இராஜினாமாக் கடிதம் தயாராக உள்ளது; தனது நிலைப்பாட்டில் சுமந்திரன் உறுதி! சனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவரும் ஒரே கட்சியில் ஒருபோதும் இருக்கமுடியாது!

 

இராஜினாமாக் கடிதம் தயாராக உள்ளது; தனது நிலைப்பாட்டில் சுமந்திரன் உறுதி!

சனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவரும் ஒரே கட்சியில் ஒருபோதும் இருக்கமுடியாது!

எதிர்க்கட்சித் தலைவரைத் தீர்மானிப்பவர் சபாநாயகரே!

முதல்வர் நினைத்திருந்தால் மாகாணத்துக்குக் காணி, பொலீஸ் அதிகாரங்களை பெற்றிருக்கலாம்

மாகாணசபை எந்த முன்னெடுப்பும் ஆற்றாமல் நாம் வழக்குத் தாக்கல்செய்ய இயலாது!

தீவிரவாத சிந்தனையுடையோர் தமது சிந்தனையை முதல்வருக்கு விற்றுவிட்டார்கள். அவரும் அதனை மென்றுவிட்டார்.

13 ஆம் திருத்த சட்டத்தின் தோல்வியே மாகாணசபை என்பதை காட்டவேண்டும் என்றே விக்கி தலைமையிலான அணி செயற்பட்டது. 13 ஐ நடைமுறைப்படுத்தி அது வெற்றியாக அமைந்தால் அவர்களின் தீவிரவாத சிந்தனை தோல்வியடைந்துவிடுமே!

பெரும்பான்மை இல்லாத சூழலில்தான் 17, 19 நிறைவேறின. இதுதான் நல்ல சகுணம். விட்டுக்கொடுப்புதான் இங்கு அவசியம்.

புதிய அரசமைப்பு நிறைவேற்ற முடியாது என்று நான் உணர்ந்தால் – தமிழருக்கு தீர்வை என்னால் பெற்றுக்கொடுக்கமுடியாது என்பதை நான் உணர்ந்தால் – அரசியலில் இருந்து ஒதுங்குவேன். இராஜினாமாக் கடிதம் தயாராகவே உள்ளது. மாறாக, தீர்வு கிடைத்தாலும் எனக்கு அரசியலில் எந்த வேலையும் இல்லை. நான் ஒதுங்குவேன்.

கட்சித் தலைமை பெறும் எண்ணம் எனக்கில்லை. நான் விரும்பி அரசியலுக்கு வந்தவனும் அல்லன். வலுவந்தமாக இழுத்துவரப்பட்டேன்.

ஜெனீவா 40 ஆவது கூட்டத் தொடரில் புதிய பிரேரணை வரும். அது சர்வதேசத்தின் மேற்பார்வையுடன் கூடிய கால அவகாசமாக இருக்கும். இலங்கையும் அதற்கு அனுசரணை வழங்கும் என்று நம்புகின்றோம்.

ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு இலங்கை விவகாரத்தைக் கொண்டுவருவதில் சட்டச் சிக்கல் உண்டு. கொண்டுவந்தால் மகிழ்ச்சி.

அரசமைப்பு வழிநடத்தல் குழுவின் தலைவராக ரணில் உள்ளமையால் எனக்கும் அவருக்கும் மிக நெருக்கமான உறவு. அவ்வாறான நெருக்கம் அரசமைப்புக்கு உதவும்.

இந்தியா வெளிப்படையாக எதையும் செய்ய முடியாது. மஹிந்த பிரதமரானமைக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பாதமையிலிருந்து அவர்களின் நிலைப்பாடு புரிகின்றது.

நான் அரசியலுக்கு வந்தமையை வெறுக்கவில்லை. பல முன்னேற்றகரமானவற்றை செய்திருக்கின்றேன். இன்னமும் எவையும் இறுதிசெய்யப்படவில்லை. 

தமிழ்த் தேசிய அரசியலுக்கு நான் காலடி எடுத்து வைத்தது, புதிய அரசமைப்பு ஊடாகத் தமிழ்மக்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கவே. அந்தத் தீர்வு கிடைக்கப்பெற்றால் எனது அரசியல் பணி முடிவடைந்துவிடும். வந்தநோக்கம் நிறைவேறிவிடும். அந்தத் தீர்வு சாத்தியப்படாமல் போனால் – எனது முயற்சி தோல்வியடைந்து போனால் – என்னால் இனி உரியதீர்வை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கமுடியாது என்று எனது உள்மனது கூறுமானால் – நான் அரசியலில் இருந்து ஒதுங்கிப்போவேன். அதற்காகவே, இராஜினாமாக் கடிதத்தை முன்கூட்டியே வரைந்து வைத்திருக்கின்றேன். அந்தக் கடிதம் எனக்கு அரசியலில் பிரவேசித்தமைக்கான காரணத்தை அவ்வப்போது உணர்த்திக்கொண்டே இருக்கும்.

மாறாக, நான் கட்சி தலைமையை பெற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 40 ஆவது ஜெனிவாக் கூட்டத் தொடரில் நிச்சயமாக புதிய பிரேரணை வரும். இந்தியா மௌனமாக இருந்தாலும் தனது வகிபாகத்தை சரியாக செய்கிறது. நாட்டின் பிரஜை என்ற அடிப்படையிலேயே 51 நாள் அரசியல் நெருக்கடியில் தலையிட்டேன். இதுதான் எனது நிலைப்பாடு.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அவரது செவ்வியின் முழு வடிவமும் வருமாறு:-

கேள்வி : 51 நாள் அரசியல் நெருக்கடியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரனின் வகிபாகம் எவ்வாறு இருந்தது?

பதில் : ஒக்ரோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதியின் செயற்பாடு அனைவரையும் பிரமிக்க வைத்தது. அதிர்ச்சி ஒன்றைக் கொடுத்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள் எழுகின்றபோது அரசமைப்பை அவர் முற்றாக மீறியிருக்கின்றார் என்பது தெளிவாகத் தெரிந்தது. காரணம், 19 ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டபோது அதில் முழுமையாக ஈடுபட்டிருந்த ஒருவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதியிடம் இருந்து முழுமையாக அகற்றப்பட்ட அதிகாரங்கள் என்னவென்பவை பற்றி எங்களுக்கு – அதிலும் குறிப்பாக எனக்கு – மனப்பாடமாகத் தெரிந்திருந்தன. அப்படியிருக்கும்போது 19 ஆவது திருத்தத்தின் ஊடாக நீக்கப்பட்ட அதிகாரங்கள் தன்னிடம் இருக்கின்றமை போன்று அவர் செயற்பட்டமை எங்களுக்குப் பிரமிப்பாக இருந்தது.

ஆனால் ஒரு நாட்டின் அரசமைப்பு மீறப்படுகின்றது என்றால் அது மிகவும் பாரதுரமானதாகும். ஆகவே, நாட்டின் அரசமைப்பு பேணப்படவேண்டும் என்றால் உடனடியாக மாற்று நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் இருந்தது. நாங்கள் அதன்படி செயற்பட்டோம். முதலில் பிரதமரை மாற்றுகின்ற உத்தரவை ஜனாதிபதி கொடுத்தமைக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. இது குறித்து சட்ட ஆலோசனை என்னிடம் கோரியவர்களுக்கு எவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று நான் கூறியிருந்தேன். ஆனாலும், அந்த நிலைமையை நீதிமன்றம் மூலமாக மாற்றினாலும் நாடாளுமன்றத்தில் ஒரு கட்சிக்கு பெரும்பான்மை இருந்தால்தான் ஆட்சியை நடத்த முடியும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசை ஜனாதிபதி அமைத்தபோதும் அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாவிடின் அவர்களினால் நீடிக்க முடியாது.

ஆகவே அதனை நாடாளுமன்றத்தில் கையாளலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. எனவே பிரதமர் நீக்கத்தை உடனடியாக சவாலுக்கு உட்படுத்தவில்லை. ஜனநாயகத்தை அல்லது அரசமைப்பை நாங்கள் பாதுகாக்காவிட்டால் நாட்டின் ஆட்சிமுறை குறித்த முழுக் கட்டமைப்பும் அன்று தகர்ந்து விழுந்திருக்கும். அதன்பின்னர் நாட்டை ஜனநாயக வழிக்குக் கொண்டுவருவது கடினமாக இருக்கும். தமிழ் மக்களை பொறுத்தவரையில் நாங்கள் அரசியல் தீர்வு ஒன்றை எதிர்பார்த்துள்ளோம். அந்தத் தீர்வு அரசமைப்பின் ஊடாக ஏற்படுத்தப்படவேண்டும். அரசமைப்பு உருவாக்கப்பட்டு அதில் ஆட்சியதிகாரங்கள் பகிரப்படும் நிலையை எதிர்பார்க்கின்றோம். அது அரசமைப்பில் உறுதி செய்யப்பட்ட பின்னர் மீறப்படுமாக இருந்தால் அதில் பிரயோசனம் இல்லை. எனவே, எந்த சமயத்திலும் அரசமைப்பு மீறப்பட்டால் அதனை தட்டிக்கேட்க வேண்டிய பாரிய பொறுப்பு எங்களிடம் இருக்கின்றது. சுயநலமாக தமிழராக சிந்தித்தால் கூட அது அவசியமாகும். நாட்டின் ஆட்சியமைப்பு சரியாகவும் ஜனநாயக அடிப்படையிலும் இருக்கவேண்டும். இல்லை என்றால் அது எங்களையும் பாதிக்கும். விசேடமாக எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கின்றவர்களைக் கூடுதலாக பாதிக்கும். அது எங்கள் அனுபவமாகும். ஆகவே, நாட்டின் நன்மைக்காகவும் குறிப்பாக எங்கள் நன்மைக்காகவும் நாங்கள் எமது வகிபாகத்தை செய்தோம். அதில் தலையிட்டோம் .

கேள்வி : ரணில் விக்கிரமசிங்க பிரதமராக முழுமையான ஆதரவு வழங்கினீர்கள். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரம் வரும்போது .தென்னிலங்கை கட்சிகள் ஒன்றிணைந்துவிட்டன அல்லவா?

பதில் ஆம். அவ்வாறான தோற்றம் ஏற்பட்டது. அது துரதிஷ்டவசமானது. பதவிக்காக தமிழ்க் கூட்டமைப்பு எப்போதுமே போரிட்டமை கிடையாது. சபாநாயகரின் தீர்ப்பில் பிரித்தானிய முறையை இங்கு கையாள முடியாது. அங்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லை. முழுமையாக நாடாளுமன்ற முறைமை உள்ள ஒரு நாட்டின் படிமுறைகளை நாங்கள் இங்கு முன்னெடுக்க முடியாது . எனவே அதனை நாங்கள் அப்படியே இப்போதைக்கு விட்டு வைக்கின்றோம். ஆனால் நாங்கள் எழுப்பிய கேள்விக்கு சபாநாயகர் இன்னும் சரியான பதிலை வழங்கவில்லை. அதாவது அரசின் தலைவரும் எதிர்க்கட்சியின் தலைவரும் ஒரு கட்சியிலிருந்து வருவது கட்சி ஜனநாயக அடிப்படையில் நடத்தப்படும் ஆட்சி முறையில் ஏற்றுக்கொள்ள முடியுமா? என்ற கேள்விக்கு பதிலில்லை. புதிய அரசமைப்பு சட்டத்தில் இது குறித்த தெளிவுபடுத்தல் அவசியம் என்று சபாநாயகர் கூறியிருக்கின்றார். அப்படி சொல்வதன் மூலம் அவர் முக்கிய விடயங்களை ஏற்றுக்கொண்டுள்ளார். புதிய அரசமைப்பின் அவசியம் மற்றும் இந்த சூழலை நிர்ணயிக்கக்கூடிய பொறிமுறை அவசியம் என்பவற்றை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதனை சபாநாயகரே தீர்மானிப்பார். நீதிமன்றத்துக்கு அந்த அதிகாரம் இல்லை.

கேள்வி : 51 நாள் நெருக்கடியின்போது சுமந்திரன் எம்.பி. நீதித்துறையை பயன்படுத்திய விதம் அபாரமானது என்று கூறப்படுகின்றது. அவ்வாறு செய்த அவர் இதுவரை காலமும் 13 ஆவது திருத்தத்தம் உட்பட்ட பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை பெற ஏன் நீதித்துறையை பயன்படுத்தவில்லை?

பதில் : அது நீதித்துறையை நாடவேண்டிய ஒரு விடயம் அல்ல. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவேண்டிய பொறுப்பு” மாகாண சபைக்குரியது. மாகாண சபைகள் அதற்கான சில முன்னெடுப்புக்களை செய்திருக்கலாம். நாங்கள் வட மாகாண சபை எமது கட்டுப்பாட்டில் எடுத்தபோது அப்படியான ஒரு நிலைமைக்கு வரலாம் என்று எதிர்பார்த்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக அது செய்யப்படவில்லை. இன்னொரு விடயம் 13 ஆவது திருத்தத்தை நாங்கள் தீர்வாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் காலத்துக்கு காலம் 13 இல் உள்ள அதிகாரங்கள் மீறப்படுகின்றபோது நாங்கள் நீதிமன்றம் சென்றிருக்கின்றோம். திவிநெகும சட்டம் வந்தபோது மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட 15 அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்டன. அதற்கு எதிராக நாங்கள் நீதிமன்றம் சென்றோம். நான்தான் அந்த வழக்கை வாதாடினேன். அதில் வெற்றிபெற்றேன். பின்னர் இரண்டாவது வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்து வென்றோம். எனவே நாங்கள் நீதித்துறையை பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றோம்.

கேள்வி : வடக்கு முன்னாள் முதல்வர் நினைத்திருந்தால் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்திருக்கலாம் என்று கூறுகின்றீர்களா?

பதில் : இலகுவாகப் பெற்றிருக்கலாம்.

கேள்வி : அவற்றைப் பெற்றிருக்கலாமா?

பதில் : பெற்றிருக்கலாமா என்பது சந்தேகம். . ஆனால் அவற்றை பெறுவதற்கான கட்டளை சட்டங்களை இயற்றியிருக்கலாம். அப்படி செய்திருந்தால் மத்திய அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கவேண்டும். அப்படி நடவடிக்கை எடுத்திருக்காவிடின் அது குறித்து நாங்கள் நீதித்துறையை நாடியிருக்கலாம். ஆனால் மாகாண சபை அந்த முன்னெடுப்புக்களை செய்யாமல் நாங்கள் வழக்குத் தாக்கல் செய்திருக்க முடியாது.

கேள்வி : உங்கள் கட்சி தானே வட மாகாண சபையில் ஆட்சி செய்தது?

பதில் : ஆம். இப்படியான விடயங்களை முன்னெடுக்கவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் சட்ட அனுபவம் வாய்ந்த ஓய்வுபெற்ற நீதியரசர் ஒருவரை முதலமைச்சராக கொண்டுவந்தோம். அதற்கு எங்கள் கட்சிக்குள்ளேயே பாரிய எதிர்ப்பு இருந்தது. தலைவர் சம்பந்தனும் நானும்தான் மும்முரமாக அதனை செய்திருந்தோம். ஆனால், துரதிஷ்டவசமாக முதலமைச்சரான சிறிது காலத்திலேயே நிலைமை மாறியது. ஆரம்பத்தில் முதலமைச்சருக்கு ஆளுநருடன் முரண்பாடுகள் இருந்தன. அது நியாயமானது. நானும் அவருடன் அதில் பங்காற்றினேன். ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதிய ஆளுநர் பதவியேற்ற பின்னர் இந்தகருமங்களை முன்னெடுத்திருக்கலாம்.

எனினும் அந்த இடைப்பட்ட காலத்தில் அவரின் நோக்கு முற்றாக மாறிவிட்டது. தீவிரவாத எண்ணமுடைய தமிழர் தரப்பினர் சிலர் அவருடைய சிந்தனையை மாற்றி இந்த மாகாண சபை என்பது 13 ஆவது திருத்தத்தின் தோல்வியையே பிரதிபலிக்கின்றது என்று காண்பிக்கப்படவேண்டும் என்ற அவர்களுடைய சிந்தனை கோட்பாட்டை முதலமைச்சருக்கு விற்றுவிட்டார்கள். அவரும் அதனை வாங்கி உண்டுவிட்டார். அதற்கு பின்னர் அதனை செயற்படுத்த அவர் முயற்சிக்கவில்லை. அதனை நடைமுறைப்படுத்தினால் அது வெற்றியாக அமைந்துவிடலாம். அது அவர்களின் கோட்பாட்டுக்கு எதிரானது. ஆகவே இதுபயனற்ற ஒன்று என்று” நிரூபிக்க அவர் முயற்சி எடுத்ததன் காரணமாக இந்த ஆக்கபூர்வமான விடயங்களை செய்யவில்லை. எங்களுடைய உறவும் துண்டிக்கப்பட்டது.

கேள்வி : தற்போது அவருடைய அரசியல் பிரவேசம் பற்றி….. ?

பதில் : அது எங்களுக்கு சவால் அல்ல. அவர் அரசியலில் பிரவேசிப்பது நல்லது. அவர் பிரவேசித்து தேர்தலில் போட்டியிடவேண்டும். தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியடையும்போதுதான் மக்கள் எங்களுடைய கொள்கையுடன் இருக்கின்றார்கள் என்பதனை ஊர்ஜிதப்படுத்தவும் எம்மால் முடியும்..

கேள்வி : உங்கள் பார்வையில் வட மாகாண சபையின் 5 வருட காலப்பகுதி…..?

பதில் : மிகவும் கவலைக்குரிய – தோல்வியடைந்த – ஒரு காலப்பகுதியாகும். அதிலும் அதிகாரப்பகிர்வை கேட்டு நிற்கின்ற நாங்களே எமது மாகாண சபையில் 38 உறுப்பினர்களில் 30 உறுப்பினர்களைப் பெற்று ஆட்சியமைத்து மாகாண சபையில் இருக்கின்ற அதிகாரங்களைக்கூட சரியாக செயற்படுத்த முடியவில்லை. இவர்கள் ஏன் கூடுதல் அதிகாரங்களை கேட்கின்றனர் என்று கேட்கும் அளவுக்கு நாங்கள் ஆளாகிவிட்டோம்.

கேள்வி : அரசியல் தீர்வு அல்லது தீ்ர்வு அடங்கிய புதிய அரசமைப்பு என்பவற்றின் சாத்தியதன்மை குறித்து உங்கள் மதிப்பீடு என்ன?

பதில் : சாத்தியமா இல்லையா என்பதனை சாத்திரக் காரரிடம்தான் கேட்கவேண்டும். நாங்கள் சாத்தியமாகும் என்ற நம்பிகைக்யைில் முழு முயற்சியையும் எடுக்கின்றோம். சாத்தியமாகாது என்று நினைத்து எந்த முயற்சியையும் எடுக்க முடியாது. தற்போதைய சூழலின்படி இது சாத்தியமாவதற்கான நிலைமை இன்னும் உள்ளது. ஒரு தனிக்கட்சி அரசமைப்பை உருவாக்குவதைவிட பெரும்பான்மை இல்லாத வேளையில் அது உருவாக்கப்படுவது சிறப்பாக இருக்கும். அப்படியான சூழலில்தான் முற்போக்கான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 19 ஆம் திருத்தம், 17 ஆம் திருத்தம் என்பனவற்றை குறிப்பிடலாம். பெரும்பான்மை இல்லாத இந்த சூழலில் செய்யப்படுவது சாத்தியமாக இருக்கும். தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அந்த வரைவு அப்படியான எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வரைவாகும். அனைத்து கட்சிகளும் இதில் இணங்கியவர்கள். நாங்கள் கேட்கும் அனைத்தும் இதில் இல்லை. பேச்சுவார்த்தையில் ஒரு தரப்புக்கு 100 வீத வெற்றி கிடைக்காது. அது இணக்கப்பாடாக இருக்காது. வெவ்வேறு நிலைப்பாட்டில் பலர் உள்ளார்கள். இறுதியில் இணக்கப்பாட்டுக்கு வரும்போது ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சில விட்டுக்கொடுப்புக்கள் செய்தாகவேண்டும். அதனால்தான் எமது தரப்பு எம்மீது முன்வைக்கும் விமர்சனங்களை நாங்கள் அந்த நோக்கத்திலிருந்து பார்க்கவேண்டும். அந்த விமர்சனங்கள் நியாயமானவை. எங்களுடைய கொள்கையை முழுமையாக நாங்கள் அடையவில்லை. ஆனால் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் அரசியலமைப்பை உருவாக்கும்போது அப்படியான ஒரு சூழலில் எங்களுக்கு தேவையான முக்கியமான பகுதிகள் இதில் உள்ளனவா என்பதனை பார்க்கவேண்டும். விட்டுக்கொடுப்புக்கள் அத்தியாவசியமாகும்.

கேள்வி : உங்கள் இராஜினாமா கடிதம் தயார் என்று அண்மையில் கூறியிருந்தீர்கள்?

பதில் : புதியஅரசமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணவே அரசியலுக்கு வந்தேன். அதுதான் எனது நோக்கம். அரசியலில் வந்து பதவிகளை பெற அரசியலுக்கு நான் வந்தவனல்லன். எனவே, தீர்வுதான் எனது அரசியல் இருப்பைத் தீர்மானிக்கும். இது நடைபெறாது. இது முடிந்த கதை. இது சாத்தியமில்லை என்ற ஒரு நிலைமை வந்தால் நான் அரசியலில் இருப்பதில் பயனில்லை. விலகுவதற்குத் தயார். ஆனால், எப்போது அந்த நிலைமை வரும் என்று அவதானித்துதான் தீர்மானம் எடுப்பேன். என்னால் முடியுமான நடவடிக்கை எடுத்தும் முடியாது என்ற நிலை தோன்றினால் நான் விலகுவேன். தீர்வு கிடைத்தால் அதன் பின்னர் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. இராஜினாமா கடிதம் ஏன் எழுதி வைத்துள்ளேன் என்றால் நான் எதற்காக அரசியலுக்கு வந்தேன் என்பதனை எனக்கு அடிக்கடி நினைவூட்டவேண்டும் என்பதற்காகவாகும்.

கேள்வி : உங்கள் கட்சிக்குள்ளேயே உங்களுக்கு விமர்சனங்கள் உள்ளன. அதாவது நீங்கள் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை கைப்பற்ற முயற்சிப்பதாகக் கூறப்படுகின்றதே? அவ்வாறு பங்காளிக் கட்சிகள் கருதக் காரணம் என்ன?

பதில் : அவர்கள் கருதுவதற்கான காரணத்தை அவர்களிடம்தான் கேட்கவேண்டும். நான் கட்சி தலைமையை பெற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நான் அரசியலில் சேரவும் எந்த முயற்சியைும் எடுத்திருக்கவில்லை. இதே கட்சி இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் என்னை தேசியபட்டியல் எம்.பி. யாக வருமாறு கோரியது. நான் மறுத்துவிட்டேன். மூன்றாவது தடவையும் மறுப்புதான் தெரிவித்தேன் எனினும், போர் முடிந்த சூழலில் இனிமேல் அரசமைபப்பு மாற்றத்தின் ஊடாகவே தீர்வுகாண முடியம் என்ற விடயம் ஊர்ஜிதம் ஆன பின்னர் அதில் எனக்கு நிபுணத்துவம் இருந்த காரணத்தினால் அதனை ஏற்றேன். அரசியலுக்கு வருவதையே என்னுடைய நோக்காகக் கொண்டிருக்கவில்லை. கட்சி தலைமையை பெற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எடுக்கப்போவதுமில்லை.

கேள்வி : ஜெனிவாவில் 40 ஆவது கூட்டத் தொடரில் புதிய பிரேரணை வருமா?

பதில் : நிச்சயமாக புதிய பிரேரணை வரும்.

கேள்வி : யார் கொண்டுவருவார்கள் ?

பதில் : முதலில் நான்கு நாடுகள் இருந்தன. அதிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளது. ஆனால் ஜேர்மன், கனடா என்பன இணைந்துள்ளன. இந்த ஐந்து நாடுகளும் இணைந்து பிரேரணையை கொண்டுவருவார்கள். அதுவும் சர்வதேச மேற்பார்வையை நீடிப்பதற்கான பிரேரணையாகவே வரும். 2015 ஆம் பிரேரணைக்கு ஒன்றரை வருடங்கள் வழங்கப்பட்டன. 2017 ஆம் ஆண்டு பிரேரணை அதனை நீடிப்பதாக அமைந்தது. மேற்பார்வைகாலம் நீடிக்கப்பட்டது. தற்போது மீண்டும் மேற்பார்வைகாலம் அதிகரிக்கப்படும். கால அவகாசம் என்பது தவறானது. சர்வதேச மேற்பார்வைக்காலமே அதுவாகும். அந்தவகையில் இம்முறையும் 2019 ஆம் ஆண்டில் அந்த சர்வதேச மேற்பார்வைக்காலம் நீடிக்கப்படும். அதற்கான பிரேரணை வரும். கால அவகாசம் என்று கூறும்போது அது முடிந்துவிட்டால் வேறு எதனையும் செய்யலாம் என்று பலர் நினைக்கின்றனர். அவ்வாறு எதுவும் செய்யமுடியாது. ஐ.நா. மனித உரிமை பேரவையில் நாடுகளுக்கு கட்டளையிடுகின்ற தீர்மானங்களை எடுக்க முடியாது. ஆனால் நாடுகள் இதனை செய்யவேண்டும் என்று ஊக்குவிக்கலாம். எனவே இங்கு சர்வதேச மேற்பார்வையே இருக்கின்றது. இன்னொரு தீர்மானம் வராவிடின் இலங்கை குறித்த ஜெனிவா அத்தியாயம் முடிந்துவிடும். அதற்கு இலங்கை இம்முறையும் அனுசரணை வழங்கும் என்று நம்புகின்றோம். அதற்கான போதிய அழுத்தம் சர்வசேத நாடுகளினால் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அனுசரணை முக்கியமாகும்.

கேள்வி : எதன் அடிப்படையில் இந்த விவகாரத்தை பாதுகாப்பு சபைக்கு கொண்டுசெல்லவேண்டும் என்று கூறப்படுகின்றது?

பதில் : ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு கொண்டுசெல்லவேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். அதில் சட்ட ரீதியான தன்மை இல்லை. நடைமுறை சிக்கலும் உள்ளது. ஆனால் அந்த முயற்சியை நான் மறுக்கவில்லை. அது நடந்தால் எமக்கு சந்தோஷம். ஆனால் அதற்கான சாத்தியக்கூறு மிக சொற்பமாக இருக்கும்போது இருக்கின்ற சந்தர்ப்பத்தை முற்றிலும் கைவிட முடியாது. எமக்கு ஜெனிவாவில் ஒரு பிடி உள்ளது. அதனை தளர்த்த முடியாது.

கேள்வி : ‘ஒருமித்த’ என்ற விடயத்துக்குள் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பெற முடியுமா?

பதில் : ஆம். இரண்டு கோட்பாடுகள் உள்ளன. ஒன்று நாட்டின் சுபாவம். மற்றையது ஆட்சிமுறையாகும். நாட்டின் சுபாவத்தை பொறுத்தவரை அது பிரிக்கப்பட முடியாதது. அதற்கு நாங்கள் இணக்கம் தெரிவித்துள்ளோம். அதனால்தான் ஏக்கிய ராஜ்ய என்று கூறப்படுகின்றது. ராஜ்ய என்றால் நாடு. அது ஆட்சிமுறை அல்ல. மாறாக நாடு என்பதாகும். ஆனால் அந்த சொல்லுக்கு இதுவரை முன்வைத்த தமிழ் பதம் ஒற்றையாட்சி என்பதாகும். அது ஆட்சி முறையை குறிக்கும் சொல்லாகும். அது நாட்டை குறிப்பதல்ல. நாடு எப்படியானது என்பதனை வர்ணிக்கவேண்டும். ஏக்கிய ராஜ்ய என்பதன் சரியான தமிழ் பதம் நாட்டினுடைய சுபாவமாகும். அதனைத்தான் ஒருமித்த நாடு என்று கூறுகின்றோம். ஆட்சி முறை தொடர்பில் வர்ணனை தேவையில்லை என்பதே நாங்கள் எடுத்த தீர்மானமாகும். அதற்கு பெயர்பலகை தேவையில்லை. ஆட்சிமுறை எவ்வாறு இருக்கவேண்டும் என்று அரசமைப்பில் சொல்லப்பட்டால் போதும். ஆனால் நாட்டின் ஆட்சி முறையானது மத்தியிலும் மாகாணங்களிலும் உள்ள நிறுவனங்களினால் செய்யப்படவேண்டும் என்று குறிப்பிடப்படும். இவை அறிக்கையில் உள்ளன.

கேள்வி : பிரதமர் ரணிலுக்கும் எம்.பி. சுமந்திரனுக்கும் இடையிலான உறவு எவ்வாறானது?

பதில் : நெருக்கமான உறவு உள்ளது. காரணம் அரசமைப்பு விடயத்தில் வழி நடத்தல் குழுவின் தலைவராக பிரதமர் உள்ளார். அவர்தான் இதனை முன்னெடுக்கின்றார். அரசமைப்பு உருவாக்கப்படிகளில் நானும் ஜயம்பதி விக்ரமரட்னவும் செயலகத்துக்கு பொறுப்பான இணைத் தலைவர்களாக உள்ளோம். எனவே எமக்கு நெருங்கிய தொடர்பு இருக்கவேண்டும். அரசியல் தீர்வு தொடர்பாகவும் அரசமைப்பு வடிவம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது குறித்தும் வழி நடத்தல் குழுவில் மட்டும் தீர்மானிக்க முடியாது. அந்த விடயங்களில் நான் பிரதமருடன் பேசித்தான் செய்கிறோம்.

கேள்வி : அதனால் வரும் விமர்சனங்கள் குறித்து….?

பதில் : விமர்சனங்கள் வரலாம். நெருங்கி செயற்படாமல் ஓர் அரசமைப்பை தயாரிக்க முடியும் என்று யாராவது கூறினால் அவர்கள் அதனை செய்துகாட்டலாம்.

கேள்வி : அரசியல் நெருக்கடியின்போது ஏன் இந்தியா மௌனமாக இருந்தது? தீர்வுத்திட்டத்தில் இந்தியாவின் வகிபாகம்?

பதில் : இந்தியா மௌனமாக இருப்பது உண்மையாகும். இந்தியா ஈடுபாடு இல்லாமல் இருக்கின்றது என்பது ஒரு தவறான சிந்தனையாகும். மிக முழுமையான ஈடுபாடு உள்ளது. புதிய அரசமைப்பு உருவாக்கத்திலும் இருக்கின்றது. ஆனால் ,பகிரங்கமாக இந்தியா சில நிலைப்பாடுகளை எடுப்பதில்லை. இலங்கைக்கு மிக அண்மையில் இருக்கின்ற பாரிய வல்லரசாக இந்தியா இருக்கின்றது. ஆகவே, தன்னுடைய கருத்தை இந்தியா வெளிப்படையாகச் சொன்னால் அது இலங்கையின் சுயாதீனத்தை மழுங்கடிப்பது போன்றும் அழுத்தங்களை பிரயோகிப்பது போன்றும் தோன்றும். எனவே, அதனை செய்வதில்லை. ஆனால் தங்கள் கரிசனையை இந்தியா பகிர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. ஆட்சிமாற்றத்தின்போதும் அதனை செய்தார்கள். புதிதாக ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட்டவுடன் இந்தியா வாழ்த்து செய்தியை அனுப்பவில்லை. அது முக்கியமான ஒரு தீர்மானம். அப்படியான செயற்பாடுகளில் அவர்கள் தங்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருப்பார்கள். ஆனால் இந்தியா . வெளிப்படையாக செயற்பட முடியாது.

கேள்வி : தீர்வு விடயத்தில் இந்தியாவுடன் தொடர்புடன் இருக்கின்றீர்களா?

பதில் : தொடர்புகளுடன்தான் இருக்கின்றோம்.

கேள்வி : கோத்தபாய வேட்பாளராக வரப்போகின்றமை குறித்து…..?

பதில் : அவர் நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று நீண்டகாலமாக திட்டமிட்டு செயற்படுகின்றார். அவர் பாதுகாப்பு செயலாளாக இருக்கும்போது நகர திட்டமிடல் அமைச்சு அவருக்கு கீழ் கொண்டுவரப்பட்டபோதே அந்த திட்டமிடல் முன்னெடுக்கப்பட்டுவிட்டது. அவருடைய அரசியல் சிந்தனையுடன் ஒன்றிணைந்துள்ள சிந்தனையாளர்கள் குழுவினர் நாட்டில் உள்ளனர். அவர்கள் எண்ணிக்கையில் பலமானவர்கள் அல்லர். ஆனால் கருத்தியலை ஏற்படுத்தக்கூடியவர்கள். சிங்கள பௌத்த பேரினவாதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற குழுவாகும். அவர் பல அமைப்புக்களையும் உருவாக்கி செயற்படுகின்றார். அது தமிழ் பேசும் மக்களுக்கு ஆபத்தானது. ஜனநாயக சூழலில் நாம் அதனை தடுக்க முடியாது. ஆனால் நாம் மாற்று பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும். தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்கமாட்டார்கள். அவர் யார் என்பது தமிழ் மக்களுக்கு தெரியும்.

கேள்வி : ஏன் அரசியலுக்கு வந்தோம் என்று எண்ணும் நிலைமை ஏற்பட்டதா? 

பதில் : இல்லை. ஒரு காலமும் எண்ணியதில்லை. வந்ததினால் செய்யக்கூடிய பல விடயங்கள் உள்ளன. பல முன்னேற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றோம். ஆனால் இன்னும் ஒன்றும் இறுதி செய்யப்படவில்லை.

இராஜினாமாக் கடிதம் தயாராக உள்ளது; தனது நிலைப்பாட்டில் சுமந்திரன் உறுதி!

 

TNA நாடாளுமன்ற உறுப்பினர் MA சுமந்திரன் அவர்கள் EAST FM வானொலிக்கு வழங்கிய செவ்வி

http://tnapolitics.org/

 


About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply