாட்டேன்,
அது கூடவா உங்களுக்குத் தெரியவில்லை?
உங்கள் கூற்றுகளின் முரண்பாட்டை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.
அவரை அரசியல் படுகுழியில் நான் தள்ளிவிட்டதாய்ச் சொல்லுகிறீர்கள்.
அந்த படுகுழிக்குள் கிடக்கத்தானா, அவர் இத்தனை பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்?

‘கூட்டமைப்புக்குள் தகுதியானவர்கள் மேலெழும்ப சுமந்திரன் விடுகிறார் இல்லை.’
என்பது உங்களது அடுத்த குற்றச்சாட்டு,
ஆற்றல் உள்ளவர்களை யாராலும், எப்போதும் அடக்கிவைக்க முடியாது.
அதற்கு நீங்களும் நானுமே கூட சாட்சிகளாவோம்.
மற்றவர்கள் தமது ஆற்றலின்மைக்கு, சுமந்திரனைக் குற்றம் சொல்வதில் பயனில்லை.
ஒருவர் ஒதுங்கி இடம்விட்டுத்தான், மற்றவர் வெளிவரவேண்டும் என்றால் அவர்தம் ஆற்றலை என்சொல்ல?
பிரபாகரன் என்ற சுயம் மிக்க தலைவரை ஏற்ற நீங்கள் இக்கூற்றினைச் சொல்லலாமா?
ஒரு சிறு ஆலம்வித்து விழுந்து, முளைத்து, பெரும் சுவரையே இடித்துத் தள்ளுவதை, நீங்கள் காணவில்லையா? அதுதான் உண்மை ஆற்றல். ‘நான் மேலே வர அவர் விடவில்லை, இவர் விடவில்லை’ என்பதெல்லாம்,
வீண் ஒப்பாரிப் புலம்பல்கள் தான்.

மாநகரசபை மேயர் தெரிவு பற்றிய உங்கள் கருத்து,
உங்களைத் தமிழினத்தின் பிரதிநிதியாய் அன்றி,
ஒரு அரியாலை மனிதனாகவே பதிவாக்கியிருக்கிறது.
இனம்பற்றிச் சிந்திக்கும் நிலையில் ஊர்பற்றிச் சிந்திப்பது முறையாகுமா?
இதை உங்களிடம் நான் எதிர்பார்க்கவில்லை.

சுமந்திரனுக்கு எதிராக முன்னாள் முதலமைச்சரை நீங்கள் சிபாரிசு செய்வது நகைப்பைத் தருகிறது.
அவர் தலைமையை நான் ஏன் கண்டிக்கிறேன் என்பது பற்றி முன்பும் பலதரம் எழுதிவிட்டேன்.
அவரது முரண்களை உங்களுக்காகவும், சமூகத்திற்காகவும் மீண்டும் ஒருதரம் பட்டியலிடுகிறேன்:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் முன்பாக சத்தியப்பிரமாணம் எடுக்கக் கூடாது என்று தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றைய மாகாணசபை உறுப்பினர்களைக் ‘கிளப்பி’ விட்டுவிட்டு, பின்னர் திடீரென மற்றவர்களைக் கைவிட்டு குடும்ப சமேதராய் மட்டும் சென்று மஹிந்தவின் முன் சத்தியப்பிரமாணம் எடுத்தமை.

 மாகாணசபை அமைச்சர் பதவியை சுரேஷ் பிரேமச்சந்திரனின் தம்பியாருக்கு வழங்கமாட்டேன் என பிடிவாதம் பிடித்துப் பகைக்கு வித்திட்டு விட்டு, பின்னர் கூட்டமைப்புடன் பகை வந்ததும் அதே நபருக்கு அமைச்சுப் பதவி வழங்கியமையும், இன்று அவர்களுடனேயே கூட்டமைத்துத் தேர்தலில் நிற்கின்றமையும்.

 ‘வீட்டை விட்டு வெளியேறி சைக்கிளில் சென்று வாக்களியுங்கள்’ என்று மறைமுகமாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு முன்பு ஆதரவளித்துவிட்டு இன்று அவரோடும் பகைத்து நிற்கின்றமை.

அரசியற்கைதிகளை விடுவிக்கவில்லை என இன்று கூட்டமைப்பைக் குற்றம் சாட்டும் இவர் அவர்களின் விடுதலை பற்றி இந்தியப்பிரதமருக்கு ஒன்றுமே எழுதாமல், உச்ச நீதிமன்றத்தால் கொலை, கற்பழிப்புக் குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட தனது குருநாதர் பிரேமானந்தா சாமியாரின் சீடர்களின் விடுதலை கோரி கடிதம் அனுப்பியமை.

தானே அமைத்த விசாரணைக்குழு, தனக்கு வேண்டப்பட்ட அமைச்சரை ஊழல்காரராக இனம் காண, அந்த விசாரணைக்குழுவிலேயே சந்தேகம் தெரிவித்து தன் ஆதரவாள அமைச்சரைக் காப்பாற்ற முயன்றமை.

தனது கையாளாக இயங்கிய மாகாணசபை அமைச்சர் விசாரணைக்குழுவால் குற்றம் சாட்டப்பட, அவருக்காக மற்றைய அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்தமையும், இன்று நீதிமன்றத்திடம் குட்டுப்பட்டு நிற்கின்றமையும்.

அன்று எந்த அமைச்சருக்காக வாதிட்டாரோ அவர் இம்முறை தனித்துத் தேர்தலில் நிற்க, இன்று அவரை விமர்சிக்கின்றமை.

கூட்டமைப்புக்குள்  இருந்துகொண்டே தலைமைக்குத் தெரியாமல் ‘தமிழ்மக்கள்பேரவை’ உருவாக்கத்தில் கலந்து கொண்டமையும் அப்பேரவைக் கூட்டத்திற்கு ‘மாவையை’ ஏன் அழைக்கவில்லை என்ற கேள்விக்கு ‘அவரது தொலைபேசி இலக்கம் தன்னிடம் இல்லை’ என நகைப்பிற்கிடமான பொய் கூறியமையும்.

enlightenedதமிழ்மக்களுக்கு வாய்ப்பாக வந்த பல திட்டங்களை, தனது வீண் பிடிவாதங்களால் இழக்கச் செய்தமை.

enlightenedகூட்டமைப்பில் குற்றம்சாட்டத் தொடங்கிய பின்னும் கடைசிவரை அவர்களால் தரப்பட்ட பதவியில் ஒட்டிக்கொண்டிருந்தமையும், ‘அரசாங்கத்திடம் எதுவும் எதிர்பாராதீர்கள்’ என்று மக்களிடம் கூறிவிட்டு, பதவி விலகும் நேரத்தில் தனக்கான வாகனத்தை அரசிடம் இரந்து நின்று இழிவுபட்டமையும்.

enlightenedதமிழ்மக்கள் பேரவைக்கு அரசியல் நோக்கம் இல்லை என்றும், அது  மக்களின் அமைப்பு என்றும் முன்னர் கூறிவிட்டு, பின்னர் அப்பேரவைக் கூட்டத்திலேயே தனது கட்சியை அங்குரார்ப்பணம் செய்தமை.

enlightenedஒரு காலத்தில் இவருக்கு ‘முண்டு’ கொடுத்த கஜேந்திரகுமார் அவர்கள் அண்மையில் முகநூலில் வெளியிட்டிருக்கும் தனது பேட்டியில் இவரது பதவி ஆசை குறித்து தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார். அதுபோலவே தற்போது இவரோடு இணைந்து தேர்தலில் குதித்திருக்கும் அனந்தி அவர்களும் தனது பேட்டி ஒன்றில் இவர் உண்டாக்கியிருக்கும் கூட்டணியை கொள்கையிலாக் கூட்டணி என்று குறிப்பிட்டிருக்கின்றார். இவை மூலம் வெளிப்படும் இவரது நம்பகத்தன்மையில்லா அரசியல் நிலைமை.

இவை அவரது குளறுபடிகளை வெளிப்படுத்தும் ஒருசில சான்றுகளே.
மற்றவற்றை, கட்டுரையின் விரிவஞ்சி விட்டுவிடுகிறேன்.
இனத்தின் நன்மைகளைக் குழிபறித்துப் புதைக்கும்,
முதலமைச்சரின் மேற்படி செயல்கள் பற்றி என்ன சொல்லப்போகிறீர்கள்?
உங்கள் தலைவர் பிரபாகரன் இன்று உயிரோடிருந்திருந்தால்,
தன்னைப் புகழ்கிறவர்களைவிட இனத்தின் நன்மைகளை உயர்த்துகிறவர்களையே, நிச்சயம் மதித்திருப்பார் என்பது கூடவா உங்களுக்கத் தெரியவில்லை. 

முதலமைச்சரை முன்னர் சிபாரிசு செய்துவிட்டு, பின்னர் கண்டிப்பதாய் என்மீது குற்றம் சாட்டுகிறீர்கள்.
முன்னர் ஆதரித்தமைக்காக, பிழைகண்ட பின்பும் ஆதரிக்க வேண்டும் என்ற,
உங்களின் கூற்று தங்களின் நேர்மையை ஐயப்படவைக்கின்ற ஒன்றாகிறது.
கூட்டமைப்பு மட்டுமல்ல, நானும் கூட அவரிடம் நிறைய எதிர்பார்த்தேன்.
ஆனால் அவர் எங்கள் எல்லோரையும் ஏமாற்றிவிட்டார்.
தனி மனிதரைவிட இனத்தின் நன்மை முக்கியமானது என்பதாலேயே,
அவரை நான் எதிர்க்கிறேன், மற்றும்படி அவர்மீது எனக்குத் தனிப்பகை ஏதும் இல்லை.
அவர்மீது இத்தனை குற்றங்களை நான் சொல்லியிருக்கிறேன்.
ஐந்து ஆண்டுகளாக முதலமைச்சர் பதவியைக் கையில் வைத்து,
அவர் செய்த இனம் நோக்கிய நன்மைகள் ஒன்றிரண்டைத்தானும் உங்களால் சொல்லமுடியுமா?
சுமந்திரனிலும் ஒருசில தவறுகள் இருக்கலாம், அவற்றை நானே பலதரம் கண்டித்திருக்கிறேன்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், முதலமைச்சருடனான ஒப்பீட்டில்,
சுமந்திரன் வானளாவி வளர்ந்து நிற்பதை யாராலும் மறுக்கமுடியாது.

நிறைவாக, ஒன்று…..
என்னை அரசியலுக்குள் நுழையுமாறு கூறிய தங்கள் அறிவுரைக்கு நன்றி.
எனக்கு, என்னைத் தெரியும்.  நான் என்ன செய்யவேண்டும் என்பதும் தெரியும்.
உங்களது நையாண்டித்தனமான அந்த அரசியல் சிபாரிசு வருத்தம் தருகிறது.

About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply