வடமொழி மந்திரம் – சடங்குகளின் ஏமாற்று  

வடமொழி மந்திரம் – சடங்குகளின் ஏமாற்று

ஆட்சி மொழிக்குரிய தமிழ்ச் சொற்களை உருவாக்கியவரும், பல அரசுப் பணிகளை வகித்தவரும், ‘செந்தமிழ் புரவலர்’ என்று பாராட்டப் பெற்ற வருமான கீ.இராமலிங்கனார், தனது சுயசரிதையை ‘என் வரலாறு’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார். அதில் புரியாத மொழியான ‘சமஸ்கிருத மந்திரங் களால்’ – அதை நம்புவோர், ஏமாற்றப்படும் நிகழ்வுகளை சுட்டிக்காட்டியுள்ளார்:
எனக்கு இளமையிலிருந்தே “இவ் வடமொழிச் சடங்கு முறை தமிழ் மக்களுக்கு எவ்வளவு புறம் பானது?” என்பது உள்ளத்தினை உறுத்தி வந்தது; “கண்ணற்ற கபோதிகளாய்த் தமிழ் மக்கள் ஏமாந்து, இச் சடங்குகளுக்கு அடிமைகளாகி விட்டிருக் கின்றனரே!” என வருந்தலானேன். ஓசூரில் நான் குடியிருந்த வீட்டிற்கெதிரே புரோகிதர் ஒருவர் குடியிருந்தார். அவர் மனைவியின் தம்பி பன்னிரண்டு அகவைச் சிறுவன். கோடை விடுமுறைக்குத் தன் அக்கா வீட்டிற்கு வந்திருந்தான். அவன் அப்போதே தனியே சென்று, தமிழர் வீட்டுச் சடங்குகளை நடத்தி வைத்துவிட்டு, அரிசி, காய்கறி முதலியவற்றைச் சுமந்து வருவான்.
ஒருநாள் அவனை “எங்கிருந்து இவற்றைக் கொண்டு வருகிறாய்?” என்று கேட்டேன்.
“அவ்வூரில் ஒரு திருமணம் செய்து வைத்தேன்; இன்னொரு ஊரில் ஓர் ஈமச் சடங்கு செய்து வைத்தேன்” என்றான்.
“உனக்கு மந்திரம் தெரிய வேண்டுமே” என்றேன்.
சிரித்தான். நான் விடாமல் அக் கேள்வியினைக் கேட்டேன்.
“எனக்குச் சில பாடல்கள் தெரியும். அவற்றை வைத்துக் கொண்டு அடித்துத் தள்ளிவிடுவேன்” எனத் தெலுங்கிற் சொன்னான்!
“அவர்களுக்குத் தெரியாதா? அவை மந்திரங்கள் அல்லவே! எனக் கேட்க மாட்டார்களா?” என்றேன்.
“அக் கவுண்டர்களுக்கு இவையெல்லாம் எங்கே தெரியப் போகிறது” என்றான்.
நானடைந்த வருத்தத்திற்கு அளவேயில்லை. “தமிழக மக்கள் இவ்வளவு ஏமாற்றப்படுகிறார்களே” என்று கவலையுற்றேன். “தமிழிலேயே எல்லாச் சடங்குகளையும் செய்யும் நாள் என்று வருமோ?” என்றேங்கினேன்.
என்னுள்ளத்தில் அடர்ந்தெழுந்த அவாவினை மேலும் அடரச் செய்யும் முறையில் வேறொரு நிகழ்ச்சி நடந்தது. ஒரு பெரிய ஊரில் உயர்நிலைப் பள்ளியிற் பள்ளி நிறைவு (ளுஉhடிடிட கiயேட) வகுப்புப் படித்துவரும் ஓரிளைஞருக்குத் திருமணம். அத் திருமணத்திற்கு அப்பள்ளி ஆசிரியர் பலரும் வந்திருந்தனர். திருமணத்தைச் செய்து வைக்கும் புரோகிதர், செத்த பிறகு நடக்கும் சடங்கிற் சொல்ல வேண்டிய மந்திரங்களைச் சொல்லி வந்தார். இவ் வோசை அப்பள்ளிக்கூட வடமொழி ஆசிரியர் காதிற்பட்டது; அவர் புரோகிதரிடம் விரைந்தார்; புரோகிதரை விறைத்து நோக்கினார்; “என்னங் காணும் இது!” என்றார். புரோகிதர் விழித்துக் கொண் டார். பிறகு அவ் வடமொழி ஆசிரியர் மற்ற ஆசிரியரி டம் நிகழ்ந்ததைச் சொல்லி வருந்தினார். இச் செய்தி என் மனத்தில் வேலை செய்யத் தொடங்கிற்று.
ஒரு பெரிய நகராட்சியில் நான் அலுவல் பார்த்து வந்தபோது, என்னிடமிருந்த ஏவலர்க்குத் திருமணம். அவர் ஒரு திருக்குலத்தார் (ஆதி திராவிடர்). திருமணம் முடிந்து அவர் வந்ததும், “திருமணம் நன்றாய் நடந்ததா?” என்றேன்; “யார் நடத்தி வைத்தது?” என்றும் வினவினேன். “எங்கள் ஐயா” என்றார்; “மந்திரம் சொன்னாரா?” என்றேன்; “ஆம்” என்றார். அவரை நான் பார்க்க விரும்புவதாய்க் கூறினேன். மறுநாளே அந்த “ஐயரை” அலுவலகத் திற்கு அழைத்து வந்து விட்டார் ஏவலர்; “மந்திரங் களை எம் மொழியிற் சொன்னீர்?” என்று கேட் டேன்; “சமற்கிருதத்தில்” என்றார். “அவற்றை எங்கே கற்றுக் கொண்டீர்?” என்றேன். “எங்கள் பெரியவர் எழுதி வைத்துச் சென்றிருக்கின்றனர்” என்றார்.
அவற்றைக் கொண்டு வந்து காட்டச் சொன்னேன். “அஃது எதற்கையா!” என்று மறுத்துவிட்டார். ஒரு மந்திரம் ஓதிக் காட்டச் சொன்னேன். “அது வேண்டாமையா!” என்று சிரித்தார். “அம் மந்திரம் உங்களுக்கே சிரிப்பாயிருக்கின்றதே; அவற்றை ஏன் நீங்கள் சொல்ல வேண்டும்? தமிழில் உள்ள மந்திரங்களைச் சொல்லிச் சடங்குகளைச் செய்து வைக்கக் கூடாதா?” என்றேன். “தமிழிலேயும் சொல் வதுண்டு” என்று கூறி, “கனாக் கண்டேன் தோழி நான்” என்று முடிகின்ற ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாடல் ஒன்றைச் சொன்னார். “இது நன்றாய் இருக்கிறதே! எல்லா மந்திரங்களையும் தமிழிலேயே இப்படி சொல்லக் கூடாதா?” என்றேன்; சிரித்தார். “ஏன் சிரிக்கிறீர்?” என்றேன். தமிழிற் சொன்னால் “துட்டுக் கொடுக்க மாட்டாங்க ஐயா!” என்று சொல்லி, மேலும் சிரித்தார்; கும்பிடு போட்டு அனுப்பி வைத்து விட்டேன்.
இவ்வாறே சிலர் தேசிகர் என்னும் பட்டத்தினை வைத்துக் கொண்டு தப்புந் தவறுமாய்ச் சமற்கிருத மந்திரம் என்னும் சொற்களைக் கற்றுக் கொண்டு அவற்றை ஓதித் தமிழர் வீட்டுச் சடங்குகள் அவ்வளவையும் செய்து வைப்பதைப் பார்த்திருக் கிறேன். நானிருந்த நகராட்சி ஒன்றில் ஆசிரியராய் இருந்த தேசிகர் ஒருவரும் இவ்வாறு செய்து வந்தார். அவர் குறித்து வைத்திருக்கும் சமற்கிருத மந்திரக் குறிப்பேட்டை என்னிடம் காட்டுமாறு எத் தனையோ முறை கேட்டேன். அவர், “இன்று நாளை” என்று நான் அவ்வூரிலிருந்த இரண்டு மூன்று ஆண்டு காலம் வரை சொல்லி வந்தார். “அவர் ஓதும் சமற்கிருத மந்திரங்கள் பற்றி என்ன கருத்துக் கொள்ள வேண்டும்?” என்பதே எனக்குப் புரிய வில்லை.
இன்னொரு செய்தியும் இந்நேரத்தில் எனக்கு நினைவிற்கு வருகிறது. “அதுவும் சடங்குகள் யாவும் தமிழில் நடத்தப் பெற வேண்டும்” எனும் என் எண்ணத்தினை மேலும் வலியுறுத்தியது. நான் தருமபுரம் கல்லூரியில் முதல்வராய் இருந்தபோது தென்னாப்பிரிக்காவிலிருந்து ஒரு அன்பர் அங்கு வந்தார். அவர் பெயர் கோவிந்தசாமி (பிள்ளை). அயல்நாட்டில் அவர் ஒரு கல்வி நிறுவனத்தின் முதல்வர். அங்கு நடந்த ஒரு திருமணத்தைப் பற்றி அவர் கூறினார். ஒரு செல்வர் வீட்டுப் பெண்ணுக்குத் திருமணம்; பெண், பி.ஏ. பட்டம் பெற்றவர்; பெற் றோருக்கு ஒரே பெண்; அந்நாட்டில் இன்னொரு தமிழ் பெருமகனாரின் ஒரே பிள்ளைக்கு அப் பெண்ணை மணம் செய்விக்க ஏற்பாடு செய்தனர். மாப்பிள்ளை தோற்றத்தாலும், கல்வியாலும் அப் பெண்ணுக்கு ஒத்தவராயில்லை. அப்பெண்ணுக்கு அவர் பிடிக்கவில்லை.
விருப்பமின்மையை மறைமுகமாயறிந்திருந்தும் தந்தையார் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடு களைச் செய்தார். திருமணமும் மிகச் சிறப்பாய் நடந்தது; நகரப் பெருமக்கள் பலரும் அதிற் கலந்து கொண்டனர்; மணச் சடங்கு முடிந்த பிறகு மணநிறை விற்கு ஒரு நாள் குறித்திருந்தனர். அதற்குள் அப் பெண்மணி தன் நண்பரோடு நீதிமன்றம் சென்று, “அம் மணம் செல்லாதெனத் தீர்ப்பு அளிக்குமாறு” விண்ணப்பித்தார். நீதிபதி அதனை ஏற்று உடனடி யாய் மணமகள் பெற்றோருக்கும், மணமகனுக்கும் அவர் பெற்றோருக்கும் அறிவிப்பனுப்பினார்.
பெற்றோர், திருமணம் நடந்தமைக்குச் சான்றாய்த் திருமண அழைப்பினைக் காட்டி, “வந்திருந்து வாழ்த்தியவர், திருமணம் செய்து வைத்த புரோகிதர், முதலாயவரை அழைத்துக் கேட்டாய்ந்து திருமணம் நடந்த உண்மையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும்” என்று கோரினர். முறைப்படி பலரும் அழைக்கப் பெற்றனர்; “திருமணம் நடந்தது உண்மை” என்று அவர்கள் விளக்கினர். நீதிபதி, “திருமண நிகழ்ச்சி இத்துணை உண்மையாய் இருக்க உன் குறை என்ன?” என்று அப்பெண்ணை கேட்டார்.
“என்ன நடந்ததென்றே எனக்குத் தெரியாதே” என்றார் அப்பெண். “ஏன் அப்படி?” என்று நீதிபதி புரோகிதரை அழைத்துத் திருமணத்திற் சொல்லிய சொற்களை எடுத்து விளக்கச் சொன்னார். விளக்கிய போதும் அப்பெண், “புரோகிதர் சொன்னது என்னவென்றே எனக்குத் தெரியவில்லை” என்றார்.
அப்பெண்ணுக்குத் தமிழ் தெரியும்; ஆங்கிலம் தெரியும்; ஆனால், சமற்கிருதம் தெரியாது. திருமணச் சடங்கு சமற்கிருதத்தில் நிகழ்த்தப் பெற்றது.இதனை நீதிபதி மகனுக்கோ, அவர்கள் பெற்றோர்க்கோ, வந்து வாழ்த்திய பெருமக்களுக்கோ ஒரு துளியும் தெரியாது; வாழ்க்கையில் ஒப்பற்ற சிறந்த நிகழ்ச்சியான திருமணம், மணமக்களுக்குத் தெரிந்த மொழியிலே நடத்தப் பெற்றிருக்க வேண்டும்; அப்படிச் செய்யப் பெறவில்லையே!” என்று வியந்து அத் திருமணம் செல்லாது என்று தீர்ப்புக் கூறினார்.

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply