மணிமேகலையில்  விளக்கப்படும் பௌத்த சமயக் கோட்பாடுகளை மூன்று பிரிவுகளில் பார்ப்பது தெளிவை உண்டாக்கும். அவை:

மணிமேகலையில்  விளக்கப்படும் பௌத்த சமயக் கோட்பாடுகளை மூன்று பிரிவுகளில் பார்ப்பது தெளிவை உண்டாக்கும். அவை:

வினைக் கோட்பாடு

நிலையாமைக் கோட்பாடு

அறநெறிக் கோட்பாடு

6.3.1 வினைக்கோட்பாடு

 

இந்தியச் சமயங்கள்  யாவும் வினைக்கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவை. பௌத்த சமயமும் இதற்கு விதிவிலக்கன்று.

வினை வகைகள்

வினைகள் இருவகைப்படும். அவை நல்வினை, தீவினை என்பனவாகும்.

தீவினை என்பது யாது?

கொலை, களவு, காமம் ஆகிய தீய விருப்பம் மூன்றும் தளர்ச்சியுற்ற உடலிலே தோன்றுவன. பொய், புறங்கூறல், கடுஞ்சொல், பயனற்ற சொல் என்று நால்வகைக் குற்றங்கள் சொல்லிலே தோன்றுவன. வெஃகுதல் (விரும்புதல்), வெகுளுதல், மயக்கம் இம்மூன்றும் உள்ளத்தில் தோன்றுவன. இந்த வகைகளில் தீவினை தோன்றும். இந்தத் தீவினையின் தன்மையை உணர்ந்தோர் தீயவற்றில் மனத்தைச் செலுத்த மாட்டார். தீயவற்றில் மனத்தைச் செலுத்துவாராயின் விலங்கு, பேய், நரகர் என்னும் பிறப்புகளை எடுத்துக் கலக்கமுற்றுப் பிறவிதோறும் துன்புறுவர். (ஆபுத்திரன் நாடு அடைந்த காதை 123-134)

அப்படியாயின் நல்வினை என்பது யாது?

நல்வினை  என்பது மேற்கூறப்பட்ட பத்துக் குற்றத்தினின்றும் நீங்கி, ஒழுக்கத்தைப் பின்பற்றி, தானம் செய்து வாழ்பவர் தேவர்; மக்கள், பிரமர் ஆகிய பிறவியெடுத்து நல்வினையின் பயனைத் துய்ப்பர்.

பிறப்பு என்பது யாது?

உலகம் மேல், கீழ், நடு என மூன்றாகும். உயிர்கள் ஆறு வகையென பௌத்த சமயம் கூறும். அவை மக்கள், தேவர், பிரமர், நரகர், விலங்கு, பேய் என்பனவாகும். உயிர்கள் நல்வினை, தீவினை என்னும் இருவினைப் பயனால் தத்தமக்குரிய பிறவி எடுத்து, தம் வினைகள் பயனைத் தரும் காலத்தில் தாம் செய்த வினைக்கு ஏற்ப இன்பமும் துன்பமும் அடைகின்றன. (24:116-122)

மறுபிறப்பில் நம்பிக்கை

தாம் செய்த வினைகளுக்கு ஏற்ப உயிர்களுக்கு மறுபிறவி உண்டு என்ற கோட்பாட்டில் பௌத்த சமயத்திற்கு ஆழமான நம்பிக்கையுண்டு. மணிமேகலைக் காப்பியத்தில் உதயகுமரன், மணிமேகலை, மாதவி, சுதமதி ஆகிய பாத்திரங்களின் முற்பிறவி பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன.

சான்றாக, முற்பிறப்பில் மணிமேகலையின் தமக்கைகளாக இருந்தவர்கள் இப்பிறப்பில் மணிமேகலையின் தாய் மாதவியாகவும், தோழி சுதமதியாகவும் பிறந்துள்ளனர் (9, 10 காதைகள்). முற்பிறப்பில் இலக்குமியாக இருந்த பெண் மணிமேகலையாகப் பிறந்துள்ளாள். இலக்குமியின் கணவனாக இருந்த இராகுலன் இப்பிறவியில் மணிமேகலையைத் தொடர்ந்து செல்லும் உதயகுமரனாகப் பிறந்துள்ளான். சென்ற பிறவியில் இலக்குமியாக இருந்தவள் சாதுசக்கர முனிவர்க்கு உணவளித்ததால் இப்பிறவியில் தவச்செல்வியான மணிமேகலையாகப் பிறந்துள்ளாள். அத்துடன் அமுதசுரபிகொண்டு பசியால் தவிப்பவர்களின் பசிப்பிணியைப்போக்கும் புண்ணியத்திற்கு உரியவளாகிறாள். அமுதசுரபியை  முதலில் பெற்ற ஆபுத்திரன் ஏழை, எளிய மக்களின் பசியைத் தீர்த்த நல்வினையின் பயனால் புண்ணியராசனாகப் பிறந்துள்ளான் என்று முற்பிறவி பற்றிய செய்திகள் இடம்பெறுவதை நோக்கலாம்.

வினைப்பயனால் விளையும் பல நிகழ்ச்சிகள்

நல்வினை, தீவினையின் பயனால் விளைந்த பல நிகழ்ச்சிகளை மணிமேகலை விளக்கமாகக் கூறிச் செல்கிறது. சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போமா?

மணிமேகலையைத் தன்வயப்படுத்த அரசிளங்குமரனாகிய உதயகுமரன் மணிமேகலையைத் தொடர்ந்து வருகிறான். அவனிடமிருந்து தப்ப மணிமேகலை சோலைவனத்தில் உள்ள பளிக்கறையில் (பளிங்கினால் ஆன அறையில்) புகுந்து மறைந்து கொள்கிறாள். அப்போது புகார் நகரில் நடக்கும் இந்திர விழாவைக் காணும் விருப்பத்தால் அந்நகரப் பெண்போலத் தன் வடிவத்தை மாற்றிக்கொண்டு மணிமேகலா தெய்வம்   அங்கு வருகிறது. (மணிமேகலையின் தந்தையான கோவலனின் முன்னோர்களில் ஒருவர் வணிகத்தின் பொருட்டுக் கப்பலில் சென்றபோது, கப்பல் உடைந்து அவர் கடலில் மூழ்கி இறந்துபடாமல் மணிமேகலா தெய்வம் அவரைக் காப்பாற்றியது. அதை நினைவு கூர்ந்து மாதவிக்கும் தனக்கும் பிறந்த குழந்தைக்கு மணிமேகலை எனப் பெயரிட்டான் கோவலன்.) மணிமேகலையின் நல்வினை அதன் பயனைத் தரும் காலம் கனிந்ததால் மணிமேகலைக்கு உதயகுமரனால் தீங்கு ஏதும் நேராமலிருக்க மணிமேகலையை மணிமேகலா தெய்வம் மணிபல்லவத் தீவிற்கு எடுத்துச் செல்கிறது.

வினையின் பயனை அறவண அடிகள் உணர்த்தல்

மணிமேகலை அறவண அடிகளைக் கண்டு வணங்கி மணிபல்லவத் தீவில் தன் பழம்பிறப்பினை உணர்ந்ததும் அமுதசுரபி என்ற அற்புதப் பாத்திரத்தைப் பெற்றதுமான செய்திகள் அனைத்தையும் கூறுகிறாள். அறவண அடிகளும் பாதபங்கய மலையில் புத்தரின் பாதங்களை வணங்கி, மாதவி, சுதமதி ஆகிய இருவரின் பழம்பிறப்பை உணர்ந்ததை விளக்குகிறார். முற்பிறவியில் வீரையும் தாரையுமாக மாதவி, சுதமதி ஆகியோர் இருந்ததையும் யானையால் வீரை இறந்ததால் தாரை இறந்ததும் இவர்களின் இறப்பால் கணவன் துச்சயன் துயரமுற்றதையும் கூறுகிறார். அறவணஅடிகள் துச்சயனுக்கு ஆறுதல் கூறும்போது, இது அவரவர் வினைப்பயனால் நேர்ந்தது’ என்று கூறி அமைதிப்படுத்துகிறார். வினையின் பயனை அனுபவித்தே ஆகவேண்டுமென்பதும் அதற்காக வருந்தாமல் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதையுமன்றோ இந்நிகழ்ச்சி உணர்த்துகிறது! மேலும் ஒருசான்றைப் பார்க்கலாமா?

உதயகுமரன் வெட்டுண்டு இறத்தல்

தன்னைப் பின்தொடரும் உதயகுமரனிடமிருந்து தப்ப மணிமேகலை விஞ்சை மங்கையாகிய (விண்ணுலகப் பெண்) காயசண்டிகை வடிவில் அமுதசுரபி ஏந்தி உணவு படைக்கிறாள். இந்தக் காயசண்டிகை யார் என்ற வினா உங்கள் உள்ளத்தில் தோன்றுகிறதா? காயசண்டிகை விஞ்சையனான காஞ்சனன் மனைவி. முன்பு விருச்சிக முனிவர் இட்ட சாபத்தால் யானைப்பசி என்னும் நோய்க்கு ஆளானாள். யானைப்பசி என்பது எவ்வளவு உண்டாலும் பசி தீரவே தீராமல் மேலும் மேலும் (பசி) மிகுதியாகும். இந்நோய் பன்னீராண்டுகள் துன்பத்தைத் தருமென்பார்கள். மணிமேகலை அமுதசுரபி யிலிருந்து அளித்த உணவை உண்டதும் காயசண்டிகையின் பசி தீர்ந்தது. அவள் தன் இருப்பிடம் திரும்பினாள். காயசண்டிகை சாபம் பெற்று யானைப்பசி நோயினால் வருந்திய காலமும் முடிவுற்றதால் அவள் திரும்பி வாராமைக்குக் காரணம் யாதோ எனக் கவலையுற்றுக் காஞ்சனன் அவளைத் தேடிக் கொண்டு வருகிறான். காயசண்டிகை வடிவில் மணிமேகலை அமுதசுரபி கொண்டு உணவளிப்பதைப் பார்த்த காஞ்சனன் அவளைத் தன் மனைவியெனத் தவறாக நினைத்து அவளோடு பேசமுற்படுகிறான். காயசண்டிகை வடிவில் இருந்த மணிமேகலையோ அவனைப் பொருட்படுத்தாமல் (அங்கு) அவளைத் தொடர்ந்து வந்த உதயகுமரனை அடைந்து நிலையாமையை அறிவுறுத்துகிறாள். தன் மனைவி அயலான் முன் சென்று பேசுகிறாள்; அவன் மீது கொண்ட விருப்பத்தினால் தான் இவள் திரும்பி வரவில்லையென முடிவு செய்து, சமயம் நோக்கி மறைந்திருந்து உதயகுமரனைக் கொன்று விடுகிறான்.

ஊழ்வினையின் பயனாலேயே உதயகுமரன் காஞ்சனனின் வாளால் வெட்டுண்டு இறந்தான் என உலகவறவியில் (ஊர் அம்பலம்) இருந்த கந்திற்பாவை என்னும் தெய்வம் காஞ்சனனுக்கு விளக்கியதோடு, காயசண்டிகை ஊர் திரும்பியதையும், மணிமேகலை காயசண்டிகை வடிவில் இருப்பதையும் கூறியது.

அரசிக்கு மணிமேகலையின் அறவுரை

தன் மகனான உதயகுமரனின் இறப்புக்கு மணிமேகலையே காரணம் என்றெண்ணி அரசி கொடுமைகள்  பலவற்றை மணிமேகலைக்கு இழைக்கிறாள்.  மணிமேகலா தெய்வத்திடம் தான் பெற்ற மந்திர மொழிகள் மூலம் அவற்றையெல்லாம் மணிமேகலை தாங்கிக் கொண்டு எந்தவிதப் பாதிப்பிற்கும் ஆளாகாமல் இருக்கிறாள். மணிமேகலையின் இந்நிலையைக் கண்டு அரசி மிகவும் வியப்படைவதோடு தன் செயலுக்காக வருந்தவும் செய்கிறாள். இராசமாதேவியின் மனம் மாறுகிறது. மனம் திருந்தி மணிமேகலையைத் தொழுது வணங்குகிறாள்.

மணிமேகலை இராசமாதேவிக்குத் தன் முற்பிறப்பைப் பற்றிக் கூறி, தன் கணவனாக இருந்த இராகுலனைப் பற்றியும் கூறியதோடு முற்பிறவியில் இராகுலன் தாயாக அரசமாதேவி இருந்ததையும் கூறுகிறாள். உதயகுமரனை இழந்ததற்காக அழும் அரசமாதேவி பொருந்தாத செயல்களைச் செய்ததைச் சுட்டிக்காட்டி, வினையின் பயனை யாராக இருந்தாலும் நுகர்ந்தே ஆக வேண்டுமென்பதை எடுத்துக்காட்டி இனியாவது நல்வினைகளைச் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறாள். பூங்கொடி போன்ற தேவி, நீ எதற்காக அழுதாய்? நின் மகனின் உடலுக்காக அழுதாயா? உயிருக்காக அழுதாயா? உடலுக்காக அழுதாயானால் உன் மகனது உடம்பைப் புறங்காட்டில் யார் இட்டனர்? உயிர்க்காக அழுதாயானால் செய்வினை வழியே அவ்வுயிர் புகும். அது புகுமிடத்தை நம்மால் தெரிந்து கொள்ள இயலாது. அதனால் அந்த உயிரிடத்து அன்புடையையாயின், அஃது எவ்வுடலில் இருக்கும் என்பதை உணராத நிலையில் எல்லா உயிர்களிடத்தும் நீ இரக்கம் கொள்ளல் வேண்டும் என்கிறாள்.

உயிர்கள் அனைத்திடமும் அன்பு பாராட்ட வேண்டும் என்ற நேயத்தைச் சாத்தனார் இங்கு வலியுறுத்துகிறார். காப்பியத்தின் அப்பகுதியை நீங்களே படித்துப் பாருங்களேன்!

யாங்கு இருந்து அழுதனை இளங்கோ தனக்கு?
பூங்கொடி நல்லாய்! பொருந்தாது செய்தனை
உடற்கு அழுதனையோ? உயிர்க்கு அழுதனையோ?
உடற்கு அழுதனையேல் உன் மகன் தன்னை
எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே?
உயிர்க்கு அழுதனையேல் உயிர்புகும் புக்கில்
செயப்பாட்டு வினையால் தெரிந்து உணர்வு அரியது
அவ்வுயிர்க்கு அன்பினை ஆயின் ஆய்தொடி
எவ்வுயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும்
(சிறைவிடு காதை: 71-79)

 

(புறங்காடு = சுடுகாடு, புக்கில் = உடம்பு)

ஒவ்வொரு வீட்டிலும் ஏதேனும் ஓர் உறவை இழந்த அனுபவம் சோகமாய் நெஞ்சை அடைத்துக் கொள்ளும். அதையே நினைத்துப் புலம்பாமல் எல்லா உயிர்களையும் சமமாக எண்ணி, அனைத்து உயிர்களிடமும் அன்பு செய்ய வேண்டும். தன் உறவு, தன் சொந்தம் எனப் பார்க்காமல் அன்பு பாராட்டும் மனப்பாங்கு வரவேண்டும். அப்போது எங்கும் அமைதியும் மகிழ்ச்சியும் நிரம்பும்; யாதும் ஊரே யாவருங் கேளிர் என்ற எண்ணமும் மேலோங்கும். அவ்வெண்ணம் எவ்வுயிர்க்கும் இரங்கி அன்பு செய்ய வேண்டும் என்ற உணர்வைத் தந்து செயல்பட வைக்கும்.

இது எல்லாக் காலத்தும் எல்லாவிடத்தும் எல்லோருக்கும் பொருந்தும் உண்மையல்லவா?

6.3.2 நிலையாமைக் கோட்பாடு

இந்தியச் சமயங்கள் அனைத்துமே நிலையாமைக் கோட்பாட்டில் நம்பிக்கை உடையன.     அதிலும் சமணமும் பௌத்தமும் நிலையாமையை வற்புறுத்திக் கூறும் தன்மையன. சாத்தனார் பௌத்த சமய அறங்களை வலியுறுத்தும் போதெல்லாம் நிலையாமையை அழுத்தமாகக் கூறிச் செல்கிறார். பளிக்கறை புக்க காதையில் மணிமேகலையைத் தொடர்ந்து உதயகுமரன் வர, மணிமேகலை பளிக்கறைக்குள் மறைந்து கொள்கிறாள்.     உதயகுமரன் மணிமேகலையைத் தொல்லைப் படுத்துவான் என்பதை உணர்ந்த மணிமேகலையின் தோழி சுதமதி, அவனுக்கு யாக்கை நிலையாமையை விளக்குகிறாள்.

வினைவிளங்கு தடக்கை விறலோய் கேட்டி
வினையின் வந்தது வினைக்கு விளைவாயது
புனைவன நீங்கில் புலால்புறத் திடுவது
மூப்புவிளி உடையது தீப்பிணி இருக்கை
பற்றின் பற்றிடங் குற்றக் கொள்கலம்
புற்றடங் கரவிற் செற்றச் சேக்கை
அவலக் கவலை கையாற ழுங்கல்
தவலா உள்ளம் தன்பால் உடையது
மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து…
(பளிக்கறை புக்க காதை: 112-121)
(வினைவிளங்கு = செயல்திறமுடைய, கேட்டி = கேட்பாயாக, புனைவன = புனையப்படுவனவாகிய மணப்பொருள்கள், மூப்பு = முதுமை, விளி = சாவு, கொள்கலம் = பாத்திரம், செற்றம் = கோபம், சேக்கை = இருப்பிடம், அவலம் = வருத்தம், கையாறு = மூர்ச்சித்தல், அழுங்கல் = அழுதல், தவலா = நீங்காத)

உடம்பு வினையால் உண்டானது. வினைக்கு விளைநிலமாக உள்ளது. புனையப்படுவனவாகிய மணப்பொருள்கள் நீக்கப்படுமானால் புலால் நாற்றத்தை வெளிக்காட்டுவது. முதுமையடைந்து சாதலை உடையது. கொடிய நோய்க்கு இருப்பிடமாக உள்ளது. பற்றுகளுக்குப் பற்றும் இடமாக உள்ளது. குற்றங்களுக்குக் கொள்கலமாய் உள்ளது. பாம்பு அடங்கும் புற்றைப் போல, கோபம் தங்குமிடமாக இருக்கிறது. மக்கள் யாக்கை இத்தகையது என விளக்கி, மணிமேகலையைப் பின்தொடரும் செயலை அவன் விலக்கிக் கொள்ள வேண்டுமென்று மறைமுகமாகக் கூறுகிறாள்.

சக்கரவாளக் கோட்டம் உணர்த்தும் உண்மை

மணிமேகலா தெய்வம் மணிமேகலையின் தோழி சுதமதியிடம் சக்கரவாளக் கோட்டத்தின் தன்மையை விளக்கும்போது நிலையாமைக் கோட்பாடு அழுத்தம் பெறுகிறது.

சுடுகாட்டில் தவநெறியில் செல்லும் துறவிகள், பெருஞ்செல்வர், அண்மையில் மகவு பெற்ற இளமகளிர், அறம் அறியா இளம் சிறுவர், முதியோர், இளையோர் ஆகியோரை வேறுபாடின்றிக் கொடுந்தொழிலை உடைய எமன் கொன்று குவிப்பதைக் கண்டும் நிலையாமையை உணரவில்லை மக்கள். இறப்பு உண்மை என்று தெரிந்த பின்னரும் அறநெறியில் செல்லாதவர்களை எண்ணி அத்தெய்வம் வருந்துகிறது.

யாக்கை நிலையாமை

மாதவியின் தாய் சித்ராபதியின் தூண்டுதலால் உதயகுமரன் காமம் மீதூரப் பெற்று மணிமேகலையைக் காண அம்பலம் செல்கின்றான். மணிமேகலையைக் கண்டு, ‘நங்கையே! நீ நற்றவம் மேற்கொண்டதற்குரிய காரணம் தான் யாதோ?’ என்று துணிந்து கேட்கிறான். அதற்கு அவள் பிறத்தலும் முதுமை அடைதலும் நோயுற்று வருந்துதலும் பின் இறத்தலும் உடையது இவ்வுடல். மேலும் இது துன்பங்களுக்கு ஒரு கொள்கலமாகவும் உள்ளது. மனித உடம்பின் நிலையாமையை மணிமேகலை உதயகுமாரனுக்கு உணர்த்தித் தன்னைப் பின்தொடர வேண்டாமென அறிவுரை கூறுகிறாள். அத்துடன் யாக்கையின் இத்தன்மையை நன்கு உணர்ந்ததால்தான் நல்ல தவத்தை மேற்கொண்டதாகக் கூறுகிறாள். அதைக் கீழ்வரும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன.

பிறத்தலும் மூத்தலும் பிணிபட்டு இரங்கலும்
இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம்
மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து
மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்
(உதயகுமரன் அம்பலம் புக்க காதை:136-139)

(இடும்பை = துன்பம், பிணி = நோய், கொள்கலம் = இருப்பிடம்)

மேலும் மணிமேகலை நரைமிக்க ஒரு மூதாட்டியைக் காண்பித்து, உதயகுமரனுக்கு இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகியவற்றையும் அறிவுறுத்துகிறாள். நிலையாமை மிக விரிவாகப் பேசப்படுகின்ற இடங்களில் இது ஒன்றாகும்.

நிலைத்ததும் நிலையாததும்

நிலையாமை பற்றிப் பல இடங்களில் பல பாத்திரங்கள் வழி விளக்கிச் செல்லும் சாத்தனார் நிலைத்து நிற்பது எதுவென்றும் கூறுகிறார்.

இளமையும் நில்லாது யாக்கையும் நில்லாது
வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லாது
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழுத்துணையாவது
(சிறைசெய் காதை: 135-138)
(யாக்கை = உடம்பு, வான்பெருஞ்செல்வம் = சிறந்த பொருள், புத்தேள் உலகம் = தேவர் உலகம், விழுத்துணை = சிறந்த துணை)

நிலையாமைக் கோட்பாட்டை மிகவும் வற்புறுத்துவதாலேயே வாழ்க்கையை மறுத்துரைக்கிறது பௌத்த சமயம் என எண்ண இயலாது. அதை ஒரு எச்சரிக்கையாகக் கொண்டு அறங்களை மேற்கொண்டு வாழ்க்கையைச் செம்மையாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். ஏனென்றால் அவரவர் செய்த வினைக்கு ஏற்பப் பிறவிகள் தொடரும். அதனைத் தவிர்க்க வேண்டுமாயின் நிலையாமையை மனத்தில் பதித்து, அறத்தை இடையறாது மேற்கொள்ளவேண்டும்.

6.3.3 அறநெறிக் கோட்பாடு


மதுரையில் கோவலன் கொலையுண்டு இறந்தான் என்ற
 செய்தியைக் கேள்வியுற்ற மாதவி துயர் தாங்காது வருந்துகிறாள். ஆடலையும் பாடலையும் துறக்கிறாள். பௌத்தத் துறவியாகிய அறவண அடிகளின் பாதங்களில் வீழ்ந்து தனது காதலனாகிய கோவலன் உற்ற கடுந்துயர் கூறி வருந்துகிறாள். வருந்திய மாதவிக்கு அறவண அடிகள் அறவுரை கூறுகிறார். அப்போது மாதவிக்கு அவர் நான்கு வாய்மைகளையும் விளக்குகிறார். அவை

துக்கம் – துன்பம்
துக்க காரணம் – துன்பத்திற்கான காரணம்
துக்க நிவாரணம் – துன்பத்தைப் போக்கல்
துக்க நிவாரண மார்க்கம் – துன்பத்தைப் போக்கும் வழி

இதனையே

பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும் பேரின்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிக
(ஊர்அலர் உரைத்த காதை:64-67)

என விளக்குகிறார். அதாவது பிறந்தவர்கள்  அடைவது பெருந்துன்பம்; பிறப்பை நீக்கியவர்கள் அடைவது மிகப்பேரின்பம். பற்றினால் வருவது பெருந்துன்பம். பற்றை நீக்குவதால் அடைவது பேரின்பம்.

நான்கு வாய்மைகளை விளக்கியபின் அறவண அடிகள் ஐந்து சீலம் பற்றிக் கூறுகிறார்.

ஐந்து சீலம்

பௌத்த சமய அறநெறிக் கோட்பாடுகளில் அடிப்படையானவை ஐந்து சீலக்கோட்பாடு. அவை:

 

கொல்லாமை

 

கள்ளாமை – திருடாமை

 

பிறன்மனை விரும்பாமை

 

பொய்யாமை

 

கள்ளுண்ணாமை

ஐந்து சீலங்களில் கொல்லாமை, புலால் உண்ணாமை, கள் உண்ணாமை ஆகிய அறங்கள் ஆங்காங்கே வலியுறுத்திப் பேசப்படுகின்றன. சான்றாக ஒரு சில இடங்களைப் பார்க்கலாம்.

கொல்லாமையும் கருணையும்

உள்ளத்தில் ஊற்றெடுக்கும் அன்பு  விரிவாகும்போது கருணையாகிறது.  அன்பின்  விரிவே     கருணையாகும். தொடர்புடையவரிடம் அதாவது உறவினரிடமும் நண்பர்களிடமும் காட்டுவது அன்பு. அப்படியின்றித் தொடர்பு இல்லாதவரிடமும் அதாவது அனைத்து உயிர்களிடமும் காட்டப்படுவது கருணையாகும். யார் எங்குத் துன்பமுற்றாலும் அதைக் கேள்விப்பட்டபோது அவர்களுக்காக வருந்துவது கருணையின் அடையாளமாகும். இத்தகையோர் கொல்லாமையைப் பெரிதும் போற்றுவார்கள். இத்தகைய கோட்பாட்டைத் தன் உயிர்க் கொள்கையாகக் கொண்டவர்தான் புத்தர். உயிர்கள் அனைத்திடமும் கருணை காட்ட வேண்டுமென்று அறவுரை கூறியதோடு வாழ்ந்தும் காட்டினார். எந்த உயிர்க்கும் தீங்கு நேர்வதை அவரால் பொறுக்க முடிவதில்லை. புத்தரின் இந்தக் கோட்பாட்டை, சாத்தனார், ஆபுத்திரன் வாயிலாக விளக்குகிறார்.

ஆபுத்திரனும் ஆவும்

காசியில் வேதம் ஓதும் அந்தணனாகிய அபஞ்சிகனின் மனைவி சாலி. அவள் நெறி தவறி நடந்ததால் பெற்ற பிள்ளையை இரவு நேரத்தில் யாரும் அறியாத போது ஒரு தோட்டத்தில் விட்டு விட்டுச் செல்கிறாள்.    பசியால் குழந்தை அழுகிறது. குழந்தையின் அழுகுரலைக் கேட்ட பசு ஒன்று ஏழு நாள் வரை அக்குழந்தைக்குப் பாலூட்டி வளர்த்தது. அதனால் அக்குழந்தை ஆபுத்திரன் என வழங்கப்பட்டான். இளம்பூதி என்னும் அந்தணன் மனைவியோடு அவ்வழியே வந்தபோது அக்குழந்தையைக் கண்டான். அக்குழந்தையைத் தன் மகன் என எடுத்துச் சென்று வளர்த்தான். அந்தணர்க்குரிய வேதங்களையெல்லாம் நன்கு கற்பித்தான்.

ஆபுத்திரனின் கருணை

ஒருநாள் அந்தணர் ஒருவர் வீட்டில் வேள்வியில் பலிகொடுக்கப் பசு ஒன்றைக் கட்டி வைத்திருந்ததை ஆபுத்திரன் கண்டான். அஞ்சி நடுங்கிய நிலையில் அப்பசுவின் துயரினைக் கண்டு பெருந்துயரம் கொண்டான். இரவில் யாரும் அறியாதபோது அப்பசுவை விடுவித்து அவ்வூரை விட்டு நீங்கினான். பசுவைத் தேடிய அந்தணர் ஆபுத்திரன் செயலைக் கண்டு இழிவான சொற்களால் வசைபாடி அடித்துத் துன்புறுத்தினார். அப்போது கோபங்கொண்ட ஆபுத்திரன் அவர்களை வெறுத்துப்பேசி அவர்களுக்கு அறிவுரையும் கூறுகிறான். ‘அந்தணர்களே, பிற உயிர் வருந்துவதற்குரிய எதையும் செய்யாதீர். நான் கூறுவதைக் கேளுங்கள். மேய்ச்சல் நிலத்தில் உள்ள புல்லை மேய்ந்து இந்தப் பெரிய உலகத்தில் உள்ள மக்களுக்கு அவர்கள் பிறந்தது முதல் தன் இனிய பாலைத் தரும் இப்பசுவிடம் உமக்கு உண்டான சினம்தான் யாது? உரைப்பீராக’ என்றான்.

எந்தக் காரணத்திற்காகவும் உயிர்களைப் பலிகொடுக்கக்கூடாது என்பதில் புத்தர் உறுதி பூண்டிருந்தார்; அவருடைய அந்தக் கோட்பாடே இங்கு ஆபுத்திரன் வாயிலாக விளக்கப்படுகிறது.

கள் உண்ணாமையும் ஊன் உண்ணாமையும்

ஆதிரையின் கணவனான சாதுவன் வாணிகத்தின் பொருட்டுக் கடல் கடந்து செல்லும் போது கப்பல் உடைய, நாகர் கூட்டத்தில் அகப்பட்டுக் கொள்கிறான். தான் யார் என்பதையும் தனக்கு நேர்ந்த துயரத்தையும் அவர்கள் மொழியிலேயே விளக்குகிறான் நாகர் தலைவனுக்கு. அதனால் மகிழ்ந்த நாகர் தலைவன், துயரம் அடைந்த இவன் நம் இரக்கத்திற்கு உகந்தவன் எனக்கூறி, இந்த நம்பிக்கு இளமை பொருந்திய ஒரு பெண்ணைக் கொடுத்து, விருப்பம் தரும் கள்ளையும் புலாலையும் வேண்டுமளவு கொடுங்கள் என்று தன் மக்களுக்கு உத்தரவிட்டான்.

சாதுவன் அறிவுரை

நாகர்  தலைவன்  கூறியதைக் கேட்ட சாதுவன் அதிர்ச்சியுறுகிறான், ‘வெவ்வுரை கேட்டேன்;  வேண்டேன்’ என்று கூறுகிறான். தன் உத்தரவிற்கு மதிப்பளிக்காமல் மறுத்துரைத்த சாதுவன் மேல் கோபங்கொண்ட நாகர் தலைவன், ‘பெண்டிரும் உணவும் இல்லையானால் மக்களுக்கு இவ்வுலகத்தில் அடையக்கூடிய பலன் வேறேதும் உண்டோ? உண்டெனில் நாங்களும் அறியுமாறு சொல்வாயாக’ என்று சினத்துடன் அதட்டினான்.

சாதுவன் நாகர் தலைவனிடம்,

மயக்குங் கள்ளும் மன்னுயிர் கோறலும்
கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
நல்லறம் செய்வோர் நல்லுல கடைதலும்
அல்லறம் செய்வோர் அருநர கடைதலும்
உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர்
(ஆதிரை பிச்சையிட்ட காதை: 84-90)

எனக் கூறுகிறான்.

இதன் பொருள்:

அறிவை மயக்கும் கள்ளையும் நிலையற்ற உயிர்களைக் கொல்லுதலையும் தெளிந்த அறிவினை உடையோர் விலக்கினர். பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும் உறங்குவதும் உறங்கி விழிப்பதும் போன்றதாகும். நல்லறங்களைச் செய்கின்றவர்கள் அடைவதற்கு அரிய இன்பம் கொண்ட மேலுலகங்களை அடைதலும், தீமைகளைச் செய்கின்றவர்கள் தாங்கற்கரிய துன்பத்தைத் தரும் நரகங்களை அடைதலும் உண்மை என உணர்தலால் மனவலிமை மிக்க அறிஞர்கள் அவற்றை நீக்கினர்.

காமத்தை ஒழித்தல்

பௌத்த சமயத்தின் அறங்களில் முக்கியமானது காமத்தை ஒழித்தல். காமம் பல குற்றங்களை இழைக்கத் தூண்டும். தத்துவம் உணர்ந்த பெரியோரால் கடல் சூழ்ந்த இவ்வுலகில் விலக்கப்பட வேண்டிய குற்றங்கள் ஐந்து உள்ளன. அவற்றுள் காமமாகிய குற்றத்தைக் களைந்தவர் எவரோ, அவரே மற்றக் குற்றங்களையும் களைந்தவர் ஆவர் எனக் கருதி, தவநெறி மேற்கொள்வோர் அதனை அறவே விலக்கினர். காமத்தினின்றும் நீங்காதவர் பொறுக்கவியலாத நரகத்தில்  வீழ்ந்து துன்புறுவர் என்று காமத்தின் தன்மை உணர்த்தப்படுகிறது.

6.3.4 விழுத்துணை அறம்

விழுத்துணை அறமாகப் போற்றப்படுவது பசிப்பிணி போக்கல். எல்லா அறங்களிலும் முதன்மையான அறமாக பசிப்பிணிப் போக்கல் கருதப்படுகிறது. ஏனென்றால் பசியின் கொடுமை எல்லாத் துன்பங்களைக் காட்டிலும் கொடுமையானது. அதனால் முதலில் பசியின் கொடுமை விளக்கப்படுகிறது.

மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவத் தீவில் விட்டு விட்டுச்சென்றதும் மணிமேகலை மெல்ல உலாவி வருகிறாள். அப்போது தீவதிலகை அங்குத் தோன்றுகிறாள். தீவதிலகை இந்திரன் ஏவலால் புத்தர் பாதபீடிகையைப் பாதுகாப்பவள். தீவுக்குத் திலகம் போன்றவள். இந்திரன் ஏவலால் மணிபல்லவத் தீவில் தங்கியிருப்பவள்.

மணிமேகலை புத்த பீடிகையை வணங்கித் தன் முற்பிறப்பை அறிந்ததைக் கேட்டு, கோமுகிப் பொய்கையில் வைகாசிப் பௌர்ணமியன்று வெளியில் வரும் அமுதசுரபியைப் பெறும் தகுதியுடையவள் இவளே, எனக்கருதி அமுதசுரபியின் தன்மையை விளக்குகிறாள். மணிமேகலை புத்த பீடிகையைத் தொழுது கோமுகிப் பொய்கையை வலம் வந்து நின்றபோது, அமுதசுரபி மணிமேகலையின் கையை அடைந்தது. அப்பொழுது தீவதிலகை உயிர்களுக்கு உண்டாகும் பசிப்பிணியின் கொடுமையையும் அதனைத் தீர்ப்போரது பெருமையையும் உரைத்து, ‘இனி நீ உணவளித்து உயிர் கொடுத்தலாகிய அறத்தைச் செய்வாய்’ என்றாள்.

பசியின் கொடுமை

பசிப்பிணி, தன்னால் பற்றப்பட்டவருடைய உயர்குடிப்பிறப்பை அழிக்கும். சிறப்பைக் கெடுக்கும். பற்றிய கல்வியாகிய பெரிய தெப்பத்தையும் நீக்கும். நாணமாகிய அணியையும் போக்கும். மேன்மை பொருந்திய அழகைச் சிதைக்கும். மனைவியரோடு பிறர் கடைவாயிலில் பிச்சை எடுக்க நிறுத்தும். பசிப்பிணி அத்தகைய கொடுமை வாய்ந்தது. (பாத்திரம் பெற்ற காதை: 76-81)

பசியின் கொடுமையை விளக்க ஒரு சான்றையும் கூறுகிறாள் தீவதிலகை. புல்லும் மரமும் கரியுமாறு எங்கும் அழல்போலும் வெம்மை மிகுந்தது. அதனால் உயிர்கள் பசியால் அழியுமாறு மழைவளம் குன்றியது. அரச கடமையிலிருந்து நீங்கிய அருமறை ஓதும் அந்தணன் விசுவாமித்திரன். தவமுனியாகிய அவனும் பசியால் எங்கும் திரிய நேர்ந்தது. தன் கொடும்பசியைப் போக்கிக் கொள்ள எதையும் காணாது தனக்குச் சிறிதும் பொருந்தாத நாயின் ஊனை உண்டான் என்றால் பசியின் கொடுமையை என்னென்பது. (பாத்திரம் பெற்றகாதை:82-91) அத்தகைய பசியின் கொடுமையைப் போக்க உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரேயாவர்.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

இந்தியச் சமயங்கள் யாவும் மானுடம் தழைக்கவே அறங்களை வற்புறுத்திக் கூறுகின்றன. மண்ணில் நல்லவண்ணம் வாழ நெறிகளைக் காட்டுகின்றன. வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டுகின்றன. இதற்கு எந்தச் சமயமும் விதிவிலக்கன்று.

முதன்மையான அறம்

மணிமேகலை பௌத்த சமயத்தைப் பரப்ப எழுந்த காப்பியந்தான். ஆயினும் அது கூறும் சமயக் கோட்பாடுகள் மனித சமுதாயத்திற்குப் பொதுவானவை என்பதை மறுக்க இயலாது.  உண்மையில் அனைத்துச் சமயங்களின் கோட்பாடுகளும் அப்படித்தான்.     ஆயினும் மணிமேகலை பசியின் கொடுமையை விளக்கிப் பசிப்பிணி தீர்ப்பதே விழுத்துணையான அறம் என்று அழுத்தமாகப் பேசுவது மிகச் சிறந்த கோட்பாடாகும். இதைப் போல் வேறெந்த இலக்கியமும் இப்படிப் பேசவில்லை. எல்லாச் சமயங்களும் அன்னதானத்தைப்  பெரிதும் போற்றுகின்றன.   தானத்தில் அன்னதானமே சிறந்தது என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. ஏனென்றால் மக்களின் பசியைப் போக்கவில்லையென்றால் மக்கள் மக்களாக இருக்க மாட்டார்கள்.  இருக்க முடியாது என்பதை நன்கு உணர்ந்திருந்தனர். அதனால் அன்னதானத்தை முதன்மைப்படுத்தினர். நற்செயல்கள் பலவற்றை அடுக்கிக் கூறும் பாரதி

வயிற்றுக்குச் சோறிட வேண்டும்
    இங்கு வாழும் மனிதருக் கெல்லாம்
பயிற்றிப் பலகல்வி தந்து இப்பாரை
    உயர்த்திட வேண்டும்     (முரசு: 23)

என்று பசியைப் போக்குவதற்கே முதலிடம் தருகிறார்.

பசித்தவனுக்கு உணவுதான் கடவுள். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோராவர். உயிர் வளர்க்க ஊன் வளர்க்க வேண்டும். அந்த ஊன் வளர உணவு வேண்டும். இல்லையேல் பசிக்கொடுமை தாளாமல் சமூக விரோதிகளாக மாறுவதற்கான சூழல்தான் உருவாகும். மனிதர்க்கு மட்டுமன்றி மற்ற உயிர்களுக்கும் உணவே முதல் தேவையாகிறது. உறுபசி இல்லாத நாடே நல்லநாடு என்கிறார் வள்ளுவப் பேராசான். பாரகம் செயல்பட, பசிப்பிணி முற்றுமாக அகலவேண்டும். அப்போதுதான் சிந்திக்க முடியும். செயலாற்றவும் முடியும். இல்லையேல் மனித வாழ்க்கை விலங்கு வாழ்க்கையாகவே அமைந்துவிடும்.

சமண சமயம் நான்கு வகை தானங்களை வலியுறுத்துகிறது. அவற்றுள் முதன்மையானது அன்னதானமே. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் (இராமலிங்கம் அடிகள்) அறச்சாலைகள் அமைத்து ஏழை எளியவர்க்கு உணவிடச் செய்தமையை இங்கு நினைவு கூரலாம். எனவேதான் சாத்தனார் மணிமேகலை கரங்களில் அமுதசுரபி என்ற கற்பனைப் பாத்திரத்தைத் தந்து பசிப்பிணிப் போக்கும் அறச்செயலைச் செய்ததாகக் காப்பியம் படைக்கிறார். எத்தனை இனிய கற்பனை! இப்போது அப்படியொரு பாத்திரம் கிடைத்தால்…. என்று நீங்களும் என்னைப்போல் நினைக்கிறீர்கள் தானே? ஒவ்வொரு மனமும் அமுதசுரபிதான். அதில் அன்பு சுரக்கப் பெற்றால் அன்னம் மட்டுமா, அமிர்தத்தையே அனைவருக்கும் தரலாமல்லவா? எல்லாமே சாத்தியம்தான்!

பொறுக்கும் ஆற்றலுடையோர்க்கு அளிப்பவர்கள் அறத்தை விலை கூறி விற்பவராவர். ஏழைகளின் பசியைப் போக்குவோரிடத்தில்தான் மேலான அறநெறி வாழ்க்கை அமைந்துள்ளது. இந்த உலகில் வாழ்பவர்க்கெல்லாம் உணவு கொடுத்தோரே உயிர் கொடுத்தவராவர். அந்த மணிமேகலை வரிகள் இதோ,

ஆற்றுநர்க்கு அளிப்போர் அறம்விலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
(பாத்திரம் பெற்ற காதை:92:96)
மக்கள், தேவர் இரு சாரார்க்கும் ஒத்த முடிவினை உடைய அறம் என்பது யாது என விளக்கும்போது பசிப்பிணி தீர்த்தலையே சிறந்த அறம் என்கிறார்.
மக்கள் தேவர் என இரு சாரார்க்கும்
    ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன
பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும்
    தவப்பெரு நல்அறம் சாற்றினர்
(அறவணர்த் தொழுத காதை: 116-119)
இன்றும் மக்களிடையே அன்னதானம் (ஏழைகளுக்கு உணவிடுவது) பெரும் புண்ணியமாகக் கருதப்படுகிறது.

தன்மதிப்பீடு : வினாக்கள் – I

 

1. மணிமேகலைக் காப்பியத்தின் தனிச்சிறப்பு ஒன்றினைக் குறிப்பிடவும்.

விடை
2. புத்தரின் குணங்களில் சிலவற்றைச் சுட்டிக் காட்டவும்.

விடை
3. புத்தர் தோன்றும்போது இயற்கையில் ஏற்படும் நிகழ்ச்சிகளில் ஏதேனும் மூன்றினைக் கூறுக.

விடை
4. உவவனத்தில் உள்ள பதும பீடத்தின் சிறப்பு யாது?

விடை
5. மறுபிறவிக் கோட்பாட்டை பௌத்தம் ஏற்கிறதா?

விடை
About editor 2991 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply