இனப்பிரிவுகளைத்  தீர்க்காமல் தேசம் முன்னோக்கிச்  செல்ல முடியுமா?

இனப்பிரிவுகளைத்  தீர்க்காமல் தேசம் முன்னோக்கிச்  செல்ல முடியுமா?

எழுதியவர் ஹர்ஷா குணசேன

(இன்று பெரும்பாலான சிங்கள அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அறிவுப் பிழைப்பாளர்கள், எழுத்தாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள் போன்றோர் தமிழின வெறுப்பாளர்களாகவே காணப்படுகிறார்கள். இவர்கள் இலங்கையின் வரலாற்றைத் திரித்து எழுதுகிறார்கள். இலங்கை சிங்களவர்களின் நாடு என்றும் தமிழர்கள் வந்தேறு குடிகள் என்றும் எழுதுகிறார்கள். இந்தத் தமிழின,  தமிழ்மொழி வெறுப்பை மூலதனமாகக் கொண்டு 1956 இல்  ஆட்சியைப் பிடித்தவர் எஸ்டபுள்யூஆர்டி பண்டாரநாயக்க ஆவார்.  தமிழர்களுக்கு எதிரான போக்குக்குக்கு முக்கிய காரணம் கிபி 6 ஆம் நூற்றாண்டளவில், பாளி மொழியில், மகாநாம தேரர்  எனும் பவுத்த பிக்குவினால் தொகுக்கப்பட்ட மகாவம்சம் என்ற இதிகாசமாகும். இதனை இலங்கையின் வரலாற்று ஆவணமாக சிங்கள பவுத்த  பெரும்பான்மை மக்கள் கூறிவந்தாலும் அதனை முழுமையான ஒரு வரலாற்று ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடியாது எனும் கருத்து வரலாற்றாசிரியர்களிடையே இருக்கிறது. இருந்தாலும் இலங்கையின் வரலாற்றுக் குறிப்புகள் இந்நூலில் இடம்பெற்றிருப்பதன் காரணமாக மகாவம்சம் என்ற நூலைத் தவிர்த்துவிட்டு இலங்கையில் வரலாற்றை ஆய்வுசெய்ய முடியாது எனும் கருத்தும் வரலாற்றாசிரியர்களிடையே உள்ளது.

மகாவம்சம் பக்தி உணர்வுள்ள பவுத்தர்களின் மனக்கிளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் எழுதப்பட்டதாகும். மறுபுறம் மகாவம்சம் வாயிலாகவே விஜயன் பாண்டிநாட்டு இளவரசியை திருமணம் செய்து கொண்டான்,  அவன் மட்டுமல்ல அவனது 700 தோழர்களும் பாண்டிநாட்டுப்  பைங்கிளிகளைத் திருமணம் செய்து கொண்டார்கள்  என்ற செய்தி தெரியவருகிறது. அது மட்டுமல்ல தேவநம்பிய தீசனின் (கிமு 247 – 207) மதமாற்றத்துக்கு முன்னர் இலங்கையை ஆண்ட மன்னர்கள் இந்துக்கள் என்பதும் புலனாகிறது. அரண்மனைகளில் பிராமணர்கள் செல்வாக்குப் பெற்றிருந்தனர்.

எல்லாளன் (கிமு 145 – 101)  – துட்டகைமுனு யுத்தத்தை தமிழர் – சிங்களவர்கள் யுத்தம் எனத் தமிழ் எழுத்தாளர்களே எழுதுகிறார்கள். அது பிழையானது. துட்ட கைமுனு தனது பாட்டன்,  முப்பாட்டன் ஆட்சி செய்த அனுராதபுர இராச்சியத்தைப் பிடிக்கவே எல்லாளன் மீது போர் தொடுத்தான். துட்ட கைமுனுவும் அவனது மூதாதையர்களும் நாக வம்சத்தவர்கள். அவனுக்குப் பின்னர் (7 ஆம் நூற்றாண்டுவரை) அனுராத புரத்தை தலைநாகராகக் கொண்டு ஆண்ட மன்னர்கள் எல்லோரும் நாக வம்சத்தவர்களே. சிங்கள மொழியும் சிங்கள இனமும்  கிபி எட்டாம் நூற்றாண்டளவிலேயே தோற்றம் பெறுகின்றன. பவுத்த நாகர்களுக்கு ஒரு அடையாளம் கொடுக்கவே சிங்களமொழி உருவாக்கப்பட்டது.

இந்த வரலாற்று உண்மைகளை ஒப்புக் கொள்ளும் சிங்கள எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இந்தக் கட்டுரையின் ஆசிரியர் அப்படியானவரே. இனி Colombo Telegraph என்ற இணையதளத்தில் ஆங்கிலத்தில் எழுதி வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கத்தைப் படியுங்கள். நக்கீரன்.)

ஜனநாயகம் என்பது பெரும்பான்மையினரின் ஆட்சி. பெரும்பான்மை சிறுபான்மையினரின் தேவைகளை நசுக்க முயன்றால், ஜனநாயகம் சீர்கெட்டுப்  பெரும்பான்மையினரின் சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்லும். இலங்கை நீண்ட காலமாக இந்தச்  சூழ்நிலையில் இருந்தது, சிறிது காலத்திற்கு முன்பு அது முழுமையான சர்வாதிகாரத்தை நோக்கிச்  செல்ல முயன்றது. அது தோல்வியுற்றது. அதன் பின்னர் ஜனநாயக சுதந்திரம் நிறுவப்பட்டது. இருப்பினும், அது  முழுமையான  ஜனநாயகத்தின் தரத்துக்கு மீளவில்லை.

அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் முடிவு இனத்தின் அடிப்படையில் மிகவும் துருவப்படுத்தப்பட்டு விட்டது. சிறுபான்மையினர் தங்கள் இனத்தின் தீவிரவாத வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதைக்  கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் மிகப் பெரியளவில் ஒரு சிங்கள – பவுத்தருக்கு வாக்களித்தனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் இதே நிலைதான் இருந்தது. இந்த முறை துருவமுனைப்புப் போக்கு  கூர்மையடைந்துள்ளது.  இந்தத் தேர்தலில் முக்கியமாக தேசியப் பாதுகாப்பு மற்றும் இனத்தன்மை அடிப்படையில் பரப்புரை செய்யப்பட்டது. முரண்பாடாக, வரலாற்றில் இந்தக்  கட்டத்தில் இலங்கைக்குத் தேசிய பாதுகாப்புத் தேவைப்பட்டால், அது வெவ்வேறு இனங்களையும் மதங்களையும் பிரிப்பதை விட ஒத்திசைக்க வேண்டும். எனவே, நாடு இப்போது தவறான மனநிலையில் உள்ளது.

தனக்கு வாக்களிக்காத மக்கள் உட்பட அனைத்து இலங்கையர்களுக்கும் தான் ஜனாதிபதி என கோட்டாபய கூறினார். மேலும், அவர் தமிழர்களின் அரசியல் வேட்கைகளை நிவர்த்தி செய்ய மாட்டார் என்றும் ஆனால் தமிழர்கள் இருக்கும் பகுதிகளின் வளர்ச்சியையிட்டுக்  கவனம் செலுத்தப்படும் எனச் சொன்னார்.  காரணம், தமிழர்கள் வாழும் பகுதிகள் அபிவிருத்தி செய்யப்படுவதைச் சிங்களவர்கள் எதிர்க்க மாட்டார்கள்.   அபிவிருத்தியை மேற்கொடால்  தமிழர்களின் அரசியல் வேட்கை  மங்கிவிடும் என்று  சனாதிபதி கோட்டாபய நினைக்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிரச்சினையின் மூல காரணம்  பொருளாதாரம் என்ற அனுமானம் ஆகும்.

ஆனால் அதுவல்ல மூலகாரணம்.  இப்போது ஹொங் கொங் மக்கள் சீன ஆட்சிக்கு எதிராகப்  பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஹொங் கொங் பொருளாதார ரீதியாகப்  பலமாக இருக்கிறது. ஆனால் அவர்கள் தங்கள் பொருளாதார வளர்ச்சியைச் சமரசம் செய்வதன் மூலம் சீனாவுக்குக்  குற்றவாளிகளை நாடுகடத்தப்படும் சட்டத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். பிரித்தானியாவில்  சமசீரற்ற  அதிகாரப் பகிர்வை ஸ்கொட்லாந்து அனுபவித்து வருகிறது. ஸ்கொட்லாந்து மக்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறலாமா வேண்டாமா என்பதை அவர்கள் தீர்மானிக்க முடியும்.  ஆனால் அவர்கள் இறுதியாக  நடந்த  வாக்கெடுப்பில் பிரித்தானியாவில் தங்க முடிவு செய்தனர். கட்டலோனியா ஸ்பெயினில் ஒரு செல்வந்தப் பிராந்தியமாகும்.  இது ஒரு தனி நாடாளுமன்றத்தைக் கொண்டுள்ளது.  மேலும்  ஸ்பெயினின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 19% பங்களிக்கிறது. கட்டலோனிய மக்களிடையே ஒரு பரவலான நம்பிக்கை உள்ளது. அவர்கள்  மத்திய அரசு  திருப்பித்தரும்  நிதியைவிட அதிகமான வரிப் பணத்தை அது  எடுத்துக் கொள்கிறது என்ற நம்பிக்கையாகும்.

எனவே, குறைந்த பொருளாதார நிலைமைகள் பிரிவினைக்குக் காரணமாக இருக்காது. மறுபுறம், பொருளாதாரம் வளரும்போது, ஜனாதிபதியின் நம்பிக்கைக்கு மாறாக, தமிழர்களின் அரசியல் வேட்கைகளை நசுக்குவது மிகவும் கடினமாக இருக்கலாம். ஜனாதிபதி என்ன சொல்லவில்லை என்றால், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் இயக்கம் சிங்கள பேரினவாதத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றே செயல்படுகிறது என்பதாகும்.  அதன் மூலம் (சிங்களப் பேரினவாதம்) அரசியல் நன்மைகளைப் பெறுகின்றது. எஸ்டபிள்யூஆர்டி பண்டாரநாயக்க காலம் தொட்டு  எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் இதுபோலவே செயல்பட்டன. சந்திரிகா குமாரதுங்கா மற்றும் இரணில் விக்ரமசிங்க ஆகியோர் மட்டுமே இந்தமாதிரி நடந்து கொள்ளவில்லை. அவர்களிடம் சொந்தக் குறைபாடுகள் மற்றும் பலவீனங்கள் உள்ளன.  ஆனால் அவர்கள் இந்தத் தேசியக் கேள்வியிலிருந்து அரசியல் நன்மைகளைப் பெற முயற்சிக்கவில்லை.

போரை முடித்த தலைவர் என்ற முறையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த இராசபக்சவுக்கு இந்த இனச் சிக்கலைத் தீர்த்துவைக்கச்  சிறந்த வாய்ப்புக் கிடைத்தது. துரதிட்டவசமாக, அவர் அதைத் தவிர்த்தார். 1967 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆறு நாள் போரின்போது இட்சாக் இராபின் (Yitzhak Rabin) இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் தளபதியாக இருந்தவர். 1994 இல்  பிரதமராக இருந்தபோது, ஒஸ்லோ ஆதரவு இஸ்ரேல்-பாலஸ்தீனிய சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது அவருக்கு  அமைதி  நோபல் விருது வழங்கப்பட  வழிவகுத்தது. இருப்பினும், பின்னர் அவர் சமாதான உடன்படிக்கையை எதிர்த்த ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார். இந்திய சுதந்திரத்திரப் போராட்டத்தின் போது அதன் முக்கிய தலைவராக  இருந்தவர் மகாத்மா காந்தி.  அவரே இந்தியாவில் இன, மத மற்றும் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவரப் பாடுபட்டவர் ஆவர். 1947 இல் இடம்பெற்ற இனக் கலவரம் தொடர்பாக அவர் கொண்டிருந்த நிலைப்பாட்டின் விளைவாக அவர் படுகொலை செய்யப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி (மகிந்த இராசபக்ச) நோபல் பரிசு பெறுவதை விட உயிருடன் இருப்பது நல்லது என அவர்  நினைத்திருக்கலாம்.

அனால் அப்படி இல்லை. வரலாறு நமக்கு வேறு பாடத்தைக் கற்பிக்கிறது. இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக,  1915 வரை,  இன மோதல்கள் இடம்பெறவில்லை. மோதல்கள் மற்றும் போர்கள் மன்னர்கள் மற்றும் இளவரசர்களிடையே நடந்தன. அவர்கள் அதிகாரத்தைப் பற்றி அக்கறை கொண்டிருந்தார்கள், இனத்தைப் பற்றி அல்ல. எல்லாளனின் படையில் பல சிங்களவர்கள் (இந்து நாகர்கள்)  இருந்தனர். ‘சட்டத்தில் தகராறுகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில், நண்பர் மற்றும் எதிரிக்குக் கூட நீதியுடன்’ ஆட்சி செய்ததாக எல்லாளனை மகாவம்சம்  பாராட்டுகிறது. நமது நாகரிகத்தை நாசமாக்கி, 13 ஆம் நூற்றாண்டில் இராஜ்யத்தை தெற்கே மாற்ற வழி வகுத்த மாகன் ஒரு தமிழன்  அல்ல. சிங்கள மன்னர்கள் சோழர் படையெடுப்புகளுக்கு எதிராகப் பாண்டியர்களின் ஆதரவை நாடினர்.

சிங்களவர்களும் முஸ்லிம்களும் இந்த நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இணக்கமாக வாழ்ந்தனர். சிங்கள மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், முஸ்லிம்கள் அரச  நீதிமன்றங்களில் பணியாற்றினர். அவர்கள் பன்னாட்டு  விவகாரங்கள் மற்றும் வாணிகம்  தொடர்பாக  மன்னர்களுக்கு அறிவுரை வழங்கினர். அவர்கள் புத்த மடாலயங்களிலும் பணியாற்றினர்.  மேலும் அவர்கள் கோயில் வளாகத்தில் தங்கள் மசூதிகளைக்  கட்ட அனுமதிக்கப்பட்டனர். மேற்கத்திய படையெடுப்பாளர்களிடமிருந்து  வந்த தாக்கங்களிலிருந்து அவர்களைக் காப்பாற்ற சிங்கள மன்னர்கள் கண்டிய மாவட்டங்களில் முஸ்லிம்கள் குடியேற அனுமதித்தனர்.

இந்த நிலைமை 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடந்த  பவுத்தமத மறுமலர்ச்சி இயக்கத்தினால்  மாற்றப்பட்டது. அந்த நேரத்தில் சிங்கள பவுத்தர்கள் ஒடுக்கப்பட்டனர். மேலும்  சமூகத்தின் மேலாதிக்கம் கிறித்தவர்களிடமும் வர்த்தகம் சிங்களவர் அல்லாதவர்களிடமும் இருந்தது. துரதிட்டவசமாக,  தொடக்கத்தில்  கிறித்தவர்களுக்கு எதிராக இயக்கப்பட்ட பவுத்த  மறுமலர்ச்சி இயக்கம்  பின்னர் பிற இனங்களுக்கும் எதிராகவும்  இயக்கப்பட்டது. இதுதான் இந்த நாட்டில் இன மோதல்களின்  தொடக்கம் ஆகும். இந்த நிலைமைக்கு மாறாக, ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியா நாட்டின் அனைத்து மதங்களையும் இனங்களையும் ஒன்றிணைத்துத்  தனது சுதந்திரப் போராட்டத்தை இயக்க முடிந்தது.

எனவே, இது ஒரு அரசியல் இயக்கம் ஆகும். இதைப் பண்டாரநாயக்க காலம் தொட்டு  எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆட்சியைப் பிடிக்கப் பயன்படுத்தினர். இதைச் சந்திரிகா குமாரதுங்க மாற்றினார். கெடுக்கப்பட்ட சிங்கள நாட்டுப்புற மக்களது மனதைப் பெருமளவில் மாற்றச்  சுது நெலும் இயக்கத்தால் முடிந்தது. எனவே, நாட்டின் அரசியலில் ஒரு முன்னுதாரண மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு மகிந்த  இராசபக்சவுக்குக்  கிடைத்தது. ஆனால் அதனை அவர் செய்யவில்லை.  அவரது தோல்வி என்பது அவருக்கும் நாட்டிற்கும் ஒரு துரதிட்டமாகப் போய்விட்டது.

இப்போது கோட்டாபய இராசபக்சவுக்கும் இதே போன்ற ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இருப்பினும் அவரது சகோதரருக்குக் கிடைத்த வாய்ப்பைப் போல இது பெரியதல்ல. காரணம், சிங்களப் பேரினவாத உணர்வுகளைத் தூண்டியது கோட்டாபய கடந்த தேர்தலில் பெற்ற வெற்றிக்குப் பெருமளவில் பங்களித்தது. 1956 ஆம் ஆண்டு வெற்றியின் பின்னர் பண்டாரநாயக்க தமிழர்களுக்கு நியாயம் வழங்க  முயன்றார். ஆனால் பவுத்த பிக்குகள் தலைமையிலான மக்களின் அழுத்தத்தை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை. அவர் ஒரு தாராளவாத ஜனநாயகவாதி. கோட்டாபய  இராசபக்ச தாராளவாத ஜனநாயகவாதி அல்ல. பிக்குகள் கோரியபடி அவர் ஒரு சர்வாதிகாரத் தலைவர் ஆவர்.

இந்திய – இலங்கை உடன்பாட்டின் விளைவாகத் தமிழர்களுக்குக் கிடைத்த ஒரே ஒரு அரசியலமைப்புச் சலுகை 13 ஏ சட்ட திருத்தமாகும்.  இந்த இந்திய –  இலங்கை  உடன்பாடு ஒரேயொருவரது (ஜேஆர் ஜெயவர்த்தன) முயற்சி காரணமாகக் கையெழுத்தானது. அந்த உடன்பாட்டை அவரது பிரதமர், மூத்த அமைச்சர்கள் மற்றும் தமிழர் தவிர்ந்த மற்ற எல்லா அரசியல் கட்சிகளும்   எதிர்த்த போதும்  ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து அந்தச் சட்டத் திருத்தத்தை ஜெயவர்த்தனா நிறைவேற்றினார். இறதியாக, இந்தியப் பிரதமர் (இராசீவ் காந்தி) மீது உடல் ரீதியான தாக்குதல் கூட மேற்கொள்ளப்பட்டது.

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயல்முறைக்கு மைத்ரிபால சிறிசேன மற்றும் இரிணில் விக்கிரமசிங்க ஆகியோர் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கவில்லை. நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடு இந்த செயல்முறை கணிசமான நிலைக்கு சென்றிருந்தது.

எந்தவொரு சரியான காரணமும் இல்லாமல் சிங்களவர்கள் ஒரு அரசியல் தீர்வை வழங்க அஞ்சுகிறார்கள். தமிழர்களுக்குச்  சுயாட்சி வழங்கப்பட்டால், அவர்கள் ஒரு தனியரசைக்  கேட்பார்கள் என்று அவர்கள் (சிங்களவர்கள்) நினைக்கிறார்கள். அது சரியானதல்ல. அந்த நம்பிக்கையை மறுக்க இந்தியா ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

இந்தியா ஒரு சுதந்திர நாடாகத் தோற்றம் பெற்ற நேரத்தில் அது தென்னிந்திய மாநிலங்களின் எல்லைகளைக்  குறுநில மன்னர்கள் காலத்திலும் பிரித்தானியர் காலத்திலும் இருந்ததுபோல நிர்ணயித்தது.       பொதுவாகத் திராவிட மொழிகள் பேசும் அனைத்து மக்களுக்கும் குறிப்பாக ஒரு தமிழ் மாநில அரசுக்கும் தனி மாநிலத்திற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்தியா 1953 ஆம் ஆண்டில் தென் மாநிலங்களின் எல்லைகளை மறுநிர்ணயம் செய்யத் தொடங்கியது.  அது 1953 இல் தொடங்கி 1956  வரை தொடர்ந்தது. ஹைதராபாத் மாகாணமும்  ஆந்திர மாநிலமும் ஒன்றிணைந்து   தெலுங்கு பேசும் ஆந்திர மாநிலமாக உருவாக்கப்பட்டது. திருவிதாங்கூர் – கொச்சின் மாநிலம் மற்றும்  மட்ராஸ் பிரசிடென்சியின் மலபார் மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு மலையாள மொழி பேசும் கேரள மாநிலம் உருவாக்கப்பட்டது. தமிழ் பேசும் தெற்கு மாகாணங்கள் மெட்ராஸ் பிரசிடென்சியுடன் இணைக்கப்பட்டன. இப்படி இணைக்கப்பட்ட நிலப்பரப்புக்கு  தமிழ்நாடு என 1968 இல்  பெயர் சூட்டப்பட்டது.   கன்னட மொழி பேசும் ஹைதராபாத்  மாகாணத்தின் பகுதிகளும் மேற்கு பம்பாய் மாநிலங்களும் மைசூர் மாநிலத்துடன் இணைக்கப்பட்டன. இதற்கு 1973 இல் கர்நாடகா என மறுபெயரிடப்பட்டது.

இந்த மாற்றங்களுடனும் பிரிவினைக்கான அரசியலமைப்புத் தடைகளுடனும்  தனித் தமிழ் அரசின் கோரிக்கை மங்கிப்போனது. அவர்கள் விரும்பியது அந்தந்த இனங்களுக்குத் தனி அடையாளங்கள் மட்டுமே, தனி மாநிலங்கள் அல்ல. எனவே, மொழி மற்றும் இனத்தின் அடிப்படையில் மாகாணங்களின் எல்லையை  நிர்ணயம் செய்தது தனி மாநிலங்களுக்கான கோரிக்கைகளைக்  குறைக்கும் என்பது இந்தியாவில் நிரூபிக்கப்பட்டது. இது   தென்னிலங்கையில் உள்ள மக்களது நம்பிக்கைக்கு (வட கிழக்கு பிரிந்துவிடும்) முற்றிலும் மாறானது.

தமிழர்கள் தங்கள் அரசியல் வேட்கைகளை நிறைவேற்ற அனுமதித்தால் நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டிற்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்பதைப் பெரும்பான்மை சிங்களவர்களை நம்ப வைப்பது சம்பந்தப்பட்ட பொதுமக்கள் மற்றும் சிவில் சமூகத்தின் பணியாகும். இதைச் செய்யாமல், நாடு பொருளாதார செழிப்புடன் மட்டும் முன்னேற முடியாது, இது சிங்கள சமூகத்திற்குச் செய்யும் துரோகம் அல்ல என்பதை அவர்கள் ஜனாதிபதியை நம்ப வைக்க வேண்டும். இது ஆற்றில் எதிர் நீச்சல் அடிப்பது போன்றது. இருந்தும் இதுவே முன்னோக்கி செல்லுவதற்கான ஒரே  வழியாகும்.(https://www.colombotelegraph.com/index.php/can-the-nation-move-forward-without-resolving-the-ethnic-divisions/)

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply