திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் அழிவிலிருக்கும் தமிழர் இருப்பும்! ஈழத்து துரோணர்

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் அழிவிலிருக்கும் தமிழர் இருப்பும்!

ஈழத்து துரோணர்

இன்று மிகப்பெரும் அபாயகரமான ஒரு கட்டத்தில் ஈழத்தமிழர் நாம் இருக்கின்றோம்.!

ஆம், தமிழரின் பழம்பெரும் கிராமமான நாயாறு கிராமம் “நாயபுரவாக” மாறிச், சிங்களக் குடியேற்றம் ஒன்று மேற்கொள்ளப்படுகின்றது.

இப்படித் தமிழர் பாரம்பரிய நிலங்கள் கொஞ்சம், கொஞ்சமாக சிங்கள மயமாக்கப்படுகின்றது. தமிழர் தரப்பு பிரதிநிதிகள்,ஏனோ கள்ள மௌனம் காக்கின்றனர்/ அல்லது ஒத்தோடும் அரசியலை செய்கின்றனர்.

நாயாறு என்பது எமது போராட்டத்துடன் பின்னிப்பிணைந்த ஒரு இடம். மணலாற்றுக் காட்டுக்கான வாசலாக ஒரு நேரத்தில் இருந்து. எமது தலைவரையும், போராளிகளையும், போராட்டத்தையும் காத்து நின்ற கிராமம், இன்று எமது கையை விட்டு போகின்றது.

அதை தடுக்கவேண்டிய எமது தலைவர்கள், ஒரு கையில் மதுவும் மறுகையில் மிக்சருடனும் வலம் வருகின்றனர்.

எமது தமிழ்த் தலைவர்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து சண்டையிடுவது போன்று, எமது இளைஞர்களும் ஒருவருக்கு, ஒருவர் சார்பாக நின்று முகநூலில் சண்டையிடுகின்றனர் என்பது தான், மிகப்பெரும் வேதனை.!

எமது இளைஞர்களுக்கு ஒரு தெளிந்த அரசியல் பார்வை வரவேண்டும். நீங்கள் நேசிக்கும் கட்சி என்பதற்காக, அவர்களின் பிழைகளை நியாயப்படுத்தும் தன்மைகளிலிருந்து நீங்கள் வெளிவரவேண்டும். அவர்களின் பிழைகளை தட்டிக்கேட்க வேண்டும்.

சார்பு அரசியல் நோயிலிருந்து வெளிவரவேண்டும். ஒரு தெளிந்த தமிழர் தேசியத்தின் பார்வையை உங்களிடம் உருவாக்க வேண்டும். ஒருவரது பிழைகளுக்கு ஒரு போதும், தெரிந்து நீங்கள் துணை போகாதீர்கள்.

1990களில் தேவை நிமித்தம் நான் கொழும்பு செல்லும் சந்தர்ப்பத்தில், கல்பிட்டியில் இருந்து கொழும்புவரை பல கரையோர கிராமங்களுக்கு பயணப்பட்டுள்ளேன்.

அப்போதெல்லாம் ஆரச்சுக்கட்டு, சிலாபம்,புத்தளம், பங்கதெனிய, மாறவில போன்ற சில கிராமங்களில் மட்டும் குறைந்தளவு சிங்களக் குடும்பங்களே வசித்தனர்.

கல்பிட்டி, , சம்மாட்டிவாடி, நுரைச்சோலை, உடப்பு, பனிச்சவில்லு, பூனைப்பிட்டி, கரந்தை, இலந்தையடி, கருக்குப்பனை, கோட்டப்பிட்டியென சிங்களம் தெரியாத பல கிராமங்கள் இருந்தன.

அந்த மக்களும் தமிழீழத்தின் எல்லைக்கு உட்பட்டவர்கள் தான். ஆனால், அவர்கள் சிங்களத்தின் கட்டுப்பாட்டில் வசித்தனர்.

அந்த இடங்களில் பல ஆண்டுகள் நான் பயணப்பட்டமையால், சிங்களப் பொலிஸ், இராணுவம், உளவுத்துறைகளின் மிகப்பெரும் அடக்குமுறைகளையும், சித்திரவதைகளையும் அந்த மக்கள் சந்தித்ததையும் கண்டுள்ளேன்.

அதன் வெளிப்பாடு தமது பிள்ளைகளை சிங்களத்தில் கல்வி கற்க வைத்தனர். அதன் மூலம் தங்களை சிங்களவர்களாக காட்ட வெளிக்கிட்டு, இன்று சிங்களவர்களாகவே உருமாறி நிக்கின்றனர்.

இந்த மாற்றத்திற்கு, அந்த நேரத்தில் அவர்கள் சந்தித்த கொடுமைகள் அளவுக்கடந்ததாக இருந்தமையே ஒரு காரணம். இப்போதும் வயது முதிந்தவர்கள் தமிழில் பேசவும், எழுத வாசிக்கவும் தெரிந்தவர்களாகவே உள்ளனர்.

ஆனால், இப்போது அந்தப் பிள்ளைகளை திருமணம் செய்பவர்களும், சிங்களம் கற்றவர்கள் என்பதால், அவர்கள் சிங்களத்திலேயே உரையாடி, அடுத்த தலைமுறையையும், சிங்கள வம்சாவளியாக உருவாக்கி விட்டனர்.

இன்று அவர்கள் தங்கள் அரச பதிவுகளில் சிங்களவர்களாகவே தங்களைப் பதிவு செய்கின்றனர். இது போன்ற காரணிகளும் சிங்களவரை அதிக மக்கள் தொகையை கொண்டவர்களாகக் காட்ட வழிசெய்கின்றது.

இப்படித்தான் சிங்களம் திட்டமிட்டு தங்கள் சிங்களப்பெரும்பான்மையை அதிகரித்து வருகின்றது.

இது போலவே தான் திருகோணமலை, அம்பாறை, மணலாறு, எனத் திட்டமிட்டு சிங்களக்குடியேற்றம் மூலம், கிட்டத்தட்ட சிங்களமயமாக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மட்டக்களப்பும், வவுனியாவுக்கு ஆரம்ப நிலையில் உள்ளது.

இதில் உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம் இலங்கையை தமிழர் பூர்வீகமாக கொண்டபோதும், இடையில் வந்த சிங்களவர் எப்படி பெரும்பான்மையாக மாறினர்? என்ற கேள்வி தவிர்க்க முடியாததாக இருக்கும் என்றே நம்புகின்றேன்.!

இதில் சிங்களவர்களாக உருமாறி இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள், தமிழர்கள் என்பதே எனது வாதம்.!

நான் 90களின் ஆரம்பத்தில் தேவை கருதி இலங்கை முழுவதும் சுற்றிவரும் சந்தர்ப்பத்தில், ஒரு விடையத்தை அவதானித்தேன்.

அதாவது தமிழர்களின் பூர்வீக நிலங்களில் சிங்களவரும் வசித்து வந்தனர். அவர்களின் குடியேற்ற வரலாற்றை ஆராய்ந்தால், சிலவருடங்களாகவே அது இருக்கும். (ஒரு நேரத்தில் சிங்களத் தலைநகர் கொழும்பில் கூடத் தமிழரே அதிகமிருந்தனர்.)

இதை இவர்கள் எவ்வாறு செய்கின்றனர்.?

சிங்களம் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி (சங்கமித்தை வந்து இறங்கியதாகக் கூறி, சேந்தான்குளத்திற்கு “சங்கமித்தபுர” என்று மாற்றியது போல) திட்டமிட்டு தூய தமிழ் பெயர்களை மாற்றி, சிங்களப்பெயர்களை சூட்டுவதன் மூலம், அந்த இடம் தமக்கானது என்ற ஒரு மாயையை முதலில் உருவாக்குகின்றனர்.

பின் இதன் மூலம் குறிப்பிட்ட இடமொன்றில் செறிந்து வாழும் மக்கள் மத்தியில், சிங்களக் குடியேற்றங்களை செய்வதன் மூலமும், பெயர் மாற்றத்தின் மூலமும், அந்த இடத்திற்கு இன்னொரு இனமும் சொந்தம் கொண்டாட வழிசமைத்துக் கொடுக்கப்படும். (இந்த குடியேற்றங்களை ஆளும் வர்க்கம் நேரடியாகவும் செய்யும், மறைமுகமாகவும் செய்யும்)

காலப்போக்கில் கலப்பு திருமணங்கள் மூலமும், அதிகாரத்தின் மூலமும் அந்த இடத்தின் பெரும்பான்மையை சிதைத்து, அந்த இடத்திற்கு சிங்களம் உரிமை கொண்டாடும். காலப்போக்கில் தமிழ் காணாமல் போகும் அல்லது திட்டமிட்டு போக்கடிக்கப்படும்.

அதற்கு தென்னிலங்கையில் கண்டி, புத்தளம், சிலாபம் அம்பாந்தோட்டைப்பகுதியில் வாழ்ந்த தமிழர் சிங்களவர்களாக இன்று உருமாறியதே சாட்சிகள். இன்று அவர்களும் சிங்களவர்களாகவே கணக்கெடுக்கப்படுகின்றனர்.!

இப்படித்தான் பல லட்சம் மக்கள் சிங்களவராக உருமாற்றம் செய்யப்பட்டு, தமிழர் நிலமும் சிங்களத்துடன் இணைக்கப்பட்டு விட்டது.!

இதைத்தான் தொடர்ந்து சிங்களம் அரங்கேற்றுகின்றது. அவர்களுக்கு தேவை தனிச் சிங்களத்துடன் கூடிய ஒரு பௌத்த தேசம். அந்த நிகழ்ச்சி நிரலில் தான் சிங்களம் தனது தேசியக் கொள்கையாக வரையறுத்துள்ளது.

சிங்களம் யார் தடுத்தாலும் அந்த அச்சிலேயே சுழல்வார்கள். அதைத் தடுக்க, அதற்காக நாம் போராடியே ஆகவேண்டும்.!

இந்த நடை முறையை தமிழ்நாட்டு சென்னையிழும் நீங்கள் காணலாம் (தமிழ்நாட்டின் மற்றைய இடங்களிலும் உள்ளது) இன்று சென்னை மாற்று மொழியினத்தவரின் அதிகரிப்பின் மூலம், தமிழர் கைவிட்டு போகும் நிலை, தூரத்தில் இல்லை என்பதே எனதெண்ணம்.

பெயர் தானே மாற்றிவிட்டு போகட்டும் என்று அசண்டையாக நீங்கள் இருந்தால், உங்கள் அடையாளம் உங்களை அறியாமலேயே பறிபோய்விடும். தமிழரின் வாழ்வு ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தது.

மொழியென்பது ஒரு இனத்தின் அடையாளம். அதை நாம் இழந்தால் நாங்கள் மட்டுமல்ல, எங்கள் இனமே அழிந்து போய்விடும். அதை அழியவிடாது இளையதலைமுறை பாதுகாக்க வேண்டும். அந்தக் கடமை தமிழர் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

தமிழர் தங்களைத் தமிழர் என்றே அடையாளப்படுத்த வேண்டிய, இக்கட்டான நிலையில் ஈழத்தமிழினம் இன்று உள்ளது. இது எமக்கு மட்டுமல்ல உலகத்தமிழர் அனைவருக்கும் பொருந்தும். தமிழகத்தமிழர்களும் திராவிட மாயையிலிருந்து வெளிவந்து, தமிழராய் இணையவேண்டிய கடப்பாடு இன்றுள்ளது.

இன்று சிங்களம் பல வழிகளின் தமிழர் பிரதேசங்களையும், தமிழரையும் இலக்குவைத்து காய் நகர்த்துகின்றது. நல்லாட்சி அரசாங்கம் என்ற மாயவலையில் சிக்கி, எமது தலைமைகளும் தெரிந்தே துணைபோகின்றது.!

சிங்கள மொழி தெரிந்தால் தான் வேலை என்ற அறிவிப்பின் பின்னால் உள்ள நோக்கம், எம் கண்ணுக்கு தெரியாது. ஆரம்பத்தில் வேலைக்காக, மொழிதானே என்ற கோட்பாட்டில் ஆரம்பிப்போம்.

பின் அந்த மொழியில் பரிச்சியம் வரும் போது, மாற்றுத்திருமணங்கள் உருவாகும், கலாச்சாரக் கலப்பு இடம் மாறும், அடுத்த சந்ததிக்கு எம் பெருமை தெரியாது, காலப்போக்கில் அது மாற்றம் பெறும்.!

சிறு துளி பெரு வெள்ளம் போல, கொஞ்சம் கொஞ்சமாக இனம் மாற்றம் நடைபெறும். இப்படித்தான் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. நான் மேலே குறிப்பிட்ட தமிழர்கள், சிங்களவர்களாக மாறுவதற்கு நீண்ட நெடிய ஆண்டுகளை எடுக்கவில்லை. வெறும் 20ஆண்டுகளில் இதை சிங்களம் சாதித்திருந்தது.

இதை தடுப்பதற்கு ஒரே வழி, கட்சி சார்பு நிலையிலிருந்து வெளிவந்து, உங்கள் தலைவர்கள் விடும் தவறை நீங்களே தட்டிக்கேட்கவேண்டும். ஒத்தோடல் அரசியலிலிருந்து அவர்களை, எங்கள் உரிமைக்காக போராட வைக்கவேண்டும்.

தமிழர் தங்கள் அரசியலின் ஆரம்பத்தில், பல விட்டுக்கொடுப்புகளை செய்து அமைதிவழியில் போராடி, எதுவும் கிடைக்காது போனதன் பின்னரே ஆயுதவழியில் போராடினர். அந்த போராட்டத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்று சிங்களக் குடியேற்றங்கள்தான்.

நாம் வலிமையாக இருந்த நேரத்தில்கூட, இந்திய இராணுவத்தின் வருகையின் பின் இடைப்பட்ட அமைதிச் சூழலில், பெருமெடுப்பில் சிங்களக் குடியேற்றங்களை சிங்களம் அரங்கேற்றியது.

திலீபண்ணையின் உண்ணாவிரதப்போராட்டத்தின் கோரிக்கைகளில் ஒன்று “சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தவேண்டும்” என்பதேயாகும்.

இதிலிருந்து நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். கிடைக்கும் சந்தர்ப்பத்திலெல்லாம் சிங்களக்குடியேற்றத்தை நடைமுறைப்படுத்தியே சிங்களம் வந்துள்ளது. இது தான் வரலாறு.

இப்போது கேட்பார் இல்லாத இனமாக தமிழர் தரப்பு இருப்பதனால், தங்கள் விருப்பத்துக்கு குடியேற்றுகின்றனர். அதை தமிழ்த் தலைமைகளும் கண்டும் காணாமல் உள்ளனர்.

இளம் தலைமுறையினரே.! உங்களது கட்சி சார்பு அரசியல், இந்த தலைமைகளை இந்தத் தவறுகளுக்கு துணைபோவதற்கு வழிவகுக்கும். நீங்கள் கேட்கும் கேள்விகள் தான் அவர்களை எமக்காக போராடவைக்கும்.

தயவு செய்து சுயநல தேவைகளிலிருந்து வெளிவந்து, உங்கள் இனத்தை முன்னிறுத்தி கேள்வி கேளுங்கள். உங்கள் கேள்விகளே அவர்களை வழிநடத்தட்டும்.

அல்லது போனால் புத்தளம், சிலாபம் அண்டிய மக்கள் எப்படி சிங்கள மயமானார்களோ, அதே போல வடக்கு மக்களும் சிங்கள மயமாவதற்கு நீண்டகாலம் செல்லாது.

நாங்கள் வாழும் காலத்திலேயே அடுத்த சந்ததி, தங்கள் பிள்ளைகளுக்கு” பண்டா, சில்வா, சிங்க” என்று பெயர் சூட்டி மகிழும் நாள் திட்டமிட்டு இவர்களால் உருவாக்கப்படும்.!

ஏனெனில் அவர்களின் நிகழ்ச்சி நிரல் அப்படித் தான் உள்ளது. அதற்கு அவர்களின் கேள்வி கேட்கமுடியாது அதிகாரம் துணை நிற்கும் என்பதே எமக்கு வரலாறு சொல்லும் பாடம்.

மனச்சுமையுடன் துரோணர்

தமிழர் தங்களைத் தமிழர் என்றே அடையாளப்படுத்த வேண்டிய, இக்கட்டான நிலையில் ஈழத்தமிழினம் இன்று உள்ளது

About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply