சிவன் பெயரில் ‘சதுரங்க வேட்டை’! – மெகா வசூலில் அரசியல் சாமியார்

சிவன் பெயரில் ‘சதுரங்க வேட்டை’! – மெகா வசூலில் அரசியல் சாமியார்

‘சிதிலமடைந்த சிவாலயங்களைப் புதுப்பித்துக் கும்பாபிஷேகம் செய்துகொடுக்கிறோம்’ என்று சொல்லி, ‘சதுரங்க வேட்டை’ பாணியில் தமிழகம் முழுவதும் மெகா வசூல் நடந்துவருகிறது. அதிர்ச்சி தரும் இந்த வசூல் வேட்டை பற்றிய விவரங்களுக்குள் போகும் முன்பாக, கடந்த ஆண்டு வாட்ஸ்அப்பில் வலம் வந்த இந்தத் தகவலை வாசித்துவிடுங்கள்…

‘சிவனடியார்களுக்கும், பொது மக்களுக்கும் ஓர் அன்பு வேண்டுகோள். தங்கள் ஊரில் சிதிலமடைந்த ஆலயங்கள்… ஒரு காலப் பூஜைகூட நடக்காத புதர் மண்டிய ஆலயங்கள்… குடமுழுக்கு நடைபெற்று பல வருடங்களாகி விட்ட ஆலயங்கள்… ஆலயங்களே இல்லாமல் நம் சிவம் மட்டும் வெட்டவெளியில் வெயிலிலும் மழையிலும் நனைந்துகொண்டு இருக்கும் நிலை… நிலத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட சிவன், நந்தி, ஆவுடையார், லிங்கபாணம் என்று தனித்தனியாக இருக்கும் நிலை… இதெல்லாம் தங்கள் கண்ணில் பட்டால், உடனே இந்த (9791735016) அலைபேசி எண்ணுக்குத் தெரிவியுங்கள். சிதிலமடைந்த ஆலயங்களைப் புனர்நிர்மாணம் செய்து, ஆறு காலப் பூஜை என்றென்றும் நடைபெறச் செய்கிறோம். எங்கள் ‘அனுபூதி சமாஜம்’ இப்படி 150 சிவாலயங்களைக் கண்டெடுத்துப் புனர் நிர்மாணப் பணிகளைத் தொடங்கவுள்ளது’ என்று முடிகிறது அந்த வாட்ஸ்அப் தகவல்.

இந்த வாட்ஸ்அப் தகவலைக் கண்டு ஏமாந்த காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த கலியாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜாவின் அனுபவம் இது… ‘‘அந்தத் தகவலைப் பார்த்துவிட்டு, எங்கள் ஊரில் பராமரிப்பின்றி கிடக்கும் பழைமைவாய்ந்த கனகபுரீஸ்வரர் கோயில் பற்றி அந்த நம்பருக்குப் போன் செய்து சொன்னேன். ஆயிரம் ரூபாய் கட்டவேண்டும் என்றார்கள். கட்டினோம். பிறகு, சாமியார் நந்தீஷா தலைமையிலான அனுபூதி சமாஜத்தினர் எங்கள் ஊருக்கு வந்து கோயிலைச் சுற்றிப் பார்த்தனர். அவர்கள் வந்தபோது, ரூ.20 ஆயிரம் செலவழித்தோம். அப்போது, இன்னும் ஆயிரம் ரூபாய் கட்டச் சொல்லி ஒரு விண்ணப்பம் கொடுத்தனர். அதில், ‘கோயிலில் பழைமையான சிலைகள் உள்ளனவா, பஞ்சலோகச் சிலைகள் உள்ளனவா, கோயில் கலசங்கள் உள்ளனவா, கோயில் சொத்துகள் எவ்வளவு, கோயில் வருமானம் எவ்வளவு’ போன்ற கேள்விகள் இருந்தன. பிறகு அடிக்கடி போனில் பேசினர். ‘நாங்கள் 40 லட்சம் ரூபாய் கொடுக்கிறோம். அதை வைத்து நீங்கள் கோயிலைச் சீரமைத்துக் கட்டுங்கள். அதற்குமுன் 6,500 ரூபாய் விண்ணப்பக் கட்டணம் கொடுங்கள். உங்களுக்குப் பணம் கிடைத்துவிடும்’ என்று அவர்கள் கூறினர். எங்கள் சுற்றுவட்டாரத்தில் பல ஊர்களில் இப்படி 60 பேருக்கு மேல் அவர்களிடம் பணம் கட்டினர்.

அதன்பிறகு அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. அதனால் திருச்சி உறையூரில் உள்ள அனுபூதி அலுவலகத்துக்குச் சென்றோம். அந்தக் கட்டடத்தின் உரிமையாளர், ‘கோயில் கட்டித் தர்றதாச் சொல்லி பல பேர்கிட்ட அந்த ஆளு 60 லட்ச ரூபாய்க்கு மேலே ஏமாத்தியிருக்காரு. அவர் எங்களுக்கு அஞ்சு மாசமா வாடகை தரலை’ என்று சோகத்துடன் சொன்னார். அது, எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது” என்றார்.

உத்திரமேரூர் அருகேயுள்ள அழிசூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், “எங்க ஊர்ல உள்ள அருளாலீஸ்வரர் கோயிலுக்குத் திருப்பணி செய்யறதா, அனுபூதி சமாஜத்துல சொன்னாங்க. இப்படித்தான் அடுத்தடுத்து பணம் வாங்கினாங்க. அதுக்கப்புறம் அவங்களைத் தொடர்புகொள்ள முடியலை’’ என்றார் வேதனையுடன்.

திருச்சி சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த அர்ஜுனன், “எங்க ஊர் மலைக்காளியம்மன் கோயிலைக் கட்றதுக்காக அனுபூதி சாமியைப் போய் பார்த்தோம். வந்து கோயிலைப் பார்த்துவிட்டு, ‘கோயிலில் ஒரு பூஜை ஏற்பாடு பண்ணுங்க. ஸ்ரீசக்கரம் வைங்க. நல்ல பலன் கிடைக்கும்’னு சொன்னார். கோயில் காசுல ரூ.35,000 எடுத்துச் செலவு செஞ்சோம். எங்க கையில இருந்தும் நிறைய காசு செலவு செஞ்சோம். கலச பூஜை, ஸ்ரீசக்கர பூஜைன்னு பணத்தை வாங்கிட்டே இருந்தார். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, எங்க கோயிலுக்கு அஞ்சு கோடி ரூபா ஒதுக்கியிருப்பதா சொன்னார். ஆடிட்டர் செலவுக்கு ரெண்டு பர்சன்டேஜ் (ரூ.10 லட்சம்) வேணும்னு கேட்டார். சந்தேகப்பட்டு நாங்க பணம் தரலை” என்றார்.

தமிழகத்தின் பல பகுதிகளில் இதுபோன்ற புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இந்த அனுபூதி சமாஜம் குறித்து விசாரணையில் இறங்கினோம். அதில், அதிரவைக்கும் பல தகவல்கள் கிடைத்தன.

இந்த அமைப்பை நடத்தி வருபவர் அனுபூதி மகான் சுவாமி நந்தீஷா எனும் நந்தகுமார். இவர், திருச்சி உறையூர் பகுதியில் வசித்துவந்தார். அங்கிருந்த ஒரு சாமியாரின் பழக்கம் ஏற்பட்டு, அவரிடம் மாந்திரீகம் கற்றார். இதையடுத்து   நந்தீஷா என நந்தகுமாரும்,  ஞானாம்பிகை அம்மையார் என இவரின் மனைவி கீதாஞ்சலியும் மாறினார்கள். பிரசங்கம் செய்வதில் கைதேர்ந்த நந்தகுமார், மூன்றாவது கண்ணைத் திறக்க வைக்கிறேன், சக்ர வழிபாடு முறைகளைக் கற்றுக்கொடுக்கிறேன் என்று பல பயிற்சி வகுப்புகளை நடத்திப் பணம் வசூலித்தார். இவர் குடியிருந்த பகுதியில் பிரச்னை ஏற்படவே, அங்கிருந்து திருச்சி கே.கே.நகருக்கு மாறினார்.

கோயில்களைப் புனரமைப்பதாக வாட்ஸ்அப்பில் தகவல் பரப்பி, தமிழகம் முழுக்க பலரிடம் விண்ணப்பங்களைப் பெற்றார். இவற்றில் பழைமையான பல ஆலயங்கள் தேர்வுசெய்யப்பட்டன. சில ஆலயங்களில் பணம் மட்டும் வசூலித்தனர். வேறு சில ஆலயங்களில் பூஜைகள் நடத்தியும் பணம் பார்த்தனர். காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்பட பல மாவட்டங்களில் பழைமையான 216 கோயில்களை மூன்று வருடங்களில் புனரமைத்துக் கும்பாபிஷேகம் செய்வதாகக் கூறியுள்ளார். இவர் சொன்னதை நம்பி பல கோயில்களில் பாலாலயம் செய்ததுடன், சில கோயில்களை இடித்தும் விட்டதுதான் கொடுமை.

அனுபூதி தியானம், மானிடப் பிறவியின் ரகசியம், ஆகமங்கள் வேதாந்த ரகசியம், மரணமில்லாப் பெருவாழ்வு என விதவிதமான பயிற்சிகள் வழங்குவதாகச் சொல்லி, ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலித்துள்ளார் நந்தகுமார். இப்போது, சித்தர்கள் காலத்தில் நடந்த தத்துவ வாசி பூஜை மற்றும் பூர்வ ஜென்ம கர்ம விகல்பா யாகம் நடத்துவதாகப் பல கோயில்களுக்குப் போய்வருகிறார். சமீபத்தில், ‘ஆயிரம் கோடி செலவில், உங்களில் யார் அடுத்த முதல்வர்?’ என்ற கேள்வியுடன் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு ஏழு பேர் வீதம் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய ஆரம்பித்து, அரசியலிலும் இவர் கால்பதித்துள்ளார். (ஆன்மிக அரசியல் என்பது இதுதானோ!) இது தொடர்பான வீடியோவை யூ ட்யூபில் அப்லோடு செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட ஒருவர் நம்மிடம், ‘‘கோயில்களைப் புனரமைக்க ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் ஒப்பந்தம் போட்டுள்ளதாக இவர் கூறியதை நம்பி, பி.ஜே.பி நிர்வாகிகள் சிலரும் இவருக்கு ஆரம்பத்தில் துணையாக இருந்தனர். பலர் லட்சங்களை அள்ளிக் கொடுத்தனர். தமிழகம் முழுவதும் பல கோயில் நிர்வாகிகளும் கல்வெட்டு ஆய்வாளர்களும் இவருக்கு நெருக்கமாகி, முக்கியமான கோயில்கள் பற்றிய அரிய தகவல்களை அளித்துள்ளனர். அந்தக் கோயில்களில் உள்ள சிலைகளை இவர் புகைப்படமும் எடுத்துள்ளார்’’ என்றார்.

குற்றச்சாட்டுகள் குறித்து நந்தீஷாவிடம் கேட்பதற்காக, அவர் வீட்டுக்குச் சென்றோம். முதலில், ‘‘சுவாமி வெளியூரில் இருக்கிறார்… இரண்டு நாள்கள் கழித்து வாருங்கள்’’ என்றனர், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஆட்கள். இரண்டு நாள்கள் கழித்து மீண்டும் சென்றபோது, நந்தீஷாவின் மனைவி கீதாஞ்சலி, மகன் இனியனுடன் விளையாடிக்கொண்டிருந்தார். அங்கிருந்த இளைஞர் ஒருவர், “சுவாமியைத்  திடுதிப்புனு சந்திக்க முடியாது… கிளம்புங்கள்” என்றார் மிரட்டலாக. நந்தீஷாவின் மனைவி கீதாஞ்சலி, ‘‘சுவாமியைச் சந்திப்பது அவ்வளவு சுலபமல்ல. முதலில் கிளம்புங்கள்” என்றார். நந்தீஷா பற்றிய அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் கீதாஞ்சலியிடம் கூறி, “இதுகுறித்து நந்தீஷாவின் பதிலைப் பெறவே வந்தோம்” என்று சொல்லி, நம் தொடர்பு எண்ணையும் கொடுத்துவிட்டு வந்தோம். “சுவாமி உங்களிடம் பேசுவார்” என்று சொல்லி நம்மை அனுப்பிவைத்தனர். ஆனால், நம்மை அவர் தொடர்புகொள்ளவே இல்லை. ரொம்ப பிஸி போல!

– சி.ய.ஆனந்தகுமார், பா.ஜெயவேல்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

https://www.vikatan.com/juniorvikatan/2018-jul-01/society-/142036-nandeesha-atrocities-like-sathuranga-vettai-movie.html

 


 

About editor 1436 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist

Be the first to comment

Leave a Reply