ஈழப் ‘போர் நிறுத்தம்’: காங்கிரசு – தி.மு.க கம்பெனியின் கபட நாடகம்!

MAY 11, 2009

ஈழப் ‘போர் நிறுத்தம்’: காங்கிரசு – தி.மு.க கம்பெனியின் கபட நாடகம்!

ஈழத்தில் தொடரும் மிகக் கொடிய இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த வக்கற்ற காங்கிரசு தி.மு.க. கூட்டணி அரசின் மீது தமிழக மக்களின் வெறுப்பு அதிகரித்து வருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க, கருணாநிதிக்கு அச்சமும் அதிகரித்துக் கொண்டே போகிறது.சவடால் அடித்தும், பிரதமருக்கும் சோனியாவுக்கும் தந்தி அடித்தும், சிவசங்கர் மேனன் எம்.கே.நாராயணன் ஆகியோர் ராஜபக்சேவைச் சந்தித்து போர் நிறுத்தத்தை வலியுறுத்திவிட்டு வந்துள்ளதாக ஏய்த்த பின்னரும்கூட, போர் நிறுத்தம் நிகழவில்லை.

இதோ, இன்னும் இரண்டே நாளில் நல்ல முடிவு ஏற்படும் என்று கருணாநிதி கூறிய கெடு முடிந்த பின்னரும், ஈழத் தமிழின அழிப்புப் போர் நிறுத்தப்படவில்லை. இதனால், தமிழக மக்களின் வெறுப்பும் ஆத்திரமும் அதிகரிக்கும் முன்னே அதைத் திசைதிருப்பும் நோக்கத்தோடு, “இலங்கையில் போர் நிறுத்தம் கோரி சாகும் வரை உண்ணாவிரதம்” எனும் சூப்பர் நாடகத்தை கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி அதிகாலைக் காட்சியாக அரங்கேற்றினார், இந்த ‘தமிழின’த் தலைவர்.

http://www.vinavu.com/wp-content/uploads/2009/05/mk-fasting-copy.jpg

இதற்குக் கதை, வசனம், நடிப்பு, இயக்கம் அனைத்துமே அவர்தான். கதாநாயகனும் அவர்தான். கதாநாயகிகள் இருவர். அவர்கள் கருணாநிதியின் தலைமாட்டிலும் கால்மாட்டிலும் அமர்ந்து கொள்ள, அந்தச் சோகக் காட்சிக்காக ஆஸ்கார் பரிசு அளிக்காததுதான் பாக்கி. இந்த நாடகம் ஃபாஸ்ட் ஃபுட் உணவைப் போல, காலை 6 மணிக்குத் தொடங்கி பகல் 12 மணிக்குள் வெகு விரைவாக முடிந்து விட்டது. மற்ற ஓட்டுக் கட்சிகளெல்லாம் காலை உணவை முடித்துக் கொண்டு பகல் உணவை மட்டும் தவிர்க்கும் பழைய பாணி உண்ணாவிரத நாடகத்துக்குப் பதிலாக, அதிகாலையிலேயே உண்ணாவிரதத்தைத் தொடங்கி பகல் சாப்பாட்டுக்கு முன்னரே உண்ணாவிரதத்தை முடித்து, புதுமைப்பாணியில் அவர் இந்த நாடகத்தை நடத்தியுள்ளார்.

உண்ணாவிரதம் தொடங்கிய அடுத்த சில மணி நேரத்தில், “எனக்கு தொலைபேசி செய்தி வந்துள்ளது” என்று அவரே ஒரு அறிக்கை வாசித்து விட்டு, ‘ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி அவரே உண்ணாவிரத நாடகத்தை முடித்துக் கொள்கிறார். இந்த நாடகத்தின் துணை வசனகர்த்தாவான ப.சிதம்பரம், மைய அரசின் கோரிக்கையை ஏற்று ராஜபக்சே போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளார் என்று பின்பாட்டுப் பாடுகிறார். “கலைஞரின் உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி! போரை நிறுத்திவிட்டதாக இலங்கை அறிவிப்பு!” என்று சன் டி.வி.யும் பிற ஊடகங்களும் பரபரப்பூட்டின. மாலையில் “இலங்கையைப் பணிய வைத்த கலைஞரின் உண்ணாவிரதம்” என்று கொட்டை எழுத்துக்களில் நாளேடுகளில் செய்திகள் வெளியாகின.

ஆட்சியதிகாரத்திலிருக்கும் கருணாநிதியின் அரைநாள் பட்டினிக்கே, இலங்கை அரசு அஞ்சி நடுங்கி போர் நிறுத்தத்தை அறிவிக்கிறதென்றால், அவ்வளவு வலிமை கொண்ட அவர் இதை ஏன் முன்னரே செய்யவில்லை? ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் செத்து மடிந்த பின் உண்ணாவிரதம் இருக்க வேண்டியதன் அவசியம்தான் என்ன? ஈழத் தமிழர்களின் கொலைகளைத் தடுத்து நிறுத்துமளவுக்கு அதிகாரம் கொண்ட அவர் இத்தனை காலமும் முடங்கிக் கிடந்தது ஏன்? தியாகி முத்துக்குமார் தொடங்கி, தமிழகத்தின் பல்வேறு தரப்பு மக்களும், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களும் போர் நிறுத்தம் கோரி தொடர்ந்து போராடி வந்த நிலையில் அவர்களுடைய போராட்ட உணர்வுகள் மீதும் தியாகங்கள் மீதும் மலத்தில் தோய்த்தெடுத்த செருப்பால் அடித்தது போல் அமைந்திருக்கிறது, கலைஞரின் உண்ணாவிரதத்தால் இலங்கையில் போர் நிறுத்த அறிவிப்பு என்ற மோசடி.

போர் நிறுத்தமுமில்லை; புண்ணாக்குமில்லை என்று அடுத்த நாளே அறிவித்து விட்டது இலங்கை அரசு. “பயங்கரவாதப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் எந்தவிதத் தற்காலிக இடைநிறுத்தமும் இல்லை. போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக இந்திய அரசும் ஊடகங்களும் கூறுவது தவறான தகவல்” என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது, இலங்கை இராணுவ அமைச்சகம். விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில், இந்தியா மற்றும் உலக நாடுகளின் நிர்பந்தங்கள் காரணமாக இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது என ஊடகங்கள் திரிக்கப்பட்ட தவறான செய்தியை வெளியிட்டுள்ளன என்று இராணுவ அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

“புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகள் தர்க்க ரீதியாக அவற்றின் இறுதி முடிவை எட்டியுள்ளதாக இலங்கை அரசு கருதுகிறது. பொது மக்களுக்குப் பாதிப்பையும் உயிர்ச் சேதங்களையும் ஏற்படுத்தும் கனரக ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களைப் பயன்படுத்துவதையும் வான்வழித் தாக்குதல் நடத்துவதையும் முடிவுக்குக் கொண்டு வருமாறு ராணுவத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள தமிழ் மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. இது போர் நிறுத்தப் பகுதியில் ஏற்கெனவே நிலவி வரும் இராணுவ நடவடிக்கைகள் பற்றிய கொள்கையின் தொடர்ச்சியே தவிர, போர் நிறுத்தம் அல்ல. புலிகளைத் தாக்கி அழிக்கும் போர் நடவடிக்கையில் தமிழ் மக்களுக்கு உயிரிழப்பு ஏற்படாமல், பொதுமக்களின் பாதுகாப்பு விசயத்தில் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு இராணுவத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெற்றியை நெருங்கி விட்டதாக இராணுவ அமைச்சகம் கருதுகிறது” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சேவும் தான் போர் நிறுத்தம் எதையும் அறிவிக்கவில்லை என்கிறார்.

இருப்பினும், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தமிழனை இளிச்சவாயனாகக் கருதிக் கொண்டு காதில் பூ சுற்றுகிறார் கருணாநிதி. இலங்கை இராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கைக்கு புதிய விளக்கமும் பொழிப்புரையும் எழுதுகிறார் ப.சிதம்பரம். போர் நடவடிக்கைகள் அதன் இறுதி முடிவை எட்டியுள்ளன என்ற இலங்கை அரசின் கூற்றுக்கு, இதன் பொருள் போர் நடவடிக்கைகள் தற்போது இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன என்று அயோக்கியத்தனமாக விளக்கமளிக்கிறார் அவர். கனரக ஆயுதங்களுடன் தாக்குதல் இருக்காது பீரங்கித் தாக்குதலுக்குப் பதிலாக துப்பாக்கிச் சூடும் எறிகணைத் தாக்குதலும் தொடரும் என்று இலங்கை இராணுவ அமைச்சகம் குறிப்பிடுவதை தொடரும் போர்த் தாக்குதல்கள் முடிவுக்கு வந்து விட்டதாக இந்திய அரசு பொருள் கொள்கிறது; இந்த அறிவிப்பு எமக்கு ஆறுதல் அளிக்கிறது என்று தமிழனைக் கேணையாகக் கருதிக் கொண்டு விளக்கமளிக்கிறார்.

கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதில்லை என்று அறிவித்துக் கொண்டே, மறுநாளே சிங்கள பாசிச இராணுவம் பீரங்கித் தாக்குதலையும் வான்வழித் தாக்குதலையும் நடத்தி, போர் நிறுத்தப் பகுதியிலேயே நூற்றுக்கணக்கானோரைக் கொன்றொழித்துள்ளது. கயவாளிகளின் புளுகு அடுத்தநாளே நாறியது. இருப்பினும் “மழை விட்டாலும் தூவானம் விடவில்லை” என்று இப்போர்த் தாக்குதலுக்கு வெட்கங்கெட்ட முறையில் விளக்கமளிக்கிறார், கருணாநிதி.

ஈழத் தமிழர்களின் குலையறுக்கும் இக்கொடிய போரின் சூத்திரதாரியே இந்திய மேலாதிக்க அரசுதான். எனவேதான் இந்தக் கயவாளிகள் சொல்லி வைத்த மாதிரி நாடகத்தைத் திறமையாக நடத்துகிறார்கள். தமிழகத் தேர்தலுக்கு முன்னதாக, பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்றொழித்து, புலிகளை அழித்தொழித்து, போர் வெற்றிக்கு இலக்கு தீர்மானித்துக் கொண்டு இந்தியஇலங்கை அரசுகள் போர்த் தாக்குதலைத் தீவிரப்படுத்தின. ஆனால் போர் நிறுத்தம் கோரி போராட்டங்கள் வலுப்பெற்று நிர்பந்தம் ஏற்பட்டதால் இந்திய அரசின் வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனனும் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும் இலங்கைக்குப் பறந்து ராஜபக்சேவிடம் விரைவில் இலக்கை நிறைவேற்றக் கோரி பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்படி 2 நாளில் இலக்கை முடித்துவிட ராஜபக்சே உறுதியளித்திருக்கிறார். அதைத்தான் 2 நாளில் நல்ல முடிவு ஏற்படும் என்று கருணாநிதியும் கூறிவந்தார். அந்த நல்ல முடிவு இலங்கை அரசிடமிருந்து அறிக்கையாக வெளிவரும் என்று தெரிந்துதான் அரசியல் ஆதாயமடையும் நோக்குடன் திடீர் உண்ணாவிரத நாடகத்தை நடத்தியுள்ளார். இந்தக் கபட நாடகத்துக்கு ஒத்தூதிக் கொண்டு தங்கபாலுவும் சேலத்தில் உண்ணாவிரதமிருந்ததுதான் கயமையின் உச்சகட்ட காட்சி.

காங்கிரசு தி.மு.க. கம்பெனிகளின் இந்த மோசடி நாடகத்தை விஞ்சும் வகையில் பார்ப்பனபாசிச ஜெயா, தமிழனை அடி முட்டாளாகக் கருதிக் கொண்டு அதிரடி நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். தனி ஈழம்தான் ஒரே தீர்வு என்று கூட்டணி கூஜாக்களைத் திருப்திபடுத்த தேர்தல் பிரச்சாரம் செய்துவந்த அவர் இப்போது, “இந்தியாதான் இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுத்து இந்தப் போரை நடத்துகிறது. இதை நான் இரண்டு ஆண்டுகளாக எதிர்த்து வந்தேன். ஈழத் தமிழரின் துயர் போக்க தனி ஈழம் அமைக்கப் பாடுபடுவேன்” என்று சாமியாடத் தொடங்கிவிட்டார்.

தேர்தல் நெருங்க நெருங்க தமிழனைக் கேணையனாகக் கருதிக் கொண்டு, இக்கயவாளிகள் நடத்தும் மோசடி நாடகங்கள் தீவிரமாகலாம். ஈழத் தமிழின அழிப்புப் போருக்கு எதிராகப் போராடி வரும் தமிழக மக்கள், இக்கேடு கெட்ட மோசடி நாடகக் கூட்டத்தை முச்சந்தியில் கட்டி வைத்து தோலுரிக்காவிட்டால், இனித் தமிழினம் சூடு சொரணையற்ற கூட்டம் என்ற அவப்பெயர்தான் வரலாற்றில் எழுதப்படும்.

-புதிய ஜனநாயகம், மே’2009

நன்றி:வினவு

http://tamilthesiyam.blogspot.com/2009/05/blog-post_1230.html?m=1


 

About editor 2990 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply