பெளத்த மத ஆக்கிரமிப்பிற்கு எதிராக தமிழ் மக்களின் போராட்டம் ஆரம்பம்!

பெளத்த மத ஆக்கிரமிப்பிற்கு எதிராக தமிழ் மக்களின் போராட்டம் ஆரம்பம்!

வியாழன் யூலை18, 2019

தமிழர் தேசத்தை கபளீகரம் செய்யத் துணியும் பெளத்த சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக உரத்துக் குரல்கொடுப்பதற்கு தமிழர்கள் தயாராகிவிட்டார்கள். தாயகத்தின் துளி நிலத்தையேனும் சிங்களத் தரப்பிற்கு விட்டுக்கொடுக்க முடியாது என்பதை தமிழ் மக்கள் செயலில் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர்.

இதன் வெளிப்பாடே முல்லைத்தீவு – செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியப் பொங்கல்.சிறீலங்காவில் மதத்தின் பெயரால் ஆட்சி நடத்திக்கொண்டிக்கும் சிங்களப் பேரினவாதம் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழர் தாயகத்தை மதத்தின் பெயரால் ஆக்கிரமிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

சிறீலங்காவின் தொல்லியல் திணைக்களமும் இதற்கு உதவி செய்து கொண்டிருக்கின்றது. தாயகத்தில் உள்ள தமிழர்களின் பூர்வீக நிலங்களை தொல்லியல் திணைக்களம் தொல்லியல் சின்னங்களாக பிரகடனப்படுத்த அந்த நிலங்களையும் தமிழர் வரலாற்றுச் சின்னங்களையும் பெளத்த பேரினவாதம் ஆக்கிரமிக்கின்றது.

ஏற்கனவே, நெடுங்கேணி-ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதி ஐயனார் ஆலயத்தை தொல்லியல் திணைக்களம் கையகப் படுத்தியுள்ளது.

அந்த ஆலயத்திற்கு மக்கள் எவரும் செல்லக் கூடாது எனக் கூறிய தொல்லியல் திணைக்களம் மீறி சென்றால் கைது செய்யப் படுவீர்கள் என நெடுங்கேணி காவல்துறையினர் ஊடாக தொடர்ந்தும் அச்சுறுத்தி வருகின்றது.

வெடுக்குநாறி மலையையும் அங்குள்ள ஆதி ஐயனார் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள காட்டுப்பகுதியையும் நெடுங்கேணி பிரதேச மக்கள் மிக நீண்டகாலமாக பாதுகாத்து வந்துள்ளனர். அந்த ஆலயம் சைவத்தமிழ் மக்களின் நீண்டகால வரலாற்றுக்குரிய வழிபாட்டுத் தலமாக இருந்து வந்தது. 2014 ஆம் ஆண்டு வெடுக்குநாறி மலையை உடைத்து கருங்கல் அகழ்வதற்காக சிலர் முயற்சித்தபோது மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து அதனை தடுத்திருந்தார்கள்.

இந்த நிலையில், தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகள் நெடுங்கேணி காவல்துறையினரின் உதவியுடன் அந்த ஆலயத்திற்கு மக்கள் செல்வதைத் தடுத்து வருகின்றனர். சிங்கள மொழி மட்டும் பேசத்தெரிந்த தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள் தமது பிரதேசத்திற்கு வருகை தந்து வெடுக்குநாறி மலை தமது ஆழுகைக்குள் வந்துள்ளதாகவும் வெடுக்குநாறி மலையில் உள்ள ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள காட்டுப்பகுதிக்குள் செல்ல கூடாதெனவும் மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் எனவு தங்களை எச்சரிக்கின்றனர் என அப்பிரதேச மக்கள் கூறி வருகின்றனர்.

தொல்லியல் திணைக்களம் ஒருபுறம் மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்க, மறுபுறம் அந்த மலை உச்சியில் புத்தரின் சிலை ஒன்றை நிறுவும் நடவடிக்கை இடம்பெற்றது. அரச அதிகாரிகளும் பெளத்த பிக்குகளும் அங்கு விகாரை அமைக்க முற்பட்டபோது அப்பிரதேச மக்கள் கடும் எதிர்ப்புக்காட்டி அவர்களை அங்கிருந்து துரத்தியடித்தனர்.

தற்போது, தொல்லியல் திணைக்களம் மற்றும் காவல்துறையினரின் அச்சுறுத்தல்களையும் மீறி அப்பிரதேச மக்கள் வெடுக்குநாறி மலையில் பிள்ளையார் மற்றும் சிவலிங்கம் போன்ற விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர்.

தொல்லியல் திணைக்களத்தினதும் காவல்துறையினரினதும் அச்சுறுத்தல் அந்த மக்களுக்கு தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. எதற்கும் துணிந்தவர்களாக அந்த மக்கள் எழுச்சியடைந்திருக்கின்றனர்.

இதேபோன்றே, கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோயிலும் பெளத்த பேரினவாதத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்தக் கோயிலின் அத்திவாரத்தை புத்த பிக்குகளின் தலைமையில் இடித்தழித்த சிங்களக் காடையர் கூட்டம், அங்கு பெளத்த விகாரை கட்டுவதற்கு முயன்று வருகின்றது. தமிழ் மக்களின் பூர்வீக வழிபாட்டுக்குரிய பிள்ளையார் விக்கிரகத்தை தூக்கிச் சென்று வேறு இடமொன்றில் வைத்துவிட்டு அந்த இடத்தை பெளத்த பிக்குகள் ஆக்கிரமித்திருக்கின்றனர்.

குறித்த காணியை தொல்லியல் திணைக்களம் தமக்குரிய தொல்லியல் இடம் என அடையாளப்படுத்திய பின்னரே இந்த ஆக்கிரமிப்பு இடம்பெற்றுள்ளது. எனினும் இதற்கு எதிராக அப்பிரதேச மக்கள் தற்போது கிளர்ந்தெழுந்துள்ளனர்.

தென் தமிழீழத்தில் உள்ள சைவத்தமிழ் மக்களின் ஆதீனமான தென்கயிலை ஆதீன குருமுதல்வர் அகத்தியர் அடிகளாரின் தலைமையில் அங்குள்ள தமிழ் மக்கள் அணிதிரண்டு குறித்த ஆலயத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமது பாட்டனாரின் காலத்திற்கு முன்பிருந்தே கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோவில் தங்களுடைய குடும்பத்தினது சொத்தாக இருப்பதாகவும் அதற்கான காணி உறுதி ஆவணங்கள் தம்மிடம் இருந்தும் சிறீலங்கா தொல்பொருள் திணைக்களமும் திருகோணமலை மாவட்டச் செயலக அதிகாரிகளும் வில்கம் பெளத்த விகாரை தேரரும் இணைந்து தமது காணியை ஆக்கிரமித்திருக்கின்றனர் என காணிக்குச் சொந்தக்காரரான கோகுலரமணி என்ற பெண்மணி தெரிவிக்கின்றார்.

பல வருட காலங்களாக அந்த இடத்தில் அமைந்திருக்கும் பிள்ளையார் கோயிலை 2002 ஆம் ஆண்டு தாங்கள் புனரமைப்பதற்கு முயற்சி எடுத்தபோது தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகள் அங்கு சென்று அதைத் தடுத்து நிறுத்தினர். தமது கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த இடத்தில் கட்டிட வேலைகள் எதுவும் செய்யக் கூடாது எனக் கூறியதுடன் காணிச் சொந்தக்காரர்களுக்கு எதிராக  தொல்லியல் திணைக்களம் திருகோணமலை நீதிமன்றில் வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்தது.

நிலமை இவ்வாறிருக்கையில், வில்கம் பெளத்த மடத்தின் பிக்கு பிள்ளையார் கோயிலை இடித்துவிட்டு பெளத்த விகாரை கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றார். எது வந்தாலும் அங்கு பெளத்த விகாரை அமைக்க விடமாட்டோம் என அப்பிரதேச மக்கள் தென் கயிலை ஆதீனத்தின் கீழ்  ஓரணியில் திரண்டிருக்கின்றனர்.

இந்த நிலையிலேயே வடக்கு – கிழக்கு மாகாணங்களின் இணைப்புப் பாலமாகத் திகழும் முல்லைத்தீவு மணலாறு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தையும் பெளத்த சிங்களப் பேரினவாதம் கையகப்படுத்த முயன்று வருகின்றது.

மேற்படி பிள்ளையார் ஆலயம் பல நூற்றாண்டுகளாகப் பழைய செம்மலை கிராம மக்களின் வழிபாட்டுத் தலமாகக் காணப்படுகின்றது.

போருக்குப் பின்னர் ஆலய வளாகத்தில் பெளத்த பிக்கு ஒருவர் குடியமர்ந்து குருகந்த ரஜமகா விகாரை எனும் பெயரில் விகாரை ஒன்றையும் அமைத்து அதில் பாரிய புத்தர் சிலை ஒன்றையும் நிறுவியுள்ளார்.

இந்த பிக்குவின் அத்துமீறலை அடுத்து அங்கு திரண்ட தமிழ் மக்களுக்கும் பெளத்த பிக்கு உட்பட அங்கு இருந்த சிங்களத் தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. நீதி கேட்கத் திரண்ட தமிழ் மக்களை பெளத்த பிக்குவும் சிங்களவர்களும் தாக்க முற்பட்டனர். இதனையடுத்து இந்த விவகாரம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது.

சிறீலங்காவின் ஆளுகைக்குள் இயங்கும் நீதிமன்று சட்டவிரோதமாக அங்கு அமைக்கப்பட்ட பெளத்த விகாரையை அப்புறப்படுத்துமாறு உத்தரவிடவில்லை. மாறாக, இரண்டு தரப்பும் குறித்த பகுதியில் உள்ள ஆலயங்களில் தடையின்றி சுதந்திரமாக வழிபாடுகளை மேற்கொள்ளலாம் எனவும் பிள்ளையார் ஆலயத்துக்கு வழிபாட்டுக்குச் செல்பவர்களுக்குப் பெளத்த பிக்கு இடையூறு  ஏற்படுத்தக்கூடாது எனவும் உத்தரவிட்டது.

மேலும், இரண்டு தரப்பும் இந்த ஆலயங்களில் அபிவிருத்தி வேலைகளைச் செய்வதாக இருந்தால் உள்ளூர் திணைக்களங்களின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உரிய அனுமதிகளைப் பெற்று மேற்கொள்ளவேண்டும் எனவும் கூறியிருந்தது.

மேலும், ஏற்கனவே நீராவியடி பிள்ளையார் ஆலயம் எனப் பெயர் சூட்டப்பட்டிருந்த பெயர்ப் பலகையை நீக்கிய பெளத்த பிக்கு, கணதேவி தேவாலயம் எனப் பெயர்ப் பலகை நட்டியிருந்தமையைக் கண்டித்த நீதிமன்று அதனை மாற்றி மீண்டும் நீராவியடி பிள்ளையார் ஆலயம் என பெயர்ப்பலகை நாட்டுமாறு உத்தரவிட்டது. நீதிமன்றின்  இந்த உத்தரவை மீறினால் தண்டனைக்கு உட்படுத்தப்படுவீர்கள் எனவும் இரு சாராரையும் நீதிமன்று எச்சரித்தது.

ஆனால், நீராவியடி பிள்ளையார் ஆலயத்தைச் சேர்ந்த நிர்வாகத்தினரும் அடியவர்களும் உரிய உள்ளூர் திணைக்களங்களான வீதி அபிவிருத்தி அதிகார சபை, கரைதுறைபற்று பிரதேச சபை ஆகியவற்றின் அனுமதிகளுடன் நீதிமன்றின் தீர்ப்புக்கு உட்பட்டு பிள்ளையார் ஆலயத்தின் இருமருங்கிலும் நீராவியடி பிள்ளையார் ஆலயம் எனும் பெயர்ப் பலகையை நாட்டச் சென்றபோது பெளத்த பிக்குவுக்கும் விகாரைக்கும் பாதுகாப்பாக நிற்கும் காவல்துறை உத்தியோகத்தர்களால் தடுக்கப்பட்டனர்.

மேலும், பெளத்த பிக்கு மேலதிக காவல்துறையினரையும் விசேட அதிரடிப் படையினரையும் அழைத்து  நீதிமன்றின் உத்தரவை மதித்து பெயர்ப்பலகை நாட்ட வந்த செம்மலை கிராம மக்களை அச்சுறுத்தினார்.

அவர்களை நிலத்தில் அமர்த்தி அனைவரினது பெயர் அடையாள அட்டை இலக்கம் என்பனவற்றையும் பதிந்ததோடு மிக நீண்டநேரம் விசாரணைகளிலும் ஈடுபட்டனர். அன்றைய தினம் மேலும் செய்தி சேகரிப்புக்காகச் சென்ற ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தினர்.

மேலும் நீதிமன்றின் தீர்ப்பை மதிக்காது எந்தவித உள்ளூர் திணைக்களங்களினதும் அனுமதிகளைப் பெறாமல் பெளத்த பிக்கு அங்கு புதிய கட்டிடம் ஒன்றையும் அமைத்துவருகின்றார். இந்த நடவடிக்கையையும் காவல் துறையினர் கண்டும் காணாமலும் விட்டுள்ளனர்.

மேலும் பிள்ளையார் ஆலயத்தின் வாசலின் இருமருங்கிலும் பெளத்த பிக்குவால் சீமெந்து தூண்கள் நடப்பட்டு இரண்டு சி.சி.ரி கமராக்கள் பொருத்தப்பட்டு அந்த ஆலயத்திற்கு வழிபாட்டுக்கு செல்பவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.

மேலும் பிள்ளையார் ஆலயத்துக்கு நேர் எதிராக உள்ள இராணுவ முகாமுக்கு அருகாக வீதியின் அருகில் புதிய காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு அங்கே ஆயுதம் தாங்கிய படையினர் 24 மணிநேரமும் காவலில் அமர்த்தப்பட்டுள்ளார்.

111

நீதிமன்ற உத்தரவு அங்கு நடைமுறைப்படுத்தப்படாமல் விடப்பட்டமை தொடர்பாக சிங்கள நீதிமன்று எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருக்கின்றது. நீதிமன்று கூட தமிழ் மக்களுக்கு ஒரு நீதி சிங்கள மக்களுக்கு இன்னொரு நீதி என்ற அடிப்படையிலேயே நீதி வழங்குகின்றது.

இந்த நிலையிலேயே கடந்த சனிக்கிழமை (யூலை 06) செம்மலை செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில் 108 பானைகளில் தமிழ்த் தேசியப்  பொங்கல் நிகழ்வு ஒன்றை நடத்த சைவத்தமிழ் மக்கள் நடவடிக்கை எடுத்தனர்.

குறித்த ஆலய நிர்வாகமும் முகப்புத்தக நண்பர்களும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

அன்று காலை தமிழ்த் தேசியப் பொங்கல் பெரும் எழுச்சியுடன் ஆரம்பமாகி நடைபெற்றது. ஆரம்பத்தில் காவல்துறையினர் மக்களைத் தடுக்க முற்பட்டனர். எனினும், குறுகிய நேரத்தில் தமிழ் மக்கள் அலையயன அங்கு திரண்டனர். பொங்குவதற்கு இடம் இல்லாத நிலையில், வீதிகளில் அடுப்புகள் தயார் செய்யப்பட்டு பொங்கினர். தமிழ் மக்களின் வரலாற்றுப் பூமியை பெளத்த சிங்களப் பேரினவாதத்திடம் இருந்து மீட்பதற்கான பொங்கல் பெரும் எழுச்சியுடன் அங்கு இடம்பெற்றது.

வடக்கு மாகாணத்தின் பல மாவட்டங்களிலும் இருந்து இளைஞர்கள் அதிகளவில் அங்கு திரண்டிருந்தனர். சிங்களப் பேரிவாதம் எமது மண்ணை ஆக்கிரமித்தால் இனிமேல் நாம் சும்மா இருக்க மாட்டோம் என்பதை சிங்களத் தலைமைக்கும் தமிழ் மக்களை அழித்த பன்னாடுகளுக்கும் இடித்துரைப்பதாக அந்த எழுச்சி காணப்பட்டது.

இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டமைதான். வடக்கு-கிழக்கில் ஆயிரம் விகாரைகளை அமைப்பதற்கு 2,900 மில்லியன் ரூபா வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளமைக்கு ஆதரவு தெரிவித்த கூட்டமைப்பு, பெளத்த விகாரை அத்து மீறல் தொடர்பான நீராவியடிப் பிள்ளையார் ஆலய பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டமை வேடிக்கையாகவுள்ளது என மக்கள் கருத்து வெளியிட்டனர்.

உண்மையும் அதுதான், தமிழ்த் தேசியத்தைப் பாதுகாப்போம் என தமிழீழ தேசியத் தலைவருக்கு முன்பாக உறுதியயடுத்த இரா.சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று தமிழர் தாயகத்தில் இடம்பெறும் பெளத்த சிங்கள அத்துமீறல்களைத் தட்டிக்கேட்காமல் இருக்கின்றமை அபத்தம் திருகோணமலையில் கன்னியாய் பறிபோகின்றது.

ஆனால், சம்பந்தன் அரச சுகபோகங்களை அனுபவிக்கின்றார். இதே போன்றுதான் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திடம் பல கோடிக்கணக்கான ரூபா பணத்தையும் இதர சலுகைகளையும் பெற்றுக்கொண்டு சுகபோகங்களை அனுபவிக்கின்றனர்.

ஆனால், பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் தமது நிலங்கள், தமது வரலாற்றுச் சின்னங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராகக் குரல்கொடுக்கத் துணிந்திருக்கின்றனர்.

இது பெரும் பாய்ச்சல். 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் தன்னெழுச்சியாக வெளியே வந்திருக்கின்றனர்.

இந்த எழுச்சிக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் மேலும் வலுச் சேர்க்க வேண்டும். தமிழர் தாயகத்தின் துளி நிலத்தையேனும் மாற்றானுக்கு விட்டுக் கொடுக்காமல் பாதுகாப்போம் எனத் தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் வாழும் மக்கள் அனைவரும் உறுதியயடுத்துக்கொள்ள வேண்டும்.

நன்றி: ஈழமுரசு

‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்

https://nakkeran.com/wp-admin/post.php?post=12837&action=edit

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply