ஆடு வளர்ப்புக்குக் கைகொடுக்கும் பரண் முறை!

ஆடு வளர்ப்புக்குக் கைகொடுக்கும் பரண் முறை!

 24 Aug 2019 

 “படித்த இளைஞர்கள் பலரும் தற்போது ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு போன்ற பண்ணைத்தொழில்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். பொதுவாக ஆடுகளை இயற்கையாக மேய்ச்சல் முறையில்தான் வளர்க்க வேண்டும். ஆனால், மேய்ச்சல் முறையில் வளர்ப்பதற்கு அதிகப்பரப்பிலான மேய்ச்சல் நிலம் தேவைப்படுவதோடு, வேலையாட்களும் தேவைப்படுவர். இந்த இரண்டு விஷயங்களையும் சமாளிக்க முடியாதவர்களுக்கான மாற்று முறைதான், பரண்மேல் ஆடு வளர்ப்பு.

கொட்டில் குளுமையாக இருந்தால், ஆடுகள் சுறுசுறுப்பாகவும் பொலிவாகவும் இருக்கும். அதிக மழைப்பொழிவுள்ள பகுதிகளுக்காக வடிவமைக்கப்பட்டது.

இந்த முறைக்கு வெள்ளாடுகள் ஏற்றவை. வெள்ளாடுகள் சுத்தமாக இருக்க விரும்புபவை. வெள்ளாடு உலர்ந்த தரையைத்தான் விரும்பும். ஈரப்பதமான தரை, தண்ணீர் அல்லது சகதி தேங்கியுள்ள இடத்தில் இருப்பதை அசௌகரியமாக உணரும். மழைக்காலத்தில் காலை நேரங்களில் ஆடுகள் சாலையில் படுத்திருப்பதும் இதனால்தான். மண், புழுக்கை, மூத்திரம் உள்ளிட்டவை இலைதழை களில் ஒட்டி இருந்தால் அவற்றை வெள்ளாடுகள் சாப்பிடாது. அதனால் தான் ஆடுகளுக்குப் பசுந்தீவனங்களைக் கயிற்றில் கட்டி தொங்கவிடும் பழக்கம் உருவானது. வெள்ளாடுகளுக்கு முன்னங்காலைத் தூக்கி தலையை உயர்த்தி, உயரத்தில் உள்ள கொழுந்து தழைகளைக் கொய்வதில்தான் அலாதிப் பிரியம்.

ஆடு வளர்ப்புக்குக் கைகொடுக்கும் பரண் முறை!

கிராமங்களில் மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படும் வெள்ளாடுகள், பசுந்தீவனங்களைத் தேடி ஒரு நாளைக்கு சராசரியாக நான்கு முதல் ஆறு கிலோமீட்டர் தூரம்வரை நடக்கின்றன. வறட்சிக் காலத்தில் இன்னமும் அதிக தூரம் நடக்க வாய்ப்புண்டு. தற்போது மேய்ச்சலுக்கு வழி இல்லாமல் போனதால், கொட்டில் முறைதான் ஆடு வளர்ப்புக்குக் கைகொடுக்கிறது.

‘‘கொட்டகையைச் சுற்றி கொடுக்காய்ப்புளி, கருவேல், கிளுவை போன்ற மரங்களை வளர்த்துவந்தால், ஆடுகளுக்குப் பசுந்தீவனம் கிடைப்பதோடு, நிழலும் கிடைக்கும்.’’

இந்த முறையில் பசுந்தீவனங்கள் சாகுபடி செய்து, சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டுத் தீவனத்தொட்டியில் இடப்படும். சுத்தமான குடிநீர் வழங்கப்படும். காலை, மாலை இருவேளையும் ஊட்டம் மிகுந்த அடர்தீவனம் அளிக்கப்படும். இதனால், உடல் எடை கிடுகிடுவென உயரும். ஆடுகளும் கொழுகொழுவெனச் சதைப்பற்றோடு இருக்கும். ஆடுகள் அனைத்தும் ஒரே கூரையின் கீழ் இருப்பதால் தடுப்பூசி போடுதல், உடல் எடையைக் கணக்கிடுதல், பேன் மற்றும் உண்ணி நீக்க மருந்துக்குளியல் கொடுத்தல் போன்றவை எளிதாக இருக்கும்.

அலைந்து திரிவது ஆடுகளின் இயல்பு. அவற்றின் ஆரோக்கியத்துக்கு மேய்ச்சல் அவசியம். இதனால், பரண்மேல் ஆடு வளர்ப்புமுறையை மேற்கொண்டாலும், ஆடுகள் காலார நடக்கும் வகையில் மேய்ச்சல் நிலமும் கொஞ்சம் இருக்க வேண்டும். கொட்டகையைச் சுற்றி கொடுக்காய்ப்புளி, கருவேல், கிளுவை போன்ற மரங்களை வளர்த்துவந்தால், ஆடுகளுக்குப் பசுந்தீவனம் கிடைப்பதோடு, நிழலும் கிடைக்கும். கொட்டில் குளுமையாக இருந்தால், ஆடுகள் சுறுசுறுப்பாகவும் பொலிவாகவும் இருக்கும்.

பரண் தரையிலிருந்து 1 முதல் 1.5 மீட்டர் உயரத்தில் மரப்பலகை அல்லது பிளாஸ்டிக் கொண்டு அமைக்கப்படுகிறது. பரணில் பலகைகளுக்கிடையே 1.5–2 சென்டிமீட்டர் அளவுதான் இடைவெளி இருக்க வேண்டும். ஆட்டுப்புழுக்கை தடை இல்லாமல் கீழே விழ, இந்த அளவு இடைவெளி போதுமானது. இடைவெளி அதிகமானால், ஆட்டின் கால்கள் பலகைகளுக்கு இடையில் சிக்கிக்கொள்ளும். புழுக்கை மற்றும் சிறுநீர் ஆகியவை உடனடியாகக் கீழே சென்று விடுவதால், பரணின் தரைப்பகுதி எப்போதும் உலர்ந்த நிலையில் இருக்கும். மரப்பலகையிலான பரண் 3 ஆண்டுகள்வரை பலன் கொடுக்கும். பிளாஸ்டிக் பரண் 10 ஆண்டுகள்வரை பயன்படும்” என்ற ஜெகதீசன் நிறைவாக,

“பரண்மேல் ஆடு வளர்ப்புமுறை, அதிக மழைப்பொழிவுள்ள பகுதிகளுக்காக வடிவமைக்கப்பட்டது. நீலகிரி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களுக்கு மிகவும் ஏற்றது. மற்ற மாவட்டங்களில் முடிந்தவரைத் தரைக் கொட்டகையையே பயன்படுத்தலாம். பணவசதி உள்ளவர்கள் பரண்மேல் ஆடு வளர்ப்பைச் சில நன்மைகள் கருதி மேற்கொள்ளலாம். ஆடு வளர்ப்பில் லாபம் என்பது குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான குட்டிகளைப்பெற்று வளர்த்தெடுத்து, விற்பனை செய்வதைப் பொறுத்துதான் அமைகிறது. லாபம் கொட்டகையைப் பொறுத்து அமைவதில்லை. ஆடுகளுக்கு மேய்ச்சல் அவசியம். ஆரோக்கியமான ஆடுகள்தான் அதிக லாபத்தைக் கொடுக்கும் என்பதை நினைவில் வைத்து, அதற்குத் தகுந்தவாறு கொட்டகை அல்லது பரண்களை அமைத்து ஆடு வளர்ப்பில் இறங்க வேண்டும்” என்றார்.

தொடர்புக்கு:

முனைவர் கி.ஜெகதீசன்

உதவிப் பேராசிரியர் விலங்கின

மரபணுவியல் மற்றும்

இனவிருத்தியியல் துறை,

கால்நடை மருத்துவக் கல்லூரி

மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

ஒரத்தநாடு – 614625.

செல்போன்: 95660 82013

110 ஆடுகளுக்கான கொட்டகை!

கொட்டகையை நீளவாக்கில் கிழக்கு மேற்காக இருக்குமாறு அமைக்க வேண்டும்.

1 கிடா ஆட்டுக்கு 20 சதுரஅடி என்ற அளவிலும், 1 பெட்டை ஆட்டுக்கு 10 சதுரஅடி என்ற அளவிலும், 1 குட்டிக்கு 5 சதுரஅடி அளவிலும் இடமிருக்க வேண்டும்.

கொட்டகையின் அகலம் 25-30 அடிவரை மட்டுமே இருக்க வேண்டும். அதற்குக் குறைவாகவோ அதிகமாகவோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 110 ஆடுகளுக்கு 48 X 25 (நீளம் X அகலம்) என்ற அளவில் கொட்டகை அமைக்கலாம்.

100 பெட்டை ஆடுகளுக்கு 1,000 சதுரஅடி பரப்பு, 10 கிடாக்களுக்கு 200 சதுரஅடி பரப்பு என மொத்தம் 1,200 சதுர அடி இடம் தேவை.

ஆடு வளர்ப்புக்குக் கைகொடுக்கும் பரண் முறை!

 1,200 சதுர அடியிலான கொட்டகையில் 3 அறைகள் இருக்குமாறு கம்பிவலைத்தடுப்புகளை அமைக்க வேண்டும். 10 கிடாக்களுக்கு 200 சதுர அடியில் ஓர் அறையும், 100 பெட்டை ஆடுகளுக்குத் தலா 500 சதுர அடியில் இரண்டு அறைகளும் அமைக்க வேண்டும்.

பரண் தரையிலிருந்து 6 முதல் 8 அடி உயரத்தில் இருக்க வேண்டும்.

கொட்டகையின் முன்புறத்தில் ஆடுகள் வெயிலில் உலவுவதற் கான திறந்தவெளி இருக்க வேண்டும். இந்த திறந்தவெளி பரப்பு, கொட்டகையின் மொத்தப் பரப்பளவைப்போல் 2 மடங்கு இருக்க வேண்டும். இந்த இடத்தில் நிழல் தரும் தீவன மரங்களை வளர்க்கலாம்.

ஐந்து ஆடுகளுக்குப் பசுந்தீவனம் சாகுபடி செய்ய 10 சென்ட் நிலம் தேவை. அதேகணக்கில் 110 ஆடுகளுக்கு 220 சென்ட் (2.2 ஏக்கர்) நிலம் தேவை. பசுந்தீவனச் சாகுபடி நிலத்தில் 50 சதவிகிதப்பரப்பில் கோ-4 போன்ற புற்களையும், 25 சதவிகிதப் பரப்பில் காராமணி போன்ற பயறு வகைகளையும், 25 சதவிகிதப் பரப்பில் வேலிமசால், கோ.எஃப்.எஸ்-29 போன்றவற்றையும் பயிரிடலாம்.

ஆடு வளர்ப்புக்குக் கைகொடுக்கும் பரண் முறை!

குறைந்த செலவில் பரண்!

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அருகேயுள்ள கம்மாளம்பூண்டியில் ஆட்டுப்பண்ணை நடத்தி வருகிறார், சுப்பையா. பரண்முறை ஆடு வளர்ப்பு குறித்துப் பேசிய சுப்பையா, “நான் 500 ஆடுகளுக்கு மேல வளர்க்கிறேன். போயர், தலைச்சேரி ஆடுகள்தான் அதிகம். கொஞ்சம் செம்மறியாடுகளும் இருக்கு. எல்லா ஆடுகளையும் பரண்லதான் அடைக்கிறேன். பரணை இரும்பால் அமைச்சிருக்கேன். தரைத்தளத்தைத் தைல மர ரீப்பர்களை வைத்து அமைச்சிருக்கேன். இரும்பு அமைச்சதுக்குக் காரணம், எப்போ வேணாலும் அதைப் பழைய இரும்பா விற்பனை செஞ்சுடலாம். நாம் பண்ணை அமைக்கிற இடத்தைச் சுத்திக் கிடைக்கிற பொருள்களை வெச்சே கொட்டகை அமைக்கணும். பனைமரங்கள், பனையோலை, தென்னையோலைனு பயன்படுத்தினா செலவு குறையும். பரணா இருந்தாலும் சரி, தரையில கொட்டகை அமைச்சாலும் சரி… ஆடுகளுக்கு மேய்ச்சல் அவசியம். பரண் அமைக்க, எவ்வளவுக்கெவ்வளவு செலவைக் குறைக்க முடியும்னு பார்த்துக் குறைவான செலவில்தான் அமைக்கணும். அப்போதான் சீக்கிரம் லாபம் பார்க்க முடியும்” என்றார் உற்சாகத்துடன்.

தொடர்புக்கு, சுப்பையா, செல்போன்: 98843 01017

https://www.vikatan.com/news/agriculture/tips-for-goat-farming


 

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply